முன்னேற்றம்----என்ன விலை.?
----------------------------------------------
----------------------------------------------
அண்மையில் பத்திரிகை செய்தி ஒன்று
படித்தேன்.சும்மா இருக்கும்போதே ஏதேதோ எண்ணங்கள் அலைக் கழிக்கும். பத்திரிக்கை செய்தி
ஆலையில்பட்ட கரும்பாயிற்று.
1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி தாமோதர்
பள்ளத்தாக்குக் கார்பொரேஷனின் (“DVC”) நான்காவது அணை தான்பாத் ( DHANBAD
)மாவட்டத்தில் பான்செட்டில் (PANCHET)
திறக்கப் பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால்
நேரு அவர்கள் அதை அங்கு பணி புரிந்த புத்னி மேஜான் (BUDHNI
MEJHAN) என்ற பதினைந்து
வயது சாந்தால் இன ஆதிவாசிப் பெண்ணினால் திறக்க வைத்தார்.சிரித்து மகிழ்ந்திருந்த
பிரதமரின் பக்கத்தில் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த மதிப்பும் மரியாதையும் அவளைக்
குதூகலத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
அந்தப் பெண் அவளுடைய கிராமம் கர்போனாவுக்குத் (KARBONA)
திரும்பிச் சென்றார். பிரதமர் நேருவுக்கு
திறப்பு விழாவின்போது அவள் மாலையிட்டதால்,அவர்கள் வழக்கப்படி பிரதமருக்கு அவள்
மனைவியாகி விட்டாள். பிரதமர் நேரு சாந்தால் இனத்தைச் சேராதவர் என்பதால், அவளுக்கு
அந்த இனத்திலும் ஊரிலும் இடமில்லை என்று கூறி, அவளைக் கிராமப் பெரியோர்கள் ஜாதிப்
பிரஷ்டம் செய்து துரத்தி விட்டார்கள்.
பான்செட்டில் சுதிர் தத்தா என்பவர் அவளுக்கு
அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். 1962-ம்
வருடம் DVC வேலையிலிருந்து
விலக்கப்பட்டார். கிடைத்த வேலைகளைச் செய்து காலங்கடத்திய அவள் 1980-களில், தான்
மாலையிட்ட நேருவின் பேரனான அப்போதையப் பிரதமர் ராஜிவ் காந்தியை அணுகி, தாமோதர்
பள்ளத்தாக்கு கார்ப்பொரேஷனிலேயே வேலை கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். 2001-ம்
ஆண்டு கிடைத்த செய்திப்படி DVC-ல்
வேலையிலிருந்த புத்னி, தன் சொந்தக் கிராமம் கர்போனாவுக்குப் போக அனுமதிப்பார்களா
என்று கேட்டுக் கொண்டிருந்தாளாம். கடைசியாகக் கிடைத்த செய்திப்படி புத்னி (“
நெருவின் ஆதிவாசி மனைவி”).தனது 67-வது வயதில் ,கடந்த ஆண்டு இறந்தார்
என்பதே
நிறைய நிகழ்வுகள் இந்த வயதில் கண்டாயிற்று.
சிலவற்றைப் பற்றி சிந்தித்ததுகூடக் கிடையாது. மிகவும் சிந்திக்காமலே ஏற்றுக் கொண்ட
விஷயங்களில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதும் ஒன்று.
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு நாத்திகர். அவர் கோயில்கள் என்று
குறிப்பிட்டது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் தொழிற்சாலைகளையும் விவசாய நீர்ப்
பாசனத்துக்கு உறுதுணை செய்யும் அணைகட்டுகளையுமே. அவர் மிகப் பெரிதாகக் கனவு
கண்டார். கண்ட கனவுகளை மெய்ப்பிக்க ஏராளமான தொழிற்சாலைகளையும் அணைக்கட்டுகளையும்
நிறுவினார். ஊரையும் பேரையும் இணைக்கும் இவற்றின் பட்டியலில் சில இவை.
—
சிந்திரி ( உரத்தொழிற்சாலை.)
பிம்ப்ரி (பெனிசிலின்).
சித்தரஞ்சன் ( லோகோமோடிவ் )
பெரம்பூர் ( கோச் ஃபாக்டரி )
பிலாய் (
ஸ்டீல் )
அங்க்லேஷ்வர் ( பெட்ரோலியம் )
நரோரா (
ஹெவி வாட்டர் )
தாராப்போர் ( அணு நிலையம் )
பல்வேறு உபயோகத்துக்கான அணைக்கட்டுகள்
பக்ரா நங்கல், ஹீராகுத் , DVC அணைகள்,கோசி, துங்கபத்ரா, கேயல்கரோ, சர்தார்
சரோவர்
தவிர நிலத்தடி கனிமங்களுக்காக
ஜரியா ( கரி ),ஹஜாரிபாக் (மைக்கா ),சிங்பும்,
பைலாடிலா, கட்சிரொலி ( இரும்பு கனிமம் ) நெய்வேலி ( பழுப்பு நிலக்கரி ),
கியோஞ்சார் ( மாங்கனீஸ் ) கோரபுட் ,கந்தமர்தன் ( பாக்சைட் )
அவர் தொடங்கி பிறகு எழுப்பப்பட்ட நூதனக்
கோயில்களின் எண்ணிக்கை பட்டியலில் அடக்குவது சிரமம். இந்தியா பொருளாதார
முன்னேற்றத்தில் குறிப்பிடப்படும் ஒரு நாடாகத் திகழ, இந்தக் கோயில்களின் இயக்கம்
மிக முக்கியம். இருந்தாலும் இந்த முன்னேற்றம் போதாது இன்னும் வேண்டும் என்பதும்
நியாயமானதே. NECESSITY
IS THE
MOTHER OF INVENTION என்பார்கள்.
தேவைகளே கண்டு பிடிப்புகளின் மூலம் (தாய்) எனலாமா.? போதுமென்ற மனமே பொன் செயும்
மருந்து என்று திருப்திப் பட முடியுமா.? CONTENTMENT SMOTHERS INVENTION என்று எனக்குத் தோன்றுகிறது. திருப்தி என்பது
ஆற்றல்களை அழுத்திவிடும்.
எந்தவித முன்னேற்றத்துக்கும் ஒரு விலை உண்டு.
ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகிறது என்பதும் நியதி போல் தோன்றுகிறது. நியாய
அநியாயங்கள் , சரி தவறு போன்றவை காலத்தினால் முடிவு செய்யப் பட வேண்டியவை.
இந்திய தேசப் பிரிவினைக்குக் கொடுக்கப்பட்ட விலை,
ஆயிரக் கணக்கானவர்களின் உயிரும், பல்லாயிரக் கணக்கானவர்களின் வேரறுந்ததுமே..
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வடுக்களும் தழும்புகளும் மாற வில்லை. சம்பந்தப்
பட்டவர்களும் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் புது வாழ்க்கைக்கு, ( இப்போது
பழைய வாழ்க்கையாகி விட்டது.)பழகிக் கொண்டு விட்டார்கள். இந்தத் தலை முறையினருக்கு
அது தெரிய நியாயமில்லை.
இந்தப் புலம் பெயர்தலும் ,புது வாழ்க்கையும்
விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம் என்றால்,
இவர்களின் வேதனைகளும் வலிகளும் உணரப் படுகின்றன. இவர்கள் செய்வது நாட்டுக்கான
தியாகம். இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உயிரிழப்புகள் இருந்தே தீரும் என்று
ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் போல. பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் போது
சிலரது இழப்புகள் தவிர்க்க முடியாது.
அந்தக் காலத்தில் இந்தப் பொருளாதார
முன்னேற்றத்துக்காக, அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்த தியாகம் கண்டு கொள்ளப்
படாமலேயே போயிருக்கிறது. ஒரு கணக்குப்படி, சுதந்திரம் கிடைத்த ஐம்பது வருடங்களில்,
ஐந்து கோடி பேர்கள் இடம் பெயர்க்கப் பட்டிருக்கிறார்கள். முன்னேற்றத்தின்போது
உரிமைகளைப் பற்றி பேசுவது விரும்பத்தக்கது அல்ல என்று அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர
பிரசாத், கூறியதாகவும் செய்தி இருக்கிறது.
முன்னேற்றத்துக்காக ஒரு விலை கொடுத்தே
ஆகவேண்டும்.ஆனால் இந்த முன்னேற்றத்துக்கு விலை கொடுப்பவரகளுக்கும் உரிமை இருக்க
வேண்டும். ஆதிவாசிகளின் அடி வயிற்றில் கை வைத்து அவர்களின் வேதனையில்
முன்னேறுபவர்கள், தனிப்பட்ட மனிதர்களாக இருப்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.
ஒருமுறை நான் கடவுளோடு கனவில் உரையாடியபோது அவர்
சொன்னார்.
( PAIN IS INEVITABLE. BUT
SUFFERING IS OPTIONAL ) வலி
தவிர்க்க முடியாதது. ஆனால் வேதனையாக எண்ணுவது நாமே தேடுவது .முன்னேற்றத்தில் வலி
இருக்கும், அவர்களின் வேதனையைக் குறைக்க அரசாங்கம் ஆவன செய்யலாமே.
உரிமைக்காகப் போராடுபவர்களும் ஒரு லட்சுமணன்
கோட்டைப் போட்டுக் கொள்வது நலமோ என்று தோன்றுகிறது. .அதை அவ்வப்போது மீறி ராமாயணம்
தொடரவும் வழி செய்யலாமோ.?.
-------------------------------------------------------------
( பின் குறிப்பு:- நான் படித்த செய்தியின் படி 1980-களில் என்று இருந்த செய்தியை 1980-ம் ஆண்டு என்று தவறாக எழுதிவிட்டேன். இப்போது திருத்தப் பட்டு விட்டது. சுட்டிக் காட்டிய சுந்தர்ஜீக்கு நன்றி.)
-------------------------------------------------------------
( பின் குறிப்பு:- நான் படித்த செய்தியின் படி 1980-களில் என்று இருந்த செய்தியை 1980-ம் ஆண்டு என்று தவறாக எழுதிவிட்டேன். இப்போது திருத்தப் பட்டு விட்டது. சுட்டிக் காட்டிய சுந்தர்ஜீக்கு நன்றி.)
.
நல்ல சிந்தனைகள்.
பதிலளிநீக்கு"நேருவின் மனைவி" கேள்விப்படாத திடுக்கிட வைத்த விஷயம். நேருவைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் எனக்கில்லையாததால் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான தியாகங்கள் எதையும் with suspicion ஏற்க வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் பதிவு .
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவித்தியாசமான தகவல்கள்.சுவாரஸ்யமான பதிவு.
பதிலளிநீக்குஎன் வரையில் நேருவின் மீது பெரிய அபிப்ராயங்கள் உருவாகவில்லை. அவர் ஒரு கலாரசிகர்.ஆனால் அவருக்கான ஒரு தனி அடையாளம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
1990ல்தான் ராஜிவ் ப்ரதமராய் இருந்தார்.பிழை திருத்தவும்.
உங்களை வாசிக்கும் அனுபவத்தை இழந்திருந்தேன் என்பதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.விரைவாக வாசித்துமுடிப்பேன் பாலு சார்.
@ டாக்டர் கந்தசாமி,
பதிலளிநீக்கு@ அப்பாதுரை,
@ சசிகலா,
@ சுந்தர்ஜி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி. நான் படித்த செய்தியின் படி
1980-களில் ராஜீவ் காந்தியை
அந்தப் பெண் சந்தித்தார்.1980-ம்
ஆண்டு என்று தவறாக எழுதி
விட்டேன். தவறை சுட்டிக்
காட்டிய சுந்தர்ஜீக்கு நன்றி. I
AM AFRAID, THE SUBSTANCE OF
THE ARTICLE IS MISSED,DUE
TO THE PERSONAL LIKES AND
DISLIKES OF NEHRU. நான்
குறிப்பிடும் தியாகங்கள்
மக்களுடையது. நேரு
செய்தது பற்றி அல்ல.
மீண்டும் நன்றி.
அறியாத புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். நல்ல பதிவு.
பதிலளிநீக்குஇந்திய தேசப் பிரிவினைக்குக் கொடுக்கப்பட்ட விலை, ஆயிரக் கணக்கானவர்களின் உயிரும், பல்லாயிரக் கணக்கானவர்களின் வேரறுந்ததுமே.. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வடுக்களும் தழும்புகளும் மாற வில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் புது வாழ்க்கைக்கு, ( இப்போது பழைய வாழ்க்கையாகி விட்டது.)பழகிக் கொண்டு விட்டார்கள். இந்தத் தலை முறையினருக்கு அது தெரிய நியாயமில்லை.
பதிலளிநீக்குஇன்று காலை வந்த ஒரு குறுஞ்செய்தியில் சுதந்திரத்தைக் கேலி செய்து எழுதியிருந்தார்கள். அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.