Wednesday, September 28, 2016

ஒரு சில சமன்பாடுகள்


                                   ஒரு சில சமன் பாடுகள்
                                 ---------------------------------------

முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....


முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்....
--------------------------------------------------------

           நாளும் பொழுதும் என் நாவில்
           தவறாது வந்தமரும் முருகா,
           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

முருகு என்றால் அழகு
அழகு என்றால் முருகன்
என் கண்ணுக்கும் சிந்தைககும்
இந்த அண்டமே அழகாகத் 
தெரியும்போது அது நீயாகத்தானே 
இருக்க வேண்டும், தெரிய வேண்டும். 
            அழகை ஆராதிப்பவன் உன்னை 
            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 
ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்
மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 
கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 
சமன்பாடு நன்றாகத் தெரிகிறது. 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
            உன் தாயின் பெயர் பார்வதி,
            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
            என் தந்தையும் மகாதேவன்
            என் தாயும் பார்வதி
            நானும் பாலசுப்பிரமணியம்.
            புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             பிரணவத்தின் பொருள் அறியா
             பிரம்மனின் ஆணவம் அடக்க
             அவனை நீ சிறை வைத்தாய்.
             உனக்குத் தெரியுமா, கற்பிப்பாயா
             என்றுன் அப்பன் உனைக்கேட்க
             பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             கதை எனக்குப் பிடிக்கும்.
             அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              நாவல் பழம் கொண்டு,
             அவ்வைக் கிழவியின் தமிழ்
             ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
             உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
             தமிழைக் குத்தகை எடுத்து
             கொள்முதல் செயவதாய்க் கருதும்
             சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

              ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
               காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
               நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
               தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
               எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
=========================================
(இது ஒரு மீள் பதிவு)

Sunday, September 25, 2016

பொழுது போக்கும் விதங்கள்


                                 பொழுது போக்கும் விதங்கள்
                                  -----------------------------------------


எனக்கு எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் an idle mind is a devil”s den என்பார்கள்  எதையாவது செய்ய வேண்டு மென்றால் எதைச் செய்வது எழுதுவது ஒன்றே இப்போது செய்ய முடிகிற ஒன்று  இருந்தாலும்  அது பூரண திருப்தி தருவதில்லை.  தஞ்சாவூர் ஓவியங்களும்  கண்ணாடி ஓவியங்களும் முன் போல்தீட்ட முடிவதில்லை. கண்களும் கையும்   ஒருமித் வேலை செய்வது சிரமமாய் இருக்கிறது புதிதாக க்வில்லிங் கற்றுக் கொண்டு  சில காதணிகள் செய்தேன்  ஆனால் என் வீட்டில் பெண்குழந்தைகள் இல்லாததால் அவற்றை அணிவதற்கு  யாரைத் தேடுவது. அதையும் விருப்பமாக யார் அணிந்து கொள்வார்கள்  இருந்தும்  இந்த டெரகோட்டா அணிகலன் செய்ய வேண்டும்  என்று நினைத்தேன்   நினைத்ததைச் செய்து முடிப்பவன்  அல்லவா. ஒரு பதக்கத்துடன்  கூடிய மாலையும்  ஜிமிக்கியும் செய்தேன்  அதை என் மனைவி இத்தனை வயதுக்கு மேல் ஜிமிக்கியா என்று மறுக்கிறார்  என் ஆசையைப் பூர்த்தி செய்ய செய்ததை ஒரு முறை அணியச் சொன்னேன்  . அணிந்து காண்பித்தாள்  ஆனால்  பதிவில் போடக்கூடாது என்றும்  தடை விதித்து விட்டாள்  செய்ததை ஒரு படத்துக்கு அணிவித்துப் பார்த்திருக்கிறேன் 

டெரகோட்டா அணிகலன் படத்துக்கு


சில நேரங்கள் பழைய புகைப்படங்களைப் பார்த்து அவற்றின் நினைவில் மகிழ்வதும்  உண்டு என் மறைந்த அக்காவின்  மகனுக்கு  சஷ்டியப்த பூர்த்தி வர அழைப்பு இருந்தது. இவனுக்கு அனுபவங்கள் சற்றுக் கூடுதலே ஆர்மியில் காப்டனாக இருந்தான் பல தொழிற்சாலைகளில்  பணி புரிந்திருக்கிறான் கடைசியாக பி இ எம் எல் லில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றான் இத்தனை வயதுக்கு மேல் அவன்ித்ு முனைவர்  பட்டம்  பெற்று இப்போது  ஒரு கல்லூரியில் ப்ரொஃபெசராக இருக்கிறான் அவனதுஅறுபதாம்  ஆண்டு நிறைவின்  போது எடுத்தபடம்

அறுபதாம் ஆண்டு நிறைவு விழா


என்னிடம் ஒரு சாம்சங் ஹாண்டி காம் இருக்கிறது அது இப்போது பழுதாய் விட்டது. அில் வீடியோக்களை டேப்பில் பதிவு செய்வோம் அப்படிப் பதிவு செய்த டேப்களை இப்போது பார்க்க முடிவதில்லை. நாங்கள் துபாய் சென்றிருந்தபோது  மற்றும் பல இடங்களுக்குச் சென்றபோது எடுத்த காணொளிகள் முதலிய வற்றை டிவிடி யாக அண்மையில் மாற்றினேன் ஆனால் டிவிடியிலிருந்து படங்களைச் சிறிது சிறிதாகப் பதிய முடியுமா தெரியவில்லை. அவற்றை கணினியில் ஓட விட்டு  அதில் பிடித்ததைக் காமிராவில்  எடுத்திருக்கிறேன்  சில காட்சிகள் மனதுக்கு நிறைவைத் தருகிறது என் சின்ன பேரன் ஆடிய ஆட்டங்களில் ஒன்றை இத்துடன் பதிகிறேன்


எனக்குப் பயணம் செய்யப் பிடிக்கும் . வித்தியாசமான மனிதர்கள் கலாச்சாரம் இத்யாதி இத்யாதி  விஷயங்கள் பயணத்தால் புரியவரும் இப்போது நினைத்த மாதிரி பயணப்பட முடிவதில்லை. ஆனால் என் மகன்களின் பணியே அவர்களைப் பயணம் செய்ய வைக்கிறது பெரிய  மகன் இந்தியாவின் நீள அகலங்களில் பயணிக்கிறான் அவனால் தவிர்க்க முடியாத பயணங்கள் வேலை நிமித்தமான பயணங்கள். அவனுக்கு எப்படா வீடு வந்து சேருவோம் என்று இருக்கும்  இளையமகனுக்கும் பயணங்கள் உண்டு. இப்போதெல்லாம் கிழக்காசிய நாடுகளுக்குப் பயணிக்கிறான் அவனை உலகம் சுற்றும் வாலிபன்  என்று தமாஷாக அழைக்கிறேன் அடுத்து சீனா , அதன் பின்  அமெரிக்கா  என்று ஒரு நீண்ட பயணத்திட்டம் வைத்திருக்கிறான்  இவர்கள் பயணிக்குமிடங்களுக்கு என்னையும்கூட்டிப்போக முடியாத நிலை. அண்மையில் என் இளைய மகன் பாங்காக்கிலிருந்து ஒரு படமும்  மலேசியாவில் இருந்து ஒரு படமும்  அனுப்பி இருந்தான்  அங்கும்  இந்தியாவின்   தொன்மையான கலாச்சாரங்களின்  பாதிப்பு தெரிகிறது பாங்காக் விமான நிலையத்து  புகைப்படத்தில் தேவாசுரர்கள்  அமுதம் கடையும் காட்சி போல் தெரிகிறது ஆனால் பாம்பின் மேல் இருப்பது யார் புரியவில்லை.

பாங்காக் விமான நிலையத்தில் என்  இளைய மகன்  
மலேசியா முருகன் கோவில்
கடைசியாக என் மூத்தமகன்  எனக்கு அனுப்பியது
ஒரு பிசினஸ் புள்ளி ஒரு ஜூ தொடங்கினார்  வருகைக்கு தலைக்கு ரூ100-/ கட்டணம் என்று அறிவித்தார் கூட்டமே வரவில்லை. கட்டணத்தை ரூ 50-/ என்று குறைத்தார். அப்போதும் கூட்டம் வரவில்லை. கட்டணத்தை ரூ 10-/ என்று குறைத்தும்  எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. கடைசியாக கட்டணமேதும் இல்லை. இலவச அனுமதி என்று அறிவித்தார்  கூட்டம் பிய்த்துக்கொண்டு போயிற்று அவர் பிசினஸ் புள்ளி அல்லவா  அடைத்து வைத்திருக்கும்  சிங்கத்தை வெளியில் விடப்போவதாக அறிவித்தார் வந்திருந்த கூட்டம் வாயிலில் அலை மோதிற்று திற்று . வாயிலைத்திறக்க ஆளுக்கு  ரூ200-/ கட்டணம் என்று அறிவித்தார்
 அந்த ஜூதான்  ஜியோ ஜூ....! 

எழுத்துகள் உரு மாறி இருப்பது கூகிள் க்ரோம் உபயோகப்படுத்தும்போதுதான் மொஜில்லா ஃபைர் ஃபாக்சில் சரியாக வருகிறது     
   
           Wednesday, September 21, 2016

இன்னாசெய்தாரை...........


                                   இன்னாசெய்தாரை............
                                   --------------------------------


”செல்வி வேலை செய்யத் தொடங்கும்  முன்   இந்தக் காப்பியைக் குடி”

”அம்மா இன்று நான்விரதம்  மாசி செவ்வாய்”

”அதென்னடி விரதம் நான் கேள்விப்படாதது”

”எங்கள் ஐயாவும்  அம்மாவும் சொன்னார்கள் நானும்  இருக்கிறேன் எதையும்  சாப்பிட மாட்டேன்”

பத்து பனிரெண்டு வயதுக்குள் இருக்கும் செல்வி விரதம் இருக்கிறாள் அம்மா அப்பா சொல்லிக் கொடுத்தது என்கிறாள் என்ன விரதம்  ஏன் என்று கேள்வி கேட்கமாட்டாள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவள் இவள் மட்டுமா அப்படி நம் நாட்டில் அநேகம் பேர் இப்படித்தான் பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் கேட்கமாட்டார்கள் அவ்வளவு பணிவு நம்பிக்கை இந்தப்பெரியவர்களுக்குத் தெரிந்ததைதானே அவர்களும் சொல்லிக் கொடுப்பார்கள் அவர்கள் வளர்ந்தவிதம்  அப்படி

இந்த செல்வி என் வீட்டில் வேலைக்கு வந்ததே எதேச்சையாகத்தான் மூன்று சகோதரிகளுடன்  பிறந்தவள்  இவளுடைய அக்கா அடுத்த வீட்டில் வேலை செய்பவள் வீடு கூட்டி பாத்திரம்  தேய்ப்பது வேலை  எனக்கும்  வேலைக்கு ஆள் வேண்டித் தேடிக் கொண்டிருந்தபோது ராணி அதுதான்  செல்வியின் அக்கா சொன்னாள்
 ”என் தங்கையை வேலைக்கு அனுப்பட்டுமா வீட்டில் சும்மாத்தான் இருக்குது சொன்னவேலைகளைச்  செய்வாள் உங்களுக்கு தோன்றியதைச் சம்பளமாகக் கொடுங்கள்”

செல்வியும் வந்தாள் மிகவும் சின்னப் பெண் என்ன வேலை செய்ய முடியும் இருந்தாலும் வீடு கூட்டி துடைக்க முடியும் என்று தோன்றியது  செல்வி சூட்டிகையானபெண். நாளாவட்டத்தில் பாத்திரம்  கழுவும் வேலையையும்  கேட்டு வாங்கிக் கொண்டாள் முதல் மாச சம்பளமாக  ரூபாய் பத்து கொடுத்தபோது முகம் சந்தோஷத்தில் மின்னியது
      எனக்குப் பெண்குழந்தைகள் இல்லாத குறையை செல்வி போக்கினாள் வீட்டில் அவளுக்கு எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லை எனக்கு எந்த பொருளையும்  அதற்கான இடத்தில் வைக்கும்  பழக்கம் இல்லை. எதையும்  எங்காவது வைத்து விட்டுத் தேடுவேன் இது மாதிரி சில ரூபாய்களையும்  சில்லறைகளையும் எங்காவது வைத்து விட்டுத் தேடும் சுபாவமும்  உண்டு  சில நேரங்களில் வைத்த சில்லறைகளை எடுத்தாயா என்று என் மகனிடம்கேட்டு அவன்  வருத்தப்பட்டதும் உண்டு. ஒரு முறை அப்படித்தான்  கால் கொலுசுகளை எங்கோ கழற்றி வைத்துக் கிடைக்காமல் மறந்து போய் விட்டேன்  எங்காவது இருக்கும் என்னும்  நம்பிக்கை.
பல நாட்கள் கழித்து செல்வியின் கால்களில் கொலுசுகளைக் கண்டேன்  அது என்னுடையதுபோல் இருந்தது. இருந்தாலும்  விசேஷ அடையாளங்கள் ஏது மிருக்க வில்லை. செல்வியிடம்  பேச்சுக் கொடுப்பது போல் கொலுசு பற்றிக் கேட்டேன்  அவளது அக்காள் கொடுத்ததாகக் கூறினாள் செல்வி மேல் சந்தேகப் படுகிறேனோ. பாவம் சின்னப் பெண் தவறாக எதையும்  கேட்டு விடக் கூடாது
 இருந்தாலும் மனசில் உறுத்திக் கொண்டிருந்ததுஒரு நாள் அவளக்கா ராணியிடம்  செல்வியின் கொலுசு பற்றிக்கேட்டேன் என்ன விலை கொடுத்து எங்கு வாங்கினாள் என்று கேட்டேன்
”அம்மா அது நீங்கள் கொடுத்தது என்றல்லவா செல்வி சொன்னாள்  அது நீங்கள் கொடுத்ததில்லையா”

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது  அதைப் பெரிசு பண்ண வேண்டாம்  என்று அவள் அக்காவிடம் கூறினேன்
ஓரிரு நாளைக்குச் செல்வி வேலைக்கு வரவில்லை பிறகு வந்தவள் அந்தக் கொலுசை என்னிடம்  கொடுத்து விட்டு  அழுது கொண்டே சொன்னாள் செல்வியின் அக்கா அவர்களது அப்பாவிடம் சொல்லப்[ போக அவர் செல்வியை நையப் புடைத்து விட்டு செல்வியிடம் அதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி யிருக்கிறார்
 செல்வி அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெரிய மனுஷி போல் என்னிடம் சொன்னாள்

”அம்மா இருந்தாலும் உங்களுக்கு கவனக் குறைவு அதிகம் நானும் எத்தனையோ முறை அங்குமிங்கும்  இருக்கும் சில்லறையை எடுத்திருக்கிறேன்   நீங்கள் வீட்டு அண்ணாவிடம்  கேட்டதையும் பார்த்திருக்கிறேன் எது  காணாமல் போனாலும் உங்களுக்குத் தெரியாது .  கொஞ்சம்  கவனமாகவே இருங்கள் நாளையிலிருந்து  வேலைக்குப் போக வேண்டாம் என்று அப்பா சொன்னார்”  என்றாள்

 ”செல்வி வழக்கம் போல நீ வேலைக்கு வா நிற்க வேண்டாம் பிறரது பொருளுக்கு ஆசைப்படாதே  நானே நீ கொலுசுகளை எடுத்தது பற்றிப் பெரிதாக நினைக வில்லை. கவனக் குறைவாக இருப்பதும் என்  தப்புதானே” 
 என்று சொல்லி அவளுக்கு அன்று ஏதும்  விரத மில்லையே என்று கேட்டு விட்டு காப்பி பலகாரம் கொடுத்தேன் 
  என் நண்பிகள்  மீண்டும் செல்வியை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றார்கள் கண்ட இடத்தில் பொருளை வைப்பதுதானே ஏதும் அறியாச் சிறுமியை அந்தப் பொருள் என்னை எட்டு என்னை எடு என்று ஆசையைக் கிளப்பி விட்டது. நம் தவறுக்கு  நாமும் பொறுப்பல்லவா  மேலும் சின்னப் பெண் திருந்த ஒரு வாய்ப்பும் கொடுக்க வேண்டுமல்லவா