Thursday, June 7, 2012

துணை தேடி இணைய......

            
                                             துணை தேடி இணைய...........
                                                ..........................................


என் நண்பனுக்கு திருமணத்துக்குப் பெண்பார்க்க எங்களை வற்புறுத்தி அழைத்தான். என்னுடையவும் என் மனைவியுடையவும் அங்கீகாரம் அவசியம் என்றான். அவனுக்குப் பார்த்திருந்த பெண் பாந்தமாயிருந்தாள் பட்டப் படிப்பு முடித்திருந்தாள்.நாங்கள் பச்சைகொடி காட்டிவிட்டோம். அவன் திருமணம் பற்றிய கதை அல்ல இது. மணப்பெண்ணின் குடும்பம் பெரியது.தந்தை இழந்த குடும்பத்தை தனயனும் தாயும் கொண்டு நடத்தி வந்தனர். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு தலை மட்டும் தெரியும் வண்ணம் எல்லோரிடமும் பேசும் அப்பெண்மணி, என்ன செய்திருக்க முடியும்.? அண்ணன்தான் பொறுப்பு என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவன் ரெயில்வேயில் பணியிலிருந்தான். மாலையில் வீட்டின் முன்புறம் ஒரு கடை வைத்து சில்லறை வியாபாரம் செய்து வந்தான். நண்பனுக்குப் பார்த்த பெண் மூத்தவள். அவளுக்குக் கீழ் இன்னும் இரண்டு தங்கைகளும் இரண்டு தம்பிகளும் இருந்தனர். .திருமணம் நன்றாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நண்பனும் அவன் மனைவியும் அவனுடைய அக்கா ஸ்பான்ஸர் செய்ய அமெரிக்கா சென்று விட்டனர்.பின் சில வருடங்களில் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தனர்..எஞ்சி நின்றது நண்ப்னின் மாமியாரும் பெரிய மச்சினனும் தான். அவனுக்கு இதற்குள் வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது திருமண ஆசையும் வந்துவிட்டது. அவனும் அமெரிக்கா சென்று ஒரு பணியில் அமர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது. சென்னை தவிர எந்த ஊரும் பார்த்திராத தாயாரும் அவனும் அமெரிக்கா சென்றனர். அவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை பிடிக்க வில்லை. ஊர் திரும்பி விட்டனர். திருமண முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்த நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது. ஒரு நாள் அவன் பணியில் இருக்கும்போது திடீரென கீழே சாய்ந்து விழுந்து விட்டான். உறவுகள் எல்லாம் அமெரிக்காவில். இங்கோ உலகம் தெரியாத தாய். விவரம் அறிந்து என் நண்பன் ஓடி வந்தான். வீட்டின் மூத்த மாப்பிள்ளை அல்லவா.? மருத்துவ மனையில் சேர்த்தான். உடலின் எல்லா அசையும் உறுப்புகளும் செயலிழந்து விட்டன. அவனது கண்கள் மட்டும் அசையும். சுற்றிலும் நடப்பவை எல்லாம் தெரியும். ஆனால் எதுவும் சொல்ல முடியாது செய்ய முடியாது.இப்படி மருத்துவ மனையில் சுமார் நான்கு வருடங்கள் கழித்து இறந்து விட்டான். அப்படி இருந்தும் மருத்துவ மனையில் அவனுக்கு கண்மொழி கற்பித்தனர். அதன் மூலம் ஒரு COMMUNICATION  LINK ஏற்படுத்தப் பட்டது. ஒருசார்ட்டில் ஆங்கில எழுத்துக்கள் 26-ம் எழுதப் பட்டிருக்கும்.அவன் படுத்திருக்கும் கட்டிலுக்கு நேர் திரே அதனை மாட்டியிருந்தனர். தொடர்பு கொள்ளும் மருத்துவ உதவியாளர் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு கோலை வைப்பார். இவன் சொல்ல விரும்பும் வார்த்தையின் எழுத்து வரும்போது இரண்டு முறை கண் சிமிட்டுவார். இப்படியே வார்த்தைகள் வாக்கியங்களாக மாறும்..அவர்கள் இருந்த வீடு குறித்த தாஸ்தாவேஜ்கள் இருக்குமிடம் உட்பட எல்லாம் அறியப் பட்டது. கூடவே துணை தேடி இணையாதது நன்மைக்கே என்றும் அவன் தெரியப் படுத்தினான். அறிந்தவர்கள் வந்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகும்.   
( இந்த வாரம் 6-6-12-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் “ என் விகடன் இணைப்பில் வெளியான ‘ பார்வை மொழி பாவனா ‘ படித்தபோது நினைவில் வந்ததே மேலே சொல்லப் பட்ட நிகழ்ச்சிகள். )
                    -----------------------------------


இது ஒரு சிறிய குடும்பம். ஒரு மகன் .ஒரு மகள். பெண்ணுக்குத் திருமணத்துக்காகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது காரணத்தால் வரும் வரன்கள் தட்டிப் போய்க் கொண்டிருந்தன. ஜாதகம் சேரவில்லை, தோஷம் , பையன் நிறம் குறைவு,பையனுக்கு நல்ல உத்தியோகம் இல்லை. பெண்ணுக்கு யார்மேலாவது பிரியம் இருக்கிறதா என்று கேட்டால் அதுவும், இல்லை. ஆனால் திருமணம் மட்டும் கூடி வரவில்லை. ஒவ்வொரு சமயம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க அவளது பெற்றோர்கள் விரும்பவில்லையோ என்று தோன்றும்.பெண் கணிசமாக சம்பாதிக்கிறாள். இப்போது நல்ல வசதியோடு வாழ்க்கை.பெண்ணுக்குத் திருமணம் ஆனால் இதெல்லாம் போய்விடும். வயதாகிக் கொண்டே போக திருமண சந்தையில் விலை போவதும் கஷ்டம்தானே
                      ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

                    
இது இன்னொரு ரகம். மாப்பிள்ளைக்கு நிறைய சொத்து இருந்தது. வாரிசுகளும் இருக்கவில்லை. அவருக்கும் வயது கூடிக் கொண்டே போயிற்று. அவருக்குத் திருமண பந்தத்தில் உடலுறவு முக்கியமில்லை. அவரை கவனித்துக் கொள்ளவும் இணையாயிருக்கவும் ஒரு துணை தேவை எழுபது வயதுகளில் இருக்கும் அவர் ஐம்பதுகளில் இருக்கும் ஒரு பள்ளி ஆசிரியையைத் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்து கொண்டார். ஒருவருக்கொருவர் துணையாக இணையாக நலமாக இருக்கிறார்கள்.
                        ..................................................................

இந்தக் கதையும் கேளுங்கள். அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த ஒரு ஜோடியின் பெண் இணை உயிர் துறந்தது. துக்கம் தாங்காமல் துடி துடித்த கணவன் வெறுமையை விரட்ட ஒரு இணை நாடினார். பணத்துக்கும் வரவுக்கும் பஞ்சமில்லை. முன் கதையில் சொன்ன மாதிரி தன்னிலும் கீழான, வறுமையிலுள்ள பெண்ணை இவர் தேட வில்லை. இவருக்கு சம அந்தஸ்தில் உள்ள படித்த வசதியான பெண்ணை இவரை மாதிரியே இணையிழந்த பெண்ணைத் தேடினார். COMPANIONSHIP  வேண்டியவருக்கு COMPATIBILITY  கிடைக்க வில்லை. இருக்கும் சொத்தை இல்லாதவருக்கு உதவ செலவு செய்யவும் மனம் இல்லை. வாழ்க்கை ஒரே விரக்தி மயமாக இருக்கிறது அவருக்கு.
                   ---------------------------------------


இந்தக் கதைக்குக் காரணம் விளங்குவது கஷ்டமாக இருக்கிறது. தலைமுறை இடைவெளி எனக்குப் புரிய விடாமல் செய்கிறதோ.? எந்தக் குறையும் காண முடியாத குடும்பம். தாய் தந்தை ;ஒரே பெண். அன்பும் பாசமும் அரவணைப்பும் ஒருங்கே திகழும் குடும்பம். தந்தைக்கு தான் உத்தியோகத்தில் இருக்கும்போதே மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க ஆசை. பெண்ணும் நன்கு படித்து உத்தியோகத்தில் இருக்கிறாள் கை நிறைய சம்பாதிக்கிறாள். காதல் கத்தரிக்காய் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருபத்தைந்து வயதாகிறது. திருமணத்துக்கு அவசரமில்லை என்கிறாள்..அப்படியே மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தால். அவருக்கு உள்ளூரிலேயே உத்தியோகமிருக்க வேண்டுமாம். திருமணமானாலும் கணவன் வீட்டுக்குப் போக மாட்டாளாம்.இப்போது உள்ளூரில் இருக்கும் மாப்பிள்ளை ஒரு நல்ல வேலை கிடைத்து வெளியூர் போக வேண்டி வந்தாலும் இவள் போக மாட்டாளாம்.தாயைப் போல ஒரு மனைவி கிடைக்காததால் வினாயகர் திருமணம் செய்து கொள்ள வில்லையாம். ஒரு வேளை தந்தையைப் போல் ஒரு கணவனுக்காக இவள் காத்திருக்கிறாளோ. ?
                         ..........................................               

15 comments:

 1. அன்புள்ள ஐயா..


  வாழ்வின் அவலங்கள் இவை. இன்னும் எத்தனையோக கதைகள் உலகத்தில் மனம் கசிய வைத்துக்கொண்டிருக்கின்றன. தங்களிடம் வேண்டுவது. இதுபோன்ற உங்கள் வாழ்வில் கண்டவற்றை இணைத்து அவற்றுக்கு நல்ல தீர்வை அமைத்து ஒரு நாவலாக்க முயற்சி செய்யுங்களேன்.

  நன்றாக வரும் அது பயனை அளிக்கும் என்றும் நம்புகிறேன்.

  ReplyDelete
 2. துணை தேடி இணைய...........

  தொகுப்புகள் சிந்திக்கவைக்கின்றன..

  ReplyDelete
 3. இல்லற வாழ்க்கைக்குத் துணையைத் தேடுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. தொடரட்டும் தங்கள் வாழ்வியல் சிந்தனைகள். கட்டுரைகளாகவே எழுதுங்கள்.

  ReplyDelete
 4. சுவாரசியமான தொகுப்பு. எதிர்பார்ப்புகள் ஏகமாக இருப்பதில் , தோல்வி வந்தால் என்ன செய்வது என்து , பயந்து, அப்படியே போகட்டும் என்று இருப்பவர்கள் அதிக்ம்.

  சுவையாக, மனித குணங்களை அழகாக, மிகைப்படாமல், , சொல்வது, பாராட்டுக்குறியது.

  நன்றி.

  ReplyDelete
 5. "ப‌றவைக‌ள் ப‌லவித‌ம், அவை ஒவ்வொன்றும் ஒருவித‌ம்"
  எனச் சொன்னார் க‌விய‌ர‌சு. ப‌ற‌வை ம‌ட்டுமா? ம‌ர‌ங்க‌ள், வில‌ங்குக‌ள், மீன்க‌ள் என தாங்க‌ள் குறிப்பிட்ட‌ ஒவ்வொரு நிக‌ழ்வு/த‌ன்மை போல‌ ஒவ்வொன்றும் ஒரே வித‌மாய் இல்லைதான் பாலா சார். உங்க‌ள் வாழ்வின் மீதான பார்வை மிக‌ அழுத்த‌மான‌து ம‌ட்டும‌ல்ல‌ மிக‌ நுட்ப‌மான‌தும் கூட‌.

  ReplyDelete
 6. @ ஹரணி ஐயா, உங்கள் வருகைக்கும்
  எதிர்பார்ப்புக்கும் நன்றி. நான் மிக்க
  ஆவலோடு எழுதிய நினைவில் நீ
  என்ற நாவல் என் உள்ளக்
  கிடக்கைகளையும், அபிலாக்ஷை
  களையும் முன் நிறுத்தி எழுதியது.
  ஒருவராவது முழு நாவலைப்
  படித்திருப்பார்களா தெரியவில்லை.
  நாவல் எழுதும் ஆசையே போய்
  விட்டது என்பதுதான் நிஜம்.

  ReplyDelete
 7. @ தி.தமிழ் இளங்கோ,
  @ வெற்றிமகள்,
  @ இராஜராஜேஸ்வரி,
  @ வாசன்
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
  பாராட்டுக்கும் நன்றி.
  வெற்றி மகள் இது உங்கள் முதல்
  வருகை என்று எண்ணுகிறேன்.
  தொடர்ந்து வந்து ஊக்குவிக்க
  வேண்டுகிறேன்.

  ReplyDelete
 8. அன்புள்ள ஐயா...


  உங்கள் நாவலின் 5 அத்தியாயங்களைத் தொடர்ந்து படித்தேன். அப்புறம் இடைவிடாத பணியிலும் கணிப்பொறியில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் அதனைத் தொடர்ந்து படிக்கமுடியவில்லை.முழுதும் படித்துவிட்டு எழுதுவேன் என்று ஏற்கெனவே சொல்லியுள்ளேன்.

  கண்டிப்பாக நான் உங்கள் நாவலை விரைவில் முழுமையாகப் படித்துவிட்டு பேசுவேன்.தாமதம் நேர்ந்தமைக்குத் தணிக.

  ReplyDelete
 9. அன்புள்ள ஐயா...


  உங்கள் நாவலின் 5 அத்தியாயங்களைத் தொடர்ந்து படித்தேன். அப்புறம் இடைவிடாத பணியிலும் கணிப்பொறியில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் அதனைத் தொடர்ந்து படிக்கமுடியவில்லை.முழுதும் படித்துவிட்டு எழுதுவேன் என்று ஏற்கெனவே சொல்லியுள்ளேன்.

  கண்டிப்பாக நான் உங்கள் நாவலை விரைவில் முழுமையாகப் படித்துவிட்டு பேசுவேன்.தாமதம் நேர்ந்தமைக்குத் தணிக.

  ReplyDelete
 10. துணை தேடுவதே இணையத் தானா?..
  படித்த பாடம் வேறாய்த் தெரிகிறது. 'துணை தேடி வாழ..' என்று இருந்திருக்கலாம்..

  ReplyDelete
 11. பந்தங்களின் பல்வேறு நிலைகளைச் சொல்லி வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும் எண்ணவோட்டத்தையும் அலசியிருக்கிறீர்கள். கடைசியாய் சொல்லியிருக்கும் விஷயத்தில் அந்தப் பெண்ணின் நிபந்தனைகளுக்குக் காரணம், தனக்குப்பின் தன் தாய் தந்தையரை கவனிக்க ஆளின்றிப் போய்விடுமே என்ற கவலையாக இருக்கலாம்.

  முதலில் குறிப்பிட்ட கண்மொழிப் பகிர்வு மனதை நெகிழ்த்தியது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 12. @ திரு.ஹரணி, மீண்டும் நன்றி.
  @ ஜீவி, இங்கு இணைதல் என்றது
  வாழ்வில் இணைய என்பதே
  என்பது தெளிவு. ஆலோசனைக்கு
  நன்றி.
  @ திரு அப்பாதுரை, வருத்தத்துக்கு
  நான் காரணமா.?வருகைக்கு நன்றி.
  @ கீதமஞ்சரி.நான் எதுசரி எது தவறு
  என்று கூறவில்லை. கண்டு
  தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டேன்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. அனைவரது எண்ண ஓட்டங்களையும் தங்கள் சிந்தனையில் கண்டேன் அவரவர் எண்ணம் போல வாழ்வு இக்காலத்தில் வேறு எண்ண சொல்ல .

  ReplyDelete
 14. எதிர்ப் பட்ட அனுபவங்களை அவற்றின் பரிணாமங்களை மிக நுட்பமாய் பகிர்ந்துள்ளீர்கள்.பணி தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete