Saturday, July 20, 2013

பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்


     பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்
-----------------------------------------------------------------------------



அயல் நாட்டினர் பலரைக் கண்டிருந்தாலும் சந்தித்துப் பழகியது ஒரு சிலரே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இவர்களுடைய நாட்டினரைப் பற்றி கணிக்க முடியுமா.?

அம்பர்நாத்தில் நான் பயிற்சிக்குச் சென்றபோது பயிற்சி பள்ளியின் ப்ரின்சிபால் ஒரு ஸ்விட்ஜர்லாந்துக் காரர். பெயர் AGUSTO  FREIDRICSAN ஒருவர் வேலையைத் துவங்கு முன்னே தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்வதில் இருந்து அவரை எடை போடலாம் என்பார். எங்கள் துரதிர்ஷ்டம் , நாங்களங்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஊர் திரும்பிவிட்டார்.

பெங்களூர் எச். ஏ. எல் லின் ஏரோ எஞ்சின் டிவிஷன் துவக்க காலத்தில் எங்கள் பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தோம். BRISTOL SYDLEY  கம்பனியுடன் ஏரோ எஞ்சின் தயாரிக்கக் கூட்டு முயற்சியில் ஆங்கிலேயர்கள் பலரும் இருந்தனர். அவர்களுக்கு இந்தியர்கள் இன்னும் அடிமைகள் என்ற எண்ணத்துடன் கூடிய ஒரு சுபீரியாரிடி காம்ப்லெக்ஸ். அதற்கு தூபம் போடுவதுபோல் நம்மவர்களின் அடிவருடித்தனம். அப்போதெல்லாம் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். வெறும் அனுபவ அறிவே படைத்த சில தொழிலாளர்கள்ஒரு க்யூபுக்குள் ஒரு க்யூபுக்குள் ஒரு க்யூப் என்று சாதாரண லேத் மெஷினிலிருந்து கடைந்தெடுப்பார்கள். ! அவற்றை பெருமையுடன் எக்சிபிட் செய்வார்கள். ஏரோ எஞ்சின் டிவிஷனில்  முதல் ஆயுத பூஜை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. என்னையும் விழாப் பொறுப்புக் கமிட்டியில் இருக்கச் சொன்னார்கள். அலங்காரப் பொருட்கள் வாங்கும் போது நான்கைந்து பெரிய ரோஜா மாலைகள் வாங்க வேண்டும் என்றார்கள். எதற்கு என்று கேட்டபோது அங்குள்ள சில ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அணிவிக்க என்றார்கள். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆயுத பூஜை ஆயுதங்களுக்கே தவிர ஆசாமிகளுக்கல்ல என்று வாதாடினேன். இந்திய அதிகாரி அவரது சொந்தச் செலவில் மாலைகள் வாங்கி அவர்களுக்கு அணிவித்தார். நாங்கள் அந்த விழாவைப் புறக்கணித்தோம். என்ன.... இந்த நிகழ்வு என் மீது அதிகாரிகளுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ணிற்று.

 ஏரோ எஞ்சின் டிவிஷனுக்காக அயல் நாடுகளில் இருந்து மெஷின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் சில ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைக்கப் பட்டன. உதிரி பாகங்களாக வந்த அவற்றை ஒருங்கிணைத்து முழு மெஷினாக்கி வேலை செய்யும் விதத்தையும் விளக்க ஒரு ஃப்ரென்ச்சுக்காரர் வந்திருந்தார். அவர் பெயர் ஆந்த்ரே என்று ஏதோ வரும் அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. ஃப்ரென்ச் மொழி மட்டுமே தெரியும். மேலும் ஆங்கிலேயர்கள் என்றாலேயே வெறுப்பைக் கக்குவார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளாக இங்கிலாந்தும் ஃப்ரான்சும் இருந்த போது ஆங்கிலேயர்கள் ஃப்ரென்ச் படைகளை முன்னுக்கு அனுப்பி அவர்கள் தப்பித்துக் கொள்வார்களாம். ஆங்கிலேயர்கள் நம்ப முடியாதவர்கள் என்பார். சைகையினாலும் படங்களினாலுமே கருத்துப் பரிமாற்றம் நடக்கும். அப்போது அவரிடம் இருந்து சில ஃப்ரென்ச் வார்த்தைகள் கற்றுக் கொண்டேன் Very interesting personality.!( கேல வாத்ர நாம்= உங்கள் பெயர் என்ன: பான் மஜூர்= நல்லநாளாய் இருக்க: பான் மதா= குட் டே: த்ரெ பான் = வெரிகுட்: ந த்ரெ பான்= நொட் குட்: துஷ்ம = கொஞ்சம் )

எச் ஏ எல் ஐ விட்டு சென்னையில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்போது அங்கும் நிறைய ஆங்கிலேயர்கள் பணியில் இருந்தனர். அங்கே சில நூதனமான (?) வழிமுறைகளைக் கண்டேன். நான் அங்கு ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆக இருந்தேன். ஒரு மெஷினில் இருந்து உருவாகி வரும் சில பொருட்கள் அடுத்த மெஷினுக்குச் சென்று இன்னும் சில மாற்றங்களுடன் வேறு மெஷினுக்குச் செல்லும்.  இதில் எங்காவது ஒரு மெஷினில் உற்பத்தி அளவில் குறைந்தால் அது அடுத்த மெஷின்களையும் பாதிக்கும். ஆங்கிலேயர்கள் அந்த மெஷின்களின் இயக்க முறைகளை வரை வகுத்து இருந்தார்கள். அதன்படி மெஷினை இயக்கும் தொழிலாளியோ மேற்பார்வையாளரோ எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏன் எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. எனக்கு இந்த முறை புதியதாய் இருந்தது. அங்கு வேலை செய்யும் மேற்பார்வையாளர் தொழிலாளி நிறுத்தாமல் நேரத்தை வீணாக்காமல் உழைக்கிறானா என்று மட்டும் பார்க்க வேண்டும் இந்த நிலையில்  நான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெஷினில் கட்டிங் டூல் வேகமாக உடைந்து கொண்டிருந்தது. அதை மாற்றி மாற்றி செயல் படுவதில் நேரம் விரயமாகியது, உற்பத்தி குறைந்தது. நான் ஆராய்ந்த அளவில் தவறு எனக்குப் பிடிபட்டது. இருந்தாலும் அங்கு நிலவிய நியதிகளின்படி நான் ஏதும் செய்யக் கூடாது. பகல் ஷிஃப்டில் ஆங்கிலேய நெறியாளரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார். நான் இரவு நேர ஷிஃப்ட் வரும்போது செய்யும் அமைப்பை மாற்றி அதிக உற்பத்தி கொடுத்துக் கொண்டிருந்தேன் வேலை முடிந்து போகும் முன் பழைய நிலையில் வைத்து விட்டுப் போவேன். இதை அவர்கள் கண்டு என்னிடம் காரணம் கேட்டார்கள். நான் எனக்கு எந்த சுதந்திரமும் இல்லாமல் பகலில் எதையும் மாற்ற முடியாமல் வேலை செய்வதையும் இரவு ஷிஃப்டில் என் விருப்பம் போல் என் முறையில் வேலை செய்வதையும் கூறினேன். அங்கிருந்த ஆங்கிலேயத் தலைமை அதிகாரி பகலில் என் செய் முறையை விளக்கக் கேட்டார். என்னைச் சுற்றி பலரும் இருக்க நான் செய்த மாற்றங்களை விளக்கிக் கூறி என் செயல் முறையில் அதிக உற்பத்தியை காட்டினேன். அனைத்து வெள்ளைக் காரர்களும் என்னை பாராட்டினார்கள் (என் மெஷினுக்கு செயல் முறை தந்திருந்த அந்த ஒரு ஆங்கிலேயர்  தவிர.)ஒரு ஷிஃப்டில்நான்கு ஐந்து டூல்கள் உடைந்து நேரம் விரயமாக்கிய நிலை போய் ஒரே டூலால் இரண்டு ஷிஃப்ட் வேலையும் தடை இல்லாமல் சென்றது..

நான் விஜயவாடாவில் இருந்தபோது ஒரு ஜெர்மன்காரர் வந்திருந்தார். அவர்களது வேலையில் ஒரு ஒழுங்கு இருக்கும். பணியில் டெடிகேஷன் இருக்கும். மற்றபடி  பணியில் இல்லாத மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் வாழ்க்கையே வேறாயிருக்கும். நான் குறிப்பிட்ட இவர் பெயர் மார்டின் வாக்னர். அவருக்கு விஜயவாடா முழுவதும் அத்துப்படி . சைகிள் ரிக்‌ஷாவில் ஊர் சுற்றுவார். எந்த இடத்தில் இரவு கேளிக்கைகள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் தெரிந்து கொண்டவர். கிருஷ்ணா நதிக்கரையில் துவைத்துக் காயப் போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அவர் பார்க்கும் BIGGEST WASHING MACHINE  என்பார். ஒரு முறை அவரை என் வீட்டுக்குக் காலை உணவு அருந்த அழைத்திருந்தேன். இரண்டு முட்டைகள் பச்சையாகவும் இரண்டு முட்டைகள் ஆம்லெட்டாகவும்  சாப்பிட்டார். மற்றபடி நம்
இட்லி சாப்பிட மிகவும் பயந்தார். நிறைய  தேத்தண்ணீர் அருந்தினார். அவரிடமிருந்து இரண்டு ஜெர்மன் வார்த்தைகள் கற்றேன். ‘டாங்கெ ஷான்பிட் அஷ்ஹன் ( thank you , no mention )

திருச்சி மிகுமின் கொதிகலத் தொழிற்சாலை செக்கோஸ்லவேகியா நாட்டுடனான கூட்டு முயற்சியால் தொடங்கப் பட்டது. ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் அவர்களது பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்களுக்கென்று ஒரு வரைமுறை வகுத்துக் கொண்டு பணி புரிந்தார்கள் ஒரு முறை நான் எடுத்த ஒரு முடிவு நமது டிசைன் டிபார்ட்மெண்ட்காரர்களுக்கு சரியாகப் படவில்லை. மத்தியஸ்தத்துக்கு செக் உயர் அதிகாரியிடம் சென்றது. அவர் என் முடிவு சரியென்றார். ஆனால் இதை உங்களுக்குள்ளேயே பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார். குடியிருப்பில் அவர்கள் குடும்பங்களோடு வசித்தனர். அதில் ஒருவரின் உறவுக்காரப் பெண் ஒருத்தியை நம்மவர் ஒருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு பிறகு அவர்களுடனேயே செக்கோஸ்லாவேகியாவில் செட்டில் ஆனார்.

அமெரிக்கக் கூட்டுடன் (Dresser industries) வால்வுகள் தயாரிக்கப் பட்டன. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து வேறு ஒரு வால்வ் தயாரிப்பாளர் (பெயர் நினைவுக்கு வரவில்லை ) அவர்களது ப்ராடக்ட் முன்னேற்றத்துக்காக வந்திருந்தனர். நாங்கள் தயார் செய்து கொண்டிருந்த ட்ரெஸ்ஸர் வால்வுகளுடன் ஒப்பிட்டு அவர்களது தயாரிப்புகள் மேலானது என்று கூறினர். நடை முறையில் இருக்கும் ஒரு கூட்டுக் கம்பனியின் தயாரிப்புகளை ஒப்பிட்டுக் குறைகள் கூறுவது சரியா என்று கேட்டோம். Everything is fair in war and love என்றார்களே பார்க்கலாம்.!

ஜப்பானுடன் கூட்டுத்தயாரிப்பில் ஒப்பந்தம் இருந்தது. எனக்கு ஜப்பான் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் நான் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். ஜப்பானிய மானேஜர் ஒருவர் இல்லத்துக்கு என்னை அழைத்திருந்தார். ஒரு ஜப்பானிய குடும்பத்தைக் காணும் வாய்ப்பாயிருந்தது. என்னதான் ஜப்பானியர்கள் முன்னேறியது போல் தோன்றினாலும் At least அவர்களது முந்தைய தலை முறையினர் பாரம்பரியத்தை கட்டிக்காப்பவராகவே எனக்குப்பட்டது. நான் அங்கு சென்றபோது அவரது தாயார் அவர் மணவிழாவின் போது அணிந்த பாரம்பரிய KIMONO உடையை கண்களில் ஒளி வீசக் காண்பித்துப் பெருமை அடைந்தார்.எங்களுக்கு ஒரு சிறப்பு விருந்து கொடுக்கவும் எங்களுக்கு உபசாரம் செய்யவும் ஒரு அதிகாரியிடம் கூறப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய  குடும்பத்தையும் பங்கு கொள்ளச் செய்ய விரும்பினார். மேலதிகாரிகளுக்குத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஆகவே எங்களிடம் அவர் குடும்பம் வருவதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.எங்கள் தயவால் செலவில்லாமல் அவர் குடும்பத்துக்கு ஒரு விருந்து. . அடிப்படையில் ஜனங்கள் எல்லா நாட்டிலும் ஒரு போல்தான் என்று தோன்றுகிறது.
அவர்களது வழிமுறைகளை விளக்க வந்த ஒருவர் என்னைப் பற்றிக் கேட்டார். நான் இந்த துறையில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் சடாரென்று என் காலருகில் அமர்ந்து கொண்டு எனக்கு ஏதும் சொல்ல அருகதை இல்லாதவர் என்றார்.

நம் நாட்டிலேயெ பலதரப்பட்ட மனிதர்களுடன் பழக வாய்ப்பிருந்த எனக்கு இம்மாதிரி அயல் நாட்டினருடன் பழக வாய்ப்பு இருந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவை விட இந்தியா மேல் என்றார். அமெரிக்காவில் பயம் இல்லாமல் நடமாட முடியாது என்றார். எந்த நேரத்திலும் YOU CAN BE MUGGED என்றார். அக்கரைக்கு இக்கரை பச்சை.    -    




                      



 








                                                                                                                           
       

 

 


18 comments:

  1. வித்தியாசமான அனுபவப் பகிர்வு. கால மாற்ற புரட்டிப் போடுதலில் எதெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

    //என்னதான் ஜப்பானியர்கள் முன்னேறியது போல் தோன்றினாலும் At least அவர்களது முந்தைய தலை முறையினர் பாரம்பரியத்தை கட்டிக்காப்பவராகவே எனக்குப்பட்டது.//

    உங்களின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்புறம் தான் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதும்,
    தொழில்-வணிகம் போன்றவற்றில் முன்னேறுவதும் ஒன்றிற்கொன்று எதிரானவையா என்று தோன்றியது.

    பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு தேசம் முன்னேறுவது பெரும் சிறப்பில்லையா?..

    ReplyDelete
  2. ஜெர்மன்காரர், அமெரிக்கர், ஜப்பானியர் என சுவாரஸ்யமான பணிக்கால நிகழ்வுகள்...

    த்ரெ பான்...! நன்றி ஐயா...

    ReplyDelete
  3. பணிக்கால நிகழ்வுகள் அருமை நானும் இதே மாதிரி நினைப்பனோ முதுமையில் ..

    ReplyDelete
  4. தாங்கள் பணியாற்றிய பல இடங்களைப்பற்றியும், பல வெளிநாட்டினர் பற்றியும், கூறியுள்ள் பல தகவல்கள் சுவைபட உள்ளன.

    //அக்கரைக்கு இக்கரை பச்சை தான்.//

    அதேபோலவே இக்கரைக்கு அக்கரை பச்சையாகவே தோற்றமளிக்கும் தான்.

    இனிய மலரும் நினைவுகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மாலையிடுதலில் மணடியிடுதலில் சுகம் காணலே நம்மவர்கள் பெரும்பாலோரின் இயல்பு இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு தங்களைப் போல மனம் கவர்ந்த பகிர்வு

    ReplyDelete
  6. மாலையிடுதலில் மணடியிடுதலில் சுகம் காணலே நம்மவர்கள் பெரும்பாலோரின் இயல்பு இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு தங்களைப் போல மனம் கவர்ந்த பகிர்வு

    ReplyDelete
  7. இனிய மலரும் நினைவுகள்.....

    ReplyDelete
  8. தங்களின் பணிக்கால நினைவுகள் அருமை அய்யா.

    ReplyDelete
  9. வெவ்வேறு நாட்டினருடன் பழகிய நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட விதம் அருமை சார். அவர்களின் இயல்புகளை நீங்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். அவர்களிடம் நீங்கள் பார்த்த வித்தியாசங்கள் அல்லது ஒற்றுமைகள் பற்றி எழுதுங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

    ReplyDelete
  10. நான் கானா (Ghana)நாட்டில் ஜப்பானிய,கொரிய,பிலிப்பினிய,ஜேர்மானிய,சீன மற்றும் உள்ளூர்வாசிகளுடன் பணிபுர்ந்த சந்தர்ப்பங்கள் மனதில் வந்து போயின.பதிவுக்கு நன்றி.மீண்டும் எழுதுங்கள்.

    ReplyDelete

  11. @ ஜீவி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ ப்ரேம்
    @ கோபு சார்
    @ டாக்டர் கந்தசாமி
    @ ரமணி
    @ வெங்கட் நாகராஜ்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    என் அனுபவப் பகிர்வில் பங்கு கொண்டு கருத்திட்டதற்கு அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  12. அயல்நாட்டினரோடு உங்களுக்கு ஏற்பட்ட நல்ல சுவையான அனுபவங்கள். ஓய்வாக இருக்கும் சமயம், உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் ஒருநாள் உட்கார்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  13. பணிக்கால நிகழ்வுகளை பகிர்ந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. ஐயா!அயல் நாட்டினருடன் தங்கள் அனுபவங்களை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். அந்நியவருக்கு மாலி மரியாதை தர மறுத்த தங்கள் சுய மரியாதை பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  15. எங்களுடைய வங்கியில் ATM பண வழங்கியை அறிமுகப்படுத்தியபோது ஒரு அயல்நாட்டு நிறுவனத்துடந்தான் ஒப்பந்தம் செய்துக்கொண்டோம்.

    வெளிநாட்டினர் என்றாலோ மிகவும் திறமையுள்ளவர்கள் என்றோ அல்லது நம்மை விட விவரமுள்ளவர்கள் என்றோ பொருள் அல்ல என்பதை அப்போதுதான் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. சில விஷயங்களில் நம்மை விடவும் பின் தங்கியிருப்பதையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. செய்யும் தொழிலில் முழுவதுமாக மனதை செலுத்தி நிர்வாகத்திற்கு நாணயமாக உழைப்பதில் நம்மை யாரும் மிஞ்சிவிட முடியாது.

    ReplyDelete

  16. @ தி. தமிழ் இளங்கோ
    @ மாதேவி
    @ T.M.MURALIDHARAN
    @ டிபிஆர்.ஜோசப்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. இந்தப் பதிவில் நிகழ்வுகள்தான் பகிர்ந்திருக்கிறேன்.என் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை.

    ReplyDelete