Sunday, August 31, 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -2


                                               கீதைப் பதிவு அத்தியாயம் --2
                                              ----------------------------------------


ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜயன் சொன்னது
அங்ஙனம் இரக்கம் ததும்பி,கண்களில் நீர் நிறைந்து,பார்வை குறைந்து  துக்கப்பட்ட அர்ஜுனனுக்கு ,மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்(1)
அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்த்து,?(2)
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே.அது உனக்குப் பொருந்தாது.எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்துவிட்டு எழுந்திராய்(3)
அர்ஜுனன் சொன்னது
பகைவரைத் தொலைப்பவரே,மதுவைக் கொன்றவரே போற்றுதற்குரிய பீஷ்மரையும் , துரோணரையும் நான் எங்ஙனம் போரில் எதிர்த்துப் பாணங்களால் அடிப்பேன் (4)
மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல், பிக்ஷை ஏற்று உண்பதும் சாலச் சிற்ந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும் போகத்தையும் இம்மையிலேயே அனுபவிப்பவன் ஆவேன் (5)
நாம் இவர்களை ஜெயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜெயிப்பது இதில் நமக்கு எது மேலானது என்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர் வாழ விரும்ப மாட்டோமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர்.(6)
சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப் பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன்.எனக்குச் சிறப்பீனுவதை உறுதியாக இயம்பும்..நான் உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன், உபதேசித்தருளும்.(7)
பூமியில் நிகரற்றதும் ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும், அமரர்க்கு,அதிபதியாயிருக்கப் பெறினும் , என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை(8)
ஸஞ்ஜயன் சொன்னது
பகைவனைப் பொசுக்கும் குடகேசனாகிய அர்ஜுனன், ஹிருஷிகேசனாகிய கோவிந்தனுக்கு  இங்ஙனம் இயம்பிப் “போர் புரியேன்என்று பேசாதிருந்துவிட்டான்(9)
திருதராஷ்டிரா, இரண்டு சேனைகளுக்குமிடையில் இன்னற்படுகிற அர்ஜுனனுக்கு இளமுறுவல் பூத்தவராய் ஹிருஷிகேசன் இவ்வார்த்தைகளை இயம்பினார்.(10)
ஸ்ரீபகவான் சொன்னது
துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயருறுகிறாய்.ஞானியரது நல்லுரையையும் நவில்கிறாய். இருப்பார்க்கோ இறந்தார்க்கோ புலம்பார் பண்டிதர்.(11)
முன்பு எப்பொழுதாவது நான் நீ இவ்வரசர்கள் ஆகியவர்களில் யாராவது இல்லாதிருந்ததில்லை. இக்காயங்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற் போகமாட்டோம்.(12)
ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும் யௌவனமும் மூப்பும் உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது.தீரன் அதன் பொருட்டு மயங்கான் (13)
குந்தியின் மைந்தா, பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால் குளிர் வெப்பம் இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் நிலையாமையும் அவைகளின் இயல்பு.பாரதா அவைகளைப் பொறுத்துக்கொள்.(14)
புருஷ சிரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறாது,இன்பதுன்பங்களை ஒப்பாக உணர்கிறானோ அத்தீரனே சாகா நிலைக்குத் தகுந்தவனாகிறான்(15)
இல்லாததற்கு இருப்பு கிடையாது. இருப்பது இல்லாமற் போவதுமில்லை.உண்மையை அறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும் (16)
உலகெலாம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக.அழியாப் பொருளை அழிக்க யாருக்கும் இயலாது.(17)
நித்தியமாய் நாசமற்றதாய் அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் உடலங்கள் யாவும் அழியும் தன்மையினவாம் ஆதலால் பார்த்தா போர் புரிக.! (18)
ஆத்மாவைக் கொலையாளி என்றும் கொலையுண்பானென்றும் எண்ணும் இருவரும் அறியாதார். ஆதமா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதும் இல்லை.(19)
இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று( இருந்து பிறகு இறந்து போவதன்று)இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது.காயம் கொல்லப்படுமிடத்து ஆத்மா கொல்லப் படுவது இல்லை(20)
பார்த்தா,இவ்வாத்மாவை அழியாதது,மாறாதது, பிறவாவது, குறையாததுஎன்று அறிபவன் யாரைக் கொல்வான், யாரைக்கொல்விப்பான்.?(21)
பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக் கொள்வது போன்று ஆத்மா பழைய உடலங்களை நீத்துப் புதியன புகுகிறது.(22)
ஆயுதங்கள் அதை வெட்ட மாட்டா, தீ அதை எரிக்காது, நீர் நனைக்காது, காற்றும் அதை உலர்த்தாது.(23)
இவ்வாத்மா வெட்டுண்ணான்,வேகான்,நனையான், உலரான். இவன் நித்தியமாய், நிறைவாய் நிலையாய் அசைவற்றவனாய் என்றும் இருப்பான்(24)
இவ்வாதமா பொறிகளுக்குத் தென்படாதவன், சிந்தனைக்கு எட்டாதவன்,மாறுபடாதவன் எனப்படுகிறான்.ஆத்மாவை இங்ஙனம் அறிந்து துன்பத்தை அகற்று.(25)
ஒருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறான் என்று எண்ணுவாயானால், அப்போதும் , பெருந்தோளுடையோய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது(26)
பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் உறுதி எனின் விளக்க முடியாத விஷ்யத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது(27)
பாரதா உயிர்கள் துவக்கத்தில் தோன்றாமலும் , இடையில் தோன்றியும் , இறுதியில் தோன்றாமலும் இருக்கின்றன.இதைக் குறித்து வருந்துவானேன்(28)
இவ்வாத்மா வியப்புக்குரியது என்று விழிக்கிறான் ஒருவன் இது என்ன விந்தை என்று விள்ளுகிறான் வேறு ஒருவன்,ஆச்சரியம் என்று காது கொடுக்கிறான் இன்னொருவன், மற்றொருவன் இதைக் கேட்டும் அறிந்திலன்(29)
பாரதா,உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப் படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்(30)
ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது.அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை.(31)
பார்த்தா தற்செயலாய் நேர்ந்ததும் திறந்த சொர்க்க வாயில்போன்றதுமான இந்த யுத்தத்தை பாக்கியவான்களாகிய க்ஷத்திரியர்களே அடைகிறார்கள்.(32)



அற்ப்போர் ஆகிய இதனை ஆற்றாயேல்,அதனால் நீ ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்.(33)

மானுடர் உன்னை யாண்டும் இழிந்து பேசுவார்கள்.போற்றுதலுக்குரிய ஒருவன் தூற்றப்படுதல் இறப்பதிலும் இழிவே.(34)

பயத்தால் நீ போரினின்று பின் வாங்கினாயென்று மகாரதிகர்கள் எண்ணுவார்கள்.எவர்பால் நீ பெருமை பெற்றிருந்தாயோ அவர்பால் நீ சிறுமையுறுவாய்(35)

உன் பகைவர்களுன் திறமையைப் பழித்துப் பகரவொணாச் சுடு சொற்களைச் செப்புவார்கள். அதைவிடப் பெருந்துன்பம் யாது உளது.(36)
போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய்.வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய்.ஆகையால் கௌந்தேய.போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.(37)
இன்பம் துன்பம் லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச் சமமாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.(38)
ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு உனக்குப் புகட்டப் பட்டது.இனி பார்த்தா யோகத்தைப் பற்றிக் கேள். யோக புத்தியைப் பெறுவாயாகில் நீ கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய்.(39)
இதில் முயற்சி ஒன்றும் வீண்போதல் இல்லை.குற்றமொன்றும் வராது.இதைச் சிறிது பழகினும் பெரும் பயத்தினின்று இது காப்பாற்றும்.(40)
குருகுலத்துதித்தோய், இந்த யோகத்தில் உறுதி  கொண்டவனுக்குப் புத்தி ஒன்றேயாம்.உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பலகிளைகளை உடையனவும்  முடிவற்றவைகளுமாம்.(41)
வேதமொழியில் விருப்பமுடையவர்கள்,சுவர்க்கத்தை விளைவிக்கிற கருமத்துக்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பவர்கள்,கர்மம் நிறைந்தவர்கள், சுவர்க்கமே முடிவான பேறு என்பவர்கள்-இத்தகைய அவிவேகிகளுடைய புஷ்பாலங்காரமான வசனத்தைக் கேட்டு அறிவு கலங்கப் பெறுபவர்க்கும் போக ஐசுவரியத்தில் பற்று உடையவர்க்கும், உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை. அவர்களது புஷ்பாலங்காரமான சொற்கள் போக ஐசுவரியத்தைப் பெறுவதற்கான காமிய கரும விசேஷங்கள் நிறைந்தனவாயும்,புதிய பிறவிகளை உண்டு பண்ணுவனவாயும் இருக்கும்(42-44)
அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள், நீ இருமைகளினின்று விடுபட்டு எப்போதும் நடுவு நின்று, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக,(45)
எங்கும் நீர் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன் படுகிறவளவு ஞானத்தை உடைய பிரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன் படுகின்றன(46)
வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய் வினைப் பயனில் ஒரு போதும் உரிமை பாராட்டாதே.வினைப்பயன் விளைவிப்பவன் ஆகிவிடாதே.வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே. (47)
தனஞ்ஜெயா. யோகத்தில் நிலை பெற்று,பற்று அற்று, வெற்றி தோல்விகளை சமமாகக் கொண்டு கருமம் செய். நடுவு நிலை யோகம் என்று சொல்லப் படுகிறது(48)
சமபுத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல் புரிவது மிகக் கீழானதே. சமபுத்தியின்கண் சரணடைக. பயன் கருதுபவர் கயவர் ஆவர்(49)
மன நடுவு பெற்றவன் நன்மை தீமை இரண்டையும் இம்மையில் துறக்கிறான். ஆகையால் நீ யோகத்தைச் சார்ந்திடு.திறமையுடன் செயல் புரிதல் யோகம்.(50)
நடுவு நிற்கும் ஞானிகள் வினைப்பயனை விட்டொழித்து, பிறவித்தளை நீங்கி,கேடில்லாப் பெரு நிலை அடைகின்றனர்(51)
உன் அறிவானது எப்பொழுது அவிவேகம் என்னும் அழுக்கைக் கடக்குமோ,அப்பொழுது கேட்டதிலும் கேட்கப் போவதிலும் பற்றின்மையைப் பெறுவாய். (52)
(பல்பொருள்) கேட்டுக்கலங்கும் உன் அறிவு ஆத்மாவின்கண் என்று அசையாது உறுதி பெறுமோ, அன்று நீ யோகம் அடைவாய்.(53)
அர்ஜுனன் சொன்னது
கேசவா, சமாதியில் நிலைத்த நிறை ஞானியின் லக்ஷணம் யாது? உறுதியான அறிவுடையவன் எதைப் பெறுகிறான், எப்படி அமர்கிறான் எவ்வாறு நடக்கிறான்(54)
பகவான் சொன்னது
பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளையெல்லாம் அகற்றிஆத்மாவில் ஆத்ம திருப்தி அடைந்திருப்பவன் ஸ்திதப் பிரக்ஞன் என்று சொல்லப் படுகிறான்.(55)
துன்பத்தில் துடியாத, இன்பத்தில் நாட்டமில்லாத பற்று, அச்சம் சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனி எனப்படுகிறான்(56)

எவன் எங்கும் பற்றிலனாய்நலம் தருவதை அடைந்து மகிழாதும்கேடு தருவதை அடைந்துநொந்து கொள்ளாமலுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதி பெருகிறது.(57)
ஆமை தன் அவயவங்களை அடக்கிக் கொள்வதுபோல பொருள்களிடமிருந்துபொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலை பெறுகிறது.(58)
இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்களில்லை ஆசையுண்டு பரமாத்மாவை தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது(59)
நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாகப் பற்றி இழுக்கின்றன. (60)
யோக நிஷ்டன் அவைகளையெல்லாம் அடக்கி என்னைப் பரகதியாகக் கொண்டிருக்கிறான்.இந்திரியங்களை வசமாக்கியவனுக்கு  அறிவு நிலை பெறுகிறது.(61)
பொருள்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது.பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது.ஆசை சினமாக வடிவெடுக்கிறது.(62)
சினத்தால் மனக் குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை,, நினைவு நாசத்தால் புத்தி நாசம், புத்திநாசத்தால் ஆள் அழிகிறான்(63)
விருப்பு வெறுப்பற்றனவும் ஆத்மவசப் பட்டனவும் ஆகிய இந்திரியங்களால் விஷயங்களில் உலவுகின்ற மனவேந்தன்  மனத் தெளிவடைகிறான்(64)
மனவமைதியில் மனிதனது துன்பங்கள் அனைத்தும் ஒழியும்.ஏனெனில் மன வமைதி உடையவனுக்கு அறிவு விரைவில் ஆத்ம சொரூபத்தில் நிலை பெறுகிறது(65)
மனமடங்காதவனுக்கு ஆத்ம போதமுமில்லை, ஆத்ம பாவனையுமில்லை. ஆத்ம தியானமில்லாதவனுக்கு சாந்தி கிடையாது. சாந்தி இல்லாதவனுக்கு இன்பமேது.?(66)
கப்பலைக் காற்றானது நீர்மேல் நிலைகுலைப்பது போன்று,அலைகின்ற இந்திரியங்களைப் பின் தொடரும் மனது அவனது விவேகத்தை அரிக்கிறது.(67)
ஆகையால் ஆற்றலுடையாய்,யாருடைய பொறிகள்புலன்களிருந்து பிரிக்கப்பட்டு இருக்கின்றனவோ அவனது அறிவு நிலை பெற்றுள்ளது(68)

உயிர்கள் அனைத்துக்கும் எது இரவோ அதில் யோகி விழித்திருக்கிறான் உயிர்களெல்லாம் துய்த்துணரும் நிலை தத்துவ ஞானிக்கு இரவு(69)
அசைவற்ற நிறைகடலில் ஆறுகள் சென்றடங்குவதுபோல எம்முனிவன்பால் ஆசைகளனைத்தும் சென்று ஒடுங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான்.ஆசையுள்ளான் சாந்தியடையான்(70)
எப்புருஷன் ஆசைகளைஅறவே அகற்றி பற்றற்று அகங்கார மமகாரமின்றி நடமாடுகிறானோ அவன் சாந்தி அடைகிறான்(71)
பார்த்தா, இதுவே பிரம்ம நிலைப்பேறு ஆகும்.இதை அடைபவனுக்கு மோகமில்லை.இறுதி காலத்திலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்(72)
                  ஸாங்கிய யோகம் நிறைவு
 

 
                             

             

Friday, August 29, 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் -1.


                                             கீதைப் பதிவு---அத்தியாயம் --1.
                                             --------------------------------------------




மஹாபாரதமெனும் இதிகாசத்தில் பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் உள்ள 18 அத்தியாயங்களில் கூறப்பட்டவை ஸ்ரீமத் பகவத் கீதை எனப்படுகிறது.இவற்றில் அமைந்துள்ள சுலோகங்களின் எண்ணிக்கை எழுநூறு(என்று கூறப்படுகிறது. எண்ணிப் பார்க்கவில்லை)
குருக்ஷேத்திரப் போரில் நடப்பவற்றை நேரில் காணும் சக்தியை வியாச பகவான் ஸ்ஞ்ஜயனுக்கு( விருப்பு வெறுப்பு இல்லாதவன் எனும் பொருள்) அருளி இருந்தார். அவர் திருதராஷ்டிரனுக்கு நடப்பவற்றைக் கூறுவது போலும் அர்ஜுன ஸ்ரீகிருஷ்ண சம்பாஷ்ணைகளுமாக  கீதை விரிகிறது (பதிவின் நீளம் தவிர்க்க இயலாதது) 
அத்தியாயங்களின் சுருக்கம்
1)       அர்ஜுனவிஷாத யோகம்46 சுலோகங்கள் கொண்டது
2)       ஸாங்கிய யோகம் 72 சுலோகங்கள்.
3)       கர்ம யோகம்---43சுலோகங்கள்
4)       ஞானகர்ம ஸன்யாஸ யோகம் 42 சுலோகங்கள்.
5)       ஸன்யாஸ யோகம்29 சுலோகங்கள்
6)       தியான யோகம்---47 சுலோகங்கள்
7)       ஞானவிக்ஞான யோகம்30 சுலோகங்கள்
8)       அக்ஷப்பிரம்ம யோகம்---28 சுலோகங்கள்
9)       ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்---34 சுலோகங்கள்
10)    விபூதி யோகம்42 சுலோகங்கள்
11)    விச்வரூபதர்சன யோகம்55 சுலோகங்கள்
12)    பக்தி யோகம்---20 சுலோகங்கள
13)    க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்34 சுலோகங்கள்
14)    குணத்ரய விபாக யோகம்---27 சுலோகங்கள்
15)    புருஷோத்தம யோகம் ---20 சுலோகங்கள்
16)    தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்24 சுலோகங்கள்
17)    சிரத்தாத்ரய விபாக யோகம்---28 சுலோகங்கள்
18)    மோக்ஷ ஸன்யாஸ யோகம் ---78 சுலோகங்கள்.
(கீதை சம்ஸ்கிருதத்தில் இரண்டு வரி சுலோகங்களாக எழுதப் பட்டிருக்கிறது. அவற்றின் தமிழ்ப் பதவுரைகளாகப் பதிவிடுகிறேன் வருகை தந்து படித்துப் பயன் பெறவும்) 
             அர்ஜுன விஷாத யோகம் -அத்தியாயம் -1 
திருதராஷ்டிரர் சொன்னது
ஓ ஸஞ்ஜயா !தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்டநம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்.? (1)
ஸஞ்ஜயன் சொன்னது
அப்போது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும்( துரோண ) ஆச்சாரியாரை அணுகி( பின்வரும் ) வார்த்தையைச் சொல்லுவானாயினன் (2)
ஆச்சாரியாரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணி வகுக்கப் பட்டிருக்கும்  இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்(3)
இங்கே( பாண்டவப் படையில்) சூரர்களாகவும் ,பெரிய வில்லாளிகளாகவும் யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமானவருமான யுயுதானனும், விராட தேசத்து அரசனும் மகாரதனுமாகிய துருபத தேசத்து அரசனும், திருஷ்ட கேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசி ராஜனும், புருஜித் என்பவனும், குந்திபோஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமை உடைய உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடி இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் மகாரதர்களேயாவர். (4-6 )
பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்து கொள்ளும்.என்னுடைய சேனையின் நாயகர்களைப் பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்கிறேன் (7)
தாங்களும்,பீஷ்மரும்,கர்ணனும், போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாச்சாரியாரும், அசுவத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்.(8)
மேலும் எல்லோரும் என் பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாகவும்,பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும், யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர். (9)
பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவு கடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்கு அடங்கியது. (10)
படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்று கொண்டு எல்லோரும் பீஷ்மரையே காப்பாற்றுக. (11)
வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் அவனுக்கு (துரியோதனனுக்கு)உற்சாகத்தை ஊட்ட உரக்கச் சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்.(12)
பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது. (13)
பிறகு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவரும் தங்கள் தெய்வீகச் சங்குகளை உரக்க ஊதினார்கள். (14)
ஹிருஷிகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவ தத்தம் என்ற சங்கை நாதித்தான்.பெருவினையாற்றுபவனாகிய பீமசேனன் பௌண்டரம் என்ற பெரிய சங்கை ஊதினான்.(15)
குந்தியின் புதல்வன் ராஜா யுதிஷ்டிரன் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.(16)
விற்படையில் தலை சிறந்த காசிராஜனும், மகாரதிகனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும் விராட தேசத்து அரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்(17)
மண்ணாள்பவனே,துருபதனும் த்ரௌபதியின் புதல்வர்களும், தோள் வலிவுடையவனாகிய சுபத்திரையின் மகனும்,ஆக எல்லோரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்.(18)
மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய் திருதராஷ்டிரனின் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது.(19)
அரசே.! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்கும் முன் வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான் (20)
அர்ஜுனன் சொன்னது
அச்யுதா ! படைகள் இரண்டுக்கும் இடையில் என் தேரை நிறுத்துக. இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும் போரை விரும்பி முன் நிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன் (21,22)
புல்லறிவாளனாகிய துரியோதனனுக்குப் பிரீதி பண்ணும் பொருட்டு போர் புரிய இங்கு திரண்டிருப்போரை நான் காண வேண்டும் (23)


ஸஞ்ஜயன் சொன்னது

திருதராஷ்டிரரே,குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷிகேசர் இரண்டு சேனைகள் நடுவில் பீஷ்மர் துரோணாச்சாரியர்களுக்கு எதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களைப் பார்என்று பகர்ந்தார். (24,25)

அங்கேஇரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும் ,ஆச்சாரியர்களையும், மாதுலரையும், அண்ணன் தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும்,மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான் (26)

குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லோரையும் உற்றுப் பார்த்து பேரிரக்கம் படைத்தவனாய் இங்ஙனம் பகர்ந்தான். (27)
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன.வாயும் வறள்கிறது(28)
என் உடலில் நடுக்கமும் மெய்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது.மேலெல்லாம் தோலும் எரிகிறது(29)
கேசவா, என்னால் நிற்க இயலவில்லை.மனது சுழல்கிறது.கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன்(30)
கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை.வெற்றியையும், ராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் வேண்டவில்லை.(31)
கோவிந்தா, யாவர் பொருட்டு நாம் ராஜ்ஜியத்தையும் போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ அவர்களாகிய ஆசாரியர், தந்தையர், மக்கள், பாட்டன்மார், மாதுலர், மாமனார், பேரர் மைத்துனர், சம்பந்திகள் முதலாயினோர் உயிரையும் செல்வங்களையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர்.நமக்கு ராஜ்ஜியத்தால், போகத்தால் அல்லது ஜீவித்திருப்பதால்தான் ஆவதென்ன,?(32-34)
மதுசூதனா, நான் கொல்லப்படினும் மூவுலகை ஆள்வதற்கென்றும்  இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டுக் கொல்வேனா?(35)
ஜனார்தனா, திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப் போகிறது?இந்த ஆததாயிகளைக் கொல்வதால் பாபமே நம்மை வந்தடையும்(36)
ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிரப் புத்திரர்களைக் கொல்லுதல் நமகுத் தகாது. மாதவா உற்றாரைக் கொன்று நாம் இன்புற்றிருபது எங்ஙனம்?(37)
ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும் மித்திர துரோகத்தால் விளையும் பாதகத்தையும், காண்கிலராயினும், குல நாசத்தால் உண்டாகும் கேட்டை, நன்கு உணர்ந்த நாம்.ஏன் ஜனார்த்தனா இப்பாபத்திலிருந்து பின் வாங்கத் தெரிந்து கொள்ளலாகாது?(38-39)
குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.(40)
அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா, மாதர் கற்பிழக்கும்போது வர்ணக் கலப்பு உண்டாகிறது.(41)
கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்(42)
குல நாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலை குலைக்கப் படும்.(43)
ஜனார்தனா, குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.(44)
அரச சுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாவத்தைச் செய்யத் தலைப்பட்டோம் .அந்தோ.!(45)
எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலுமிருக்கிற என்னை கையில் ஆயுதம் பிடித்து திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்வார்களேயானால் அதுவே எனக்குப் பெரு நன்மையாகும்.(46)
ஸஞ்ஜயன் சொன்னது
இங்ஙனம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்து விட்டு துயரம் துய்க்கும் மனத்தினனாய் அர்ஜுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்(47)
          ( அர்ஜுன விஷாத யோகம் நிறைவு )                                                

             


                                      

             


    
















வினை தீர்க்கும் விநாயகன் கதை


                         வினைதீர்க்கும் விநாயகன் கதை
                         --------------------------------------------
இன்று(28-08-2014) விநாயகச் சதுர்த்தி பற்றிப் பல பதிவுகள் வரும் என் பங்குக்கு இது.இன்றைய பதிவுகள் ஏறக்குறைய எல்லாமே விநாயகர் வழிபாடு பற்றியும் அதனால் விளையும் பலன்கள் குறித்தும் இருக்கும். பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் அவரது ரூப விளக்கங்கள் குறித்தும் அழகான படங்களுடன் இருக்கும். என் பங்குக்கு நான் ஒரு , அதிகம் பேசப் படாத ஒரு கதையுடன் என் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்
விநாயகப் பெருமான் ஒரு முறை தன் மூஞ்சூறு வாகனத்தில் ஏறி இந்திரன் சபைக்குப் போய்க் கொண்டிருந்தாராம். இவர் உடல் எடை தாங்காமல் மூஞ்சுறு தடுமாற  இவர் கீழே விழுந்து விட்டாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரிக்க இவர் கோபமடைந்து தன்னுடைய தந்தங்களில் ஒன்றைப் பிய்த்து சந்திரனைத் தாக்கினாராம். அதனால்தான் இவருக்கு ஏக தந்தன் என்னும் பெயர் வந்ததாம்.
விநாயகர் தோற்றம் பற்றியும் பல கதைகள் உண்டு பரமேஸ்வரனும் பார்வதியும் கைலையில் மகிழ்ந்திருந்த காலத்தில் தேவர்கள் தாங்கள் தொடங்கும் எல்லாக் காரியங்களும் தடை பட்டுப் போகின்றன என்று கூறி வருந்தினர். சிவபெருமான் ஆவன செய்வதாகக் கூறினார். பின் பார்வதியும் பரமனும் யானை உருத் தாங்கி காடுகளில் மகிழ்ந்திருந்தனர். அதன் பலனாக அவர்களுக்கு மனித உடலுடனும் யானைத் தலையுடனும் ஒரு குழந்தை பிறந்தது அதுவே தேவர்களின் எல்லாச் செயல்களுக்கும் விக்னம் வராது காத்தது என்பது ஒரு கதை
ஒரு சமயம் பார்வதிதேவி குளிக்கச் செல்லும்போது தன் உடலிலிருந்து ஒரு அழுக்கை உருட்டி உருக் கொடுத்து அதைக் காவலுக்கு நிற்கச் சொன்னார். பரமசிவனுக்கும் வழி கொடுக்காத அந்த உருவத்தின் தலையை ஈசன் கொய்தார்.பிறகு தன் தவறு தெரிந்து தன் பூதகணங்களிடம் முதலில் எதிர்ப்படும் எந்த ஜீவராசியின் தலையாவது கொண்டுவரப் பணித்தார். அவர்கள் கொண்டு வந்த யானைத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார். பிறகு குளித்து வெளியில் வந்த பார்வதி ‘இந்தப் பிள்ளை யார் ‘ என்று கேட்டாராம். அது முதல் இவருக்குப் பிள்ளையார் என்று பெயர் வந்ததாம். சிவனுடைய பூத கணங்களுக்குத் தலைவனாக நியமிக்கப் பட்டார்/ அதனால் கணபதி ( கணங்களுக்கு அதிபதி) என்று பெயர் வந்தது.
விநாயகரைத் தென்னாட்டில் திருமணம் ஆகாத பிரம்மசாரி என்று கூறுவர். கார்த்திகேயனை வள்ளி தேவானை மணாளன் என்பர். ஆனால் வட நாட்டில் கணேசருக்கு இரு மனைவி. முருகன் பிரம்மசாரி.
ஓம் என்னும் எழுத்துப்போல் இருப்பதால் ஓங்காரஸ்வரூபன் என்றும் பெயர்.
கதைகள் எப்படி இருந்தால் என்ன. ?மனித நம்பிக்கையே முக்கியம். கதைகளுள் இருக்கும் சாரத்தை மட்டும் கவனிப்போம்.. ஏழை எளியவரும் நினைத்த மாத்திரமே அருள் பாலிக்கும் கடவுள் என்பது நம்பிக்கை
தென் நாட்டில் விநாயகர் வழிபாடு அவரவர் வீட்டில் அவரவர் சக்திக்கேற்றபடி நடந்து வந்தது. மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகாவிலும் கணபதி வழிபாடு பிரசித்தம். கடவுள் நம்பிக்கையைப் பயன் படுத்தி மக்களை ஒன்று திரட்டி , அவர்களுக்குள் சுதந்திர எண்ணங்களை எழுப்பியவர் லோகமான்ய பால கங்காதரத் திலகர். கூட்டுப் பிரார்த்தனை என்று கூறி மக்களை ஓரிடத்தில் கூட்டி சுதந்திர உணர்வை indoctrinate  செய்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் துவங்கிய இந்த வழிபாட்டு முறை வளர்ந்து கூட்டு கணேச வழிபாட்டுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. தற்காலத்தில் அது தமிழ் நாட்டிலும் புகுந்து விட்டது. இதில் ஒரு சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன என்றால் பெரும்பாலான கூட்டு வழிபாடுகளை முன் நின்று நடத்துபவர்கள் ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பது தெரிகிறது.
மஹாராஷ்டிரத்தில் சுதந்திர உணர்வினை ஊட்டத் துவங்கிய இந்தக் கம்யூனிடி வழிபாடுகள் மத ஆதிக்கத்தை தூண்ட உபயோகப் படுத்தப் படுமோ என்னும் அச்சம் எழுகிறது.
ஆண்டவனிடம் அடைக்கலம் அடைந்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவேண்டும். எல்லாம் அறிந்தவன் நாம் கேட்டுத்தான் கொடுக்க வேண்டுமா. மனம்சஞ்சலப் படும்போது அதிலிருந்து மீள சக்தி கொடு என்றால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது 

“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங்கலந்துனக்கு நான் தருவேன்; கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ் மூன்றும் தா.இது கடவுளிடம் பேரம் பேசுவது போலல்லவா இருக்கிறது. நாம் உண்ண விரும்பியதைக் கடவுளுக்கு என்று படைத்து நாமே உண்பதும், நமக்கு வேண்டியது நடந்தால் காணிக்கை என்று உண்டியலில் பொன்னும் பண்மும் போடுவதும் கடவுளைக் குறித்த பக்குவப் பட்ட மனம் இல்லாதிருப்பதையே காட்டவில்லையா.?பண்டிகைகளும் விழாக்களும் உற்றமும் சுற்றமும் கூடி மகிழ என்பதால் உண்டு களிப்பதில் தவறிருக்காது. ஆனால் அதே சமயம் இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது அதைவிடச் சிறந்ததல்லவா.?.
( இது நான் ஏற்கனவே பகிர்ந்த பதிவு ஒன்றின் ஒரு பகுதி. அதில் ஔவை அருளிய விநாயகர் அகவலின் பொருளை விளக்கி எழுதி இருந்தேன் .பிரார்த்தனை செய்யும் போது பொருள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து வெளிபாடு வந்தது. சரி கதைமாத்திரம் போதுமென்று அதைக்கத்தரித்து இது மட்டும் ) 
நான் வரைந்த விநாயகர்(அவர் முறைப்பதாக என் பேத்தி சொல்வாள்)




 













Monday, August 25, 2014

கீதை--பதிவுக்கு ஒரு முன்னுரை ...


                                   கீதை- பதிவுக்கு ஒரு முன்னுரை....
                                    ----------------------------------------------


முன்பு நான் ஒரு ஹிந்து என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் கிருஸ்துவர்களுக்கு ஒரு பைபிள், இஸ்லாமியருக்கு ஒரு குரான், என்பது போல் ஹிந்துக்களுக்கான மத நூல் எது எனும் கேள்விக்கு மதநூல் என்று தனியாக ஏதுமில்லை என்றும் ஸ்ருதிக்களும்  ஸ்மிருதிக்களும் , வேதங்களும் உபனிஷத்துக்களும்  கீதையும் ஹிந்துக்களின் நூல்களாகக் கொள்ளலாம் என்றும் எழுதி இருந்தேன்.ஆனால் இவற்றில் எதையாவது நீ கற்றிருக்கிறாயா என்னும் கேள்வி அவ்வப்போது மனதுக்குள் எழும். திருக்குறள் பற்றிப் பலரும் பேசுகிறோம். கம்பராமாயணம் பற்றிப் பலரும் எடுத்துக்காட்டிப் பேசுகிறோம். இதேபோல் திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறோம். இவற்றில் எதையாவது நாம் முழுவதும் கற்றிருக்கிறோமா என்னும் கேள்விக்கு நெஞ்சில் கை வைத்து உண்மையாக பதில் பேச பலருக்கும் இயலாதது. குறைந்த பட்சம் நாம் மேற்கோள் காட்டும் பகுதிகளையாவது நாம் ஓரளவாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா.?

பல நூல்களை நாம் கற்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்று அவற்றில் சொல்லி இருக்கும் விஷயங்கள் பலவும் நம்மால் கிரகிக்க முடிவதில்லை இரண்டு நம் மொழி அறிவு. ( தமிழானால் பொருள் விளங்கா நடை, சம்ஸ்கிருதமானால் அது வழக்கில் இல்லாததால் நம்மால் படிக்க முடியாமல் இருப்பது) மூன்று அவற்றை விளக்கி உரை கூறுபவர்களின் வியாக்கியானங்கள் ஒருவருக்கொருவர் மாறு படுவது. இருந்தாலும் ஒரு முறையாவது பொருள் புரிந்து படித்துக் கிரகிப்பது நலமாக இருக்கும் . இந்த முயற்சியின் விளைவாக பகவத் கீதையை தமிழில் படிக்கத் துவங்கி இருக்கிறேன் நான் படிக்கத் துவங்கி இருப்பது ஸ்வாமி சித்பவாநந்தரின் விரிவுரை.பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கும் இந்த நூலை முதலில் எடுக்கவே தயக்கமாய் இருந்தது நான் சுவாமி சின்மயாநந்தாவின் கீதையின்  18-நாள் விளக்கச் சொற்பொழிவை 1960-களில் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறேன் கேட்கும்போது விளங்குவது போல் இருந்தது நினைவு படுத்தும் போது தெளிவாகத் தெரிவதில்லை என் வலையில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் தொடராக எழுத உத்தேசம். அது எப்படி வரப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதலில் நான் படித்துக் கிரகிக்க வேண்டும் பின் அதை வலையில் பகிர வேண்டும். என் உள்மனது இது மீண்டும் உன் ஏரியா அல்லவே என்கிறது. முதலில் முகவுரையாகச் சில கருத்துக்கள். கூடியவரை எளிதாகவும் சுருக்கமாகவும் எழுத உத்தேசம் ( இந்தப் பதிவில் நான் என் கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை.படித்துக் கிரகித்ததை எழுதுகிறேன் சில வார்த்தைகளின் பொருள் முழுவதும் விளங்குவதில்லை. . ஒரு கனமான விஷயம் எழுதலாமா என்று தோன்றினாலும்  துவங்கி விட்டேன்.)

வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டாலும் அவற்றிலிருந்து தெள்ளி எடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது இன்னொரு பெயர். உபநிஷதங்களில் உள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவு பட வைக்கிறது பகவத் கீதை. பிரம்ம சூத்திரம் உபநிஷதங்கள், பகவத் கீதை ஆகிய இம்மூன்று நூல்களும் பிரஸ்தானதிரயம் என்னும் பெயர் பெறுகிறது. இந்து மத நூல்கள் எனும் கேள்வி எழும் இடத்தில் அவை பிரஸ்தானதிரயம் என்று கூறலாம்.
பகவத் கீதை ஒரு கொலை நூல். அதைப் படிக்கலாகாது என்று கூறுவோரும் உண்டு, எப்படியாவது எதையாவது பேசி அர்ஜுனனைப் போரில் புகுத்திவிட வேண்டும் என்னும் நெருக்கடி நேரத்தில் கூறப் பட்டது கீதை. கொலை புரிதல் பாதகர்களின் செயல். கொலை மறுத்தல் சமயக் கோட்பாடு. கொலை செய்வதும் கொலை மறுத்தலும் ஒவ்வா. சமய நெறியினைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையாலும் தொடக்கூடாது என்பது ஒரு வாதம். கீதை இக்கோட்பாட்டின் மூலத்தையே ஆராய்கிறது. இயற்கை முழுவதும் ஒரு முடிவில்லாக் கொலைக் களம் என்கிறது கீதை. அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள் நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.

ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர் இறக்கிறது. உடலை உண்டுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள் படுகிறது. சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப் படுகிறது..ஆக படைத்தல் காத்தல் மறைத்தல் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. மரணத்தை உணர்ந்து கொண்டால் மற்ற இரண்டும் எளிதாக விளங்கும்.
”இயற்கையைக் கொலைக் களன் என்றால் கீதையை கற்றுக் கொண்டே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்புவோர் கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீ கொலை செய்யாதிருக்க முடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நிற்காதே. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு எனும் போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்து.ஆயினும் அதனிடத்துப்பற்று வைக்காதே”. இயற்கை எனும் கொலைக்களத்தில் வாழ்வு எனும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுவதற்கு பகவத் கீதை எனும் கொலை நூலை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது கெட்டவர்கள் தோன்றி பெரிய குழப்பத்தை கிளப்புவதற்கு கீதை ஆதரவு தருவது போல் தோன்றும் வெடிகுண்டு போட
முயலுபவருக்கு அது வெடி மருந்து போன்றது.கொல்லுபவன் கொலை பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது.கருமம் மனிதனை பந்தப் படுத்தாது என்றும் அது போதிக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்துவிட்டால் என்னாவது என்பது கேள்வி.இவ்வாறு கீதையின் மீது ஆக்ஷேபம் கொண்டு வருவோர் உளர்.
(இதை எழுதும்போது என் நண்பன் ஒருவன் கூறியது நினைவுக்கு வருகிறது. மனிதன் எந்தச் செயலைச் செய்தாலும் அது கீதையின்படி சரியே என்று justification செய்து தப்பித்துக் கொள்ள வழி இருக்கிறது என்பான்.)

கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கிறதா என்று வாசிப்பவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். மதாச்சாரியர்களும் ,சமூகத்துக்கு நல்வாழ்வு வழங்கியவர்களும் கீதா சாஸ்திரத்தைப் பின் பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான போதனை உடையதாய் இருக்க முடியாது. அறிவிலிகள் ஒரு நூலை முழுவதுமாக அறிந்து கொள்ள வில்லையானால் அது நூலின் குற்றமன்று. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக சாஸ்திரத்தை கீழ் மக்கள் பொருள் படுத்துவார்களேயானால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றமாகாது. பல்லாயிரம் மக்களுக்கு பரமார்த்திக வாழ்வுக்கு அது வழி காட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதை செய்யவல்லது. புலனடக்கமும் பக்தியும்தன்னலத் தியாகமும். தபசும் தொண்டும் புரிதலும் இல்லாத கீழ் மக்களுக்கு கீதை உதவாது என்பது கோட்பாடு.

நல்ல கல்வி பெறல், நல்ல பயிற்சி பெறல் ராஜ்ஜியம் நிறுவுதல், திரவியம் தேடுதல்,போன்ற இம்மையில் இன்பமூட்டும் யாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர். நெருக்கடி நிலையில் செயலாற்ற அர்ஜுனன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படவில்லை.அவன் அச்சுதனிடம் சிரேயஸ் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பிக்கிறான் அவனது மனநிலை சிரேயஸைப் பெறுவதற்கு பண்பட்டிருந்தபோது கிருஷ்ணன் உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப் புகட்டுகிறான் யோகமும் பக்தியும் ஞானமும் அடங்கப் பெற்றது சிரேயஸ்.. அது முக்தி மார்க்கம்

பகவத் கீதையில் முதல் அத்தியாயத்தில் பகவானின் பேச்சு ஒன்றுமில்லை. 


இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களில் அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்.  வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவனென்பது கீதையின் கோட்பாடு.

மனிதனின் அறிவு எல்லாத் துறைகளிலும் வளர வளர வேறொரு பேருண்மையும் உணரப் படுகிறது பரந்த அறிவு வளர வளர மேலும் அறிய வேண்டியது அகண்டகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகும் அனைத்துக்கும் மூல காரணம் எது என்பதை சான்றோர்கள் அனுபூதியில் உணர்ந்தனர். மூலதத்துவத்தை அறிந்த பின் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய அறிவு பிரம்ம வித்தை என்று பெயர் பெறுகிறது. இந்த பிரம்ம வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும் அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா பின் வாங்குவதா என்று. இவ்ற்றில் ஒன்றைக் கூறுவதற்குப் பதில் பிரம்ம வித்தையை எடுத்தியம்பினார். புது சந்தேகங்கள் பிறக்க இடமில்லாது அறவே அகற்றிவைப்பது சாலச் சிறந்ததாகிறது.ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து அளிக்கிறார்.



கீதையில் 18 அத்தியாயங்களில் உள்ள 18 யோகங்களையும்  மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடைத்து வைக்கலாம்.கர்ம யோகம், ராஜயோகம், பக்தி யோகம்,மற்றும் ஞான யோகம் என்பவையே அவை. ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகம் என்றும்,பிறகு ராஜயோகமாகப் பரிணமிக்கிறது என்றும் அதிலிருந்து பக்தி யோகம் என்று ஓங்கி. இறுதியில் ஞான யோகமாக முற்றுப் பெறுகிறது என்று பொருள் கொள்வது ஐதிகமாக வந்துள்ளது. இந்த நான்கினுள் வேற்றுமையோ தாரதம்யமோ பாராட்டுகிற அறிகுறிகளைக் காண முடியாது.ஒரு யோகம் மற்றொன்றுக்கு முந்தியதுமல்ல பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல. வாழ்க்கை எனும் ரதத்துக்கு அவர் நான்கு யோகங்கள் எனும் குதிரைகளைப் பூட்டுகிறார். அவை வெண்குதிரைகளாக இருப்பது அவற்றின் சாத்துவிக இயல்பையும் தூய்மைத் தன்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து செலுத்துவதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும் நான்கு யோகங்களும் ஏக காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப் படும்போது வாழ்க்கையின் ல்ட்சியம் இனிது நிறைவேறுகிறது.

பகவத் கீதை மஹா வாக்கிய விளக்கமாக அமைந்திருக்கிறது மஹா வாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்துமாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்கிறது. மஹாவாக்கியங்களுள் ஒன்று தத்  த்வம்  அஸி
அதில் த்வம் நீ, தத்-அதுவாக, அஸி- இருக்கிறாய். என்று பொருள் படும்

கீதையில் பதினெட்டு அத்தியாயங்களும் த்ரிஷட்கம் அல்லது 3x6 என்று அறியப்படுகிறது. முதல் ஆறு அத்தியாயங்களும்  த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை, அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம் அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது  தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்.

பகவத் கீதைக்கு விளக்கங்கள் அல்லது பாஷ்யங்கள் எழுதியவர் பலர். அவற்றில் சில முரண்பாடுகள் இருக்கலாம் பாஷ்யக்காரர்களில் பெரும்பாலோர் அத்வைதம் துவைதம் விசிஷ்டாத்துவைதம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருப்பர். கீதையின் தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவது அவர்கள் மனப்பான்மைக்கு ஏற்றபடி மாறி வருகிறது. பகவத் கீதையை ஒரு கண்ணாடி என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷ்யமும் அதில் தோன்றும் பிம்பம்போன்றது அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது.கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது.அங்ஙனம் ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக் கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்கியானம் ஒன்றுக்கும் உதவாது. ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம் எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம்வெறும் பெயரளவில்  என்றும் கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில் அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப் பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றனஎன்று யோகேஸ்வரன்  உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.

மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. அவற்றை will, emotion, cognition என்று நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி ஸ்வரூபிணியாக அன்னை பராசக்தியே எழுந்தருளி உள்ளார் என்பது கோட்பாடு. மனதில் இந்த மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிர்தல் வேண்டும் அப்போதுதான் பண்பாடு பூர்த்தியாகிறது. கீதா சாஸ்திரம் இவற்றை முறையாக இயம்புவதால் அது எல்லோருக்கும் பொது நூலாகும் 

 .    .     
. இனி வரும் தொடர்களில் கீதையின் சுலோகங்களுக்கு தமிழில் பதவுரை போல் எழுத உள்ளேன். முதலில் தமிழில் transliterate செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் அதை என்னால் சரியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வித்தியாசமான பதிவு ஒரு வித்தியாசமான பதிவரிடமிருந்து.... பார்ப்போம் வரவேற்பு எப்படி என்று.      


 
   

.

.
        . 
        ,