புதன், 11 மார்ச், 2015

மீண்டும் தரம்.


                                     மீண்டும் தரம்
                                     ---------------------


தரம் பற்றிய ஒரு பரிசோதனை என்று ஒரு பதிவு சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன். பின்னூட்டங்களைப் பார்த்தபோது தரம் பற்றிய சரியான புரிதலுக்குப் பதிலாக அது நான் வாசகர்களை சோதிக்க எழுதியது என்றே பலரும் எண்ணியதாகத் தெரிந்தது.. பின்னூட்டங்களையும் அதற்காக நான் கொடுக்கும் மறு மொழிகளையும் பின்னூட்டமுட்டவர்கள் வாசிக்கிறார்களா தெரியவில்லை. திரு.திண்டுக்கல் தனபாலன் தரம் என்பது ISOவில் வேறு என்று எழுதி இருந்தார். எனக்குத் தெரிந்தவரை தரம் என்பது எல்லா இடங்களிலும் ஒன்றே, முதலில் தரம் என்பது என்ன என்னும் புரிதல் அவசியம் அதை ஓரளவுக்கு விளக்குகிறேன்
தினசரி  வாழ்வில்  சில விஷயங்களைப் பற்றி நிறையவே பேசுகிறோம்; கேள்விப்படுகிறோம். ஆனால் அந்த விஷயம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட  ஒரு விஷயம் குவாலிடி  என்று  சொல்லப்படும்  தரம். உற்பத்தியாளர்களிடம்  தரம் பற்றிக்  கேட்டால்  கொடுக்கப்பட்டுள்ள   வரைமுறைக்குள்  இருப்பதே (Specification  limits ) தரம் என்பார்கள். வெகுஜனங்களிடம்  இது பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு  எந்த  பதிலும்  சரிவரக்  கிடைக்காது. பெரும்பாலோர்  தரம் பற்றிகருத்துக்  கூறுவது  ஏதோ  ஒரு யூகத்தின்  அடிப்படையிலேதான் .பலரும்  விளம்பரத்தின்  அடிப்படையிலேயே  தரம் பற்றிய எண்ணங்களைக்  கொள்கிறார்கள் .  

  
ஒரு  பொருளோ சேவையோ   தரமாகஇருக்கிறதா  யில்லையா  என்பதை  நிர்ணயம் செய்யும் நமக்கு அந்தப் பொருளைப்  பற்றிய விஷய  ஞானமோ  சேயல்திறனோ  முழுவதுமாக இருப்பதில்லை. அதை  ஓரளவு  விளக்கவே  இந்தக்  கட்டுரை.

தரம் அல்லது குவாலிடி என்றால் என்ன.? உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன்  அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால் அது  தரமாக உள்ளது என்று   கொள்ளலாமா.? தேவையைப்  பூர்த்தி செய்வதே  தரம் என்றால், அரிசி  உளுந்து    அரைத்து ஆவியில்  எடுக்கும் இட்லிசெய்யும் பணிஒன்றுதான்.  பசியாற்றும்,.  பின்  எதற்காக  அதன்  விலை வெவ்வேறு   இடங்களில்  வித்தியாசமாய் இருக்கிறது.? கையேந்திபவனில்  கிடைப்பதும் இட்லிதான் , ஸ்டார் ஹோட்டலில்  கிடைப்பதும் இட்லிதான். அதே அரிசி மாவு உளுந்து  மாவுஆவியில் வேக வைத்ததுதான். இட்லி உண்பவருக்கு  பசியாற்றல் , வயிறு நிறைத்தல்  மட்டுமின்றி  வேறு  எதிர்பார்ப்புகளும்  உண்டு.  
ஒரு தொலைக்காட்சிப் பெட்டி  வாங்குகிறோம். அதில் செய்திகள், சினிமாபாடல்கள்  பார்க்க  முடிகிறது. நம்மில்  பெரும்பாலோருக்கு  டி வி  எப்படி செய்யப்படுகிறது என்றோ எப்படி வேலை  செய்கிறது என்றோ தெரியாது. இருந்தாலும்  அந்தப் பெட்டியைவிட  இது நல்லதுஇது மோசம்என்று எதை  வைத்துக் கூறுகிறோம். தொலைக்காட்சிப்   பெட்டியில்  படம்  பார்ப்பதைத்  தவிர  நமக்கு வேறு எதிர்பார்ப்புகளும்   உண்டு. இதே  போல்  ஒவ்வொரு  பொருளுக்கும்  அது செய்யும் பணியை விட, உபயோகிப்பவருக்கு  வேறு  எதிர்பார்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.

தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும்.It should be fit for use. ஆனால் அது மாத்திரம்  போதாது. கையேந்தி பவனில், நின்று   கொண்டு, இலையோ தட்டோகையில்  பிடித்துக்கொண்டு  உண்ண  வேண்டும். அது   பசியைப்  போக்கும் பணியைச் செய்துவிடும். அந்தத் தேவை மட்டும் போதுமென்று  வருபவர்கள் கையேந்திபவனில்  உண்பார்கள். அதற்கு  அவர்கள்  கொடுக்கும் விலையும் குறைவு. அதே இட்லி, ஸ்டார் ஹோட்டல்களில் , குளிர்சாதன  அறையில் நல்ல  இருக்கைகளில்  அமர்ந்தவுடன் , உங்களைப்  பெரிய  மனிதராகப்  பாவித்துஉங்களுக்குச்  சேவை  செய்யசீருடை  அணிந்த வெயிட்டர்கள், மெனு  கார்டை  உங்களிடம்  கொடுத்து, கையில் பேனா  புத்தகத்துடன்  உங்கள்  ஆர்டரைப்  பதிவு  செய்து , சிறந்த  தட்டு , ஸ்பூன் , போர்க் , போன்ற  கருவிகளுடன்  இட்லியை  அதற்கு   துணையாகச  சட்டினி  மிளகாய்ப்பொடிஇத்யாதி  வகைகளையும்  வைக்கும்போது , உங்களைப்பற்றிய  உங்கள்  கணிப்பு , உங்கள் மதிப்பு  உயருகிறது . இங்கு  இட்லி பசி  போக்கும் பணியுடன்  உங்கள்  மதிப்பை  உயர்த்தும்  பணியையும்  கூடவே  செய்கிறது.அதற்கு  ஏற்றாற்போல்  நீங்கள் செலவு செய்யும்  தொகையும்  அதிகம். அப்படி  செலவு  செய்யும் மக்களும்  நிறையவே இருக்கிறார்கள். கையேந்திபவன்  இட்லிக்கும்  ஸ்டார்  ஹோட்டல்  இட்லிக்கும் இட்லியைப்  பொறுத்தவரை  பெரிய வித்தியாசங்கள்துவும் இல்லை. கையேந்திபவனில் இட்லி  உண்பவரின்  தேவையும்  ஸ்டார் ஹோட்டலில்  இட்லி உண்பவரின் தேவையும் வித்தியாசப்படுகின்றன. ஆகவே, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதே தரத்தின்  முக்கிய நோக்கம். தேவைக்குத்  தக்கபடி  விலையும் வித்தியாசப்படும்
.
வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை  பூர்த்தி செய்வதே   தரம்  என்று கொள்ளலாமா. ?எதிர்பார்ப்புகள்தான்  என்னவாக  இருக்கலாம்.? முக்கியமாக  நிர்ணயிக்கப்பட்ட  பணி நிறைவேற  வேண்டும். அதன் பிறகு  அதன் தோற்றம் , அது கொடுக்கப்படும்  விதம்    சேவை , அதன் விலை, (appearance, packing, service, reliability, price,) நம்பகத்தன்மை  போன்ற விஷயங்கள்  ஒரு பொருளின் தரத்தை  நிர்ணயம் செய்யும். இவை  எல்லாம் இருந்தாலும்  நமக்கு  தேவைப்பட்ட  நேரத்தில்  அந்தப் பொருள்  கிடைக்கா விடடால் பிரயோசனப்படாது. நிறைய  இடங்களில் வாங்கப்படும்  பொருள் பற்றிய விஷய   ஞானமே  இல்லாமல்  தரத்தைப் பற்றி நாம்  பேசுகிறோம். வாங்கும்  பொருளைப்  பற்றிய  நமது  தேர்வே  இறுதியானது. சந்தையில்  நமக்கு தேர்வு செய்ய சாய்ஸ்  நிறைய  இருநதால் அது வாங்குபவர்  சந்தையாகும். தேர்வு செய்ய வசதி  இல்லாமல் இருநதால் அது விற்பனையாளரின்  சந்தையாகிறது.  விற்கப்படும்  பொருளைப்பற்றியவிளம்பரம்வியாபாரத்தின் முக்கியஉத்தியாகும். ஆனால்வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள்  திருப்தி அளிக்கப்படாவிட்டால்  எந்த விளம்பர  தந்திரமும்  நிலைக்காது.
ஐம்பது  பைசாவுக்கும்  சாக்கலேட்  கிடைக்கும், பத்து ரூபாய்க்கும்  சாக்கலேட் கிடைக்கும். எதிர்பார்ப்புகள்தான் வித்தியாசம். தினசரி வாழ்வில்  ஒரே பணியை செய்யக்கூடிய  சாதனங்கள் , பொருட்கள், சேவைகள்  நிறையவே வந்து  விட்டன அவை எந்த அளவுக்கு வாடிக்கையாளரை  திருப்தி  செய்கிறது.?அதிக விலை கொடுத்து  வாங்குவதுதான்  பொருளின் தரத்துக்கு  உத்தரவாதம்என்ற வாதம்சரியல்ல. தரம் என்பது  உற்பத்தி  செய்பவரால்  மட்டும் நிர்ணயிக்கப்  படுவதல்ல வாடிக்கை யாளரை  திருப்திப்  படுத்துவதே  தரத்தின்  முக்கிய பணி.
                  
நாம் நமக்கு அடுத்தவரை வாடிக்கையாளராக கருதத் தொடங்கினால் நம்முடைய
வாழ்க்கை  தரமுள்ளதாக  அமையும்.என்பது சொல்லாமலேயே விளங்கும்

இனி தரம் பற்றிய திரு. மர்ஃபியின் கருத்துக்களைப் பகிர்கிறேன்

1.உற்பத்தியில் ஏதாவது தவறு விளைவதாயிருந்தால்அது விளைந்தே தீரும்....!
2ஒரு உற்பத்திக் குவியலில் இருக்கும் தரமற்ற பொருள் சிறந்த வாடிக்கையாளருக்குப் போகும்.
3. தரமற்ற பொருள் என்று கண்டுபிடிக்கப் பட்டால் அதற்கான விலைஅதை விற்றவருக்கு ஏற்கனவே போயிருக்கும்
4. உற்பத்தியாகும் பொருளின் தரக் குறைவு அதைக் கண்டுபிடிக்கும் முந்தைய ஸ்டேஜில் நடந்திருக்கும்.
5.தரம் பற்றிய புரிதல் மிகக் குறைவாய் உள்ளவர்கள் அதை நிர்ணயிக்கும் விற்பனைப் பிரிவினரும் R&D பிரிவினருமாய் இருப்பார்கள்.
6.தரம் பற்றி அதிகம் குறைபட்டுக் கொள்கிற மேலாளரும் அதிகாரிகளும் அது பற்றிய புரிதல் சிறிதும் இல்லாதவர்களே.
7. ஒரு விலை உயர்ந்த பொருள் அதில் இருக்கும் விலை மிகக் குறைந்த சிறு பாகத்தால் பாதிப்படைந்து பழுதாகும்.
8. தரம் பற்றிய வகுப்புக்கு வர வேண்டியவர்கள் அப்போதுதான் தரக் குறைவான பொருளுக்காக  வேறெங்காவது மும்முரமாய்  fire fighting  செய்து கொண்டிருப்பார்கள்..
9.எந்த விற்பனையாளன் வாடிக்கை யாளரைக் குளிர்விக்க அதிகமாக ட்ரீட் செய்கிறானோ. அந்த விற்பனையாளனுக்கு தரம் பற்றிய அறிவே குறைவாய் இருக்கும்.
10. இந்த அதிக விலை மதிப்புள்ள டெக்னாலொஜி. காலத்தில் ஏதாவது தவறு நேர்ந்திருக்க வேண்டுமானால் அது ஏற்கனவே நிகழ்ந்ததாயிருக்கும்
11.தவறு நேர்வது இயற்கை, அதற்கு வருந்துவது டிவைன், தொடர்ந்து தவறு செய்வது  devilish.
மேலே சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்கள் தமாஷாக உரைக்கப் பட்டிருக்கும் அசல் உண்மைகள்.
முந்தைய பதிவில் திரு துளசிதரன் ISI மற்றும் ISO பற்றிக்கேட்டிருந்தார். அவற்றை பிறிதொரு சமயம் பதிவிடுகிறேன். ஆனால் அதற்கு முன் தரம் என்றால் என்ன என்று தெளிவிக்கவே இந்தப் பதிவு.

24 கருத்துகள்:


  1. தரத்தைப்பற்றிய தரமான பதிவு ஐயா,,,
    நான் கருத்துரையின் பின்னூட்டத்தை காண மீண்டும் வருவது எனது வழக்கம் காரணம் நமது கருத்து அவர்களுக்கு எதிர் கருத்தை உண்டாக்கி இருக்கிறதா ? 80தை அறிவதற்காக....

    பதிலளிநீக்கு
  2. அல்வாவை பிற கடைகளில் வாங்குவதற்கும் திருநெல்வேலி இருட்டு கடையில் வாங்குவதற்கும் தரம் வித்தியாசம் இருப்பதுண்டா என்ற அரிய பெரிய சந்தேகத்தை தங்கள் அடுத்த பதிவு நீக்கு என்னும் நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. இட்லியின் தரத்தைப் பற்றி என்ன சந்தேகம் இருந்தாலும் என்னைக் கேளுங்கள். இதில் நான்தான் அத்தாரிடி.

    பதிலளிநீக்கு
  4. //எந்த விற்பனையாளன் வாடிக்கை யாளரைக் குளிர்விக்க அதிகமாக ட்ரீட் செய்கிறானோ. அந்த விற்பனையாளனுக்கு தரம் பற்றிய அறிவே குறைவாய் இருக்கும்//

    இதைப் பலமுறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் ஐயா....

    பதிலளிநீக்கு
  5. மர்ஃபியின் விதிகள் படித்திருக்கிறேன். தரம் நாடுவோர் தவறாமல் நாடுவது என்று விளம்பரம் எல்லாம் கேட்டிருக்கிறேன்!! :)))))) விலையைக் குறைக்காதவர்கள் பெரும்பாலும் சொல்வது 'எங்கள் பொருளின் தரம் அப்படி' என்று சொல்வார்கள்.

    பொருளின் தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யாதவர்களின் தயாரிப்புகளுக்கு என்றும் மார்க்கெட்டில் ஒரு தனி இடமிருக்கும்.


    பதிலளிநீக்கு
  6. //எந்த விற்பனையாளன் வாடிக்கை யாளரைக் குளிர்விக்க அதிகமாக ட்ரீட் செய்கிறானோ. அந்த விற்பனையாளனுக்கு தரம் பற்றிய அறிவே குறைவாய் இருக்கும்// அனுபவம் உண்டு சார். உண்மையே!

    //வாடிக்கை யாளரை திருப்திப் படுத்துவதே தரத்தின் முக்கிய பணி.// இது ஒரு புறம் சரிதான் என்றாலும் சார், எல்லா வாடிக்கையாளரையும் திருப்தி படுத்த முடியாதே சார். ஒருவருக்குத் திருப்தி அளிக்கும் பொருள் மற்றொருவருக்குத் திருப்தி அளிப்பதில்லையே. ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும், விருப்பங்களும் வேறுபடுவதால்...இல்லையோ. தரம் என்றால் ஸ்டாண்டர்ட் என்று பொருள் கொள்ளலாம் என்றால் அது யுனிவெர்சலாக இருக்க வேண்டும் இல்லையா சார்....

    பதிவு தரமான பதிவு சார்.

    எங்கள் ஐயத்தைப் போக்க விளக்கம் தருகின்றேன் என்று சொன்னதற்கு மிக்க நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    தரம் பற்றி தரமாக சொல்லியுள்ளீர்கள்... நல்ல விடயங்களை அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. /// வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவதே தரத்தின் முக்கிய பணி... /// இதுவே மிகச்சரி...

    Quality-யை மேம்படுத்தினால் Quantity தானாக கூடும்... இதை பலரும் அறிவதில்லை... இதில் சொன்ன Quality & Quantity பொருளை மட்டும் அல்ல...

    பதிலளிநீக்கு
  10. மாவுக்கேத்த பணியாரம் என்று ஒரு பழமொழி இருக்கு. ஆனால் இப்ப அது காசுக்கேத்த பணியாரமுன்னு ஆகி இருக்கு பாருங்க.

    நல்ல ரெஸ்ட்டாரண்டில் இடம் சுற்றுப்புறம் எல்லாம் சுத்தமாக இருக்கும். அதுக்கான கூடுதல் விலை கொடுக்கத்தான் வேணும்.

    பொதுவா மக்களிடத்தில் ஒரு குணம் இருப்பதைக் கவனிச்சீங்களா? அவுங்களிடம் இருக்கும் பொருள்தான் தரமானது என்றும் அடுத்தவன் வாங்கியது தரமற்றதுன்னு ஒரு நினைப்பு உண்டு.

    என் தோழி ஒருவர், தான் வாங்கியது உசத்தின்னு எப்பவும் சொல்வார்.

    சூப்பர் மார்கெட்டில் ஒரே ஷெல்ஃபில் இருக்கும் ஒரு பொருளை நாங்க ரெண்டு பேரும் ஒரேநேரத்தில் வாங்கி இருந்தாலும் கூட, அவுங்க வாங்குனது கொஞ்சம் உசத்திதான்:-)

    இங்கேயும் எந்த பொருளானாலும் நியூஸி தயாரிப்பு ஒரு 100 டாலருன்னு வச்சுக்குங்க. அதே பொருள் சீனத் தயாரிப்பு 30 டாலருக்குக் கிடைக்கும். வாரண்டி ரெண்டு வகைக்குமே ஒரு வருசம் மினிமம்.

    அதனால் சீனத் தயாரிப்பையே வாங்கிக்கலாம்.

    ஆனால் தயாரிப்பு எதுன்னாலும் வேலை செய்யலைன்னு அந்த ஒரு வருசத்துக்குள் திருப்பி கொடுத்தால் ஒன்னும் சொல்லாம கடைக்காரர் வாங்கிக்கிட்டு நம்ம பணம் வாபஸ்.

    கன்ஸ்யூமர் ப்ரொட்டெக்‌ஷன் இருப்பதால் பிரச்சனை இல்லை.

    இதே நேர்மையை இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது. விற்கும் வரை மட்டுமே இனிப்பான பேச்சு. அதுக்குப்பின் நாம் எதிரி:(

    பதிலளிநீக்கு

  11. @ கில்லர்ஜி
    பதிவினைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா. இம்மாதிரிக் கருத்துக்கு எதிர் கருத்து இருக்குமா ஜி.?

    பதிலளிநீக்கு

  12. @ சூர்யஜீவா
    இந்தப்பதிவைப் படித்தபிறகும் சந்தேகம் எழலாமா ஐயா? வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  13. @ டாக்டர் கந்தசாமி
    எங்கு கிடைக்கும் இட்லி என்று தெரியாமல் கேள்வி எழாது அதாரிடேடிவ் ஐயா வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  14. @ கார்திக் சரவணன்
    அனுபவ பூர்வமாகக் கண்ட செய்திகளே பதிவில் இடம் பெற்றது. வருகைக்கு நன்றி கார்த்திக் உங்கள் பெயரைவிட வலைப்பூவினால் உங்களை நினைவு கொள்வதே சுலபமாகிறது ஸ்பை... வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  15. @ ஸ்ரீராம்
    உபயோகத்துக்குப் பயன்படும்(fitness for use) எல்லாப் பொருட்களுக்கும் அதற்கான சந்தை உண்டு ஸ்ரீ. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  16. @ துளசிதரன்
    தரம் என்றால் ஸ்டாண்டார்ட் என்று பொருள் கொள்ள முடியாது ஏனென்றால் நிர்ணயிக்கப்படும் ஸ்டாண்டார்டுக்கு ஏற்ற மாதிரிதான் பொருளே உற்பத்தி ஆகிறது. உதாரணத்துக்கு சாக்கலேட் ஐம்பது பைசாவுக்கும் உண்டு ஐந்து ரூபாய்க்கும் உண்டு. தரம் எதிர்பார்ப்புகளைச்சார்ந்தே இருக்கும்

    பதிலளிநீக்கு

  17. @ துளசிதரன்
    எதிர்பார்ப்புகள் யுனிவெர்சலாக இருக்கிறதா துளசி சார். வருகைக்குக்ம் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  18. @ ரூபன்.
    இந்தப்பதிவு தரம் பற்றி ஓரளவுக்கு விளைக்கி இருப்பதாகக் கருதினால் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  19. @ திண்டுக்கல் தனபாலன்
    இப்பதிவில் நான் quantity பற்றி ஏதும் சொல்லவில்லை டிடி. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  20. @ துளசி கோபால்
    அங்கு சட்டம் அப்படி . நேர்மை எங்கிருந்து வந்தது. முப்பது டாலருக்கு கன்ஸ்யூமர் ப்ரொடெக்டெட் சீன பொருளை வாங்க முடியும்போது நூறு டாலருக்கு நியூசி பொருளை வாங்குவோரும் உண்டு இல்லையா.?ஏன்.? அவர்களது எதிர்பார்ப்புகள் என்னவோ. வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  21. நான் சொல்ல நினைச்சதை துளசி சொல்லிட்டாங்க. :) தரமான பதிவு.

    பதிலளிநீக்கு

  22. @ கீதா சாம்பசிவம்
    பாராட்டுக்கு நன்றி. துளசிகோபால் சொன்ன எந்த கருத்தை நீங்கள் நினைத்தீர்கள்.?

    பதிலளிநீக்கு
  23. தரம் பற்றிய தரமான பதிவு. மக்களின் வாழ்க்கைதரத்திற்கு ஏற்பவே தரம் மிகுந்த பொருளை முதலில் வாங்க முடியும்.
    கையிருப்புக்கு ஏற்ப விளம்பரம் முதலியவற்றால் தரமானது என்று பார்த்து வாங்குபவர்கள் நடுத்தர வர்க்கம்.

    அதிக பணம் கொடுத்து வாங்கினால் தான் நமக்கு மதிப்பு என்று வாங்குபவர்கள் பணம் படைத்தவர்கள்.

    உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் தரம், பணம் பார்த்து வாங்குவார்கள்.

    பதிலளிநீக்கு

  24. @ கோமதி அரசு
    நாம் கொடுக்கும் விலைக்கு நாம் எதிர்பார்த்த பணியைச் செய்து அதனால் நமக்குத் திருப்தி கிடைத்தால் அந்தப் பொருள் நம்மைப் பொறுத்தவரை தரமுள்ளது தானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம்.

    பதிலளிநீக்கு