நினைவுகள்-அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள்-அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூன், 2012

கோவா நினைவுகள்......


                                              கோவா நினைவுகள்.......
                                              -----------------------------


கோவாவில் ஜுவாரி கெமிகல்ஸ்  தொழிற்சாலைக்கு ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி இருந்தது. கோவாவை நினைத்தால் நினைவுக்கு வருவது இரண்டு மூன்று
சம்பவங்களும் கோவாவின் இயற்கை எழிலும். மேற்குத் தொடர்ச்சி மலையில் தவழும் கோவா கேரளத்தையும் நீலகிரி மலையையும் நினைவு படுத்துகிறது.காற்றில் ஒருவித மீன் வாசம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது, மட்காவ்ங் (MADGAON )என்று அறியப்படும் மர்மகோவா கோவாவில் குறிப்பிடத்தக்க நகரம்( ? ) அங்கு ஒரு நாள் மார்க்கெட் பகுதிக்குச் சென்றேன். எந்த விலங்கின் குடலோ தெரியாது , மாலை மாலையாகத் தொங்க விட்டிருந்தனர். என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வெளியேறி விட்டேன். 

கோவாவின் தலைநகரம் பணாஜி ( PANAAJI ) எனப்படும் பஞ்சிம் ஆகும். மண்டோவி நதியின் தீரத்தில் அமைந்திருக்கிறது. அருகே COLANGUT  கடற்கரை. நான் போயிருந்த காலத்தில் அங்கே ஹிப்பிகள் எனப்படுபவரின் ஆக்கிரமிப்பு என்றே கூறலாம். எந்த ஒரு ஆடையும் இன்றி கடற்கரையில் ஆண்களும் பெண்களும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருப்பது கண்டு மிகவும் கூச்சமடைந்து நான் திரும்பி வர முயலுகையில் என்னை ஒரு மேனாட்டுப் பெண் வழி மறித்தாள். ( மேலாடை ஏதுமின்றி ) நான் பயந்து ஒதுங்க முயற்சிக்க அவள் என்னிடம் ஒரு ஜோடி காது வளையங்களைக் காட்டி வாங்கி கொள்ள வற்புறுத்தினாள். என் மனைவிக்கு இட்டு அழகு பார்க்குமாறு சிபாரிசு செய்தாள். என் பாக்கெட்டில் கைவிட்டு ரூபாய் இருபதோ முப்பதோ அவள் கையில் திணித்து விட்டு ஓடி விட்டேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவளிடம் பேச்சுக் கொடுத்து நிறைய விஷயங்களை சேகரித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.ஏதோ வாழ்க்கையைத்தேடி எங்கிருந்தொ இங்கு வந்து அல்லல் படும் அவர்களை இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.


ஒரு ஹோட்டல் லௌஞ்சில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தபோது நான் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். அருகில் ஒரு முதியவர் என் சிகரெட் புகையால் அவதிப் படுவது கண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு என் சிகரெட்டை அணைத்து விட்டென். எனக்கு நன்றி கூறியவர் ஒரு கதை சொல்லலாமா என்று கேட்டார். காத்திருக்கும் பொழுதைக் கதை கேட்டுக் கழிக்கலாமே என்று கேட்கத் தயாரானேன்.

முடிந்தவரை அவர் சொன்ன மாதிரியே சொல்கிறேன் 

நான் இப்போதெல்லாம் யாரிடமும் சிகரெட் புகைக்காதீர்கள் என்று சொல்வதில்லை. ஒரு முறை ரயிலில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் அருகில் ஒரு வாலிபன் விடாமல் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான். என் கணக்குப் படி ஒரு மணி நேரத்தில் அவன் குறைந்தது மூன்று சிகரெட்டாவது புகைத்துக் கொண்டிருப்பான். பொறுக்க முடியாமல் நான் கேட்டே விட்டேன் ‘தம்பி ஒரு சிகரெட் என்ன விலை இருக்கும்.?அவன் அது சிகரெட்டின் ப்ராண்டைப் பொறுத்தது என்று கூறி அவன் புகைக்கும் சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாய் என்றான்.( இது 1960-களில் நடந்த சம்பவம் )ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் புகைப்பீர்கள் என்று கேட்டேன். மூன்று பாக்கெட் வரை இருக்கலாம் என்று கூறினான் நான் மனதில் கணக்குப் போட்டு ‘ ஒரு நாளைக்கு முப்பது ரூபாய், ஒரு மாதத்துக்கு ரூ.900-/ , ஒரு வருடத்துக்கு ரூ.10800-/ பத்து வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டுக்குச் செலவு செய்யாமல் இருந்தால் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளலாமே என்று கூறி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சிறிது நேரம் இருந்து விட்டு அவன் என்னிடம் ‘அங்கிள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு வீடு இருக்கிறது ?என்று கேட்டான். சொந்த வீடு ஏதும் இல்லையப்பா. பொழுதை ஒட்டுவதே பெரும்பாடாகி இருக்கிறது. இதில் வீடு எங்கே கட்டுவது என்றேன் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு சொன்னது எனக்குள் பதிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவன் சொன்னான் எனக்கு சொந்தமாக மூன்று வீடு இருக்கிறது 

கோவாவில் புனித சேவியருடைய உடல் வைக்கப் பட்டிருக்கும் சர்ச்சுக்கும்  புகழ் பெற்ற அம்மன் கோயிலுக்கும் போக முடியவில்லை. சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்  நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம் 
                     --------------------------------------------                   :      .               .                                  .                                    
            



    







திங்கள், 30 ஏப்ரல், 2012

விஜயவாடா...தொடரும் நினைவுகள்.


                                 விஜயவாடா ....தொடரும் நினைவுகள்.
                                -----------------------------------------------------

( கற்பனை செய்து கதைகள் எழுதுவது ஒருவிதம். ஆனால் நிஜ வாழ்வில் சில சம்பவங்கள் 
கற்பனையை விட சுவையாய் இருக்கின்றன. இதுவே என் பதிவுகளில்அனுபவங்களின் 
வெளிப்பாடாக இருக்கிறது.)


                                                                                      நண்பேன்டா...
                                          --------------------
விஜயவாடா நினைவுகள் குறித்து முன்பொருமுறை எழுதி இருந்தேன். கீழ்காணும் செய்திகள் இல்லாமல் விஜயவாடா வாழ்க்கை முற்றிலும் சொல்லப்பட்டதாகாது. திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலை கொதிகலன்களுக்கான பாகங்களை தயார் செய்து அவை அனல் மின் நிலையத்தில் ஒருங்கிணைக்கப் படும். விஜயவாடா அனல் மின் நிலையத்துக்கு , கொண்டபள்ளி என்னும் ரயில் நிலையத்துக்கு தளவாடங்கள் வந்து சேரும். அங்கிருந்து அவை மூன்று நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள இப்ராஹிம்பட்டினத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.மிகவும் கனமான பொருட்களை அனல் மின் நிலையத்தருகிலேயே இறக்க வசதியாக ரயில்வே லைன் போட்டிருந்தார்கள்.


தளவாடங்கள் வந்து சேர்ந்ததும் அவற்றை இறக்கி ( unload ) ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரயில்வேக்கு டெமரேஜ் என்று அபராதம் கட்ட வேண்டும். ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாலேயே அவர்களுக்கு “ கப்பம்
கட்ட வேண்டும் என்பது எழுதப் படாத விதி..வரும் ரயில் வாகன்களின் சக்கர எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுக்க வேண்டும்

அனல் மின் நிலையத்துக்கான கொதிகலனின் பாய்லர் ட்ரம் எனப் படும் பாகம் மிக முக்கியமானது. 210 மெகாவாட் அனல் மின் நிலையத்துக்கான பாய்லர் ட்ரம், சுமார் 140 மெட்ரிக் டன் எடையிருக்கும். அதை வாகனிலிருந்து இறக்குவது முக்கிய பணி. இதற்காக TATA  P&H CRANE-கள் உபயோகப் படுத்தப் படும். ஒரு க்ரேனின் தூக்கும் சக்தி அதிக பட்சமாக 75-டன் ஆகும். ஒரே சமயத்தில் இரண்டு க்ரேன்களும் சரியாக இயக்கப் பட்டால் வேகனிலிருந்து இறக்கலாம். SYNCHRONISE ஆக இயக்காவிட்டால் விபரீதமாகிவிடும். ட்ரம் கீழே விழுந்து சேதப்பட வாய்ப்புண்டு.

அன்றைக்கு எனக்கு உடல் நலம் சற்றுக் குறைவாக இருந்ததால் ,அன்று பாய்லர் ட்ரம் வராது என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு ஓய்வெடுக்க வீடு நோக்கிப் பயணப் பட்டேன். போகும் வழியில் பாய்லர் ட்ரம் வேகன் கொண்டபள்ளி நோக்கி வருவதை கண்டு மீண்டும் பணியிடத்துக்கு வந்து விட்டேன். எல்லாம் சரியாகத் திட்டமிட்டு அதன் படி நடந்தால் இர்ண்டு மூன்று மணி நேரத்தில் ட்ரம்மை இறக்கி விடலாம். மீண்டு வந்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டேன். ட்ரம்மை இறக்கி வைக்க மர ஸ்லீப்பர்களை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தேன். அந்த நாள் என் கட்டுமான பணி அனுபவத்தில் மறக்க முடியாதது.


முதன் முதலாக அந்த எடையுள்ள முக்கிய பாகம்  பார்ப்பதற்கும் ,அதை எப்படி இறக்குகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் ஒரு கும்பலே கூடி விட்டது. கட்டுமானப் பணி நடந்த இடம் BLACK COTTON SOIL எனப் படும் நிலம். பளு ஏற்றப் பட்டால் க்ரேன் மண்ணில் புதைய வாய்ப்புண்டு என்று கணித்திருந்தோம். அதற்கேற்றாற்போல் க்ரேன் நிற்க வேண்டிய இடத்தில் சில சிறிய போல்டர்கள் மற்றும் ஸ்லீப்பர்கள் அடுக்கி அதன் மேல் க்ரேனை நிற்க வைத்தோம். வேகன் வந்ததும் ட்ரம்மின் இரண்டு பக்கங்களிலும் ஸ்லிங்கை மாட்டி ட்ரம்மை மேலே தூக்கி வேகனை ரிலீஸ் செய்வது , பிறகு அந்த இடத்தில் ஸ்லீப்பர்கள் மேல் ட்ரம்மை இறக்குவது என்று ப்ளான்.

வேகனில் ட்ரம்முக்கு சப்போர்டாக க்ளாம்ப் எனப்படும் பொருள் வெல்ட் செய்யப் பட்டிருந்தது. அதை முதலில் எடுக்க வேண்டும் . பிறகே ட்ரம்மைத் தூக்க வேண்டும். அதற்கு வேண்டிய காஸ் கட்டர் எடுத்துவர நான் ஸ்டோருக்குச் சென்றவுடன், அதையறியாத ,இதில் சம்பந்தப் படாத அதிகாரி ஒருவர்ட்ரம்மில் ஸ்லிங்கை மாட்டி க்ரேனை இயக்க உத்தரவு கொடுத்து விட்டார். க்ரேன் ஆப்பரேட்டர்கள் அவர் சொல் கேட்டு இயக்க நடக்கக் கூடாதது நடந்து விட்டது. க்ரேன் இரண்டும் முன் பக்கம் சாய்ந்து மண்ணில் கொஞ்சம் புதைந்து இயக்க முடியாத நிலைக்கு வந்து விட்டது. நடந்த தவறு உணர்ந்ததும் உத்தரவு கொடுத்தவர் ஓடிவிட்டார். அருகில் இருந்தால் நமக்கும் வம்பு என்று ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு அகன்றனர். ட்ரம் ஒரு ப்ரிகாரியஸ் பொசிஷனில்.வேகன் நகர முடியாது. க்ரேன் இயக்க முடியாது. அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாந்தான் பொறுப்பு. மாலை ஆறு மணிக்கு மேலாயிற்று. என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தலைமேல் கை வைத்து அமர்ந்து விட்டேன்.

அப்போதுதான் “ பட்டாளத்தார் “ என்று நான் அழைக்கும் என் நண்பர் எனக்கு ஆறுதல் கூறி நடக்க வேண்டியதைச் செய்ய திட்ட மிடச் சொன்னார். என்ன செய்தோம் ஏது செய்தோம் என்று விவரிக்கப் போனால் புரிந்து கொள்வதோ உணர்ந்து கொள்வதோ கஷ்டம் மொத்தத்தில் அந்த இக்கட்டான நிலையிலிருந்து எனக்கு ( கூடவே இருந்த நண்பருக்கும் )இரண்டு இரவுகளும் ஒரு பகலும் முடிந்து, அடுத்த நாள் காலையில்தான் மீண்டு வர முடிந்தது. இந்தக் காலத்தில் குறிப்பிடப்படும் “ நண்பேண்டா) என்ற பட்டம் அவருக்கு முழுவதும் பொருந்தும்.அருகிலிருந்தவர்களை அடையாளம் காட்டிய அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் மாற்றி விட்டது.
                          ----------------
                                THE BIGGEST WASHING MACHINE
                                      ----------------------------

கட்டுமான பணியில் நான் இருந்த போது, விஜயவாடாவுக்கு ஜெர்மானியர் ஒருவர் வந்திருந்தார். ஜெர்மன் கூட்டுறவில் தயாராயிருந்த பொருட்கள் சரியாகப் பொருத்தப் படுகிறதா என்று பார்க்க வந்திருந்தார். விஜயவாடாவில் ஒரு வார காலமே இருந்த அவருக்கு, எங்களைவிட விஜயவாடா பற்றிய சேதிகளும் வசதிகளும் ( இரவு வாழ்க்கை உட்பட )தெரிந்திருந்தது. அவர் அனல் மின் நிலையத்துக்கு வந்து போவதற்கு மட்டும் நாங்கள் அனுப்பும் காரை உபயோகிப்பார். மற்ற நேரங்களில் விஜயவாடாவுக்கே உரித்தான சைக்கிள் ரிக்‌ஷாவில்தான் சுற்றுவார். எந்த இடத்தில் எந்த மாதிரியான மக்கள் ,இரவு கேளிக்கைத் தலங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. கிருஷ்ணா நதிக்கரையில் சலவை செய்யப் பட்டுக் காயப் போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து “THE BIGGEST WASHING MACHINE “ என்று சொல்லி சிரிப்பார். வேலை நேரத்தில் அதைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்.ஒரு மறக்க முடியாத கேரக்டர்.
---------------------------------------------------    





.