Wednesday, November 30, 2022

நாடக மேடை நினைவுகள்

 

நாடக மேடை நினைவுகள்


                                       நாடகமேடை நினைவுகள்
                                       -------------------------------------.
நினைவுகள் சுமை என்று போனபதிவில் எழுதியவன் இப்போது நினைவுகள்சுகம் என்று எழுதுகிறேன். What an irony.....!)

நான் பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறேன் என்பதை என் பழைய பதிவுகள் மூலம் தெரிவித்திருக்கிறேன் பார்க்க ;நான் போட்டநாடகங்கள் “என் பழைய எழுத்துக்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திருச்சியில் குடியிருப்பில் மனமகிழ் மன்ற போட்டிக்கான துண்டுபிரசுரம் ஒன்று கண்ணில் பட்டது.


 ஏற்கனவே நான் போட்ட நாடகங்கள் குறித்து எழுதி இருந்தாலும் அவற்றில் வெளியிடாத சில நிகழ்வுகள் மனத்திரையில் வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை அந்தப் பதிவின் பின்னூட்டமாக திரு ஜீவி எழுதி இருப்பதை மீண்டும் படிக்கும் போது மனம் மகிழ்கிறது என்பதும் நிஜம் நாடகம் அரங்கேறியபோது கிடைத்தமகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது  . ஜீவி எழுதி இருந்தார்

ஜீவி said...
//நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜிஜெமினி என்ற நினைப்பு.//

//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- 
என்று எழுதியிருந்தேன்..//

1963 
பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜிஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.

சிவாஜியும்ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளிதொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!

ஆகசினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள்போலிருக்கு!
நான் பார்த்த துண்டு பிரசுரம் அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற இருந்ததை விளம்பரப் படுத்தியது

பெங்களூரில் முரசொலி சொர்ணம் எழுதி இருந்த விடை கொடு தாயே எனும் நாடகத்தை அப்போதைய கல்வி அமைச்சர் திருமதி கிரேஸ் டக்கர் தலைமையில் அரங்கேற்றினோம் .
திருமதி கிரேஸ் டக்கர் முன்னிலையில் 
 
பணியில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து ஒத்திகை எல்லாம் பார்த்து நாடகம் நடைபெற இருக்கும் ஒரு நாள் முன்னர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நோய்வாய்ப்பட செய்வதறியாது திகைத்து நின்றோம் நான் அந்த நாடகத்தை இயக்கி வந்ததால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியும் . இருந்தாலும் அந்த பாத்திரத்துக்கான உடல்வாகு இல்லாததால்  கதாநாயகியின் தந்தை வேடத்தில் கால் நொண்டியாக நான் நடிக்கவும் முக்கிய கதாபாத்திரத்துக்குக் குழுவில் இருந்த இன்னொருவரையும் போட்டு தயாரானோம் புதிய வேடத்தில் அவரும் புதுசாக ஒரு வேடத்தில் நானும் அன்று இரவு முழுவதும் ஒத்திகை செய்து தயாரானோம்
நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க ஒரு நடிகையும் இன்னொரு முக்கிய பாத்திரத்துக்காக இன்னொரு நடிகையும் தேவைப் பட்டனர். தமிழ் தெரிந்த தொழில் நடிகைகள்  நாடகத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தேடிப்போகவேண்டும் எங்கெல்லாமோ விசாரித்து நடிகைகளைக் கண்டு பிடித்தோம் நாடகம் நன்றாயிருக்க ஒரு பாடலும் ஆடலும் வேண்டும் என்று குழுவினர் விரும்பினர் நாடகத்தில் இடைச் செருகலாக பாட்டையும் நடனத்தையும் வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமிருக்கவில்லை. இருந்தாலும் டிக்கட் விற்று பார்வையாளர்களைக் கொண்டு வர வேண்டி இருந்ததால் காம்ப்ரமைஸ்செய்ய வேண்டியதாயிற்று, ( அமெச்சூர் நாடகத்திலேயே அப்படி என்றால் தொழில் முறை சினிமாவில் ஒரு டான்ஸ் ஒரு ஃபைட். ஒரு குத்துப் பாட்டு என்று வருவதில் ஆச்சரியம் இல்லை. தொழில்முறை நடிகைகள் கூடவே அம்மா அல்லது யாராவது துணைக்கு என்று அழைத்து வருவார்கள். அவர்கள் போக வர போக்குவரத்துப்படி (ஆட்டோசார்ஜ்) டிஃபின் காஃபி என்று செலவுகள் எகிரும். ஆகவே நடிகைகளை ஒத்திகைக்கு நான்கு முறைக்குமேல் வரச் சொல்ல மாட்டோம். அந்த நான்கு ஒத்திகைக்குள் வசனம் மனப் பாடம் செய்து நடிக்கவும் வேண்டும் நமக்கு திக் திக் என்று இருக்கும். ஆனால் அவர்கள் அது பற்றிக் கவலைப் படவே மாட்டார்கள் கடைசி நாள் ஒத்திகையின் போது இசை சகிதம் நடக்க வேண்டும். நாடகத்தில் நடிப்பவர்களுக்கு இருக்கும் அதே பொறுப்பு, சொல்லப்போனால் கூடுதல் பொறுப்பு மேடை விஷயங்களை ஒருங்கிணைப்பவருக்கு உண்டு, வசனம் சரியாக மனப் பாடம் செய்யாதவர்களோ , அல்லது மேடையில் மறந்து போகிறவர்களுக்கென்றே ப்ராம்ப்டர் ஒரு வரப் பிரசாதி. மறக்கும் வசனத்தை எடுத்துக் கொடுக்க வேண்டி இருக்கும் . அதே நேரம் அவர் குரல் கேட்கக் கூடாது. இதற்காகவே வசனம் மறப்பதுபோல் இருந்தால் நடிகர் ப்ராம்ப்டர் இருக்குமிடம் நாச்சுரலாகத் தோன்றுவதுபோல் வந்து விட வேண்டும்
பாட்டும் டான்சும் வேண்டும் என்று குழுவினர் விரும்பினர், பாடவைக்கவும் ஆடவைக்கவும் தகுதி எனக்கிருக்கவில்லை. அதே சமயம் பாட்டும் டான்சும் வேண்டும் அப்போது பிரபலமாயிருந்த “காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பெண்ணு மணவிழா “என்றபாட்டை ரெகார்டில் ஒலிக்கவிட்டு நடிகையர் இருவரையும் இடைவேளையின் போது அவர்களுக்குத் தெரிந்தபடி ஆடச் சொன்னோம். இடை வேளையின் போது ஒருவர் ( பெயர் நினைவில்லை )உயிருள்ள தவளை மீன் போன்றவற்றை முழுங்கி வெளியில் உயிருடன் எடுப்பதாகவும் ஒரு நிகழ்ச்சி இருந்தது பெங்களூரில் பெயர் பெற்ற குப்பி தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
 அந்த நாடகம் மேடையேற்றியதும் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்.நாடக உலகம் நிறையவே குழிகளும் குண்டுகளும் நிறைந்தது. மனசிலுறுதி இல்லாவிட்டால் கெட்டுப் போகும் வாய்ப்புகள்நிறையவே இருக்கும் .நாடகத்துக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாத நடிகைகள்தான் கிடைத்தனர். நாடகம் ஒத்திகைக்கு வருபவர் வந்ததும் அனைவரையும் greet  செய்ய வேண்டுமென்றும் போகும்போது விடை பெற்றுப் போக வேண்டும் என்று ஒரு விதி செய்திருந்தோம். அதன் படி ஒரு நடிகை வரும்போது வணக்கம் சொல்வார் போகும் போது “எல்லோருக்கும் வரேனுங்க “என்று சொல்வாள். அப்படிச் சொல்வது சரியல்ல என்று புரிய வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. ஒரு நடிகை கூட வந்தவர் ஒரு முறை “பதம் பார்ப்பது என்றால் என்னங்க அர்த்தம்  வேறு ஒரு நாடகத்தில் அந்த வசனம் வருகிறது “என்று கேட்டாள். பதம் பார்ப்பது என்றால் சுவைப்பது என்னும் பொருள் உண்டு என்று தெரியப் படுத்தினேன் அதற்கு அவள் அந்த நடிகையைப் பதம் பார்க்கிறீர்களா என்று கேட்டாளே பார்க்கலாம்..! என் சப்த நாடியும் பயத்தால் நடுங்கியது. பிறகு அம்மாதிரி பேசுவது அநாகரிகம் என்று எடுத்துரைத்தேன்
திருச்சியில் “ஆராமுதா அசடா “என்னும் நாடகத்தை ஒருதடவை கிருஷ்ண கான சபாவுக்கும் மறுமுறை ஸ்ரீரங்கத்திலும் மேடை யேற்றினோம். அதில் நடித்த பலரும் சக அதிகாரிகள். தொழிற்சாகையில் பணி வாங்குவதை விட நாடகம் மேடை யேற்றுவது சிரமம் என்று புரிந்து கொண்டார்கள். ஒத்திகைக்காக நடிகையை வரவழைக்க அதிகாலையில் புறப்பட்டுப்போய் அவர்கள் வீட்டில் செய்தி சொல்ல என்னுடன் வந்த சக அதிகாரி , இந்தப் பிழைப்பே வேண்டாம் பாலு என்பார். ஆனால் நடிப்பது அவருக்கு விருப்பமானதாய் இருந்தது . என் மனசாட்சி சிறுகதையை நாடக வடிவில் எழுதி மேடை ஏற்றினோம். அதில் வரும் கதாநாயகன் impotent  என்று சித்தரிக்கப் பட்டு இருக்கும் அந்த வேஷத்தில் நடிக்க பலரும் தயங்கினர்.இருந்தாலும் நாடகத்தின் மேல் இருந்த காதலால்கத்திமேல் நடப்பது போன்ற பாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்தார் கதாநாயகன்
1963-ல் பெங்களூரில் மேடையேற்றிய வாழ்ந்தே தீருவேன் “என்னும் நாடகம் திருச்சியில் எனக்குப் பரிசு பெற்றுத் தந்தது
ஓ....! அந்த உலகமே தனி...! அதன் நினைவுகளும் சுகமே.      
     .                      


Saturday, November 26, 2022

sசுபாஷிதம்அல்லது நன் மொழிகள்

 

சுபாஷிதம் அல்லது நன்மொழிகள்


                                  சுபாஷிதம் அல்லது நன்மொழிகள்.
                                  -----------------------------------------------  


பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? தலைப்பின் மூலம் வாசகர்களைக் கவர முடியுமா? வாசகர்களைக் கவர்வதா நோக்கம்? உனக்குத் தெரிந்ததை உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள். அனுபவங்களைப் படிக்கும் போது சிறு கதை படிப்பது போல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. பத்து கட்டளைகள் என்று தலைப்பிட்டால் இவன் யார் நமக்குக் கட்டளையிட என்று பதிவைச் சீந்தாமலே போகலாம் பத்து அறிவுரைகள் என்று தலைப்பிட்டாலும் எழுதுபவன் உயர்ந்த நிலையில் இருக்கும் தோற்றமளிக்கும்  இருந்தாலும் ஒரு தலைப்பு வேண்டுமே. நான் கற்றவற்றையும் என் மக்களுக்குக் கற்பிக்க முயன்றதையும் கூறும் இப்பதிவு சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் என்று இருந்தால் தவறாய் இருக்காது என்று நம்புகிறேன்

நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன, சிலவற்றை அடியோடு மாற்ற வேண்டும் போல் இருக்கும் . மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் மாற்றக் கூடியவற்றை மாற்றும் உறுதி வேண்டும். மாற்ற முடியாதது எது மாற்றக் கூடியது எது என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்                                                                 
நாம் பேசும் வார்த்தைகளில் நமக்குக் கட்டுப்பாடு வேண்டும்.பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான் . பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை. பேசப்பட்ட வார்த்தைகளை மீட்டு எடுக்க முடியாது ஆனால் நடப்பது என்னவென்றால் அதிகமாகத் தவறுதலாகத் திறக்கப் படுவது வாயே..
             
இன்றென்பது நேற்றைய திட்டமிடப்படாத நாளை .நாளை என்ற ஒன்றே நிச்சயமில்லை என்றும் இன்றையப் பொழுதை நலமாகச் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை சுவைக்காது. நல்லதே நடக்கும் என்ற எண்ணமே திட்டமிடுதலின் ஆதாரம் என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை நல்லது நடக்கும் என்று நம்பு. அல்லது நடந்தாலும் ஏற்கத் தயாராய் இரு Hope for the best and be prepared for the worst ஆகவே எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் .திட்டமிட்டதைச் செய்ய வேண்டும்

வாழ்வில் குறிக்கோள் என்று ஒன்று இருக்கவேண்டும் அந்தக் குறிக்கோளும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும் என் மக்களிடம் நான் கூறுவது உன் குறிக்கோள் நட்சத்திரத்தை எட்டுவதாக இருக்கட்டும் முயற்சி செய்யும்போது குறைந்த பட்சம் மர உச்சியையாவது அடையலாம் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றுஒரு சொல் வழக்கில் உண்டு, அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளத்தான் வழிவகுக்கும்  பருந்துகள் மிக உயரத்தில் பறக்கின்றன ஏன் என்றால் அவை தம்மால் முடியும் என்று நம்புகின்றன.

என்னதான் திட்டமிட்டாலும் தன் திறமையில் நம்பிக்கை வைத்தாலும் கடின உழைப்பின்றி அவை சாத்தியமாகாது கடின உழைப்புக்கு மாற்று இல்லை மனிதன் ஒரு தனித்தீவாக இயங்க முடியாது அடுத்தவன் என்று ஒருவன் எப்போதும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளரை தன் முதலாளி போன்று நினைக்க வேண்டும் என்பார்கள். நம்மை அடுத்தவன் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் அடுதவரையும் நாம் நடத்த் வேண்டும் தன்னை தனக்கு மேலிருப்பவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதேபோல் நமக்குக் கீழ் இருப்பவரையும் நாம் பாவிக்க வேண்டும்
எதுவும் செய்யாது இருப்பவர்கள் செய்யும் பணியில் அவர்களை அர்ப்பணித்துக் கொண்டால் சும்மா இருப்பது என்ற ஒன்றே இருக்காது. செய்யும்பணியின் மேல் காதல் கொள்ள வேண்டும் செய்யும் பணி எதுவாயிருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க விரும்பவேண்டும் தோட்டி வேலை செய்தாலும் தோட்டிகளில் சிறந்தவனாய் இருக்க வேண்டும்
இருந்த நாட்களை விட வர இருக்கும் நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளலாம் என்னுடைய மேற்கூறிய நன்மொழிகளின்படி நடந்தால் என்று கூறிக் கொள்கிறேன்
என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய வாசகங்களை உங்களுடன் பகிர்கிறேன்

1) Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other
.
2.) Nothing is opened more often by mistake than the mouth
3.) Today is the tomorrow you didn’t plan for yesterday.

4.) Plan your work and work your plan

5.) Aim at the stars then atleast you can reach the tree top

6.) They fly high because they think they can

7.) There is no substitute for hard work

8.) What a man dislikes in his superiors, let him not display in his treatment to his inferiors  
      
9.)   Work is the refuge of people who have nothing better to do

10.)  In those days , he was wiser than he is now;;he used to frequently take my advice

Tuesday, November 22, 2022

என்றென்றும்,;;;;;;;;;;;;;;;

 

என்றென்றும் எப்பொழுதும் என்னருகே


                         என்றென்றும் எப்பொழுதும் என்னருகே
                         -------------------------------------------------------ஔவையார் “இனிது இனிது ,ஏகாந்தம் இனிது” என்று கூறியதாகப் படித்த நினைவு. ஔவையர்ர் தனித்தே இருந்ததால் அதுவே அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம் இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது “தனிமையிலே இனிமை காண முடியுமா” சரி இப்போது இந்த ஆராய்ச்சிக்குக் காரணம் என்ன. இரண்டு மூன்றாம் முறையாக என்னைத் தனியே விட்டு விட்டு என் மனைவி பெங்களூர் இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு “லலிதாசஹஸ்ரநாம“ பாராயணம் செய்யப் போயிருக்கிறாள்.இராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ஒரு மில்லியன் முறை லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறார்கள் இந்த ஆண்டு ஜூலை மூன்றாம் தேதியுடன் முடிவடைகிறது இதில் இவள் பங்காக ,சேது கட்டும்போது அணிலின் சேவை போல பாராயணத்தில் பங்கு கொள்ள விரும்புகிறாள். அவள் என்னிடம் அருகில் ஐயப்பன் கோவிலிலிருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. முப்பது நாற்பது பேர் போகிறார்கள் நானும்போகட்டுமா.?என்று கேட்டபோது நானும் மிகப் பெருந்தன்மையாகஉன் மனசுக்குப் பிடித்ததை நீ செய்ய நான் என்றும் தடை சொல்லமாட்டேன்என்று கூறினேன் . அவளுக்கு என்னைப் பற்றிய கவலை. காலை உணவு மதிய உணவு எல்லாம் செய்துவிட்டுத்தான் போவாள். நானே பார்த்துக் கொள்கிறேன் என்றாலும் அவளுக்கு மனசு கேட்காது. நேரத்துக்கு எடுத்துப் போட்டு நான் உண்ண வேண்டும் என்னும் கவலை. அவளுக்குத் தெரியும் உணவு விஷயங்களில் நான் எப்போதுமே கவனம் செலுத்தியது கிடையாது. ஆக்கிப் போட்டு எடுத்து உண்ண சோம்பல்படுவேன் என்பது அவள் கணிப்பு. இருந்தாலும் மனசில் ஆண்டவன் பெயர்பாட ஆவலும் அதிகம்.என்னைத் தனியே விட்டுப் போக மனசில்லாமல் எல்லாவற்றையும் செய்து வைத்துக் கிளம்பினாள். முதல் முறை போனபோது உண்மையைச் சொல்லப்போனால் ஒரு படத்தில் ஜனகராஜ் தங்கமணி ஊருக்குப் போயிட்டா” என்று கூவுவாரே அதுபோல் இருந்தது. ஆனால்..........போனபிறகு ஒரு வெறுமையை உணர்ந்தேன்
காலை ஏழரை மணிக்குக் கிளம்பினாள் நான் எழுந்து காலைக் கடன்களை மட்டும் முடித்திருந்தேன் குளிக்க வேண்டும் காலை உணவு உண்ண வேண்டும். வேலைக்காரி எந்நேரத்திலும் வரலாம் அவளுக்குக் குறிப்பிட்ட நேரம் இல்லை. நான் குளிக்கச் செல்லும் போது அவள் வந்தால்.....அவள் வந்து போனபிறகு குளிக்கலாம் . அதற்குள் காலை உணவு நேரம் தவறலாம். காலை எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் தினமும் அழைக்கும் என் மகன்களின் தொலை பேசி அழைப்பு வரும்போது அதை அட்டெண்ட் செய்யாவிட்டால் கலவரமடைவார்கள். நான் குளிக்கச் சென்றிருக்கும்போது அழைப்பு வந்தால்...?என் கேட்கும் திறன் பற்றி நான் கூறத் தேவையில்லை குளியலைத் தள்ளிப் போட்டேன். குளிக்காமல் உண்ணும் பழக்கமில்லாததால் காலை உணவு உண்பதையும் தள்ளிப் போட்டேன். எதிலும் மனம் ஒட்டவில்லை. சரி சிறிது நேரம் கணினியில் மெயில் பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். மகனின் அழைப்பு வந்தது. வேலைக்காரி இன்னும் வரவில்லை. சரி, வழக்கத்துக்கு விரோதமாக காலை உணவு உண்டேன். வேலைக்காரி வந்தாள். ஒன்பதே முக்கால் மணி. அவள் வேலை செய்து போனபின் குளிக்கப் போனேன். குளிக்கும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு ஏதும் வரக்கூடாதே என்று எண்ணியே குளியல் முடித்தேன் காஃபி டிகாக்‌ஷன் இருந்தது.கலந்து குடித்தேன். ஒரு வழியாக பதினோரு மணி ஆயிற்று, வாஷிங் மெஷினில் அன்றைய உடுப்புகளை இட்டேன். ஒரு மணிநேரம் ஆகும் முடிய. காலையில் இருந்து தினசரி வாசிக்கவில்லை. தினசரி வாசிக்காவிட்டால் நாளே சரியாக இருக்காது பதினொன்றரை மணிக்கு மனைவி தரும் ஓட்ஸ் இன்று கிடையாது. இருந்தாலும் அவள் தொலைபேசியில் அழைத்து ஓட்ஸ் குடித்தீர்களா என்று கேட்பாள். இல்லை அதற்குப் பதில் பிஸ்கட்டுகள் தின்றேனென்று சொல்ல வேண்டும் பொய் சொல்லக் கூடாது அல்லவா. இரண்டு பிஸ்கட்களைத் தின்றேன் எது செய்யும்போதும் ஒரு ரெஸ்ட்லெஸ்னெஸ் ஏற்படுகிறது. இத்தனைக்கும் நான் சமைக்க வேண்டாம் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துவிட்டுப் போயிருக்கிறாள். தினசரியைப் புரட்டுகிறேன். மனம் செல்லவில்லை. ஒரு வேளை என் மனைவி அருகில் இல்லாததே எனக்கு இவ்வளவு குறையாகத் தெரிகிறதே ! ஒரு வேளை........ நினைக்கவே மனம் அஞ்சுகிறது மதிய உணவுக்குப் போகுமுன் மனசில் இருப்பதைஎழுத்தில் கொட்டி விட்டேன். ஏறத்தாழ ஐம்பதாண்டுக்கும் மேலான வாழ்வில் அவளைப் பிரிந்து நான் தனியே இருந்தது கணக்குப் பார்த்தால் சில மணித் துளிகளே இருக்கும் 

Sunday, November 20, 2022

நான் பிறந்த ஊரும் கதையும்

 

என் பெயர் G.M.Balasubramaniam என்பது அறிந்ததே. பெயரில் இருக்கும் G எங்கள் முன்னோர்களின் ஊரான கோவிந்தராஜபுரத்தைக் குறிக்கும் M என் தந்தையின் பெயரான மஹாதேவனின் முதல் எழுத்தைக்குறிக்கும். இது என் பதிவில் நான் என்றோ சொன்னது. ஒரு வேளை சொல்லாமல் விட்டது நான் பிறந்த இடம் பெங்களூரில் அல்சூர் என்பது. அதுபற்றிப் பதிவிட வேண்டும் என்னும் எண்ணம் திடீரென உதித்ததுநான் பிறந்த ஊரான பெங்களூர் என் வாழ்க்கையில் நிறையவே நிகழ்ச்சிகள் நடந்த இடம் இதெல்லாம் besides the point. சொல்லிக் கொண்டே போனால் சொல்ல வந்தது சொல்லப்படாமலே போக வாய்ப்புண்டு. ஆகவே விஷயத்துக்கு வருகிறேன்
 கோவில் அருகில் உங்கள் வீடு இருக்கிறதென்று நினைத்துக் கொள்ளுங்கள் திடீரென ஒரு நாள் நீங்கள் குடியிருக்கும் இடம் கோவிலுக்குச் சொந்தம் . உங்கள் வீடு ஒரு கோவில் திருக்குளத்தின் மேல் கட்டப் பட்டிருக்கிறது. உங்கள் வீடுகளை இடித்து அதன் அடியில் இருக்கும் கல்யாணியைக் (படிக்கட்டுடன் கூடிய குளம் )மீண்டும் கோவிலுக்கு உரித்தாக்கப் போகிறோம் என்றால் எப்படி இருக்கும் ?இதுதான் 2010-ம் ஆண்டு அல்சூர் சோமேஸ்வரசுவாமி கோவிலுக்கு முன்னால் வீடுகளில் குடியிருந்தோர் எதிர் கொண்ர்டது. அல்சூரில் பிறந்து HAL-ல் 1950- 1960-களில் வசித்து வந்த நான் என் தந்தையை இழந்ததும் அங்கே. மணமுடித்து வாழ்க்கை தொடங்கியதும் அங்கே அப்போதெல்லாம் இந்த மாதிரி கல்யாணி இருப்பது நினைத்தும் பார்க்காதது
இப்படிப்பட்ட அல்சூர் பற்றியும் அதில் இருக்கும் சோமேஸ்வரர் கோவில் பற்றியும் எழுதுகிறேன் அல்சூர் என்று பொதுவாக அறியப்படும் இடத்தின் உண்மைப் பெயர் ஹலசூர் என்பதாகும் இந்த இடத்தில் பலாத் தோப்பு இருந்ததாம் கன்னடத்தில் பலாப் பழத்தை “ஹலசின ஹன்னு “என்பார்கள் இதுவே ஹலசூர் என்று அறியப் பட்டது பிறகு ஆங்கிலேயர்கள் இங்கு ‘தண்டு’ அமைத்தபோது அல்சூர் என்று குறிப்பிட அதுவே பெரும்பாலும் அறியப்பட்ட பேராக இருந்தது. நல்ல வேளை இப்போது அதன் மூலப்பெயரே புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது ( (இதே சமயம் ஒன்று குறிப்பிடத் தோன்றுகிறது தமிழில் ப வரும் இடங்களில் எல்லாம் கன்னடத்தில் ஹ வரும் உ-ம் பால்=ஹால், பாடு=ஹாடு போராட்டம் =ஹோராட்டம் இப்படி நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம் அதேபோல பலா ஹலா ஆக மாறி இருக்கலாம் )
ஒரு கோவில் என்று வரும்போது ஒரு கதையும் இருக்கும் அல்லவா.அதுபோல சோமேஸ்வரர் கோவிலுக்கும் ஒரு பின்னணிகதையாக உள்ளது இந்தக் கோவில் உருவான வருஷமோ கட்டியது யார் என்று நிச்சயமாகத் தெரியாத நிலையிலும் கதை மட்டும் உண்டு இக்கோவில் சோழர் காலத்தையது என்று ஒரு கூற்று உண்டு அடாவது 1200 களில் உருவாகி இருக்கலாம் கோவிலும் கட்டுமான படிவங்களும் சோழர் பாணி , விஜய நகரப் பாணி. பிந்தைய கௌடர்களின் பாணி எல்லாம் ஒருங்கே கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது
சரி கதைக்கு வருவோம் விஜய நகர மன்னர்களால் பெங்களூர் கிராமம் கெம்பே கௌடா( 1513-1569) என்பவருக்கு அளிக்கப்பட்டதாம்அவர் இந்தக் கோவிலைக் கட்டி இருக்கலாம் இவர் யெலஹங்கா எனும் இடத்தை தன் தலைமை இடமாக வைத்து இருந்தார். ஒரு நாள் வேட்டையாடி கொண்டே வெகுதூரம் வந்துவிட்டாராம் ( தற்போதைய யலஹங்காவுக்கும் ஹலசூருக்கும் இடையே 25 கி.மீ தூரம் இருக்கலாம் )வேட்டையாடிக் களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம் அப்போதுஅவர் கனவில் சோமேஸ்வரர் வந்து அங்கு கிடைக்க இருக்கும் புதையல் கொண்டு அவருக்கு ஒரு கோவில் எழுப்பச் சொல்லி பணித்தாராம் இன்னொரு கதைப்படி ஜயப்ப கௌடா(1420-1450)எனும் சிற்றரசர் கனவில் ஒரு மனிதர் தோன்றி அவர் அப்போது இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு லிங்கம் இருப்பதாகவும் அங்கு ஒரு கோவில் கட்டுமாறு பணித்ததாகவும் கூறப்படுகிறது இன்னொரு கதைப்படி இக்கோவில் சோழ பரம்பரையினரால் கட்டப்பட்டு யெலஹங்கா நாட்டுப் பிரபுக்களால் மெறுகேற்றப்பட்டதாகவும் கூறப் படுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் பெங்களூரின் புராதனக் கோவில் ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில்
இந்தக் கோவிலுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு 04-05-2014-ல் சென்று வந்தேன் பதிவுலகில் பகிர்வதற்காக அக்கறையுடன் கோவில் தரிசனம் செய்து என் கண்ணுக்குப் பட்டவற்றை எல்லாம் புகைப்படமாக எடுத்து வந்திருக்கிறேன்
இந்தக் கோவிலில் பூப்பல்லக்குத் திருவிழா பெயர் பெற்றது அன்று சுற்று வட்டாரப் பகுதிக் கோவிலிலிருந்தெல்லாம் பூப்பல்லக்குகள் கலந்து கொள்ளும் எனக்குத் திருமணமாவதற்கு முன் ஒரு முறை இத்திருவிழாவைக் கண்டிருக்கிறேன், இரவு முழுவதும்பல்லக்குகளின் பவனி கண் கொள்ளாக் காட்சியாகும் சென்றமாதம் நடந்த பல்லக்குபவனியைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. இருந்தால் என்ன அன்னப் பட்சி அலங்காரத்தில் சோமேஸ்வரர் கோவில் பல்லக்கு வந்ததற்கு சாட்சியாக அந்தப் பல்லக்கின் ( பூ அலங்காரம் தவிர )கூடு இன்னும் கோவிலில் இருந்தது. புகைப்படமாக எடுத்துக் கொண்டேன்
வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் ஓய்வையும் புறக்கணித்து என்னை வீட்டில் இருந்து காரில் கூட்டிச்சென்று காண்பித்த என் இளைய மகனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் 


Friday, November 18, 2022

குருவாயூர் வாழும் பகவானே

 

குருவாயூர் வாழும் பகவானே


                                        குருவாயூர் வாழும் பகவானே
                                           ----------------------------------------


குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறோம் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் குருவாயூர்க் கண்ணனுக்கு உண்டு. கோவிலில் ஆண்டவன் தரிசனம் என்பது மிகவும் மாறிவிட்டது. முன்பெல்லாம் நிர்மால்ய தரிசனம் காண்பது சிறப்பாகவும் எளிதாகவும் இருந்தது. அருகில் சென்று தரிசிக்கலாம் பலமுறை பிரதட்சிணமாக வந்து வந்து தரிசிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் ஒரு முறை தரிசனம் செய்வதே கடினமாயிருக்கிறது. கோவிலின் பூஜை முறைகளுக்கேற்ப நடையை மூடி விடுகிறார்கள்சில நாட்களில் நடை சாத்திய நேரமே அதிகமாயிருக்கும் எந்தெந்த பூஜை முறைகளில் நடை மூடுகிறார்கள் என்று தெரிந்து செல்வது உத்தமம். என் மனைவிக்கு குருவாயூர் தரிசனம் மிகவும் பிடித்த ஒன்று. நானெல்லாம் ஒரு முறை தரிசனம் செய்து வந்தால் இவள் மீண்டும் மீண்டுமென்று சலிப்பே இல்லாமல் போய்க் கொண்டிருப்பாள். அண்மையில் கேரளா சென்றிருந்தபோது சிற்றூந்தில் இவள் பாடிக்கொண்டு வந்தாள். இதுவரை நான் கேட்காதது. ஊர் திரும்பியதும் அந்தப் பாட்டை மீண்டும் பாடக் கேட்டு மலையாளத்தில் இருந்ததை ஓரளவு தமிழ்ப் படுத்தி இருக்கிறேன் அதுவே நீங்கள் படிக்கப் போகும் இப்பதிவு.

டியவர் செய்யும் பாவங்கள் எல்லாம்
பொடிப்பொடியாய்ப் போய்விடும்-பக்தியால்
பதமலர் பற்றித் தஞ்சம் என்றதும்
குருவாயூர் வாழும் பகவானே

திமுதல் அல்லல் கொண்டே வாழும்
என் ஆதங்கம் எல்லாம் தீரவும்
பீதியில் உழலும் எனைக் காத்திட வா
குருவாயூர் வாழும் பகவானே

 ன்றுன் பாதம்சேரவே  பக்தியால்
உள்ளம் விம்முதே கிருஷ்ணா
வந்துடன் என்னை ரட்சிப்பாய்
குருவாயூர் வாழும்பகவானே

ண்டென்னைச் சோகம் தழுவுமென்றென்
மனசில் கோவிந்தா நான் எண்ணவில்லை
கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
குருவாயூர் வாழும் பகவானே.

ண்டு சங்கடம் ஆசாபாசமும் மோகம்
கொண்டு நான் உழல்வதெல்லாம்
அன்று நான் செய்த வினைகளின் பலனா
குருவாயூர் வாழும் பகவானே

க்கம் வேண்டியே நான் தவிக்கும் போதென்
புத்தியில்வந்து  பலம் சேர்க்கவேண்டும்
தீக்குணங்கள் என்னை அண்டாது காப்பாய்
குருவாயூர் வாழும் பகவானே

ன்னதான் நான் வேண்டுவேன் கிருஷ்ணா
மோகமும் பாசமும் என்னைத் தீண்டாமல்
என்றுமே உன் பாசத்தில் கட்டிடுவாய்
குருவாயூர் வாழும் பகவானே

னிந்தப் பாராமுகம் கிருஷ்ணா
ஏழையெனைத் தண்டித்தல் முறையோ
என்றைக்கும் நான் உன் பக்தனல்லவா
குருவாயூர் வாழும் பகவானே

ய நின் பாதம் அர்ச்சிப்பதன்றி
வேறொன்றும் நான் வேண்டேனுன்
கழல் பற்றி என் காலம் கழித்திடஅருள்வாய்
குருவாயூர் வழும் பகவானே

ன்றும் அறியாமல் இத்தேகம் விட்டென்
மூச்சும் போகவேண்டும் போகும்போதும்
உன் நாமம் என் நாவில்நிற்க அருள்வாய்
குருவாயூர் வாழும் பகவானே,

தும் வேதப் பொருளே வைகுந்தா
ஓர்த்திடுவாய் என்றும் ஏழையினை
நோய் நீக்கிடும் பீதிநாசனே
குருவாயூர் வாழும் பகவானே

ஷதம் ஏதும் வேண்டேன் ஐயா
உன் நாம கீர்த்தனமே ஔஷதம்
பாவ வினைகள் எனைத் தொடராதிருகவெ
குருவாயூர் வாழும் பகவானே

அந்திம காலத்தில் உற்றவனாய் வந்து
அந்தகன் பயம் எனைப் பீடிக்காதிருக்க
என்றும் என் அகத்தே நீ இருந்திடுவாய்
குருவாயூர் வாழும் பகவானே.

குருவாயூர் வாழும் பகவானே கிருஷ்ணா
கருணா சாகர கார் வண்ணா
கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
குருவாயூர் வாழும் பகவானே
.

Wednesday, November 16, 2022

நான் 85 லும் நல்ல பையன்

 

நான் 85 வயதிலும் நல்ல பையன் 
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்


(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)

பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க  நானிருக்கிறேன்
 85 வயதிலும்நல்ல பையனாக
                     

Sunday, November 13, 2022

இலக்கிய இ ன்பம்

 


                                          இன்பம்-தரும் இலக்கியம்
                                          -----------------------------------கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ....


என்ன..... மூளையில் ஏதோ பல்ப் எரிகிறதா.? எரியாவிட்டாலும் பரவாயில்லை.படிக்கப் படிக்கப் புரிந்துவிடும். அந்தக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு தன் மனைவியிடம் கூடி இருந்தபோது ஒரு சந்தேகம் வந்ததாம்.தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் சுகந்த மணம் இயற்கையிலேயே உள்ளதா இல்லை அவள் அணிந்திருந்த மலர்களால் வந்ததா என்று.. அந்தக் காலத்து ராஜாக்களுக்கு சந்தேகம் வந்தால் மந்திரிப் பிரதானிகளோ புலவர்களோதானே தீர்க்க வேண்டும். அரசன் தன் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பொற்கிழி பரிசாக அறிவிக்கிறான். மந்திரிகளோ புலவர்களோ அந்தப் பணியில் ஈடுபட விரும்பவில்லை. தாங்கள் கூறும் பதில் அரசனுக்கு ஒப்பவில்லை என்றால்.... எதற்கு வம்பு என்று வாளாவிருந்து விட்டனர்.


அங்கே வறுமையில் வாடும் ஒரு புலவன்,தருமி என்று பெயர் தனக்கு அந்தப் பொற்கிழி கிடைக்காதா என்று ஏங்குகிறான். மதுரை சொக்கனாதருக்கு அந்தப் புலவனுக்கு உதவ எண்ணம்.அரசனின் ஐயத்தைத் தீர்க்கும் ஒரு பாடலை எழுதி தருமியிடம் கொடுத்து அரசனுக்குக் காட்டிப் பொற்கிழி பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்.தருமி அதனை எடுத்துக் கொண்டு போய் அரசனிடம் வாசித்துக் காட்டுகிறான் என்ன... இப்போது நினைவுக்கு வருகிறதா.? திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் காட்சிகளாகப் பார்த்திருப்பீர்களே.சிவாஜி கணேசனையும் நாகேஷையும் நினைவுக்குக் கொண்டு வரும் அந்தப் பாடல் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.? திரைப்படம் மூலம் கதை விளங்கி விட்டது. அந்தப் படத்தின் மூலம் ஒரு அழகான பாடலும் பொதுமக்கள் பார்வைக்கும் கவனத்துக்கும் கொண்டு வரப் பட்டது. அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.
கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி                                            
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியக் கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

தருமி பாடிய அப்பாடலில் குற்றம் இருக்கிறது என்று கூறி


சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான நக்கீரர் சிவனாரின் மூன்றாவது கண்ணால் எரிக்கப் படுகிறார். பொருட்குற்றம் இருக்கிறது என்ற நக்கீரருக்கு அது இல்லை என்று நிரூபிப்பதல்லவா அந்த ஆலவாயன் செய்திருக்க வேண்டியது.? ஆனால் அவர் செய்தது என்ன. ? கோபம் கொண்டு 
அங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி
பங்கம் பட இரண்டு கால் பரப்பிசங்கைக்
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்
என்று சாடுகிறார். சொன்னதை நிரூபிக்க இயலாதவர் கோபம் கொள்வது முறையல்ல என்று எண்ணும் நக்கீரனும்சங்கறுப்ப தெங்கள் குலம்  சங்கரனார்க்கு ஏது குலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம்  அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில்லை
என்று பதிலடி கொடுக்கிறார்

தன் பாடல் தானே முக்கண்ணனே பாடியதில் ஒரு நரன் குற்றம் காண்பதா என்று பொறுக்க இயலாமல் அரன் அவனை நெற்றிக்கண்ணைத் திறந்து பொசுக்குகிறார். 
யாராயிருந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம். 

                     ----------------------


அரசர்களுக்கு சந்தேகம் எழுவதும் அதை அறிந்தோ அறியாமலோ தீர்ப்பதன் மூலம் புலவர்கள் வெகுமதி பெறுவதும் குறித்து நம் தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது தெரிய வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்
ஒன்றும் அந்த வகையைச் சேர்ந்ததே. அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். உயரே ஒரு நாரைக் கூட்டம் பறந்து செல்கிறது. அவற்றின் சிவந்த அலகுகள் எதற்கு ஒப்பாகும் என்னும் நினைவில் வரும் அரசன் ஒரு புலவனின் அவலப் பாட்டைக் கேட்கிறான். பொதுவாகவே துன்பத்தில் இருக்கும் போது பாடல்களும் கவிதைகளும் அழகாக வந்து விழும். இந்த என் அனுபவம் அந்தக் காலக் கவிகளுக்கும் பொருந்தும்போல. கவிதையைப் பார்ப்போம்.நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர் வாய்ச் செங்கால் நாராய்
(அரசனுக்கு ஒரு அழகான உவமை கிடைத்து விட்டது)


நீயும் நின் பெடையும் தென் திசைக் குமரியாடி
வடதிசைக் காவிரிக் கேகுவீராயின்
எம்மூர் சத்திமுற்ற வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனை குரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழூஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.

தெளிவாக அழகாக அவலத்தை வெளிப்படுத்த முடியுமா.?எவரிடமும் சொல்லிப் புலம்ப முடியாததை நாரைகளிடம் சொல்லிப் புலம்பும் இப்புலவன் அதைக் கெட்ட அரசன் இவனுக்கு வெகுமதி  அளித்தாராம். அதன் பிறகு  அவரை குடிதாங்கி என்பவர் ஆதரித்தாராம் வெறும்புற்கையும் அரிதாங
கிள்ளைச் சோறும் என்வீட்டில் வரும்,
எறும்புக்கும் ஆர்பதமில்லை
முன்னாள் என்னிருங் கலியாம்,
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்
சென்று கூடிய பின்,
தெறும்புற் கொல் யானை கவளம்
கொள்ளாமற் றெவிட்டியதே."


வெறுஞ் சோறும் இருக்கவில்லை, என் வீட்டுக் கிளியும் பசியால் வாடித் தளரும்..எறும்புக்கும் ஏதுமிருக்கவில்லை. . பின் என் குறை தீர்த்த குடிதாங்கியை சென்றடைந்தபிறகு, யானையும் வாய்கொள்ளாக் கரும்புக் கழிகளை உமிழ்ந்து  சிதறடித்தது.
மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.

Friday, November 11, 2022

கேசாதி பாதம்

 கேசாதி பாதம்---கண்ணன்

------------------------ 
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
கண்டேன் நான் கண்ணனை

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
கண்டேன் நான் கண்ணனை

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
கண்டேன் நான் கண்ணனை

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
கண்டேன் நான் கண்ணனை

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
கண்டேன் நான் கண்ணனை

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
கண்டேன் நான் கண்ணனை


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
கண்டேன் நான் கண்ணனை

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
கண்டேன் நான் கண்ணனை

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
கண்டேன் நான் கண்ணனை