கோவா நினைவுகள்.......
-----------------------------
கோவாவில் ஜுவாரி
கெமிகல்ஸ் தொழிற்சாலைக்கு ஒரு பணி
நிமித்தம் செல்ல வேண்டி இருந்தது. கோவாவை நினைத்தால் நினைவுக்கு வருவது இரண்டு
மூன்று
சம்பவங்களும் கோவாவின் இயற்கை எழிலும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தவழும் கோவா கேரளத்தையும் நீலகிரி மலையையும் நினைவு
படுத்துகிறது.காற்றில் ஒருவித மீன் வாசம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது,
மட்காவ்ங் (MADGAON
)என்று
அறியப்படும் மர்மகோவா கோவாவில் குறிப்பிடத்தக்க நகரம்( ? ) அங்கு ஒரு நாள் மார்க்கெட்
பகுதிக்குச் சென்றேன். எந்த விலங்கின் குடலோ தெரியாது , மாலை மாலையாகத் தொங்க
விட்டிருந்தனர். என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வெளியேறி விட்டேன்.
கோவாவின் தலைநகரம் பணாஜி ( PANAAJI ) எனப்படும் பஞ்சிம் ஆகும்.
மண்டோவி நதியின் தீரத்தில் அமைந்திருக்கிறது. அருகே COLANGUT கடற்கரை. நான் போயிருந்த காலத்தில் அங்கே ஹிப்பிகள்
எனப்படுபவரின் ஆக்கிரமிப்பு என்றே கூறலாம். எந்த ஒரு ஆடையும் இன்றி கடற்கரையில்
ஆண்களும் பெண்களும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருப்பது கண்டு மிகவும்
கூச்சமடைந்து நான் திரும்பி வர முயலுகையில் என்னை ஒரு மேனாட்டுப் பெண் வழி
மறித்தாள். ( மேலாடை ஏதுமின்றி ) நான் பயந்து ஒதுங்க முயற்சிக்க அவள் என்னிடம் ஒரு
ஜோடி காது வளையங்களைக் காட்டி வாங்கி கொள்ள வற்புறுத்தினாள். என் மனைவிக்கு இட்டு
அழகு பார்க்குமாறு சிபாரிசு செய்தாள். என் பாக்கெட்டில் கைவிட்டு ரூபாய் இருபதோ
முப்பதோ அவள் கையில் திணித்து விட்டு ஓடி விட்டேன். இப்போது நினைத்துப்
பார்க்கும்போது அவளிடம் பேச்சுக் கொடுத்து நிறைய விஷயங்களை சேகரித்திருக்கலாமோ
என்று தோன்றுகிறது.ஏதோ வாழ்க்கையைத்தேடி எங்கிருந்தொ இங்கு வந்து அல்லல் படும்
அவர்களை இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஒரு ஹோட்டல் லௌஞ்சில் ஒரு
நண்பருக்காகக் காத்திருந்தபோது நான் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். அருகில்
ஒரு முதியவர் என் சிகரெட் புகையால் அவதிப் படுவது கண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு
என் சிகரெட்டை அணைத்து விட்டென். எனக்கு நன்றி கூறியவர் ஒரு கதை சொல்லலாமா என்று
கேட்டார். காத்திருக்கும் பொழுதைக் கதை கேட்டுக் கழிக்கலாமே என்று கேட்கத்
தயாரானேன்.
முடிந்தவரை அவர் சொன்ன
மாதிரியே சொல்கிறேன்
நான் இப்போதெல்லாம்
யாரிடமும் சிகரெட் புகைக்காதீர்கள் என்று சொல்வதில்லை. ஒரு முறை ரயிலில் நான்
பயணம் செய்து கொண்டிருந்தபோது என் அருகில் ஒரு வாலிபன் விடாமல் தொடர்ந்து
புகைத்துக் கொண்டிருந்தான். என் கணக்குப் படி ஒரு மணி நேரத்தில் அவன் குறைந்தது
மூன்று சிகரெட்டாவது புகைத்துக் கொண்டிருப்பான். பொறுக்க முடியாமல் நான் கேட்டே
விட்டேன் ‘தம்பி ஒரு சிகரெட் என்ன விலை இருக்கும்.?’ அவன் அது சிகரெட்டின் ப்ராண்டைப் பொறுத்தது
என்று கூறி அவன் புகைக்கும் சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாய் என்றான்.( இது
1960-களில் நடந்த சம்பவம் )ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் புகைப்பீர்கள் என்று
கேட்டேன். மூன்று பாக்கெட் வரை இருக்கலாம் என்று கூறினான் நான் மனதில் கணக்குப்
போட்டு ‘ ஒரு நாளைக்கு முப்பது ரூபாய், ஒரு மாதத்துக்கு ரூ.900-/ , ஒரு வருடத்துக்கு
ரூ.10800-/ பத்து வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டுக்குச் செலவு
செய்யாமல் இருந்தால் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளலாமே என்று கூறி, அவனது
முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்
சிறிது நேரம் இருந்து விட்டு அவன் என்னிடம் ‘அங்கிள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு
வீடு இருக்கிறது ?’ என்று கேட்டான்.
சொந்த வீடு ஏதும் இல்லையப்பா. பொழுதை ஒட்டுவதே பெரும்பாடாகி இருக்கிறது. இதில்
வீடு எங்கே கட்டுவது என்றேன் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு
சொன்னது எனக்குள் பதிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவன் சொன்னான் எனக்கு
சொந்தமாக மூன்று வீடு இருக்கிறது “
கோவாவில் புனித சேவியருடைய
உடல் வைக்கப் பட்டிருக்கும் சர்ச்சுக்கும்
புகழ் பெற்ற அம்மன் கோயிலுக்கும் போக முடியவில்லை. சந்தர்ப்பங்கள்
வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்
-------------------------------------------- : . . .
கதையின் நீதி-யாருக்கும் அறிவுரை கொடுக்காதே.
பதிலளிநீக்குஐயா..
பதிலளிநீக்குஉங்களின் அனுபவம் வழி ஒரு பயணமே போகிறேன,
அந்தக் கதை அருமை. நானே இதுபோன்ற நிகழ்வை வைத்து பத்தாண்டுகளுக்கு முன்பு கல்கியில் யானை வாழ்க்கை எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.
மிகப்பெரிய பாரம்பரியமான வீட்டை புதிதாகப் பணம் படைத்தவன் வாங்கியிருப்பான். எனவே அந்த வாங்கிய வீட்டைப் பத்தி அளந்துகொண்டிருப்பான் ஒரு நண்பனிடம். இன்னொரு நண்பன் அதை அமைதியாகக் கேட்டுககொண்டிருப்பான். கடைசியில் அவன் அளந்துசொன்ன வீட்டில் பிறந்து வளர்ந்தவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன்.
// சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம் //
பதிலளிநீக்குஇந்த பதிவில் இளைஞர்களுக்கு நீங்கள் தரும் செய்தி இதுதான்.
இப்போதும் எனக்கு சில காரியங்களை, அப்போதே செய்யாமல் விட்டு விட்டோமே என்று நினைக்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
//நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்.. //
பதிலளிநீக்குநாளை என்றே ஏதுமில்லை. எத்தனையோ நாளைகளைப் பார்த்து பார்த்து நாளை என்பதே மறந்து போய் விடுவதால். நாளை பார்க்கக் கூடிய நாளையும் அந்த மறந்து போகும் ஒன்றில் ஒன்றாகப் போய்விடப் போவதால்.
@ டாக்டர் கந்தசாமி,
பதிலளிநீக்கு@ ஹரணி,
@ தி. தமிழ் இளங்கோ,
@ ஜீவி
வருகைக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றி. ஒரு பதிவு
பல விதமாகப் பார்க்கப் படுகிறது.
நாளை என்ற ஒன்றை மறந்த
ஒருவனின் நேற்றைய நினைவுகள்
இன்றைய பதிவுகளாய்.!
கதை அருமை.நாளை என்ற ஒன்றை மறந்த ஒருவனின் நேற்றைய நினைவுகள்..
பதிலளிநீக்கு