Monday, July 1, 2013

எழுத நினைத்த காதல் கடிதம்

எழுத நினைத்த காதல் கடிதம்   (போட்டிக்கு அல்ல.)


என் அன்பிற்குரியவளே,
பெயர் ஒன்றும் கூறி எழுதவில்லை. அதற்கு அவசியம் இல்லை. என் அன்பிற்குரியவள் என்றும் நீதானே. ஓ...! எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலென்ன.? என்றும் என் மனதில் இருப்பது உன் அன்றைய முகம்தான். உனக்கு நினைவிருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ கேட்டாயே  என் மனதில் வேறு யாராவது இருந்தார்களா என்று. அன்று நான் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். என் மனம் புகைப்படக் கருவியில் பொறுத்தப்பட்ட நெகடிவ் ஃபில்ம் சுருளைப் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் செய்யமுடியும். உன் உருவம்தான் என் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாயிற்றே.!
நீ அவ்வாறு அமர்ந்த நேரம் கூட எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.

அன்றொரு நாள் மாலை அந்திசாயும் வேளை
இரட்டைக் குழலுடன் பூரித்தெழும் அழகுடன்
பாவாடை தாவ்ணியில் பதினாறு வயசுப் பாவை நீ
ஓரடி ஈரடி சீரடி வைத்தென்முன் நாலடி நடந்துவர,
நாலாறு வயது நிரம்பப் பெறாத என் மனசும்
அலைபாய, மெய் விதிர்க்க,வாய் உலரத் தட்டுத்
தடுமாறிய நெஞ்சமுடன்  கண்டதும் கொண்டேன்.காதல்..

காதல் உணர்ந்தது, கண்வழி புகுந்து கருத்தினில்
கலந்து வித்தை செய்யும் விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?

உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்
ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச்
செய்தல் கூடுமோ.? அயலவன் உன்னை
ஆராதிருத்தல் தடுக்கவும் இயலுமோ.?

என் இனியவளே உன்னைக் கேசாதிபாதம் வருணித்து எழுதிய பாக்களில் ஒன்று இதோ.


வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட

எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ

இதைப் படித்து நீ “ சீ ...போஎன்று செல்லமாகச் சிணுங்கியதும் என் மனக்கண்ணில் சித்திரமாய்த் தோன்றுதடி 

வாலிபத்தில்  எழுதியவற்றை அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

 எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? என்னுள் நிறைந்த உன்னை என் கண்ணுள் நிறுத்தி, நீ வரும் வழி நோக்கிப் பித்தனாய் இருந்ததும் நினைவில் மோதுதடி..

யாருனைக் காணினும் நிலம் நோக்கி
என் முன்னே மட்டும் என் கண் நோக்கி
என்னுள் பட்டாம்பூச்சி பறக்கச் செய்யும்
வித்தை அறிந்தவளே .உன் விழி பேசும்
மொழி அறிந்து உனைக் கண்ட நாளே
கணக்கிட்டு விட்டேன் என் கைத்தலம்
பற்றவென்றே பிறந்தவள் நீயென்று.

வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.

நான் நினைப்பதை நானே உணருமுன்னர் கூறிவிடுபவள் அல்லவா நீ.?உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால்  ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன்

       
பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.

இப்படிக்கு என்றும் உன்............

.

30 comments:

 1. /// எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ...? ///

  போட்டியில் சேராதது நல்லது...! ஹிஹி...

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 2. உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால் ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன்

  தீட்டிய கடிதம் அருமை..!

  ReplyDelete
 3. அன்புள்ள ஜிஎம்பி ஐயா.

  ரசித்தேன். அனுபவித்தேன்.

  திரு ஜெயக்குமார் விவரம் சொன்னார்.

  அவசியம் நீங்களும் அம்மாவும் நான்காம் தேதி வீட்டுககு வாருங்கள்.

  காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. பாலு சார்,
  இந்த கவிதையைப் படிக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

  மூப்படைந்த முதியவர் ஒருவர் சாகும் தருவாயில் கிடக்கிறார். அவரைச் சுற்றி மனைவி மற்றும் அவர் மக்கள். அப்போது தன மனைவியை அருகில் அழைத்து அந்த மல்லிய விளக்கொளியில் ஒரு நிமிடம் காண்கிறார். கிழவனுக்கு பித்துப் பிடித்துவிட்டதென அவர் மகன்கள் திட்டுகின்றனர். சலனமற்று அவர்களை நோக்கி திரும்பிய முதியவர்,"இத்தனை வருஷமா என்னோட வாழ்ந்துகிட்டு இருக்கா உங்கம்மா. இந்த விளக்கு வெளிச்சத்தில அவ முகத்தைப் பாக்கும்போது அந்த விளக்கவிட அவ முகம் ரொம்ப பிரகாசமா தெரிஞ்சது. என் கூட வாழ்ந்த வாழ்க்கைல அவளுக்கு ஒரு குறையுமில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன், இனிமே நான் சந்தோசமா செத்துடுவேன்"

  இந்தக் கதையின் பாதிப்பிலும் ஒரு ஆதங்கத்திலும் எழுதியது தான் அந்தக் கவிதை :
  வேண்டுவதெல்லாம்
  நரைக்கூடும் வயதிலும்
  நரைத்திடாத காதல்தான்!

  ReplyDelete
 6. GMB சார்,
  //ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
  தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
  மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
  வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.//
  அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 7. // எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி. //

  ஆம்... அவர்களுக்கு புரிஞ்ச சரிதான்..

  ReplyDelete
 8. காதல் கடிதப்போட்டியில் தங்களோடு யாரும் போட்டியிட முடியாது என்பதை சரியாகவே கணித்திருக்கிறீர்கள். மிகவும் உணர்வுபூர்வமான காதலை உள்ளடக்கிய கடித மற்றும் கவிவரிகள் ஈர்த்தன. வருடங்களானாலும் வாடாத காதல் மலரின் வாசம் வசீகரம். பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete
 9. ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
  தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
  மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
  வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.//

  அருமையான காதல் கடிதம்.

  ReplyDelete
 10. தங்கள் உள்ளத்தில் உள்ளதில் ஒரு சிறிது தான் இங்கே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இன்னும் இருப்பதையும் வெளிப்படுத்துங்கள். உங்கள் துணைவியாரைப் போலவே நாங்களும் ஆவலாக இருக்கிறோம். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  ReplyDelete
 11. அவங்களுக்கு புரிந்தாள் நல்லது தான் ஐயா! போட்டியில் இணையுங்கோ ஐயா!

  ReplyDelete
 12. பகிர்வுக்கு நன்றி, உங்கள் உணர்வுகளை அப்படியே கொட்டி விட்டீர்கள் என எண்ணுகிறேன். போட்டிக்கும் அனுப்பி இருக்கலாம். அருமையான கடிதம்.

  ReplyDelete
 13. அருமையானா கடிதம், கடிதத்தில் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்த அத்தனை உவமைகளையும் ரசித்தேன் சார், நீங்கள் ஏன் இதை போட்டிக்காய் அனுப்பவில்லை என்று தெரியவில்லை, இருந்தாலும் உற்சாகமாய் எழுதி, எழுதுபவர்களையும் உற்சாகபடுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 14. உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது கடிதம்! வெகு அருமை!

  ReplyDelete

 15. @ திண்டுக்கல் தனபாலன்
  @ இராஜராஜேஸ்வரி
  @ ஹரணி
  @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
  @ நாக சுப்பிரமணியம்
  @ அப்பாதுரை
  @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  @ சங்கவி
  @ கீதமஞ்சரி
  @ கோமதி அரசு
  @ செல்லப்பா யக்ஞசாமி
  @ தனிமரம்
  @ கீதா சாம்பசிவம்
  @ சீனு
  @ பாலகணேஷ்
  பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
  பல்வேறு சமயங்களில் பதிவுகளில் எழுதியவற்றைக் கோர்த்து எழுத நினைத்த கடிதமாய் வெளியிட்டிருக்கிறேன். போட்டிக்காக எழுதியது அல்ல.

  ReplyDelete
 16. தேங்காத அன்பை சொற்களில் தேக்கிவைத்து வடித்திருக்கிறீர்கள்.
  வலைச்சரம் மூலமாக இன்றே இந்த பதிவைக் கண்டேன்.

  ReplyDelete

 17. @ சசிகலா
  வருகைக்கு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி.

  ReplyDelete

 18. வலைச்சர ஆசிரியரின் காதல் ரசம் அருமை.

  ReplyDelete
 19. ஐயா வணக்கம்.

  தங்களின் வர்ணனை காணத் தோன்றுவது,

  அம்பிகாபதி தோற்ற கவிதை,

  தன்னை மறந்து

  "சற்றே பருத்த தனமே துவளத் தரள வடம்
  துற்றே அசைய குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய்
  நற்றே னொழுக நடனசிங் காரநடை யழகின்
  பொற்றே ரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே"

  எனப் பாடிய பாட்டு.

  அவன் உயிர் இதற்காய்ப் போனாலென்ன..!

  அந்தப் பெண்ணிற்கு உயிரூட்டி விட்டானே!

  காதலைத் தொட்டு எழுதப்படும் எழுத்துகள் எனக்கு என்றும் அலுப்பதே இல்லை.
  நன்றி.

  ReplyDelete
 20. அருமை அருமை ஐயா. போட்டியில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் பரிசை வென்றிருக்கும்

  ReplyDelete

 21. @ ஊமைக்கனவுகள்
  ஐயா முன்பே ஒரு முறை கூறிய நினைவு உள்ளத்தால் உணர்ந்து எழுதுவது அலிக்காது. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 22. @ டி.என் முரளிதரன்
  பொதுவாக எந்தப் போட்டியிலும் கலந்து கொள்வதில்லை. ஒரு முறை குமுதம் நடத்திய போட்டியில் என் காதலியின் பெயரில் எழுதி வென்றது பற்றிப் பதிவு அண்மையில் வெளியிட்டிருக்கிறேன் உற்சாகபபடுத்தும் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 23. வணக்கம் ஐயா !
  எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? என்னுள் நிறைந்த உன்னை என் கண்ணுள் நிறுத்தி, நீ வரும் வழி நோக்கிப் பித்தனாய் இருந்ததும் நினைவில் மோதுதடி..

  ம்..ம்.ம் இனிய காதல் தனை
  இன்னும் சுமந்து எழுதிய
  கடிதம் கண்டு பனித்தன கண்கள். தொடர வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete

 24. @ இனியா
  காதல் இருந்தால் கவிதை வருமோ.?எத்தனை காலம் ஆனாலும் காதல் கசப்பதில்லை. வருகைக்கு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி மேடம்

  ReplyDelete
 25. எம்மை சொக்க வைத்து ரசிக்க வைத்த வரிகள்!!!!

  எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? //

  ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
  தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
  மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
  வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.//

  நான் நினைப்பதை நானே உணருமுன்னர் கூறிவிடுபவள் அல்லவா நீ.?உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால் ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன் //

  இன்னும் பல உள்ளன சொல்லிக் கொண்டே போகலாம் சார்....காதல் ரசம் ரசமாக உள்ளது....இதைப் படித்தால் காதல் கசக்குதையா என்ற பாட்டு வந்திருக்காது....காதல் இனிக்குதையா என்றுதான் திரைப்படப் பாடல் எழுதிய கவிஞர் எழுதியிருப்பார்.....

  இந்தக் கவிதைக்கு ஈடாக போட்டியில் எந்தக் கவிதையும் இருந்திருக்காது சார்...இது அவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட கவிதை சார்....

  மிக மிக ரசித்தோம்....

  ReplyDelete
 26. @ துளசிதரன் கீதா,
  என் காதல் உணர்வை போட்டியில் பிறர் மதிப்பீடு செய்வதை நான் விரும்பவில்லை எழுத நினைத்த காதல் கடிதத்தை ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 27. கவிதையை ரசிக்கும் மனோபாவம் எனக்குக் குறைவு. 'சே.. உங்களுக்கு ரசிக்கவே தெரியலப்பா' என்று ஹஸ்பண்ட் சொன்னது நினைவுக்கு வந்துவிட்டது.

  இருந்தாலும் கீழ்க்கண்ட வரிகள் நல்லா இருந்தது.

  பொன்காட்டும் நிறங் காட்டி
  மொழி பேசும் விழி காட்டி
  மின் காட்டும் இடை காட்டி
  முகில் காட்டும் குழல் காட்டி,
  இசை காட்டும் மொழிகாட்டி
  இணைந்தனை என்னுடன்.

  உணர்ச்சியில் வரும் கருத்துக்களைப் பிறர் எடைபோட இயலுமா?

  ReplyDelete
  Replies
  1. உணர்ச்சியில் வரும் கருத்துகளை எடை போட வேண்டாம் ரசிக்கலாம் அல்லது குறைபடலாமல்லவா வருகைக்கு நன்றி சார்

   Delete