Friday, November 14, 2014

கீதைப் பதிவு-17


                                                    கீதைப் பதிவு--17
                                                    -----------------------
கீதைப் பதிவு அத்தியாயம் -17 (இன்னும் ஒரு அத்தியாயம்)
சிரத்தாத்ரய விபாக யோகம்
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியை மீறி,ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ, அவர்களுடைய நிலை சத்துவமா, ரஜஸா, தமஸா?(1)
ஸ்ரீபகவான் சொன்னது.
தேகிகளுக்கு இயல்பாய் உண்டான சிரத்தையானது  சாத்விகமென்றும், ராஜஸமென்றும் தாமஸமென்றும் மூவிதமாய் இருக்கிறது. அதைக்கேள்(2)
பாரதா ஒவ்வொருவனுடைய மனப் பாங்குக்கு ஏற்ப சிரத்தை அமைகிறது.மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம்.(3)
சாத்விகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ரஜோ குணமுடையவர்கள் யக்ஷ  ராக்ஷசர்களையும், மற்ற தாமச ஜனங்கள் பிரேத பூத கணங்களையும் போற்றுகிறார்கள்(4)
வீம்பும் அகங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய், எந்த அறிவிலிகள் உடலிலுள்ள இந்திரியங்களையும்  உள்ளத்தில் உறையும் என்னையும் துன்புறுத்தி சாஸ்திரத்துக்கு ஒவ்வாத கொடுந்தவம் புரிகிறார்களோ, அவர்களை அசுர வழியில் துணிந்தவர்கள் என்று அறிக,(5,6)
ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவும் மூவகைப் படுகிறது.யாகமும் தபசும்,தானமும் அங்ஙனமே அமைந்துள்ளன, அவைகளுள் இவ்வேற்றுமையைக் கேள்(7)
ஆயுள்,அறிவு, பலம், ஆரோக்கியம்,சுகம் ருசி ஆகியவைகளை வளர்ப்பவைகள்,ரசமுள்ளவைகள், பசை உள்ளவைகள். வலிவு தருபவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்குப் பிரியமானவைகள்(8)
கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, பெருவெப்பம், காரம் வரட்சி,  எரிச்சல் மிகுந்தவையும் துன்பம் துயரம் நோய் உண்டுபண்ணுபவைகளும் ஆகிய உணவுகள் ரஜோகுணத்தாருக்கு விருப்பமானவைகள்.(9)
யாமம் கழிந்த, சுவை அற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாருக்குப் பிரியமானது.(10)
ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப் பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. (11)
பரதகுல சிரேஷ்டனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராஜஸமானது என்று அறிக.(12)
வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணை இல்லாததும் சிரத்தை அற்றது மாகிய யக்ஞம் தாமஸிகமென்று சொல்லப்படுகிறது(13)
தேவர் பிராம்மணர், குருமார் ஞானிகள், ஆகியவர்களைப் போற்றுவதும், தூய்மையும் , நேர்மையும், பிரம்மசரியமும், அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவமெனப்படுகிறது(14)
துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும், நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல்-இது வாக்கு மயமான தபசு என்று சொல்லப் படுகிறது.(15)
மன அமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், துய நோக்கம்-இது மானஸ தபசு என்று கூறப்படுகிறது(16)
பயனை விரும்பாதவரும். யோகத்திலே உறுதி பெற்றவருமான நரர்களால் பெரு முயற்சியுடன் செய்யப்படும் இம்மூவித தபசு சாத்விகமானதென்று பகரப் படுகிறது(17)
பாராட்டுதலையும் பெருமையையும் போற்றுதலையும் முன்னிட்டு ஆடம்பரத்தோடேஈண்டு எத்தவம் புரியப் படுகிறதோ, த்ற்காலிகமானதும் உறுதி அற்றதுமான அது ராஜஸமானதென்று பகரப் படுகிறது(18)
மூடக் கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழித்தற் பொருட்டோ செய்யப்படுகிற தவம் தாமஸமெனப் படுகிறது(19)
தக்க இடத்திலே, வேளையிலே பிரதி உபகாரம் செய்யாதவர் எனினும் தகுந்த பாத்திரமாய் உள்ளவர்க்கு தானம் செய்வது முறையெனக் கருதி வழங்கும் தானம் சாத்விகமானது(20)
மற்று, கைம்மாறு கருதியோ பலனை உத்தேசித்தோ வருத்தத்தோடு வழங்கப் படும் தானம் ராஜஸமென்று எண்ணப்படுகிறது.(21)
தகாத இடத்திலும், காலத்திலும் தகுதி அற்றவர்களுக்கு வணக்கமின்றி இகழ்ச்சியுடன் செய்யும் தானம் எதுவோ அது தாமஸமெனப் படுகிறது(22)
ஓம் தத் ஸத்என்று பிரம்மம் மூவிதமாய் மொழியப் பட்டுள்ளது. அதினின்று வேதியர், வேதம், வேள்வி  பண்டு படைக்கப்பட்டன(23)
ஆகையால் வேதம் அறிந்தவர்கள் வேத விதிப்படி செய்யும் யக்ஞ-தான-தபக் கிரியைகள் எப்பொழுதும் ஓம் என்று உச்சரித்துத் துவங்குகின்றன(24)
“தத்என்று(பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லை) உச்சரித்துப் பலன் விரும்பாது மோக்ஷத்தை நாடுபவர்களால் நானாவிதமான யக்ஞ தபக் கிரியைகளும் தானக் கிரியைகளும் செய்யப்படுகின்றன(25)
அர்ஜுனா, உண்மை என்ற கருத்திலும் நன்மை என்ற கருத்திலும் “ஸத்என்ற சொல் வழங்கப் படுகிறது.மங்கள கர்மங்களிலும் ‘ஸத்என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது.(26)
வேள்வியிலும் தவத்திலும் தானத்திலும் நிலைத்திருப்பதுஸத்  என்று சொல்லப் படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டு செய்யும் கர்மமும் ‘ஸத்என்றே இயம்பப்படுகிறது(27)
சிரத்தையின்றி செய்யும் யாகமும் தானமும் தபசும்மற்ற கர்மமும் ‘அஸத்எனப்படும். அது மறுமைக்கும் உதவாது. இம்மைக்கும் உதவாது.(28)
           சிரத்தாத்ரய விபாக யோகம் நிறைவு.       .    .                         
    .            
 
   ;      
     
                     

24 comments:

 1. காணொளியில் கிருஷ்ணர் படம் அருமை. தலைமுடி தொடங்கி கழுத்து, விரல்களுக்கு என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை, கடகடவென ஓவியம் தயாராகிறது.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. ஒவ்வொருவனுடைய மனப் பாங்குக்கு ஏற்ப சிரத்தை அமைகிறது.மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம்.//

  very informative..

  ReplyDelete
 3. பக்தியுடன் தொடர்கின்றேன் ஐயா..

  ReplyDelete
 4. வாக்குமய தபசு,மானச தபசு இரண்டையும் செய்தால் போதும் என நினைக்கிறேன்.தெளிவு கிட்டும்.
  நன்றி அய்யா

  ReplyDelete

 5. தொடர்கிறேன் ஐயா காணொளி அருமை.

  ReplyDelete
 6. படித்தேன். சிந்திக்கவேண்டும்.

  ReplyDelete

 7. தொடர்கிறேன் ஐயா. காணொளியில் அந்த ஓவியர் விரைவாகவும் அழகாகவும் வரையும் கிருஷ்ணர் ஓவியத்தை இரசித்தேன்.இவ்வாறு வரையும் ஓவியத்திற்கு என்ன பெயர் என்று தெரிந்தால் சொல்லுங்களேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 8. அய்யா,
  பிரச்சனை என்னிடம்தான் இருக்கிறது.
  வரிகளை எளிதாகக் கடந்து போக முடியவில்லை.
  சைவசித்தாந்தத்தின் பல கருத்துகளும் வைணவத்திலும் இருக்கின்றன.
  இது யார் கொடுக்க யார் கொண்டது என்னும் விவாதம் ஒரு புறமிருக்க இந்தத் தொன்மைத் தத்துவவியலிற் பொதுமைகளைக் காணவேண்டும் என்கிற ஆசையை உங்கள் பதிவுகள் ஏற்படுத்துகின்றன.
  இது பேராசைதான்!
  வரம் பெற்று யாரேனும் இருப்பர் அதற்கென எண்ணுகிறேன்.
  தொடர்கிறேன் அய்யா!
  நன்றி!
  ( தங்களின் முந்தைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்களாகலாம் எல்லாம் பார்த்து முடிக்க..!
  சந்தேகம் ஏதுமிருப்பின் கேட்பேன் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.)

  ReplyDelete
 9. கீதைப் பதிவுகள் கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டியவை.பொறுமையாக படிக்க முயற்சிக்கிறேன்.
  ஓவியம் வரையும் காணொளி அற்புதம்

  ReplyDelete

 10. @ ஸ்ரீராம்
  எனக்கு வந்த காணொளி. கீதைப் பதிவுக்கு கண்ணனின் படம் என்று பகிர்ந்தேன். வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 11. @ இராஜராஜேஸ்வரி
  சிரத்தையுடன் வந்து படித்து ரசித்ததற்கு நன்றி மேடம்

  ReplyDelete

 12. @ துரை செல்வராஜு
  பக்தியுடன் தொடர்வதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 13. @ சிவகுமாரன்
  எதைச் செய்தாலாவது தெளிவு கிடைத்தால் சரி.வருகைக்கு நன்றி சிவகுமாரா.

  ReplyDelete

 14. @ கில்லர்ஜி
  காணொளி ‘ யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற ‘ என்று எண்ணிப் பகிர்ந்தது. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஜி.

  ReplyDelete

 15. @ டாக்டர் கந்தசாமி
  /சிந்திக்க வேண்டும் / எதுபற்றி என்று சொல்லவில்லையே. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ கரந்தை ஜெயக் குமார்
  தொட வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ வே. நடன சபாபதி.
  இம்மாதிரி ஓவியம் வரைவதற்கு என்ன பெயர் தெரியவில்லையே. நீங்களும் நல்ல ஓவியர்தானே. வரைந்து பாருங்களேன்.வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 18. @ ஊமைக் கனவுகள்,
  வருகைக்கு நன்றி. எல்லா நதிகளும் கடலையே நாடுகின்றன என்பதே பொதுமைக் கருத்து என்று நினைக்கிறேன். இருந்தாலும் இறை சிந்தனைகளில் என் எண்ணங்களே வேறு.கீதையைப் ப்டிப்பதற்கு ஒரு வாய்ப்பாகவே இப்பதிவுகளை எழுதுகிறேன்.சந்தேகங்களைக் களையும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை. மேலும் என் கருத்துக்கள் ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் என் கருத்துக்களை பதிவுகள் முடிந்தபின் பகிர்வேன். தொடர்ந்து வாருங்கள். திருவெழுக்கூற்றிருக்கை படித்து விட்டீர்களா.?

  ReplyDelete

 19. @ டி.எம். முரளிதரன்.
  அவ்வப்போது படிக்காவிட்டால்....... . சேர்த்து வைத்துப் படிக்கலாம் என்பது ஒரு வேளை இயலாமல் போகலாம்.வருகைக்கு நன்றி முரளி.

  ReplyDelete
 20. வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.

  ReplyDelete

 21. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  ஐயா அழைப்புக்கு நன்றி. சற்றுக் காலம் கடந்துபின் எழுதுகிறேன்வருகைதந்து கருத்திட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 22. மிக அருமையாகப் படம் வரைகிறார். கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. சிரத்தையுடன் கூடிய பதிவுக்கு நன்றி. வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்குதே! :)

  ReplyDelete

 23. @ கீதா சாம்பசிவம்
  வருகை தந்து ரசித்ததற்கு நன்றி மேடம். வேர்ட் வெரிஃபிகேஷன் நானாக வைக்கவில்லை. ஏதோ ஒரு சில பதிவுகளுக்கு கேட்கிறதோ தெரிய வில்லை.

  ReplyDelete