Saturday, November 29, 2014

பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்


                    பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்
                    -----------------------------------------------------------
                             ( சீரியஸ் அல்ல சிரித்துப் போக)
                                ----------------------------------------


ஜோக்காளி தளத்தில் பகவான்ஜி தினமும் நகைச் சுவையாகவே பதிவிடுகிறார். அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டத்தில் சுட்டாலும் என்னால் நகைச் சுவையாக எழுத முடியவில்லை என்று எழுதினேன். இந்த சுட்டாலும் வார்த்தைக்கு இன்னொரு பொருள் படி பல இடங்களில் படித்த அல்லது சில இடங்களில் இருந்து சுட்ட சில செய்திகள் கொண்டு முன்பு ஓரிரு பதிவுகள் எழுதியது நினைவுக்கு வந்தது. அதற்கு வந்த ஒரு பின்னூட்டமொன்றில் இது மாதிரி பதிவுகள் என் இயல்புக்கு மாறியதாக ஒரு நண்பர் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நகைச் சுவையாக எழுத வராதே தவிர நகைச் சுவை எழுத்தை நன்கு ரசிப்பேன். அதுவு பெண்களை மையப்படுத்தி எழுதி இருந்தால் ரசனை இன்னும் கூடும்.

வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.
                                                --- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.   --- ஆஸ்கர் வைல்ட்.---

பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்
                                      ---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது.       -----சாம் கினிசன்

பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,
                                      ---எச். எல் .மென்கென் ---
புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--
                                      
மனைவிக்குக் கார் கதவை ஒருவன் திறந்து விடும்போது. ஒன்று நிச்சயம் அது புதிய கார் அல்லது அவள் புதிய மனைவி.
நான் என் மனைவியை எங்கு அழைத்துச் சென்றாலும் தவறாமல் வீட்டுக்கு திரும்பி  வந்து விடுகிறாள்
.
நான் என் மனைவியை எங்கள் திருமணநாள் விழாவுக்கு எங்கு போக வேண்டும் என்று கேட்டேன். எங்கானாலும் இதுவரைப் போகாத இடத்துக்கு என்றாள். அப்படியானால் சமையல் அறைக்கு ? என்றேன்.
                                                  -----யாரோ
எப்பொழுதும் என் மனைவியின் கையை விட மாட்டேன். விட்டால் ஷாப்பிங்  போய்விடுவாள்.
குப்பைத் வண்டி பின்னால் நான் தாமதமாகி விட்டேனா? என்று கேட்டுக் கொண்டு ஓடிய என் மனைவி பின்னே ஓடிச் சென்ற நான்,“ இல்லை . ஏறிக்கொள் என்றேன்.

அவன் திருமணம் செய்து கொள்ள ஏன் பயப் படுகிறான் என்று சொன்னான். திருமண மோதிரம் சிறிய கை விலங்கு போல் தெரிகிறதாம்

உன் மனைவி முன் வாசலில் இருந்தும்  உன் செல்ல நாய் பின் வாசலிலிருந்தும் அனுமதி வேண்டி இரைந்தால் யாரை முன்னால் உள்ளே விடுவாய்? . நிச்சயமாய் என் நாயை அது அனுமதிக்கப் பட்டவுடன் குரைப்பதை நிறுத்தும்.                 ----- யாரோ---
-
ஒருவன் ஒரு வேண்டுதல் கிணறுக்குள் வேண்டிக் கொண்டு சில்லறையை வீசினான். அவன் மனைவியும் வேண்டுதலுக்காக கிணற்றுக்குள் எம்பிப் பார்த்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாள். அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். அட... இவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறை வேறி விட்டதே

இன்று தங்களது தளத்தில் இரண்டு பதிவர்கள் சுட்ட பதிவுகள் பற்றி எழுதி இருக்கிறார்கள்( தி. தமிழ் இளங்கோ மற்றும் ஊமைக் கனவுகள்). என்ன பொருத்தம் நானும் ஒரு பதிவு சுட்டு எழுதி இருக்கிறேன். ஆனால் இது என்றோ சுட்டது. மீள்பதிவு









 





Wednesday, November 26, 2014

அடி மேல் அடி அடித்தால்


                                     அடிமேல் அடி அடித்தால்
                                      -----------------------------------


 சிலவிஷயங்கள் ஓரிரு முறை சொல்லிப்போனால் போய்ச் சேருகிறதா தெரியவில்லை. அதுவும் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களைக் குறித்துப் பதிவிட்டால் பதிவுலகில் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ஒருவர் புரட்சி செய்வதாக நினைக்கிறார். இன்னொருவர் இவருக்கு lateral thinking என்கிறார். இருந்தாலும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பலரும் செயல்படும்போது என் மனமும் சிறிது வருந்துகிறது என்று சொன்னால் மிகையாகாது. இருந்தாலும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தவிர வேறெண்ணமில்லை எனக்கு. அனாதிகாலமாக பாதுகாக்கப்பட்ட சில எண்ணங்களை எளிதில் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை.
சில் நாட்களுக்கு முன் என் பேரன் ( வயது 9 ) கடவுள் பற்றி நாங்கள் கூடி இருந்தபோது கேட்டான். அவனது பாட்டி ( என் மனைவி) புரிந்தோ புரியாமலோ சில ஸ்தோத்திரங்களை எப்போதும் படித்துக் கொண்டிருப்பவள். ஒரு முறை வீட்டின் மேல்தளத்திலிருந்து  கீழே விழுந்து காயம் ஏதும் படாமல் தப்பித்த என் மகன் அதற்கு அவன் அணிந்திருந்த ஆஞ்ச்நேயர் டாலர்தான் காரணம் என்று நம்புபவன்.. என் மருமகளும் காரணங்கள் ஏதும் கேட்காமல் இருக்கும் குண முடையவள். இப்படி இருக்க என் பேரனின் கேள்வி எனக்கு ஆச்சரியமளித்தது. கேள்வி கேட்க வேண்டும் என்னும் தாத்தாவின் குணமிருப்பது மகிழ்ச்சி அளித்தது. அவன் கூடவே கடவுள் என்று ஒன்றுமில்லை. எல்லாமே சயின்ஸ்தான் என்றான். நான் அவனிடம் வளரும்போது கேள்விகள் கேட்டு சரியான பதில்களைப்பெற வேண்டும். இப்போதே எதையும் ஒரு சார்பாக நினைக்காதே என்றேன்.

ஆக மீண்டும் கடவுள் பற்றிய என் எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தது. நம் நாட்டில்தான் எத்தனைக் கடவுள்கள். ?எத்தனைக் கதைகள்.?பண்டித் ஜவஹர்லால் நேரு எழுதி இருந்ததைப் படித்த நினைவு வருகிறது. கடவுள் என்பவரே மனிதனின் சிருஷ்டி. காரணம் தெரியாத நிகழ்வுகளுக்குக் காரணங்காட்ட அவனால் சிருஷ்டிக்கப் பட்டவரே கடவுள். அதை நம்புபவரை ஆத்திகர் என்றும் நம்பாதவரை நாத்திகர் என்றும் கூறுகிறார்கள். நான் எழுதுவது ஆத்திக நாத்திக வாதம் பற்றியதல்ல. மனிதன் ஏன் இத்தனைக் கடவுள்களைப் படைத்தான் என்னும் கேள்விக்கு பதில் காணவே இதை எழுதுகிறேன், பகிர்கிறேன்
கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறைகற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கடவுள் வழிபாட்டுக்கும் விக்கிரக ஆராதனைக்கும் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

?
கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ..
 காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால்செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசிநல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  சரிதானா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பது தவறா.?  
மக்களின் மனநிலையும் அணுகுமுறையும் தெரிந்தும் தொடர்ந்து எழுதுகிறேன் என்றால் சில விழுக்காடு மக்களாவது சிந்திக்கத் துவங்குவார்கள் எனும் நம்பிக்கைதான்   
  




  

Monday, November 24, 2014

அம்மாவும் குழந்தைகளும்


                                                 அம்மாவும் குழந்தைகளும்
                                                           காணொளிகள்
                                                            ---------------------
 என்ன நண்பர்களே காணொளிகளை ரசித்தீர்களா? நான் எதுவும் கூறப் போவதில்லை.

Sunday, November 23, 2014

காந்தி கனவு 10 கேள்விக் கண்ணியில் நான்


                                      கில்லர்ஜியின் கேள்விக்கண்ணியில் நான்
                                     --------------------------------------------------------------
                                           (டாக்டர் ஜம்புலிங்கத்தின் வேண்டு கோளில்)


தமிழ்ப் பதிவுலகில் கில்லர்ஜி ஒருவர். அபுதாபிவாசி. அண்மையில் மதுரை வலைப் பதிவர் விழாவில் சந்தித்தேன். சுவாரசியமானமனிதர். அவருக்கு ஒரு கனவு வந்தாலும்வந்தது  பதிவுலகையே அதைக் கொண்டு கலக்குகிறார். அவர் கனவில் காந்தி வந்தாராம் 10 கேள்விகள் கேட்டாராம். இவர் பதில் சொன்னதைவிட மற்ற பதிவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்னும் ஆவலில் கனவுக் கேள்விகளை ஒரு தொடர் பதிவாக்கி பலரையும் எழுதத் தூண்டுகிறார். டாக்டர் ஜம்புலிங்கத்தின் கண்ணியில் என்னைக் கோர்த்து விட்டிருக்கிறார். எனக்கு இந்த ஹைபொதெடிகல் கேள்விபதில்களில் நம்பிக்கை இல்லை. இருந்தும் நண்பர் கேட்கிறார் மறுக்க முடியவில்லை
 இதோ கேள்விகளும் பதில்களும்

நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?
யார் கேட்டாலும் என் பதில் இதுதான். எனக்கு மறு பிறவியில் நம்பிக்கை இல்லை
ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

ஓ...இருக்கிறதே ஏற்ற தாழ்வற்ற  ஒரு சமுதாயம் அமைய பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சில் அந்த எண்ணம் வராமல் தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் இலவச போதனை,இலவசசீருடை இலவச உணவு என்றுஎல்லோருக்கும் பொதுவாக எல்லாப் பள்ளிகளையும் கட்டாயப் படுத்த கல்வித் துறையை அரசே கையகப் படுத்தும். சாதிமத பேதம் ஏழை பணக்கார வித்தியாச எண்ணம் எல்லாம் அறவே ஒழிந்தால் ஒரு ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் நாளாவட்டத்தில் உருவாகும்.

இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?

எதிர்ப்பு வெளி நாட்டில் இருந்து வராது. இதனால் பாதிக்கப் படப் போகும் கல்வி வியாபாரிகள் எதிர்க்கலாம். துணிவாக இறங்கினால் நாளாவட்டத்தில் பிசு பிசுத்துப் போகும்
முதியவர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?
அவரவர் பாடு என்று விட்டு விடுவேன். வளரும்போதே முதுமையை எதிர்கொள்ள அவர்களே கற்க வேண்டும்குடும்பத்தை ஒழுங்காக நிர்வகித்தால் அவர்களது குடும்பமே அவர்களைக்கவனித்துக் கொள்ளும்

மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?
ஏன் போகவேண்டும்.?என் கல்வி முறையில் அதற்கு வாய்ப்பிருக்காது.
விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?
இதென்ன கேள்வி. ஒவ்வொருவருக்கும் திட்டம் போட முடியுமா.?ஆர்வமுள்ளவர்கள் எங்கும் செய்து முடிப்பார்கள்
இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
நிச்சயம் செய்வார்கள். பலன்களை அனுபவித்த மக்கள் செய்யாவிட்டால் தூக்கி எறிவார்கள்.
மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
இதெல்லாமே புதுமைதானே.எனக்கு என் நாடுதான் முக்கியம்.அவர்கள் வேண்டுமானால் என் நாட்டைப் பின் பற்றலாம்
எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?
இதற்கு நான் பதில் சொல்ல பிரியப் படவில்லை. இறைவன் மறு பிறவி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.அடுத்தவனை அடிமைப் படுத்த சிலர் ஏற்படுத்திய பூச்சாண்டி கதைகளேஇவைகள்.

என்னோடு  இத்தொடர் நிற்கட்டும். யாரையும் துன்பத்தில் ஆழ்த்த என் மனமிடங்கொடுக்கவில்லை. For every beginning there must be en end….!
  
 
 
 



Thursday, November 20, 2014

பகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்


                                  பகவத் கீதை--சில எண்ணப் பகிர்வுகள்.
                                   ----------------------------------------------------


கீதையின் 18 அத்தியாயங்களில் இருக்கும் சுலோகங்களுக்கு  ஒரு வழியாக தமிழ்ப் பதவுரை கொடுத்து முடித்துவிட்டேன். பகவத் கீதை படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என் பதிவுகள் மூலம் படித்தறிய ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணி ஒரு யக்ஞம் என்பதுபோல் செய்து முடித்த திருப்தி.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்




நானும் பகவத் கீதையின் தமிழ்ப் பதவுரை முழுவதும் எழுதிவிட்டேன். இருந்தாலும் பெரும் பாலோரால் மேற்கோள் காட்டப்பட்டு, சுவாமி அறையில் மாட்டப்படும் மேற்படி வாசகம் கீதையில் எங்குமே காணவில்லை. விரிவுரை கூறியவர்களின் எழுத்துக்களை ஸ்ரீபகவான் கூறியதென்று சொல்லி பரப்பவேண்டிய கட்டாயம் ஏதோ.?. புரியாத ஒன்று. அதேபோல் ‘கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்றும் கீதையில் இல்லை. பலனை எதிர்பாராமல் செய் என்னும் கிட்டத்தட்ட பொருளில் அத்தியாயம் 2-ல் சுலோகம் 47 சொல்கிறதுவினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய்,வினைப்பயனில் ஒரு பொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே, வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே
கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பதில் பதினேழாம் சுலோகத்தில் “இந்த ஜகத்தின் தந்தை, தாய், பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும் ஓங்காரம், ரிக், சாம யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே” என்று வருகிறது. அதர்வண வேதம் அவருக்குத் தெரியாதா? அப்போது அதர்வண வேதமே இருக்கவில்லையா என்று என்னுள் கேள்வி எழுந்தது.   



பகவகீதை மகாபாரதத்தில் ஏற்றப்பட்ட ஒரு இடைச் செருகல் என்றே தோன்றுகிறது. மகாவியாசர் எழுதியதாயிருந்தால் விருஷ்ணிகளுள்  நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் நான் வியாசர், கவிகளுள் நான் சுக்கிரன்என்று தன்னை குறித்தே எழுதி இருப்பாரா.?
இது வரை எழுதியவற்றில் என் கருத்தாக எதையும் சொல்ல முற்படவில்லை. இப்போது அதற்கான நேரம் வந்து விட்டதாக எண்ணுகிறேன்
கீதை தன்னகத்தே எத்தனையோ நல்ல விஷயங்களைப் பேசிச் செல்கிறது. மனதை ஒருமுகப் படுத்துவது பற்றி, விருப்புவெறுப்பு இன்றி நினைக்கவும் செயல் படவும் அறிவுறுத்துகிறது.இருந்தாலும் படித்து முடிதபின் ஏதோ மனம் நிறைவு பெறாத ஒரு எண்ணம்.தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தில் தெய்வ அசுர குணங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. படித்தபின் தெய்வ குணங்கள் உள்ள மானிடரைக் காண்பதே அரிதோ என்று தோன்றுகிறது.



என் எண்ண வெளிப்பாடுகளைப் படிக்க முற்படுமுன் ஒரு வேண்டுகோள்..
When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.

நான் இவ்வாறு எழுதுவதன் நோக்கமே நம்மில் பெரும்பாலோர் மனதளவில் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து அடிமையாய் இருக்கிறோம் அல்லது சிந்திக்க மறுக்கிறோம் என்று நினைப்பதால்தான். என் முந்தைய பதிவு ஒன்றில் நாம் உண்மையில் சுதந்திரம் அடைந்துவிட்டோமா என்று கேள்வி கேட்டிருந்தேன். பதிலாக எது அடிமைத்தனம் என்றும் பதிலையும்( உபயம் திரு அப்பாதுரை அவர்களின் பதிவு ஒன்று) எழுதி இருந்தேன். நினைவூட்டலுக்கு அதனை இங்கு மீண்டும் கொடுக்கிறேன்.

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"
பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

மேலே கூறி இருக்கும் கருத்துக்கள் இதைப் படிப்பவர்களைத் தயார் செய்யவும் பகவத் கீதையை என் கண்ணோட்டத்தில் நான் பார்ப்பதைப் புரிந்துகொள்ளவும் வேண்டித்தான் படிக்கத் துவங்கும் முன் மனதை ஒரு clean slate ஆக வைத்துக் கொள்ளவேண்டும் அதையே WE HAVE TO UNLEARN , WHAT WE HAVE LEARNT AND KNOWN என்று கூறி இருக்கிறேன்

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் தெரிந்த உண்மை.. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை

இப்படி அனுபூதியில் உணர்ந்தமூலப்பொருள்  பற்றிய எண்ணமே ஒரு உருவகம் அல்லது ஒரு concept என்றே தோன்றுகிறது. கீதையில் உபதேசமாகக் கூறப்பட்டவை அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படும் ஒரு மனிதனுக்குப் புகட்டப் பட்ட indoctrination என்றே கூறலாம்  நடைமுறை வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் தெரியாமல் அல்லாடும் மனிதனிடத்தில் அவனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத உண்மை இல்லாமல் இருக்கக் கூடிய வாய்ப்புகளுள்ள , சாதாரண வாழ்க்கையில் செயல்படுத்த இயலாத ஆத்மா ஜீவன் இறப்புக்குப் பின் பிறப்பு கர்ம பலன் போன்ற  விஷயங்கள் விளக்கம் என்பதுபோல் புகட்டப் படுகிறது
கணிதங்களில் ஜியோமிதி ஒரு வகை. பல தேற்றங்களைக் கூறி அவற்றை நிரூபிக்கவும் செய்வார்கள். நிரூபித்து முடிவில்(QED) என்று முடிப்பார்கள். Quad erat demonstrandum meaning  proof  of mathematical argument என்று பொருள்படும். நாங்கள் படிக்கும்போது QUITE EASILY DONE  என்று கூறுவோம். ஆனால் கீதையில் கூறப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு முடிவில் QED என்று போட முடியுமா. என்பதே பெரிய கேள்விக்குறி.


ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கீதையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர் பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று பக்தியோகம் ஓங்குகிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது.என்றும் அறிவுறுத்தப் படுகிறது.

கீதையைப் படிக்கும் போது ஒன்று புரிகிறது செய்ய இயலாத அனுஷ்டானங்களைச் செய்யாமல் இருந்தாலும் பாதகமில்லை. ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்தால் போதும் என்று குறிப்பாக உணர்த்துகிறது

ஒரு கோட்பாடு ஓரிடத்தில் பகரப்பட்டால்  அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அது விளக்கப் பட்டிருக்கிறது. சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்று ஓரிடத்தில், பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகவும். மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்றும்  கூறப்படுகிறது. இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாளப்பட்டிருக்கிறது  என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல் எங்கும் விரவிக் கிடக்கிறது. செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன.




ஆனால் கீதை சாமானியனால் படித்து அறிந்து கொள்ளமுடியாதபடி எழுதப் பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது இப்படிப் பல விதமான வார்த்தைப் பிரயோகமே படிப்பவனை  அல்லது அது குறித்துக் கேட்பவனை சிந்திக்க முடியாமல் செய்கிறதோ அல்லது ஒரு பிரமிப்பு  ஏற்படுத்துகிறதோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதையும் மீறி வியாக்கியானம் செய்பவர்களின் வெவ்வேறு விளக்கங்கள் , நான் பகவத் கீதையைப் பற்றி எந்தக் கருத்தும் கூறினால், அது ஏற்புடையதா என்று சிந்திக்கக் கூட வழியில்லாமல் நம் ஜீவ அணுக்களிலேயே (genes) மூளைச் சலவை செய்யப் பட்டிருக்கிறோம்.
மீண்டுமொரு முறை நான் நம் மன சுதந்திரம் பற்றி மேலே எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள்.
நான் என் பல பதிவுகளில் எழுதி வரும் ஏற்ற தாழ்வுகளுக்கான அடித்தளம் அந்தக் காலத்திலேயே போடப் பட்டிருக்கிறது பதிவு சற்று நீண்டாலும்சொல்ல வருவதை ஒரே மூச்சில் சொல்வது நலம் என்று கருதி தொடர்கிறேன்




உலகில் எல்லா இனத்தவரையும் செய்யும் தொழிலால் நான்குவகைகளாகப் பிரிக்கலாம் மத சிந்தனைகளை வளர்ப்பவர்களை அந்தணர்கள் என்றும் போர்ப் படையில் இருப்பவர்களை க்ஷத்திரியர்கள் எனறும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை வைசியர்களென்றும் உடல் உழைப்பு செய்பவர்களை சூத்திரர்கள் என்றும் செய்யும் தொழிலை வைத்து வகைப் படுத்தலாம்.இதைத்தான் கீதையில் 4-ம் அத்தியாயத்தில் 13-ம் சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூற முற்பட்டிருப்பார் என்று தெரிகிறதுகுணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன்.அதற்குக் கர்த்தாஎனினும் என்னை அவிகாரி என்றும் அகர்த்தா என்றும் அறிக மனபரிபாகத்திலும் செய்கின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ண பேதம் என்று புரிந்து கொள்ள முடிகிறது
பகவான் உலகத்தைச் சிருஷ்டித்தபோதிலும் அவர் கர்த்தா அல்ல என்னும் தொனியில்  9-ம் அத்தியாயம்5-முதல் 10 வரையிலான சுலோகங்கள் தெரிவிக்கின்றன



 ஆனால் பிறப்பால் வேறு படுத்திப் பார்ப்பதே நம் நாட்டில் ஏற்ற தாழ்வுகளுக்கான வித்திட்டிருக்கிறது அதையே கீதையும் செய்கிறது. கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பது சுலோகம் 32பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர் வைசியர் சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.
கீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் இல்லை.கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன.புண்ணிய நதி சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன கடவுளைக் கருதும் மனிதர்கள் எல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர்.செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர்’-என்னும்படியான வியாக்கியானம் வேறு...! இறந்தபின் எல்லோரும் சவம்தானே......!  
கீதை காலத்திலேயே பெண்களைத் தாழ்வாகப் பார்க்கும் கண்ணோட்டம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு அத்தியாயம் ஒன்று சுலோகம் 41 அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர்.கிருஷ்ணா, மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக்கலப்பு உண்டாகிறது  ஆனால் இன்றைய நாட்களில் கலப்புகள் எல்லா இடங்களிலும் சீரிய பயன் தருகிறது என்றே கருதப் படுகிறது




கீதையின் பெரும்பாலானபகுதிகள்  ஸத்துவ ராஜஸ தமோ குணங்களைப் பற்றியே கூறுகின்றன. அந்தந்த குணங்களின் வெளிப்பாடுகள் அதனதன் பலன்கள் என்றே விதவிதமாகச் சொல்லப் படுகிறது.
அத்தியாயம் 2 சுலோகம் 19 “ஆத்மாவைக் கொலையாளி என்றும் கொலையுண்பானென்று எண்ணும் இருவரும் அறியாதார். ஆத்மா கொல்வதுமில்லை கொலையுண்பதுமில்லைஇது போன்ற விஷயங்கள் சாதாரண மனிதனுக்குப் புரியாதது. புரியாத விஷயங்களைப்புரிந்து கொள்ள முயலும் போது கேள்விகள் எழுகிறது. கேள்விகள் கேட்டுத்தெளிவுற அடிப்படைகள் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்க வேண்டும் அல்லவா.?


மனிதன் உடலில் இந்திரியங்களால் வாழ்பவன் அவனிடம் உடலுக்கு உணர்வு உண்டு ஆத்மாவுக்கு இல்லை என்று கூறி இல்லாத , அல்லது தெரியாத ஒன்றை நோக்கி வழி நடத்திச் செல்ல முயற்சியே. இந்த போதனைகள் என்று தோன்றுகிறது. கதைக்கு வேண்டுமானால் இது சுவை சேர்க்கலாம். ஆனால் இக வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத கோட்பாடுகளே. இதற்கு ஆதாரம் எங்கும் தேட வேண்டாம் சில பதிவுகளுக்கு வந்துள்ள பின்னூட்டங்களே இதைத் தெளிவாக்குகின்றன. எந்த ஒரு abstract  விஷயத்திலும் கவனம் செலுத்துவது இயலாதது. தான் செய்யும் காரியங்களுக்குப் பொறுப்பு ஏற்கமுடியாதவன் இம்மாதிரி abstract எண்ணங்களில் கவனம் வைக்க முயலுவான். இன்றைய வாழ்வில் நடப்பது நமக்குத்தெரியும்  FOR EVERY ACTION THERE IS AN EQUAL AND OPPOSITE  REACTION  என்பது நிரூபிக்கப் பட்ட விஞ்ஞானம் அதுவே நம் வினைகளுக்கும் பொருந்தும் இருக்கும் வரை அன்பே பழகி நல்வினையே செய்து அதனால் விளையும் மகிழ்ச்சியில் வாழ்வதே சிறந்தது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. இருக்கும் போது நடப்பதை அனுபவிப்பதே நிதர்சனம். இறந்தபின் எப்படியானால் என்ன ?ஒருவனுக்குத் தெரியவா போகிறது.?  இறந்தவர்திரும்பிவந்து அனுபவங்களை பகிரவா போகிறார்.?
அறியாத ஒரு உருவகப் பொருளைத் தேடித்தேடி அலைந்து உழலுவதை விட எல்லோரையும் நேசித்து அன்பால் வாழ்ந்தாலேயே போதும் என்று சொல்லி முடிக்கிறேன்.
( தயை கூர்ந்து ஊன்றிப் படிக்க வேண்டுகிறேன்.)  


               
.