சனி, 5 ஜனவரி, 2013

கற்றதும் விட்டதும்....


                                       கற்றதும்  விட்டதும்....
                                       ----------------------------


முதன் முதலில் நான் மது அருந்திய நினைவு எனக்கு வந்து அதுவே ஒரு பதிவுக்கு வழி வகுத்து விட்டது. பெங்களூரில் நான் அந்தக் காலத்தில் வாழ்ந்த இடங்கள் வழியே செல்ல நேரும்போது நினைவுகள் போட்டிபோட்டுக் கொண்டு வந்து மோதும். 1962 என்று நினைக்கிறேன். கமெர்ஷியல் ஸ்ட்ரீட் அருகே வீரப்பிள்ளைத் தெரு. ஒரு நாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்தபோது அங்கு ஒரு கட்டிட மாடியில் என் நண்பன் ஒருவனைக் காணச்சென்றேன். மாலை ஆறு அல்லது ஏழு மணி இருக்கலாம். அவன் மாடியில் ஒரு அறையில் தங்கி இருந்தான். அவனது சொந்த ஊர் குடகு பக்கம் எங்கோ. அறைக் கதவு சாத்தி இருக்க நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவன் என்னைக் கண்டதும் திடீரென்று என்னை உள்ளே இழுத்துக் கொண்டு கதவை மூடினான். அவனது அறையில் ஒரு மேசை மேல் பாட்டில்களும் கொறிக்க முந்திரிப் பருப்பு வகைகளும் இருந்தன. “ என்ன... தண்ணி எல்லாம் போடுவியா ?என்றேன். அவன் வாயில் விரலை வைத்து என்னைப் பேசக்கூடாது என்று சைகை காட்டினான். ஒரு டம்ப்ளரில்  பாட்டிலிலிருந்து எனக்கு ஊற்றிக் கொடுத்தான். முன்னே பின்னே குடித்துப் பார்த்திராத எனக்கு பயமாக இருந்தது. கூடவே அதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமும் இருந்தது. And peer pressure.? மது வகையறாக்களில் பீர் போதை ஏற்படுத்தாது என்று கூறக் கேட்டிருக்கிறேன். “ இது பீர் என்றால் குடிக்கிறேன் “ என்றேன். “ஹூம்.. ஹூம். “ என்று கூறிக்கொண்டே டம்ப்ளரை என்னிடம் கொடுத்தான். முன்னே பின்னே செத்தால்தானே சுடுகாடு
தெரியும். குடிபற்றி ஏதும் தெரியாத நான் அதை ( பிறகு அது ரம் என்று தெரிந்து கொண்டேன்) வாங்கி மட மடவென்று ஒரே மூச்சில் குடித்துவிட்டேன். விசேஷமாக எந்த ருசியும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் வயிற்றின் உள்ளே காந்தத் துவங்கியது. சிறிது நேரம் என்னென்னவோ உளறிக்கொண்டிருந்தேன். வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நினைவு வந்து அவனிடம் “பை “ சொல்லி மாடிப்படி இறங்கக் கால் வைத்தால்............. ஒவ்வொரு படியும் கீ கீ கீழே எங்கோ இருப்பதுபோல் தோன்றியது . எப்படியோ விழாமல் தட்டுத்தடுமாறி கீழே வந்தேன். அங்கே என் தம்பி ஒரு பெட்டிக்கடை அருகே நின்றிருந்தான். நான் அந்தக் கடையில் சிகரெட் வாங்குவது வழக்கம். நான் குடித்திருப்பது தெரியாமல் மறைக்க கூடவே லாசென்சஸ் சில வாங்கினேன். “என்ன அண்ணா குடிச்சீங்களாஎன்ற என் தம்பியை “ ஊஷ் “ என்று அடக்கினேன். கால்கள் பின்னிக் கொள்ள நடக்கத் தடுமாறினேன். என் நண்பனின் ஓட்டல் எதிரே இருந்தது. அங்கே போய் அவனிடம் குடிக்க மோர் கேட்டேன்.என்னய்யா... தண்ணியா “ என்றவனிடம் ஏதும் கூறாமல் மோர் வாங்கிக் குடித்துவிட்டு வெளியே வந்து என் தம்பியின்

தோள்களில் சாய்ந்து கொண்டு  அலசூர் நோக்கி நடக்கத் துவங்கினோம். ஒரு வழியாய் வீடு வந்ததும் சமையலறையில் என் மற்ற தம்பிகள் உணவருந்திக் கொண்டிருப்பது தெரிந்ததும் முன் அறையில் இருந்தே “ எனக்கு சாப்பாடு கீப்பாடு எதுவும் வேண்டாம் “ என்று கத்தினேன். என் தம்பிகளில் ஒருவன் மூக்கை உறிஞ்சிக் கொண்டே “ ஏதோ பிராண்டி வாசனை வருகிறதே “ என்றான். “ இனி அது ஒன்றுதான் பாக்கி “ என்று என் தாயார் சத்தம் போடுவது கேட்டும் ஏதும் தெரியாதது போல் படுக்கையில் வீழ்ந்தேன்..



அடுத்த குடித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது. நான் அப்போது விஜயவாடாவில் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் இருந்தேன். ஒப்பந்ததாரர் ஒருவர் எனக்கு அவர் வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தார். நான் அழைப்புக்குக் காரணம் கேட்டேன். வீட்டுக்கு வந்ததும் சொல்கிறேன் என்றார். மேலும் விஜயவாடாவின் பல முக்கிய புள்ளிகளை சந்திக்கலாம் என்றார். ஊர்ப்பெரிய மனிதர்களின் அறிமுகம் இருந்தால் நல்லதுதானே என்று நானும் வர சம்மதித்தேன். மாலை அங்கு போனபொழுது ஏழெட்டு பேர் இருந்தனர், ரெயில்வேயிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். அங்கு போய்ச் சேர்ந்ததும் அவரிடம் அழைப்புக்கான காரணம் சொல்லக் கேட்டேன். அவர் ஏதோசொல்லி சமாளிக்க முயன்றார். நான் அவரிடம் ஒரு ஒப்பந்ததாரரின் அழைப்பை ஏற்று நான் அங்கு போனது தெரியவந்தால் எனக்கு கெட்ட பெயர் வரும் என்று கூறி முறைத்தேன். அங்கிருந்தவர்கள் என்னை சமாதானப் படுத்தும் வகையில் நட்பில் இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கூடாது என்று கூறினார்கள். இரவு டின்னருக்காக ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது, நான் சைவ உணவு உட்கொள்ளுபவன் என்பதால் எனக்காக சைவ உணவு வகையறாக்களும் தயாராய் இருந்தது. அப்போது நான் குடிப் பழக்கம் இல்லாதவன் என்று கூறி குளிர்பானம் கேட்டேன். எல்லோரும் ஒருமுகமாக பீர் மிகவும் மைல்ட் ஆனது ,கெடுதல் இல்லை என்று கூறி எனக்கும் ஒரு க்ளாஸ் ஊற்றிக் கொடுத்தார்கள். டம்ப்ளரில் அது பீரா, விஸ்கியா என்று தெரிய வில்லை. நானும் குடித்து வைத்தேன். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் சுற்றுவதுபோல் தோன்றவே பாத் ரூமை நோக்கி ஓடினேன். பின் என்ன.? ஒரே வாந்தி.என்னை ஒரு அறையில் படுக்க வைத்து ஜாம் ஜாமென்று அவர்கள் குடித்து மகிழ்ந்திருக்க வேண்டும். இரவு பனிரெண்டு மணி சுமாருக்கு என்னைக் காரில் ஏற்றி ட்ரைவரிடம் வீட்டில் சேர்க்கச் சொன்னார்கள். வீடு போய்ச் சேர்ந்ததும் என் மனைவி கதவைத் திறந்ததும் ட்ரைவர் ஓடியே போய் விட்டான். நான் வாய் குழறிக் கொண்டே தெரியாமல் குடித்து விட்டேன் என்று
மனைவியிடம் கூறினேன். என்னிடம் இதை என் மனைவி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நாள் தலை மிகவும் பாரமாக இருந்தது. இருந்தும் பணிக்குப் போனேன். என்னை அங்கு கண்டதும் அந்த ஒப்பந்த்ததாரர் காணாமல் மறைந்து விட்டார். அவர் இன்னொரு நண்பரிடம் பின் ஒரு நாள் என்னைக் காட்டி “ மொட்ட மொதலுஎன்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் என்னை ஏதோ மொட்டைப் பயல் என்று தெலுங்கில் கூறுகிறாரோ என்று எண்ணி  அவர் சொன்னதன் அர்த்தம் கேட்டேன். அவர் அதற்கு அந்த காண்ட்ராக்டர் முதன் முதலாய் இந்த மாதிரி ஒருவரைப் பார்ப்பதாகக் கூறினாராம்.

அதன் பிறகு நான் குடித்தது ஜப்பானுக்கு விமானத்தில் க்ளப் க்ளாசில் பயணித்தபோது விமானப் பணிப் பெண் கொடுத்த பீர்தான் பிறகு ஜப்பானில் அவர்கள் கொடுத்த விருந்தின் போதும், சில ஹோட்டல்களில் உணவு அருந்தப் போகும் போதும் கொஞ்சம் பீர் மட்டும் குடிப்பது என்றாகி விட்டது. அங்கிருந்து திரும்பி வரும்போது என் மாமனாருக்காக CHIVAAZ REGAL WHISKY வாங்கி வந்தேன். என் மாமனாரால் நம்ப முடியவில்லை.
பணியிலிருந்து ஓய்வு பெற்று பெங்களூரில் செட்டில் ஆனபிறகு சில கம்பனிகளுக்கு ஆலோசகராய் இருந்தபோது சில பார்ட்டிகளில் வெறும் குளிர் பானம் மட்டும் வாங்கிக் கொண்டு குடித்தவர்கள் பேசும் உண்மை மொழிகளை ரசித்ததுண்டு. 
---------------------------------------------------------------          .  
 

8 கருத்துகள்:

  1. குடித்தவர்கள் பேசும் உண்மை மொழிகளை ரசித்ததுண்டு. ..

    பிரச்சினை தராத நல்ல ரசனை ..!!

    பதிலளிநீக்கு
  2. என்ன மலரும் நினைவுகளா அய்யா???....

    பதிலளிநீக்கு
  3. நினைவலைகளில் நீந்தியிருக்கின்றீர்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  4. கல்லூரி நாட்கள் முதல் அலுவலக பார்டி வரை சைடிஸ் சாப்பிட்டே சமாளிக்கிறேன்...நிச்சயம் "தண்ணி" பார்டிகள் தனி அனுபவம் தான்

    பதிலளிநீக்கு
  5. கற்றதும் விட்டதும் நன்றாக இருக்கிறது.
    இப்போது அனுபவ பதிவு எழுத முடிகிறது.

    பதிலளிநீக்கு
  6. குடித்தபின் அமைதியானவர்கள் அலட்டுவதும், அலுட்டுபவர்கள் அமைதியாவதும் பார்க்க வேடிக்கையாக இருக்கும்......

    பதிலளிநீக்கு
  7. கற்றதும் விட்டதும்
    தலைப்பும் பதிவும்
    மனம் கவர்ந்தது
    எப்போதும் முதல் சிகரெட்டையோ
    முதல் பெக்கையோ காசு கொடுத்து வாங்குவதில்லை
    என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்து போனது
    சுவாரஸ்யமான பதிவு

    பதிலளிநீக்கு

  8. என் பதிவு நான் ஒரு குடிகாரன் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டதா,? களவும் கற்று மற என்று சொல்லக் கேள்வி. நான் குறிப்பிட்ட நிகழ்வுகள் தவிர நான் குடித்ததில்லை. இதை எழுதியதில் என் இமேஜ் கெட்டுப் போய்விட்டதோ.? வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு