Monday, July 8, 2013

பதிவரின் பயணக் குறிப்புகள்.





பதிவரின் பயணக் குறிப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதக் கடைசியிலோ ஜூலை மாத முதலிலோ ஆலய தரிசனமாக திருச்சி, வைத்தீஸ்வரன் கோயில் சிதம்பரம் என்று செல்வது வழக்கம்.ஜூலை மாதம் மூன்றாம் தேதி என் மனைவியின் பிறந்த நாள். அன்று ஒரு கோயில் தரிசனமாக இருப்பது அவளுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். மெலும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா அந்தகாலத்தில் நடைபெறும். சாதாரணமாக திருச்சியில் ஒரு நாள் தங்கி மறுநாள் கும்ப கோணத்தில் தங்கி அதுவரை பார்க்காத கோவிலுக்கு விஜயம் செய்வோம். மறுநாள் வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் முடித்து சிதம்பரம் செல்வோம். அங்கு தரிசனம் செய்து இரவு தங்கி மறுநாள் ஊருக்குத் திரும்பப் பிரயாணம் செய்வோம்.இந்த வருடம் எங்களைத் தனியாக அனுப்ப என் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்கவில்லை. என் மூத்த மகனும் எங்களுடன் பிரயாணப் பட்டான். அவனது சௌகரியம் குறித்து எங்கள் பயணம் ஒரு நாள் குறைக்கப் பட்டது.

மைசூர் மயிலாடுதுறை எக்ஸ்ப்ரெசில்டிக்கெட் பதிவு செய்யப் போனால் பெங்களூரில் இருந்து பயணம் செய்ய இடம் காலி யில்லை என்றார்கள். ஆகவே மைசூரில் இருந்தே டிக்கெட் பதிவு செய்து பெங்களூரில் ஏறுவது போல் பயணச் சீட்டு வாங்கப் பட்டது. பெங்களூரில் நாங்கள் மூன்றாம் a/c  கோச்சில் ஏறினால் பாதிக்கும் மேலாக இடங்கள் காலியாக இருந்தது. ரெயில்வேயில் முன் பதிவும் டிக்கெட் வினியோகமும் புரிவதே இல்லை. பல முறை பார்த்திருக்கிறேன். கடைசி நேரத்தில் நிறைய பேருக்கு இடம் ஒதுக்கப் படும். தினமும் அத்தனை பேரும் டிக்கெட் வாங்கி கான்சல் செய்கிறார்களா? இல்லை நமக்குத் தெரியாமல் இடங்கள் காலியாக விடப் படுகின்றனவா. ? இதை படிப்பவர்கள் விளக்கம் அறிந்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன் இரண்டாம் தேதி பெங்களூரில் இருந்தும்  ஐந்தாம் தேதிமயிலாடுதுறையில் இருந்தும் பயணச்சீட்டு பதிவு செய்யப் பட்டது.

இந்த முறை பயணத்தின் போது திருச்சியிலும் கரந்தையிலும் வாழும் முகம் தெரியாப் பதிவுலக நண்பர்களை சந்திக்க விரும்பினேன். திரு. வை. கோபால கிருஷ்ணனின் மினனஞ்சல் முகவரிக்கு என் விருப்பம் தெரிவித்து எழுதினேன். அவர் திருச்சி வாழ் பதிவர்களுக்கு தெரியப் படுத்தியதும் அல்லாமல் கூடியவரை எல்லோரையும் கூட்டிவர முயற்சி செய்வதாகவும் கூறினார். ஒவ்வொரு பதிவரையும் அவர்கள் இருப்பிடம் சென்று நான் சந்திப்பதுதான் முறையாக இருக்கும். ஆனால் நேரம் பற்றாக்குறையும் , என் வயது காரணத்தாலும் அவர்களை நான் தங்கு மிடத்துக்கு வருமாறு வேண்டினேன்.

 ஜூலை மூன்றாம் தேதி

அதிகாலை மூன்றே முக்கால் மணிக்குத் திருச்சி ஜங்ஷன் வந்தோம். என் மகன் ஏற்கனவே பஸ் நிலையம் எதிரில் இருக்கும் PLA KRISHNA INN  என்னும் ஓட்டலில் அறை முன் பதிவு செய்திருந்தான்.


தங்கி இருந்த ஒட்டல்( திருச்சியில் )

நானும் என் மனைவியும்



குளித்துக் காலை உணவு அருந்தி ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த காரில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்யப் போனோம். நம்பவே முடியாத அளவு குறைவான கூட்டம். நிறைவான தரிசனம்.

காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள , பூக்கின்ற புன்னகையால்
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே- என்னை
ஆட்கொள்ள வேண்டும் தாயே
எனை ஆளும் சமயபுரத்தாளே....

என்று மனம் உருகி வேண்டி நின்றேன். ஒவ்வொரு முறையும் சமயபுரம் செல்லும்போது ஏதோ மாற்றம் தெரிகிறது. இந்த முறை அன்னைக்கு அபிஷேகம் செய்யும் இடம் காணவில்லை.மறைக்கப் பட்டிருந்தது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போல் வரிசையில் நின்று, நகர்ந்து, தரிசனம் முடிந்ததும் குறிப்பிட்ட வழியில் வெளியே வர வேண்டி உள்ளது.

தரிசனம் முடிந்ததும் அரங்கனைக் காணச் சென்றோம். இப்போதெல்லாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கடவுள் தரிசனம் கிடைப்பதில்லை. நாங்கள் போன போது நடை திறந்திருக்கவில்லை. கூட்டம் நிறைந்து எல்லோரும் காத்திருந்தனர். இடைப் பட்ட சமயத்தில் தாயாரைக் காணச் சென்றோம். அங்கும் சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின் தாயாரை தரிசனம் செய்தோம். மீண்டு அரங்கனிடம் வந்தால் நிலைமையில் மாற்றம் இருக்கவில்லை. அவனை மானசீகமாக தரிசித்து  திருவானைல்லா வந்து சேர்ந்தோம். ஜம்புகேஸ்வரரை அருகில் நின்று தரிசனம் செய்தோம். ஆனைக்கா அப்புஸ்தலம் என்றாலும் ஈசனைச் சுற்றி நீரின் ஈரம் கூடத் தென்படவில்லை. அங்கிருந்து அகிலாண்டேஸ்வரி சந்நதி சென்று வெண்டி மகிழ்ந்தோம். .இதுவரை திருச்சி சென்றபோதெல்லாம் தாயுமானவரை தரிசிக்காமல் இருந்ததில்லை. இந்த முறை படியேறிப் போக தடை வித்திக்கப் பட்டது. கீழே மாணிக்க விநாயகரை வேண்டி வழிபட்டோம்.

அங்கிருந்து வெக்காளி அம்மன் தரிசனம். இங்கு ஒரு மாற்றம் கண்டேன். அம்மனுக்கு கூரையோ விதானமோ கிடையாது, என்றுதான் இதுவரை இருந்திருக்கிறது. இந்த முறை அம்மன் சந்நதி மேல் ஒரு படுதா போடப்பட்டு அதன் மேல் புல் மாதிரி ஏதோ பரப்பி இருக்கிறார்கள். என்ன , அன்னைக்குக் கூரை வேண்டுமோ இல்லையோ பூசாரிக்கு வெயில் மழையில் இருந்து தப்பிக்க ஒரு விதானமாவது வேண்டும்......!

இதற்கு மேல் எங்கும் போக உடலில் தெம்பிருக்கவில்லை. மதிய உணவு முடித்து அறைக்குத் திரும்பி ஓய்வெடுக்கத் துவங்கினோம்.


மூன்றரை மணி அள்வில் திரு வை. கோபாலகிருஷ்ணன், சிறிது நேரத்தில் வருவதாகத் தகவல் சொன்னார். ஏறத்தாழ அவரும் திரு. தி. தமிழ் இளங்கோவும்  ஒரே நேரத்தில் எங்களைக் காண  வந்தனர். திருச்சி வந்ததன் மீதிப் பாதி நோக்கம் நிறைவேறிக்கொண்டு இருந்தது. சுமார் ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை. வை. கோபு சாரின் திருமண நாலாம் அது. ஸ்வீட் எடு கொண்டாடு என்பதுபோல் எங்களுக்குச் சாக்கலெட் கொடுத்தார். அவர் எழுதி வெளியிட்ட எங்கெங்கும் எப்போதும் என்னோடுஎன்ற புத்தகம் பரிசாகத் தந்தார். எனக்கு ஒரு துண்டு போர்த்தினார். ஒரு மணி பர்ஸும் ( ஐந்து ரூபாய் பணத்தோடு ) தந்தார். தமிழ் இளங்கோ அவர்கள் வலியின் ‘நினைவு நாடாக்கள் ‘ என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். பேசிக்கொண்டே அன்பு மழையில் நனைந்திருந்த நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கோபு சார் “அபிவாதயே ...... “ சொல்லி என்னை வணங்கினார். எவ்வளவு பிரபலமான பதிவர் அப்படிச் செய்தபோது நெகிழ்ச்சியில் உறைந்து விட்டேன். தமிழ் இளங்கோவும்  நமஸ்கரித்தார். இவர்களது இச்செயல்கள் என் மீது இவர்கள் கொண்ட அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது. இதற்கெல்லாம் நான் தகுதி உள்ளவனா என்றும் எண்ண வைத்தது. நண்பர்களே, உங்கள் அன்பும் பாசமும் என்றும் என் நினைவில் இருக்கும். சிறிது நேரங்கழித்து பிரியா விடை பெற்றுச் சென்றனர். இதுவுமல்லாமல் இருவரும் அவர்கள் பதிவுகளில் என்னைப் பற்றி எழுதி என்னை  இன்னும் பலரும் அறியச் செய்து விட்டனர்.
கோபு சார் தமிழ் இளங்கோவுடன்


இவர்கள் விடை பெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் திரு. ரிஷபனும் ,திரு. ஆர்.ராம்மூர்த்தி அவர்களும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர இயலாததற்கு வருத்தம் தெரிவித்தனர். தொலைபேசியிலேயே நேருக்கு நேர் பேசுவதுபோல் அன்னியோன்யமான சம்பாஷணை மனசுக்கு இதமாய் இருந்தது. பெங்களூர் வந்தால் அவசியம் என் வீட்டுக்கு வர வேண்டும் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்.

பெங்களூரில் என்னிடம் தொடர்பு கொண்ட கரந்தை ஜெயக்குமாரிடம் நாங்கள் திருச்சியில் இருந்து பேரூந்தில் பயணிக்கப் போவதாகக் கூறிய போது அவர் முடிந்தால் திருச்சி வந்தே சந்திப்பதாகக் கூறி இருந்தார்.என் மனைவிக்குத்  திட்டையில் குரு பகவானை தரிசிக்கவெண்டும் என்றிருந்தது.திட்டமிட்ட நேரத்தில் பேரூந்துப் பயணமென்றால் செய்து முடிக்க இயலாது என்று தெரிந்ததும் என் மகன் மீதிப் பயணத்தை காரில் தொடரலாம் என்றான். அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்தது. போகும் வழியில் கரந்தையில் திரு. ஜெயக்குமாரையும் பேராசிரியர் ஹரணி அவர்களையும் தரிசிக்கலாமே. திட்ட மாற்றத்தை ஜெயக்குமாரிடம் கூறி நாங்களே அங்கு வருவதாக கூறினேன். திரு, ஹரணி அவர்கள் இல்லத்தில் காலை உணவு என்றார். உண்ணும் நேரம் உரையாடலுக்குத் தடையாயிருக்கும் என்றுகருதி காப்பி மாத்திரம் அருந்துவதாகக் கூறினோம்.உமாமகேசுவனார் பள்ளி வாசலில் எங்களை ஜெயக்குமார் வரவேற்று ஹரணி அவர்களின் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். இவ்வளவு கற்றவர்கள் மிகவும் எளிமையாயும் பணிவுடனும் இருந்தது எனக்க ஆச்சரியம் அளித்தது. “ நிறை குடம் தளும்பாதல்ல்வா ?ஒரு கத்தை புத்தகங்கள் பரிசாக அளித்தனர். ஹரணி அவர்கள் எனக்கு ஒரு சால்வை போர்த்தினார். இந்த மாதிரி வரவேற்புகள் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டது. பதிவுலகம் எனக்கு கற்றவர்களையும் வித்தகர்களையும் நண்பர்களாகக் கொடுத்துள்ளது. இம்மாதிரியான நண்பர்கள் தரும் ஊக்கமும் ஆதரவுமே எனக்கு கிரியா ஊக்கியாக செயல்பட்டு எழுத வைக்கிறது. இதன் மூலம் எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரந்தை ஜெயக்குமார் நான் ஹரணி அவரது லைப்ரரியில்

கரந்தையில் இருந்து தென்குடித்திட்டை செல்ல வேண்டும். அங்கு வழிபாடுகள் முடித்து மதியம் பனிரண்டரைக்குள் வைத்தீஸ்வரன் கோயில் செல்ல வேண்டும் தாமதமாகி விட்டால் மாலைஐந்துவரைக் காத்திருக்க வேண்டும் . ஆதலால் பேராசிரியர் ஹரணி மற்றும் ஜெயக்குமாரிடமிருந்தும் பிரியாவிடை பெற்றோம். கரந்தையில் இருந்து போகும் வழியை என் மகன் அவனுடைய gps aided அலைபேசியின் மூலம் கண்டு வழி சொல்ல சுமார் அரை மணி நேரத்தில் திட்டை சென்றடைந்தோம். இந்த முறை ஆலய தரிசன பயணத்தில் நாங்கள் சென்ற இதுவரை செல்லாத கோயில் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் என்ன வென்றால் இது முழுவதும் கருங்கற்களால் ஆனது. சுதை சிற்பம் ஏதுமில்லை. ஈசனின் கர்பக்கிரக விதானத்தில் இருந்து ஒவ்வொரு 24 நிமிஷ நேரத்தில் ஒரு துளி நீர் லிங்கத்தின் மேல் விழுகிறது விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பதிக்கப்பட்டு இருக்கிறதாம். அது காற்றிலிருந்து ஈரப்பசையை நீர்த் துளியாக மாற்றி 24 நிமிஷத்துக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழும்படி யாக அமைக்கப் பட்டிருக்கிறதாம்.(சந்திரகாந்தக் கல் என்றால் என்ன.?) புராண காலத்தில் பிரளயம் வந்தபோது ஒரு திட்டாக இது இருந்ததால் திட்டக் குடி என்று பெயராம். இது ஒரு குருஸ்தலம். குருபகவான் தனிக்கோயில் கொண்டு அமர்ந்திருக்கிறார். நாங்கள் சென்றது வியாழக்கிழமை. குருவுக்கு உகந்த நாள். விஸ்தாரமாகப் பூசை செய்து வழிபட்டோம். குருவினால் துக்கங்கள் நிவர்த்தி ஆகலாம் என்னும் நம்பிக்கையில் பரிகாரமாக வழிபாடு செய்தோம். என் மனைவிக்கு மிகவும் திருப்தி.

திட்டை குரு பகவான் சந்நதியில்

அங்கிருந்து நேராக வைத்தீஸ்வரன் கோயில். சுமார் இரண்டு மணிநேரத்தில் போய்ச்சேர்ந்தோம். அன்று குருத்திகை ஆனதால் கோயில் நாள் முழுதும் திறந்திருக்கும் என்றார்கள்.. ஒவ்வொரு வருடமும் எங்கள் பூஜைகளை நடத்தித் தரும் முத்து சுப்பிரமணியக் குருக்கள் இந்த முறையும் எங்களுக்கு வேண்டி அர்ச்சனை செய்து கொடுத்தாரன்று முத்துக்குமார சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் வெளியில் மண்டபத்தில் நடந்தது. கண்கொள்ளாக் காட்சி.

வைத்தீஸ்வரன் கோயிலில் முத்து சுப்பிரமணிய குருக்களுடன்

மாலை சிதம்பரம் போய்ச் சேர்ந்தோம். அங்கும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் அர்ச்சனை. அங்கும் எங்களுக்காக வழக்கமாக பூஜை அர்ச்சனை செய்து தரும் நடராஜ குஞ்சித பாத தீக்‌ஷிதர், இம்முறையும் செய்து கொடுத்தார்.

சிதம்பரம் கிழக்கு கோபுர பின்னணியில்

ஜூலை ஐந்தாம் தேதி
----------------------            
காலை ஆனித்திருமஞ்சன திருவிழாவை ஒட்டி கொடியேற்றம்  கண்டோம். காலை தரிசனம் முடிந்து தில்லைக் காளி அம்மன் கோவில் சென்றோம். அங்கும் பூஜை வகையறாக்கள் முடிந்து அறைக்குத் திரும்பினோம். எங்களுக்கு பயண டிக்கெட் மயிலாடுதுறையிலிருந்து எடுக்கப் பட்டிருந்தது.எல்லோருக்கும் அப்பர் பெர்த். இரண்டு பயணிகள் எங்களுக்காக அவர்கள் பெர்த்தைக் கொடுத்து எங்கள் நன்றியைப் பெற்றார்கள். முதுமையினால் இது ஒரு அட்வாண்டேஜ்...! ஆறாம்தேதி பேரனின் பிறந்தநாளை அவர்களுடன் கழித்து மறு நாள் வீடு வந்து சேர்ந்தோம். வந்தபிறகுதான் கணினியில் எவ்வளவு வேலை பாக்கி என்று தெரிந்தது.
---------------------------------------------------------------                     






 

 


 













24 comments:

  1. //வந்தபிறகுதான் கணினியில் எவ்வளவு வேலை பாக்கி என்று தெரிந்தது.//

    எங்கு சென்றாலும் இந்த நினைவு தான் நிழலாகத் தொடர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    உங்கள் பயணத்தைப் போலவே படிக்கவும் நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  2. அருமையான பயண அனுபவங்கள். மனதுக்கு நிறைவாக இருந்தது. மதியம் 2-30 மணிக்குப் பின்னர் சென்றால் அரங்கனையும், ரங்கநாயகியையும் 50 ரூ கட்டண தரிசனத்தில் பார்த்துவிட்டு 4 மணிக்குள் வெளியே வரலாம். சில சமயம் அரங்கநாயகியை இலவச தரிசனத்திலேயே பார்க்க முடியும்.

    ReplyDelete
  3. என்னுடைய அசந்தர்ப்பமான சூழ்நிலையால் உங்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசமுடியவில்லை. :(

    ReplyDelete
  4. பயண சுவாரஸ்யங்கள்
    எங்களையும் பற்றிக்கொண்டது
    படங்களுடன் விரிவான பகிர்வுக்கு
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. மிகவும் நெகிழச் செய்து விட்ட அருமையான பதிவர் சந்திப்புகள்..

    திருத்தல தரிசனங்கள்.. மிகவும் நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. நேர்முக வர்ணனை அருமை ஐயா.

    ReplyDelete
  7. மிகவும் மகிழ்ச்சியான இனிய சந்திப்பு ஐயா... படங்களுடன் பயண விளக்கத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  8. ////நண்பர்கள் தரும் ஊக்கமும் ஆதரவுமே எனக்கு கிரியா ஊக்கியாக செயல்பட்டு எழுத வைக்கிறது./////
    பணியுமாம் என்றும் பெருமை என்று கூறுவார்கள் அய்யா.அதனால தாங்கள் இவ்வாறு கூறியுள்ளீர்கள். இவ்வரிகள் தங்களின் உயர்ந்த உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. உண்மையில் தங்களின் உழைப்பும் ஆர்வமும்தான் எங்களுக்கெல்லாம் கிரியா ஊக்கி அய்யா.
    ///வந்தபிறகுதான் கணினியில் எவ்வளவு வேலை பாக்கி என்று தெரிந்தது.///
    இவ்வரிகள் மட்டுமே போதும் அய்யா தங்களின் உழைப்பை பறைசாற்ற. எழுத்துலகப் பயணத்தைத் தொடருங்கள் அய்யா, நாங்களும் தொடர்ந்து வருகிறோம்

    ReplyDelete
  9. பயண அனுபவங்கள் மிகவும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள்.
    உங்களுடைய நெகிழ வைக்கும் பதிவர் சந்திப்பு அனுபவங்கள் என்னையும் மகிழ்விக்கிறது.

    ReplyDelete
  10. நேர்த்தியான டைரிக்குறிப்புகள் போல நிறைவான பயணக்குறிப்புகள். அனுபவப் பகிர்வோடு ஆலயம் பற்றிய குறிப்புகளுக்கும், தகவல்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  11. உங்கள் எழுத்துக்களின் துவக்கம் முதல் இன்று வரை நீங்கள் பயணித்த பயணம் இதை விட விரிவானதும், ஆழமானதும்.

    உங்கள் எல்லாப் பயணங்களிலும் உங்களுக்குப் பக்கத்து இருக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருப்போம் பாலு சார்.

    ReplyDelete
  12. அன்புள்ள ஜிஎம்பி ஐயா


    ஹரணி வணக்கமுடன்.

    தர்ங்கள் அம்மா மற்றும் மைந்தர் எங்கள் இல்லத்திற்கு வந்தது மகிழ்ச்சியான நிகழ்வு. வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டோம்? என்ன போகும்போது எடுத்துக்கொண்டுபோக போகிறோம்? இதுதான் வாழ்க்கை.

    முன்பெல்லாம் உங்கள் பதிவு படிக்கும்போது இந்த வயதில் தளராது தரம் குறையாது எத்தனை அனுபவப் பகிர்வுகள் என்று வியந்து அதன் மூலம் என்னை என் மனத்தராசில் எடைபோட்டு இன்னும் நான் பயணிக்கவேண்டிய துர்ரம் எவ்வளவு இருக்கிறது என்று சிந்தனை செய்வேன்.
    இப்போது கூடுதலாக கவலைப்படுகிறன். இத்தனைப் பெரிய பதிவுக்கான சொற்களை நீங்கள் ஒற்றை விரலால் தட்டச்சு செய்வீர்கள் என்று உங்கள் மகன் சொன்னபிறகு அந்த கவலை வந்துவிடுகிறது. இருப்பினும் உங்களின் பதிவு இன்னும் கூடுதல் மதிப்பைப் பெற்றுவிடுகிறது. உங்கள் பயண அனுபவங்கள் விரைவில் புத்தகமாக வரட்டும். சுந்தர்ஜி சொன்னதுபோல உங்கள் பக்கத்து இருக்கையில்தான் நாங்களும் பயணித்துக்கொண்டேயிருப்போம் என்பதுதான் சரியானது.

    அம்மா...மகன் இவர்களின் நலம் விழைகிறேன்.

    நன்றிகள்.

    ReplyDelete
  13. அன்புள்ள GMB Sir,

    வணக்கம், நமஸ்காரங்கள்.

    தாங்களும் தங்கள் துணைவியாரும் செளகர்யமாக பெங்களூர் போய்ச்சேர்ந்தது கேட்க சந்தோஷம்.

    நேற்று தங்கள் மெயில் கிடைத்ததும், மிகப்பெரியதோர் பின்னூட்டம் எழுதி வைத்தேன். ஆனால் அதை அனுப்ப முடியாமல் போய் விட்டதின் எனக்கு அழுகையே வந்துவிட்டது.

    இடையில் இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை சுத்தமாக நெட் கனெக்‌ஷன் போனதால் அதை என்னால் Save செய்யவும் முடியாமல் போய் விட்டது.

    >>>>>>

    ReplyDelete
  14. தங்களின் துணைவியாருக்கு என், இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைக் கூறி விடவும்.

    அன்று தங்களை நான் சந்தித்தபோது எனக்கு அதுபற்றி தெரியாது.

    >>>>>

    ReplyDelete
  15. //திரு. வை. கோபால கிருஷ்ணனின் மினனஞ்சல் முகவரிக்கு என் விருப்பம் தெரிவித்து எழுதினேன். அவர் திருச்சி வாழ் பதிவர்களுக்கு தெரியப் படுத்தியதும் அல்லாமல் கூடியவரை எல்லோரையும் கூட்டிவர முயற்சி செய்வதாகவும் கூறினார். //

    தாங்கள் என்னைத்தவிர மூன்று பெயர்களை எழுதி எங்கள் நால்வரையும் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தீர்கள்.

    பொறுப்பை என்னிடமே ஒப்படைத்து விட்டீர்கள். அதனால் நான் எல்லோரையும் திரட்டிக்கூட்டிவர என்னால் ஆனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

    50% மட்டுமே நேரில் சந்திக்க வைக்க முடிந்தது. மீதி 50% தொலைபேசி மூலம் ;)

    அன்று எனக்கு இருந்த Very Tight Schedule இல் நானே உங்களை நேரில் சந்திக்க இயலுமா என சந்தேகம் எனக்கு ஏற்பட்டுப்போனது.

    நல்லவேளையாக நேரில் வந்து சந்தித்துப்போகவும் பிராப்தம் கிடைத்தது.

    எனக்கும் அதில் மிகுந்த சந்தோஷமே.

    >>>>>

    ReplyDelete
  16. தங்களின் பயணக்கட்டுரை + பதிவர்கள் சந்திப்பு + க்ஷேத்ராடனம் முதலியன படிக்க சுவாரயமாக உள்ளன.

    படங்களும் அருமையாக வந்துள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  17. நம் சந்திப்பு எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தது என்றாலும், அதைவிட மகிழ்ச்சியளித்த ஒரு விஷயம் என்னவென்றால், தாங்களும் மாமியும் எனக்காக ஆர்டர் செய்து வரவழைத்துக் கொடுத்த சூடான, சுவையான, மணமான வெங்காயத் தூள் பக்கோடா தான் என்பேன். ;)))))

    ருசியோ ருசியாக இருந்தது.

    நம் உரையாடல்களுக்கு உரம் கொடுத்து உதவியதே அந்த பக்கோடா தான் என்றால் அது மிகையாகாது.

    ஆர்டர் செய்த பக்கோடா வந்து சேர மிகவும் லேட் ஆனது என்றாலும், அது லேட்டஸ்ட் ஆக சூடாக சுவையாக அமைந்ததில் எனக்குப் பரமானந்தமாக இருந்தது, ஐயா.

    நினைத்தாலே நாக்கில் நீர் ஊற்கிறது எனக்கு.

    இதை என் பதிவினிலும் சுட்டிக்காட்டி மாமிக்கு ஸ்பெஷல் நன்றிகள் கூறியுள்ளேன்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/07/20.html

    *****
    சூடான சுவையான தூள் பக்கோடா + காஃபியுடன், இந்த சந்திப்பினை இனிமையாக்கித் தந்துதவிய தாயுள்ளம் கொண்ட திருமதி கமலா சாந்தி GMB அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகள். வெங்காய தூள் பக்கோடா கரகரப்பாகவும் மொறுமொறுவென்றும் மிகவும் ஜோராக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான திண்பண்டமாக இருந்ததால் நான் அதை மிகவும் ரஸித்து ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தேன். என் நாக்கும் வயிறும் உங்களை இன்றும்கூட நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றன. உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.
    *****

    ReplyDelete
  18. அனைத்து விஷயங்களையும் அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு என் மனமார்ந்த் இனிய நன்றிகள், ஐயா.

    மாமி அவர்களையும், தங்கள் மகன் திரு. மனோஹர் அவர்களையும் நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.

    தங்கள் பேரக்குழந்தைக்கும் என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைச் சொல்லவும்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  19. திருச்சி – தஞ்சை வலைப்பதிவர்களை தங்கள் பதிவின் மூலம் இணைத்து விட்டீர்கள். தங்கள் அன்புப் பதிவர்களில் என்னையும் ஒருவனாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  20. உங்களின் சுற்றுப்பயணத்தில் நானும் உடன் வந்தது போன்ற உணர்வினைத் தந்து விட்டீர்கள். அருமையான விவரிப்பு. எனக்கும் பதிவுலக நண்பர்களைச் சந்தித்து அவர்களின் அன்பில் நனைவதுதான் ஆக்ஸிஜன். திருச்சி நட்புகளையும் கரந்தை மற்றும் ஹரணி ஆகியோரின் சந்திப்புகளையும் நீங்கள் விவரித்ததைப் படித்து மிகமிக மகிழ்ந்தேன். நான்தான் தமிழ் இளங்கோ அவர்களை சந்திக்கும் வாய்ப்பை சென்ற முறை மிஸ் பண்ணிட்டேன். ஜி.எம்.பி. ஸாரை சந்திக்கற வாய்ப்பு எந்நாளோ?

    ReplyDelete
  21. பயண அனுபவங்கள் அருமையாக இருந்தது ஐயா. சமீபத்தில் தான் சமயபுரம் சென்று வந்தேன். வெக்காளி அம்மனுக்கு வெயிலின் உக்கிரத்தை தணிக்க வெட்டிவேரால் பந்தல் போட்டுள்ளார்கள்.நாங்கள் மார்ச் மாதம் சென்று தரிசனம் செய்து வந்தோம்.

    தாங்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்தது தெரிந்திருந்தால் நானே வந்து தங்களை சந்தித்திருப்பேன். ரங்கநாயகியை வெள்ளி, விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் இலவசமாகவே தரிசனம் செய்யலாம்.

    ReplyDelete

  22. @ ஜீவி
    இந்த நினைவு எனக்கு மட்டும்தானா? பயணத்தின்போது கணினி நினைப்பு இருக்கவில்லை. வந்ததும் backlog இருப்பதுபோல் தோன்றியது. நன்றி ஜீவி சார்.
    @ கீதா சாம்பசிவம்
    உங்கள் நிலை புரிந்துகொண்டேன் நன்றி
    @ ரமணி
    @ இராஜராஜேஸ்வரி
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ திண்டுக்கல் தனபாலன்.
    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
    @ கரந்தை ஜெயக்குமார்
    நினைவில் நிற்கும் சந்திப்பு. மகிழ்ச்சி நன்றி.
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ கீதமஞ்சரி
    @ சுந்தர்ஜி
    @ ஹரணி
    உங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் என்னை நெகிழ வைக்கிறது. ஆரம்பகாலத்தில் சுந்தர்ஜி என் எழுத்துக்கள் என்னைப் பரவலாக அறிமுகப் படுத்தும் என்று கணித்து உற்சாகமூட்டினார். திரு. ஹரணியின் கருத்துக்கள் எனக்கு டானிக் போல் இருந்ததை மறக்க முடியாது நான் ஒற்றைவிரலால் தட்டச்சு செய்தாலும் ஒரு நிமிஷத்தில் 20 முதல் 30 வார்த்தைகள் வரை எழுதமுடியும்.
    @ கோபு சார். உங்களது இவ்வளவு விரிவான பின்னூட்டங்களும் கருத்துக்களும் என் மனதில் நம் சந்திப்பை மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கும். உங்கள் புத்தகம் என்றென்றும்..... என் மனைவி படித்துவிட்டாள். உங்கள் எழுத்துக்கு ரசிகை ஆகிவிட்டாள்
    @ தி. தமிழ் இளங்கோ
    பதிவுகளின் மூலம் அகில உலகப் பதிவர்களும் இணைகிறோம் என்பதுதான் நிஜம்.சந்திப்பு உற்சாகம் தந்தது
    @ பாலகணேஷ்
    உங்கள் கருத்துக்கள் மிகச் சரியானவை. உங்களை சந்திக்கும் நாளை எதிர்நோக்குகிறேன்.
    @ கோவை2தில்லி. நீங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் வாசியெனத் தெரியாது. தெரிந்திருந்தால் சந்திக்க முடிந்திருக்கலாம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  23. Pushpa Ramaswamy
    Before 4yrs back i joined the holy visit with you couple but now i joined us through your writing......is an
    everlasting memories!!!

    ReplyDelete
  24. எங்களுக்கு பயண டிக்கெட் மயிலாடுதுறையிலிருந்து எடுக்கப் பட்டிருந்தது//

    நான் அது சமயம் ஊரில்தான் இருந்தேன். ரயில் நிலையம் அருகில் தான் வீடு.
    தெரிந்து இருந்தால் உங்களை ரயில் நிலையத்தில் வந்து சந்தித்து இருப்பேன்.
    உங்கள் துணைவியார் அவர்களுக்கும், பேரனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இருப்பேன்.
    அடுத்த வருடம் வைத்தீஸ்வரன் கோவில் வரும் போது என்க்கு தகவல் தெரிவியுங்கள்.
    உங்கள் பதிவர் சந்திப்பு பகிர்வு அருமை.

    ReplyDelete