சனி, 23 ஜூன், 2012

திருமணங்கள்.....


                                                     திருமணங்கள்......
                                                      --------------------


சில அனுபவ வரிகள் வலையில் எழுதப்படும்போது ரசிக்கப் படுகின்றன; சில உதாசீனப் படுத்தப் படுகின்றன; சில வழி காட்டும் படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஒருவராவது ரசிக்கிறார் என்றாலும் தொடர்ந்து எழுதும்படி எனக்கு ஆலோசனைகளும் வந்திருக்கிறது. திருமணம் பற்றி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் இருந்தது. பதிவு எழுத பொருள் தேடிக் கொண்டிருந்தபோது வந்ததால் இந்தத் தலைப்பிலேயே எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.அதன் தாக்கத்தை சிறிது குறைக்க உண்ணவும் உறங்கவும் என்றும் சேர்த்துக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதன் தன் பரிணாம வளர்ச்சியில் தனக்கு விதித்துக் கொண்ட கட்டுப் பாடுகளில் திருமண பந்தமும் ஒன்றாகிறது.

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில் ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

என்னைப் பொறுத்தவரை பொருத்தங்கள் பார்ப்பது அவசியம் ஆனால் ஜாதகம் மூலம் பார்ப்பது என்பது எனக்கு உடன்பாடில்லை. என் திருமணம் ஜாதகம் பார்த்து நடந்ததல்ல. என் மக்களுக்கும் நான் ஜாதகம் பார்க்கவில்லை.எல்லாம் விசாரித்து அறிந்தபின் வரன் கேட்டு வந்தவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களுக்கு அது திருப்தி தரும் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறி என் மக்களது பிறந்த விவரங்கள் கொடுத்தோம்.மூத்தவனுக்கு முதலிலேயே ஜாதகம் பொருந்த எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடந்தது. இளையவனுக்கு ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணின் பெற்றோர் முதலில் பொறுந்தவில்லை என்று கூறிச் சென்றவர் வேறு ஒரு சோதிடரிடம் காட்டி பொருத்தம் இருப்பதாகக் கூறி திரும்பி வந்தனர். நாங்கள் ஜாதகம் பற்றி கவலையே படாததால் திருமணம் இனிதே நிகழ்ந்தது. மூத்தவன் மணம் முடிந்து இருபது ஆண்டுகளும் இளையவன் திருமணம் முடிந்து பதினேழு ஆண்டுகளும் ஓடிவிட்டன. அவர்களது இல்லற வாழ்க்கை இனிதாகவே இருக்கிறது.

ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாததால் பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் முதிர் கன்னிகளாக இருக்கும் சில பெண்களையும் எனக்குத்தெரியும்.

ஆனால் தற்காலத்தில் நடைபெறும் பல திருமணங்களில் பெற்றோருக்கு எந்த உரிமையும் கொடுக்கப் படுவதில்லை. ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப் படுகிறார்கள்( பெரும்பாலும் இனக் கவர்ச்சியால் )திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே தவறான முடிவால் பிரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருபவரும் இல்லாமல் போகிறார்கள்.

இதனால் ஆண் பெண் பார்த்துக் காதலித்து திருமணம் செய்வது தவறு என்று நான் கூறவில்லை. இனக்கவர்ச்சிக்கும் மேலாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள என்று தெரியாமலா நம் முன்னொர் சொல்லிப் போனார்கள். திருமணத்தில் விட்டுக் கொடுக்கும் குணம் இருவருக்கும் வேண்டும். நான் எனது என்ற அகந்தை தலைக்கேறினால் வாழ்க்கை துன்பங்களாலேயே சூழ்ந்திருக்கும்.

வாழ்வில் ஒருமுறை ( அநேகம் பேருக்கு ) நடக்கும் திருமணம் ஊரார் உற்றார் அறிய சிறப்பாக நடப்பதே நல்லது. அதற்காக வியர்வை சிந்தி சேர்த்து வைத்த பணத்தை விரயம் செய்வது நல்லதல்ல. நம் திருமண முறைகளில் சம்பிரதாயங்களுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தரப் படுகிறது. பெரும்பாலும் சடங்குகள் சடங்குகளுக்காகவே நடைபெறுகிறது.முன் காலத்தில் அறியாப் பருவத்தில் நடைபெற்ற திருமண சடங்குகள் இப்போதும் நடைபெறுவது கேலிக் குரியதாகிறது. தென் இந்திய திருமண சம்பிரதாயங்களில் ஒன்று வதுவும் வரனும் தாய்மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவது. என்பது. விளையாட்டாக மணமக்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஏற்படுத்திய பல சம்பிரதாயங்கள் கால வரம்பைக் கடந்து விட்டன.

சம்பிரதாயங்கள் என வரும்போது டாக்டர் கந்தசாமி ஐயா எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது. அவர்கள் வழக்கத்தை மூன்று நான்கு பதிவுகளாக வெளியிட்டிருந்தார்.
அக்னி வளர்த்து ,அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாணிக்கிரகணம் செய்வது ஒரு வழக்கம் என்றால் இவை ஏதுமே இல்லாமல் நெற்கலத்தில் தென்னம்பாளை வைத்து ,அருகில் குத்து விளக்கேற்றி , வீட்டின் பெரியவர் மங்கலநாண் எடுத்துக் கொடுக்க அரைநொடியில் முடிந்து விடும் திருமணங்கள்  கேரள சம்பிரதாயம். அதுவும் அண்மைக் காலத்தில்தான் தாலி கட்டும் வழக்கம் துவங்கி இருக்கிறது. அதற்கு முன் பெண்ணுக்கு மண மகன் புடவை எடுத்துக் கொடுக்கும் சடங்கே திருமணத்தின் முக்கிய பங்காயிருந்தது. பண்டைய இலக்கியங்களின்படி தாலி அணியும் வழக்கமிருந்ததாகத் தெரியவில்லை.

ஆந்திராவில் பெரும்பாலான திருமணங்கள் இரவிலேயே நடக்கின்றன,.இனப் பற்றின் பெயரால் எல்லா சடங்குகளையும் புறக் கணித்து சுயமரியாதைத் திருமணங்களும் நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறொம். சாதி மாறித் திருமண்ம் செய்து கொள்வதை ஊக்குவிக்க தங்கம் கொடுத்த நாடகங்களையும் கண்டிருக்கிறோம். அண்மையில் வறியவர்கள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட 1006 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் தாய்வீட்டுச் சீதனங்களுடன் தாலி புடவை வேட்டி சொக்காய் கொடுத்து நடத்திவைத்த திருமணங்களும் தொலைக் காட்சியில் கண்டிருக்கலாம்

எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம்.

இருமனம் இணைந்து நடக்கும் திருமணங்களில் கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டி போல் வாழ்க்கை சுமையையும் சுகங்களையும் இழுக்க வேண்டும். உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே. 
-------------------------------------------------------------------        ,
      .               .                                  .                                    
            







16 கருத்துகள்:

  1. நல்ல அலசல்.தேவையான அறிவுரை.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. எங்க வீட்டில் ஒரே ஒரு பையனுக்குமட்டும்தான் ஜாதகப்பொருத்தம் நல்ல நாள் எல்லாம் பார்த்து மணம் முடித்தோம். ஆனால் அவனுக்குத்தான் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் கஷ்ட்டங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிரது. இன்று வரையும். எதை நம்புவதுன்னே புரிவதில்லே.

    பதிலளிநீக்கு
  3. உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே.

    நிதர்சனமான உண்மை !

    பதிலளிநீக்கு
  4. //என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன //
    Its the fact. I too have a same thought ;)

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு விபரப் பதிவு. ஜாதகத்தை விட, தீர விசாரித்து திருமணம் செய்வதே, சிறப்பு என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!

    பதிலளிநீக்கு
  6. தெரிந்தவரை நன்றாக அலசி இருக்கிறீர்கள்.

    ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்ப்பது இப்படியும் அப்படியுமாகத் தான் இருக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களின் ஆளுகைகளைப் பார்த்து அவரவர் குணநலங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். இது தான் ஜாதகம் பார்த்துத் திருமணப் பொருத்தங்கள் பார்க்கும் பொழுது, அடுத்தது காட்டும் பளிங்கு போல எடுத்துக் காட்டுகிறது என்கிறார்கள். கிடைக்கும் அனுபவங்களை வைத்து அவரவர் குண நலங்களும் மாறிக் கொண்டே இருக்காதா என்கிற கேள்வியும் இருக்கிறது. ஆனால் அடிப்படை குணங்கள் என்பது மாறாதோ என்னவோ?.. நம்மளவுக்குத் தெரிந்ததே முடிவான முடிவல்ல.
    எது ஒன்று பற்றியும் முடிவான கருத்துச் சொல்வதற்கு முன்பு அதுபற்றி ஆழ்ந்து நம்மளவுக்குத் தெரியாமல் சொல்லக் கூடாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதனால் தெரியாத சமாச்சாரங்களுக்கு 'போலும்' என்கிற வார்த்தையை உபயோகிப்பேன். எல்லா சயின்ஸ் அறிவுகள் மாதிரி இதுவும் கோள்களைப் பற்றியதான ஒரு சயின்ஸ் என்றும் சிலர் சொல்கிறார் கள். இதெல்லாம் பற்றி ஜாதகம் பற்றித் தெரிந்த அறிஞர்கள், திறமையாளர்கள் யாரானும் சொன்னால் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள, இந்தத் துறையில் தெளிவு விசாலம் ஏற்பட வழியேற்படும். யாராவது அப்படித் தெளிவாக இதுபற்றிச் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா, என்னையும் சந்தடி சாக்கில் இழுத்து விட்டிருக்கிறீர்கள். நன்றி. என் பெண்கள் கல்யாணத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் ஜாதகப்பொருத்தம் பார்த்தேன். இன்னொரு பெண்ணுக்குப் பார்க்கவில்லை. 22 வருடங்கள் ஆகிவிட்டன. இருவரும் நான்றாக இருக்கிறார்கள்.

    நான் என்னுடைய ஜாதகத்தை இது வரையிலும் ஜோசியரிடம் காட்டிதில்லை. எனக்கு அதில் நம்பிக்கையுமில்லை.

    பதிலளிநீக்கு
  8. திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பழக்கம் இன்னும் சென்னைக்கு வரவில்லையா? வரும். எத்தனையோ நாடுகளில் (பம்பாயிலும்) திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர்களாக வாழ்கிறார்கள் பலர். நீங்கள் சொல்வது போல் திருமணம் ஒரு license. இருமனம் ஒருமனம் எல்லாம் திருமணத்துக்கு அப்பாலும் இப்பாலும் உப்பாலும் இருக்கலாம் - திருமணத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த மாதிரி நினைத்து வாழ்வோரை அவர்களுடைய பெற்றோரும் உற்றார் உறவினரும் உதைக்காமல் இருக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  9. தலைமுறை தாண்டிய‌ ப‌ல விவ‌ர‌ங்க‌ளை த‌ர‌ த‌குதியான‌வர் தாங்க‌ள் என்ற‌ விண்ண‌ப்ப‌தார்க‌ளின் வேண்டுகோள் ஏற்று செம்மையான விவ‌ர‌க‌ங்க‌ளை, விவாஹ‌ம் பற்றி தெளிவுப‌டுத்தி விட்டீர்க‌ள். வாரிசுக‌ளை ப‌டைப்ப‌தே, உயிர்க‌ளின் த‌லையாய‌ க‌ட‌ன் என்ப‌தை மிக‌த் தெளிவாக முதலிலேயே குறிப்பிட்ட‌தில் தான் பாலா சாரின் த‌னித்துவ‌ம் ஜொலிக்கிற‌து.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையானதொரு அலசல். திருமணம் மற்றும் அதன் சடங்குகள் பற்றிய பல விவரங்களை அறிய முடிந்தது. ஜாதகம் பற்றிய தங்கள் கருத்தோடு முழுவதுமாய் ஒத்துப்போகிறேன். எண்ணப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  11. தேவையான ஆலோசனையும் அறிவுரையும் கூறும் பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
  12. வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.ஒருமுறை என் கைரேகை பார்த்து நான் அல்பாயுசிலேயே போய் விடுவேன் என்று ஜோசியம் கேட்டு அக்காலத்தில் ஒரு பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்து ப்ரீமியம் கட்ட முடியாமல் கட்டிய பணத்தையும் இழந்த கதையை என் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். ஆர்வம் மேலிட்டுக் கைரேகை சாஸ்திரம் படித்து நம்பிக்கை இழந்ததும் உண்டு. ஜாதகம் பார்த்து நிம்மதி இழப்பதைவிட பார்க்காமலேயே இருப்பது நலம் என்று தோன்றுகிறது

    அப்பாதுரை சார், குழந்தை பெற திருமணம் அவசியமில்லைதான். ஆனால் பெற்றுப்போட்டதற்கு பொறுப்பு ஏற்கச் செய்ய திருமணம் என்னும் லைசென்ஸ் தேவை. எதையும் வித்தியாசமாக சிந்தித்து அணுகும் உங்கள் வழி என்னை ஈர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு பதிவு. எனினும் இதில் திருமணம் குறித்த முக்கியக் குறிக்கோள் குழந்தை பெற்றுக்கொள்ளக் கிடைக்கும் அங்கீகாரம் என்ற அளவிலேயே பார்க்கப் பட்டிருக்கிறது. அதையும் மீறித் திருமணம் என்பது ஒரு பிரிக்க முடியாத தார்மீக நெறிகளுக்கு உட்பட்ட பந்தம் எனச் சொல்லுவதே என் குறிக்கோள். நான் கண்டது, கேட்டது, படித்துப் புரிந்து கொண்டது ஆகியவற்றை வைத்தே எழுதி வருகிறேன். தங்கள் பகிர்வுக்கு நன்றி. இது உங்கள் கோணம். என் கோணம் மாறுபட்டது. :))))))))

    பதிலளிநீக்கு

  14. @ கீதா சாம்பசிவம். மாறுபட்ட கோணங்கள் உண்டு என்று தெரியவந்தபோது என்ன என்று தெரிவிக்கவே என் பதிவை உங்கள் பார்வைக்கு அனுப்பினேன். படித்துக் கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அய்யா வணக்கம்.
    உண்மையில் தங்களின் இந்த இணைப்பை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
    இணையத்தில் வேறுபலரும் இதனைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்.
    நான் இந்தப் பதிவில் சொல்ல வந்தது எதற்கெடுத்தாலும் தொல்காப்பியத்தில் இருந்து சான்று தேடும் மனப்பாங்கும் சங்க இலக்கியம் பல இடங்களில் அது காட்டும் இலக்கண மரபை விட்டு அகன்று போகிறது என்பதையும் சுட்டுவதற்காகத்தான். உங்களின் இந்தப் பதிவைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் நிச்சயமாய்ச் சுட்டி கொடுத்திருப்பேன்.

    என் தளம் வந்து கருத்துரைத்து உங்கள் இடுகையைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  16. @ ஊமைக்கனவுகள்
    ஐயா வணக்கம் நான் தொல்காப்பியத்திலிருந்து சுட்டி கொடுத்ததை உங்களுக்குத் தெரிவிக்கவே பின்னூட்டத்தில் இந்த சுட்டி கொடுத்தேன் அது தவிர சங்க கால இலக்கியமோ தொல்காப்பியமோ நானறியேன் தவறாக எண்ண வேண்டாம்.

    பதிலளிநீக்கு