Friday, June 29, 2012

அரசியல் நாடகம் ( கூத்து.?)

                             அரசியல் நாடகம்.( கூத்து.?)
                              -----------------------------------------

சில அரசியல் நிகழ்வுகளை அலசும்போது,சில காய் நகர்த்தல்களைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.அண்மையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நடப்பவற்றை எல்லாம் நேரான அர்த்தத்தில் காண முடிவதில்லை. மிகச் சிறந்த, சாணக்கியத்தனமான
ராஜதந்திரங்கள் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஜனாதிபதி  தேர்த லுக்கான வேட்பாளர் இந்த அகண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் எல் லோராலும்  ஏற்றுக் கொள்ளக் கூடியவர் இல்லையா.? வேட்பாளருக்கான தகுதிகள்தான் என்ன.?  வெறுமே ரப்பர்  ஸ்டாம்பாக செயல்  படாதவர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக  இருக்க முடியாது.2014--ம் ஆண்டுவர இருக்கும் பொதுத் தேர்தலில் அரசு அமைக்கக் கூடிய வாய்ப்பு  இருக்கும் கட்சி என்று எதுவும் தென்படவில்லை.கிச்சடி அரசாங்கம் தான்  அமையும். அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கும்போது எரிகிற வீட்டில் பிடுங்குகிற கொள்ளி ஆதாயம் என்றே அரசியல் கட்சிகள் செயல்  படுகின்றன.

இருப்பவற்றில் தேசீயக் கட்சிகள் என்று பெயர் கொண்ட இந்திய   தேசியக்  காங்கிரஸ்,பாரதிய ஜனதாக் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் தங்களை செயல் படுத்திக் கொள்ள வில்லை. ஒரு கிச்சடி அரசாங்கம்  அமைந்து அந்தக் கிச்சடியில் சேர்க்கப்படும்  காய் ,எண்ணை, கடுகு,மிளகு, உப்பு என்றுதான் பிராந்தியக் கட்சிகாள் இருக்கின்றன. எல்லாம் அளவோடு ருசித்தால் கிச்சடி அரசாங்கம் சுவையாக  இருக்கும். அதிக காரமாக உப்பாக தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டால் உண்பவனுக்குத்தான்  ( சாதாரணக் குடி மகனுக்கு )  பிரச்சினை. .இருந்தால் என்ன.? அவர்கள் இருப்பது தெர்ய வேண்டும் அல்லவா . அந்த  தூக்கல் சுவையில் கெட்டுப்போகப் போவதுகிச்சடிதானே.

மம்தா பானர்ஜி, முலாயம் சிங் சோனியாகாந்தி, போன்றோரின் நடவடிக்கைகள் கவனத்தை ஈர்க்கின்றன. எனக்கொரு சந்தேகம். நடக்க இருக்கும் தேர்தல் நாடகத்துக்கு தங்களுக்குண்டான பாத்திரத்தையும் பங்கையும் பெற, மேடைக்கதை வசனம் எல்லாம் எழுதப் பட்டு, ஒத்திகைதான் நடந்ததோ என்று ஐயம் எழுகிறது.

இன்றிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி அரசாங்கம் அமைக்க்க வாய்ப்பு குறைவு என்று உணர்ந்த மம்தாவும் முலாயமும், தங்கள் முக்கியத்துவத்தைஉறுதி செய்ய ,சோனியாவின் சொந்த அபிலாக்ஷைகளுக்கு
கூட்டு போகிறார்கள் என்றே தோன்றுகிறது. பல் பிடுங்கப்பட்ட பிரதம மந்திரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கச்செய்த முயற்சி  சோனியாவின் ஆசியுடனேயே நடை பெற்றதாகத் தோன்றுகிறது.வருகிற தேர்தலில் பிரதம மந்திரி பதவிக்குத் தகுதியானவர் மன்மோஹன் சிங் அல்ல என்று  அவருக்கு உணர்த்தவே இந்த நாடகமோ என்று தோன்றுகிறது. அவரை விட்டால் பிரணாப் முகர்ஜி காங்கிரசின் மூத்த தலைவர் பிரதம மந்திரி பதவிக்குத் தகுதியானவர் என்று கருதப் படுபவர், அவரையே தேர்ந்தெடுக்கப்படும் கட்டாயத்துக்கு சோனியா   தள்ளப்படலாம் .ஆனால் அவரை வலி தெரியாம்மல் பாதையில் இருந்து அகற்றி விட்டால், இளைய தலைமுறை ,அரசியல் மற்றும் குடும்ப வாரிசு,ராகுல்காந்திக்கு ராஜபாட்டைஅமைத்துக் கொடுத்து, இடைப்பட்ட காலத்தை, அவருக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயலும் ராஜ தந்திரம்தான் இது என்று தோன்றுகிறது. ஆனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை  சிறிது ஓவர்  ஆக்டிங்  செய்து மம்தா பானர்ஜி சொதப்பி விட்டாரோ என்றும்தோன்றுகிறது. முலாயம் சிங் உறவுக்குப் பரிசாகக் கொடுக்கப்படவேண்டிய கோடிகளைக் கேட்கத் துவங்கி விட்டார்.

முலாயமோ மம்தாவோ பிரதம மந்திரியாக வாய்ப்பு கிஞ்சித்தும் இல்லை என்ற நிலையில் நன்றாகவே விளையாடுகிறார்கள்,.ராஜமாதாவோ எப்போதும் போல் பதவி ஆசை இல்லாதவராக,,ஆனால் எல்லா அதிகாரமும் கையில் இருக்கும் விதமாக, நடத்தும் நாடகமே பிரணாப் தாதாவின் எலிவேஷன். அது உண்மையில் ஏற்றமதானா இல்லை பிரணாப் தாதா வெறுமே ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று உறுதிப் படுத்துவாரா. ?

மோடியை முன் நிறுத்தும் முயற்சியில்  பாஜக சிதறுண்டு போகும் வாய்ப்பே அதிகம் என்று தோன்றுகிறது. நாடக மேடையில் சுவை சேர்க்க ஜெயலலிதாவுக்கும் நவீன் பட்னாய்க்குக்கும் கிடைத்த விதூஷகன்தான் சங்மா.ஆதிவாசிகளின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி உள்ளவர் என்று முழங்கும் இவர்  ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லையே. சீக்கியர், இஸ்லாமியர், தமிழர் தெலுங்கர், தாழ்த்தப் பட்டவர், என்றெல்லோரும் ஜனாதிபதி ஆகி விட்டார்கள்.ஒரு ஆதிவாசி ஆகக் கூடாதா,?

இதெல்லாவற்றையும் பார்க்கும்போது, சோனியாவின் காய் நகர்த்தல் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை. யார் எப்படி வேண்டுமானாலும் நடிக்கட்டும் நடக்கட்டும்.இந்தியக் குடிமகன் தான் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த  சிவ பெருமான்போல் ஆகிவிட்டான்.--பாவம் !
.                                        ,

Wednesday, June 27, 2012

                                நீ ங்கள்  சொன்னபடி செய்தால்  போச்சு
-------------------------------------------------------------   

      இன்றைக்கு நண்பர்கள் இருவரை டின்னருக்கு அழைத்திருக்கிறேன் .என்ன சமையல் செய்கிறாய் ?
      நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு .

      அடை  அவியல்  செய்துவிடு .
      அவியலுக்கான  காய் கறிகள்  இல்லையே.

       அப்போது  வெஜிடபிள் புலாவ்  செய்கிறாயா?
       அவியலுக்கே  காய்கறிகள்  இல்லை  என்கிறேன்,வெஜிடபுள்  புலாவ்
எப்படி?

       வெங்காய  சாம்பாரும்  உருளைக் கிழங்கு  பொடிமாசும்  செய்கிறாயா?
       இரவு உணவில்  உருளைக் கிழங்கு  வாயு  உபத்திரவம்  தரும்.

       சோளே  பட்டுரா  செய்தால் நன்றாக  இருக்கும் இல்லையா?
        சோளே  பட்டுரா ரொம்ப ஹெவியாகி விடும்.

       அப்படியானால்  மாகி  நூடுல்ஸ் செய்கிறாயா?
        சேச்சே ! டின்னருக்கு  கூப்பிடுகிறீர்கள் . வயிறு நிறைய  வேண்டாமா.?

        சரி. இட்லி  சாம்பார்  செய்து விடு
       அதற்கு  முன்பே ப்ளான்  செய்திருக்க வேண்டும்.இட்லிக்கு மாவு அரைக்க  வேண்டாமா?

         அப்போ   ஓட்டலிலிருந்து  ஏதாவது  தருவிக்கலாமா.?
         வீட்டுக்கு வரச்சொல்லிக்  கூப்பிட்டு  ஓட்டலில் இருந்து தருவிப்பதா?
      \
         பின் என்னதான் செய்யப் போகிறாய்?
         நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு.!
         ----------------------------------------------------------------

          

Saturday, June 23, 2012

திருமணங்கள்.....


                                                     திருமணங்கள்......
                                                      --------------------


சில அனுபவ வரிகள் வலையில் எழுதப்படும்போது ரசிக்கப் படுகின்றன; சில உதாசீனப் படுத்தப் படுகின்றன; சில வழி காட்டும் படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஒருவராவது ரசிக்கிறார் என்றாலும் தொடர்ந்து எழுதும்படி எனக்கு ஆலோசனைகளும் வந்திருக்கிறது. திருமணம் பற்றி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் இருந்தது. பதிவு எழுத பொருள் தேடிக் கொண்டிருந்தபோது வந்ததால் இந்தத் தலைப்பிலேயே எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.அதன் தாக்கத்தை சிறிது குறைக்க உண்ணவும் உறங்கவும் என்றும் சேர்த்துக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதன் தன் பரிணாம வளர்ச்சியில் தனக்கு விதித்துக் கொண்ட கட்டுப் பாடுகளில் திருமண பந்தமும் ஒன்றாகிறது.

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில் ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

என்னைப் பொறுத்தவரை பொருத்தங்கள் பார்ப்பது அவசியம் ஆனால் ஜாதகம் மூலம் பார்ப்பது என்பது எனக்கு உடன்பாடில்லை. என் திருமணம் ஜாதகம் பார்த்து நடந்ததல்ல. என் மக்களுக்கும் நான் ஜாதகம் பார்க்கவில்லை.எல்லாம் விசாரித்து அறிந்தபின் வரன் கேட்டு வந்தவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களுக்கு அது திருப்தி தரும் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறி என் மக்களது பிறந்த விவரங்கள் கொடுத்தோம்.மூத்தவனுக்கு முதலிலேயே ஜாதகம் பொருந்த எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடந்தது. இளையவனுக்கு ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணின் பெற்றோர் முதலில் பொறுந்தவில்லை என்று கூறிச் சென்றவர் வேறு ஒரு சோதிடரிடம் காட்டி பொருத்தம் இருப்பதாகக் கூறி திரும்பி வந்தனர். நாங்கள் ஜாதகம் பற்றி கவலையே படாததால் திருமணம் இனிதே நிகழ்ந்தது. மூத்தவன் மணம் முடிந்து இருபது ஆண்டுகளும் இளையவன் திருமணம் முடிந்து பதினேழு ஆண்டுகளும் ஓடிவிட்டன. அவர்களது இல்லற வாழ்க்கை இனிதாகவே இருக்கிறது.

ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாததால் பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் முதிர் கன்னிகளாக இருக்கும் சில பெண்களையும் எனக்குத்தெரியும்.

ஆனால் தற்காலத்தில் நடைபெறும் பல திருமணங்களில் பெற்றோருக்கு எந்த உரிமையும் கொடுக்கப் படுவதில்லை. ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப் படுகிறார்கள்( பெரும்பாலும் இனக் கவர்ச்சியால் )திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே தவறான முடிவால் பிரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருபவரும் இல்லாமல் போகிறார்கள்.

இதனால் ஆண் பெண் பார்த்துக் காதலித்து திருமணம் செய்வது தவறு என்று நான் கூறவில்லை. இனக்கவர்ச்சிக்கும் மேலாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள என்று தெரியாமலா நம் முன்னொர் சொல்லிப் போனார்கள். திருமணத்தில் விட்டுக் கொடுக்கும் குணம் இருவருக்கும் வேண்டும். நான் எனது என்ற அகந்தை தலைக்கேறினால் வாழ்க்கை துன்பங்களாலேயே சூழ்ந்திருக்கும்.

வாழ்வில் ஒருமுறை ( அநேகம் பேருக்கு ) நடக்கும் திருமணம் ஊரார் உற்றார் அறிய சிறப்பாக நடப்பதே நல்லது. அதற்காக வியர்வை சிந்தி சேர்த்து வைத்த பணத்தை விரயம் செய்வது நல்லதல்ல. நம் திருமண முறைகளில் சம்பிரதாயங்களுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தரப் படுகிறது. பெரும்பாலும் சடங்குகள் சடங்குகளுக்காகவே நடைபெறுகிறது.முன் காலத்தில் அறியாப் பருவத்தில் நடைபெற்ற திருமண சடங்குகள் இப்போதும் நடைபெறுவது கேலிக் குரியதாகிறது. தென் இந்திய திருமண சம்பிரதாயங்களில் ஒன்று வதுவும் வரனும் தாய்மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவது. என்பது. விளையாட்டாக மணமக்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஏற்படுத்திய பல சம்பிரதாயங்கள் கால வரம்பைக் கடந்து விட்டன.

சம்பிரதாயங்கள் என வரும்போது டாக்டர் கந்தசாமி ஐயா எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது. அவர்கள் வழக்கத்தை மூன்று நான்கு பதிவுகளாக வெளியிட்டிருந்தார்.
அக்னி வளர்த்து ,அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாணிக்கிரகணம் செய்வது ஒரு வழக்கம் என்றால் இவை ஏதுமே இல்லாமல் நெற்கலத்தில் தென்னம்பாளை வைத்து ,அருகில் குத்து விளக்கேற்றி , வீட்டின் பெரியவர் மங்கலநாண் எடுத்துக் கொடுக்க அரைநொடியில் முடிந்து விடும் திருமணங்கள்  கேரள சம்பிரதாயம். அதுவும் அண்மைக் காலத்தில்தான் தாலி கட்டும் வழக்கம் துவங்கி இருக்கிறது. அதற்கு முன் பெண்ணுக்கு மண மகன் புடவை எடுத்துக் கொடுக்கும் சடங்கே திருமணத்தின் முக்கிய பங்காயிருந்தது. பண்டைய இலக்கியங்களின்படி தாலி அணியும் வழக்கமிருந்ததாகத் தெரியவில்லை.

ஆந்திராவில் பெரும்பாலான திருமணங்கள் இரவிலேயே நடக்கின்றன,.இனப் பற்றின் பெயரால் எல்லா சடங்குகளையும் புறக் கணித்து சுயமரியாதைத் திருமணங்களும் நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறொம். சாதி மாறித் திருமண்ம் செய்து கொள்வதை ஊக்குவிக்க தங்கம் கொடுத்த நாடகங்களையும் கண்டிருக்கிறோம். அண்மையில் வறியவர்கள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட 1006 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் தாய்வீட்டுச் சீதனங்களுடன் தாலி புடவை வேட்டி சொக்காய் கொடுத்து நடத்திவைத்த திருமணங்களும் தொலைக் காட்சியில் கண்டிருக்கலாம்

எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம்.

இருமனம் இணைந்து நடக்கும் திருமணங்களில் கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டி போல் வாழ்க்கை சுமையையும் சுகங்களையும் இழுக்க வேண்டும். உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே. 
-------------------------------------------------------------------        ,
      .               .                                  .                                    
            Thursday, June 21, 2012

ஜீவாத்மாவும் பரமாத்மாவும்....


                                      ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...
                                      ----------------------------------------


கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.?
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
“ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?

( வலைப்பூக்களில் ரமணியின் யாதுமாகி ‘சுந்தர்ஜியின்அமுதுமிழும்மற்றும் அப்பாதுரையின் தைவாதர்சனம் ‘ போன்ற பதிவுகள் படித்த தாக்கமோ என்னவோ கனவும் பதிவுமாகி இருக்கிறது.)
------------------------------------------------------------------------------------           .          .                            

Tuesday, June 19, 2012

ஆண் VS பெண்.


                                    ஆண் VS பெண்..( புரிந்த அளவு....)
                                     --------------------------------------------


1)  ஒரு ஆணும்  பெண்ணும் சாக்கலேட் பெட்டியிலிருந்து சாக்கலேட் எடுத்து உண்கிறார்கள்.ஒருவர் எடுத்த உடன் அதை மென்று தின்று விடுகிறார். அடுத்தவர் எடுத்துக் கடித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்.
கடித்தவர் யார் ?------------------ஆணா     பெண்ணா.?

2.) ஒரு ஆணும் பெண்ணும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள்.. அங்கே ஒருவர் சந்திரனுக்குச் செல்ல அநேகம் பேர் விரும்புவதில்லை என்றார். நம் நண்பர்களில் ஒருவர் கருத்துக் கணிப்பின்படி அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார். மற்றவர் “அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. நான் .போக விரும்புகிறேன் “ என்கிறார்.
மற்றவர் கருத்தினை இப்படி கணக்கிடுபவர் யார்.?---------ஆணா    பெண்ணா.?

3) ஒரு கணவனும்  மனைவியும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாடியில் சற்று உடல் நலமில்லாத அவர்கள் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. “ குழந்தையின் உடல் நலம் குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா.?கவலைப் படாதே. டாக்டர் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி இருக்கிறார்.
மற்றவரின் உள்ளத்தை முதலில் கண்டு கொண்டு ஆறுதல் கூறுபவர் யார்.? ஆணா  பெண்ணா ?

4) ஒரு கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவர் சாதாரணமாக உண்ணாத உணவு வகைகளை ஆர்டர் செய்கிறார். மற்றவர் வீட்டில் உண்ணும் உணவு வகைகளையே கேட்கிறார்..உணவில் வெரைட்டி தேடுபவர் யார்.? ------------------- ஆணா     பெண்ணா. ?

5)  அதே ஜோடி ஒரு கடைக்குப் போகிறார்கள்..அங்கே ஒரு பக்கம் வித்தியாசமான புதிய பொருட்களும் இன்னொரு பக்கம் சாதாரணமாக இருக்கும் பொருட்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. வித்தியாசமான பொருட்களால் கவரப் படுபவர் யார்.? ஆணா     பெண்ணா. ?


உங்கள் பதில் எந்த அளவுக்கு கீழ்கண்ட பதில்களுடன் ஒத்துப் போகிறது. என்று பாருங்களேன்.

1) பெண். ----டாக்டர் ஹெலென் ஹால் ஜென்னிங்ஸ் ப்ரூக்லைன் காலேஜ் பேராசிரியர் கூறுகிறார். ஆண்கள் தேவையற்றுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் எல்லாவற்றையும் துருவுவார்கள்.

2). பெண். --- மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடிநடத்திய ஆய்வின்படிபெண் எப்போதும் தான் எண்ணுவதுதான் சரி என்று சப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறாள். ஆண் பரந்த மனதுடன் ஆப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறான். 

3) ஆண். ----பிட்ஸ்பர்க்  வெடெரன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஹாஸ்பிடல் சைகாலஜிஸ்ட் அநேக திருமணமான ஜோடிகளிடம் நடத்திய ஆய்வின்படி, ஆச்சரியப்படும்படி ஆண்களுக்கே மற்றவரின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது என்று கண்டறிந்தார்.

4). பெண்.--- மார்க்கெட்டிங் கருத்தாராய்வுப்படி, பெண்களே புது உணவு வகையறாக்களை ருசி பார்க்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

5)  ஆண். ---புதிய வடிவமைப்பு, பாக்கேஜிங்  போன்ற வற்றால் கவரப் பட்டு தெரிந்து கொள்ள ஆணே ஆர்வம் காட்டுகிறான் என்று இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மோடிவேஷனல் ரிசர்ச் தலைவர் டாக்டர் எர்நெஸ்ட் டிக்டர், கூறுகிறார்.

பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படும் நான் புரிந்து கொள்ள படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.          .                            Sunday, June 17, 2012

நேர் காணல்........


                                                    நேர் காணல்.......
                                                      ---------------- 


சில பிரபலங்களை சந்திக்கும்போது பேட்டிக்காக காணும் நேர்காணல் பற்றியது அல்ல இப்பதிவு. வேலை வேண்டி மனு செய்திருந்து அவர்களிடம் இருந்து அழைப்பு வந்து அவர்கள் மனுதாரரிடம் அவரை தேர்வு செய்யவா வேண்டாமா என்று சோதித்து அறிய நடத்தும் நேர்காணல் பற்றிய சில அனுபவ டிப்ஸ்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மனு செய்யும் விதமே இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் மனு செய்பவர் தங்கள் குடும்ப சூழ்நிலையை விளக்கி, இவர் வேண்டும் அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்று கண்ணீர் வருத்தாத குறையாக எழுதி கடைசியில் “ I WILL TRY MY LEVEL BEST TO SATISFY MY SUPERIORS AND REMAIN FAITHFUL FOR EVER “ என்று முடிப்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் தகுதிகளைக் கூறி RESUME என்ற பெயரில் ஒரு அல்லது சில தாள்களை அனுப்புகிறார்கள் அல்லது மின் அஞ்சல் செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேர்வு செய்பவர் ஒரு நேர்காண்ல் அல்லது க்ரூப் டிஸ்கஷன் மூலமே தேர்வு செய்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து நிறையவே கைடன்ஸ் புத்தகங்கள் அல்லது குறிப்புகள் வந்திருக்கின்றன


நேர்காணலுக்குச் செல்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதன் முதலில் வேலை தேடி செல்பவர் தன் இப்போதிருக்கும் நிலையை மேம்படுத்திக் கொள்ள செல்பவர் முதன் முதலில் வேலை தேடிச் செல்பவர் அதிகம் நெர்வஸாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நேர்காணலில் தங்கள் அறிவை சோதனை செய்கிறார்கள் என்று மட்டும் எண்ணக் கூடாது. கால்மணி முதல் அரை மணிக்குள் ஒருவரது அறிவை சோதித்து தெரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நோக்கமும் அதுவல்ல. உங்கள் அறிவை தெரியப் படுத்தும் சான்றிதழ்கள் அவர்களிடம் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆட்டிட்யூட்  மற்றும் பிறரை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பதை அறிய அவர்களது முயற்சியே. நேர்காணல். எந்த நிறுவனத்துக்கு வேலைக்கு மனு செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றி சில விவரங்களாவது தெரிய வேண்டும். நான் முதன் முதலில் என் பதினேழாவது வயதில் பள்ளி இறுதி முடித்து HAL-ல் மெகானிக் பணிக்கான பயிற்சிக்குத் தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். நான் இருந்தது வெல்லிங்டனில். நேர்காணல் மதராசில். திரும்பி வருவதற்கான பணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. ஆனால் உலகை வெல்லும் தைரியம் நிறையவே இருந்தது. நான் பட்ட பாடுகள் பற்றிக் கூறப் போவதில்லை. நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் காலில் செருப்புடன் டை அணிந்து வந்தவன் நான் மட்டுமே. தமிழ்வழிக் கல்வியே படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக என்னால் பேச முடிந்தது. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவர்கள் நான் காம்பொசிட் மாத்ஸ் படித்தவன் என்று தெரிந்து என் அறிவை சோதிக்க பித்தாகோரஸ் தீரம் பற்றிக் கேட்டார்கள். நான் தமிழ் வழிக்கல்வியில் படித்ததால் தமிழிலேயே பித்தாகோரஸ் தேற்றம் கூறினேன்.தமிழ்வழிக் கல்வி படித்தும் ஆங்கிலத்தில் என்னால் உரையாட முடிவது கண்டு அவர்கள் அதே தீரத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். நான் ஒரு தாள் கேட்டு வாங்கி முடிந்தவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவர்கள் அப்போதே கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் நாம் படிப்பது தேர்வில் பாஸ்செய்ய மட்டுமல்ல. படிப்பதைப் புரிந்து கொண்டால் அதை விளக்கவும் முடியும். என்ன.. என்னால் அது முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அந்த நேர்காணலில் நான் தேர்வு பெற்றேன் என்று கூறவும் வேண்டுமா. ?

தேர்வுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய தேவை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. அதுவே ஓவர் கான்ஃபிடன்ஸாக மாறி விட்டால் சொதப்பலாகி விடும். அதற்கு என்னிடமிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறேன். நான் HAL-ல் வேலையிலிருக்கும்போது  மதராஸ் ப்ரேக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எஞ்சினீரிங் இன்ஸ்டரக்டர்ஸ் என்ற பணிக்காக வந்த விளம்பரம் கண்டு மனு செய்தேன். என் மனுவில் நான் பயிற்சியின்போது சென்ற இடங்களிலெல்லாம் தேர்ச்சி உள்ளவன் போல் எழுதி இருந்தேன். என்னை நேர்காணல் செய்ய வந்தவர் ஒரு ஆங்கிலேயர். என் மனுவைப் படித்த அவர் எனக்கு டூல் டிசைன் செய்ய வருமா என்று கேட்டார். இரண்டே வாரம் அங்கு பயிற்சியில் இருந்தவன் நான். டூல் டிசைன் என்றால் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர் கார் எஞ்சினின் ஒரு பாகத்தைக் காட்டி அதற்கு என்னால் டூல் டிசைன் செய்ய முடியுமா என்று கேட்டார். நேர்காணல் நடக்கும் நேரத்தில் எந்தக் கொம்பனாலும் டூல் டிசைன் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். என்னை டிசைன் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்றும் தெரியும். ஆகவே வீராப்பாக என்னால் முடியும் என்றேன். எவ்வளவு நேரமாகும் என்றார்கள் நான் குத்து மதிப்பாக பதினாறு மணி நேரம் ஆகும் என்றேன். அந்த ஆங்கிலேயருக்கு நான் புருடா விடுகிறேன் என்று
நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் என்னால் முடியாது என்று கூறியவர் முகம் சிவக்க எனக்கு எந்த பணியும் தர முடியாது என்று கூறினார். முகத்தில் அடித்தாற்போல் எந்த வேலையும் கிடையாது என்று சொன்னது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. நானும் என் பங்குக்கு எந்தப் பணியாவது கேட்டு நான் வரவில்லை, எஞ்சினீரிங்.இன்ஸ்ட்ரக்டர்  பதவிக்கு மட்டுமே மனு செய்திருந்தேன். அது மட்டும் இல்லை என்றுதான் அவர்கள் கூறலாம் என்று கோபமாகக் கூறி வெளியே வந்து விட்டேன். நேர்காணலில் தவறான அணுகு முறைக்கு இது ஒரு சாம்பிள்.

மைகோ MICO நிறுவனத்துக்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஒரு நாள் முழுவதும் தேர்வு. காலையில் ஒரு வினாத்தாளைக் கொடுத்து பதில் எழுதச் சொன்னார்கள். கொஞ்சம் டெக்னிகல் விஷயங்கள் பின் நிறையவே முதளாளி தொழிலாளி உறவு பற்றிய கேஸ் ஸ்டடீஸ். உதாரணத்துக்கு ஒன்று. ஒரு நிறுவனத்தில் இருக்கும் மேலாளர் வீட்டில் வேலை செய்யும் தோட்டக் காரனை அவர் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். மேலாளருக்கு வேண்டப் பட்டவன் என்ற காரணத்தால் ஒரு பகுதியின் மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அதே காரணத்துக்காக இன்னொரு மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் அமர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு நிறையவே சலுகைகள் கொடுத்து ப்ரொமோஷனும் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இந்த கால கட்டத்தில் மேலாளர்  ஓய்வு பெறுகிறார்.அதற்குப் பிறகு அந்த தோட்டக்காரனுக்கு எந்த சலுகையும் வழங்கப் படவில்லை. இரண்டாம் பதவி உயர்வும் தடுக்கப் படுகிறதுஅவன் இதை யூனியனிடம் முறையிட அந்தக் கேஸ் விசாரிக்க உங்களிடம் வருகிறது . நீங்கள் எப்படி பிரச்சனையைத் தீர்ப்பீர்கள்.?

மதியம் நேர்காணலில் கேள்வி பதில்களை அலசுகிறார்கள் கேள்வித்தாளில் இல்லாத கேள்வி ஒன்று. உன் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளி அரை நாள் லீவ் கேட்கிறான். நிலைமை உங்களால் லீவ் கொடுக்க முடியாத சூழ்நிலை.அந்தக் கோபத்தில் நீங்கள் ஒரு திருப்பத்தில் வரும் போது அந்த தொழிலாளி உங்களுக்குத் தெரியாமல் உங்களைத் தாக்குகிறான் நீங்கள் என்ன செய்வீர்கள்.?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான பிறகு  நான் என்ன செய்ய
 முடியும்.? நான் அவர்களிடம் சொன்னேன். எனக்கு இந்த மாதிரி பணி வேண்டாம். அடியும் உதையும் பெற எதிர்பார்க்கும் அந்த நிறுவனத்தை நான் நிராகரிக்கிறேன் என்று கூறி வந்து விட்டேன். ( அந்த காலகட்டத்தில் தொழிலாளர் பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்து நாளொரு கலவரமும் கதவடைப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது.)

விளம்பரங்கள் மூலம் தெரிய வந்து மனு செய்யும் காலம் மாறிக்கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கு வருகிறது. எந்தக் காலத்திலும் நேர்காணலுக்குச் செல்பவர் தன்னிடம் கேள்விகள் கேட்பவர் தன்னை சோதிக்க அல்ல, அவருக்கே தெரிந்து கொள்ள என்னும் எண்ணத்துடன் அணுகினால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். முன்பிருந்த மாதிரி ஒரே நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பணி புரியும் காலம் மலை ஏறிவிட்டது. வேலைக்கு எடுத்துக் கொள்பவர்களும் வேலை தெரிந்தவர்களையே அதிகம் விரும்புகிறார்கள். இல்லையென்றால் அவர் வேலை கற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு வேறு நிறுவனத்துக்குப் பறந்து விடுகிறார். இண்டக்‌ஷன் லெவலில் சேர்ந்தால் வேலைகற்றும் கொள்ளலாம். நேரம் வரும்போது மாற்று வேலைக்கும் செல்லலாம்.    ,                            

Friday, June 15, 2012

நினைப்பது நடக்க.......


                                                   நினைப்பது நடக்க........
                                                  --------------------------- 


எண்ணங்களின் சிதற்ல்கள் இம்முறை பதிவாகிறது. எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும். ஆனால் இப்போது சுற்றிவந்த ஊர்களின் நினைவுகளைத்தான் சுற்றமுடிகிறது. ஏனென்றால் எனக்கு வயதாகி விட்டதாம். நான் எங்கும் தனியாகப் போகக் கூடாதாம். அதனால் நான் ஒரு VIRTUAL  PRISONER ஆகவே இருக்கிறேன். வயதை மூன்று விதமாக
கணக்கிடலாம். ஒன்று-CHRONOLOGICAL ( எண்ணிக்கையின் அடிப்படையில் ).இரண்டு-BIOLOGICAL ( உடல் நிலை அல்லது உடற்கூற்றுப்படி.) மூன்றாவது-PSYCHOLOGICAL ( மனநிலை அல்லது உளக்கூற்றுப்படி ) முதல் நிலை நாம் பிறந்த தேதியின் அடிப்படையில். நம்மால் ஏதும் செய்ய முடியாது. இரண்டாவது நிலையை நாம் ஓரளவுக்கு நம் பிடிப்பில் கொண்டு வரலாம். நல்ல உணவு,பழக்க வழக்கங்கள், தேகப் பயிற்சி இத்தியாதி விஷயங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும். நல்ல சிந்தனைகளும் நம்பிக்கையான நடைமுறைகளும் மூன்றாம் நிலை வயதேற்றத்தை மாற்றும். நான் எனக்கு வயதாகிவிட்டது என்று எண்ணுவதில்லை. இருக்கும் நாளையும் நேரத்தையும் பொன்னாக மதிக்கிறேன். நேற்று என்பது வசூலான காசோலை. நாளை என்பது ப்ராமிசரி நோட். இன்றென்பதே கையிலிருக்கும் பணம். லாபகரமாகச் செலவு செய்வோம்.

ஆனால் அதீத அன்பில் சிக்குண்டு, நிறைய நேரங்களில் என் சுதந்திரத்தை பறி கொடுக்க வேண்டி உள்ளது .என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிறேன் நான். அப்படி நடக்க விடுவது ரிஸ்க்கானது என்கிறார்கள் என் மனைவியும் மக்களும். இருதலைக் கொள்ளி எறும்பாய் நடுவில் நான்.

முதலில் கூறினேன், எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும் என்று. ஆனால் யாராவது கூட இருந்தால்தான் எங்கும் போக விடுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் ரயில்வேயில் சர்க்குலர் ட்ரெயின் டிக்கட் எடுத்து. ஜெய்ப்பூர், மதுரா, ஆக்ரா, வாரணாசி அல்ஹாபாத், ஹர்த்வார், ரிஷிகேஷ், டெல்லி என்று 22 நாட்கள் பயணித்தது நினைவுக்கு வருகிறது. எங்களுடன் என் அண்ணாவும் அண்ணியும் வருவதாக ப்ளான் செய்து டிக்கெட் எல்லாம் வாங்கிய பிறகு அண்ணா அண்ணி வர முடியவில்லை என்றார்கள். எங்கள் டிக்கெட்டையும் கான்செல் பண்ணும்படி என் பிள்ளைகள் கூறினர். நான் விடாப்பிடியாக மறுத்து பிரயாணம் மேற்கொண்டோம். மதுராவில் இருந்து என் பெரிய அண்ணாவும் அண்ணியும் சேர்வதாகக் கூறி இருந்தனர், அவர்களுக்கு நாங்களும் எங்களுக்கு அவர்களும் துணை. அந்த 22 நாட்கள் மறக்க முடியாதவை, ஜெய்ப்பூரில் எங்களை வரவேற்று எங்களுக்கு எல்லா உதவியும் செய்ய என் மூத்த மகன் ஏற்பாடு செய்திருந்தான். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜெய்ப்பூரையும் சுற்றிலும் உள்ள இடங்களையும் பார்த்தோம். அங்கு சில இடங்களைப் பார்த்துக் குறிப்புகளை படித்த போது ராஜபுத்திரர்களின் வீர தீரக் கதைகளைப் படித்திருந்த எனக்கு, ஏனோ அவர்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை போனவர்களாகவே தோன்றியது. 

மதுராவில் ஏறத்தாழ மூன்று நாட்கள் இருந்தோம். கண்ணன் பிறந்த இடம் முதல் அவனது லீலைகள் நடந்த இடங்கள் எல்லாம் பார்த்தோம். அங்கு வசிப்பவர்கள் தங்களை ப்ரிஜ்வாசி என்று அழைத்துக் கொள்கிறார்கள். அங்கு எங்கும் ஏழ்மையே தாண்டவமாடுவதைக் கண்டோம். தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபடேஹ்பூர் சிக்ரி எல்லாம் பார்த்து வாரணாசி போயிருந்தோம். ஹனுமான் காட் அருகே சங்கர மடத்தில் தங்கினோம். அப்போது அங்கே ஒரே களேபரமாயிருந்தது. என்ன வென்று பார்த்தால் “சித்திராதிகா தன் கணவன் சரத் குமாருடன் தம்பதி பூஜை செய்ய வந்திருந்தார்.
பெரிய அண்ணா அண்ணியுடன் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்து விட்டு, அங்கிருந்து த்ரிவேணி சங்கமத்துக்கு கையில் துழாவும் படகில் கங்கையில் பயணித்தோம். எந்த பயமும் இல்லாமல் பயணித்தது இன்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. த்ரிவேணி சங்கமத்தில் படகிலிருந்து மூங்கிலில் கால் பதித்து நிற்க வைத்து இறக்குகிறார்கள் அதுவும் மறக்க முடியாத அனுபவம். காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு  கால பைரவர் சன்னதியில் அங்கிருந்த பாண்டா பிரசாதம் தருமுன் ஒவ்வொருவரையும் குனிய வைத்து முதுகில் ஓங்கி அடிப்பதைக் கண்ட நான் என்னை அவர் முதுகில் தட்டுவதை விரும்பவில்லை என்று கூறியதை வித்தியாசமாகப் பார்த்தனர். ஹர்த்வார் ரிஷிகேஷ் என்று ஒவ்வொரு இடத்திலும் மறக்க முடியாத அனுபவங்கள். 

அந்த சுற்றுலாவில் ஒட்டக வண்டி சவாரி, டோங்கா சவாரி, படகு சவாரி, கேபிள் கார் சவாரி டெல்லியில் மெட்ரோ ரயில் சவாரி என்று எல்லாம் பயணித்தோம். சாதாரண காமிராவில் நிறைய புகைப் படங்கள்  எடுத்தோம். அந்த சமயத்தில்தான் என் அண்ணியின் ALZHEIMER நோய் தொடங்கினதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன, அது தெரியாமல் பல முறை அவரிடம் கோபப்பட்டுக் கொண்டிருந்தார் பெரிய அண்ணா,

அந்த டூரில் எனக்குள் எழுந்த சந்தேகம், இதுதான். ராமர் கோயில் விஷயமாக நடந்த எல்லாக் கலவரங்களும் காசியிலும் மதுராவிலும் நிகழ வாய்ப்பிருந்தது. இந்த இரண்டு புண்ணிய ஸ்தலங்களும் அமைந்திருக்கும் இடமும் சூழலும் அப்படி இருக்கிறது. மசூதியில் கோவிலா, கோவிலில் மசூதியா என்று சந்தேகப் படும்படி அமைந்திருக்கிறது. போலீஸ் கெடுபிடிகள் அதிகம் என்று தோன்றினாலும் அது தேவையே என்றும்  புரிந்தது

நான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன் என்றாலும் கிழக்கில் விசாகப் பட்டினத்துக்கு அப்பால் ஒடிஷா, வங்காளம் எல்லாம் செல்ல வில்லை. எப்படியாவது பிள்ளைகளிடம் அனுமதி பெற்று கொனாரக் கோயில்களுடன் கொல்கொத்தா நகரையும் காண ஆசை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......

ஆனால் நடப்பதெல்லாம் ஏதோ காரணம் கொண்டே நடக்கிறது., அந்த டூரில் எங்கள் இருவருக்கும் 22 நாட்கள் பயணிக்க ஆன செலவு ரூ.20,000-/ க்கும் குறைவே. ஆனால் இப்போது அதே பயணம் அதற்கு இரு மடங்குக்கும் மேலாகும் என்னால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது. இப்போது புரியும் அனுமதி ஏன் தேவை என்று. மாற்றம் ஒன்றே மாறாதது, மாற்றங்கள் எண்ணத்தில் செயலில் புரிதலில் என்று எங்கும் இருக்கிறது.எதுவும் ஏதோ காரணத்தோடே நிகழ்கிறது என்றாவது ஒரு நாள் நாம் உயிர் துறக்கத்தான் வேண்டும் யாரும் உயிரோடு இந்த உலகை விட்டுப் போக முடியாது. இருக்கும் காலம் மகிழ்ச்சியோடு இருக்கவும் அதற்கு வேண்டியதைச் செய்யவும் அனைவரும் பாடுபட வேண்டும் அனைவரும் எனும்போது அவரவருக்கு மட்டுமல்ல அடுத்தவருக்கும் என்ற பொருளில்தான் எழுதினேன்        


Wednesday, June 13, 2012

ஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION


                              ஹிந்தி எதிர்ப்பு-AN INTROSPECTION.
                              -----------------------------------------------


மாதங்கி மாலி எழுதி இருக்கும் ‘ அரக்கி ‘ எனும் பதிவில் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே நடந்த உரையாடலை வெளியிட்டிருக்கிறார். பதிவு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கருத்துப் பறிமாறல்.ஆகும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற பாரதியார் பிற மொழிகளையும் கற்றிருக்கிறார், போற்றியுமிருக்கிறார். மொழி உணர்வு என்பது இன்றியமையாதது. மொழி வெறி தேவை இல்லாதது. ஹிந்திமொழி திணித்தலே எதிர்க்கப்பட்டது. ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிரான குரல் ,1939-ல் ராஜாஜி ஹிந்தி கற்பித்தலை கொண்டு வந்தபோதே துவங்கி விட்டது.அப்போதே மொழி உணர்வின் வெளிப்பாடாக உயிர் நீத்தவர்களும் இருந்தார்கள்.

மொழி திணிக்கப்படும் பொது ஆதிக்கமும் திணிக்கப் படுகிறது. கல்வி அறிவே குறைந்திருக்கும் சமுதாயத்தில் , அதன் காரணமாக ஆண்டை அடிமை என்று ஏற்கனவே ஒடுக்கப் பட்டிருக்கும் சமுதாயத்தில் இன்னுமொரு ஆதிக்கமாக ஹிந்தி மொழி திணிக்கப் படுவதை எதிர்த்து குரல் கொடுத்ததும் அதற்கு இளைஞர்கள் துணை போனதும் மிகவும் சரியே.

ஆங்கிலேயன் இந்தியா வந்து அப்போது இருந்த கற்றவர்களால் அடிவருடப் பட்டு இங்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபிக்க முடிந்தது என்றால் அவனது மொழியைக் கற்றவர்கள் ,அப்போதைய உயர் வகுப்பினர் அவனது மொழியில் தேர்ச்சி பெற்று அதையே தங்களது மேன்மைக்குப் பயன் படுத்தியதுதான். சாதாரண மக்களுக்கு கல்வியே மறுக்கப் பட்டு அப்போதைய மேல்வகுப்பினர் முக்கிய பதவிகளில் இருந்து பிறரை முன்னேற விடாமல் செய்தது ஆங்கில மொழி கற்றதனாலும் அவனுக்கு அடிவருடி தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதாலும் மட்டும்தான். இதனை உணரத் துவங்கிய மக்கள் இன்னொரு ஆதிக்கம் ஹிந்தி மொழியால் வரக் கூடும் என்றுணர்ந்து அதனை எதிர்த்துப் போராடியது இப்போது சரித்திர நிகழ்வாகி விட்டது.

நாடு இனம் மொழி  மதம் என்பவை எல்லாம் உணர்வுகள் சம்பந்தப் பட்டது. சரி தவறு என்று கூற அளவுகோல் ஏதுமில்லை. போராட்டம் ஒரு ஆதிக்கம் திணிக்கப் படக்கூடாது என்பதற்குத்தான்.. ஆனால் அதையே மொழிக்கு எதிராக என்று கற்பித்து இன வேறுபாடுகளில் குளிர் காய்பவர்களை அடையாள்ம் கண்டு கொள்ள வேண்டும்.மொழிக்கு எதிராக இங்கே போராடினார்கள் என்றால், ஒதுக்கீட்டிற்கு எதிராக அங்கே போராடினார்கள். ஆனால் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்த நிகழ்வுகளை அணுகினோம் என்றால் நிறைய பார்வைகளின் வெளிப்பாடு தெரியும்.

ஒரு முறை நான் வடக்கில் பயணத்தில் இருந்தபோது என் சக பயணி ( ஹிந்தி பேசுபவர், வடக்கத்திக்காரர் )சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்
‘ மதராசிகள் ஹிந்தியை எதிர்ப்பார்கள், கூடவே அந்த மொழியையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெறுவார்கள் ‘ ஹிந்து தினசரியில் வெளியான கேலிச் சித்திரம் கூறியது போல் ஹிந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தையும் கற்றுத் தேற வில்லை. தமிழையாவது ஒழுங்காகப் பேசவோ எழுதவோ செய்கிறார்களா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. “ மைத்துளிகள்”-ல் கண்ட நகைச்சுவை விடியோ உண்மையை கூறுகிறது 

ஹிந்திப் போராட்டக் காலத்தில் நான் HAL-ல் வேலையிலிருந்தேன். சென்னையில் பாடியில் இயங்கும் லூகாஸ் டீவீஎஸ் நிறுவனத்தில் பணியில் சேர ஒரு நேர்காணலுக்காக பெங்களூரில் இருக்கும் உட்லண்ட்ஸ்  ஹோட்டலில் லூகாஸின் பெர்சொனல் மானேஜரை சந்தித்தேன். நேர்காணலில் அவர் என்னிடம் ஏதேதோ கேள்விகள் தமிழில் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்தேன். எனக்குத் தமிழ் தெரியாது என்று எண்ணிய அவர் தமிழ் தெரியாமல் அப்போதிருக்கும் நிலையில் மதராசில் குப்பை கொட்ட முடியாது என்று கூறினார். பின் என் தமிழ் உரையாடல் கேட்டு எனக்கு அங்கு வேலை கிடைத்தது சரித்திரமாகி விட்டது. எங்களுக்கு பள்ளி இறுதித் தேர்வில் ஹிந்தி அவசியம் பரீட்சசைக்கு உண்டு .ஆனால் தேர்ச்சி பெறும் கட்டாயம் இருக்க வில்லை.  நானும் ஹிந்தியை  “ மானே ஹம்கோ ஜன்ம் தியா ஹை. உஸிகா தோத் பீகர் ஹம் படே ஹுவே ஹைந் “என்ற அளவில் படித்து தேர்வு எழுதினேன்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் பலன்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வெறியாகி மற்ற மாநிலத்தவர் வேற்றாட்களாக எண்ணப் படுகின்றனர். நான் முன்பே கூறியுள்ளது போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் அந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தால் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.       .               .                                  .                                    
            
Monday, June 11, 2012

அறிந்து கொள்ள...புரிந்து கொள்ள....


                                 அறிந்து கொள்ள.....புரிந்து கொள்ள....
                                 --------------------------------------------------


நிகழ்ந்த விக்ருதி ஆண்டு உற்றாரும் உறவினரும் குறித்த நாள் ஒன்றில்  திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி ராஜேஸ்வரிக்கும், நடை பெற்ற திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்டினான் மாங்கல்யம். 

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இரு உயிர்கள் இணைந்து மூன்றாவது உயிருக்கு அடிகோல அனுமதி வழங்குவதே திருமணத்தின் தாத்பர்யம். ஆணும் பெண்ணும் நேரமறிந்து இணைந்தாலேயே மூன்றாவது உயிருக்கு வித்திட்டதாகும்..விலங்கினங்கள் இனப் பெருக்கத்துக்காக மட்டுமே நேரமறிந்தே கூடும்..அன்பு பரிவு எல்லாம் ஒரு கட்டுக்குள்தான் இருக்கும்.,அதிகம் கட்டுப் பாடுகளை வகுத்துக் கொள்வதில்லை. பெற்றுப் போட்டவை தன் காலில் நிற்கும்வரை மட்டுமே அரவணைப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம். ( மேலை நாடுகளில் மக்களிடம் மெல்ல மெல்ல அப்படி ஒரு நிலை உருவாகி வருகிறதாமே.! இருக்கிறதாமே.!  HEY.! THAT IS BESIDES THE POINT.. OH.! AS IF EVERYTHING WRITTEN IS TO THE POINT AND RELEVANT.!) ஆனால் மனித குலத்தில் திருமணம் இனப் பெருக்கத்துக்குக் கொடுக்கப் படும் லைசென்ஸ். அனுமதி. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து, அன்பும் அறமும் பெற்று இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உடையதாகச் செய்யக் கிடைக்கும் அவகாசம். இதெல்லாம் தெரிந்ததுதானே, எதற்காக இந்தப் பீடிகை எல்லாம் என்று அலுத்துக் கொள்வது புரிகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் நடந்தது சிவராமன் ராஜேஸ்வரி திருமணம்.எதிர்பார்ப்புகள் உற்றம் சுற்றத்துக்கு மட்டுமல்ல. அவனுக்கும் அவளுக்கும் இருந்ததும் நியாயமே.

ஊரும் உலகமும் கொடுத்த அனுமதியின் பேரில் இருவரும் இணைய அன்றைய மாலைப் பொழுதில் ரம்யமான சூழல் ஏற்படுத்தப் பட்டிருந்தது.

கையில் கையும் வச்சு, கண்ணில் கண்ணும் வச்சு, நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன் நேரம் சப்ர மஞ்சத்தில் ஆட , சொப்ன லோகத்தில் கூட, ப்ரேமத்தின் கீதங்கள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட, சயன நேரம் மன்மத யாகம்,புலரி வரை நமது யோகம் என்றே சிவராமன் காத்திருந்தான். அவன் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஏராளமான புத்திமதிகளும் அறிவுரைகளும் கொடுக்கப் பட்டிருந்தன. ஒரு வித ஆர்வமும் பயமும் ஒருசேரக் காத்திருந்தான்.( ஆணுக்கு மட்டும் பயமில்லையா என்ன.?)

பெண்ணுக்கு உன் மேல் மதிப்பு ஏற்படும்படி நடந்துகொள். அனாவசியத்துக்கு அவளை பயமுறுத்திவிடாதே. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளை  உன்பால் ஈர்க்கவேண்டும். முதலிரவு முக்கியமானது .கவனமாய் நடந்து கொள்.

வந்ததும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான் சிவராமன். மெல்லக் கதவு திறக்க தோழிகளின் கிண்டல்களும் கேலிகளும் தொடர அழகுப் பதுமையென ராஜேஸ்வரி உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷன் நேரத்தில் அணிந்திருந்த நகைகளில் பெரும்பாலானவை காணப்பட வில்லை. பட்டுச்சேலைக்குப் பதில் நல்ல நூல் புடவையே அணிந்திருந்தாள். திட்டமிட்டே உள்ளே அனுப்பப் பட்டிருந்தாள். ‘ செதுக்கிய சிலைபோல் இருக்கும் இவள் எனக்குச் சொந்தம் ‘என்னும் நினைப்பிலேயே அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான். ’ஜில்’ என்றிருந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் அவள் பெயர் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக அவளிடம் பேச முயன்றான். அவள் அவனிடம் சரளமாகப் பேசவில்லை.பெண்களுக்கே உரித்த நாணமாயிருக்கும் என்று அவன் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் கழிந்தது. ‘ அணைக்கட்டுமா’ என்றான். ’ஹாங்’ என்று அவள் திடுக்கிட்டாள். ‘இல்லை; விளக்கை அணைக்கட்டுமா என்றேன்’ என்று சமாளித்தான். விளக்கு அணைத்து சில வினாடிகள் இருவரும் அசைவில்லாமல் இருந்தனர். சிவராமன் முதலிரவை இழக்க விரும்பவில்லை. மெள்ள அவளைக் கட்டி அணைத்தான். அவன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான்.
ராஜேஸ்வரி இணங்குகிறாற்போல் தோன்றவில்லை. அணைப்பை சற்றே இறுக்கினான். திடீரென்று அவனுள்ளே ஏதொ வெடித்ததுபோல் இருந்தது. அவன் உடலின் வெப்பம் தணிந்து உடல் இறுக்கம் குறைந்து தளர்ந்தது. அவளை அணைப்பிலிருந்து தளர்த்தினான்.இது அவன் சற்றும் எதிர்பார்க்காதது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஒரு பயம் பிறந்தது ‘ ஏன் என்னால் அவளை அடைய முடியவில்லை. அவளது தயக்கம் புரிந்தாலும் தயக்கம் விலகிய பிறகும் என்னால் அவளை அடைய முடியுமா?கேள்விகள் மனசைக் குடைய மறுபடியும் அவளை லேசாக அணைத்தான். அவள் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது. ‘மயிலே மயிலே இறகு போடு என்றும் போடாவிட்டால் பறிக்க வேண்டியதுதான் கைகள் அவளது உடலின் எல்லா பாகங்களிலும் நகர ஆரம்பித்தது. ராஜேஸ்வரி கொஞ்சமும் இணங்குவதாகத் தெரிய வில்லை. ‘ அவள் பெண் அப்படித்தான் இருப்பாள் நான் ஆண் என்னை என் சக்தியை நிலை நாட்ட வேண்டும் ‘ என்று மனதில் உறுதி கொண்டு அவளை நெருக்கினான். மறுபடியும் அவனுள்ளே ஏதோ நிகழ்ந்தது. உடல் இறுக்கம் தளர்ந்தது.சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தான். சொர்க்கத்தில் ஆனந்தம் தேட சயன நேரம் மன்மத ராகம் புலரிவரை யோகம் என்று கனவு கண்டவன் தான் எங்கோ மேலிருந்து கீழே வீழ்ந்து விட்டதாக எண்ணினான். அவள்தான் அப்படி என்றால் எனக்கு என்ன ஆயிற்று, கடவுளே இது என்ன சோதனை. திருமணம் உடல் இன்பம் எல்லாம் இனி கனவுதானா என்றெல்லாம் எண்ணி மறுகினான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ராஜேஸ்வரி எழுந்து விட்டாள். இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் அவதிப் பட்டவன் அயர்ந்து தூங்கினான்.


காலையில் வெகு சீக்கிரமாக எழுந்துவிட்ட ராஜேஸ்வரியை குளியலறைக்குக் கூட்டிக் கொண்டு போய் அவளையும் அவளது உள்ளாடைகளையும் பெரியவர்கள் சோதித்தனர். ‘எல்லாம் நல்ல படியாக இருந்ததா ‘என்ற கேள்விக்கு உம்..உம்.. என்று பதில் கூறி அகன்றாள்.

காலை உணவு முடித்துக் கொண்டு முதல் வேலையாக சிவராமன் காணச் சென்றது அவனுடைய நெருங்கிய நண்பனும் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையுமான கோபால்ன் வீட்டிற்குத்தான். ‘ என்ன சிவராமா, திருமணம் நடந்த மறு நாள் காலையிலேயே வந்திருக்கிறாய். ஏதாவது ப்ராப்ளமா.?என்று கேட்ட கோபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறி கிட்டதட்ட அழுதே விட்டான்.
 ‘ சரி போகட்டும் . நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிக் சொல்லிக் கொண்டு வா,

சரி. கேள் “
நீ எப்பொழுதாவது சுய இன்பத்தில் ஈடு பட்டிருக்கிறாயா.?

“ என்ன விளையாடுகிறாயா.? அதெல்லாம் தவறு என்று எனக்குத் தெரியும்.

 “நீ அப்படி ஏதாவது செய்திருந்தால் தவறு ஒன்றுமில்லை. உன்னைப் பற்றி நீயே கொஞ்சம் தெரிந்து கொண்டிருப்பாய். போகட்டும்.ஆண்குறிக்கு CIRCUMSITION என்னும் அறுவை சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா.? ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள உறை போன்ற தோல் புண்ர்வின் போது மேலே செல்ல வேண்டும் இல்லாவிட்டால் உணர்வு ஏற்படும் போதே விந்து வெளியேறி உனக்கு ஏற்பட்ட அனுபவம் சாத்தியக் கூறாகும். நீ என்ன செய்கிறாய் என்றால் முதலில் ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள தோல்   உறை மேலும் கீழும் போக முடிகிறதா என்று நீயே சோதனை செய்து கொள். பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி CIRCUMSITION  தேவையா என்று அறிந்து கொள். ,பிறகென்ன இன்பத்த்தின் எல்லைக்கே செல்ல முடியும்.


“ ஆனால் ராஜேஸ்வரிக்கும் உடலுறவில் சிறிதும் ஆர்வம் இருப்பது போல் தெரிய வில்லையே “

“ அது உறவு பற்றிய பல விஷயங்களை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். வேண்டாதது எல்லாம் கூறப்பட்டு உடலுறவு மேல் அவளுக்குஒரு வெறுப்போ பயமோ இருக்கலாம். ஆணின் ஆதிக்கம் ,குழந்தைப் பேறு குறித்த பயம் என்று என்னவெல்லாமோ ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கலாம். இவை எல்லாம் ஒரு பெண் FRIGID  ஆக இருப்பதற்குக் காரணமாகலாம்.

 இதல்லாமல் சாதாரணமாக பெண்கள் உடலுறவுக்குத் தயாராக நேரம் பிடிக்கும். ஆண், பெண் இருவரின் அணுகுமுறையும் உடலுறவு என்று வரும்போது வித்தியாசமானது. இருவரும் ஒருசேர இன்பம் அனுபவிப்பது பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளல் மிக அவசியம். வெறுமே இன விருத்திக்காக உடல் உறவில் ஈடுபட மனிதன் விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் விலங்கினத்திட மிருந்து மனிதன் வெகு தூரம் வந்து விட்டான். எதற்கும் கவலைப் படாதே. இதுவும் கடந்து போகும். “ என்றெல்லாம் ஆறுதல் கூறி கோபாலன் ,சிவராமனை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து கோபலன் சிவராமன் ராஜேஸ்வரி தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது

காது கொடுத்துக்கேட்டேன்
குவா குவா சப்தம்
இனி கணவனுக்குக் கிட்டாது
அவள் குழந்தைக்குத்தான்  முத்தம்

என்ற பாட்டு சப்தம் கேட்டு புன்முறுவலுடன் திரும்பி விட்டார்.

( ஆண்களிடம் IMPOTENCE  பெண்களிடம் FRIGIDITY  போன்ற குறைபாடுகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுவதில்லை. மனதிற்குள் குமுறி வாழ்க்கையில் துன்பம் அனுபவிப்போர் சிலர் எனக்குப் பரிச்சயம் உண்டு. ஒரு விழிப்புணைச்சிக் கதையாக இதனைப் பதிவிடுகிறேன். )                        :      .               .                                  .                                    
            

 “


.