Sunday, January 30, 2011

சில சந்தேகங்கள்....

சில   சந்தேகங்கள்........
-----------------------------
             சிறு வயதிலிருந்தே  எனக்கு  ஒரு  பழக்கம். எதையும்  எளிதில்  நம்பி விடுவதில்லை. கேள்விகள்  கேட்பேன். அதிகப்  பிரசங்கி  என்ற பெயரும்  சில  சமயம்  எடுத்ததுண்டு. இருந்தாலும்  "தொட்டில்  பழக்கம்  சுடு  காடு  மட்டும் " என்பார்கள். சுடுகாடு சேருமுன், கிடைக்கப்படாத  விடைகள்  சில, தெரிந்து  கொள்ளாத  சங்கதிகள்  சில. எது எப்படியாயினும் என் சந்தேகங்கள்  சிலவற்றை  வலையுலகில்  வைக்கிறேன். பதில்  தெரிந்தவர்கள்  என்னை  தெளிவிக்க  முனைந்தால்  நன்றியுடன்  கடமைப்பட்டவனாக  இருப்பேன்.

           1)  சாஸ்திரம் சாஸ்திரம் என்று எதற்கெடுத்தாலும்  பலர் பல இடங்களில் கூறக்  கேட்கிறேன். இந்த சாஸ்திரங்கள்தான்  என்ன.? அனைத்தும்  அடங்கிய புத்தகங்கள் ஏதாவது தமிழிலோ  ஆங்கிலத்திலோ படிக்கக் கிடைக்குமா.?  செவி வழியே கேட்கப்படும் சாஸ்திரங்கள் நம்பிக்கை  தருவதாயில்லை. சம்பிரதாயங்கள்  வேறு. அவை வழக்கப்படி புழக்கத்தில்  இருப்பவை. இடத்துக்கு  இடம் மாறும் விஷயங்கள். சாஸ்திரங்களுக்கு  SANCTITY  உண்டா.? யாரால் ஏற்படுத்தப்பட்டது.? மனு  எழுதிய சாஸ்திரம் என்று பலரால்  பலவிதமாக விமரிசிக்கப்பட்டு வரும் விஷயங்கள்தான்  சாஸ்திரமா.? இது குறித்துக் கேள்விகள் வந்துகொண்டே  இருக்கின்றன. ( சக்தி விகடனில் சேஷாத்திரி நாத சாஸ்திரிகளிடம் கேட்க வேண்டியதுதானே என்று ஒதுக்காதீர்கள். )

           2)  ஆலயங்களில்  அந்தக் காலத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப்  படாத  காலத்தில், ஆண்டவனின்  திரு உருவை தரிசிக்க, விளக்கொளி வேண்டி, ஆலயத்துக்கு  வருபவர்   எண்ணெய் கொண்டு  வருதல் ஏற்றுக்கொள்ளக்  கூடியதே. ஆனால்  அதே  வழக்கப்படி  கர்ப்பக்  கிரகத்தில்  ஆண்டவனின்  திருவுருவை  இன்றும் அரைகுறை  விளக்கொளியில்  தரிசிக்க வேண்டுவது  சரியா.? தூரத்தில்  நின்று கடவுளின் உருவை  யூகிக்க  வேண்டியுள்ளது.  கோவிலுக்கு  எண்ணெய் கொண்டு சென்று  தீபம் ஏற்றும்  பழக்கம் தேவைக்கான  ஒன்றாய் இருந்தது. அன்று. அந்தப் பழக்கம்  தொடருதல்  தேவையா.?  நம்பிக்கை சார்ந்த  விஷயங்களில்  அறிவு சார்ந்த  விடை  கிடைப்பது  கடினம்  என்று எனக்குத்  தெரியும்.

           3) ஆண்டவனைப்  பல உருவங்களில்  வழிபட பல விசேஷ  தினங்கள்  நம்மிடையே  உண்டு. பிள்ளையார்  சதுர்த்தி , கிருஷ்ணஜயந்தி ,சிவராத்திரி போன்ற பல பண்டிகைகள் உண்டு. ஆண்டவனுக்கு  உகந்தது  என்று  பல நிவேதன்கள்  செய்யப்படுகின்றன. பிள்ளையாருக்குக்  கொழுக்கட்டையும் கிருஷ்ணனுக்கு  முறுக்கு  சீடையும் போன்றவை  உதாரணங்கள் .இவைதான் உகந்தவைகள்  என்று எப்படி தெரிந்தார்கள்.? சில நேரங்களில்  அடியார்கள் தங்களுக்குப்  பிடித்ததை  கடவுளுக்கும்  பிடிக்கும்  என்று அளிப்பதை  ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் இது  இவர்களுக்கு  உகந்தது என்று ஆண்டவனின்  சுவையை  அடக்குவது ஏன்.?  சில பண்டிகை  நாட்களில் இதுதான் நிவேதனம் என்று standardise  செய்வது எந்த நம்பிக்கையின்பால்  பட்டது  ?  

           4) வான  சாஸ்திரத்தில் (இந்த  சாஸ்திரம்  அறிவியல் சார்ந்தது) நம்  முன்னோர்   முன்னோடிகள்  என்று நமக்குத்  தெரியும். ஆனால்  நாளின் ஒரு பகுதியை  ராகு  காலம்  என்று குறிப்பிட்டு  அது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  நேரத்தில்  வரும் என்று கூறுவதன்  விளக்கம்  எனக்குத் தெரியவில்லை. அப்படியே  இருந்தாலும் இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும்  அல்லவா... ராகு காலம்  ஒரு இடத்தின்  இருப்பை POSITION  சூரியனோடு ஒப்பிடுகையில்  இருப்பதை  பொறுத்துக்  கணிக்கப்  படுவதுதானே.. இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே... இந்தியாவின்  ஸ்டாண்டர்ட்  டைம்  நாக்பூரின்  இருப்பிடத்தை  ஒட்டியே  கணிக்கப்படுகிறது. நாக்பூரின்  நேரமும் குவாஹத்தியின்  நேரமும் ஜம்முவின்  நேரமும்  நியாயப்படி வேறு வேறாக  இருந்தாலும் கணக்குக்காக  ஒன்றாக  ஏற்கப்பட்டுள்ளது. அதுபோல்தான்  ராகு  காலம் என்றால் அதனால் விளையப்படுவதாக   சொல்லப்படும்  நிகழ்வுகள் தவறாக இருக்க  வாய்ப்புகள்  அதிகம்தானே..

           5)  இது  சற்றே வித்தியாசமான  வேண்டுகோள்.நான் முதன்முதலில் மூன்றாம்   வகுப்பில்  சேர்ந்தபோது, கற்றுக்கொண்ட  பாடல் வரிகள் இப்போது  என் மனதில்   ரீங்கரமிடுகிறது, நினைவுக்கு  வரும் வரிகளை தருகிறேன். யாராவது இதை   முழுதும்  அறிந்திருந்தால் கூறவும். இல்லையென்றால்  இதையே  அழகாக  முடிக்க   முயலுங்கள் .

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்டுவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென  நெருங்கித் தாக்குவோம்,
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம்  முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....
.............
பதில்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
===========================================
 



               



















  

Wednesday, January 26, 2011

அநுமானங்கள்........

அநுமானங்கள்........
------------------------------
        என்  தமக்கையின்  வீட்டிற்கு  ஒரு  நாள்  சென்றிருந்தேன். உணவருந்தி  இளைப்பாறிக்  கொண்டிருக்கையில் குறி  சொல்லும்  கிழவி  ஒருத்தி  வந்தாள். விளையாட்டாக  ஆரம்பித்தது  கை  பார்க்கும்  படலம்.அவள்  சொன்னதெல்லாம்  சரியாகப்  பட்டது என் தமக்கைக்கு. நானும்  என் கை  நீட்டினேன்.கிழவி  என் கையையும்  என் முகத்தையும்  மாறி மாறிப்  பார்த்தாள் ஏதும் சொல்ல  விரும்பவில்லை  என்று  விட்டு விட்டாள் அப்போது .என்  ஆவல்  அதிகரிக்க  கை பார்த்து  குறி  சொல்ல  வற்புறுத்தினோம்.பெரும் தயக்கத்துக்குப்  பிறகு அவள்  கூறிய செய்தியால்  எங்கள்  யார்  முகத்திலும்  ஈயாடவில்லை. என் உயிருக்குக் காலம்  கணித்து நான்  அதிக  பட்சம்  இன்னும்  ஆறு  மாதங்கள்தான்  உயிர்  வாழ்வேன் என்று சொன்னாள்.  ஒரு  கணம்  ஸ்தம்பித்து  விட்டேன். நான் இல்லாத  என்  வீட்டின்  நிலை நிழற்படம்போல்  வெகு வேகமாக என்  மனதில்  ஓடியது.என்  ஒருவனின்  வருமானத்தை  நம்பி  தாயார்  தம்பிகள்  என என்  பின்னே  ஐந்து  பேர் நின்றனர்.(கலம், மரக்கால், படி, ஆழாக்கு, உழக்கு என்று) நான் இல்லாத  நிலையில்  அவர்கள்  ஜீவனம்  எப்படி இருக்கும்  என்று என்னால்  எண்ணிப்  பார்க்க  முடிய வில்லை.  நான்  இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  அவர்கள்  ஜீவிக்க  வேண்டுமே. மரம்  வைத்தவன்  தண்ணீர்  விடுவதற்கு  என்னையல்லவா  நியமித்திருந்தான். நான்  கடமை  தவறலாமா.? யோசித்தபோது  ஒரு பொறி  தட்டியது. நான்  இல்லாவிட்டாலும்  அவர்கள்  வாழ  நான் ஆயுள்  காப்பீடு செய்து கொள்ளவேண்டும். அவர்கள்  எப்படியாவது  பிழைத்துக்கொள்ள  வேண்டும். நினைத்ததை  உடனே  செயல்படுத்தினேன். பாலிசி  எடுத்துக்கொள்ள  பலகாலம்  வற்புறுத்தி  வந்தவரை  அணுகினேன். ஒரு பெரிய  தொகைக்கு  காப்பீடு  செய்துகொள்ள  திட்டம். பத்தாயிரம்  ரூபாயிக்கு  காப்பீடு  செய்ய (1960-ல் ,அது ஒரு பெரிய  தொகைதான் , என் போன்றோருக்கு ) மாதம் ரூ.25/- நான் ப்ரீமியம்  கட்ட  வேண்டும். நானும்  கணக்கிட்டு  எப்படியாவது ஆறு  மாதங்கள்தானே, பல்லைக்கடித்து  கட்டிவிட்டால்  என் காலம்  முடிந்து  விடும். அவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம்  கிடைக்கும், பிழைத்துக்கொள்வார்கள்  என்று  துணிந்து  விட்டேன்.

            மாதம் ரூபாய் இருபத்தைந்து  நான் கட்டி ...கட்டி...கட்டிக் கொண்டே  வந்தேன். நான்  சாகிற  வழியைக்  காணவில்லை. பதினாறு  மாதங்கள்  கடனோ  உடனோ  வாங்கி  கட்டிப் பின் முடியாமல்  விட்டு விட்டேன். எல்.ஐ.சி.க்கு  என் பூர்வ ஜன்ம  கடன். காப்பீடு  காலாவதியாகி  விட்டது. கை  பார்த்தவள்  குறி  சொல்வதில்  எங்கோ  தவறு  செய்து விட்டாள். அதனால்  எனக்குத்தான்  நஷ்டம். நமக்கு  கை  பார்க்கத்  தெரிந்தால்  அவளுடைய  தவறை நாம்  தெரிந்து கொள்ளலாம், என்று கைரேகை  சாஸ்திரம்  கற்கத்  துவங்கினேன். CHEEROS  PALMISTRY -யை மாய்ந்து  மாய்ந்து  படிக்கலானேன். நானே  என் கை  பார்த்துக்  கற்றுக் கொண்டது  என்னவென்றால், இம்மாதிரி  சாஸ்திரங்களில் பொதுவான  சில விஷயங்கள்  பலருக்கும்  பொருந்தும். சொல்லும்  விதத்தில்  சொன்னால்  கேட்பவர்கள்  நம்புவதற்கு  வாய்ப்புகள்  அதிகம் என்று நான் அறிந்து  கொண்டேன். நான் கை ரேகை பார்த்துப பலன் கேட்டவர்கள்  நான் சொல்வது  சரியென்று  சான்றிதழ்  கொடுக்காத  குறையாகப்  புகழ்ந்தார்கள்.

            மேற்கூறிய  சம்பவங்கள்  எனக்கு  மனிதர்களைப்  படிப்பதில்  ஒரு ஆர்வத்தை  ஏற்படுத்தியது. நாம் காண்பவர்கள் , பேசுபவர்கள்,  பழகுபவர்கள்  என்று  பலரது  குணாதிசயங்களை  ஆராயும்போது  இன்னின்ன  பேர்  இப்படியிப்படி  இருநதால்  இன்னின்ன  குணங்களைக்  கொண்டிருப்பார்கள்  என்று ஓரளவு  சரியாகக்  கணிக்க  முடிந்தது  கண்டு எனக்கு என் மேலேயே  கொஞ்சம்  பெருமிதம்  தோன்றுவதுண்டு. முகம்  பார்த்து  மனிதர்களைப்  படிப்பதில் ஏற்பட்ட  நம்பிக்கை  முகம்  காணாதவர்களை  ஏதாவது  முறையில்  கணித்துப்  பார்க்க  வேண்டும் என்ற ஆவல்  உந்தியதன்  விளைவே  இந்தப்  பதிவு. வலையுலக  நண்பர்களை, அவர்களின்  எழுத்தின்  மூலம்  கணிக்க  முயற்சிக்கிறேன். பெயர்  கூறாமல் அவர்களைப்  பற்றிய  என் அநுமானங்கள், படிப்பவர்களுக்குப்  புரிந்து, சரியாக  இருப்பதாகத் தோன்றினால் நான் ஓரளவு  வெற்றி  பெற்றவனாவேன். ஆனால்  அறிந்து  கொள்வதுதான்  எப்படி.? எப்படியானாலும்  ஒரு பதிவுக்கு  விஷயம்  கிடைத்து  விட்டது. இவர்களின்  எழுத்தின்  மூலம், நான்  இவர்களைப்  பற்றி  கொண்டுள்ள  அனுமானங்களைப்  படியுங்களேன்.
           1)  இவர்  எப்படியோ.. .. ஆனால்  தான்  மிகவும்  முக்கியத்துவம்  வாய்ந்தவர் என்று  எண்ணுபவர். இவர்  செய்வதற்கும்  சொல்வதற்கும், எதிர்ப்பு  இருநதால்  விரும்பாதவர். தனக்குத்  தெரியாத விஷயங்கள்  மிகவும்  குறைந்ததே  என்ற  எண்ணம்  கொண்டவர். ஒருவரை  முன்னிலைப்  படுத்தவோ  கீழிறக்கவோ தன்னால்  முடியும் என்று நம்புபவர். கஷ்ட  நஷ்டங்கள்  அதிகம்  அறியாதவர்.முகஸ்துதிக்கு  மயங்குபவர் (மயங்காதவர்  அநேகமாக  யாருமில்லை.)மொத்தத்தில்  வாழ்க்கையை  அனுபவிக்கத்  தெரிந்தவர். இப்போதும்  அனுபவித்துக்கொண்டிருக்க  வேண்டும்.

            2)  இவர்  குழந்தை  உள்ளம்  கொண்டவர். மிக  எளிதில்  உணர்ச்சி  வசப்படக்  கூட்டியவர். வெளுத்ததெல்லாம்  பால்  என்று  நம்பக்கூடியவர். எல்லோருடைய  குணத்திலும்  நல்லதையே  காண்பவர். யார்  மனமும்  புண்படாமல்  இருக்க பிரத்தியேக  முயற்சிகள்  எடுக்கக்கூடியவர். நிறையத்  தெரிந்தவர். இருந்தாலும்  கொஞ்சம்  தாழ்வு  மனப்பான்மை  கொண்டவராயிருப்பாரோ  என்ற  சந்தேகம்  எனக்குண்டு. நான்  தவறாக  இருக்கலாம்.  தவறாக  இருக்க வேண்டும்.

          3) இவர்  சாதிக்கத்  துடிப்பவர். சாதிப்பதற்கான  திறமையும்  கொண்டவர். தன மீதே  அசாத்திய  நம்பிக்கை  கொண்டவர். காண்பவர்களைத்  தன்  பக்கம் ஈர்க்கும்  வசீகரம்  பெற்றவர். எப்போதும்  எதையாவது  வித்தியாசமாக  செய்ய  விரும்புபவர். தன்னைச்  சுற்றிலும்  தன்னைப்  போல் எல்லோரும் இருக்க  எண்ணுபவர். மற்றவர்களை  அறிந்து கொள்ளும்  முயற்சி  மேற்கொண்டாலும்  தொடர்ந்து  ஈடுபடுவதைத்  தடுக்கும்  ஈகோ  உண்டோ  என்று எனக்கு சந்தேகம்  உண்டு. இவருடைய  வேகத்துக்கு  இவரே  வேகத்தடை  போட்டுக்கொள்பவர். இவரும் முகஸ்துதிக்கு மயங்குபவர்  என்று  எண்ணுகிறேன்.

            4)  தான்  உண்டு  தன்  பணி  உண்டு ,தன்  உலகுண்டு  என்று ஒரு  வட்டத்துக்குள்  இருப்பவர்  இவர். இவருக்கு  யாரையாவது  பிடித்துப்  போனால்  அவர்களுக்காக  ஏதாவது  செய்ய வேண்டும்  என்று  எண்ணுபவர். செய்கிறாரோ  இல்லையோ  என்பது  வேறு  விஷயம். சின்னச்சின்ன  விஷயங்கள்  கூட  இவருக்குப்  பிரமாதமாகத் தெரியலாம். மொத்தத்தில் ஒரு  QUIET AND GOOD MAN. இவரால் யாருக்கும்  எந்தத்  தொந்தரவும்  இருக்காது.

            5)  இவருக்குத்  தெரிந்த விஷயங்களில்  ஈடுபாடு  அதிகம்  கொண்டவர். தெரிந்ததை  நன்றாக  அறிந்தவர். தெரியாததை  சில  சமயம்  தெரிந்ததுபோல்  காட்டிக்  கொள்ளத்துடிக்கும்  குணம் ,மற்றவரிடம்  அதைக்  காணும்போது  அடிபணியும்  தன்மையும்  கொண்டவராக  இருப்பாரோ  என்ற சந்தேகம்  எனக்குள்ளது. குடத்திலிட்ட  விளக்குபோல்  பிரகாசிக்கும்  இவர்  குன்றின்  மேல்  வைத்தால்  அணைந்து  விடக்  கூடாதே  என்ற  பரிதவிப்பு  எனக்குண்டு. தன்  திறன்  தானறிந்து  பிறரை அறியும்  குணத்தையும்  இவர்  வளர்த்துக்கொண்டால்  இவர் வெகு  தூரம்  செல்ல  வாய்ப்புள்ளது.

            6) வாழ்க்கையில்  கிடைக்க  நினைப்பதெல்லாம்  கிடைத்தாலும் அனுபவிக்கும்போது  யாருக்கும்  தீங்கு  எண்ணாதவர். நிறையத்  தெரிந்தவர் ,தெரிந்து  கொள்ளத்  துடிப்பவர். கொஞ்சம்  கர்வம் உண்டோ  என்று சந்தேகம்  உண்டு. தன்னைப்  பற்றி  மற்றவர்  அபிப்பிராயம்  அறியத்  துடிக்கும்  இவர், மற்றவர்  பற்றிய  தன்  எண்ணங்களை எளிதில்  பகிர்ந்து  கொள்ள  மாட்டார். இவருடைய  ஷார்ட்  கமிங்க்சை  யாரும் எடுத்துக்  கூறுவதை  இவர்  விரும்ப  மாட்டார்.(யார்தான்  விரும்புவார்கள் )ஒரு  PAMPERED PERSON  எப்படி இருப்பாரோ அப்படி  இருப்பவராகத்  தோன்றுகிறது.

           7)  கிடைக்க  வேண்டியதெல்லாம்  வேண்டிய  மட்டும்  கிடைத்தாலும்  மனதின்  அடித்தளத்தில்  எங்கோ  எதற்கோ  ஏங்குவதுபோல்  தோன்றுகிறது. எல்லோரும்  இன்புற்றிருக்க  எண்ணும் இவர் மற்றவர்களால்  ஏமாற்றப்  படுவதற்கு   வாய்ப்பு  இருப்பதாகத்  தோன்றுகிறது. அலட்சியம்  குறைத்து  அலர்ட்டாக  இருக்க வேண்டும். குறைஎன்று  கண்டால்  திருத்திக்கொள்ளும்  நற்பண்பு  உண்டு. எல்லோரும்  நம்மைப்  போல் இருக்கிறார்கள்  என்பதைவிட  இருக்கிறார்களா  என்பதில் அதிக  அக்கறை  காட்டினால்  இவர் மிகச்  சிறந்தவராகத்  திகழ்வார்.

           8)  இவரைப்  பற்றிக்  கூறாமல்  இருக்க  முடியவில்லை. மிருதுவான  குணமுள்ளவர். சில  சமயம்  வரட்டுப்  பிடிவாதம்  கொண்டவரோ  என்ற  சந்தேகம்  எழுகிறது. கொஞ்சம்  தொட்டால்  வாடி  போல  குணமும் இருக்கும் போல்  தோன்றுகிறது. யாரும்  இவரைக்  குறை  கூறுவதை  விரும்பாதவர். ( யார்தான்  விரும்புவார்கள்.?) குறை  கண்டு விட்டால் கொஞ்சம்  சீரியஸாக  எடுத்துக்கொள்வார்   என்றே  தோன்றுகிறது.  

             மேலே  இருப்பவர்களைப்  பற்றிய  என் கணிப்புகள்  சாதாரணமாக  எல்லோரிடமும்  உள்ள  குணங்களே. இருப்பினும்  சற்றுத்  தூக்கலாகத்   தோன்றுவதை  பிரத்தியேகப்  படுத்திக்  கூறியுள்ளேன். யாரையும்  புண்படுத்தும்  எண்ணம்  லவலேசமும்   இல்லை. நீ  நல்லவனாக  இருநதால்  எல்லோரும்  நல்லவரே  என்ற  குணம்  கொண்டவன் நான்.  இன்னும்  நிறையபேர்  பற்றிய  அநுமானங்கள்  உண்டு.  எழுதியதே  சரியான  வரவேற்பை  பெறுமா  என்றிருக்கையில்   மேலும்  எழுத  தயக்கத்தால்  இத்துடன்  நிறுத்திக்  கொள்கிறேன்.
===============================================





















         















 







   




 






   



Saturday, January 22, 2011

AASI KOTU , IRAIVAA..!

ஆசி  கொடு,  இறைவா....
----------------------------------
               எண்ணில்  அடங்கா  எண்ணங்கள் ,
               கண்ணில்   அடங்கா  காட்சிகள்.
               சொல்லில்  அடங்கா  சொற்கோர்வைகள்
               இவை  எதிலும்  அடங்கா  நினைவுகள்,
               என்று  எங்கும்  எதிலும் நீக்கமற ,
               நிறைந்திருக்கும், பரம்பொருளைப
               பேச  அல்ல  இந்தக்  கவிதை.

நினைப்பினும்  நினைக்காதிருப்பினும்.,
என்னுள்  நிகழும்  ரசாயன  மாற்றம்,
அன்றைக்கின்று  குறைந்திலை  அளவில்
உணர்ந்த  ஒன்றை அளவில்  ஒடுக்க
முற்பட  முயல்தல்  பேதமையன்றோ ...

             இரட்டைக்  குழலுடன்,
             பூரித்தெழும்  அழகுடன்,
             பதினாறின்  பொலிவுடன்,
             பரிமளித்த  பாவை  முகம்,
            அன்று  கண்டதேபோல்
            இன்றும்  நினைவிலாட,
            காட்சிகள்  விரிய  விழித்தே
            காண்கிறேன்  கனாவல்ல.

மாறுபட்ட  சாதி,  வேறுபட்ட  மொழி,
என்றே  இருப்பினும், ஒன்றுபட்ட  உள்ளம்
கொண்டிணைந்த அவள்  எழில்
நிலவைப்  பழிக்கும்  முகம்,
அதில்  நினைவைப்  பதிக்கும்  கண்கள்,
கைத்தலம்  பற்றும்  முன்னே
என்னைத  தன்பால்  ஈர்த்த  அவள்
நடை,குரல் அதரங்  கண்டும்
செருக்கொழியாது  உலவும்,
மயில், குயில், பவழங் கண்டும்
மிடுக்கொழியாதிருந்த  நான்,
அவளருகே  இல்லாதிருக்கையில்,
படும்  பாட்டைப்  பாட்டாக்கியதும்

            உயிர்த்துடிப்பும் , உள்ளத்திமிரும்
            தினாவட்டும்  நிறைந்த என்
            நெளிவும்  சுளிவும்  கண்டவள்
            என்  குறைபாடு  கண்டு, ஆற்றாமையால்
            ஊடல்  கொண்டு  சுழித்த  முகம்  சகியா  நான்
            விபத்தில்  விளைந்த  வித்தின்  விளைவே,
            என்  குறைக்கிலை  காரணம் நான்
            காண்பார்  விழிக்  கோணந்தான்
            என்றே  தேற்றும்  காலங்கள்,
            வாழ்வில்  நிலைக்கும்  தருணங்கள்.

என்  குறையிலும்  நிறை  காணும்.
அன்பின்  பாங்கில்  திளைப்பதும்,
சொல்ல நினைத்ததை  சொல்லும்  முன்பே,
இதுதானே  அது  என்றே  இயம்பிடும்,
இயல்பு  கண்டு  நான்  வியப்பதும்...

             எண்ணத்  தறியில்  பின்னிப்  பிணைந்து
             இழையோடும்  நினைவுகளூடே
             அவளுள்  என்னையும்  என்
             உடல் ,பொருள், ஆவி  அனைத்திலும்
            அவளை  எண்ணுகையில்  தோன்றுவது,
            ஆயிரமுண்டு  பதிவிலடங்க்காது ,
            பகிர்தலும்  இங்கியலாது, இருப்பினும் ....

எங்கள்  வாழ்வும்  வளமும்  நீ  தந்த  வரமே,
அன்றுபோல்  இன்றும்  என்றும்
தொடர  உன் ஆசி  வேண்டும்  இறைவா,
என  இறைஞ்சவே  இக்கவிதை  சமர்ப்பணம்.
----------------------------------------------------------------








 







   







 











 







Thursday, January 20, 2011

ITHU LANJAMAA . ?

இது  லஞ்சமா .?
=============
பாடறியேன்  படிப்பறியேன்  பள்ளிக்கூடம்  நானறியேன்  ஏடறியேன்  எழுத்தறியேன்  என்ற  நிலைதான்  எனக்கு  என்னுடைய  ஏழு  வயது  வரை. ப்ரீகேஜி ,எல்கேஜி, யுகேஜி , போன்ற  ஜீக்கள்  எல்லாம் அப்போது  கிடையாது. ஐந்து  வயதில்  பள்ளியில்  முதலாம்  வகுப்பில்  சேர்ப்பார்கள். எல்லாமே  அப்போதுதான்  ஆரம்பமாகும். என்  தந்தையின்  வேலை  நிமித்தமாகவும், என் தாயார்  இறந்திருந்த சமயத்திலும்  பள்ளியும்  படிப்பும்  ஏழு  வயது  வரை  எனக்குக்  கிடைக்கவில்லை. ஏழாம்  வயதில்  முதன்முதலில் சேரும்போதே  மூன்றாம்  வகுப்பில்  சேர்க்கப்பட்டேன். அரக்கோணம்  டவுன்  ஹால்  பள்ளி  என்று  நினைவு. ஐந்தாம்  வகுப்பு  வரை  ஒழுங்காகச்  சென்றுகொண்டிருந்த  என்  படிப்பு  ஆறாம்  வகுப்பில்  அதாவது  முதல் பாரம்  படிக்கும்போது  தடைபட்டது. டைபாய்ட்  ஜுரம், மற்றும்  தந்தைக்கு  பூனா  மாற்றம்  என்ற  களேபரத்தில் படிப்பு  தடைப் ப ட்டதோடு, பாலக்காட்டில்  பாட்டியுடன்  வாசம்  துவங்கியது. அங்கும்  ஓராண்டு  வீணாயிற்று. மறுபடியும்  என் தந்தைக்கு கோவைக்கு  மாற்றலாகி  என்னையும்  என்  தம்பியையும்  பள்ளியில்  சேர்க்க  முயற்சிகள்  நடந்தன. தடைபடாமல்  படிப்பு  தொடர்ந்திருந்தால்  நான் தேர்ட்  பாரம் படித்துக்  கொண்டிருக்கவேண்டும். அதனால்  அதே  வகுப்பில்  சேர்க்க வேண்டி  எங்களுக்கு  பாடங்கள்  சொல்லிக்  கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில்  C..A..T. CAT, R..A..T..  RAT  என்பது 
 போன்ற  புலமைக்கும், கணக்கில்  கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்  போன்றவற்றில்  திறமைக்கும் வழி  வகுக்கும் பொறுப்பு  எங்கள்  அண்ணாவிடம்  கொடுக்கப்பட்டது.  என்னைவிட சுமார்  ஐந்து  வயது  மூத்தவர். அவர் சொல்லச்சொல்ல  நாங்கள் அவற்றை  மறுபடியும்  கூறவேண்டும். பிறகு  கேள்விகள்  கேட்கப்பட்டு  பதில் தரப்பட  வேண்டும். அவர் முன்  சம்மணமிட்டு உட்கார்ந்திருப்போம். பதில்  தவறாக  வந்தால்  பளீர்  என  அடி  தொடையில்  விழும். துடைத்துகொண்டு  கண்ணீரும்  கம்பலையுமாக ( கம்பலை என்றால்  என்ன. ?) நாங்கள்  படிப்போம். பள்ளிக்கூடத்தில்  எங்களை  சேர்க்க  நாங்கள்  தயார்  படுத்தப்பட்டு  விட்டோம்  என்று  நம்பி, எங்களைப்  பள்ளிக்கு  அழைத்துச்  சென்றார்  எங்கள்  தந்தை. சென்ற  இடம்  கோவை  ராமநாதபுரம்  முனிசிபல் ஹைஸ்கூல். ஏற்கனவே  பள்ளி  திறக்கப்பட்டு  வகுப்புகள்  நடந்து  கொண்டிருந்தது. என்னை தேர்ட்  பார்மிலும்  என் தம்பியை  பர்ஸ்ட் பார்மிலும்  சேர்க்க  சோதனைத்  தேர்வு  நடத்தினார்கள். ஒரு  இலக்க மதிப்பெண்ணைத் தாண்டாத  எங்களை  பள்ளியில்  சேர்த்துக்கொள்ள  மறுத்து  விட்டார்கள்.

            மறுத்துவிட்டால்  எப்படி. ? நாங்கள்  படிக்கவேண்டுமே. அதே  பள்ளியில்  பாடம்  புகட்டிக்  கொண்டிருந்த  ஒரு  ஆசிரியரை  அணுகி, எங்கள்  தந்தையார்  எங்களைப்  பள்ளியில்  சேர்க்க  மார்க்கம்  கேட்டார். எங்களை  எப்படியாவது  பள்ளியில்  சேர்க்க  வேண்டும் என்று எங்கள்  தந்தையார்  குறியாக  இருப்பதை  உணர்ந்த  அந்த  ஆசிரியர்  எங்களைப்  பள்ளியில்  சேர்க்கும்  பொறுப்பை  ஏற்றார். எங்களைத்  தயார் செய்து ஒரு  மாதத்தில்  பள்ளியில்  சேர்க்க வேண்டும். அதற்கு  விலையாக  ரூபாய் 25- பேசப்பட்டது.
1950  ஆம்  வருடம்  இருபத்தைந்து  ரூபாய்  கொஞ்சம்  பெரிய  தொகைதான். இருந்தாலும்  வேறு  வழி  இல்லாமல்  அந்த  ஆசிரியரிடம்  நாங்கள்  ஒப்படைக்கப்பட்டோம். அவரும்  கர்ம  சிரத்தையுடன் எங்கள்  வீட்டுக்கு  தினம்  வந்து  பாடம்  சொல்லிக்  கொடுத்தார். ஒரு மாத  காலம்  கழிந்தது. மறுமுறை  தேர்வுக்கு  நாங்கள்  தயார் என்று  ஆசிரியர்  அறிவித்து  விட்டார். நாளைய  தேர்வுக்கு  கேட்கப்பட  இருக்கும்  கேள்விகளையும், அதற்கான  பதில்களையும்  அவரே  தயாரித்து  எங்களை  அவற்றை  மனப்பாடம் செய்ய  வேண்டினார். நாங்களும்  சரியென்று  தலையாட்டி, பலி  ஆடு  போல் தேர்வுக்குச்  சென்று, பரீட்சை  எழுதிப்  பாசும்  செய்துவிட்டோம்.

            காலாண்டு  தேர்வு  நெருங்கிக்  கொண்டிருந்த  நேரத்தில்  பள்ளியில்  சேர்க்கப்  பட்டோம். அந்த  வருட  இறுதிப்  பரீட்சையில்  மிக நல்ல  மார்க்குகள்  பெற்று  தேர்வடைந்தேன்  என்பது  கொசுறு  செய்தி. ( மூக்கில்லா  ராச்சியத்தில்  அரை  மூக்கன்  ராஜா  என்று  யாரோ  முணுமுணுப்பது  கேட்கிறது.) இவ்வளவு  விலாவாரியாக  நான்  இதை  எழுதக்  காரணமே,  எங்களைப்  பள்ளியில்  சேர்க்கப்  பேசப்பட்ட  பணம்  ரூபாய் 25-
என்றாலும், அதற்காக  அந்த  ஆசிரியர்  ஒரு  மாதம்  உழைத்திருக்கிறார்., வெறுமே  லஞ்சமாக  வாங்க  வில்லை  என்ற செய்திக்காகத்தான். லஞ்சத்திலும்  ஒரு நியாயம்  இருந்தது. இப்போது அப்படி  நடக்குமா. ? 
------------------------------------------------------------




 







   



 


 
 
    

Thursday, January 13, 2011

வளரும் நாடு

வளரும்  நாடு. ( ஒரு  சிறுகதை. )
------------------------------------------------
             பாடுபட்டுக்  கோடையில்,  பாந்தமாக  உழைத்து,
             வீடு  கட்டி,  சேர்க்கும்  உணவினை,
             களிப்போடு   உண்டு  மகிழும்  எளியோன்
             சிறியோன்   எறும்பினைக்   கண்டு

உள்ளம்  வெதும்பி  வேகும்  வெட்டுக்கிளியும்,
தான்  உழைக்காதது  மறைத்து  பொறாமையால்
கூட்டியது   ஒரு  பத்திரிகைப்  பேட்டியினை.

            அடுக்கியது   குற்றச்சாட்டுகளை
            சாடியது  ஏற்றத்தாழ்வு  விளைவுகளை.
          " குடியிருக்க   ஏற்ற  புற்று
            தேவைக்கும்  மீறிய   உணவு,
            காண்பீர்  இந்த  அநியாயம்
            கேட்பீர்  சிறுபான்மையோர்   அவதிகளை"
            என்றே  ஒப்பாரி  ஓலமிட்டு
            கண்ணீர்  விட்டே  கதறியது.

தொலைக்காட்சி   சானல்கள்
கூடிவந்து   கேட்டன,
நாளெல்லாம்   பேசின
வெட்டுக்கிளி  படும்  பாட்டை.
ஒருபக்கம்  வெட்டுக்கிளி  அழுகை,
மறுபக்கம்  எறும்பின்  ஏறுமுகம்,
புட்டுப்புட்டுக்  காட்டின,
ஏராளமான  படங்களுடன்.

            பிறகென்ன  ஒரே சேதிதான்  எங்கும்  எதிலும்.
            வெட்டுக்கிளி  வேதனை  போக்க
           அருந்ததிராய்    ஆர்பாட்டம்,
            எறும்பின்   ஏற்றம்   குறைக்க
            மேதா   பட்கர்   போராட்டம்,
            துவங்கியதங்கே  ஓர்  அரசியல்  ஆரவாரம்.
            வேதனையில்  வாடும்   வெட்டுக்கிளிக்கு
           வேண்டும்  உணவும்  இருப்பிடமும்
            சமூக  அநீதி  அது இது என மாயாவதி  கூற,
            மேற்கு  வங்கம்  அறிவித்தது  ஒரு நாள்  பந்த்,
            கேரளமும்  கேட்டதொரு  நீதிக்  கமிஷன்.
            நிலைமை    கை  மீறிப்போக
            வாளாவிருக்குமா   மத்திய    அரசு.?
            கொண்டு  வந்தது   ஒரு சட்டம்
            போடா   போலொரு   போடாக்  
            (PREVENTION  OF TERRORIST ACT  AGAINST GRASS HOPPERS.)

 
வெற்றி  என்றே  கூவியே
ஆர்பாட்டம்  போராட்டம்
எல்லாம்  கைவிட்டனர்
ராயும்  பட்கரும்.

           விட்டு  வைக்குமா  தொலைக்காட்சிகள்
           படம்    பிடித்தே   காட்டின 
           பாவம்    எறும்பின்   பறிகொடுப்பை 
          பார்த்தே   மகிழ்ந்தனர்   பாவி   மக்கள்

வெற்றி   பெற்ற   வெட்டுக்கிளி
செத்தே   மடிய    அன்றே  போல்
விரட்டப்பட்ட    எறும்புகளும்
தஞ்சம்   புகுந்தன   அயல்நாட்டில்
மீண்டும்   உழைத்தே   முன்னேறி
தேடிப்பெற்றன   பெயரும்   புகழும்
கணக்கில்   அடங்கா   கம்பனிகளை
வாங்கிக்  குவிக்க, கோடிகளை
உழைத்தே  பெற்றன  சீராக.

             ஊருக்கிளைத்தவன்   என்றாலும்
             உழைத்தால்   பிழைக்கலாம் -  இது   நீதி.
             நீதிகள்   அறியா  இந்தியாவோ
             என்றும்  வளரும்  நாடேதான்
           
(பொங்கும்  மங்களம்  எங்கும்  தங்க ,
 என் இனிய  பொங்கல்  நல  வாழ்த்துக்கள் )
----------------------------------------------------------------  .



 

 
   







 
        
 

 






















 

 
 

Saturday, January 8, 2011

ITUKKANN VARUNGKAAL NAKUGA

இடுக்கண்  வருங்கால்  நகுக
----------------------------------------
           வாசனின்  எரிதழலில்  அவருடைய  ஒரு பதிவுக்குப  பின்னூட்டம் எழுதுகையில்
ஒன்றேமுக்கால்  லட்சம் கோடி என்று  கூறுகையில்  நாம் துவண்டு  விடுகிறோம் என்று
எழுதி  இருந்தேன். (அதை  இப்போது  குறிப்பதன்  நோக்கம்  என்ன  என்று உங்களுக்குத்  தோன்றலாம். அவ்வாறு  குறிப்பிடும்போது  எரிதழலில்  என்ன எழுதி  இருந்தது, அந்தப்  பின்னூட்டம்தான்  என்ன  என்று ஒரு சிலராவது  அறிந்து  கொள்ள  முயற்சி  செய்து  அப்பதிவினை  படிக்க நேரிடலாம். நான் பெற்ற  பேறு  பெறுக இவ்வையகம்  என்ற என்  எண்ணமே  நான் பிறருடைய  பதிவுகளைப்  பற்றி  குறிப்பிடுவதன்  காரணம். என்னுடைய  சில  பதிவுகளில்  பிறருடைய பதிவுகளையும்  சில சமயம்  என் பழைய பதிவுகளைப்  பற்றியும் குறிப்பிட்டிருப்பேன் .என் நோக்கம்  சரிதானே !) விஷயத்துக்கு  வருகிறேன்.
            சில  நாட்களுக்குமுன்  விசுவின்  மக்கள்  அரங்கம்  நிகழ்ச்சியைப  பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சில  வார்த்தைகளைக்  கூறி  இவையெல்லாம்  என்ன  என்று  தெரியுமா  என்று கேட்டார். யாருக்கும்  தெரியவில்லை.  அவையெல்லாம்  எண்களின்  பெயர்கள்  என்று கூறி  எண்ணிக்கையில்  கோடிக்கு  மேல்  வரும்  எண்ணிக்கைகளின்  பெயர்கள்  என்று கூறினார். நாம் கோடி , நூறுகோடி, ஆயிரம்கோடி, லட்சம்கொடி, கோடிகோடி, என்று கூறி  புரிந்து  கொள்ள  முயற்சிக்கிறோம். மேல் நாட்டினர் மில்லியன்  பில்லியன், ட்ரில்லியன் என்று  கூறுகின்றனர். அதற்குமேல்  வரும்  எண்களுக்கென்று  பெயர் எதுவும்  உண்டா  தெரியவில்லை. நம்  முன்னோர்கள்  ஒவ்வொரு  எண்ணிற்கும்  பெயர் கூறி  எண்ணிலடங்கா  எண்களையும்  அறிந்து  இருந்தனர். நிகழ்ச்சியின் முதலில்  கூறப்பட்ட எண்களின்  பெயர்களை  நான்  குறித்துக்  கொள்ளவும்  இல்லை.
            நேற்று  எனக்கு  ஒரு  மின்னஞ்சல்  வந்தது. அதில்  எண்களுக்கு  புதிய  பெயர்  கொடுத்து உபயோகிக்கலாமே  என்று கூறி  சில உதாரணங்களும்  கூறப்பட்டிருந்தது.
The large amounts in the scams have given rise to an idea ---new words to refer to large numbers, such as
100000 crores = 1 raja.
10000 crores   =  1 radia
1000   crores   =  1 kalmadi.
It will be easier  to  converse and  comprehend  large  numbers. A few examples--
>> Anil Bhais house in Pali Hill will cost Rs.4.5 kalmadis.
>> ONGCs annual  output  is Rs. 1.2 rajas
>> Indias loss in 2G scam is  about  Rs.1.7 rajas.
>>Indias total  annual  subsidy on kerosene  is Rs.2 radias.
>>Poor Promod Mahajan left  behind only Rs.1.4 kalmaadis.
         நம் முன்னோர்கள்  கூறி  இருந்த  எண்களின்  பெயர்கள்  நமக்குத்  தெரியாவிட்டாலும்  புதிய  பெயர்களை  அறிமுகப்  படுத்துவதிலிருந்து  இடுக்கண்  வருங்கால்  நகுக  என்பதை  நம்மவர்கள்  நன்றாக  அறிந்திருப்பதைக்  காணலாம்.
____________________________________________________
















    .







 

Tuesday, January 4, 2011

நடப்பது என்றும் நலமாய் நடக்கும்.

நடப்பது   என்றும்   நலமாய்   நடக்கும்..
---------------------------------------------------------
         ஆண்டொன்று   போக  அகவை ஒன்று  கூட
         நடந்ததை  எண்ணி  அசை போட
         நன்கே  வாய்த்த  புத்தாண்டே
         உன்  வரவு  நல்வரவாகுக..

வேண்டத்தான்  முடியும்,  எண்ணியபடி
மாற்றத்தான்  முடியுமா.?
நடைபயிலும்  அருணோதயத்தில்
வந்துதித்த   ஞானோதயமா .?

          வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று
          நினைத்தாயோ   என்றவனே
          வாடிக்கை மனிதர்போல்தானே மாண்டுபட்டான்.
          அவன் பாட்டின் தாக்கம் அது இது
          என்றே கூறி பலன் பல பெறுவதே
          பலரது நோக்கம் என்றானபின்
          அவன் இருந்தபோது இல்லாத பெயரும்  புகழும்
          இறந்தபின்  வந்தார்க்கென்ன  லாபம்.?

எனக்கொரு  நூறு  இளைஞர்கள்  தாரீர் 
மாற்றிக்காட்டுகிறேன்   இவ்வுலகை, -உள்ளப்
பிணியிலிருந்து அதை மீட்டுத்தருகிரேன்
என்றே சூளுரைத்த விவேகானந்தன்
கேட்டதனைப்   பெற்றானா, இல்லை
சொன்னததனை செய்தானா.?

          அக்கினிக் குஞ்சான  அவர்தம் வார்த்தைகள்
          வையத்து   மாந்தரின்  உள்ளத்தே
          ஆங்காங்கே  கணப்பேற்றி இருக்கலாம்
           சில  கணங்கள்  உள்ளத்து  உணர்வுகளை
           உசுப்பேற்றி  இருக்கலாம் - என்றாவது
          அவனிதன்னை  சுட்டுத்தான்  எரித்ததா.?  

நன்மையையும்  தீமையும், இரவும் பகலும்,
நாளும்  நடக்கும் நிகழ்வுகள்  எல்லாம்
இயற்கையின்  நியதி.
கூடிப் புலம்பலாம்,  ஒப்பாரி  வைக்கலாம்,
நடப்பதென்னவோ  நடந்தே  தீரும்.
நீயும்  நானும்  மாற்றவா  முடியும்.?
எண்ணி மருகினும் இயலாத  ஒன்று.

          புத்தாண்டுப்   பிரமாணம் ஏற்க
          எண்ணித் துணிந்து விட்டேன்.
          நாமென்ன  செய்ய  என்றே
          துவண்டாலும்- நலந்தரும்
          சிந்தனைகள்  நம்மில்  வளர்க்க  
          செய்யும் செயல்கள் நலமாய்  இருக்கும்.
          ஊரைத்  திருத்த  உன்னால் முடியாது,
          முடியும்  உன்னை  நீயே  மாற்ற
          (நீ  ஏமாற்ற  அல்ல.)
          எண்ணில்  சொல்லில் செயலில்
          நாளும் பொழுதும்  நல்லவனாய்  இரு.
          நடப்பது என்றும் நன்றாய்  நடக்கும்.
========================================
      
         






 





 

Saturday, January 1, 2011

சிறு துளி பெருவெள்ளம்

சிறு துளி   பெரு வெள்ளம்.
---------------------------------------
           பாடுபட்டு  உழைத்து   சொத்து
           பல  லட்சம்  சேர்த்தும்  கூடவே
           கொண்டா  செல்ல  முடியும்.
           படுக்கையில்  விழுந்தது   பெரிசு
          கேட்டதும்  பதறிய  பிள்ளைகள்
           ஐயோ  என்றலறி  வந்தனர்.

ஐயோ  என்றழைக்காதீர், அவள்  கணவன்
வருமுன்னே  என்சொல்  கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு  பல விளைக்காமல்
கட்டிக்காத்து  பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.

           மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
           பண்டொரு  நாள்  பாகம்  பிரிப்பதில்
           பக்கத்து  வீட்டில்  ஏற்பட்ட  சிக்கல்
           இருவரும்  அறிந்த  ஒன்று

இருந்த ஒரு மாடு, ஒரு தென்னை
ஒழுங்காகப்  பகிரப  பசுவின்
முன்பாதி  முன்னவனுக்கும்
பின்பாதி   சின்னவனுக்கும்
தென்னையின்  தாள்பாகம் தனயனுக்கும்
மேல்பாகம்  தம்பிக்கும்  என்று
ஆளுக்கொரு  பாகம் அழகாகப்  பிரித்தனர்

           முன்னவன் புல் கொடுத்து  மாடு வளர்த்து
            நீர்  வார்த்து  மரம் வளர்த்து
            வந்த  பலன்  பின்பாகப்  பாலும்
            தலைப்பாக  தேங்காயும  பாங்குடனே
            அலுங்காமல்  பெற்றான்  இளையவன்

நேர்ந்த  கதை  நன்றாக  அறிந்திருந்தான்  அண்ணனும்
சொத்ததனைப்  பிரிப்பதில் இருக்காது  சிக்கல்
இருப்பதென்ன  ரொக்கம்தானே என்றவன் எண்ணினான்
பாகம் பிரிக்கப்  பேச்சு  வார்த்தை  வேண்டாம்
இருப்பதோ  ரொக்கம்  சரிபாதி  பிரிப்போம்  என்றான்

             மூத்தவன்  நீ  பாவம்  சம்சாரி -சொத்தில்
             எனக்கு  வேண்டாம் சரிபாதி.
             இன்றொரு பைசா, நாளை இரண்டு,
             மறுநாள்  நான்கு,என்று நாளும் ,
             இரட்டிப்பாக்கி  தினம் தினம் ஒரு மாதம்
             நீ  தரும் பைசா போதும்
             மற்றதைப் பாவம் நீயே  அனுபவி
             என்றே நைசசியம் பேசிய
             தம்பியை  நம்பி  ஏமாந்த  அண்ணன்
             சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.
      =========================================