வியாழன், 19 மார்ச், 2015

நினைவோட்டங்கள்


                                நினைவோட்டங்கள்
                                -------------------------------


வாழ்வின் அநித்தியம் பற்றி நிறைய்வே பேசிவிட்டோம், எழுதிவிட்டோம் இந்த வாழ்வுக்குப் பின் என்ன இருக்கிறது? பதில் தெரியா புதிர் அது. ஹேஷ்யங்களை நான் நம்பத்தயாரில்லை. இறந்தபின் பேரினை நீக்கிப் பிணமென்பார்கள் ஓரிரு நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். இறந்தவனை நினைத்துக் கொண்டே இருக்க முடியுமா. அதற்குத்தானே நமக்கு மறதி என்னும் வரம் இருக்கிறது. நான் நானாக இல்லாமல் சிலரது மனதில் நினைவாக இருக்கலாம். எனக்கு ஒரு ஆசை. இறந்தபின் நடப்பதை நான் எல்லோரோடும் வலையினில் பகிர வேண்டும். முட்டாள்தனமான ஆசை. நாம் உயிர்த்துடிப்புடன் இருப்பதாலேயே எண்ணங்கள் உருவாகின்றன. இருந்த இருப்பை எண்ணி என்றோ எழுதிய சில வரிகள் என்னை மீண்டும் பிடித்திழுக்கின்றன. எண்ணங்களைப் பகிரத்தானே வலை. என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே.



எண்ணச் சிறகுகளில்

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

       
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
       
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
       
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
       
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

         
அந்த நாள் அக்குயவன் கை
         
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
         
இந்த நாளில் ஏழையெனை
         
ஏனோ குறைகள் கூறுவரே.
         
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
         
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
         
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
         
மறந்து நீக்கிச் சென்றிடவே
         
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாயே .

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன்தானே நீ.

       
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

         
என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
         
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
         
மூடிய கண்கள் விழித்து விட்டால்
         
இன்னும் இன்னும் எண்ணங்களாக சிறகடிப்பாயே
.
 
 




  

40 கருத்துகள்:


  1. ஏன் ? ஐயா தங்களுக்கு இந்தச்சிந்தனை ?
    இருப்பினும் வடித்த வார்த்தைகள் நன்றாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்போம் இறப்புக்கு பின்னால் அணு அணுவாய் பிரிந்து நின்று... என்னால் ஏனோ இறந்து போன நட்புக்களையும் உறவுகளையும் மறந்து விட முடிவதில்லை...

    பதிலளிநீக்கு
  3. ஒரு நிலையில் இது மாதிரிச் சிந்தனைகள் வருவதைத் தவிர்க்க முடியாது போலும். நம்முடைய கனவில் நாம் பார்த்த, நமக்கு அறிமுகமான முகங்கள்தான் வரும் என்பார்கள். அதுபோல, நம் எண்ணங்கள் கூட நாம் அறிந்தவை வரைதான் இருக்கின்றன. "அப்புறம்" என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்ய முடிவதில்லை! கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பாடல் பொருண்மொழிக்காஞ்சி என்றாலோ, பாவகையுள் ஆசிரியத்துறைபாற் படுத்தினாலோ என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை.
    இருந்த போதும் எளிய வாக்கில் உணர்வு தொடும் பாடுபொருள்...!

    மனதை என்னவோ செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.

    நன்றி அய்யா!!!

    பதிலளிநீக்கு
  5. கடைசியில் சொல்லி இருப்பது போல் உயிர் நம் நெஞ்சு கூட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் அமைதியாக போய் விட்டால் நல்லது தான்.


    //இறந்தபின் நடப்பதை நான் எல்லோரோடும் வலையினில் பகிர வேண்டும். முட்டாள்தனமான ஆசை.//


    உங்கள் ஆசை நன்றாக இருக்கிறது.

    நிறைய பேர் செத்து பிழைத்தேன் என்று சொல்வார்கள். என் மாமியார் ஒரு முறை அப்படி சொன்னார்கள் எமதூதர்கள் வந்து அழைத்து சென்று விட்டதாகவும், கடமை இருக்கே !என் மகன்களுக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லையே ! இப்போது அழைத்து செல்லாதீர்கள் என்று கேட்டுக் கொண்டவுடன் விட்டு விட்டார்கள், சண்முக கவசம் படித்தேன் என்று சொல்வார்கள்.
    உங்கள் நினைவோட்டங்கள் பலரை சிந்திக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ’கெட்ட’ வயசு ... அது தான் நம்மை அவ்வப்போது இந்தக் கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. நினைத்து நினைத்து அந்த நினைவுகளும் பழகிப் போய் விட்டன.

    //வாழ்வுக்குப் பின் என்ன இருக்கிறது?//
    ஒன்றுமில்லை ... dust to dust.

    கதம்...

    அதிலும் பார்த்தீர்களா ... ‘செத்த பிறகு’ கவலைகளே கிடையாது !!!

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான சிந்தனை ஐயா...
    அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  8. என் நெஞ்சுக்கூட்டை விட்டு
    அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
    மூடிய கண்கள் விழித்து விட்டால்
    இன்னும் இன்னும் எண்ணங்களாக சிறகடிப்பாயே// அழகான வரிகள்...ஆனால் .

    சார் சத்தியமாக, உங்கள் வரிகள் மனதை என்னவோ செய்கின்றது. எல்லோருமே இறப்பிற்குப் பின் என்னாவோம் என்று யோசிப்பது உண்டுதான்...ஆனால் அது மனதைக் கனக்க வைக்கும் என்பதால் யோசிப்பைக் கைவிட்டு மனதை நல்ல விதத்தில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். உங்கள் வரிகள் மிக மிக அருமை. இறப்பு என்பது சத்தியமே...உண்மை சுடும் என்பார்கள் அதனால் தான் இறப்பு என்பதைப் பற்றி நினைக்கத் தோன்றுவதில்லையோ....

    சுஜாதா தனது கற்றதும் பெற்றதும் கட்டுரையில்," பிரைசொனின் புத்தகத்தில் மறு பிறவி பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதற்கு சுவாரஸ்யமான விடை கிடைக்கிறது.நம் பிரபஞ்சம் மொத்தமும் தனிமங்களின் கூட்டணுவால் ஆனது.மனித உயிர் என்பதே ஒரு மாலீகுல் கூட்டணு தொகுதிதான் .அணுக்களுக்கு அழிவே இல்லை.பிரபஞ்சம் ஆரம்பித்தது முதல் அப்படியே இருக்கின்றன மார்ட்டின் ரீஸ் சொன்னபடி ஒரு அணுவின் வாழ்நாள் குறைந்தபட்சம் (1 க்கு பிறகு 1034சைபர்) போட்டுக்கொள்ளுங்கள் அதனை வருஷம்.நாம் இறந்து பொய் புதைந்தலோ எரிந்தலோ நமது உடலின் அணுக்கள் காற்றிலோ, மண்ணிலோ கலந்து விடுகின்றன .அவ்வளவுதான் ! சைபர் டிகிரி உஷ்ணத்தில் காற்றில் ஒரு கன சே மீ (cubic cm) அதாவது ஒரு சர்க்கரை கியூப் அளவில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை எதனை தெரியுமா 45 பில்லியன் பில்லியன்! .ஒரு பில்லியன் என்பது நூறு கோடி . இதனை அணுக்களில் ஒரு பகுதி நாம் இறக்கும்போது மறுசுற்று வருகிறது. சில இல்லை தழை தாவரமகவோ சில மனிதர்களாகவோ மாறலாம் .எனவே நம் முன்னோர்களின் புராதன அணுக்களில் ஒரு பகுதி நம்மிடம் இருந்தே தீரும்.நம் ஒவ்வொருவருக்குள்ளும் கொஞ்சம் sheakspear,கொஞ்சம் கம்பன் கொஞ்சம் புத்தர் அணுக்கள் இருக்கின்றன என்றல் அது மிகை அல்ல.என்ன பாரதி இன்னும் ரீ சைக்கிள் ஆகியிருக்க மாட்டார். அதற்க்கு இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகலாம் ....//

    என்று சொல்லியிருக்கிறார். இதைத்தான் மறுபிறவி என்று சொல்லுகின்றார்களோ என்றும் சொல்லியிருப்பார். இத்தனைக்கும் அவருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. அருமையான சிந்தனைகள்தான். வயதான பிறகு இந்த சாந்தனைகள்தான் தலை தூக்கும். தவிர்க்க முடியாதது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு இச் சிந்தனைகளை எள்ளளவும் பிடிக்காது.

    துளசிதரனின் பின்னூட்ட வரிகள் மனதைத் தொட்டன. இத்துணை நீளப் பின்னூட்டங்களை எப்படி எழுதுகிளார் என்பது எனக்குள் ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. கடைசி பத்தி அருமை.

    போனதும் உடனே இல்லாமல் ரொம்பநேரம் கழிச்சு (அதுவரை எரிக்காமலிருக்கணுமே!) கண்ணைத் திறந்தால் அது பத்திரிகை செய்தி!

    பதிலளிநீக்கு
  11. ஏற்கனவே நேற்றைய (எனது தளத்தில்) கருத்துரையை யோசித்து கொண்டிருக்கிறேன்... இப்போது இன்னொன்று... யோசிக்க வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  12. இப்பொழுது ஏன் ஐயா இந்த சிந்தனை
    பிறப்புண்டேல் இறப்புண்டு என்பர் நம் முன்னோர்.
    அதனை வரும்போது சந்திப்போம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  13. வருவது வரும்போது வரட்டும். அதுவரை என்ன! இருக்கும் நாட்களை இனிமையாகவும், ஆக்கபூர்வமாகவும் செலவு செய்வோம்.

    பதிலளிநீக்கு
  14. நினைவோட்டங்கள் சிந்திக்க வைக்கின்றன. வந்த வேலை முடிந்துவிட்டால் திரும்பும் நாளை அவன் நிர்ணயிப்பான்.

    பதிலளிநீக்கு

  15. @ கில்லர்ஜி
    என் சிந்தனையில் தவறென்ன ஜீ. என்னைப் பற்றிய ஒரு சுயக் கணக்கெடுப்பே இது வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  16. @ சூர்யஜீவா
    இறந்து போன நட்புக்களையும் உறவுகளையும் நினைக்காமல் இருப்பதும் மறப்பதும் வேறு வேறு,.என் பதிவில் நான் எழுதி இருப்பதைப் பாருங்கள் ஹேஷ்யங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

    பதிலளிநீக்கு

  17. @ ஸ்ரீராம்
    விண்டவர் கண்டிர் கண்டவர் விண்டிலர். இது அடிக்கடி காட்டப் படும் ஒரு மேற்கோள். உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்றே புரியவில்லை. இறப்பு தவிர்க்க முடியாது என்பது உண்மை / அதன் பிறகு என்ன என்பது ஹேஷ்யங்கள். அதனால்தான் முடிந்தால் என்ன என்பதை வலையில் பகிர விரும்பும் என் சாத்தியமல்லாத ஆசை. .

    பதிலளிநீக்கு

  18. @ ஊமைக்கனவுகள்
    உணர்வுகளின் வடிகாலே என் வரிகள் ஐயா வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  19. @ கோமதி அரசு
    சாவைக் கண்டு அஞ்சி சண்முகக் கவசம் படித்திருப்பார்கள். அதையே செத்துப்பிழைத்ததாக்க் கூறி இருப்பார்கள். நான் “ வீழ்வேனென்று நினைத்தாயோ” என்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தேன் படித்திருக்கிறீர்களா> வருகைக்கு நன்றிமேம்

    பதிலளிநீக்கு

  20. @ தருமி
    வாழ்வுக்குப் பிறகு என்ன இருக்கிறது. ஒன்றுமில்லை அல்ல தெரியாது dust to dust என்பதும் ஒரு சொல் வழக்குத்தானே தருமி. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  21. @ பரிவை சே குமார்
    வித்தியாசமான சிந்தனை அல்ல குமார். நான் என் வாழ்க்கையை வாழ்ந்தாகி விட்டது உயிர்ப் பறவை ஓசைப்படாமல் அமைதியாய் பிரிய வேண்டும் என்பதே ஆசை. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  22. @ துளசிதரன் தில்லையகத்து
    உங்கள் நீண்ண்ண்ண்ட பின்னூடம் கண்டேன். இறக்கும் போது யாருக்கும் தொந்தரவு தராமல் அமைதியாய்ப் போகவேண்டும் என்பது அவா. இருந்த இருப்பைக் குறிப்பிட்டு இறக்க நான் தயார் என்பதைகாட்டுவதே பதிவு. மறுபிறவி என்பதெல்லாம் கற்பனையின் உச்சம் என்றே நினைக்கிறேன் இந்த எண்ணிக்கைக் கணக்கையெல்லாம் நான் வானில் தெரியும் நட்சத்திரங்களை எல்லாம் எண்ணிப் பார்த்து விட்டு வந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆண் மற்றும் பெண்ணின் கலவையால் உருவாகும் போது அவர்களின் ஜீன்கள் நமக்கும் இருக்க வாய்ப்பிருப்பது ஏற்புடையதாய் இருக்கிறது. பிரைசொனோ சுஜாதாவோ எதையும் நிரூபிக்கவில்லை. அவையும் ஹேஷ்யங்களில்தான் வந்து நிற்கும்
    வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  23. @ துளசி கோபால்
    தினமும் உறங்குகிறோம் விழிக்கிறோம் விழித்தெழுந்தால் உயிர் இருக்கிறது என்பதே நிஜம் அதற்கு முன் எரிக்க முற்படுவார்களானால் இருப்பவர்கள் நம் இருப்பை விரும்பவில்லை என்றே அர்த்தம்வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  24. @ திண்டுக்கல் தனபாலன்
    கருத்துரையை யோசித்து விட்டீர்களா டிடி. ?

    பதிலளிநீக்கு

  25. @ கரந்தை ஜெயக் குமார்
    பிறப்பென்றால் இறப்பும் உறுதி. சந்திப்பைத் தவிர்க்க முடியாது. நான் தயார் என்பதே பதிவு. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  26. @ கீதா சாம்பசிவம்
    அப்படி வாழத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் கீதாம்மா.

    பதிலளிநீக்கு

  27. @ வே. நடன சபாபதி
    வந்த வேளை முடிந்(த்)தது என்றே நினைக்கிறேன். இந்த அவன் நிர்ணயிப்பான் என்பதெல்லாம் எனக்கு ஏற்புடையது அல்ல. உடல் என்னும் மெஷின் நிற்பது எப்போது என்று தெரிவதில்லை.அது எப்படி ஓடுகிறது நிற்கிறது என்பதே சூக்குமம் இம்மாதிரியான சிந்தனைகளை ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்று எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  28. @ முரளிதரன்
    கலக்கம் என்பது கூடாது முரளி. கலங்குபவன் செத்து செத்து உயிர்க்கிறான் வருகைக்கு நன்றி. இந்த பதிவையே ஒரு இண்ட்ரொஸ்பெக்‌ஷனாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு

  29. @ டாக்டர் கந்தசாமி
    தருமி ஐயா சொல்வது போல் இது கெட்ட வயசு ஐயா. இருந்தாலும் எண்ணங்களைப் பகிர்வது தவறில்லையே.

    பதிலளிநீக்கு
  30. ஒரு சின்ன சந்தோஷம் .. நம் எண்ணங்கள் ஒத்துப் போவது போல் தெரிகிறது.

    அமைதியாக போக வேண்டும். -- எல்லோருக்கும், அதுவும் வயதான பிறகு இருக்கும் ஆசை.

    அதன்பின் என்ன என்பதைச் சொன்னேன். அதுவும் ஒரு ஊகம் என்கிறீர்கள். ஆனால் மற்ற உங்கள் செய்திகளில் அதை உறுதி செய்வது போல் தான் தோன்றுகிறது. அதனால் அந்த மகிழ்ச்சி ....

    பதிலளிநீக்கு

  31. @ தருமி
    மீள் வருகை தந்து உங்கள் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  32. இன்னும் நிறைய்ய்ய்ய்ய இருக்கு ....

    மறுபிறவி ஒரு கதை என்று சொல்லி விட்டீர்கள். என் கருத்தும் அதே!

    ஆன்மா, ஆத்மா, பரம்பொருள், பரமாத்மா, ஜீவாத்மா, இறுதி நாள் தீர்ப்பு, அதன் விளைவாக மோட்சம், நரகம், மறுபிறவி ..... எல்லாவற்றையும் மறுத்து விட்டீர்கள்.

    நான் நினைக்கிறேன் - நீங்கள் வெளியே இன்னும் சொல்லிக்கொள்ளாமல் ஒரு கடவுள் மறுப்பாளராக இருக்கிறீர்கள். நான் வெளிப்படையாக அதைச் சொல்லி விட்டேன். அது மட்டும் தான் வித்தியாசம் என்று நினைக்கின்றேன்.

    ஐயா ... நான் சரியா? இல்லையா?

    பதிலளிநீக்கு
  33. அன்புள்ள G.M.B சார்! விவேகானந்தரை ஒருவர் 'Is there life after death?'என்று கேட்டாராம். அதற்கு விவேகானந்தர் பதிலைக் கேள்வியாக 'First tell me whether there is life after birth?'என்று வினவினாராம். வாழ்க்கையை முற்றாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பதே பெரும் கேள்வி. அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர் ஐயா? இன்னும் பலகாலம் திடமாய் இருந்து,வாழ்க்கையை இளையவர் புரிந்து கொண்டு வாழ உங்கள் அனுபவத்தினின்று எழுதிகொண்டேயிரும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Whether there is life after birth?
      A powerful question indeed
      To be understood by everyone of us (me not excluded)and pondered over.
      For u and i nay all all of us never really bothered to know whai is life.
      Is it our psyche or physical existence ?

      When we understand the purport of his question we start living

      Subbu thatha

      நீக்கு

  34. @ தருமி
    தொடர் எண்ண ஓட்டங்களைப் பகிர வருவதற்கு நன்றி. மறு பிறவி பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை என்பதே உண்மை. எனக்கு மட்டுமல்ல யாருக்கும் ஏதும் தெரியாது. ஆனால் சிலர் தெரிந்தது போல் சொல்வதை நம்பப் பலர் இருக்கிறார்கள். அவை ஹேஷ்யங்கள் அதை நான் நம்பத் தயாரில்லை என்றுதான் பதிவிட்டிருக்கிறேன் கடவுள் மறுப்பாளராகநான் தோன்றக் காரணம் நான் கடவுள் பற்றிய செய்திகளைக் கதையாகத்தான் காண்கிறேன் கடவுளின் பெயராலும் மதங்களின் பெயராலும் நம்மை ஏதும் சுயமாக சிந்திக்க முடியாதபடி செய்து விட்டார்கள். மற்றபடி கடவுள் என்னும் கற்பனையால் மனிதர்கள் சீராக வாழ முடியும் என்றால் ஏன் மறுக்கவேண்டும். தெரியாது என்பதே உண்மை. இது ஒரு முடிவிலா வாதம். கடவுள் நம்பிக்கை மனிதனை நல்வழிப்படுத்தினால் சரி. அதே சமயம் மூட நம்பிக்கைகளால் சமுதாயம் சீரழிகிறதே என்னும் ஆதங்கம் என் எழுத்துக்களில் இருப்பது ஒருவேளை என்னை கடவுள் மறுப்பாளனாகக் காட்டுகிறதோ தெரியவில்லை. வருகைக்கும் என் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  35. @ மோகன் ஜி
    அப்பாடா..! ஒரு வழியாய் என் நினைவு வந்து பின்னூட்டம் எழுதியதற்கு என் நன்றி ஜி. நாம் வாழ்க்கையை முற்றும் புரிந்து கொண்டு வாழ்கிறோமா என்று கேட்கிறீர்கள். புரிந்து கொள்ள முயற்சி செய்வது தவறில்லையே. நான் இயன்றவரை வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்த விதம் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் ஒரு திறந்த புத்தகம் போல் காட்டி வந்திருக்கிறேன் இதுவும் ஒரு விதப் பகிர்வே. நான் உங்களுக்கு எழுதி இருந்த கடிதங்கள் நினைவிருக்கிறதா, வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. G.M.B சார். வருகை தராததால் நினைவில் இல்லை என்றில்லை. சில சொந்த காரணங்களினால் ஒரு இடைவெளி. அதான் மீண்டும் வந்துவிட்டேனே.
    உங்கள் கடிதங்களுக்கும் உடன் பதில் இடாததிற்கு அவையே காரணம்.

    உண்மையில், உங்கள் புத்தகத்திற்கு படித்து ஒரு விரிவான விமரிசனமும் எழுதி வைத்தேன். மீள்வாசிப்பில் அது சற்று காட்டமாயும், நிர்த்தாட்சண்யமான கடுமையாயும் தோன்றவே அதை உங்களுக்கு அனுப்பவில்லை.
    உங்கள் எழுத்தை பதிவுகளாய் பாராமல்,சிறுகதை கட்டமைப்புகளுக்குள் இருத்திப் பார்த்ததினால்தான் அப்படி நான் எழுதியிருப்பது எனக்குப் புரிந்தது. மற்றொரு சூழலில், இலகுவான மனநிலையில் படித்துஎழுத ஒரு இடைவெளியை தேர்ந்தேன். கணக்கை நேர் செய்வேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு

  37. @ மோகன் ஜி.
    பின்னூட்டத்திற்கு நன்றி. பதில் ஏதும் அராததால் சற்று வருத்தமடைந்தேன் என்பதே நிஜம் விமரிசனம் குறித்து ஒரு அஞ்சல் அனுப்பி உள்ளேன் அது எண்ணங்களை நேர் செய்யும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு

  38. @ பின்னூட்டங்கள் தமிழில் இருக்கும் போது கடைசியில் ஆங்கிலத்தில் சுப்புத் தாத்தாwhat is life. is it our psyche or physical existence? என்று கேட்கிறார். ஒரு சாதாரண மனிதனுக்கு உயிருடன் இருக்கும் போது நடப்பவைதான் வாழ்வியலின் அர்த்தம் அனுபவம் எல்லாமே.psyche என்னும் வார்த்தைக்கு அகராதியில் the soul, spirit mind the principle of mental and emotional life என்று பொருள் கொடுக்கப் பட்டிருக்கிறது நீ யார் என்று கேட்டால் நான் இன்னாருக்குப் பிறந்தவன் இன்ன பெயர் உள்ளவன் என்றுதான் அறிமுகப் படுத்திக் கொள்கிறோம் soul என்றும் spirit என்றும் சொல்லிக் கொள்வதில்லை. பிறப்புக்குப் பின் வாழ்க்கை என்பது என்ன என்றால் பிறந்தபின் நிகழும் சம்பவங்களை அனுபவங்களைச் சொல்லலாம் புரியும் ஆனால் யாரும் அனுபவித்தறியாத psyche பற்றிக் கூறினால் புரியாது. இதைத்தான் நான் இறந்தபின் என்ன என்பதை நான் வலையுலகில் பகிர வேண்டும் என்னும் நடக்க முடியாத முட்டாள் தனமான ஆசை என்றேன். மற்றபடி சொல்வது எல்லாம் ஹேஷ்யங்கள் என்றேன் . நான் சொல்ல வருவது அநேகமாக எல்லோருக்கும் புரியும் என்று நம்புகிறேன்
    அனைவரது கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு