பகவத் கீதை--சில எண்ணப் பகிர்வுகள்.
----------------------------------------------------
கீதையின்
18 அத்தியாயங்களில் இருக்கும் சுலோகங்களுக்கு
ஒரு வழியாக தமிழ்ப் பதவுரை கொடுத்து முடித்துவிட்டேன். பகவத் கீதை படிக்க வாய்ப்பு
கிடைக்காதவர்களுக்கு என் பதிவுகள் மூலம் படித்தறிய ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணி
ஒரு யக்ஞம் என்பதுபோல் செய்து முடித்த திருப்தி.
எது
நடந்ததோ, அது நன்றாகவே
நடந்ததுஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
நானும் பகவத் கீதையின் தமிழ்ப் பதவுரை முழுவதும் எழுதிவிட்டேன். இருந்தாலும் பெரும் பாலோரால் மேற்கோள் காட்டப்பட்டு, சுவாமி அறையில் மாட்டப்படும் மேற்படி வாசகம் கீதையில் எங்குமே காணவில்லை. விரிவுரை கூறியவர்களின் எழுத்துக்களை ஸ்ரீபகவான் கூறியதென்று சொல்லி பரப்பவேண்டிய கட்டாயம் ஏதோ.?. புரியாத ஒன்று. அதேபோல் ‘கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்றும் கீதையில் இல்லை. பலனை எதிர்பாராமல் செய் என்னும் கிட்டத்தட்ட பொருளில் அத்தியாயம் 2-ல் சுலோகம் 47 சொல்கிறது” வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய்,வினைப்பயனில் ஒரு பொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே, வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே”
கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பதில் பதினேழாம் சுலோகத்தில் “இந்த ஜகத்தின் தந்தை, தாய், பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும் ஓங்காரம், ரிக், சாம யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே” என்று வருகிறது. அதர்வண வேதம் அவருக்குத் தெரியாதா? அப்போது அதர்வண வேதமே இருக்கவில்லையா என்று என்னுள் கேள்வி எழுந்தது.
பகவகீதை மகாபாரதத்தில் ஏற்றப்பட்ட ஒரு இடைச் செருகல் என்றே தோன்றுகிறது. மகாவியாசர் எழுதியதாயிருந்தால் – “விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் நான் வியாசர், கவிகளுள் நான் சுக்கிரன்” என்று தன்னை குறித்தே எழுதி இருப்பாரா.?
இது வரை எழுதியவற்றில் என் கருத்தாக எதையும் சொல்ல
முற்படவில்லை. இப்போது அதற்கான நேரம் வந்து விட்டதாக எண்ணுகிறேன்
கீதை தன்னகத்தே
எத்தனையோ நல்ல விஷயங்களைப் பேசிச் செல்கிறது. மனதை ஒருமுகப் படுத்துவது பற்றி,
விருப்புவெறுப்பு இன்றி நினைக்கவும் செயல் படவும் அறிவுறுத்துகிறது.இருந்தாலும்
படித்து முடிதபின் ஏதோ மனம் நிறைவு பெறாத ஒரு எண்ணம்.தெய்வாசுர சம்பத் விபாக
யோகத்தில் தெய்வ அசுர குணங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. படித்தபின் தெய்வ
குணங்கள் உள்ள மானிடரைக் காண்பதே அரிதோ என்று தோன்றுகிறது.
என் எண்ண வெளிப்பாடுகளைப் படிக்க முற்படுமுன் ஒரு வேண்டுகோள்..
When trying to create new
ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and
known. To chart new territories and new ideas the most important thing is to
unlearn what we have known.Otherwise we will never be able to chart new
path. Staying focused and being conscious of unlearning things is essential
Realising and working hard on that--very difficult though.
நான் இவ்வாறு எழுதுவதன் நோக்கமே நம்மில் பெரும்பாலோர் மனதளவில்
சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து அடிமையாய் இருக்கிறோம் அல்லது சிந்திக்க
மறுக்கிறோம் என்று நினைப்பதால்தான். என் முந்தைய பதிவு ஒன்றில் நாம் உண்மையில்
சுதந்திரம் அடைந்துவிட்டோமா என்று கேள்வி கேட்டிருந்தேன். பதிலாக எது அடிமைத்தனம்
என்றும் பதிலையும்( உபயம் திரு அப்பாதுரை அவர்களின் பதிவு ஒன்று) எழுதி இருந்தேன்.
நினைவூட்டலுக்கு அதனை இங்கு மீண்டும் கொடுக்கிறேன்.
"அடிமைத்தனம் என்பது.. ஏன்
செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப
ஈடுபடுவது.."
"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."
"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"
"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"
"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"
"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."
"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"
"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."
"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
கற்றது கைம்மண்ணளவு,
கல்லாதது
உலகளவு என்பது எல்லார்க்கும் தெரிந்த உண்மை.. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது
அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை
உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை
அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல
தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை
இப்படி அனுபூதியில்
உணர்ந்தமூலப்பொருள் பற்றிய எண்ணமே ஒரு
உருவகம் அல்லது ஒரு concept
என்றே தோன்றுகிறது. கீதையில் உபதேசமாகக் கூறப்பட்டவை அனைத்தும் என்ன செய்வது என்று
தெரியாமல் அவதிப்படும் ஒரு மனிதனுக்குப் புகட்டப் பட்ட indoctrination என்றே கூறலாம் நடைமுறை வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களுக்குக்
காரணம் தெரியாமல் அல்லாடும் மனிதனிடத்தில் அவனால் எளிதாகப் புரிந்து கொள்ள
முடியாத உண்மை இல்லாமல் இருக்கக் கூடிய வாய்ப்புகளுள்ள , சாதாரண வாழ்க்கையில்
செயல்படுத்த இயலாத ஆத்மா ஜீவன் இறப்புக்குப்
பின் பிறப்பு கர்ம பலன் போன்ற விஷயங்கள்
விளக்கம் என்பதுபோல் புகட்டப் படுகிறது
கணிதங்களில் ஜியோமிதி
ஒரு வகை. பல தேற்றங்களைக் கூறி அவற்றை நிரூபிக்கவும் செய்வார்கள். நிரூபித்து
முடிவில்(QED) என்று முடிப்பார்கள். Quad erat demonstrandum meaning proof of mathematical argument என்று பொருள்படும். நாங்கள் படிக்கும்போது QUITE EASILY
DONE என்று கூறுவோம்.
ஆனால் கீதையில் கூறப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு முடிவில் QED என்று போட முடியுமா. என்பதே பெரிய கேள்விக்குறி.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கீதையில்
கூறப்பட்டிருக்கும் விஷயங்களை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது.
பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும்
மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி
வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம்,
ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர்
பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது
கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று
பக்தியோகம் ஓங்குகிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது.என்றும்
அறிவுறுத்தப் படுகிறது.
கீதையைப் படிக்கும்
போது ஒன்று புரிகிறது செய்ய இயலாத அனுஷ்டானங்களைச் செய்யாமல் இருந்தாலும்
பாதகமில்லை. ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்தால் போதும் என்று
குறிப்பாக உணர்த்துகிறது
ஆனால் கீதை சாமானியனால் படித்து அறிந்து கொள்ளமுடியாதபடி எழுதப் பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது இப்படிப் பல விதமான வார்த்தைப் பிரயோகமே படிப்பவனை அல்லது அது குறித்துக் கேட்பவனை சிந்திக்க முடியாமல் செய்கிறதோ அல்லது ஒரு பிரமிப்பு ஏற்படுத்துகிறதோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதையும் மீறி வியாக்கியானம் செய்பவர்களின் வெவ்வேறு விளக்கங்கள் , நான் பகவத் கீதையைப் பற்றி எந்தக் கருத்தும் கூறினால், அது ஏற்புடையதா என்று சிந்திக்கக் கூட வழியில்லாமல் நம் ஜீவ அணுக்களிலேயே (genes) மூளைச் சலவை செய்யப் பட்டிருக்கிறோம்.
மீண்டுமொரு முறை நான் நம் மன சுதந்திரம் பற்றி மேலே எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள்.
நான் என் பல பதிவுகளில் எழுதி வரும் ஏற்ற தாழ்வுகளுக்கான அடித்தளம் அந்தக் காலத்திலேயே போடப் பட்டிருக்கிறது பதிவு சற்று நீண்டாலும்சொல்ல வருவதை ஒரே மூச்சில் சொல்வது நலம் என்று கருதி தொடர்கிறேன்
உலகில் எல்லா இனத்தவரையும் செய்யும் தொழிலால் நான்குவகைகளாகப் பிரிக்கலாம் மத சிந்தனைகளை வளர்ப்பவர்களை அந்தணர்கள் என்றும் போர்ப் படையில் இருப்பவர்களை க்ஷத்திரியர்கள் எனறும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை வைசியர்களென்றும் உடல் உழைப்பு செய்பவர்களை சூத்திரர்கள் என்றும் செய்யும் தொழிலை வைத்து வகைப் படுத்தலாம்.இதைத்தான் கீதையில் 4-ம் அத்தியாயத்தில் 13-ம் சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூற முற்பட்டிருப்பார் என்று தெரிகிறது” குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன்.அதற்குக் கர்த்தாஎனினும் என்னை அவிகாரி என்றும் அகர்த்தா என்றும் அறிக” மனபரிபாகத்திலும் செய்கின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ண பேதம் என்று புரிந்து கொள்ள முடிகிறது
பகவான் உலகத்தைச் சிருஷ்டித்தபோதிலும் அவர் கர்த்தா அல்ல என்னும் தொனியில் 9-ம் அத்தியாயம்5-முதல் 10 வரையிலான சுலோகங்கள் தெரிவிக்கின்றன
ஆனால் பிறப்பால் வேறு படுத்திப் பார்ப்பதே நம் நாட்டில் ஏற்ற தாழ்வுகளுக்கான வித்திட்டிருக்கிறது அதையே கீதையும் செய்கிறது. கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பது சுலோகம் 32—”பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர் வைசியர் சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.”
’கீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் இல்லை.கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன.புண்ணிய நதி சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன கடவுளைக் கருதும் மனிதர்கள் எல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர்.செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர்’-என்னும்படியான வியாக்கியானம் வேறு...! இறந்தபின் எல்லோரும் சவம்தானே......!
கீதை காலத்திலேயே பெண்களைத் தாழ்வாகப் பார்க்கும் கண்ணோட்டம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு அத்தியாயம் ஒன்று சுலோகம் 41 ”அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர்.கிருஷ்ணா, மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக்கலப்பு உண்டாகிறது” ஆனால் இன்றைய நாட்களில் கலப்புகள் எல்லா இடங்களிலும் சீரிய பயன் தருகிறது என்றே கருதப் படுகிறது
கீதையின் பெரும்பாலானபகுதிகள் ஸத்துவ ராஜஸ தமோ குணங்களைப் பற்றியே கூறுகின்றன. அந்தந்த குணங்களின் வெளிப்பாடுகள் அதனதன் பலன்கள் என்றே விதவிதமாகச் சொல்லப் படுகிறது.
அத்தியாயம் 2 சுலோகம் 19 “ஆத்மாவைக் கொலையாளி என்றும் கொலையுண்பானென்று எண்ணும் இருவரும் அறியாதார். ஆத்மா கொல்வதுமில்லை கொலையுண்பதுமில்லை” இது போன்ற விஷயங்கள் சாதாரண மனிதனுக்குப் புரியாதது. புரியாத விஷயங்களைப்புரிந்து கொள்ள முயலும் போது கேள்விகள் எழுகிறது. கேள்விகள் கேட்டுத்தெளிவுற அடிப்படைகள் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்க வேண்டும் அல்லவா.?
மனிதன் உடலில் இந்திரியங்களால் வாழ்பவன் அவனிடம் உடலுக்கு உணர்வு உண்டு ஆத்மாவுக்கு இல்லை என்று கூறி இல்லாத , அல்லது தெரியாத ஒன்றை நோக்கி வழி நடத்திச் செல்ல முயற்சியே. இந்த போதனைகள் என்று தோன்றுகிறது. கதைக்கு வேண்டுமானால் இது சுவை சேர்க்கலாம். ஆனால் இக வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியாத கோட்பாடுகளே. இதற்கு ஆதாரம் எங்கும் தேட வேண்டாம் சில பதிவுகளுக்கு வந்துள்ள பின்னூட்டங்களே இதைத் தெளிவாக்குகின்றன. எந்த ஒரு abstract விஷயத்திலும் கவனம் செலுத்துவது இயலாதது. தான் செய்யும் காரியங்களுக்குப் பொறுப்பு ஏற்கமுடியாதவன் இம்மாதிரி abstract எண்ணங்களில் கவனம் வைக்க முயலுவான். இன்றைய வாழ்வில் நடப்பது நமக்குத்தெரியும் FOR EVERY ACTION THERE IS AN EQUAL AND OPPOSITE REACTION என்பது நிரூபிக்கப் பட்ட விஞ்ஞானம் அதுவே நம் வினைகளுக்கும் பொருந்தும் இருக்கும் வரை அன்பே பழகி நல்வினையே செய்து அதனால் விளையும் மகிழ்ச்சியில் வாழ்வதே சிறந்தது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. இருக்கும் போது நடப்பதை அனுபவிப்பதே நிதர்சனம். இறந்தபின் எப்படியானால் என்ன ?ஒருவனுக்குத் தெரியவா போகிறது.? இறந்தவர்திரும்பிவந்து அனுபவங்களை பகிரவா போகிறார்.?
அறியாத ஒரு உருவகப் பொருளைத் தேடித்தேடி அலைந்து உழலுவதை விட எல்லோரையும் நேசித்து அன்பால் வாழ்ந்தாலேயே போதும் என்று சொல்லி முடிக்கிறேன்.
( தயை கூர்ந்து ஊன்றிப் படிக்க வேண்டுகிறேன்.)
.