Sunday, January 30, 2011

சில சந்தேகங்கள்....

சில   சந்தேகங்கள்........
-----------------------------
             சிறு வயதிலிருந்தே  எனக்கு  ஒரு  பழக்கம். எதையும்  எளிதில்  நம்பி விடுவதில்லை. கேள்விகள்  கேட்பேன். அதிகப்  பிரசங்கி  என்ற பெயரும்  சில  சமயம்  எடுத்ததுண்டு. இருந்தாலும்  "தொட்டில்  பழக்கம்  சுடு  காடு  மட்டும் " என்பார்கள். சுடுகாடு சேருமுன், கிடைக்கப்படாத  விடைகள்  சில, தெரிந்து  கொள்ளாத  சங்கதிகள்  சில. எது எப்படியாயினும் என் சந்தேகங்கள்  சிலவற்றை  வலையுலகில்  வைக்கிறேன். பதில்  தெரிந்தவர்கள்  என்னை  தெளிவிக்க  முனைந்தால்  நன்றியுடன்  கடமைப்பட்டவனாக  இருப்பேன்.

           1)  சாஸ்திரம் சாஸ்திரம் என்று எதற்கெடுத்தாலும்  பலர் பல இடங்களில் கூறக்  கேட்கிறேன். இந்த சாஸ்திரங்கள்தான்  என்ன.? அனைத்தும்  அடங்கிய புத்தகங்கள் ஏதாவது தமிழிலோ  ஆங்கிலத்திலோ படிக்கக் கிடைக்குமா.?  செவி வழியே கேட்கப்படும் சாஸ்திரங்கள் நம்பிக்கை  தருவதாயில்லை. சம்பிரதாயங்கள்  வேறு. அவை வழக்கப்படி புழக்கத்தில்  இருப்பவை. இடத்துக்கு  இடம் மாறும் விஷயங்கள். சாஸ்திரங்களுக்கு  SANCTITY  உண்டா.? யாரால் ஏற்படுத்தப்பட்டது.? மனு  எழுதிய சாஸ்திரம் என்று பலரால்  பலவிதமாக விமரிசிக்கப்பட்டு வரும் விஷயங்கள்தான்  சாஸ்திரமா.? இது குறித்துக் கேள்விகள் வந்துகொண்டே  இருக்கின்றன. ( சக்தி விகடனில் சேஷாத்திரி நாத சாஸ்திரிகளிடம் கேட்க வேண்டியதுதானே என்று ஒதுக்காதீர்கள். )

           2)  ஆலயங்களில்  அந்தக் காலத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப்  படாத  காலத்தில், ஆண்டவனின்  திரு உருவை தரிசிக்க, விளக்கொளி வேண்டி, ஆலயத்துக்கு  வருபவர்   எண்ணெய் கொண்டு  வருதல் ஏற்றுக்கொள்ளக்  கூடியதே. ஆனால்  அதே  வழக்கப்படி  கர்ப்பக்  கிரகத்தில்  ஆண்டவனின்  திருவுருவை  இன்றும் அரைகுறை  விளக்கொளியில்  தரிசிக்க வேண்டுவது  சரியா.? தூரத்தில்  நின்று கடவுளின் உருவை  யூகிக்க  வேண்டியுள்ளது.  கோவிலுக்கு  எண்ணெய் கொண்டு சென்று  தீபம் ஏற்றும்  பழக்கம் தேவைக்கான  ஒன்றாய் இருந்தது. அன்று. அந்தப் பழக்கம்  தொடருதல்  தேவையா.?  நம்பிக்கை சார்ந்த  விஷயங்களில்  அறிவு சார்ந்த  விடை  கிடைப்பது  கடினம்  என்று எனக்குத்  தெரியும்.

           3) ஆண்டவனைப்  பல உருவங்களில்  வழிபட பல விசேஷ  தினங்கள்  நம்மிடையே  உண்டு. பிள்ளையார்  சதுர்த்தி , கிருஷ்ணஜயந்தி ,சிவராத்திரி போன்ற பல பண்டிகைகள் உண்டு. ஆண்டவனுக்கு  உகந்தது  என்று  பல நிவேதன்கள்  செய்யப்படுகின்றன. பிள்ளையாருக்குக்  கொழுக்கட்டையும் கிருஷ்ணனுக்கு  முறுக்கு  சீடையும் போன்றவை  உதாரணங்கள் .இவைதான் உகந்தவைகள்  என்று எப்படி தெரிந்தார்கள்.? சில நேரங்களில்  அடியார்கள் தங்களுக்குப்  பிடித்ததை  கடவுளுக்கும்  பிடிக்கும்  என்று அளிப்பதை  ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் இது  இவர்களுக்கு  உகந்தது என்று ஆண்டவனின்  சுவையை  அடக்குவது ஏன்.?  சில பண்டிகை  நாட்களில் இதுதான் நிவேதனம் என்று standardise  செய்வது எந்த நம்பிக்கையின்பால்  பட்டது  ?  

           4) வான  சாஸ்திரத்தில் (இந்த  சாஸ்திரம்  அறிவியல் சார்ந்தது) நம்  முன்னோர்   முன்னோடிகள்  என்று நமக்குத்  தெரியும். ஆனால்  நாளின் ஒரு பகுதியை  ராகு  காலம்  என்று குறிப்பிட்டு  அது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  நேரத்தில்  வரும் என்று கூறுவதன்  விளக்கம்  எனக்குத் தெரியவில்லை. அப்படியே  இருந்தாலும் இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும்  அல்லவா... ராகு காலம்  ஒரு இடத்தின்  இருப்பை POSITION  சூரியனோடு ஒப்பிடுகையில்  இருப்பதை  பொறுத்துக்  கணிக்கப்  படுவதுதானே.. இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே... இந்தியாவின்  ஸ்டாண்டர்ட்  டைம்  நாக்பூரின்  இருப்பிடத்தை  ஒட்டியே  கணிக்கப்படுகிறது. நாக்பூரின்  நேரமும் குவாஹத்தியின்  நேரமும் ஜம்முவின்  நேரமும்  நியாயப்படி வேறு வேறாக  இருந்தாலும் கணக்குக்காக  ஒன்றாக  ஏற்கப்பட்டுள்ளது. அதுபோல்தான்  ராகு  காலம் என்றால் அதனால் விளையப்படுவதாக   சொல்லப்படும்  நிகழ்வுகள் தவறாக இருக்க  வாய்ப்புகள்  அதிகம்தானே..

           5)  இது  சற்றே வித்தியாசமான  வேண்டுகோள்.நான் முதன்முதலில் மூன்றாம்   வகுப்பில்  சேர்ந்தபோது, கற்றுக்கொண்ட  பாடல் வரிகள் இப்போது  என் மனதில்   ரீங்கரமிடுகிறது, நினைவுக்கு  வரும் வரிகளை தருகிறேன். யாராவது இதை   முழுதும்  அறிந்திருந்தால் கூறவும். இல்லையென்றால்  இதையே  அழகாக  முடிக்க   முயலுங்கள் .

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்டுவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென  நெருங்கித் தாக்குவோம்,
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம்  முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....
.............
பதில்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
===========================================
                  

23 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. சாஸ்திரங்கள் என்பவை நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அனுபவங்கள். காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியவை. இதையெல்லாம் தேடிப்போக வேண்டியதில்லை. அனுஷ்டிக்கப்படுபவைகளை மட்டும் ஆராய்ந்து தெளிவோம்.
  புதிய சாஸ்திரங்கள் படைப்போம்.

  ஆகம விதிகளையும் அம்பேத்கர் விதிகளையும் மாற்றச் சொன்னால் அதனால் ஆதாயம் கிடைப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிர்லா கோவில்களில் விதிவிலக்கு காணலாம்.

  நெய்வேத்தியம் Nutrition சம்பத்தப்பட்டது.

  ராகு காலம் பற்றி தெளிவு இதுவரை தென்படவில்லை. கிரகங்கள் மனதை பாதிக்கும். உங்கள் மனதை கவனிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் ராகு காலத்தைப்பற்றி பயப்படவேண்டியதில்லை.

  ReplyDelete
 3. சாஸ்திரங்கள் பெயரைசொல்லி கேள்வியே கேட்க முடியாதபடி செய்வது கண்டு எழுந்ததே இந்த கேள்வி.அதனால்தான் கூறப்படும் சாஸ்திரங்களுக்கு SANCTITY உண்டா என்று கேட்கிறேன். என் கேள்விகள் சரியாக எழுதப்படவில்லையா இல்லை புரிந்துகொள்ளப்படவில்லையா தெரியவில்லை.வெங்கட்டுக்கும் மனோவுக்கும் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 4. பாடல் மிக தாளநயத்தோடு இருக்கிறது..

  ReplyDelete
 5. அறிவியல் மு றையில் ஆய்வு நடத்துங்கள்..
  உங்கள் சந்தேகங்கள் எனக்கும்...

  ReplyDelete
 6. எனக்குத் தெரிந்த வரை... தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.


  I assume therez aura created around lamp. Our very thoughts has waves, similarly every thought, action, object etc emits auora, or waves. (or absense of it)

  I assume, aura emitted by electric lamp is not as tranquil as the aura emitted by deepam (pancha bootha / aka fire) Hence the habit of lighting lamp and lamp provides "positive vibes and aura" around the deity.

  ___

  ராகு கேது "சாயா க்ரஹங்கள்" எனக்கூறுவர். Astronomically, Rahu and Ketu denote the two points of intersection of the paths of the Sun and the Moon as they move around the celestial sphere. Therefore, Rahu and Ketu are respectively called the north and the south lunar nodes.

  ( http://en.wikipedia.org/wiki/Rahu )

  அப்படியிருக்கையில், அது கடக்கும் அந்த காலகட்டத்தில் (பல தூரத்திற்கு அப்பால்) நாழிகையில் வருவது தான் ராகு காலம். இது பூமியில் இடத்தை பொருத்து அமைவது அல்ல. May it be eclipse or any astronomical event are observed acc to the "time" not the "location"

  ______

  சாஸ்திரங்கள் எல்லாம் மனிதனன நல்வழிப்படுத்துவும், ஒழுக்கம், மனவைராக்கியங்கள் வளார்க்கவும் சிறந்த எண்ணங்களோடு ஒற்றுமையாய் அன்பு கொண்டு வாழவும் காலத்தின் வாழ்வு முறைக்கு ஏற்ப துவங்கப்பட்டவை என்று கொள்ளலாம். அவரவர் நம்பிக்கையை பொருத்தது.

  ReplyDelete
 7. அன்புள்ள ஐயா..

  எனக்குத் தெரிந்தவரை உங்களின் ஐயங்களைத் தெளிவுபடுத்த முனைகிறேன். இதுவே முடிந்த கருத்து அல்ல.

  1. சாஸ்திரம் என்பது வடமொழிச்சொல். இதனைத் தமிழில் சாத்திரம் என்று சொல்வார்கள். சாத்திரம் என்ற சொல்லுக்கு கலை, நுர்ல், கொள்கை எனும் பொருள்கள் உண்டு. எனவே மனு சாஸ்திரம் என்றால் மனுநுர்ல் மனு கொள்கைகள் என்றே பொருள். சைவ சித்தாந்த சாத்திரம் என்றால் சைவ சமயத்தின் கொள்கைகளைப் பேசும் நுர்ல் என்று பொருள். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் என்றால் பொருள் கூறும் நுர்ல் என்று பொருள். வான சாஸ்திரம் என்றால் வானின் பல்வேறு இயல்புகளை மர்மங்களைக் கூறும் நுர்ல் என்று பொருள்.

  இவ்வளவில் தமிழும் வடமொழியும் கலப்புடன் எழுதப்பட்ட காலத்தில் புழங்கிய சொற்கள். தவிரவும் ஒரு காலக் கட்டத்தில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது என்பது ஆர்வமாகவும் கௌரமாகவும் புலமைத்திறமாகவும் கொள்ளப்பட்ட ஒரு மாயை சூழலாக இருந்தது.

  இரண்டாவது இறைவனை வழிபடுவதற்கு அருளாளர்கள் பல வழிகளைக் கண்டறிந்து கூறினார்கள். சன் மார்க்கம் தச மார்க்கம் சக மார்க்கம் இப்படியாக. அருட்பிரகாச வள்ளலார் இறைவனை ஒளி வடிவில் கண்டார். நம்முடைய முன்னோர்கள வாழ்வியலுக்குப் பயன்பட்ட நெருப்பைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். நெருப்பின் மீது எது பட்டாலும் பட்டதுதான் பக்குவமாகும் அழிந்து மாறுமே தவிர நெருப்பு தன்மை மாறாதது. இதைப்போன்றுதான் இறைவனும். எனவே இறைவன் நெருப்பு வடிவமானவன். நெருப்பு ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். இறைவனும் அப்படித்தான். நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. எண்ணெய்யும் சுடரும் என்றைக்கும் நிரந்தரம். மின்சார ஒளி என்பது நிரந்தரமல்ல. தவிரவும் அதில் ஒரு செயற்கைத் தன்மை உண்டு. விளக்கின் சுடரில் இயற்கை உண்டு. மேலும் இறைவன் முன் உருகி நிற்கவேண்டும். அப்போதுதான் அவன் காட்சி தருவான். காப்பாற்றுவான். எலும்பை விளக்காவும் உயிரை சுடராகவும் ஏற்றி வழிபடுவேன் என்றார் அடியவர் ஒருவர். இது முழுக்கமுழுக்க நம்பிக்கைச் சார்ந்தது.

  மனிதன் தன்னுடைய இயல்புகளையும் செயல்பாடுகளையும் இறைவன் மேல் ஏற்றியது உண்மை. தமிழர் நிலங்களைப் பாகுபாடு செய்தார்கள். அதனை அனபின் ஐந்திணை என்பார்கள். அதாவது குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்) முல்லை (காடும் காடைச் சார்ந்த இடமும்) மருதம் (வயலும் வயலைச் சார்ந்த் இடமும்) நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்) பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்). இதற்கேற்றவாறு முதல்பொருள் (அதாவது நிலமும் பொழுதுகளும்) கருப்பொருள் (தெய்வம் தொடங்கி விளையும் அத்தனைப் பொருட்களும். இது அந்தந்த இடத்தைப் பொறுத்தது) உரிப்பொருள் (இது உணர்வுகளைக் குறிப்பது - இதுவும் அந்தந்த இடத்தைப் பொறுத்தது.) எனவேதான் அங்கு உருவாக்கப்பட்ட தெய்வங்களை அந்தந்த நிலப்பகுதில் விளைந்த பொருள்களால் நிவேதனம் செய்யப்பட்டு வழிபட்டமை உண்மையானது. இதுதான் உணமை.

  ராகுகாலம் போன்றவற்றிற்குப் பின்னால் நிச்சயம் அறிவியல் பின்புலம் உள்ளது. இதனை நன்றாக உறுதிச் செய்தபின் எழுதுகிறேன்.
  இது என் சிற்றறிவுக்கு எட்டியவரை தெளிவு படுத்தியிருக்கிறேன்.

  ReplyDelete
 8. செயற்கை ஒளியால் கருவறையை காண்பதை விட, விளக்கு ஒளியில் அந்த அம்மனின் முகத்தைப் பாருங்கள் அதில் வரும் தேஜஸ் தனி..

  ReplyDelete
 9. நிவேதனம் என்பதே சரியான பதம். அதுவே பின்பு நைவேத்தியம் என்று மாறிவிட்டது. நிவேதனம் என்ற சொல்லுக்கு காண்பித்தால் என்பது பொருள். இதுதான் நிவேதனம் பண்ண வேண்டும் என்று இல்லை. வெறும் துளசி கொடுத்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான்.

  இதைதான் நிவேதனம் பண்ண வேண்டும் என்பது சாஸ்திரத்தில் இல்லை. பின்பு ஏற்படுத்தப் பட்டது. கண்ணப்பன் கதை தெரியும் அல்லவா ??

  ReplyDelete
 10. நல்ல கேள்விகள் ...நமக்கும் ஆன்மிகத்திற்கும் ஏழாம் பொருத்தம் நான் ஜகா வங்கிக் கொள்கிறேன்... அதற்காக சாமி கும்பிட மாட்டேன் என்று அர்த்தம் அல்ல.. நம்மை மீறிய சக்தியை நான் சோதிப்பதில்லை...

  ReplyDelete
 11. செவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம்
  புவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்
  மதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்
  நிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்
  இருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்
  அருள்பொழிக்கும் அரன்பதங்கள் பணிந்து வேண்டுவோம்.

  ReplyDelete
 12. இந்த வயதில் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்தது ஆச்சர்யம்.
  சாஸ்திரம் என்பது அனுபவம். மனிதன் எப்படி வாழ்தால் நன்றாகா இருப்பான் என்ற அனுபவத்தில் சொல்லப்பட்டவை.
  கோவில்களில் தீபம் இன்றும் தேவை. நமது நாட்டின் கரண்ட் எப்போது போகும்? எப்போது வரும்? யாருக்கும் தெரியாது.
  ராகுகாலம் உலகம் பூராவும் ஒரே நேரத்தில் வரும் என்று யார் சொன்னது. http://www.mypanchangam.com/ சென்று பாருங்கள்.

  ReplyDelete
 13. கடவுள் எல்லாவற்றையும் உருவாக்கினார். அதே போல் கடவுளை மனிதன் உருவாக்கினான்.இது முதல் படி.

  ஒரு வீட்டுக்கு வாழை மரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டு மாக்கோலத்தோடு பார்க்கும்போது மனம் நிறைந்த ஒரு தளும்பும் பரவசம் மனசுக்குள்.எனக்கு இப்படி.உங்களுக்கு வேறு விதமாய்.

  மனுவோ சுந்தர்ஜியோ பாலு சாரோ அவர்கள் மனம் ஏற்கும் விஷயங்கள் முதலில் காரணம் கேட்பதில்லை.காரணம் காணத் துவங்குகையில் விரும்பிய பொருளிலோ கருத்திலோ முரண்படத் துவங்குகிறோம் என நினைக்கிறேன்.

  தவிர நைவேத்யம் என்பதும் பூஜை புனஸ்காரங்களும் ரசனை சார்ந்த அவரவர்களின் விருப்பம் சார்ந்தவைதான்.கண்ணப்பன் தான் புசித்த மாமிசத்தை-குகன் தனக்குத் தெரிந்த மீனை-குசேலன் வியர்வை மணந்த அவலை-இல்லையா?

  எண்ணெய் விளக்கும் அப்படித்தான்.நவீன விளக்குகள் திரியைச் சாப்பிட்டுவிட்டன.மின் உதவியால் மேளமிசைக்கப் படுவதும் ருசியின் மாற்றமே.எண்ணெயும் நாதஸ்வரத்தோடு மேளமும் தேவாரமும் சேர்ந்த வழிபாடுகளை இந்த நூற்றாண்டு விழுங்கிவிட்டது.

  ராகுகாலத்தை நான் நம்புவதில்ல.நான் நம்பாத ஒரு விஷயம் பற்றிக் கருத்துக் கூற எனக்கு ஞானமோ யோக்யதையோ இல்லை.வானசாஸ்திரம் தொடர்பான விஷயங்களில் ஆர்யபட்டரைத் தந்த நாடு நம்முடையது.ஆழ உழுதால் ஏற்புடைய விஷயங்கள் வெளிப்படலாம்.

  அந்தப்பாடலை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.பாடுவதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது.இப்போதுள்ள குழந்தைகள் அபாக்யசாலிகள்.

  என்னையும் யோசிக்க வைத்த சந்தேகங்களுக்கு நன்றி பாலு சார்.

  ReplyDelete
 14. //2)ஆலயங்களில் அந்தக் காலத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப் படாத காலத்தில், ஆண்டவனின் திரு உருவை தரிசிக்க,// கற்பூர‌ தீப‌ம் காட்டுவ‌து அத‌ற்குத்தான். அவ‌ர்க‌ளின் அடியும் முடியும் ஆர்த்தியில் மின்ன க‌ண்டு ம‌கிழ்ந்து க‌ன்ன‌த்தில் போட்டு க‌ளிப்புறுவ‌ர். (இப்போ போக‌ஸ் லைட் வ‌ந்த‌ பின்பும் அதே தெட‌ர்கிற‌து. காற்பூர‌ம் இய‌ற்கைச் சூழ‌லுக்கு மாசு என்ப‌தால் எண்ணை தீப‌ங்க‌ள்) எனக்கு தெரிந்த‌தாய் நினைப்ப‌து இவ்வ‌ள‌வு தான் ஐயா.

  ReplyDelete
 15. வடுகை தந்த அனைவருக்கும் என் நன்றி. இந்த பின்னூட்டதில் என் கருத்துகள் சிலவற்றை சற்றே விரிவாக எழுத முனைந்து இரு முறை எழுதியது பிரசுரமாகாமல் காணாமல் போய், தனியே பதிவாகவே என் கருத்துகளை எழுதியுள்ளேன். கருத்துக்களில் முரண்படக் கேட்கப்பட்டதல்ல இக்கேள்விகள் அறிந்ததை இன்னும் தெளிவு படுத்திக் கொள்ளதூண்டிய சந்தேகங்கள் .எனக்குத் தெரியும் WHEN THERE IA A CONFLICT BETWEEN THE HEAD AND THE HEART, ONLY THE HEART WINS AND THE HEAD LOSES. யாருடைய நம்பிகையையும் விமரிசிக்க எழுந்ததல்ல என் சந்தேகங்கள்

  ReplyDelete
 16. சில எழுத்துப் பிழைகள் என் கவனக் குறைவே காரணம். மன்னிக்கவும்.

  ReplyDelete
 17. /கற்பூர‌ தீப‌ம் காட்டுவ‌து அத‌ற்குத்தான். /
  இது இடையில் வந்ததே. பழங்காலத்தில் நெய் தீபம்தான்

  ReplyDelete
 18. உங்கள் பாடல் வரிகளோடு நான் எழுதியதை இணைத்துப் பார்த்தீர்களா ?

  ReplyDelete
 19. sir, intha post-ku vilakkam ezhutha enakku qualification kidaiyaathu!
  aanaa 23 varushamaa naan enna kaththundeno illaiyo- ellaa vishayaththilum en opinion kudukka mattum nannaa therinjunden!

  'mohanam' gara raagaththula 'madhyamam' ('ma') kidayaathu. atha naama yen kidayaathu-nnu kekkarathilla. accept pannikkarom. 'mohanam' naa ippudi thaan irukkum-nu. enna poruththa varaikkum athey pola thaan ithuvum.
  pidichchatha seiyalaaam. pidikkaathatha vitukkalaam. ithu ennoda opinion.

  vaasal-la periiiiya kolam pottu, color panni, nadula poo vechchu paaththa paakka azhagaa irukku. homam pannarappo vara pogaiyoda smell nannaa irukku. athukkapram kidaikkum saappaadum nannaa irukku. shraardha saappaattila innathu sekkanum, sekkapdaathu-nnu avaa pannara samaiyal-um oru thani taste thaan. ithellaam aaththula irukkara vayasaana yaaraavathu maami-yoda ishtathukku vittudanum.

  aanaa- unga post-la vantha oru line enna vera track-la kondu pochchu, sir!

  "தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது"....

  I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?

  ReplyDelete
 20. மாதங்கிக்கு,நான் பின்னூட்டங்களுக்கு தனி பதிவு எழுதிய பிறகு உங்கள் கருத்து வந்துள்ளது.மோஹனத்துல மத்யமம் கிடையாது என்பதைப்போல் அறுதியிட்டு சொன்னதல்ல நான் எழுப்பிய கேள்விகள் எதுஎப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன, நம் மேல் விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி. சரிதானே. மிகச்சரியான பாயிண்ட்டை தொட்டு விட்டீர்கள் கடைசி வரியில். ஸ்வாமி சின்மயானந்தா கூறுவார், பலமணிநேரம் வரிசையில் நின்று திருப்பதியில் பாலாஜியை நெருங்கும்போது கண்களை மூடி ஆண்டவனை காண்கிறோமே என்று. உருவம் இல்லா ஆண்டவனுக்கு நாம் கொடுத்த உருவை காணமுடிவதில்லையே என்பதே என் ஆதங்கம்.

  ReplyDelete
 21. நல்ல கேள்விகள். பல சமயங்களில் நானும் இந்த கேள்விகளை எங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டதுண்டு. ஒழுங்கான பதில் கிடைக்காததாகத் தான் அப்போது தோன்றியது!

  ReplyDelete