Monday, November 29, 2010

தொடரும் தேடல்கள்

      தொடரும்   தேடல்கள்   ( ஒரு  கட்டுரை  )
--------------------------------------------------------------------
       " கடவுள்   மனிதனாகப்   பிறக்கவேண்டும் "-- திடீரென்று   கண்ணதாசன்   பாடல்   வரிகள்  நினைவுக்கு  வருகிறது.  பாட்டில்  மனம்   லயிக்கவில்லை..  மனிதனே    கடவுளைப்   படைத்துவிட்டு   அவன்  மனிதனாகப்   பிறக்க   வேண்டுவது   சற்றே   முரணோ   என்று   தோன்றுகிறது.  மறுபடியும்  மனம்,  காண   இயலாத   அல்லது  உணர   இயலாத  ஒரு   பரப்பிரம்மத்தைத்   தேடத்   துவங்குகிறதோ ? சரி,  இல்லாத  ஒன்றைத்  தேடுகிறோமா ?  அல்லது  எங்கும்   இருப்பதை  உணர  முடியாமல்  தவிககிறோமா.?  ஒன்று   மட்டும்  புரிகிறது. இந்தத்  தேடலுக்கு  விடை  கண்டவர்கள்  இருக்கிறார்களா , இல்லையா.? கண்டு  விட்டவர்கள்  என்று  நாம்  நம்பும்  சிலர்  என்னதான்  கூறுகிறார்கள்?
எதற்காக   நாம்  இந்த  தேடலைத்  துவங்குகிறோம்.? நம்  கட்டுப்பாட்டுக்குள்  இல்லாத   சில    நிகழ்வுகள்  ஆதியையும்  அந்தத்தையும்   தேட  வைக்கின்றன.

         ஆதியும்   இல்லாதது   அந்தமும்  இல்லாதது  என்றுதான்   நாம்   கடவுளை   உணர்த்தப்படுகிறோம்.  நம்  உள்ளத்தை , மனசை  நம்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு   வந்தால்,  ஆண்டவனை   உணர்வதில்   ஓரளவு   வெற்றி  பெறலாம்  என்று  பெரியவர்களும்   ஞானிகளும்   கூறுவது  ஓரளவு  புரிகிறது. உள்ளத்தை  உணர  எத்தனிக்கும்  முன் உடலை  நம்  கட்டுப்பாட்டுக்குள்   கொண்டு  வரவேண்டும்  என்றும்  கூறுகிறார்கள். உடலையும்  மனசையும்   நாமே  இயக்க  தியானம்  உதவும்  என்று   கண்டதும்  கேட்டதும்  வாயிலாகத்  தெரியவருகிறது. தியானத்தைப்  பற்றிப்  பேசும்போது  கூடவே   யோகா  பற்றியும்   நிறையவே   பேசப்படுகிறது. யோகா  உடலைக் கட்டுக்குள்    கொண்டு    வரவும்,  தியானம்    மனசைக்    கட்டுக்குள்   கொண்டு   வரவும்   உதவும்   என்றும்   அறிவுறுத்தப்படுகிறோம்.

          இந்தத்  தேடலும்  உணர்வுகளும்  எனக்கு  என்னுடைய   பதினைந்து   வயது  முதலே  தொடங்கியது. நாங்கள்  அப்போது  நீலகிரி  வெலிங்கடனில்  இருந்தோம்.  நீலகிரி   குளிர்ப்  பிரதேசம்  என்பது  எல்லோருக்கும்  தெரியும். அந்தக்  குளிரிலும்   விடியற்காலை   ஐந்து  மணிக்கு  எழுந்து, குழாயைத்  திறந்துவிட்டு, குளிர்  நீரில்  வெடவெடத்துக்  குளித்து, ஒரு  தனி  அறையில்  பத்மாசனத்தில்  அமர்ந்து, ஓம்,...ஓம்.. என்று  ஓங்காரத்தை  சுமார்  அரை  மணியிலிருந்து  ஒரு  மணிநேரம்  உறக்கக்   கூறுவேன் .பிறகு  விவேகானந்தரையும்   பரமஹம்சரையும்  நாராயண  குருவையும்   (அவர்கள்  எழுதியதை ) படிப்பேன். என்  செய்கைகளைக்  கண்டு  என்  பெற்றோர்  பயந்து   என்னைக்  கண்டிக்கத்  துவங்கினார்கள்.  எனக்கு  என்னுள்  எந்த  ஒரு  மாற்றமும்   என்னிடம்  நிகழாததால்  அந்த  முயற்சிகளை  கைவிட்டேன். அன்று  துவங்கிய  தேடல்   இன்று வரை   முற்றுப்பெறவில்லை.  இதற்குள்  வாழ்வின்  பல  நிலைகளையும்  கடந்து   இப்போது  எல்லைக்  கோட்டிற்கு  வந்து  விட்டதாக  நினைக்கிறேன்.

         வாழ்க்கையில்   கண்ட,  கேட்ட, அனுபவித்த  அனுபவங்கள்   எதையும்  எளிதில்  ஏற்றுக்கொள்ளும்  மனநிலையைத்  தரவில்லை. மாறாகக்  கேள்விகளே  அதிகம்  எழுகின்றது. சில  சமயம்  நாம்  ஏன்  இப்படி மற்றவரிடமிருந்து   மாறுபட்டு  நிற்கிறோம்   என்றும்   தோன்றும். எல்லோரையும்போல்  (  எல்லோரையும்   என்றால்   எல்லோரையும்   அல்ல ) ஏன்   எதையும்   கண்மூடித்தனமாக  நம்பிக்கையுடன்  ஏற்றுக்  கொள்ள  முடிவதில்லை.?

         நம்பிக்கைகள்  என்று  பார்க்கும்போது , பெரும்பாலானவை  பகுத்தறிவோடு   பார்க்கப்படாததாகவே  தோன்றுகிறது. நான்  கூறும்  பகுத்தறிவு  கடவுள்  மறுப்பு   சம்பந்தப்  பட்டதல்ல.. உண்மையிலேயே  ஆழ்ந்து  சிந்தித்து  உரசப்பட  வேண்டியவை.. நம்பிக்கைகளுக்கும்   மூட  நம்பிக்கைகளுக்கும்  நிறையவே  வித்தியாசம்  உண்டு. நேரம், காலம், ஜாதகம், தோஷம், பரிகாரம் என்பன   போன்றவற்றில்  அதிக  நம்பிக்கை  வைத்து  அறிவை  எங்கோ  அடகு  வைக்கிறோமோ  என்று  தோன்றுகிறது.  ,  

         பக்குவப்படாத  வயதில்  பரிசோதனைகள்   மேற்கொண்டு   பலனளிக்காததால் , உற்றவர்களிடம்  கற்றுத்  தெரிந்து   கொள்ளலாம்  என்றால்  அதற்கு  பெரிய  விலையே  கொடுக்க  வேண்டியுள்ளது. யோகா  கற்பதோ , தியானம்  கற்பதோ  உரிய  முறையில்   மேற்கொள்ள  நிறையச்  செலவு  செய்ய  வேண்டியிருக்கிறது..  இவை   எல்லாமே   இப்போது    வியாபாரமாகிவிட்டது. வாழும்   கலை,   ஈஷா   மையம், அமிர்தானந்த   ஆஸ்ரமம்   போன்றவை   மக்களுக்காக   எவ்வளவோ   நல்ல   காரியங்கள்   செய்திருக்கலாம்.  ஆனால்   அவர்கள்   போதிக்கும்   யோகா, தியானம்  போன்றவை  பணம்   மிகுந்தவர்களுக்குத்தான்   உபயோகமாகும். வாழும்  கலையினர்  அடிப்படை  போதனையாக  ஐந்து  நாட்கள்  தினம்  ஒரு  மணி  நேரம்  பயிற்சி  தருகிறார்கள். அதற்கு   தலைக்கு   ரூபாய்  நூறுக்கும்  மேல்   வசூலிக்கிறார்கள் .மேற்படி  கற்க  வேண்டுமானால்  ஆஸ்ரமத்தில்   தங்க  வேண்டும். சாதாரணமானவர்களுக்கு  அது  சாத்தியமானதாக  இருக்காது. இதுவே  மற்ற  இடங்களிலும்  நடக்கிறது. எனக்குத்  தெரிந்த  ஒரு  பயிற்சியாளர்  இதுவே  தொழிலாகக்  கொண்டிருக்கிறார்.

           பணம்  இல்லாமல்  எங்கும்  எதுவும்  நடைபெறுவதில்லை. கோவில்களுக்குச்  சென்று  வருவது, வழிபாடு  நடத்துவது  போன்றவை  நம்  கையில்  இருக்கும்  பணத்தைப்  பொறுத்தே  அமைகிறது. அதுவும்  நம்  தென்னிந்தியக்  கோயில்கள்   வழிபாட்டுத்தலமாக  இல்லாமல்  வியாபாரத்தலமாகவே  இருக்கின்றன. திருப்பதி , பழனி , குருவாயூர்,  ராமேஸ்வரம்  போன்ற  இடங்களில்  பணம்  பறிக்கப்படுகிறது.  இதுவே  வட  இந்தியக்  கோயில்களான  காசி, மதுரா, ஹரித்துவார்  போன்ற  இடங்களில்  பணம்  படைத்தவர்களும்   இல்லாதவர்களும்   ஒன்று போலவே  நடத்தப்  படுகிறார்கள். கடவுளை  தரிசனம்  செய்யப்  பணம்  கொடுக்கவேண்டியதில்லை. அங்குள்ள  பண்டாக்கள்  பணம்  பண்ணும்  முறையே  வேறு. அது அங்கு  வரும்  மனிதர்களின்  நம்பிக்கைகளின்  மேல்  அவர்கள்  வைத்திருக்கும்  நம்பிக்கையைப்   பொறுத்திருக்கிறது.

          என்னுடைய  இளவயதில்  ஷீரடி  சத்திய  பாபா  பற்றிய  விவரங்கள்  அறிந்தவர்கள்  குறைவு. சமீபத்தில்  நாங்கள்  ஷீரடி  சென்றிருந்தோம்.. அந்த இடமே    ஒரு பொருட்காட்சிசாலை   போலவும், ஒரு  சுற்றுலாத்தலம்  போலவும்  காட்சியளிக்கிறது. ஷீரடி  பாபாவை  ஒரு  மார்கெட்டிங்   பொருளாகவே  மாற்றியிருக்கிறார்கள்.

          என்னை  நானே  அறியவும், எனக்குள்  இருந்த  சில  சந்தேகங்களையும்  நான்  செய்த  முயற்சிகளையும்  பதிவு செய்ய  முற்பட்ட  இந்தப் பதிவு,  என்னுடைய  சில  ஆதங்கங்களின்  வெளிப்பாடாகவே  அமைந்து  விட்டதுபோல்  தோன்றுகிறது. என்ன  செய்வது.? நான் எழுதும்போது  என்னுடைய  மனத்தாங்கல்கள்  என்னையும்  அறியாமல்  வெளிப்படுகிறது. சரியா  தவறா  தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------------------- 
 

    
 

 


..          .
       

Thursday, November 25, 2010

காக்கக் காக்க

           காக்கக்   காக்க     ( ஒரு சிறு   கவிதை.)
--________________________________________________          
பட்டாம்   பூச்சிப்   பிடிக்கப்
பதுங்கிப்   பதுங்கி  முன்னேறும்
பத்து   வயசுச்  சிறுமி.
  
அவளிடமிருந்து   அதைக்  காக்க
எம்பி  எம்பித்  துரத்தும்
ஐந்தே   வயசுப்  பாலகன்.

எப்படியும்   பிடிக்க   வேண்டும்
என்ற  முனைப்பில்
தடுக்க   வந்த   தம்பியை
அடித்து   விடுகிறாள்   அக்கா.

அவனும்   ஆற்றாமையால்   கூவுகிறான்,  
அன்று   தும்பியைக்  கல்  தூக்க  வைத்தாள்
இன்று   இதன்  இறகைப் பிய்ப்பாளோ.?
பாவம்  பட்டாம் பூச்சி !
கடவுளே, நீ  அதைக் காப்பாற்று.     

பிறிதொரு நாள், குறும்பு  செய்த  பிள்ளையை
கூடத்தின்   ஓரத்தில்  நிற்க  வைக்க,
நில்லாமல்   ஓடிப்போனவனைப்   பிடித்து
ஓரடி  அடித்தாள்   அவன்  தாய்.

சிறிது   நேரம்   அழுது   ஓய்ந்தவன்
மாடியின்  மேலேறி வானம்  பார்த்து
வேண்டிக்கொண்டான்,
" பட்டாம் பூச்சியைக்   காத்த   கடவுளே,
என்னையும்   இவர்களிடமிருந்து   காப்பாற்று.!"
_________________________________________________ 

 
  
   
       
   

Sunday, November 21, 2010

வாழ்வின் விளிம்பில் ஒரு சிறுகதை

வாழ்வின்  விளிம்பில்
---------------------------------
            மயக்கத்தில்  இருந்தான்  அவன். யாரோ  கூப்பிடுவதுபோல்  தோன்றியது. அரை  விழிப்புடன்   உணர   முயற்சித்தான். சற்றே  பிராண்டியது  போலவும், பூனை  கத்துவது  போலவும்  தோன்றியது. திடீரென்று  நன்றாக  விழித்துக்கொண்டு  விட்டான். அருகில்  யாரும்  இருக்கவில்லை. நிச்சலனமாக  இருந்தது. பூனை  கத்துவதுபோல்  ஓசை  அவனிடமிருந்துதான்  வந்து  கொண்டிருந்தது., மூச்சு  விட்டு  இழுக்கையில்...ஒ ..இழுப்புச்  சத்தமா..? இல்லை ...எங்குதான்  அடைப்போ...? அடக்கடவுளே...இது  மட்டும்   தான்   பாக்கி  இருந்தது. மனிதனுக்குத்தான்  என்னென்ன   குறைகள். மூச்சுவிடுவதே பிரயாசமாகப்  பட்டது. சிறிது  நேரத்தில்  நல்ல  விழிப்பு  வந்துவிட்டது.
            ரங்கசாமிக்கு  தன்னிலை  தெரிய , முழுப்   பிரமாணத்திலும்  விளங்க , கொஞ்ச நேரம்   அவகாசம்  தேவைப்பட்டது. சுற்றும்  முற்றும்   பார்த்தான். தான்  திடீரென்று    மயக்கமடைந்து   விழுந்ததும்,   தன்னை   யார  யாரோ   எடுக்க   முயற்சி   செய்ததும்   கொஞ்சம்   கொஞ்சமாக   நினைவுக்கு   வந்தது. இப்போது   ஏதோ   ஆஸ்பத்திரியில்   இருக்கிறோம்  என்ற  நினைவு  வந்ததும்  பளீரென்று  பய  உணர்ச்சி  உடல்  முழுவதும்   பரவ  ஆரம்பித்தது. தனக்கு  ஏதோ  பெரிதாக  நேர்ந்திருக்க  வேண்டும்; அதனால்தான்   இங்கிருக்கிறோம் ; மனைவியும்  மக்களும் எங்கே.? அவர்களுக்குத்  தெரியுமா.? இல்லை...தனக்கு  ஏதாவது  நேர்ந்தால், அவர்களுக்குத்  தெரியாமலேயே  நம்  உயிர்  பிரிந்து  விடுமோ.? அடக்கடவுளே... .பாரம்பரியம்   எனப்படுவது  இறப்பிலும்  இருக்க  முடியுமா..? என்ன .. இறப்பைப்பற்றிய  எண்ணமெல்லாம்  அவ்வளவு  சீக்கிரம்  வருகிறதே...அங்குமிங்கும்  நகர  முடியவில்லை. மிகச் சோர்வாக  இருந்தது. யாரையாவது  பார்க்க  வேண்டும்.... யாரையாவது  கேட்க  வேண்டும்....தனக்கு  என்னதான்   நேர்ந்துவிட்டது..? .   

           "டக், டக்," என்ற சீரான ஓசை  சற்று  தூரத்தில்  கேட்க,  தலையைத்  திருப்பி, "நர்ஸ்,  சிஸ்டர், "  என்று  உரக்கக்  கூப்பிடுகிறான். நர்ஸ்  அருகில்  வருவதற்குள்  வேதனை   தாங்காமல்  மயக்கமுற்று   சாய்கிறான். ஆக, அங்கு  டாக்டர்களும்   நர்சுகளும்  இன்னொரு   அவசர  சிகிச்சைக்குத  தயாரானார்கள்.


            வாழ்க்கையின்    நிகழ்ச்சி    நிரலாக   மாறி  வரும்  மாற்றங்களில்    அவனுக்குப்    பிடித்தது    ஏதுமில்லையானாலும்   அவனைப்   பிடித்தது    ஏமாற்றமே   என்று (கொஞ்சம்  பெருமையுடன்)  கூறிக்கொள்பவன்  இந்த  ரங்கசாமி. இருந்தாலும்  நடக்கும்   காரண  காரியங்களுக்கெல்லாம்  அவனவனே  பொறுப்பு  என்று  அடித்துப்  பேசும்  ரங்கசாமி , அவனைப்பிடிக்கும்   ஏமாற்றங்களையே  வெற்றி  கண்டு , முன்னுக்கு  வந்தவன்  தான்  என்று  பெருமை  அடித்துககொள்பவன். எதிர்பார்ப்புகள்  அதிகமாகி   வாய்ப்புகள்  குறையும்போது  கிடைக்கும்  பலனின்  மறு  பெயரே  ஏமாற்றம்  என்று  அதற்குப்  பொருள்  கூறி  அதன்  முழு  வீச்சை  அடக்குவான்.

            பெரும்பான்மையானவர்களிடம்  அவர்கள்  தற்போது  இருக்கும்  நிலைக்கு  ஒரு  பொறுப்புப்  படம் (Responsibility  Diagram)  வரையச் சொன்னால்  அவர்களில்  பலரும்  பல்வேறு  மனிதர்களையும்  சூழ்நிலைகளையும்  கூறுவார்கள். தலைவிதி, தாய், தந்தை,  ஆசான், உற்றம்,  சுற்றம், உடல்நலம், என்று  ஏதேதோ  தலைப்பின் கீழ்  அவர்களின்   தற்போதைய  நிலைக்குக்  காரணங்களையும்   காரண  கர்த்தாக்களையும்  பங்கு  போடுவார்கள். ஆனால்  அவர்களின்  பங்கு  10 முதல் 15 சதவீதம்  கூட  இருக்காது. ஏதோ  இவர்களின்  நிலைக்கு  இவர்கள்  பொறுப்பேயல்ல  என்பது  போலிருக்கும். ஆனால்   ரங்கசாமி  அடித்துக்  கூறுவான், அவனுடைய  நிலைக்கு  அவன்தான்,  அவன்  மட்டும்   தான்  பொறுப்பு  என்று. பலன்களுக்கு  யாரையும்  எதையும்  குறை கூறமாட்டான்.

           இந்த  ரங்கசாமியின்  அடிமனசில்  ஒரு  குறை  உண்டு. அவன்  தந்தையின்  இறப்புக்கு  அவனே  காரணமாகி  விட்டதாக  உணர்வதுண்டு. இவன்  கொள்கைப்படி  எந்த  ஒரு முடிவுக்கோ  பலனுக்கோ  அவரவர்தான்  பொறுப்பு  என்றாலும், தந்தையின்   முடிவில் இவன் பங்கு  பெரிதளவு  இருந்ததாக  எண்ணுவான். அவன் தந்தைக்கு  உடல்  நலம்  சரியில்லாமல்  அவரை  ஆஸ்பத்திரியில்  சேர்த்தபோது, ரங்கசாமி  ஹாஸ்டலில்  தங்கிப்  படித்துக்கொண்டிருந்தான்.  ஆஸ்பத்திரியிலிருந்து  ஒரு   கார்டு   இவன்   தந்தை
DI லிஸ்டில்  இருப்பதாகத்  தெரிவித்து  வந்தது. இவனோ  எந்த  DI  லிஸ்டைக் கண்டான் . ஆஸ்பத்திரியில்   பல லிஸ்டுகளில்  இவன்  தந்தையும்  ஒரு  லிஸ்டில்  இருக்கிறார்  என்று   வாளாவிருந்துவிட்டான்.  தந்தையோ   ஒரு  சில  நாட்களில்  இறந்து  விட்டார்.
"அப்பாவுக்கு  வாழ்வதற்கு  ஆசையில்லை. ஐந்தாறு   பிள்ளைகளைப்  பெற்றெடுத்தவர். அவர்களை  கரை  சேர்க்க  தடுமாறி  இருக்கிறார். இந்த  நிலையில்  உடல் நலமில்லாமல்  இருந்திருக்கிறது. பொறுப்புகளின்  சுமை  தாங்க  முடியவில்லை. விட்டால்  போதும   என்று  சாவை   வேண்டிக்கொண்டே  இறந்திருப்பார். நான்  வாழ்ந்தே  தீருவேன்   என்ற
மனவுறுதி ( Will Power ) இருந்திருந்தால்  சாவு  எப்படி  நெருங்கியிருக்கும் , என்று             பலவாறு  எண்ணி சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான்.  ஏனென்றால்  அவருடைய   பொறுப்புகளை  அவன்  சுமக்க  வேண்டியதாயிற்று. ஆனால்  பல  நாட்களுக்குப்பிறகு , அந்த  DI list  என்று  அறிவித்த  கார்டைப்  படித்தபோது, அதன்  முழு  அர்த்தத்தையும்  உணர்ந்தபோது,  அவன்  அழுத  அழுகைக்கும்  அடைந்த  வேதனைக்கும்   எல்லையே  இருக்கவில்லை.

         " கொஞ்சம்  படித்திருந்தும் , பாமரனாகிவிட்ட  பாவி  நான், கவனமாக  இருந்திருந்தால்  என் தந்தை  இறந்திருக்க  மாட்டாரோ....வேறெங்காவது   வைத்தியம்   பார்த்திருந்தால்  பிழைத்திருப்பாரோ ..மடமையினாலும்  கவனக்  குறைவாலும் அவரைகொன்றுவிட்ட   பாவி   நான் , " என்று  எண்ணியெண்ணிக  குமுறியிருக்கிறான்.  

          இளவயதில்  பெரிய   பொறுப்புகளை -- ஐந்தாறு  பேர்  கொண்ட  குடும்பத்தை  நடத்திச்  செல்வது  என்ன  சும்மாவா..?ஏற்க  நேர்ந்த  ரங்கசாமி  அதற்கு  யாரையும்   குறை  கூறினதில்லை.  தலைவிதி  என்று நொந்து  கொண்டதுமில்லை.

        "DI  List ' ல்  உள்ளவர்  என்றால்  நோயின்  அபாய  நிலையில்  இருப்பவர்  "Dangerously  ill "என்று  நான்  அறிந்திராததால்  என் தந்தை  இறக்க  வேண்டியதாயிற்று. ஆகவே  அதற்கு  நானே  காரணம். அவர்  இறந்ததால்  அவர்  பொறுப்பு  என்  பொறுப்பாகிறது. என்று  தானே  பொறுப்பேற்றான்.

          ரங்கசாமிக்கு  மனஉறுதி  கொடுப்பவர்கள்  நிறைய பேர்  உண்டு. அதில்  முதன்மை  யானவர்   பாரதி.,விவேகானந்தர்  முதலானோர்.
         "தேடிச் சோறு   நிதம்   தின்று --பல
           சின்னஞ்ச்சிறு   கதைகள்  பேசி --மனம்
           வாடித்  துன்ப  மிக  வுழன்று --பிறர்
           வாடப்  பல  செயல்கள்  செய்து --நரை
           கூடிக்  கிழப்  பருவமெய்தி --கொடுங்
           கூற்றுக்கிரை   எனப்பின்   மாயும் --பல
          வேடிக்கை   மனிதரைப்  போல் -- நான்
           வீழ்வேனென்று   நினைத்தாயோ..? "
என்று  பாரதியின்  பாடலை  அடிக்கடிப்  பாடி  மன   வலிமை   ஏற்றிககொள்வான். தான்   வாழ்வதே  எதையோ  சாதிக்கத்தான்  என்று  தனக்குத்தானே  உரமேற்றிககொள்வான் .
"  உன் குறி  எட்டும்  வரை  தளராதே. விழி, ஏழு, நட " என்றெல்லாம்  தனக்குத்தானே   உற்சாகமூட்டிக்கொள்வான், "மனசாஹ் , வாசாஹ்,கர்மணாஹ், நல்லதை  நினை,  நல்லதைக்  கூறு, நல்லதைச்செய்.  ஏனென்றால்  எண்ணங்களால்  ஆகாதது ஏதுமில்லை.  எண்ணமே   அனைத்துக்கும்  மூலமாகும்.;இயற்கையே  எண்ணத்தில்  அடங்கும் ;எண்ணமே  செயற்கைக்  கருவிகளனைத்தினோடு  இயற்கை  கருவிகளை  எல்லாம்  இயக்கும்  சக்தி --என்றெல்லாம்  எல்லோருக்கும்  எடுத்துக்கூறி  மற்றவர்  இவனைக்  கண்டால்  காத  தூரம்  ஓடுமளவிற்கு  நல்ல  பெயர்  வாங்கி  இருக்கிறான்.

          இந்த   ரங்கசாமிதான்   ஆஸ்பத்திரியில்   சேர்க்கப்பட்டு   டாக்டர்களுக்கும்   நர்சுகளுக்கும்   சவாலாக   வாழ்வா   சாவா   என்ற  போராட்ட  நிலையில்  இருக்கிறான்.  ரங்கசாமி  பிழைப்பானா ,  மாட்டானா..?  பிழைத்து   எழுந்தால்  அதற்கு   அவன்   யாரைப்   பொறுப்பாக்குவான் ,? இறந்து  விட்டால்.....ரங்கசாமிக்கு  ஆராயவே  சந்தர்ப்பம்  இருக்காது.


          ரங்கசாமிக்கு சாவைக்கண்டு  பயம்  கிடையாது. சாவது  என்பது  என்ன..?நிரந்தரத     தூக்கம்.....அவ்வளவுதானே . ஆனால், ஆனால், சாவின்  முழு  வீச்சையும்  அதை  எதிர்  கொள்பவன் எப்படித்  தாங்குகிறான். ..யாருக்குத்  தெரியும்.? செத்தவர்  அனுபவங்களைச்  சொல்ல  முடியுமா..? ஆனால்  சாவு   நெருங்கும்போது  அதன்  விளைவுகளை  எதிர்  நோக்க  முடியாமல்  பயப்பிராந்தியால்  பாதிக்கப்பட்ட  ஒரு நண்பனின்  சாவைக் கண்கூடப்   பார்த்திருக்கிறான்.  அதிலிருந்து  சாவதை  எவரும்  விரும்புவதில்லை  என்று  நன்றாக  உணர்ந்தவன்தான். சாகும்  நிலையில்  நண்பனுக்கு  ஆத்ம  திருப்தியும் ,  மனோபலமும்  சுகசாவும்  கிடைக்க  வேண்டி பிரார்த்தனை  செய்து  தந்த விபூதியை  அவன்  நெற்றியில்  இட்டான். அடித்துச்  செல்லும்  வெள்ளத்தில்  கிடைத்த  துரும்பாக  எண்ணி  நாத்திகனான  நண்பனும்  திருநூறு  அணிய  சம்மதிக்கிறான். .சாவு  என்ன  திருநூறுக்குப   பயப்படுமா..? எந்த ஒரு  முன்னேற்றமும்  ஏற்படாத  நிலையில்  நண்பன்  இவனிடம்  சாவதற்கு  முன்  சாடியது  இவனை  என்றும்  சங்கடப்படுத்தும் ." உன்  விபூதிப்  பட்டையும்  நீயும் ..நீயே  வெச்சுக்கோ ...போ..  .." சாவை நேரில்  பார்த்தாகி  விட்டது. இன்னும்  அனுபவிக்கத்தான்  இல்லை.   .   

          மனித  வாழ்க்கையே  விசித்திரமானது.  அடுத்த  வேளை   சோற்றுக்கில்லாமல் , வியாதியால்   நலிவுற்று ,யாரும்  உதவ   இல்லாமல்   அனாதையாய்   ஆறுதலற்றுக்   கிடக்கும்   ஜீவன்களும்   வாழத்தான்   ஆசைப்படுகின்றன. ...இல்லை..  சாவைக்கண்டு    பயப்படுகின்றன. இந்த   பயம்தான் காரணமோ  என்னவோ ...வாழ்க்கை  முடிவதில்லை.  யாரும்  முடிய  விடுவதில்லை. தன  வாரிசில்  தன்னைக்  காண  விழைகிறது. உலகம்  ஒருவர்  இருவராவது  பல்கிப் பெருகிப்  பலராவதுமான   நிலை  முடிவதில்லை. வெட்ட  வெட்ட  துளிர்  விடுவதும் , வெள்ளம் ஒரே  குறியை  நோக்கி   ஓடிக்கொண்டிருப்பதும்   இயற்கையின்   நியதியல்லவா. ...ஆனால்  இயற்கை  நிகழ்ச்சிகள்  சிந்தித்து  நடப்பதில்லையே .  மனிதன்தானே   சிந்திக்கிறான்.  சாவு  உண்டு   என்று  தெரிந்தும்  அழியாமைக்கு  உத்தரவாதம்  உள்ளது  போல்   அல்லவா  அவனுடைய   செய்கைகள்   இருக்கின்றன.

          ரங்கசாமி  ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்ட  செய்தி  அறிந்து  ஓடி  வந்தனர்  அவனுடைய  மனைவியும்  மக்களும்  உற்றவரும்  சுற்றவரும். " அவருக்கு  இரண்டு  முறை  மாசிவ்  ஹார்ட்  அட்டாக்  ஆகியிருக்கிறது.  யாரும்  பார்க்க  முடியாது. தொந்தரவு  செய்யக்கூடாது." --- டாக்டர்  சொல்லிவிட்டார். ..

          ஒருவன்  உயிருடன்  பிழைக்கவோ , நலமாகத்  திரும்பவோ,  பிரார்த்தனை  உதவும் . அதன்  சக்தி  எல்லையற்றது., என்ற   நம்பிக்கையில்    அனைவரும்   பிரார்த்தனை   செய்கின்றனர்.   பிரார்த்தனையில்    சுயநலம்    உண்டா.?   இருக்கலாம். இல்லாமலும்   இருக்கலாம்.  ரங்கசாமிதான்   அவனுடைய    கடமைகளை    நிறைவேற்றி   விட்டானே.   அவன்   இருநதால்  என்ன,  போனால்  என்ன.? இருக்கவேண்டும்  என்பதற்குப  பிரத்தியேக  காரணம்  உண்டா  என்ன.? காலையில்  மலர்ந்து  மாலையில்  வாட்டும்  மலர்  போன்ற   நிலையாத  வாழ்க்கையில்  ஒவ்வொருவரும்  போய்த்தானே  தீரவேண்டும் . போகும்  பாதை  கரடு  முரடாக  இல்லாமல், போகும்  உயிர்  "பொசுக்"  என்று  போனால்  பிழைத்துக்கொள்வார். ! அதாவது  சாவின் பயம்  தெரியாமல்  சாக  வேண்டும் . அவ்வளவுதான்.

           ரங்கசாமிக்கு  நினைவு  திரும்புகிறது.  கண்ணாடி  சன்னல்  வழியே  மனைவியும்  மக்களும்  கூடி  நிற்பது  தெரிகிறது. " என்ன  ஆயிற்று  எனக்கு.?" பேசவோ  நகரவோ  முடியாவிட்டாலும்  எண்ணத்தில்  தெளிவு  இருந்தது. " நெஞ்சு  வலி  வந்ததே...ஒ .ஹார்ட்  அட்டாகோ--அதுதான்  இந்த  வயர்களும் , குழல்களும், ஆக்சிஜன்  மாச்குமா.? நான்  செத்துப்போயவிடுவேனோ.?"

          எந்த  எண்ணம்  வரக்கூடாதோ  அந்த  எண்ணம்தானே  வரும்  அதுதான்  மனித  மனசு. ரங்கசாமி ஒரு  சில  நொடிகளில்  தன  வாழ்க்கையின்  மொத்த அத்தியாயங்களையும்  ஒரு  முறை  புரட்டிப்  பார்த்து  விட்டான். மனம்  எனும்  கணினி  எண்ணத்தின்  வேகத்துக்கு  ஈடு  கொடுத்துவிட்டது. சில  பல  முக்கிய  நிகழ்ச்சிகளை  மனதில்  மீண்டும்  கொண்டு  வந்து  சற்றே  அசை  போட்டான்.

          தந்தை  செய்த  பிழையை  தனயன்  செய்திருக்கவில்லை. ஆசைக்கொன்றும்    ஆஸ்திக்கு  ஒன்றும்  மட்டும்தான்.  அவர்களும்   இப்போது  தானாகவே  வேரூன்றி  நிற்கிறார்கள். அன்பு  மனைவி ,கொஞ்சம்   தவித்தாலும்  சமாளித்துக்கொள்வாள். எல்லோரும்  பக்குவமாக  ஏற்றுக்கொள்வார்கள்.--" அவனுடைய  பொறுப்புகளை  முடித்து  விட்டான். யாருக்கும்  கஷ்டம்  கொடுக்காமல்  மகராசனாய்ப் போய்விட்டான்."

          அது  சரி, ரங்கசாமிக்குத்   தான்   தயாரா   என்று   தெரிய வில்லை. உடல்   சோர்வு  கண்களை  மயக்கியது. உள்ளம்   விழித்துக்கொண்டுதான்   இருக்கிறது. சில   காட்சிகள்   கண் முன்னே   விரிகின்றன.  கனவா   நனவா   என்று   தெரியவில்லை. ரங்கசாமி   அனாதையாக  ஒரு   மலை   அடிவாரத்தில்   கிடக்கிறான். எழ   முடியவில்லை. தாகமோ  தாகம்.  தொண்டை   வறண்டு   போகிறது. தண்ணீர்   தண்ணீர்   என்று   உதடசைகிறது.   சாரி  சாரியாக  மக்கள்  மலை   ஏறிக்  கொண்டு  இருக்கிறார்கள்.ரங்கசாமியை  யாரும்  கண்டுகொள்வதே  இல்லை. தாகத்திற்கு  நீர்  கிடைக்காவிட்டால், ஏற்படும்  அவஸ்தையைப  புரிந்து  கொள்பவர்  மிகக் குறைவே. தாகம்  எடுத்தவுடன்  சற்றே  நீர்  கிடைத்து  விடுகிறதே.  நாக்கு  வறண்டு,  மேலண்ணத்தில்  ஒட்டி, மனம்  நொந்து, பேச  முடியாமல்  " ஐயோ , இனிமேல்  தாங்க  முடியாது", என்று எண்ணி விட்டால்  முடியுமா   தாங்கித்தானக வேண்டும...கஷ்டப்படு......வேண்டும்...யார்  யாருக்கு  நீ  என்னவெல்லாம்   செய்தாயோ ......பலனை  அனுபவி.----"ஆற்றாமையைப்  போக்கிக் கொள்ள  காரண  காரியங்களைத்  தேடுவதுதான்  மனிதனின்  இயல்பு.     .  

          எல்லோர்  கையிலும்  நீர்  இருக்கிறதே. கொஞ்சம்  தரக்கூடாதா...தொண்டை  நனைந்தால்  போதுமே. சற்று  தூரத்தில்  வருவது  யார்.? யாரது..அப்பாவா...? இவ்வளவு  வயதாகிவிட்டதா  இவருக்கு....நமக்கே  இவ்வளவு  வயசாகி  இருக்கும்போது   அப்பா  இன்னும்  வயோதிகமாகி   தெரிவதில்  ஆச்சரியம்  இல்லையே.. அவர்  கையில்  தண்ணீர்  குவளை  இருக்கிறது. இவர்   இவர்   தாகத்துக்கு  நீர்  தருவார். என்ன  இருந்தாலும்   அப்பா  அல்லவா...

           " அப்பா,  அப்பா ..."  வாயசைகிறது .சத்தம்  எழவில்லையே.. கேட்காமல்  போய  விடுவாரோ..?முழு  சக்தியையும்  உபயோகித்துத  தன  கையையும்  காலையும்  ஆட்டுகிறான். அவருக்கு  இவனை  அடையாளம்  தெரியவில்லை.  சற்றே  நின்று  பார்க்கிறார்.  "ஐயோ   பாவம்  சிறிது  தண்ணீர்  கொடுப்போம்.' என்று அவன்  வாயில்  நீர்  ஊற்றுகிறார். நீரா அது.. அமிர்தம்  ! உயிர்  கொடுக்கும்  நன்னீர்.

          " அப்பா , நாக்கு  வறட்சியைத்  தாங்க  முடியவில்லை. தண்ணீர்  தந்து   காப்பாற்றினீர்கள் ." அவனை  இப்போது  உற்று  நோக்குகிறார் . அடையாளம்  தெரியத்  தெரிய  அவர்  கண்களில்  ஒரு  வெறுப்பு  நன்றாக  விரிகிறது. " என்னைக்  கொன்றவன்  அல்லவா   நீ..? தெரிந்திருந்தால்  தண்ணீர்  கொடுத்திருக்க  மாட்டேன் " என்று  தீக்கங்குகளை   உமிழ்ந்துவிட்டு   விடு விடுவேனச்  சென்று  விடுகிறார்.


           ரங்கசாமி  திடீரென  விழித்துக்  கொள்கிறான். அப்பாவும்  இல்லை , யாரும்  இல்லை .நர்ஸ்தான்  அவனுக்குப்  பஞ்சில்  சிறிது  நீரை  நனைத்து  அவன்  வாயில்   வைத்துக்  கொண்டிருந்தாள்
 
          அப்பா   வாழப் பிரியப்படவில்லை.. தீவிரமாக  வாழ  நினைத்திருந்தால்  அவரையும் மீறி   சாவு  எப்படி  வரும்..? எனது  அறியாமை  காரணமாக  அவர்  இறந்திருக்க  முடியாது....என்றெல்லாம்  தன்னை  சமாதானப்  படுத்திக் கொண்ட  ரங்கசாமிக்கு  குற்ற  உணர்ச்சிகளின்  தீவிரத்  தாக்கம்  குறையவில்லை. " அப்பாவுக்கு  வாழ்க்கையில்  செய்ய  வேண்டிய  கடமைகள்  நிறையவே   மீதமிருந்தது...மலை போலிருந்தது. செய்வதற்குச  சக்தியில்லை. தெம்பில்லை.  கோழை  போல்  பயந்திருக்கிறார். பொதிகளைச்  சுமக்க  புத்திரன்  இருக்கிறான்  என்ற  எண்ணத்தில்  சாவை  விரும்பி  அழைத்திருக்கிறார்.. போராட வில்லை   மனசிருக்கவில்லை. "

            இந்த  எண்ணம் சுத்தத்தவறு . உடல் நலமின்மை  அவராக  வருத்திக்  கொண்டது    அல்ல. வாழ்வின்  கடமைக்குப்   பயப்படுபவராக   இருந்திருந்தால்  தற்கொலை  முயற்சிக்கல்லவா   போயிருப்பார்.. இல்லை  எங்காவது  ஓடிப்போயிருக்க   வேண்டும்.
உடல்  நலம்  சரியில்லாதபோது  மனோபலமும்  குறைந்திருக்கிறது.. பட்ட  கஷ்டங்கள்  போதும், விடுதலை  கிடைக்காதா, என்று  உள்மனம்  ஏங்கி  இருக்கிறது.. எண்ணப்படியே
உடலும்  ஒத்துழைத்திருக்கிறது. கடமைகளில்  இருந்து  தப்பி ஓட  ஒரு வடிகாலாக  சாவை  வரவேற்றிருக்கிறார். He was an escapist  அவருடைய  சாவுக்கு  நான்  எப்படி  முழுப்  பொறுப்பாக  முடியும். வேண்டுமானால்  என்னை  அறியாமலேயே  அவருக்கு  நான்   உதவி  இருக்கலாம். அதற்குத்தான்  பிராயச்சித்தமாக  அவருடைய  கடமைகளை  நான்  கட்டிக்  காத்தேனே.  அவருடைய  சாவுக்கு  நான்  எப்படி  காரணமாக  முடியும்.

           " ரங்கசாமி,  அவர்   நிலையில்   நீ   இருக்கிறாய்  இப்போது. . நீ   பிழைக்க  வேண்டும்   என்று   உறுதியாய்  இரேன். "  என்று  அவனது  மனம்   அவனை  உசுப்பியது .
அவரை   விடு.  உன்னிலை   என்ன..? நீ  உன்  கடமைகளை  முடித்து  விட்டாய்  அல்லவா. நீ  ஏன்  சாக  வேண்டும் . வாழ்க்கையை   அனுபவியேன். சாவை  விரட்டு.  எமனை  விரட்டு. காலனைக்  கூப்பிடு. " காலா.. உனை   நான்  சிறு  புல்லென  மதிக்கிறேன் . என்றன்   காலருகே   வாடா.. . சற்றே  உனை  மிதிக்கிறேன்  என்  காலால் "


           ரங்கசாமி  சற்று  சிந்தித்துப்பார்.. உன்  தந்தைக்கு  கடமைகள்  இருந்திருக்கின்றன   முடிந்திருக்கவில்லை . அவர்  வாழ்ந்திருக்க  வேண்டும். உனக்கென்ன..?  நீ  வந்த  வேலைதான்   முடிந்து  விட்டதே. நீ  இருப்பதே  இந்த  பூமிக்கும்  மற்றவருக்கும்  பாரம்   அல்லவா,  உன்  உபயோகம்  தீர்ந்து  விட்டது. நீ  சாவதால்  ஒரு  குறையுமில்லை.. ஏன் ..
சாக  பயமாய்  இருக்கிறதா.?

          பயமா.. நிச்சயமாகத்  தெரியவில்லை.  இறந்து போனால்  மறுபடியும்  என் மனைவி  மக்கள்  உற்றார்  சுற்றார்  இவர்களை  எல்லாம்  பார்க்க  முடியாதே  அவர்கள்   அன்பினைக்  கொடுத்து  அன்பினைப்  பெற  முடியாதே....அட ..நீ  இருநதால்  அல்லவா   கொடுக்கவோ  பெறவோ  முடியும் ... நீயே  இல்லாவிட்டால்  என்னாகும் ..இருந்து  என்ன சாதிக்கப்  போகிறாய்.?

         நான்  இல்லாவிட்டால்  என்னாகும்.? நானே  என்  நினைவாக  மாறி  விடுவேன்.  அதுவும்  சில  நாட்களுக்குத்தான்.. இருநதால்  என்ன   சாதிப்பேன் .? யாருக்குத்  தெரியும்   ஒரு வேளை  மற்றவருக்குப்  பாரமாக  இருப்பேனோ  என்னவோ.. அப்படியானால்  பிற்காலத்தில்  நானோ  என்  நினைவுகளோ  சுகமாக  இருக்காது.

         என்னதான்  எண்ணமாக  வருகிறது..? வாழ்வா  இல்லை  சாவா.? நான்  வாழ  வேண்டும்  என்றால்  சரியான  காரணம்  இருக்க  வேண்டும்  அல்லவா. நான்  போய  விடுவேன்  என்று  எண்ணி, ரயிலடிக்கு  வண்டியேற்ற  வந்திருப்பவர்கள்  போலல்லவா   தெரிகிறார்கள்  இங்கு  கூடியுள்ளவர்கள் .

         " ரயில்  புறப்பட  இன்னும்  இரண்டு  நிமிஷங்கள்  தானிருக்கிறது."

          ரங்கசாமியின்  நேரம்  முடிந்து  விட்டதா.? அவன்  உயிருடன்  வீட்டுக்குத்  திரும்புவானா.  அவன்  நினைப்பதுபோல்  எண்ணத்தின்  சக்தியால்  சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு  சக்தி  கொடுக்க  கடமைச்  சுமைகள்  இல்லாததால்  வலு     இழந்து   மடிவானா...

         அவன்  ஏன்  சாக வேண்டும்..? ஏன்  சாகக்கூடாது.? கேள்விகளுக்கு  விடை  கிடைக்குமா.? கிடைக்காதே.! கிடைக்குமானால்  புத்தன்  வெற்றி  கண்டதாகாதா. ? வெற்றி  கண்டிருந்தால்..... எல்லாம்  வீண்  கேள்விகள்...

         ஒன்று  மட்டும்  புரிந்து  கொள்ள  வேண்டும். வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் . தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான். மரண  பயம்  இல்லாமல்  சாக  வேண்டும் . ரங்கசாமியின்  கொடுப்பினை  என்ன..?    
 ---------------------------------------------------------------------------


  .     
 
      .
. .      

          .
 

..
 


  
 


..
  

       

 .
 
 

  .   
 
         .   .    .

Saturday, November 20, 2010

இலவசமாக வருவதே தரம்

தரம்   முற்றிலும்   இலவசம்

100%  பரிசீலனை
------------------------
கீழே  கொடுக்கப்பட்டுள்ள  பத்தியைப்  படிக்கும்போதே  அதில்  வரும்  f   என்ற எழுத்தை  எண்ணிக்கொள்ளுங்கள் .இரண்டாம்  முறை  எண்ணாதீர்கள். அது  200%  பரிசீலனை ஆகும்.   100%  ஆகாது.     

The  necessity  of  training  farm  hands  for  first class  farms  in  the  fatherly  handling  of  farm  livestock  is
foremost  in  the  minds  of  farm  owners. Since  the  forefathers  of  the  farm  owners  trained  the  farm  hands for  first  class  farms  in  the  fatherly  handling  of   farm  livestock,  the  farm  owners  feel  they  should  carry  on  with  the  family  tradition  of  training  farm  hands  of  first  class  farms  in  the  fatherly  handling of  farm  livestock  because  they  believe   it  is  the  basis  of  good  fundamental  farm  management.

ஒரு  பொருளை  உற்பத்தி  செய்பவர்  அது  தரமானதாக   இருக்க  வேண்டும்  என்பதற்கு  என்னென்ன   வகைகளில்   முயற்சி   எடுத்துக்கொள்கிறார்  (அல்லது )எடுத்துக்கொள்ள   வேண்டும்  என்று  பார்ப்போம். இது  உற்பத்தி  செய்யப்படும்   எல்லா  பொருள்களுக்கும்   பொருந்தும் .

 1)  வாடிக்கையாளரின்   தேவையைப்   புரிந்து   கொள்ளல்.
 2)  Design   என்று   சொல்லப்படும்   வடிவமைப்பு.
 3)  உற்பத்தி  செய்யப்படவேண்டிய   பொருளுக்கேற்ற   மூலப்பொருள். (Raw material)
 4)  வடிவமைப்பிற்கு   ஏற்றபடி  உருமாற்றம்  செய்யத்  தேவையான   மெஷின்                   
 5) வடிவ  மாற்றம்  செய்ய   வழிமுறைகள் (Operation  Process)
 6) மூலப்பொருளை  வடிவ  மாற்றம்  செய்ய  நல்ல  வேலை  தெரிந்த  பணியாளர்கள்
 7) உற்பத்தியான  பொருட்களின்  தரம் பற்றிக்  கணிக்க  உதவும்  சோதனை  நிலையம்
 8) உற்பத்தி  செய்யப்படும்  பொருட்களை  சீரான  முறையில்  பாக்  செய்யும்  வழிமுறைகளும்  தொழிலாளிகளும் .
 9) உற்பத்தியான  பொருட்கள்  பாதுகாப்பான  முறையில்  டிரான்ஸ்போர்ட்  செய்தல்.


இப்படி  வாடிக்கையாளரின்  எதிர்பார்ப்புக்கு  ஏற்ற  முறையில்  செயல்  படும்போது, தரமானதாக   இருப்பதற்காக  செய்யும் செலவு , அப்பொருளை  பரிசீலனை  செய்ய எடுத்துக்கொள்ளும  நேரத்திற்கானது மட்டுமே.   செய்யப்படும்  வழி முறையிலேயே   தரத்தை உட்புகுத்தி விட்டால் தரத்துக்காக எந்த  விலையும் செலவும் இல்லை. .                                               
பிறகு  தரத்தின்  விலை  என்பதுதான்  என்ன.?
நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லாமலிருக்கும்போது அதை  சரி  செய்ய  அல்லது  அந்தப்  பொருளையே   மாற்றத்  தேவையான  செலவே  தரத்தின்  விலையாகும். எந்த  மறு  வேலையும்,  அல்லது மாற்று  வேலையும் தேவைப்படாத  விதத்தில்  பொருள்   உற்பத்தி செய்யப்பட்டால்  தரத்திற்கென்று தனி  விலை  கிடையாது. இது  உற்பத்தி   செய்பவருக்கும் , வாடிக்கையாளருக்கும்  கூடவே  பொருந்தும்.

சில உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நூறு  சதவீதம்  பரிசீலனை  செய்து தரம் பிரித்து நல்ல பொருட்களையே   தேர்ந்தெடுத்து  அனுப்புவதாக நம்புகிறார்கள். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட  சிறு  சோதனை  ஒவ்வொருவருக்கும்   வெவ்வேறு  விடையை  கொடுத்திருக்கும் ..இந்த சோதனை  மூலம்  நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம் பிரிப்பதென்பது உத்தரவாதமானது   அல்ல  என்று அறியலாம். பரிசீலனையில் பிரிக்க வேண்டிய எழுத்து தரமற்றது  என்று
வைத்துக்கொள்வோம்.

தரத்துக்கென்று தனி செலவோ விலையோ  கிடையாது .எதிர்பார்ப்புகளும்  அதை  நிறைவேற்ற  வேண்டி செய்யப்படும் செலவே ஒரு பொருளின்  விலையை  நிர்ணயிக்கும். தரம் என்பதற்கு  தனி செலவு  கிடையாது. அது  முற்றிலும்  இலவசம்.
------------------------------------------------------------------------------


 
     .

Saturday, November 13, 2010

நான் நாத்திகனா ஆத்திகனா..?

 நான் ஆத்திகனா, நாத்திகனா. ஒரு ஆய்வு.
(இங்கு நான் என்பது என்னைப்போல் பலரையும் குறிக்கும் என்று கொள்க.)

இந்தக்  கேள்விக்குப்  பதில்  தேடும்  முன்பு  ஆத்திகன்  என்பவன்  யார்  நாத்திகன்  என்பவன் யார் என்று தெரியவேண்டும். ஆண்டவன்  அல்லது  கடவுள்  இருக்கிறான்  என்று நம்புபவனை  ஆத்திகன் என்றும் ,கடவுள் இல்லை  என்று நம்புபவனை நாத்திகன் என்றும் சாதாரணமாகக்  கூறுகிறோம். ஆக, இரு சாராருக்கும்  அவர்கள்  கொண்டுள்ள எண்ணம் நம்பிக்கையின்பால்  அமைந்ததே. நம்பிக்கை  என்பது உணர்வு  பூர்வமானது. இதில் எது  சரி  எது தவறு  என்ற  பேச்சுக்கே  இடமில்லை.

ஆண்டவன் இருக்கிறான், எல்லாம் அவன் திட்டமிட்டபடிதான் இயங்குகிறது, என்று நம்புகின்றவர்களை ஆத்திகர்கள் என்று சொல்கிறோம். எவரும் எதையும் திட்டமிட்டு
இயக்கவில்லை, ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது. ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும்  உணருகிறார்கள்.

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது. கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறை, கற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.

ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும், பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

இந்த நம்பிக்கைகளினால்   உந்தப்பட்டு, வாழ்க்கை   நடத்தும்  நாம் ஆத்திகர்களா.? ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன.?கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ஆக, இந்த புற வழிபாடு  செய்பவர்கள்  எல்லோரும்  ஆத்திகர்களா.?

காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால், செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  ஆத்திகனா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.?

நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மகள் தந்தையைப் பார்த்துக்  கேட்கும்  கேள்வி.  
" அப்பா,  நீங்கள் நல்லவரா ,கெட்டவரா" தந்தை  கூறுவார், " தெரியவில்லையே, அம்மா", என்று. நானும்  கேள்வி கேட்டு விட்டேன், இப்போது சொல்லுங்கள்,  நான்  ஆத்திகனா,  நாத்திகனா. .?
       -----------------------------------------------------------------------------------------------------.

  

தரம் எனப்படுவது யாதெனில்.....

QUALITY  அல்லது  தரம்   ஒரு  அலசல்
--------------------------------------------------------
தினசரி  வாழ்வில்  சில விஷயங்களைப் பற்றி நிறையவே பேசுகிறோம்; கேள்விப்படுகிறோம். ஆனால் அந்த விஷயம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட  ஒரு விஷயம் குவாலிடி  என்று  சொல்லப்படும்  தரம். உற்பத்தியாளர்களிடம்  தரம் பற்றிக்  கேட்டால்  கொடுக்கப்பட்டுள்ள   வரைமுறைக்குள்  இருப்பதே (Specification  limits ) தரம் என்பார்கள். வெகுஜனங்களிடம்  இது பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு  எந்த  பதிலும்  சரிவரக்  கிடைக்காது. பெரும்பாலோர்  தரம் பற்றிகருத்துக்  கூறுவது  ஏதோ  ஒரு யூகத்தின்  அடிப்படையிலேதான் .பலரும்  விளம்பரத்தின்  அடிப்படையிலேயே  தரம் பற்றிய எண்ணங்களைக்  கொள்கிறார்கள் .  

  ஒரு  பொருளோ சேவையோ   தரமாகஇருக்கிறதா  யில்லையா  என்பதை  நிர்ணயம் செய்யும் நமக்கு அந்தப் பொருளைப்  பற்றிய விஷய  ஞானமோ  சேயல்திறனோ  முழுவதுமாக இருப்பதில்லை. அதை  ஓரளவு  விளக்கவே  இந்தக்  கட்டுரை.

தரம் அல்லது குவாலிடி என்றால் என்ன.? உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன்  அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால் அது  தரமாக உள்ளது என்று   கொள்ளலாமா.? தேவையைப்  பூர்த்தி செய்வதே  தரம் என்றால், அரிசி  உளுந்து    அரைத்து ஆவியில்  எடுக்கும் இட்லிசெய்யும் பணிஒன்றுதான்.  பசியாற்றும்,.  பின்  எதற்காக  அதன்  விலை வெவ்வேறு   இடங்களில்  வித்தியாசமாய் இருக்கிறது.? கையேந்திபவனில்  கிடைப்பதும் இட்லிதான் , ஸ்டார் ஹோட்டலில்  கிடைப்பதும் இட்லிதான். அதே அரிசி மாவு உளுந்து  மாவு, ஆவியில் வேக வைத்ததுதான். இட்லி உண்பவருக்கு  பசியாற்றல் , வயிறு நிறைத்தல்  மட்டுமின்றி  வேறு  எதிர்பார்ப்புகளும்  உண்டு.

ஒரு தொலைக்காட்சிப் பெட்டி  வாங்குகிறோம். அதில் செய்திகள், சினிமா, பாடல்கள்  பார்க்க  முடிகிறது. நம்மில்  பெரும்பாலோருக்கு  டி வி  எப்படி செய்யப்படுகிறது என்றோ எப்படி வேலை  செய்கிறது என்றோ தெரியாது. இருந்தாலும்  அந்தப் பெட்டியைவிட  இது நல்லது, இது மோசம், என்று எதை  வைத்துக் கூறுகிறோம். தொலைக்காட்சிப்   பெட்டியில்  படம்  பார்ப்பதைத்  தவிர  நமக்கு வேறு எதிர்பார்ப்புகளும்   உண்டு. இதே  போல்  ஒவ்வொரு  பொருளுக்கும்  அது செய்யும் பணியை விட, உபயோகிப்பவருக்கு  வேறு  எதிர்பார்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.

தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும்.It should be fit for use. ஆனால் அது மாத்திரம்  போதாது. கையேந்தி பவனில், நின்று   கொண்டு, இலையோ தட்டோ, கையில்  பிடித்துக்கொண்டு  உண்ண  வேண்டும். அது   பசியைப்  போக்கும் பணியைச் செய்துவிடும். அந்தத் தேவை மட்டும் போதுமென்று  வருபவர்கள் கையேந்திபவனில்  உண்பார்கள். அதற்கு  அவர்கள்  கொடுக்கும் விலையும் குறைவு. அதே இட்லி, ஸ்டார் ஹோட்டல்களில் , குளிர்சாதன  அறையில் நல்ல  இருக்கைகளில்  அமர்ந்தவுடன் , உங்களைப்  பெரிய  மனிதராகப்  பாவித்து,  உங்களுக்குச்  சேவை  செய்ய, சீருடை  அணிந்த வெயிட்டர்கள், மெனு  கார்டை  உங்களிடம்  கொடுத்து, கையில் பேனா  புத்தகத்துடன்  உங்கள்  ஆர்டரைப்  பதிவு  செய்து , சிறந்த  தட்டு , ஸ்பூன் , போர்க் , போன்ற  கருவிகளுடன்  இட்லியை  அதற்கு   துணையாகச  சட்டினி  மிளகாய்ப்பொடி, இத்யாதி  வகைகளையும்  வைக்கும்போது , உங்களைப்பற்றிய  உங்கள்  கணிப்பு , உங்கள் மதிப்பு  உயருகிறது . இங்கு  இட்லி பசி  போக்கும் பணியுடன்  உங்கள்  மதிப்பை  உயர்த்தும்  பணியையும்  கூடவே  செய்கிறது.அதற்கு  ஏற்றாற்போல்  நீங்கள் செலவு செய்யும்  தொகையும்  அதிகம். அப்படி  செலவு  செய்யும் மக்களும்  நிறையவே இருக்கிறார்கள். கையேந்திபவன்  இட்லிக்கும்  ஸ்டார்  ஹோட்டல்  இட்லிக்கும் இட்லியைப்  பொறுத்தவரை  பெரிய வித்தியாசங்கள்துவும் இல்லை. கையேந்திபவனில் இட்லி  உண்பவரின்  தேவையும்  ஸ்டார் ஹோட்டலில்  இட்லி உண்பவரின் தேவையும் வித்தியாசப்படுகின்றன. ஆகவே, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதே தரத்தின்  முக்கிய நோக்கம். தேவைக்குத்  தக்கபடி  விலையும் வித்தியாசப்படும்.

வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை  பூர்த்தி செய்வதே   தரம்  என்று கொள்ளலாமா. ?எதிர்பார்ப்புகள்தான்  என்னவாக  இருக்கலாம்.? முக்கியமாக  நிர்ணயிக்கப்பட்ட  பணி நிறைவேற  வேண்டும். அதன் பிறகு  அதன் தோற்றம் , அது கொடுக்கப்படும்  விதம்    சேவை , அதன் விலை, (appearance, packing, service, reliability, price,) நம்பகத்தன்மை  போன்ற விஷயங்கள்  ஒரு பொருளின் தரத்தை  நிர்ணயம் செய்யும். இவை  எல்லாம் இருந்தாலும்  நமக்கு  தேவைப்பட்ட  நேரத்தில்  அந்தப் பொருள்  கிடைக்கா விடடால் பிரயோசனப்படாது. நிறைய  இடங்களில் வாங்கப்படும்  பொருள் பற்றிய விஷய   ஞானமே  இல்லாமல்  தத்தைப் பற்றி நாம்  பேசுகிறோம். வாங்கும்  பொருளைப்  பற்றிய  நமது  தேர்வே  இறுதியானது. சந்தையில்  நமக்கு தேர்வு செய்ய சாய்ஸ்  நிறைய  இருநதால் அது வாங்குபவர்  சந்தையாகும். தேர்வு செய்ய வசதி  இல்லாமல் இருநதால் அது விற்பனையாளரின்  சந்தையாகிறது.  விற்கப்படும்  பொருளைப்பற்றியவிளம்பரம்வியாபாரத்தின் முக்கியஉத்தியாகும். ஆனால்வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள்  திருப்தி அளிக்கப்படாவிட்டால்  எந்த விளம்பர  தந்திரமும்  நிலைக்காது.

ஐம்பது  பைசாவுக்கும்  சாக்கலேட்  கிடைக்கும், பத்து ரூபாய்க்கும்  சாக்கலேட் கிடைக்கும். எதிர்பார்ப்புகள்தான் வித்தியாசம். தினசரி வாழ்வில்  ஒரே பணியை செய்யக்கூடிய  சாதனங்கள் , பொருட்கள், சேவைகள்  நிறையவே வந்து  விட்டன அவை எந்த அளவுக்கு வாடிக்கையாளரை  திருப்தி  செய்கிறது.?அதிக விலை கொடுத்து  வாங்குவதுதான்  பொருளின் தரத்துக்கு  உத்தரவாதம்என்ற வாதம்சரியல்ல. தரம் என்பது  உற்பத்தி  செய்பவரால்  மட்டும் நிர்ணயிக்கப்  படுவதல்ல வாடிக்கை யாளரை  திருப்திப்  படுத்துவதே  தரத்தின்  முக்கிய பணி.
                     
நாம் நமக்கு அடுத்தவரை வாடிக்கையாளராக கருதத் தொடங்கினால் நம்முடைய
வாழ்க்கை  தரமுள்ளதாக  அமையும்.
                                 ------------------------------------------
  .

Saturday, November 6, 2010

DEVAN MAHAA DEVAN ORU SIRU KATHAI

                                                  தேவன்   மகா   தேவன்
VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.
"இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..?  பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
" இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்ன சுகமோ "--வாசுவின் மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்
"இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "
" உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்கு முடியலைப்பா "
" இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்.  விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு. ..தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும். அதனால்தான் இந்த முறை.
தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".
"அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."
" ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு  செய்கிறேன். ரெடியாக  இரு. "
பெருங்கோட்டுகா ... வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச்  சென்றான்.
"நீளமாய  கழுத்துள்ள  பெண்கள்  சந்தமாய்  இருக்கும்....அறியோ   வாசு. ?"தேவனின்  குரல்  இப்போதும்  கேட்கிறது.
"வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே. முதலில்  வேலை."
 "ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது. இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில்  சபிப்பான்.
"அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..?  இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".
எப்படியாவது  பிழைத்துக்கொள்வேன்   என்று  சொன்ன தேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய  நிர்பந்தம்  கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை. லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  போவதாகவும்  கூறினான்.
"தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக்  கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான்  செய்ய  முடியும்..?"
"ஏய்ய் .. வாசு  விஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து  செய்யாம்..?"
அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை   தகராறு   போனதும்  வேறு  கதை.
ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது ,  அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத்   தோன்றியது.
"தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"
"நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் ,  எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா .?"
 "என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும்  இந்தக்  காதல்  தேவனால்  தடம்  புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த  அங்கு   செல்
வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம்  சொல்லுவான். நானும்  அதை   நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவது,  அவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான். "--வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.
" ஆமாம்.. அப்போது  உங்களுக்கு  என்ன  வயசிருக்கும், ?"
"பதினேழு    பதினெட்டு   இருக்கலாம்"
"அடப்பாவி .! பிஞ்சிலேயே   பழுத்த   கேசா.?"
"இல்லை   தங்கம் ,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை   செய்து   பார்க்கும்   வயசு. யாரையும்   உடனே   நம்பும்   வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"
"அது சரி . .அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு  வயசிருக்கும்   என்ன  பேர்  ஏதாவது   தெரியுமா .?'
"அவளுக்கு  பதினெட்டு  இருபது  வயசிருக்கலாம். பெயர்  தெரியாது..ஆனால்  என்   மனசுக்குள்   நான்  அவளுக்கு   வைத்த பெயர்   அகிலா. எனக்கு  எல்லாமே  இந்த   அகிலமே  அவள்தான்  என்று   தோன்றும். "
"சீ..!  நீங்கள்   இப்படிப்பட்டவர்  என்று   தெரிந்திருந்தால்....."
"ஏன் .  என்னைக்  காதலித்து  இருக்க  மாட்டாயா? கலியாணம்  செய்து  இருக்க  மாட்டாயா "                                                                                                                                

 இப்போது   அதைப் பற்றி  நினைப்பது   டூ   லேட் . தவிர்க்க   முடியாததை   அனுபவிக்கதானே   வேண்டும். இருந்தாலும்  இப்போது   நோ  ரிக்ரேட்ஸ் .வருத்தமேதும்  இல்லை. "
"எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படயாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது. வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சஎன்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும் .அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன் வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன். ஆனால் என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள். தேவன்  என்னைத்  தமாஷ்  செய்கிறான்  என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன்  சொன்னான் , நான்  அங்கு  போகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச் செல்கிறாளோ   என்னவோ என்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்  கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது  நடந்தது. " என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.
"என்ன  பெரிய சஸ்பென்ஸ் ...ஒரு  நாள்  அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும்    என்று  வந்து  விட்டீர்கள் ..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.
"அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்  கேட்டு   வா --என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்ற   சற்று   நேரத்
தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்ல  நழுவப்  பார்க்க    ஓடி  வந்து  அவனை
பிடித்து  நன்றாக  தர்ம  அடி  கொடுத்து  அனுப்பி  இருக்கிறார்கள் . பாவம், தேவன்  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள் . அவமானமாக  இருந்தது,  என்று  சொல்லிச் சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி  நிறுத்தினான்  வாசு.
 "அவர்  உங்களைக்  காட்டிக்  கொடுத்து , உங்களையும்  அவர்கள் புடைக்கவில்லையா .?'
"அந்த  மட்டில்  தேவனுக்கு  நன்றி  சொல்ல வேண்டும் "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு , பெருங்
கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்  வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த  பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்கு  மரியாதை  செய்ய  கூட்டம்   கூட்டமாக  மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!
                                                 --------------------------------------