செவ்வாய், 22 நவம்பர், 2022

என்றென்றும்,;;;;;;;;;;;;;;;

 

என்றென்றும் எப்பொழுதும் என்னருகே


                         என்றென்றும் எப்பொழுதும் என்னருகே
                         -------------------------------------------------------



ஔவையார் “இனிது இனிது ,ஏகாந்தம் இனிது” என்று கூறியதாகப் படித்த நினைவு. ஔவையர்ர் தனித்தே இருந்ததால் அதுவே அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம் இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது “தனிமையிலே இனிமை காண முடியுமா” சரி இப்போது இந்த ஆராய்ச்சிக்குக் காரணம் என்ன. இரண்டு மூன்றாம் முறையாக என்னைத் தனியே விட்டு விட்டு என் மனைவி பெங்களூர் இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு “லலிதாசஹஸ்ரநாம“ பாராயணம் செய்யப் போயிருக்கிறாள்.இராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ஒரு மில்லியன் முறை லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறார்கள் இந்த ஆண்டு ஜூலை மூன்றாம் தேதியுடன் முடிவடைகிறது இதில் இவள் பங்காக ,சேது கட்டும்போது அணிலின் சேவை போல பாராயணத்தில் பங்கு கொள்ள விரும்புகிறாள். அவள் என்னிடம் அருகில் ஐயப்பன் கோவிலிலிருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. முப்பது நாற்பது பேர் போகிறார்கள் நானும்போகட்டுமா.?என்று கேட்டபோது நானும் மிகப் பெருந்தன்மையாகஉன் மனசுக்குப் பிடித்ததை நீ செய்ய நான் என்றும் தடை சொல்லமாட்டேன்என்று கூறினேன் . அவளுக்கு என்னைப் பற்றிய கவலை. காலை உணவு மதிய உணவு எல்லாம் செய்துவிட்டுத்தான் போவாள். நானே பார்த்துக் கொள்கிறேன் என்றாலும் அவளுக்கு மனசு கேட்காது. நேரத்துக்கு எடுத்துப் போட்டு நான் உண்ண வேண்டும் என்னும் கவலை. அவளுக்குத் தெரியும் உணவு விஷயங்களில் நான் எப்போதுமே கவனம் செலுத்தியது கிடையாது. ஆக்கிப் போட்டு எடுத்து உண்ண சோம்பல்படுவேன் என்பது அவள் கணிப்பு. இருந்தாலும் மனசில் ஆண்டவன் பெயர்பாட ஆவலும் அதிகம்.என்னைத் தனியே விட்டுப் போக மனசில்லாமல் எல்லாவற்றையும் செய்து வைத்துக் கிளம்பினாள். முதல் முறை போனபோது உண்மையைச் சொல்லப்போனால் ஒரு படத்தில் ஜனகராஜ் தங்கமணி ஊருக்குப் போயிட்டா” என்று கூவுவாரே அதுபோல் இருந்தது. ஆனால்..........போனபிறகு ஒரு வெறுமையை உணர்ந்தேன்
காலை ஏழரை மணிக்குக் கிளம்பினாள் நான் எழுந்து காலைக் கடன்களை மட்டும் முடித்திருந்தேன் குளிக்க வேண்டும் காலை உணவு உண்ண வேண்டும். வேலைக்காரி எந்நேரத்திலும் வரலாம் அவளுக்குக் குறிப்பிட்ட நேரம் இல்லை. நான் குளிக்கச் செல்லும் போது அவள் வந்தால்.....அவள் வந்து போனபிறகு குளிக்கலாம் . அதற்குள் காலை உணவு நேரம் தவறலாம். காலை எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் தினமும் அழைக்கும் என் மகன்களின் தொலை பேசி அழைப்பு வரும்போது அதை அட்டெண்ட் செய்யாவிட்டால் கலவரமடைவார்கள். நான் குளிக்கச் சென்றிருக்கும்போது அழைப்பு வந்தால்...?என் கேட்கும் திறன் பற்றி நான் கூறத் தேவையில்லை குளியலைத் தள்ளிப் போட்டேன். குளிக்காமல் உண்ணும் பழக்கமில்லாததால் காலை உணவு உண்பதையும் தள்ளிப் போட்டேன். எதிலும் மனம் ஒட்டவில்லை. சரி சிறிது நேரம் கணினியில் மெயில் பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். மகனின் அழைப்பு வந்தது. வேலைக்காரி இன்னும் வரவில்லை. சரி, வழக்கத்துக்கு விரோதமாக காலை உணவு உண்டேன். வேலைக்காரி வந்தாள். ஒன்பதே முக்கால் மணி. அவள் வேலை செய்து போனபின் குளிக்கப் போனேன். குளிக்கும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு ஏதும் வரக்கூடாதே என்று எண்ணியே குளியல் முடித்தேன் காஃபி டிகாக்‌ஷன் இருந்தது.கலந்து குடித்தேன். ஒரு வழியாக பதினோரு மணி ஆயிற்று, வாஷிங் மெஷினில் அன்றைய உடுப்புகளை இட்டேன். ஒரு மணிநேரம் ஆகும் முடிய. காலையில் இருந்து தினசரி வாசிக்கவில்லை. தினசரி வாசிக்காவிட்டால் நாளே சரியாக இருக்காது பதினொன்றரை மணிக்கு மனைவி தரும் ஓட்ஸ் இன்று கிடையாது. இருந்தாலும் அவள் தொலைபேசியில் அழைத்து ஓட்ஸ் குடித்தீர்களா என்று கேட்பாள். இல்லை அதற்குப் பதில் பிஸ்கட்டுகள் தின்றேனென்று சொல்ல வேண்டும் பொய் சொல்லக் கூடாது அல்லவா. இரண்டு பிஸ்கட்களைத் தின்றேன் எது செய்யும்போதும் ஒரு ரெஸ்ட்லெஸ்னெஸ் ஏற்படுகிறது. இத்தனைக்கும் நான் சமைக்க வேண்டாம் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துவிட்டுப் போயிருக்கிறாள். தினசரியைப் புரட்டுகிறேன். மனம் செல்லவில்லை. ஒரு வேளை என் மனைவி அருகில் இல்லாததே எனக்கு இவ்வளவு குறையாகத் தெரிகிறதே ! ஒரு வேளை........ நினைக்கவே மனம் அஞ்சுகிறது மதிய உணவுக்குப் போகுமுன் மனசில் இருப்பதைஎழுத்தில் கொட்டி விட்டேன். ஏறத்தாழ ஐம்பதாண்டுக்கும் மேலான வாழ்வில் அவளைப் பிரிந்து நான் தனியே இருந்தது கணக்குப் பார்த்தால் சில மணித் துளிகளே இருக்கும் 

14 கருத்துகள்:

  1. நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கும். கவலை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக கணவனை இழந்த பெண்கள் சமாளித்துக்கொள்வார்கள். மனைவியை இழந்த ஆண் பாடுதான் திண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
  3. முதுமையில் நாம் குழந்தை ஆகி விடுகிறோம், அல்லது குழந்தை ஆக்கப்படுகிறோம். மனைவியையும் தாயின் மறு வடிவமாகவே காண்கிறோம். ஆகவே தினசரி நடப்புகள் மாறும்போது தடுமாறுவது இயல்பே. ஒரு நாள் என்றாலும் பிரிவின் தனிமை உறுத்துகிறது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. சில நேரங்களில் சில எண்ணங்கள்... விபரீத எண்ணங்கள்..

    பதிலளிநீக்கு
  5. வயதாகும் போது நம்மைத் தனியாக வைத்துக் கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று இப்போதெல்லாம் 50 வயதிலிருந்தே சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். இதில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக பாதிப்போ என்றும் தோன்றும். முதுமையில் குழந்தைப் பருவம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உங்கள் உணர்வுகள் புரிகிறது. இது ஓரிரு நாட்கள் இப்படித் தோன்றலாம்...அடுத்து பழகிப் போய் சரியாகிவிடும் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு