தொடரும் தேடல்கள் ( ஒரு கட்டுரை )
--------------------------------------------------------------------
" கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் "-- திடீரென்று கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. பாட்டில் மனம் லயிக்கவில்லை.. மனிதனே கடவுளைப் படைத்துவிட்டு அவன் மனிதனாகப் பிறக்க வேண்டுவது சற்றே முரணோ என்று தோன்றுகிறது. மறுபடியும் மனம், காண இயலாத அல்லது உணர இயலாத ஒரு பரப்பிரம்மத்தைத் தேடத் துவங்குகிறதோ ? சரி, இல்லாத ஒன்றைத் தேடுகிறோமா ? அல்லது எங்கும் இருப்பதை உணர முடியாமல் தவிககிறோமா.? ஒன்று மட்டும் புரிகிறது. இந்தத் தேடலுக்கு விடை கண்டவர்கள் இருக்கிறார்களா , இல்லையா.? கண்டு விட்டவர்கள் என்று நாம் நம்பும் சிலர் என்னதான் கூறுகிறார்கள்?
எதற்காக நாம் இந்த தேடலைத் துவங்குகிறோம்.? நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சில நிகழ்வுகள் ஆதியையும் அந்தத்தையும் தேட வைக்கின்றன.
ஆதியும் இல்லாதது அந்தமும் இல்லாதது என்றுதான் நாம் கடவுளை உணர்த்தப்படுகிறோம். நம் உள்ளத்தை , மனசை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், ஆண்டவனை உணர்வதில் ஓரளவு வெற்றி பெறலாம் என்று பெரியவர்களும் ஞானிகளும் கூறுவது ஓரளவு புரிகிறது. உள்ளத்தை உணர எத்தனிக்கும் முன் உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் கூறுகிறார்கள். உடலையும் மனசையும் நாமே இயக்க தியானம் உதவும் என்று கண்டதும் கேட்டதும் வாயிலாகத் தெரியவருகிறது. தியானத்தைப் பற்றிப் பேசும்போது கூடவே யோகா பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. யோகா உடலைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தியானம் மனசைக் கட்டுக்குள் கொண்டு வரவும் உதவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறோம்.
இந்தத் தேடலும் உணர்வுகளும் எனக்கு என்னுடைய பதினைந்து வயது முதலே தொடங்கியது. நாங்கள் அப்போது நீலகிரி வெலிங்கடனில் இருந்தோம். நீலகிரி குளிர்ப் பிரதேசம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் குளிரிலும் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து, குழாயைத் திறந்துவிட்டு, குளிர் நீரில் வெடவெடத்துக் குளித்து, ஒரு தனி அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து, ஓம்,...ஓம்.. என்று ஓங்காரத்தை சுமார் அரை மணியிலிருந்து ஒரு மணிநேரம் உறக்கக் கூறுவேன் .பிறகு விவேகானந்தரையும் பரமஹம்சரையும் நாராயண குருவையும் (அவர்கள் எழுதியதை ) படிப்பேன். என் செய்கைகளைக் கண்டு என் பெற்றோர் பயந்து என்னைக் கண்டிக்கத் துவங்கினார்கள். எனக்கு என்னுள் எந்த ஒரு மாற்றமும் என்னிடம் நிகழாததால் அந்த முயற்சிகளை கைவிட்டேன். அன்று துவங்கிய தேடல் இன்று வரை முற்றுப்பெறவில்லை. இதற்குள் வாழ்வின் பல நிலைகளையும் கடந்து இப்போது எல்லைக் கோட்டிற்கு வந்து விட்டதாக நினைக்கிறேன்.
வாழ்க்கையில் கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபவங்கள் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத் தரவில்லை. மாறாகக் கேள்விகளே அதிகம் எழுகின்றது. சில சமயம் நாம் ஏன் இப்படி மற்றவரிடமிருந்து மாறுபட்டு நிற்கிறோம் என்றும் தோன்றும். எல்லோரையும்போல் ( எல்லோரையும் என்றால் எல்லோரையும் அல்ல ) ஏன் எதையும் கண்மூடித்தனமாக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.?
நம்பிக்கைகள் என்று பார்க்கும்போது , பெரும்பாலானவை பகுத்தறிவோடு பார்க்கப்படாததாகவே தோன்றுகிறது. நான் கூறும் பகுத்தறிவு கடவுள் மறுப்பு சம்பந்தப் பட்டதல்ல.. உண்மையிலேயே ஆழ்ந்து சிந்தித்து உரசப்பட வேண்டியவை.. நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நேரம், காலம், ஜாதகம், தோஷம், பரிகாரம் என்பன போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைத்து அறிவை எங்கோ அடகு வைக்கிறோமோ என்று தோன்றுகிறது. ,
பக்குவப்படாத வயதில் பரிசோதனைகள் மேற்கொண்டு பலனளிக்காததால் , உற்றவர்களிடம் கற்றுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அதற்கு பெரிய விலையே கொடுக்க வேண்டியுள்ளது. யோகா கற்பதோ , தியானம் கற்பதோ உரிய முறையில் மேற்கொள்ள நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.. இவை எல்லாமே இப்போது வியாபாரமாகிவிட்டது. வாழும் கலை, ஈஷா மையம், அமிர்தானந்த ஆஸ்ரமம் போன்றவை மக்களுக்காக எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் போதிக்கும் யோகா, தியானம் போன்றவை பணம் மிகுந்தவர்களுக்குத்தான் உபயோகமாகும். வாழும் கலையினர் அடிப்படை போதனையாக ஐந்து நாட்கள் தினம் ஒரு மணி நேரம் பயிற்சி தருகிறார்கள். அதற்கு தலைக்கு ரூபாய் நூறுக்கும் மேல் வசூலிக்கிறார்கள் .மேற்படி கற்க வேண்டுமானால் ஆஸ்ரமத்தில் தங்க வேண்டும். சாதாரணமானவர்களுக்கு அது சாத்தியமானதாக இருக்காது. இதுவே மற்ற இடங்களிலும் நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பயிற்சியாளர் இதுவே தொழிலாகக் கொண்டிருக்கிறார்.
பணம் இல்லாமல் எங்கும் எதுவும் நடைபெறுவதில்லை. கோவில்களுக்குச் சென்று வருவது, வழிபாடு நடத்துவது போன்றவை நம் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்தே அமைகிறது. அதுவும் நம் தென்னிந்தியக் கோயில்கள் வழிபாட்டுத்தலமாக இல்லாமல் வியாபாரத்தலமாகவே இருக்கின்றன. திருப்பதி , பழனி , குருவாயூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பணம் பறிக்கப்படுகிறது. இதுவே வட இந்தியக் கோயில்களான காசி, மதுரா, ஹரித்துவார் போன்ற இடங்களில் பணம் படைத்தவர்களும் இல்லாதவர்களும் ஒன்று போலவே நடத்தப் படுகிறார்கள். கடவுளை தரிசனம் செய்யப் பணம் கொடுக்கவேண்டியதில்லை. அங்குள்ள பண்டாக்கள் பணம் பண்ணும் முறையே வேறு. அது அங்கு வரும் மனிதர்களின் நம்பிக்கைகளின் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது.
என்னுடைய இளவயதில் ஷீரடி சத்திய பாபா பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் குறைவு. சமீபத்தில் நாங்கள் ஷீரடி சென்றிருந்தோம்.. அந்த இடமே ஒரு பொருட்காட்சிசாலை போலவும், ஒரு சுற்றுலாத்தலம் போலவும் காட்சியளிக்கிறது. ஷீரடி பாபாவை ஒரு மார்கெட்டிங் பொருளாகவே மாற்றியிருக்கிறார்கள்.
என்னை நானே அறியவும், எனக்குள் இருந்த சில சந்தேகங்களையும் நான் செய்த முயற்சிகளையும் பதிவு செய்ய முற்பட்ட இந்தப் பதிவு, என்னுடைய சில ஆதங்கங்களின் வெளிப்பாடாகவே அமைந்து விட்டதுபோல் தோன்றுகிறது. என்ன செய்வது.? நான் எழுதும்போது என்னுடைய மனத்தாங்கல்கள் என்னையும் அறியாமல் வெளிப்படுகிறது. சரியா தவறா தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------
.. .
மனசில் பட்டு உணர்வதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉங்களை மாதிரியே நானும் ஒருவன்.இந்த மனக் குழப்பமெல்லாம் பட்டு விட்டு,செய்யும் வேலையில் திருப்தி காணுகிற ஜென்மமாக மாற்றிக்கொண்டேன்.எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை என்ற நிலை.....
பதிலளிநீக்குஇன்னமும் சிறப்பா செயல் பட்டிரிக்கலாமோ என்ற ஆதங்கம் எனக்குள் எழும்.விட்டுத் தள்ளுங்க.சந்தோஷமா இருங்க என்பது என் பணிவன்பான வேண்டுகோள் .
திரு. ஜீவி அவர்களுக்கு,
பதிலளிநீக்குசொல்ல நினைப்பது நிறையவே உள்ளன.ஆதரவுக்கு ந்ன்றி.
திரு. காளிதாசுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். குழப்பமில்லை.
ஆதங்கம்தான்.நன்றி
ஓரளவிற்கு இதே நிலை. பாதி வயதை தாண்டி ஆகி விட்டது. மனம் இன்று வரை ஒன்று பட வில்லை.
பதிலளிநீக்குமன சாட்சி என்ற கற்பிதத்திற்கு பயந்து பலவற்றை தைரியமாக செய்யாமல் விட்டேன்.
குடும்பத்தில் இருந்து தியானம் பழகி எதை அடைவது.
நாம் மட்டும் எதையும் அடைந்து என்ன பயன்? எளியோரை போற்றி உதவி செய்து வாழ்வது ஓரளவிற்கு சரி என்று தோன்றுகிறது.
ஒரு மிருகம் வந்து இருந்து எதை சாதிக்கிறது. மனிதன் இருந்து மட்டும் என்ன வித்தியாசம்.
கேட்டால் கடவுள் கூறினார் என்று நேரிலே கேட்டு வந்தது போல் சொல்கிறார்கள்.
இருப்பதை இன்னும் மோசம் செய்வதே மனிதன் தான்.
ஒரு மிருகமாவது மற்றவருக்கு உணவாகி சாகிறது. மனிதன் அப்படி கூட இல்லாமல் எரிகின்றனர்.