எண்ணங்கள் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூன், 2012

திருமணங்கள்.....


                                                     திருமணங்கள்......
                                                      --------------------


சில அனுபவ வரிகள் வலையில் எழுதப்படும்போது ரசிக்கப் படுகின்றன; சில உதாசீனப் படுத்தப் படுகின்றன; சில வழி காட்டும் படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஒருவராவது ரசிக்கிறார் என்றாலும் தொடர்ந்து எழுதும்படி எனக்கு ஆலோசனைகளும் வந்திருக்கிறது. திருமணம் பற்றி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் இருந்தது. பதிவு எழுத பொருள் தேடிக் கொண்டிருந்தபோது வந்ததால் இந்தத் தலைப்பிலேயே எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.அதன் தாக்கத்தை சிறிது குறைக்க உண்ணவும் உறங்கவும் என்றும் சேர்த்துக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதன் தன் பரிணாம வளர்ச்சியில் தனக்கு விதித்துக் கொண்ட கட்டுப் பாடுகளில் திருமண பந்தமும் ஒன்றாகிறது.

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில் ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

என்னைப் பொறுத்தவரை பொருத்தங்கள் பார்ப்பது அவசியம் ஆனால் ஜாதகம் மூலம் பார்ப்பது என்பது எனக்கு உடன்பாடில்லை. என் திருமணம் ஜாதகம் பார்த்து நடந்ததல்ல. என் மக்களுக்கும் நான் ஜாதகம் பார்க்கவில்லை.எல்லாம் விசாரித்து அறிந்தபின் வரன் கேட்டு வந்தவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களுக்கு அது திருப்தி தரும் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறி என் மக்களது பிறந்த விவரங்கள் கொடுத்தோம்.மூத்தவனுக்கு முதலிலேயே ஜாதகம் பொருந்த எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடந்தது. இளையவனுக்கு ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணின் பெற்றோர் முதலில் பொறுந்தவில்லை என்று கூறிச் சென்றவர் வேறு ஒரு சோதிடரிடம் காட்டி பொருத்தம் இருப்பதாகக் கூறி திரும்பி வந்தனர். நாங்கள் ஜாதகம் பற்றி கவலையே படாததால் திருமணம் இனிதே நிகழ்ந்தது. மூத்தவன் மணம் முடிந்து இருபது ஆண்டுகளும் இளையவன் திருமணம் முடிந்து பதினேழு ஆண்டுகளும் ஓடிவிட்டன. அவர்களது இல்லற வாழ்க்கை இனிதாகவே இருக்கிறது.

ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாததால் பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் முதிர் கன்னிகளாக இருக்கும் சில பெண்களையும் எனக்குத்தெரியும்.

ஆனால் தற்காலத்தில் நடைபெறும் பல திருமணங்களில் பெற்றோருக்கு எந்த உரிமையும் கொடுக்கப் படுவதில்லை. ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப் படுகிறார்கள்( பெரும்பாலும் இனக் கவர்ச்சியால் )திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே தவறான முடிவால் பிரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருபவரும் இல்லாமல் போகிறார்கள்.

இதனால் ஆண் பெண் பார்த்துக் காதலித்து திருமணம் செய்வது தவறு என்று நான் கூறவில்லை. இனக்கவர்ச்சிக்கும் மேலாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள என்று தெரியாமலா நம் முன்னொர் சொல்லிப் போனார்கள். திருமணத்தில் விட்டுக் கொடுக்கும் குணம் இருவருக்கும் வேண்டும். நான் எனது என்ற அகந்தை தலைக்கேறினால் வாழ்க்கை துன்பங்களாலேயே சூழ்ந்திருக்கும்.

வாழ்வில் ஒருமுறை ( அநேகம் பேருக்கு ) நடக்கும் திருமணம் ஊரார் உற்றார் அறிய சிறப்பாக நடப்பதே நல்லது. அதற்காக வியர்வை சிந்தி சேர்த்து வைத்த பணத்தை விரயம் செய்வது நல்லதல்ல. நம் திருமண முறைகளில் சம்பிரதாயங்களுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தரப் படுகிறது. பெரும்பாலும் சடங்குகள் சடங்குகளுக்காகவே நடைபெறுகிறது.முன் காலத்தில் அறியாப் பருவத்தில் நடைபெற்ற திருமண சடங்குகள் இப்போதும் நடைபெறுவது கேலிக் குரியதாகிறது. தென் இந்திய திருமண சம்பிரதாயங்களில் ஒன்று வதுவும் வரனும் தாய்மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவது. என்பது. விளையாட்டாக மணமக்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஏற்படுத்திய பல சம்பிரதாயங்கள் கால வரம்பைக் கடந்து விட்டன.

சம்பிரதாயங்கள் என வரும்போது டாக்டர் கந்தசாமி ஐயா எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது. அவர்கள் வழக்கத்தை மூன்று நான்கு பதிவுகளாக வெளியிட்டிருந்தார்.
அக்னி வளர்த்து ,அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாணிக்கிரகணம் செய்வது ஒரு வழக்கம் என்றால் இவை ஏதுமே இல்லாமல் நெற்கலத்தில் தென்னம்பாளை வைத்து ,அருகில் குத்து விளக்கேற்றி , வீட்டின் பெரியவர் மங்கலநாண் எடுத்துக் கொடுக்க அரைநொடியில் முடிந்து விடும் திருமணங்கள்  கேரள சம்பிரதாயம். அதுவும் அண்மைக் காலத்தில்தான் தாலி கட்டும் வழக்கம் துவங்கி இருக்கிறது. அதற்கு முன் பெண்ணுக்கு மண மகன் புடவை எடுத்துக் கொடுக்கும் சடங்கே திருமணத்தின் முக்கிய பங்காயிருந்தது. பண்டைய இலக்கியங்களின்படி தாலி அணியும் வழக்கமிருந்ததாகத் தெரியவில்லை.

ஆந்திராவில் பெரும்பாலான திருமணங்கள் இரவிலேயே நடக்கின்றன,.இனப் பற்றின் பெயரால் எல்லா சடங்குகளையும் புறக் கணித்து சுயமரியாதைத் திருமணங்களும் நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறொம். சாதி மாறித் திருமண்ம் செய்து கொள்வதை ஊக்குவிக்க தங்கம் கொடுத்த நாடகங்களையும் கண்டிருக்கிறோம். அண்மையில் வறியவர்கள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட 1006 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் தாய்வீட்டுச் சீதனங்களுடன் தாலி புடவை வேட்டி சொக்காய் கொடுத்து நடத்திவைத்த திருமணங்களும் தொலைக் காட்சியில் கண்டிருக்கலாம்

எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம்.

இருமனம் இணைந்து நடக்கும் திருமணங்களில் கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டி போல் வாழ்க்கை சுமையையும் சுகங்களையும் இழுக்க வேண்டும். உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே. 
-------------------------------------------------------------------        ,
      .               .                                  .                                    
            







புதன், 13 ஜூன், 2012

ஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION


                              ஹிந்தி எதிர்ப்பு-AN INTROSPECTION.
                              -----------------------------------------------


மாதங்கி மாலி எழுதி இருக்கும் ‘ அரக்கி ‘ எனும் பதிவில் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே நடந்த உரையாடலை வெளியிட்டிருக்கிறார். பதிவு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கருத்துப் பறிமாறல்.ஆகும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற பாரதியார் பிற மொழிகளையும் கற்றிருக்கிறார், போற்றியுமிருக்கிறார். மொழி உணர்வு என்பது இன்றியமையாதது. மொழி வெறி தேவை இல்லாதது. ஹிந்திமொழி திணித்தலே எதிர்க்கப்பட்டது. ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிரான குரல் ,1939-ல் ராஜாஜி ஹிந்தி கற்பித்தலை கொண்டு வந்தபோதே துவங்கி விட்டது.அப்போதே மொழி உணர்வின் வெளிப்பாடாக உயிர் நீத்தவர்களும் இருந்தார்கள்.

மொழி திணிக்கப்படும் பொது ஆதிக்கமும் திணிக்கப் படுகிறது. கல்வி அறிவே குறைந்திருக்கும் சமுதாயத்தில் , அதன் காரணமாக ஆண்டை அடிமை என்று ஏற்கனவே ஒடுக்கப் பட்டிருக்கும் சமுதாயத்தில் இன்னுமொரு ஆதிக்கமாக ஹிந்தி மொழி திணிக்கப் படுவதை எதிர்த்து குரல் கொடுத்ததும் அதற்கு இளைஞர்கள் துணை போனதும் மிகவும் சரியே.

ஆங்கிலேயன் இந்தியா வந்து அப்போது இருந்த கற்றவர்களால் அடிவருடப் பட்டு இங்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபிக்க முடிந்தது என்றால் அவனது மொழியைக் கற்றவர்கள் ,அப்போதைய உயர் வகுப்பினர் அவனது மொழியில் தேர்ச்சி பெற்று அதையே தங்களது மேன்மைக்குப் பயன் படுத்தியதுதான். சாதாரண மக்களுக்கு கல்வியே மறுக்கப் பட்டு அப்போதைய மேல்வகுப்பினர் முக்கிய பதவிகளில் இருந்து பிறரை முன்னேற விடாமல் செய்தது ஆங்கில மொழி கற்றதனாலும் அவனுக்கு அடிவருடி தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதாலும் மட்டும்தான். இதனை உணரத் துவங்கிய மக்கள் இன்னொரு ஆதிக்கம் ஹிந்தி மொழியால் வரக் கூடும் என்றுணர்ந்து அதனை எதிர்த்துப் போராடியது இப்போது சரித்திர நிகழ்வாகி விட்டது.

நாடு இனம் மொழி  மதம் என்பவை எல்லாம் உணர்வுகள் சம்பந்தப் பட்டது. சரி தவறு என்று கூற அளவுகோல் ஏதுமில்லை. போராட்டம் ஒரு ஆதிக்கம் திணிக்கப் படக்கூடாது என்பதற்குத்தான்.. ஆனால் அதையே மொழிக்கு எதிராக என்று கற்பித்து இன வேறுபாடுகளில் குளிர் காய்பவர்களை அடையாள்ம் கண்டு கொள்ள வேண்டும்.மொழிக்கு எதிராக இங்கே போராடினார்கள் என்றால், ஒதுக்கீட்டிற்கு எதிராக அங்கே போராடினார்கள். ஆனால் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்த நிகழ்வுகளை அணுகினோம் என்றால் நிறைய பார்வைகளின் வெளிப்பாடு தெரியும்.

ஒரு முறை நான் வடக்கில் பயணத்தில் இருந்தபோது என் சக பயணி ( ஹிந்தி பேசுபவர், வடக்கத்திக்காரர் )சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்
‘ மதராசிகள் ஹிந்தியை எதிர்ப்பார்கள், கூடவே அந்த மொழியையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெறுவார்கள் ‘ ஹிந்து தினசரியில் வெளியான கேலிச் சித்திரம் கூறியது போல் ஹிந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தையும் கற்றுத் தேற வில்லை. தமிழையாவது ஒழுங்காகப் பேசவோ எழுதவோ செய்கிறார்களா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. “ மைத்துளிகள்”-ல் கண்ட நகைச்சுவை விடியோ உண்மையை கூறுகிறது 

ஹிந்திப் போராட்டக் காலத்தில் நான் HAL-ல் வேலையிலிருந்தேன். சென்னையில் பாடியில் இயங்கும் லூகாஸ் டீவீஎஸ் நிறுவனத்தில் பணியில் சேர ஒரு நேர்காணலுக்காக பெங்களூரில் இருக்கும் உட்லண்ட்ஸ்  ஹோட்டலில் லூகாஸின் பெர்சொனல் மானேஜரை சந்தித்தேன். நேர்காணலில் அவர் என்னிடம் ஏதேதோ கேள்விகள் தமிழில் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்தேன். எனக்குத் தமிழ் தெரியாது என்று எண்ணிய அவர் தமிழ் தெரியாமல் அப்போதிருக்கும் நிலையில் மதராசில் குப்பை கொட்ட முடியாது என்று கூறினார். பின் என் தமிழ் உரையாடல் கேட்டு எனக்கு அங்கு வேலை கிடைத்தது சரித்திரமாகி விட்டது. எங்களுக்கு பள்ளி இறுதித் தேர்வில் ஹிந்தி அவசியம் பரீட்சசைக்கு உண்டு .ஆனால் தேர்ச்சி பெறும் கட்டாயம் இருக்க வில்லை.  நானும் ஹிந்தியை  “ மானே ஹம்கோ ஜன்ம் தியா ஹை. உஸிகா தோத் பீகர் ஹம் படே ஹுவே ஹைந் “என்ற அளவில் படித்து தேர்வு எழுதினேன்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் பலன்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வெறியாகி மற்ற மாநிலத்தவர் வேற்றாட்களாக எண்ணப் படுகின்றனர். நான் முன்பே கூறியுள்ளது போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் அந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தால் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.       .               .                                  .                                    
            




வியாழன், 7 ஜூன், 2012

துணை தேடி இணைய......

            
                                             துணை தேடி இணைய...........
                                                ..........................................


என் நண்பனுக்கு திருமணத்துக்குப் பெண்பார்க்க எங்களை வற்புறுத்தி அழைத்தான். என்னுடையவும் என் மனைவியுடையவும் அங்கீகாரம் அவசியம் என்றான். அவனுக்குப் பார்த்திருந்த பெண் பாந்தமாயிருந்தாள் பட்டப் படிப்பு முடித்திருந்தாள்.நாங்கள் பச்சைகொடி காட்டிவிட்டோம். அவன் திருமணம் பற்றிய கதை அல்ல இது. மணப்பெண்ணின் குடும்பம் பெரியது.தந்தை இழந்த குடும்பத்தை தனயனும் தாயும் கொண்டு நடத்தி வந்தனர். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு தலை மட்டும் தெரியும் வண்ணம் எல்லோரிடமும் பேசும் அப்பெண்மணி, என்ன செய்திருக்க முடியும்.? அண்ணன்தான் பொறுப்பு என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவன் ரெயில்வேயில் பணியிலிருந்தான். மாலையில் வீட்டின் முன்புறம் ஒரு கடை வைத்து சில்லறை வியாபாரம் செய்து வந்தான். நண்பனுக்குப் பார்த்த பெண் மூத்தவள். அவளுக்குக் கீழ் இன்னும் இரண்டு தங்கைகளும் இரண்டு தம்பிகளும் இருந்தனர். .திருமணம் நன்றாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நண்பனும் அவன் மனைவியும் அவனுடைய அக்கா ஸ்பான்ஸர் செய்ய அமெரிக்கா சென்று விட்டனர்.பின் சில வருடங்களில் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தனர்..எஞ்சி நின்றது நண்ப்னின் மாமியாரும் பெரிய மச்சினனும் தான். அவனுக்கு இதற்குள் வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது திருமண ஆசையும் வந்துவிட்டது. அவனும் அமெரிக்கா சென்று ஒரு பணியில் அமர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது. சென்னை தவிர எந்த ஊரும் பார்த்திராத தாயாரும் அவனும் அமெரிக்கா சென்றனர். அவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை பிடிக்க வில்லை. ஊர் திரும்பி விட்டனர். திருமண முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்த நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது. ஒரு நாள் அவன் பணியில் இருக்கும்போது திடீரென கீழே சாய்ந்து விழுந்து விட்டான். உறவுகள் எல்லாம் அமெரிக்காவில். இங்கோ உலகம் தெரியாத தாய். விவரம் அறிந்து என் நண்பன் ஓடி வந்தான். வீட்டின் மூத்த மாப்பிள்ளை அல்லவா.? மருத்துவ மனையில் சேர்த்தான். உடலின் எல்லா அசையும் உறுப்புகளும் செயலிழந்து விட்டன. அவனது கண்கள் மட்டும் அசையும். சுற்றிலும் நடப்பவை எல்லாம் தெரியும். ஆனால் எதுவும் சொல்ல முடியாது செய்ய முடியாது.இப்படி மருத்துவ மனையில் சுமார் நான்கு வருடங்கள் கழித்து இறந்து விட்டான். அப்படி இருந்தும் மருத்துவ மனையில் அவனுக்கு கண்மொழி கற்பித்தனர். அதன் மூலம் ஒரு COMMUNICATION  LINK ஏற்படுத்தப் பட்டது. ஒருசார்ட்டில் ஆங்கில எழுத்துக்கள் 26-ம் எழுதப் பட்டிருக்கும்.அவன் படுத்திருக்கும் கட்டிலுக்கு நேர் திரே அதனை மாட்டியிருந்தனர். தொடர்பு கொள்ளும் மருத்துவ உதவியாளர் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு கோலை வைப்பார். இவன் சொல்ல விரும்பும் வார்த்தையின் எழுத்து வரும்போது இரண்டு முறை கண் சிமிட்டுவார். இப்படியே வார்த்தைகள் வாக்கியங்களாக மாறும்..அவர்கள் இருந்த வீடு குறித்த தாஸ்தாவேஜ்கள் இருக்குமிடம் உட்பட எல்லாம் அறியப் பட்டது. கூடவே துணை தேடி இணையாதது நன்மைக்கே என்றும் அவன் தெரியப் படுத்தினான். அறிந்தவர்கள் வந்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகும்.   
( இந்த வாரம் 6-6-12-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் “ என் விகடன் இணைப்பில் வெளியான ‘ பார்வை மொழி பாவனா ‘ படித்தபோது நினைவில் வந்ததே மேலே சொல்லப் பட்ட நிகழ்ச்சிகள். )
                    -----------------------------------


இது ஒரு சிறிய குடும்பம். ஒரு மகன் .ஒரு மகள். பெண்ணுக்குத் திருமணத்துக்காகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது காரணத்தால் வரும் வரன்கள் தட்டிப் போய்க் கொண்டிருந்தன. ஜாதகம் சேரவில்லை, தோஷம் , பையன் நிறம் குறைவு,பையனுக்கு நல்ல உத்தியோகம் இல்லை. பெண்ணுக்கு யார்மேலாவது பிரியம் இருக்கிறதா என்று கேட்டால் அதுவும், இல்லை. ஆனால் திருமணம் மட்டும் கூடி வரவில்லை. ஒவ்வொரு சமயம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க அவளது பெற்றோர்கள் விரும்பவில்லையோ என்று தோன்றும்.பெண் கணிசமாக சம்பாதிக்கிறாள். இப்போது நல்ல வசதியோடு வாழ்க்கை.பெண்ணுக்குத் திருமணம் ஆனால் இதெல்லாம் போய்விடும். வயதாகிக் கொண்டே போக திருமண சந்தையில் விலை போவதும் கஷ்டம்தானே
                      ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

                    
இது இன்னொரு ரகம். மாப்பிள்ளைக்கு நிறைய சொத்து இருந்தது. வாரிசுகளும் இருக்கவில்லை. அவருக்கும் வயது கூடிக் கொண்டே போயிற்று. அவருக்குத் திருமண பந்தத்தில் உடலுறவு முக்கியமில்லை. அவரை கவனித்துக் கொள்ளவும் இணையாயிருக்கவும் ஒரு துணை தேவை எழுபது வயதுகளில் இருக்கும் அவர் ஐம்பதுகளில் இருக்கும் ஒரு பள்ளி ஆசிரியையைத் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்து கொண்டார். ஒருவருக்கொருவர் துணையாக இணையாக நலமாக இருக்கிறார்கள்.
                        ..................................................................

இந்தக் கதையும் கேளுங்கள். அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த ஒரு ஜோடியின் பெண் இணை உயிர் துறந்தது. துக்கம் தாங்காமல் துடி துடித்த கணவன் வெறுமையை விரட்ட ஒரு இணை நாடினார். பணத்துக்கும் வரவுக்கும் பஞ்சமில்லை. முன் கதையில் சொன்ன மாதிரி தன்னிலும் கீழான, வறுமையிலுள்ள பெண்ணை இவர் தேட வில்லை. இவருக்கு சம அந்தஸ்தில் உள்ள படித்த வசதியான பெண்ணை இவரை மாதிரியே இணையிழந்த பெண்ணைத் தேடினார். COMPANIONSHIP  வேண்டியவருக்கு COMPATIBILITY  கிடைக்க வில்லை. இருக்கும் சொத்தை இல்லாதவருக்கு உதவ செலவு செய்யவும் மனம் இல்லை. வாழ்க்கை ஒரே விரக்தி மயமாக இருக்கிறது அவருக்கு.
                   ---------------------------------------


இந்தக் கதைக்குக் காரணம் விளங்குவது கஷ்டமாக இருக்கிறது. தலைமுறை இடைவெளி எனக்குப் புரிய விடாமல் செய்கிறதோ.? எந்தக் குறையும் காண முடியாத குடும்பம். தாய் தந்தை ;ஒரே பெண். அன்பும் பாசமும் அரவணைப்பும் ஒருங்கே திகழும் குடும்பம். தந்தைக்கு தான் உத்தியோகத்தில் இருக்கும்போதே மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க ஆசை. பெண்ணும் நன்கு படித்து உத்தியோகத்தில் இருக்கிறாள் கை நிறைய சம்பாதிக்கிறாள். காதல் கத்தரிக்காய் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருபத்தைந்து வயதாகிறது. திருமணத்துக்கு அவசரமில்லை என்கிறாள்..அப்படியே மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தால். அவருக்கு உள்ளூரிலேயே உத்தியோகமிருக்க வேண்டுமாம். திருமணமானாலும் கணவன் வீட்டுக்குப் போக மாட்டாளாம்.இப்போது உள்ளூரில் இருக்கும் மாப்பிள்ளை ஒரு நல்ல வேலை கிடைத்து வெளியூர் போக வேண்டி வந்தாலும் இவள் போக மாட்டாளாம்.தாயைப் போல ஒரு மனைவி கிடைக்காததால் வினாயகர் திருமணம் செய்து கொள்ள வில்லையாம். ஒரு வேளை தந்தையைப் போல் ஒரு கணவனுக்காக இவள் காத்திருக்கிறாளோ. ?
                         ..........................................               









செவ்வாய், 5 ஜூன், 2012

முன்னேற்றம்---- என்ன விலை.?

                                      முன்னேற்றம்----என்ன விலை.?
                                      ----------------------------------------------


அண்மையில் பத்திரிகை செய்தி ஒன்று படித்தேன்.சும்மா இருக்கும்போதே ஏதேதோ எண்ணங்கள் அலைக் கழிக்கும். பத்திரிக்கை செய்தி ஆலையில்பட்ட கரும்பாயிற்று.

1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி தாமோதர் பள்ளத்தாக்குக் கார்பொரேஷனின் (“DVC”) நான்காவது அணை தான்பாத் ( DHANBAD )மாவட்டத்தில் பான்செட்டில் (PANCHET)  திறக்கப் பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அதை அங்கு பணி புரிந்த புத்னி மேஜான் (BUDHNI MEJHAN) என்ற பதினைந்து வயது சாந்தால் இன ஆதிவாசிப் பெண்ணினால் திறக்க வைத்தார்.சிரித்து மகிழ்ந்திருந்த பிரதமரின் பக்கத்தில் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த மதிப்பும் மரியாதையும் அவளைக் குதூகலத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

அந்தப் பெண் அவளுடைய கிராமம் கர்போனாவுக்குத் (KARBONA) திரும்பிச் சென்றார். பிரதமர் நேருவுக்கு திறப்பு விழாவின்போது அவள் மாலையிட்டதால்,அவர்கள் வழக்கப்படி பிரதமருக்கு அவள் மனைவியாகி விட்டாள். பிரதமர் நேரு சாந்தால் இனத்தைச் சேராதவர் என்பதால், அவளுக்கு அந்த இனத்திலும் ஊரிலும் இடமில்லை என்று கூறி, அவளைக் கிராமப் பெரியோர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்து துரத்தி விட்டார்கள்.

பான்செட்டில் சுதிர் தத்தா என்பவர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். 1962-ம் வருடம் DVC வேலையிலிருந்து விலக்கப்பட்டார். கிடைத்த வேலைகளைச் செய்து காலங்கடத்திய அவள் 1980-களில், தான் மாலையிட்ட நேருவின் பேரனான அப்போதையப் பிரதமர் ராஜிவ் காந்தியை அணுகி, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பொரேஷனிலேயே வேலை கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். 2001-ம் ஆண்டு கிடைத்த செய்திப்படி DVC-ல் வேலையிலிருந்த புத்னி, தன் சொந்தக் கிராமம் கர்போனாவுக்குப் போக அனுமதிப்பார்களா என்று கேட்டுக் கொண்டிருந்தாளாம். கடைசியாகக் கிடைத்த செய்திப்படி புத்னி (“ நெருவின் ஆதிவாசி மனைவி”).தனது 67-வது வயதில் ,கடந்த ஆண்டு இறந்தார் என்பதே

நிறைய நிகழ்வுகள் இந்த வயதில் கண்டாயிற்று. சிலவற்றைப் பற்றி சிந்தித்ததுகூடக் கிடையாது. மிகவும் சிந்திக்காமலே ஏற்றுக் கொண்ட விஷயங்களில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு நாத்திகர். அவர் கோயில்கள் என்று குறிப்பிட்டது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் தொழிற்சாலைகளையும் விவசாய நீர்ப் பாசனத்துக்கு உறுதுணை செய்யும் அணைகட்டுகளையுமே. அவர் மிகப் பெரிதாகக் கனவு கண்டார். கண்ட கனவுகளை மெய்ப்பிக்க ஏராளமான தொழிற்சாலைகளையும் அணைக்கட்டுகளையும் நிறுவினார். ஊரையும் பேரையும் இணைக்கும் இவற்றின் பட்டியலில் சில இவை. 
 சிந்திரி ( உரத்தொழிற்சாலை.)
பிம்ப்ரி (பெனிசிலின்).
சித்தரஞ்சன் ( லோகோமோடிவ் )
பெரம்பூர் ( கோச் ஃபாக்டரி )
பிலாய்  ( ஸ்டீல் )
அங்க்லேஷ்வர் ( பெட்ரோலியம் )
நரோரா  ( ஹெவி வாட்டர் )
தாராப்போர் ( அணு நிலையம் )

பல்வேறு உபயோகத்துக்கான அணைக்கட்டுகள்

பக்ரா நங்கல், ஹீராகுத் , DVC அணைகள்,கோசி, துங்கபத்ரா, கேயல்கரோ, சர்தார் சரோவர்

தவிர நிலத்தடி கனிமங்களுக்காக

ஜரியா ( கரி ),ஹஜாரிபாக் (மைக்கா ),சிங்பும், பைலாடிலா, கட்சிரொலி ( இரும்பு கனிமம் ) நெய்வேலி ( பழுப்பு நிலக்கரி ), கியோஞ்சார் ( மாங்கனீஸ் ) கோரபுட் ,கந்தமர்தன் ( பாக்சைட் )

அவர் தொடங்கி பிறகு எழுப்பப்பட்ட நூதனக் கோயில்களின் எண்ணிக்கை பட்டியலில் அடக்குவது சிரமம். இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடப்படும் ஒரு நாடாகத் திகழ, இந்தக் கோயில்களின் இயக்கம் மிக முக்கியம். இருந்தாலும் இந்த முன்னேற்றம் போதாது இன்னும் வேண்டும் என்பதும் நியாயமானதே. NECESSITY
IS THE MOTHER OF INVENTION என்பார்கள். தேவைகளே கண்டு பிடிப்புகளின் மூலம் (தாய்) எனலாமா.? போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து என்று திருப்திப் பட முடியுமா.? CONTENTMENT SMOTHERS INVENTION என்று எனக்குத் தோன்றுகிறது. திருப்தி என்பது ஆற்றல்களை அழுத்திவிடும். 

எந்தவித முன்னேற்றத்துக்கும் ஒரு விலை உண்டு. ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகிறது என்பதும் நியதி போல் தோன்றுகிறது. நியாய அநியாயங்கள் , சரி தவறு போன்றவை காலத்தினால் முடிவு செய்யப் பட வேண்டியவை.

இந்திய தேசப் பிரிவினைக்குக் கொடுக்கப்பட்ட விலை, ஆயிரக் கணக்கானவர்களின் உயிரும், பல்லாயிரக் கணக்கானவர்களின் வேரறுந்ததுமே.. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வடுக்களும் தழும்புகளும் மாற வில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் புது வாழ்க்கைக்கு, ( இப்போது பழைய வாழ்க்கையாகி விட்டது.)பழகிக் கொண்டு விட்டார்கள். இந்தத் தலை முறையினருக்கு அது தெரிய நியாயமில்லை.

இந்தப் புலம் பெயர்தலும் ,புது வாழ்க்கையும் விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம் என்றால், இவர்களின் வேதனைகளும் வலிகளும் உணரப் படுகின்றன. இவர்கள் செய்வது நாட்டுக்கான தியாகம். இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உயிரிழப்புகள் இருந்தே தீரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் போல. பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் போது சிலரது இழப்புகள் தவிர்க்க முடியாது.

அந்தக் காலத்தில் இந்தப் பொருளாதார முன்னேற்றத்துக்காக, அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்த தியாகம் கண்டு கொள்ளப் படாமலேயே போயிருக்கிறது. ஒரு கணக்குப்படி, சுதந்திரம் கிடைத்த ஐம்பது வருடங்களில், ஐந்து கோடி பேர்கள் இடம் பெயர்க்கப் பட்டிருக்கிறார்கள். முன்னேற்றத்தின்போது உரிமைகளைப் பற்றி பேசுவது விரும்பத்தக்கது அல்ல என்று அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கூறியதாகவும் செய்தி இருக்கிறது.

முன்னேற்றத்துக்காக ஒரு விலை கொடுத்தே ஆகவேண்டும்.ஆனால் இந்த முன்னேற்றத்துக்கு விலை கொடுப்பவரகளுக்கும் உரிமை இருக்க வேண்டும். ஆதிவாசிகளின் அடி வயிற்றில் கை வைத்து அவர்களின் வேதனையில் முன்னேறுபவர்கள், தனிப்பட்ட மனிதர்களாக இருப்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.

ஒருமுறை நான் கடவுளோடு கனவில் உரையாடியபோது அவர் சொன்னார்.
( PAIN IS INEVITABLE. BUT SUFFERING IS OPTIONAL ) வலி தவிர்க்க முடியாதது. ஆனால் வேதனையாக எண்ணுவது நாமே தேடுவது .முன்னேற்றத்தில் வலி இருக்கும், அவர்களின் வேதனையைக் குறைக்க அரசாங்கம் ஆவன செய்யலாமே.

உரிமைக்காகப் போராடுபவர்களும் ஒரு லட்சுமணன் கோட்டைப் போட்டுக் கொள்வது நலமோ என்று தோன்றுகிறது. .அதை அவ்வப்போது மீறி ராமாயணம் தொடரவும் வழி செய்யலாமோ.?.
------------------------------------------------------------- 
( பின் குறிப்பு:- நான் படித்த செய்தியின் படி 1980-களில் என்று இருந்த செய்தியை 1980-ம் ஆண்டு என்று தவறாக எழுதிவிட்டேன். இப்போது திருத்தப் பட்டு விட்டது. சுட்டிக் காட்டிய சுந்தர்ஜீக்கு நன்றி.) 






.