ஞாயிறு, 21 நவம்பர், 2010

வாழ்வின் விளிம்பில் ஒரு சிறுகதை

வாழ்வின்  விளிம்பில்
---------------------------------
            மயக்கத்தில்  இருந்தான்  அவன். யாரோ  கூப்பிடுவதுபோல்  தோன்றியது. அரை  விழிப்புடன்   உணர   முயற்சித்தான். சற்றே  பிராண்டியது  போலவும், பூனை  கத்துவது  போலவும்  தோன்றியது. திடீரென்று  நன்றாக  விழித்துக்கொண்டு  விட்டான். அருகில்  யாரும்  இருக்கவில்லை. நிச்சலனமாக  இருந்தது. பூனை  கத்துவதுபோல்  ஓசை  அவனிடமிருந்துதான்  வந்து  கொண்டிருந்தது., மூச்சு  விட்டு  இழுக்கையில்...ஒ ..இழுப்புச்  சத்தமா..? இல்லை ...எங்குதான்  அடைப்போ...? அடக்கடவுளே...இது  மட்டும்   தான்   பாக்கி  இருந்தது. மனிதனுக்குத்தான்  என்னென்ன   குறைகள். மூச்சுவிடுவதே பிரயாசமாகப்  பட்டது. சிறிது  நேரத்தில்  நல்ல  விழிப்பு  வந்துவிட்டது.
            ரங்கசாமிக்கு  தன்னிலை  தெரிய , முழுப்   பிரமாணத்திலும்  விளங்க , கொஞ்ச நேரம்   அவகாசம்  தேவைப்பட்டது. சுற்றும்  முற்றும்   பார்த்தான். தான்  திடீரென்று    மயக்கமடைந்து   விழுந்ததும்,   தன்னை   யார  யாரோ   எடுக்க   முயற்சி   செய்ததும்   கொஞ்சம்   கொஞ்சமாக   நினைவுக்கு   வந்தது. இப்போது   ஏதோ   ஆஸ்பத்திரியில்   இருக்கிறோம்  என்ற  நினைவு  வந்ததும்  பளீரென்று  பய  உணர்ச்சி  உடல்  முழுவதும்   பரவ  ஆரம்பித்தது. தனக்கு  ஏதோ  பெரிதாக  நேர்ந்திருக்க  வேண்டும்; அதனால்தான்   இங்கிருக்கிறோம் ; மனைவியும்  மக்களும் எங்கே.? அவர்களுக்குத்  தெரியுமா.? இல்லை...தனக்கு  ஏதாவது  நேர்ந்தால், அவர்களுக்குத்  தெரியாமலேயே  நம்  உயிர்  பிரிந்து  விடுமோ.? அடக்கடவுளே... .பாரம்பரியம்   எனப்படுவது  இறப்பிலும்  இருக்க  முடியுமா..? என்ன .. இறப்பைப்பற்றிய  எண்ணமெல்லாம்  அவ்வளவு  சீக்கிரம்  வருகிறதே...அங்குமிங்கும்  நகர  முடியவில்லை. மிகச் சோர்வாக  இருந்தது. யாரையாவது  பார்க்க  வேண்டும்.... யாரையாவது  கேட்க  வேண்டும்....தனக்கு  என்னதான்   நேர்ந்துவிட்டது..? .   

           "டக், டக்," என்ற சீரான ஓசை  சற்று  தூரத்தில்  கேட்க,  தலையைத்  திருப்பி, "நர்ஸ்,  சிஸ்டர், "  என்று  உரக்கக்  கூப்பிடுகிறான். நர்ஸ்  அருகில்  வருவதற்குள்  வேதனை   தாங்காமல்  மயக்கமுற்று   சாய்கிறான். ஆக, அங்கு  டாக்டர்களும்   நர்சுகளும்  இன்னொரு   அவசர  சிகிச்சைக்குத  தயாரானார்கள்.


            வாழ்க்கையின்    நிகழ்ச்சி    நிரலாக   மாறி  வரும்  மாற்றங்களில்    அவனுக்குப்    பிடித்தது    ஏதுமில்லையானாலும்   அவனைப்   பிடித்தது    ஏமாற்றமே   என்று (கொஞ்சம்  பெருமையுடன்)  கூறிக்கொள்பவன்  இந்த  ரங்கசாமி. இருந்தாலும்  நடக்கும்   காரண  காரியங்களுக்கெல்லாம்  அவனவனே  பொறுப்பு  என்று  அடித்துப்  பேசும்  ரங்கசாமி , அவனைப்பிடிக்கும்   ஏமாற்றங்களையே  வெற்றி  கண்டு , முன்னுக்கு  வந்தவன்  தான்  என்று  பெருமை  அடித்துககொள்பவன். எதிர்பார்ப்புகள்  அதிகமாகி   வாய்ப்புகள்  குறையும்போது  கிடைக்கும்  பலனின்  மறு  பெயரே  ஏமாற்றம்  என்று  அதற்குப்  பொருள்  கூறி  அதன்  முழு  வீச்சை  அடக்குவான்.

            பெரும்பான்மையானவர்களிடம்  அவர்கள்  தற்போது  இருக்கும்  நிலைக்கு  ஒரு  பொறுப்புப்  படம் (Responsibility  Diagram)  வரையச் சொன்னால்  அவர்களில்  பலரும்  பல்வேறு  மனிதர்களையும்  சூழ்நிலைகளையும்  கூறுவார்கள். தலைவிதி, தாய், தந்தை,  ஆசான், உற்றம்,  சுற்றம், உடல்நலம், என்று  ஏதேதோ  தலைப்பின் கீழ்  அவர்களின்   தற்போதைய  நிலைக்குக்  காரணங்களையும்   காரண  கர்த்தாக்களையும்  பங்கு  போடுவார்கள். ஆனால்  அவர்களின்  பங்கு  10 முதல் 15 சதவீதம்  கூட  இருக்காது. ஏதோ  இவர்களின்  நிலைக்கு  இவர்கள்  பொறுப்பேயல்ல  என்பது  போலிருக்கும். ஆனால்   ரங்கசாமி  அடித்துக்  கூறுவான், அவனுடைய  நிலைக்கு  அவன்தான்,  அவன்  மட்டும்   தான்  பொறுப்பு  என்று. பலன்களுக்கு  யாரையும்  எதையும்  குறை கூறமாட்டான்.

           இந்த  ரங்கசாமியின்  அடிமனசில்  ஒரு  குறை  உண்டு. அவன்  தந்தையின்  இறப்புக்கு  அவனே  காரணமாகி  விட்டதாக  உணர்வதுண்டு. இவன்  கொள்கைப்படி  எந்த  ஒரு முடிவுக்கோ  பலனுக்கோ  அவரவர்தான்  பொறுப்பு  என்றாலும், தந்தையின்   முடிவில் இவன் பங்கு  பெரிதளவு  இருந்ததாக  எண்ணுவான். அவன் தந்தைக்கு  உடல்  நலம்  சரியில்லாமல்  அவரை  ஆஸ்பத்திரியில்  சேர்த்தபோது, ரங்கசாமி  ஹாஸ்டலில்  தங்கிப்  படித்துக்கொண்டிருந்தான்.  ஆஸ்பத்திரியிலிருந்து  ஒரு   கார்டு   இவன்   தந்தை
DI லிஸ்டில்  இருப்பதாகத்  தெரிவித்து  வந்தது. இவனோ  எந்த  DI  லிஸ்டைக் கண்டான் . ஆஸ்பத்திரியில்   பல லிஸ்டுகளில்  இவன்  தந்தையும்  ஒரு  லிஸ்டில்  இருக்கிறார்  என்று   வாளாவிருந்துவிட்டான்.  தந்தையோ   ஒரு  சில  நாட்களில்  இறந்து  விட்டார்.
"அப்பாவுக்கு  வாழ்வதற்கு  ஆசையில்லை. ஐந்தாறு   பிள்ளைகளைப்  பெற்றெடுத்தவர். அவர்களை  கரை  சேர்க்க  தடுமாறி  இருக்கிறார். இந்த  நிலையில்  உடல் நலமில்லாமல்  இருந்திருக்கிறது. பொறுப்புகளின்  சுமை  தாங்க  முடியவில்லை. விட்டால்  போதும   என்று  சாவை   வேண்டிக்கொண்டே  இறந்திருப்பார். நான்  வாழ்ந்தே  தீருவேன்   என்ற
மனவுறுதி ( Will Power ) இருந்திருந்தால்  சாவு  எப்படி  நெருங்கியிருக்கும் , என்று             பலவாறு  எண்ணி சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான்.  ஏனென்றால்  அவருடைய   பொறுப்புகளை  அவன்  சுமக்க  வேண்டியதாயிற்று. ஆனால்  பல  நாட்களுக்குப்பிறகு , அந்த  DI list  என்று  அறிவித்த  கார்டைப்  படித்தபோது, அதன்  முழு  அர்த்தத்தையும்  உணர்ந்தபோது,  அவன்  அழுத  அழுகைக்கும்  அடைந்த  வேதனைக்கும்   எல்லையே  இருக்கவில்லை.

         " கொஞ்சம்  படித்திருந்தும் , பாமரனாகிவிட்ட  பாவி  நான், கவனமாக  இருந்திருந்தால்  என் தந்தை  இறந்திருக்க  மாட்டாரோ....வேறெங்காவது   வைத்தியம்   பார்த்திருந்தால்  பிழைத்திருப்பாரோ ..மடமையினாலும்  கவனக்  குறைவாலும் அவரைகொன்றுவிட்ட   பாவி   நான் , " என்று  எண்ணியெண்ணிக  குமுறியிருக்கிறான்.  

          இளவயதில்  பெரிய   பொறுப்புகளை -- ஐந்தாறு  பேர்  கொண்ட  குடும்பத்தை  நடத்திச்  செல்வது  என்ன  சும்மாவா..?ஏற்க  நேர்ந்த  ரங்கசாமி  அதற்கு  யாரையும்   குறை  கூறினதில்லை.  தலைவிதி  என்று நொந்து  கொண்டதுமில்லை.

        "DI  List ' ல்  உள்ளவர்  என்றால்  நோயின்  அபாய  நிலையில்  இருப்பவர்  "Dangerously  ill "என்று  நான்  அறிந்திராததால்  என் தந்தை  இறக்க  வேண்டியதாயிற்று. ஆகவே  அதற்கு  நானே  காரணம். அவர்  இறந்ததால்  அவர்  பொறுப்பு  என்  பொறுப்பாகிறது. என்று  தானே  பொறுப்பேற்றான்.

          ரங்கசாமிக்கு  மனஉறுதி  கொடுப்பவர்கள்  நிறைய பேர்  உண்டு. அதில்  முதன்மை  யானவர்   பாரதி.,விவேகானந்தர்  முதலானோர்.
         "தேடிச் சோறு   நிதம்   தின்று --பல
           சின்னஞ்ச்சிறு   கதைகள்  பேசி --மனம்
           வாடித்  துன்ப  மிக  வுழன்று --பிறர்
           வாடப்  பல  செயல்கள்  செய்து --நரை
           கூடிக்  கிழப்  பருவமெய்தி --கொடுங்
           கூற்றுக்கிரை   எனப்பின்   மாயும் --பல
          வேடிக்கை   மனிதரைப்  போல் -- நான்
           வீழ்வேனென்று   நினைத்தாயோ..? "
என்று  பாரதியின்  பாடலை  அடிக்கடிப்  பாடி  மன   வலிமை   ஏற்றிககொள்வான். தான்   வாழ்வதே  எதையோ  சாதிக்கத்தான்  என்று  தனக்குத்தானே  உரமேற்றிககொள்வான் .
"  உன் குறி  எட்டும்  வரை  தளராதே. விழி, ஏழு, நட " என்றெல்லாம்  தனக்குத்தானே   உற்சாகமூட்டிக்கொள்வான், "மனசாஹ் , வாசாஹ்,கர்மணாஹ், நல்லதை  நினை,  நல்லதைக்  கூறு, நல்லதைச்செய்.  ஏனென்றால்  எண்ணங்களால்  ஆகாதது ஏதுமில்லை.  எண்ணமே   அனைத்துக்கும்  மூலமாகும்.;இயற்கையே  எண்ணத்தில்  அடங்கும் ;எண்ணமே  செயற்கைக்  கருவிகளனைத்தினோடு  இயற்கை  கருவிகளை  எல்லாம்  இயக்கும்  சக்தி --என்றெல்லாம்  எல்லோருக்கும்  எடுத்துக்கூறி  மற்றவர்  இவனைக்  கண்டால்  காத  தூரம்  ஓடுமளவிற்கு  நல்ல  பெயர்  வாங்கி  இருக்கிறான்.

          இந்த   ரங்கசாமிதான்   ஆஸ்பத்திரியில்   சேர்க்கப்பட்டு   டாக்டர்களுக்கும்   நர்சுகளுக்கும்   சவாலாக   வாழ்வா   சாவா   என்ற  போராட்ட  நிலையில்  இருக்கிறான்.  ரங்கசாமி  பிழைப்பானா ,  மாட்டானா..?  பிழைத்து   எழுந்தால்  அதற்கு   அவன்   யாரைப்   பொறுப்பாக்குவான் ,? இறந்து  விட்டால்.....ரங்கசாமிக்கு  ஆராயவே  சந்தர்ப்பம்  இருக்காது.


          ரங்கசாமிக்கு சாவைக்கண்டு  பயம்  கிடையாது. சாவது  என்பது  என்ன..?நிரந்தரத     தூக்கம்.....அவ்வளவுதானே . ஆனால், ஆனால், சாவின்  முழு  வீச்சையும்  அதை  எதிர்  கொள்பவன் எப்படித்  தாங்குகிறான். ..யாருக்குத்  தெரியும்.? செத்தவர்  அனுபவங்களைச்  சொல்ல  முடியுமா..? ஆனால்  சாவு   நெருங்கும்போது  அதன்  விளைவுகளை  எதிர்  நோக்க  முடியாமல்  பயப்பிராந்தியால்  பாதிக்கப்பட்ட  ஒரு நண்பனின்  சாவைக் கண்கூடப்   பார்த்திருக்கிறான்.  அதிலிருந்து  சாவதை  எவரும்  விரும்புவதில்லை  என்று  நன்றாக  உணர்ந்தவன்தான். சாகும்  நிலையில்  நண்பனுக்கு  ஆத்ம  திருப்தியும் ,  மனோபலமும்  சுகசாவும்  கிடைக்க  வேண்டி பிரார்த்தனை  செய்து  தந்த விபூதியை  அவன்  நெற்றியில்  இட்டான். அடித்துச்  செல்லும்  வெள்ளத்தில்  கிடைத்த  துரும்பாக  எண்ணி  நாத்திகனான  நண்பனும்  திருநூறு  அணிய  சம்மதிக்கிறான். .சாவு  என்ன  திருநூறுக்குப   பயப்படுமா..? எந்த ஒரு  முன்னேற்றமும்  ஏற்படாத  நிலையில்  நண்பன்  இவனிடம்  சாவதற்கு  முன்  சாடியது  இவனை  என்றும்  சங்கடப்படுத்தும் ." உன்  விபூதிப்  பட்டையும்  நீயும் ..நீயே  வெச்சுக்கோ ...போ..  .." சாவை நேரில்  பார்த்தாகி  விட்டது. இன்னும்  அனுபவிக்கத்தான்  இல்லை.   .   

          மனித  வாழ்க்கையே  விசித்திரமானது.  அடுத்த  வேளை   சோற்றுக்கில்லாமல் , வியாதியால்   நலிவுற்று ,யாரும்  உதவ   இல்லாமல்   அனாதையாய்   ஆறுதலற்றுக்   கிடக்கும்   ஜீவன்களும்   வாழத்தான்   ஆசைப்படுகின்றன. ...இல்லை..  சாவைக்கண்டு    பயப்படுகின்றன. இந்த   பயம்தான் காரணமோ  என்னவோ ...வாழ்க்கை  முடிவதில்லை.  யாரும்  முடிய  விடுவதில்லை. தன  வாரிசில்  தன்னைக்  காண  விழைகிறது. உலகம்  ஒருவர்  இருவராவது  பல்கிப் பெருகிப்  பலராவதுமான   நிலை  முடிவதில்லை. வெட்ட  வெட்ட  துளிர்  விடுவதும் , வெள்ளம் ஒரே  குறியை  நோக்கி   ஓடிக்கொண்டிருப்பதும்   இயற்கையின்   நியதியல்லவா. ...ஆனால்  இயற்கை  நிகழ்ச்சிகள்  சிந்தித்து  நடப்பதில்லையே .  மனிதன்தானே   சிந்திக்கிறான்.  சாவு  உண்டு   என்று  தெரிந்தும்  அழியாமைக்கு  உத்தரவாதம்  உள்ளது  போல்   அல்லவா  அவனுடைய   செய்கைகள்   இருக்கின்றன.

          ரங்கசாமி  ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்ட  செய்தி  அறிந்து  ஓடி  வந்தனர்  அவனுடைய  மனைவியும்  மக்களும்  உற்றவரும்  சுற்றவரும். " அவருக்கு  இரண்டு  முறை  மாசிவ்  ஹார்ட்  அட்டாக்  ஆகியிருக்கிறது.  யாரும்  பார்க்க  முடியாது. தொந்தரவு  செய்யக்கூடாது." --- டாக்டர்  சொல்லிவிட்டார். ..

          ஒருவன்  உயிருடன்  பிழைக்கவோ , நலமாகத்  திரும்பவோ,  பிரார்த்தனை  உதவும் . அதன்  சக்தி  எல்லையற்றது., என்ற   நம்பிக்கையில்    அனைவரும்   பிரார்த்தனை   செய்கின்றனர்.   பிரார்த்தனையில்    சுயநலம்    உண்டா.?   இருக்கலாம். இல்லாமலும்   இருக்கலாம்.  ரங்கசாமிதான்   அவனுடைய    கடமைகளை    நிறைவேற்றி   விட்டானே.   அவன்   இருநதால்  என்ன,  போனால்  என்ன.? இருக்கவேண்டும்  என்பதற்குப  பிரத்தியேக  காரணம்  உண்டா  என்ன.? காலையில்  மலர்ந்து  மாலையில்  வாட்டும்  மலர்  போன்ற   நிலையாத  வாழ்க்கையில்  ஒவ்வொருவரும்  போய்த்தானே  தீரவேண்டும் . போகும்  பாதை  கரடு  முரடாக  இல்லாமல், போகும்  உயிர்  "பொசுக்"  என்று  போனால்  பிழைத்துக்கொள்வார். ! அதாவது  சாவின் பயம்  தெரியாமல்  சாக  வேண்டும் . அவ்வளவுதான்.

           ரங்கசாமிக்கு  நினைவு  திரும்புகிறது.  கண்ணாடி  சன்னல்  வழியே  மனைவியும்  மக்களும்  கூடி  நிற்பது  தெரிகிறது. " என்ன  ஆயிற்று  எனக்கு.?" பேசவோ  நகரவோ  முடியாவிட்டாலும்  எண்ணத்தில்  தெளிவு  இருந்தது. " நெஞ்சு  வலி  வந்ததே...ஒ .ஹார்ட்  அட்டாகோ--அதுதான்  இந்த  வயர்களும் , குழல்களும், ஆக்சிஜன்  மாச்குமா.? நான்  செத்துப்போயவிடுவேனோ.?"

          எந்த  எண்ணம்  வரக்கூடாதோ  அந்த  எண்ணம்தானே  வரும்  அதுதான்  மனித  மனசு. ரங்கசாமி ஒரு  சில  நொடிகளில்  தன  வாழ்க்கையின்  மொத்த அத்தியாயங்களையும்  ஒரு  முறை  புரட்டிப்  பார்த்து  விட்டான். மனம்  எனும்  கணினி  எண்ணத்தின்  வேகத்துக்கு  ஈடு  கொடுத்துவிட்டது. சில  பல  முக்கிய  நிகழ்ச்சிகளை  மனதில்  மீண்டும்  கொண்டு  வந்து  சற்றே  அசை  போட்டான்.

          தந்தை  செய்த  பிழையை  தனயன்  செய்திருக்கவில்லை. ஆசைக்கொன்றும்    ஆஸ்திக்கு  ஒன்றும்  மட்டும்தான்.  அவர்களும்   இப்போது  தானாகவே  வேரூன்றி  நிற்கிறார்கள். அன்பு  மனைவி ,கொஞ்சம்   தவித்தாலும்  சமாளித்துக்கொள்வாள். எல்லோரும்  பக்குவமாக  ஏற்றுக்கொள்வார்கள்.--" அவனுடைய  பொறுப்புகளை  முடித்து  விட்டான். யாருக்கும்  கஷ்டம்  கொடுக்காமல்  மகராசனாய்ப் போய்விட்டான்."

          அது  சரி, ரங்கசாமிக்குத்   தான்   தயாரா   என்று   தெரிய வில்லை. உடல்   சோர்வு  கண்களை  மயக்கியது. உள்ளம்   விழித்துக்கொண்டுதான்   இருக்கிறது. சில   காட்சிகள்   கண் முன்னே   விரிகின்றன.  கனவா   நனவா   என்று   தெரியவில்லை. ரங்கசாமி   அனாதையாக  ஒரு   மலை   அடிவாரத்தில்   கிடக்கிறான். எழ   முடியவில்லை. தாகமோ  தாகம்.  தொண்டை   வறண்டு   போகிறது. தண்ணீர்   தண்ணீர்   என்று   உதடசைகிறது.   சாரி  சாரியாக  மக்கள்  மலை   ஏறிக்  கொண்டு  இருக்கிறார்கள்.ரங்கசாமியை  யாரும்  கண்டுகொள்வதே  இல்லை. தாகத்திற்கு  நீர்  கிடைக்காவிட்டால், ஏற்படும்  அவஸ்தையைப  புரிந்து  கொள்பவர்  மிகக் குறைவே. தாகம்  எடுத்தவுடன்  சற்றே  நீர்  கிடைத்து  விடுகிறதே.  நாக்கு  வறண்டு,  மேலண்ணத்தில்  ஒட்டி, மனம்  நொந்து, பேச  முடியாமல்  " ஐயோ , இனிமேல்  தாங்க  முடியாது", என்று எண்ணி விட்டால்  முடியுமா   தாங்கித்தானக வேண்டும...கஷ்டப்படு......வேண்டும்...யார்  யாருக்கு  நீ  என்னவெல்லாம்   செய்தாயோ ......பலனை  அனுபவி.----"ஆற்றாமையைப்  போக்கிக் கொள்ள  காரண  காரியங்களைத்  தேடுவதுதான்  மனிதனின்  இயல்பு.     .  

          எல்லோர்  கையிலும்  நீர்  இருக்கிறதே. கொஞ்சம்  தரக்கூடாதா...தொண்டை  நனைந்தால்  போதுமே. சற்று  தூரத்தில்  வருவது  யார்.? யாரது..அப்பாவா...? இவ்வளவு  வயதாகிவிட்டதா  இவருக்கு....நமக்கே  இவ்வளவு  வயசாகி  இருக்கும்போது   அப்பா  இன்னும்  வயோதிகமாகி   தெரிவதில்  ஆச்சரியம்  இல்லையே.. அவர்  கையில்  தண்ணீர்  குவளை  இருக்கிறது. இவர்   இவர்   தாகத்துக்கு  நீர்  தருவார். என்ன  இருந்தாலும்   அப்பா  அல்லவா...

           " அப்பா,  அப்பா ..."  வாயசைகிறது .சத்தம்  எழவில்லையே.. கேட்காமல்  போய  விடுவாரோ..?முழு  சக்தியையும்  உபயோகித்துத  தன  கையையும்  காலையும்  ஆட்டுகிறான். அவருக்கு  இவனை  அடையாளம்  தெரியவில்லை.  சற்றே  நின்று  பார்க்கிறார்.  "ஐயோ   பாவம்  சிறிது  தண்ணீர்  கொடுப்போம்.' என்று அவன்  வாயில்  நீர்  ஊற்றுகிறார். நீரா அது.. அமிர்தம்  ! உயிர்  கொடுக்கும்  நன்னீர்.

          " அப்பா , நாக்கு  வறட்சியைத்  தாங்க  முடியவில்லை. தண்ணீர்  தந்து   காப்பாற்றினீர்கள் ." அவனை  இப்போது  உற்று  நோக்குகிறார் . அடையாளம்  தெரியத்  தெரிய  அவர்  கண்களில்  ஒரு  வெறுப்பு  நன்றாக  விரிகிறது. " என்னைக்  கொன்றவன்  அல்லவா   நீ..? தெரிந்திருந்தால்  தண்ணீர்  கொடுத்திருக்க  மாட்டேன் " என்று  தீக்கங்குகளை   உமிழ்ந்துவிட்டு   விடு விடுவேனச்  சென்று  விடுகிறார்.


           ரங்கசாமி  திடீரென  விழித்துக்  கொள்கிறான். அப்பாவும்  இல்லை , யாரும்  இல்லை .நர்ஸ்தான்  அவனுக்குப்  பஞ்சில்  சிறிது  நீரை  நனைத்து  அவன்  வாயில்   வைத்துக்  கொண்டிருந்தாள்
 
          அப்பா   வாழப் பிரியப்படவில்லை.. தீவிரமாக  வாழ  நினைத்திருந்தால்  அவரையும் மீறி   சாவு  எப்படி  வரும்..? எனது  அறியாமை  காரணமாக  அவர்  இறந்திருக்க  முடியாது....என்றெல்லாம்  தன்னை  சமாதானப்  படுத்திக் கொண்ட  ரங்கசாமிக்கு  குற்ற  உணர்ச்சிகளின்  தீவிரத்  தாக்கம்  குறையவில்லை. " அப்பாவுக்கு  வாழ்க்கையில்  செய்ய  வேண்டிய  கடமைகள்  நிறையவே   மீதமிருந்தது...மலை போலிருந்தது. செய்வதற்குச  சக்தியில்லை. தெம்பில்லை.  கோழை  போல்  பயந்திருக்கிறார். பொதிகளைச்  சுமக்க  புத்திரன்  இருக்கிறான்  என்ற  எண்ணத்தில்  சாவை  விரும்பி  அழைத்திருக்கிறார்.. போராட வில்லை   மனசிருக்கவில்லை. "

            இந்த  எண்ணம் சுத்தத்தவறு . உடல் நலமின்மை  அவராக  வருத்திக்  கொண்டது    அல்ல. வாழ்வின்  கடமைக்குப்   பயப்படுபவராக   இருந்திருந்தால்  தற்கொலை  முயற்சிக்கல்லவா   போயிருப்பார்.. இல்லை  எங்காவது  ஓடிப்போயிருக்க   வேண்டும்.
உடல்  நலம்  சரியில்லாதபோது  மனோபலமும்  குறைந்திருக்கிறது.. பட்ட  கஷ்டங்கள்  போதும், விடுதலை  கிடைக்காதா, என்று  உள்மனம்  ஏங்கி  இருக்கிறது.. எண்ணப்படியே
உடலும்  ஒத்துழைத்திருக்கிறது. கடமைகளில்  இருந்து  தப்பி ஓட  ஒரு வடிகாலாக  சாவை  வரவேற்றிருக்கிறார். He was an escapist  அவருடைய  சாவுக்கு  நான்  எப்படி  முழுப்  பொறுப்பாக  முடியும். வேண்டுமானால்  என்னை  அறியாமலேயே  அவருக்கு  நான்   உதவி  இருக்கலாம். அதற்குத்தான்  பிராயச்சித்தமாக  அவருடைய  கடமைகளை  நான்  கட்டிக்  காத்தேனே.  அவருடைய  சாவுக்கு  நான்  எப்படி  காரணமாக  முடியும்.

           " ரங்கசாமி,  அவர்   நிலையில்   நீ   இருக்கிறாய்  இப்போது. . நீ   பிழைக்க  வேண்டும்   என்று   உறுதியாய்  இரேன். "  என்று  அவனது  மனம்   அவனை  உசுப்பியது .
அவரை   விடு.  உன்னிலை   என்ன..? நீ  உன்  கடமைகளை  முடித்து  விட்டாய்  அல்லவா. நீ  ஏன்  சாக  வேண்டும் . வாழ்க்கையை   அனுபவியேன். சாவை  விரட்டு.  எமனை  விரட்டு. காலனைக்  கூப்பிடு. " காலா.. உனை   நான்  சிறு  புல்லென  மதிக்கிறேன் . என்றன்   காலருகே   வாடா.. . சற்றே  உனை  மிதிக்கிறேன்  என்  காலால் "


           ரங்கசாமி  சற்று  சிந்தித்துப்பார்.. உன்  தந்தைக்கு  கடமைகள்  இருந்திருக்கின்றன   முடிந்திருக்கவில்லை . அவர்  வாழ்ந்திருக்க  வேண்டும். உனக்கென்ன..?  நீ  வந்த  வேலைதான்   முடிந்து  விட்டதே. நீ  இருப்பதே  இந்த  பூமிக்கும்  மற்றவருக்கும்  பாரம்   அல்லவா,  உன்  உபயோகம்  தீர்ந்து  விட்டது. நீ  சாவதால்  ஒரு  குறையுமில்லை.. ஏன் ..
சாக  பயமாய்  இருக்கிறதா.?

          பயமா.. நிச்சயமாகத்  தெரியவில்லை.  இறந்து போனால்  மறுபடியும்  என் மனைவி  மக்கள்  உற்றார்  சுற்றார்  இவர்களை  எல்லாம்  பார்க்க  முடியாதே  அவர்கள்   அன்பினைக்  கொடுத்து  அன்பினைப்  பெற  முடியாதே....அட ..நீ  இருநதால்  அல்லவா   கொடுக்கவோ  பெறவோ  முடியும் ... நீயே  இல்லாவிட்டால்  என்னாகும் ..இருந்து  என்ன சாதிக்கப்  போகிறாய்.?

         நான்  இல்லாவிட்டால்  என்னாகும்.? நானே  என்  நினைவாக  மாறி  விடுவேன்.  அதுவும்  சில  நாட்களுக்குத்தான்.. இருநதால்  என்ன   சாதிப்பேன் .? யாருக்குத்  தெரியும்   ஒரு வேளை  மற்றவருக்குப்  பாரமாக  இருப்பேனோ  என்னவோ.. அப்படியானால்  பிற்காலத்தில்  நானோ  என்  நினைவுகளோ  சுகமாக  இருக்காது.

         என்னதான்  எண்ணமாக  வருகிறது..? வாழ்வா  இல்லை  சாவா.? நான்  வாழ  வேண்டும்  என்றால்  சரியான  காரணம்  இருக்க  வேண்டும்  அல்லவா. நான்  போய  விடுவேன்  என்று  எண்ணி, ரயிலடிக்கு  வண்டியேற்ற  வந்திருப்பவர்கள்  போலல்லவா   தெரிகிறார்கள்  இங்கு  கூடியுள்ளவர்கள் .

         " ரயில்  புறப்பட  இன்னும்  இரண்டு  நிமிஷங்கள்  தானிருக்கிறது."

          ரங்கசாமியின்  நேரம்  முடிந்து  விட்டதா.? அவன்  உயிருடன்  வீட்டுக்குத்  திரும்புவானா.  அவன்  நினைப்பதுபோல்  எண்ணத்தின்  சக்தியால்  சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு  சக்தி  கொடுக்க  கடமைச்  சுமைகள்  இல்லாததால்  வலு     இழந்து   மடிவானா...

         அவன்  ஏன்  சாக வேண்டும்..? ஏன்  சாகக்கூடாது.? கேள்விகளுக்கு  விடை  கிடைக்குமா.? கிடைக்காதே.! கிடைக்குமானால்  புத்தன்  வெற்றி  கண்டதாகாதா. ? வெற்றி  கண்டிருந்தால்..... எல்லாம்  வீண்  கேள்விகள்...

         ஒன்று  மட்டும்  புரிந்து  கொள்ள  வேண்டும். வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் . தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான். மரண  பயம்  இல்லாமல்  சாக  வேண்டும் . ரங்கசாமியின்  கொடுப்பினை  என்ன..?    
 ---------------------------------------------------------------------------


  .     
 




      .
. .      

          .




 

..
 


  
 


..
 







 













       

 



.
 
 





  .   
 




         



.   .    .

8 கருத்துகள்:

  1. VERY NICELY WRITTEN WITH A FLOWING COHESIVE STORYLINE DEALS WITH THE GUILTY CONSCIENCE OF HUMANS.

    பதிலளிநீக்கு
  2. Thank you very much for your comments,dear Mani.Please continue to read this blog. .

    பதிலளிநீக்கு
  3. Dear sir,
    It has been a great pleasure to read your blog..the inner turmoils,the conflicts of conscience and the way you have expressed them are really ,thought provoking..kudos.

    பதிலளிநீக்கு
  4. Dear Sri.Kalidoss sir,
    Such comments can come only if one gives an intent reading, Thanks a lot. This will serve me as a booster.

    பதிலளிநீக்கு
  5. VERY TOUCHING,EXPLICIT NARRATION OF INNER FEELINGS.......AUTO-BIOGRAPH..?..!!!!
    ENJOYED READING

    பதிலளிநீக்கு
  6. இருத்தலையும் இல்லாதிருத்தலையும் இவ்விரண்டையும் மனமெனும் குறளி பார்ர்க்கும் பார்வையையும் எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாலு சார்?

    நீங்களெ சொல்லி அதன் பின் படித்தது சற்றுக் கூச்சமாக இருந்தது.

    கதையின் பொருளைத் தொட வெகு சிலருக்குத்தான் தைர்யமிருக்கும்.அந்தச் சிலரில் நீங்களும் ஒருவர் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம் பாலு சார்.

    பதிலளிநீக்கு
  7. சாவின் விளிம்பில், நினைவு திரும்பும் பொழுதெல்லாம் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளில் சிக்குண்டு தவிக்கும் ரங்கசாமியின் 'கதை'யை முன்னிலைப் படுத்திக் காட்டி, அதன் பின்புலமாய் வாழ்க்கையின் போற்றுதலுக்குரிய சில நெறிகளை ஆசிரியர் சொல்லிச் செல்வது தான் இந்தக் கதையின் குறிப்பிடத்தக்க அம்சம். எனக்குப் பிடித்த அம்சமும் கூட. எந்த எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இதற்காகத் தான் இந்தக் கதையை எழுதினேன் என்று எழுதியவர் சொல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன?.. நல்ல சிந்தனை உள்ளவர் உள்ளத்திலிருந்து அவர் அறியாமலேயே இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் வெளிப்படுவது இயல்பான ஒன்று தான். சேகரம் பண்ணி தன் வாழ்க்கைக்கு மூலதனமாய் மூட்டை கட்டிக் கொள்வது தேர்ந்த வாசகரின் வேலையாகிப் போகிறது.

    சாவைப் பற்றி நினைப்பதே சங்கடம் கொடுக்கக் கூடிய ஒன்று தான். அதை எதிர்கொள்கையில் பயம் மட்டும் கூடாதென்பதற்குத் தான் இந்த தேசத்து ஆன்மீக சிந்தனைகளே, மரணத்தை வெல்வோம் என்று கூறுகிறது. வெல்வோம் என்பது அந்த பயசிந்தனையிலிருந்து மீள்வோம், மீள்வதின் மூலமாக அதை வெற்றி கொள்வோம் என்கிற அர்த்தத்தில்.

    நாம் எதிர்பார்க்காதவாறு இந்தக் கதையில் முன்னிலைப் படுத்துகிற பாத்திரமான ரங்கசாமிக்கு, அந்த நேரத்தில் குற்ற உணர்வு நெஞ்சத்தில் குடிபுகுந்து வாட்டியது தான் வினோதம். அந்த வினோதம், ஒருவிதத்தில் தன்னை சுயவிமர்சனப் படுத்திக் கொண்ட அவனது நேர்மையையே காட்டுகிறது. தன் தந்தை சாகக்கிடந்த நேரத்தில் அவரை பொறுப்பாக கவனித்துக் கொள்ளாதது, இந்த நேரத்தில் அவன் நினைவில் நர்த்தனமாடி குற்ற உணர்வில் குன்றிப்போக வைக்கிறது.. அதை வேறு எண்ணங்களைக் கொண்டு விரட்டப் பார்த்தாலும், மேலே மேலே வந்து அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. இவன் செய்யத் தவறியதையே, இவனின் இந்த நிலைமையில் இவன் மனைவி மக்களிடம் இவன் எதிர்பார்க்காது இருந்ததே இவன் செய்யத்தவறிய அந்த ஒரு தவறுக்கும் கழுவாயாகப் போய்விடுகிறது.

    தான் வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இருக்கிறது ரங்கசாமிக்கு. அந்த திருப்தியை தன் தந்தையின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அங்கங்கே குமுறுவது, பாத்திரப்படைப்பின் மேன்மையைக் குலைக்கிறது. 'ஒரு சொட்டு தண்ணீர் தன் தந்தை கையால் கிடைக்காதா' என்று தவிக்கிற நேரத்தில், இவன் யார் எனத்தெரியாது தந்தை அமுதமென நீர் கொடுத்த மாதிரியும், யார் என்று தெரிந்த பொழுது, 'என்னைக் கொன்றவனல்லவா நீ?.. நீ எனத் தெரிந்திருந்தால் தந்திருக்கமாட்டேன்' என்று தந்தை சொல்கிற மாதிரி இவனுக்குத் தோன்றுவதும், ஏனோ செத்த பிறகும் தந்தையும், சாகும் நிலையில் தனயனும் ஒருவருக்கொருவர் குரோதம் பாராட்டுகிறார்கள். இரண்டு பாத்திரங்களையும் உயர்த்தி, ரங்கசாமியை திருப்திபடுத்தி, அவனது குற்ற உணர்வை சாக அடித்திருக்கலாம்.
    யதார்த்தமாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்கிற ஆசையில் ஆசிரியர் கதையை ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வரும் இந்த அரிய வாய்ப்பை தெரிந்தே தவிர்த்து விட்டார் போலும்!

    'தந்தை செய்த பிழையைத் தனயன் செய்திருக்க வில்லை' போன்ற-- பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக வரும் செய்திகளைத் தவிர்திருந்தால் கதையின் நேர்த்தியைக் கூட்டி, சரியாகப் பொருந்துகிற மாதிரி ஒரு சட்டத்திற்குள் அடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
    இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.

    குறிப்பாக இந்தக் கதையைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னதினால் என் கருத்துக்களைக் குறிப்பிட்டேன். என் பார்வையில் பார்த்ததே தவிர, கதையின் சிறப்பிற்கு இவையெல்லாம் எந்த விதத்திலும் குறுக்கே நிற்பவையல்ல. இரண்டு முறை தாங்கள் நினைவு படுத்தியும் இன்னும் செய்ய வில்லையே என்கிற அவசர உணர்வில் எழுதியது.

    இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதச் சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டமைக்கு மிக்க நன்றி, ஐயா!

    பதிலளிநீக்கு
  8. நல்லதை நினை, நல்லதைக் கூறு, நல்லதைச்செய். ஏனென்றால் எண்ணங்களால் ஆகாதது ஏதுமில்லை. எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்.;இயற்கையே எண்ணத்தில் அடங்கும் ;எண்ணமே செயற்கைக் கருவிகளனைத்தினோடு இயற்கை கருவிகளை எல்லாம் இயக்கும் சக்தி //
    வேதாத்திரி மகரிஷி கருத்து அல்லவா?

    எண்ணம் சொல் செயலால்
    எவருக்கும் எப்போதும்
    நன்மையே விளைவிக்க
    நாட்டமா யிரு.
    என்று அவர் சொன்னது போல் ரங்கசாமி கதையின் மூலம் நல்லதை சொல்லிவிட்டீர்கள்.
    வாழ்வின் விளிம்பில் மனம் எண்ணும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் அனுபவம் என தெரிகிறது.
    கதை நன்ராக இருக்கிறது.





    /

    பதிலளிநீக்கு