செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஒரு எழுத்தாளன் நிலை....!



                ஒரு எழுத்தாளன் நிலை......
                 _________________________



கடந்த சில பதிவுகளில் விடுப்பு பற்றியும் அனுபவங்கள் பற்றியும் எழுதி இருந்தேன். உடலுக்கு விடுப்பு என்ற போதிலும் உள்ளம் விடுப்பு எடுக்கவில்லை. எண்ணங்கள் முட்டி மோதின. அண்மையில் சில இடங்களில் சில செய்திகளைப் படிக்கும் போது என்னுடைய ரியாக்‌ஷன்கள் முட்டி மோதி என்னை வெளிப்படுத்து என்று கூறுவதை உணர்ந்தேன். ஒரு எழுத்தாளனுக்கு (நான் ஒரு எழுத்தாளன்தானே) எழுதுவதற்கு கரு சிதறிக் கிடப்பதையும் உணர்ந்தேன்.ஆனால் மனம் திறந்து எழுதுவது சில நேரங்களில் வாசிப்பவர்களுக்கு அவர்களைச் சவால் விடுவது போல் தோன்றி பின்னூட்டங்களில் தொக்கியும் துவண்டும் வெளியாகின்றன. எப்படியானால் என்ன நான் எழுதத் துவங்கி விட்டேன். இனி என்னாலேயே அதை நிறுத்த முடியுமா தெரியவில்லை.
பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளர். அண்மையில் என்றைக்கோ எழுதியதற்காக சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.அப்படி என்னதான் எழுதிவிட்டார்.?குழந்தைப் பேறு இல்லாதவர் கோவில் திருவிழாநாளில் யாருடனாவது புணர்ந்து குழந்தை பெற்று கொள்ளும் வழக்கம் ஒரு ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகக் கூறி அதையே ஒரு நாவலாக எழுதினார். பெருமாள் முருகனுக்கு ஒரு வலைத் தளமும் உண்டாம். அதில் போய்ப்பார்த்தால் எதுவுமே வரவில்லை. எப்படி வரும். மனுஷந்தான் எல்லாவற்றையும் ஏறக்கட்டிவிட்டதாகவும் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளன் இறந்து விட்டான் என்றும் அறிக்கை விட்டிருந்தாரே.
சரி; பெருமாள் முருகன் அப்படி என்னதான் எழுதியிருந்தார்.ஊரைத் தெரிவித்து திருவிழாவைக் குறிப்பிட்டு , கடவுளின் குழந்தை என்று ஊரார் கூறுவதையும் குறிப்பிட்டு ஒரு நாவல் புனைந்தார். மெச்சும்படியாக அதில் எனக்கு ஏதும் தெரியவில்லை பெரும்பாலும் கணவன் மனைவி கூடி இருத்தலையும் 12 ஆண்டுகள் குழந்தை பெறாமல் இருந்ததையும் சற்று விளக்கமாக எழுதி இருந்தார். இது ஒரு சமூகத்தை குறிப்பிடுகிறது என்று காலங்கடந்து சில வேண்டாதவர்களுக்குப் புரிந்து. அவருக்கு ஏகப் பட்ட தொல்லைகள் தந்து போராடி இருக்கிறார்கள். சச்சரவை வளர்க்க விரும்பாத ஊர் நிர்வாகத்தலைவர் பெருமாள் முருகனிடம் மன்னிப்புக் கோரி எழுதி வாங்கி ஊராரைச் சமாதானப் படுத்தி இருக்கிறார். இதில் எது சரி எது தவறு என்று இப்போது விவாதிப்பதில் ஒன்றும் ஆகப் போவதில்லை. அந்த சமூகத்தின் வழக்கங்கள் தவறு என்றோ அது நிறுத்தப் பட வேண்டும் என்றோ கருத்து எங்கும் எனக்குப் புலப்படவில்லை. ஊரையும் திருவிழாவையும் குறிப்பிடாமல் அந்த நாவலை எழுதி இருக்கலாம். அவர் சொல்ல வந்ததும் சொல்லப் பட்டிருக்கும் எந்த சசசரவுக்கும் ஆளாகி இருக்க வேண்டியதில்லை.
எழுதுபவனுக்கு அவன் எழுத்தில் நம்பிக்கை வேண்டும். ஒரு crusader ஆக அவர் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால். எதிர்ப்புகளை எதிர் நோக்கும் துணிவும் இருக்க வேண்டும். சில சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் சுட்டிக்காட்ட விரும்பி சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் இருந்தால் நாவலில் வருபவை கற்பனையே என்று கூறி இருக்கவேண்டும். ஆனால் இரண்டையும் செய்யாமல் நடந்தவைகளுக்குப்பொறுப்பேற்றுக் கொண்டு ஆனால் அதே சமயம் அனுதாபம் பெறும் வகையில் அறிக்கை விடுவது சரியா தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் வழக்கங்களை ஒட்டி நானும் ஒரு சிறு கதை புனைந்திருக்கிறேன். என் சிறுகதைத் தொகுப்பான வாழ்வின் விளிம்பில்  அது இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே என் வலைப்பூவில் வெளியான கதை. படிக்காதவர்களும் படிக்க விரும்புபவர்களும் ”இங்கே” சுட்டவும். சிறுகதைத்தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய தஞ்சாவூர் கவிராயர், தொகுப்பிலேயே சிறந்த கதை என்று பாராட்டிஎழுதி இருந்தார். இதிலும் சில வழக்கங்களை அடிப்படையாய்க் கொண்டு புனைந்த சிறுகதைதான் அது. இதுவரை எந்த எதிர்ப்புக் குரலும் ஒலிக்கவில்லை. யார் கண்டது ?ஆண்டுகளுக்கு பின் யாருக்காவது ஞானோதயம் ஏற்படலாம். அப்போது...?ஒரு கேள்விக்குறிதான் முளைக்கிறது...!

35 கருத்துகள்:

  1. சமீப காலங்களில் பற்பல பதிவுகளில் இந்த விஷயம்தான் ஓடி முடிந்தது! இன்னும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

    இன்று காலை கூட 'சிலிக்கான் ஷெல்ஃப்' பக்கத்தில் இதே டாபிக் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. சமீப காலங்களில் பற்பல பதிவுகளில் இந்த விஷயம்தான் ஓடி முடிந்தது! இன்னும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

    இன்று காலை கூட 'சிலிக்கான் ஷெல்ஃப்' பக்கத்தில் இதே டாபிக் படித்தேன்.

    பதிலளிநீக்கு

  3. இந்தக்கருத்தை எதிர்ப்பவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கு போனார்கள் ?
    இப்பொழுது மட்டும் அதை குறை சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது ?

    பதிலளிநீக்கு
  4. பெருமாள் முருகனின் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும் தான் சிக்கல் ஆரம்பித்தது. ஒன் பார்ட் உமன் என்னும் பெயரிலோ என்னவோ அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவே அதைப் படித்தத் திருச்செங்கோட்டுக்காரர் ஒருத்தர் (அமெரிக்காவில் இருக்கிறாராம்) உள்ளூருக்குத் தகவல் தெரிவிக்க இப்படி ஒவ்வொருவராகப் பற்றிக் கொண்டது என்கிறார்கள் எவ்வளவு தூரம் இது உண்மை எனத் தெரியாது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்ததின் பின்னரே பெருமாள் முருகன் கதைக்குப் பிரச்னை வந்தது என்னமோ உண்மை.

    பதிலளிநீக்கு
  5. கள ஆய்வு செய்திருப்பதாக முன்னுரையில் கூறி இருப்பவர் அதற்கான ஆதாரங்களைக் கேட்டால் தரவில்லை; அல்லது இல்லை என்று சொல்லிவிட்டார். ஆகவே ஆய்வு என்பதே உண்மையா என்றும் சந்தேகம்!

    பதிலளிநீக்கு
  6. நம்ம ஊரில் வரும் எதிர்ப்புகள் எல்லாமே ஏதோ ஒரு பின்புலத்தின் ஆதரவினால் வருவதே. எதுவுமே நேர்மையான சுய கருத்தாகச் சொல்ல முடியாது. ஆட்டுமந்தை என்று சொல்லுவார்களே அதைப் போல் தான். அவர் ஊர் பெயரையும், சமூகத்தின் பெயரையும் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். இல்லை என்றால் எதிர்க்கும் துணிவு இருந்திருக்கலாம். ஆனால் நம் சமூகம் அதற்கும் விட்டு வைத்திருக்காது சார். கொலை செய்யக் கூட அஞ்சமாட்டார்கள். இதை விட கேவலமான எழுத்துக்கள் வலம் வந்துகொண்டிருக்கத்தானே செய்கின்றன? சமூகத்தில் நடக்காத அவலங்களா? அதற்கெல்லாம் போராடதவர்கள் இதற்கு மட்டும் போராடுவது எதற்கு என்பதுதான் புரியாத புதிர்....

    எதிர்ப்பவர்கள் 2/4 ஆண்டுகளுக்கு முன் எங்கிருந்தார்கள்?

    பதிலளிநீக்கு
  7. கள ஆய்வில் கிடைத்த செய்திகள் என்று குறிப்பிட்டதால்தான் பிரச்சினையே

    பதிலளிநீக்கு
  8. #ஊரையும் திருவிழாவையும் குறிப்பிடாமல் அந்த நாவலை எழுதி இருக்கலாம்.#
    என் கருத்தும் இதுவே !

    பதிலளிநீக்கு
  9. அய்யா வணக்கம்.
    ஒரு படைப்பாளன் தன் படைப்பில் கூறியுள்ள கருத்தைக் கருத்தால் மறுக்க வேண்டும் என்பதே என் கட்சி.
    ஏற்பின்மையேல் புறக்கணிக்கவும், ஆதாரங்களுடன் மாற்றுக்கருத்தைச் சொல்லவும் சுதந்திரம் உள்ள நாட்டில்
    முடக்கப்படலும் ஒரு வன்முறைதான்.
    தங்களின் கதையையும் பார்க்கிறேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. "இப்படியும் ஒரு கதை" கேரள பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட கதை. கேரள மக்களின் கருத்துக்கள் மிகவும் முற்போக்கானவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இம்மாதிரி கதைகளை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ****“ தனிக்கி எந்தா வட்டோ.? போடோ இவடிருந்நு... “ என்று கூறி அவனை விரட்டினார். என்னவெல்லாமோ நினைத்து வந்த கோவிந்தன் ஒரு வினாடி அவனையே இழந்தான்.அவன் கண்களும் மனமும் அலைபாய அங்கிருந்த தேங்காய் சீவும் அரிவாளை எடுத்து ஒரே வெட்டு. நம்பூதிரியின் தலையைச் சீவி எடுத்தான். அறுபட்ட தலையுடன் ஆவேசமாக நடந்து வந்தவனைக் காண்கையில் அந்த ருத்ரனே வருவதுபோல் நினைத்த ஊரார் அவன் பின்னே செல்ல காவல் நிலையத்தில் சரணடைந்தான். ***

    சார்,

    உங்க கதை முடிவு இது :) கோவிந்தன் செய்கை உங்க கதையை நியாயப் படுத்திவிட்டதாகவும், அங்கே "நீதி" கிடைத்து விட்டதாகவும் எல்லாரும் எடுத்துக் கொள்வார்கள். அதனால் நீங்க எந்த வீண்பழிக்கும் ஆளாகாமல் தப்பிச்சுட்டீங்க.

    மாதொருபாகனில் அதுபோல் ஒரு நீதி வழங்கப்படவில்லை என்பதால் உங்க கதையில் வர்ர கோவிந்தன்கள் நிஜவடிவில் இப்போ ஆர்ப்பாட்டம் செய்றாங்கனு நினைக்கிறேன். :)))

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் தங்கள் கருத்தில் உடன்பாடுண்டு
    நிகழ்வினைக் கருவாகக் கொண்டு
    நிகழ்விடம் குறித்து கொஞ்சம் அக்கறை கொண்டிருந்தால்
    இவ்வளவு பிரச்சனைக்கு வழி ஏற்பட்டிருக்காது

    பதிலளிநீக்கு
  13. வாய்மொழிக்கதைகள், நாட்டுப்புற வழக்காறுகள் என்ற நிலைகளில் பல கூறுகளை வாழ்வியலில் காணமுடிகின்றது. நடந்தவற்றை, நடந்துகொண்டிருப்பவற்றை பதியும்போது மாற்றுக்கருத்துக்கள் வர வாய்ப்புண்டு.ஒவ்வொன்றுக்கும் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு என்று ஆதாரங்களைத் தேட முடியாது. வரலாற்றில் இவை போன்ற நிகழ்வுகளையும் காணமுடிகிறது. அது சரியா தவறா என்று விவாதித்து திசை திருப்புவதை விடுத்து, எதையும் உணர்ந்து அறிந்துகொள்ள ஒரு பக்குவம் நமக்குத் தேவை.

    பதிலளிநீக்கு
  14. நடந்ததை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது அதை சொன்னால் நம் மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ ?

    பதிலளிநீக்கு
  15. ஞானோதயம் ஏற்படலாம்...! ஹா.... ஹா.... நடக்கலாம் ஐயா...

    பதிலளிநீக்கு

  16. @ ஸ்ரீ ராம்
    ஒரு டாபிகல் சப்ஜெக்ட் பற்றி பல வித்க் கருத்துக்கள் வருவது சகஜந்தானே. அணுகும் விதம் மாறி யிருக்கிறதா இல்லையா.? வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  17. @ கில்லர்ஜி
    உங்கள் வினாவுக்கு கீதா சாம்பசிவத்தின் பின்னூட்டம் ஒரு வேளை பதிலாயிருக்கலாம். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  18. @ கீதா சாம்பசிவம்
    இந்தசெய்தி எனக்கப் புதிது.
    ஆய்வு என்பது கண்டு கேட்டு அறிந்த விஷயங்களாய் இருக்கலாம். ஆதாரமென்று சொல்லிப் பெயர்களை வெளியிட முடியுமா.? வருகைக்கு நன்றி மேம்.

    பதிலளிநீக்கு

  19. @ துளசிதர்ன்
    உண்மைதான் ஐயா. mobocrazy இருக்கும் போது எந்த நிலைக்கும் போக வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    நிகழ்வுகள் எல்லாம் கற்பனையே என்று சொல்லி இருந்தால் பல பிரச்சனைகள் எழுந்திருக்காது. வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  21. @ பகவான் ஜி
    ”ஊரையும்..........க்கலாம்”என் கருத்தும் அதுவே. அப்ப்டி இருந்திருந்தால் நாமது பற்றி எழுதிக் கொண்டிருக்க மாட்டோம். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  22. @ ஊமைக் கனவுகள்
    கருத்தை எதிர்ப்பவர்கள் படைப்பாளிகளல்லவே.நடந்த்தது நிச்சயம் வன்முறைதான்.
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  23. @ டாக்டர் கந்தசாமி
    இப்படியும் ஒரு கதை கேரள மக்களின் அந்தக் காலப் பின் புலம் வைத்து எழுதியதே. அந்தமாதிரி கற்பனை செய்ய பலரிடமும் சேகரித்த விஷயங்கள் உதவின. கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  24. @ ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைச் சொல்கிறவர் அதை நியாயப்படுத்துகிறாரா என்பதே கேள்வி. வருகைக்கு நன்றி வருண்.

    பதிலளிநீக்கு

  25. @ ரமணி
    எல்லாம் நடந்து முடிந்தபின் தோன்றுவதுதான் அது. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  26. @ சோழ நாட்டில் பௌத்தம்
    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதே ஐயா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  27. @ வே. நடன சபாபதி
    ஒரு கூட்டத்தில் தனி மனிதக் கருத்து பரிசீலிக்கப் படாது என்பது தெரிகிறது / வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    அந்த மாதிரி ஏதும் நடக்கக் கூடாதையா,,,,! வருகைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
  29. //ஆய்வு என்பது கண்டு கேட்டு அறிந்த விஷயங்களாய் இருக்கலாம். ஆதாரமென்று சொல்லிப் பெயர்களை வெளியிட முடியுமா.? வருகைக்கு நன்றி மேம். //

    வாய் வழிச் செய்தி எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படி எல்லாம் சொல்லவில்லை. இப்படி ஆய்வு செய்பவர்கள் கட்டாயமாய் அதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட வேண்டும். ஆய்வு என்ற பெயரில் ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லக் கூடாது.

    பதிலளிநீக்கு
  30. புத்தகத்தின் முன்னுரையில் பெருமாள் முருகன் கீழ்க்கண்டவாறு சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் ஆதாரங்களைக் காட்டித் தானே ஆக வேண்டும்?

    //திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டபோது
    எனக்குக் கிடைத்தவை பல. படைப்பு உந்துதல் கொடுத்த
    விஷயங்களுள் ஒன்று இந்நாவல். நான் சேகரித்தவற்றை
    விரிவாகப் பயின்றுகொண்டிருக்கின்றேன். ஆய்வின்போது நான்
    பெற்ற பேரனுபவங்கள் சில என்னுள் ஊறிக்கொண்டிருக்
    கின்றன. அவற்றில் வரலாறு சார்ந்து விரிவாக எழுதும் தூண்டல்
    ஒன்றும் இருக்கிறது. அதற்குச் சில ஆண்டுகள் எனக்குத்
    தேவைப்படக்கூடும்.
    ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு
    ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப்
    பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’
    அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து
    நல்கை பெற்றேன். அதன் வழியாக என் ஆய்வை விரிவு
    படுத்திக் கள ஆய்வு செய்யவும் ஆவணங்களைச் சேகரிக்கவும்
    முடிந்தது. அந்நிறுவனம் என்னைச் சுதந்திரமாக இயங்க
    அனுமதித்தது. அதில் பணியாற்றும் சஞ்சய் அவர்கள் இனிய
    நண்பராகப் பெரிதும் உதவினார்.
    வ. கீதா, ஆ.இரா. வேங்கடாசலபதி, க்ரியா ராமகிருஷ்ணன்,
    பூமணி ஆகியோர் ஆய்வு தொடர்பாக உதவவும் வழிகாட்டவும்
    செய்தனர். நண்பர் சந்தியூர் கோவிந்தன் சிலசமயம் என்
    னுடன் வந்து மிகவும் உதவினார்.
    சென்னை, ரோஜா முத்தையா நூலகமும் அதன்
    இயக்குநர் சுந்தர் அவர்களும் செய்த உதவிகள் முக்கிய
    மானவை.//
    கள ஆய்வைச் சுட்டிக்காட்டி உதவித் தொகையும் பெற்றிருக்கிறார். அப்போது ஆய்வுக்கான ஆதாரங்கள் இருந்தே தீரணும் இல்லையா?

    பதிலளிநீக்கு

  31. @ கீதா சாம்பசிவம்
    கதையில் திரைப்படம் ஸ்ரீ வள்ளி படம் பற்றிய செய்தி ஒன்று சொல்லப் படுகிறது.ஸ்ரீவள்ளி திரைப்படம் 1940 களில் வந்தது. ஆக இந்தக்கதை நடந்தகாம் எழுபது ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கலாம். பெருமாள் முருகன் அப்போது பிறக்காமலும் இருந்திருக்கலாம். ஆகவேதான் கேட்டறிந்த விஷயங்களாய் இருக்கலாம் என்றேன். அப்படியே ஆய்வு நடத்தும்போது நிஜ மனிதர்களைப் பற்றியதாய் இருந்தாலும் அதுவும் வாய்வழிக் கேட்டதாகவே இருக்கும். ஒரு வேளை கள ஆய்வுக்காக உதவித் தொகை பெறும் இடத்தில் உண்மை மனிதர்கள் பற்றிக் கூறி அவர்களை நம்பவைத்து உதவி பெற்றிருக்கலாம் ஆய்வு என்றால் கல்வெட்டு பட்டையம் போன்ற விஷயங்கள் இருந்தால் அதைக் காட்டுவதில் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன்.உங்கள் பின்னூட்டம் நிறையவே சிந்திக்கச் செய்கிறது.மீள் வரவுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  32. ****Geetha Sambasivam said...

    புத்தகத்தின் முன்னுரையில் பெருமாள் முருகன் கீழ்க்கண்டவாறு சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் ஆதாரங்களைக் காட்டித் தானே ஆக வேண்டும்?

    //திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டபோது
    எனக்குக் கிடைத்தவை பல. படைப்பு உந்துதல் கொடுத்த
    விஷயங்களுள் ஒன்று இந்நாவல். நான் சேகரித்தவற்றை
    விரிவாகப் பயின்றுகொண்டிருக்கின்றேன். ஆய்வின்போது நான்
    பெற்ற பேரனுபவங்கள் சில என்னுள் ஊறிக்கொண்டிருக்
    கின்றன. அவற்றில் வரலாறு சார்ந்து விரிவாக எழுதும் தூண்டல்
    ஒன்றும் இருக்கிறது. அதற்குச் சில ஆண்டுகள் எனக்குத்
    தேவைப்படக்கூடும்.
    ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு
    ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப்
    பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’
    அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து
    நல்கை பெற்றேன். அதன் வழியாக என் ஆய்வை விரிவு
    படுத்திக் கள ஆய்வு செய்யவும் ஆவணங்களைச் சேகரிக்கவும்
    முடிந்தது. அந்நிறுவனம் என்னைச் சுதந்திரமாக இயங்க
    அனுமதித்தது. அதில் பணியாற்றும் சஞ்சய் அவர்கள் இனிய
    நண்பராகப் பெரிதும் உதவினார்.
    வ. கீதா, ஆ.இரா. வேங்கடாசலபதி, க்ரியா ராமகிருஷ்ணன்,
    பூமணி ஆகியோர் ஆய்வு தொடர்பாக உதவவும் வழிகாட்டவும்
    செய்தனர். நண்பர் சந்தியூர் கோவிந்தன் சிலசமயம் என்
    னுடன் வந்து மிகவும் உதவினார்.
    சென்னை, ரோஜா முத்தையா நூலகமும் அதன்
    இயக்குநர் சுந்தர் அவர்களும் செய்த உதவிகள் முக்கிய
    மானவை.//
    கள ஆய்வைச் சுட்டிக்காட்டி உதவித் தொகையும் பெற்றிருக்கிறார். அப்போது ஆய்வுக்கான ஆதாரங்கள் இருந்தே தீரணும் இல்லையா?***

    பாவை விளக்கு முன்னுரையில் அகிலன், அது உண்மையில் நடந்த ஒரு கதையாகவும் தன் நண்பன் சொன்ன கதை என்பதுபோல் சொல்லியிருப்பார். அந்த "நண்பன்"க்கும் அவருக்கும் உள்ள பிரச்சினை அது.

    பொதுவாக, உண்மைக்கதையைக் கூட பலர் "கற்பனை" என்கிற ஒரு லேபள் போட்டுவிடுவார்கள். நண்பர்கள், காதலிகள், பழைய காதலர், காதலிகள் பெயர்கள், அவர்கள் வசித்த ஊர் போன்றவற்றை கவனமாக மாற்றிவிடுவார்கள். ஏன் நானே கதைனு எழுதும்போது அப்படித்தான் செய்தேன், செய்கிறேன், செய்வேன். ஏன் செய்கிறோம்?? அதில் நாம் சொல்லும் நிகழ்வால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்பதால். மேலும் நாம் "க்ற்பனை"யில் உருவாக்கிய உண்மையான நபர்கள் அதை வாசிப்பார்கள். அந்த நபர் நாளைக்கு நம்மிடம் நீ எப்படி என் பேரையும் ஊரையும் சொல்லலாம் என கோபித்துக் கொள்ளலாம். மேலும் சட்டத்தில் இருந்து தப்ப. To save your neck! உண்மையை பொய்போல் சொல்லுவதும் கதை. பொய்யை உண்மை போல் எழுதுவதும் கதை. ஆனால் எழுத்தாளன் ஒரு ஊர், ஆள் பெயரைச் சொல்லும்போது மிகவும் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தால் அதை சம்மந்தமே இல்லாத ஒரு ஊராக மாற்றவேண்டும்.

    அது ஒரு பேராசிரியருக்கு தெரியாதது வியப்பளிக்கிறது. He pays the price for the "fatal error" he made!

    பதிலளிநீக்கு
  33. நான் நாவல்களை படித்து கிட்டத்தட்ட சுமார் 30 வருடங்கள் ஆகின்றன.சிறுவயதில் பள்ளிக்கூட புத்தகம் ஆரம்பித்து பத்தாம் வகுப்பு வரை துணைப் பாடல்நூலில் வரும் கதைகளையே அதுநாள் மட்டும் படித்து அறிந்தேன் பின் எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கத்துரை,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார் ஆகியோரின் கதைகள் என சில வருடங்கள் படித்தேன்.அதன் பின்னே கதைகள் நாவல்கள் படிக்க அதிக நாட்டமும் நேரமும் இல்லை. தவிர்த்தே வந்தேன்.கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின் நான் வலைப்பூவை ஆரம்பித்தப் பின் ஒருப்பக்க கதைகளையும், ஆன்மீக,அறிவார்ந்த,தத்துவ கதைகளை படிக்க ஆரம்பித்தேன். அதுவும் மஹாபாரதம் முழுமையாக படித்தபின்(ஒரு வருடமாக) அந்த ஆர்வம் அதிகமானது. மஹாபாரதத்தில் வரும் துணைக் கதைகளை சிலர் சமூகக் கதைகளாக மாற்றி எழுதி இருந்ததை அறிந்தேன்.அதனை பாக்யா,ஆனந்த் விகடன்,குமுதம்,கல்கி என பல இதழ்களில் நானே கண்க்கூடகாக படித்தேன்.ஆனால் அப்படி அவர்கள் மாற்றி சில சமூகக் கண்ணோட்டத்துடன் மாற்றி இன்றைய காலக் கட்டத்திற்கு ஏற்றார்போல் எழுதியதை சில நேரங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.(உ-ம் : சிவசங்கரியின் வாடகைத்தாய் கதைப் பற்றிய “அவன் அவள் அது” கதை.இது சினிமாவாகவும் வந்துள்ளது).

    ஆனால் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு சார்ந்த கதைகளை கையாளும்போது எழுத்தாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். 1980களிலும் அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் கதை, கவிதை,கட்டுரை,எழுத்துக்கள் ஒரு வட்டாரத்தில் மட்டுமே பரவியுள்ள அந்த மொழிக்கேற்பவும், அதன் ஆசிரியரின் பரிச்சயத்திற்கும் ஏற்ப கண்டனத்திருக்கும், விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் ஆட்ப்படும். ஆனால் இன்றைக்கு வலைதளம் எனும் மிக பெரிய விஞ்ஞான வளர்ச்சியில் உலகத்தின் எல்லை சுருக்கப்பட்டு எல்லாரும் எல்லாமும் அறிய முடிகிறது.அதனால் கண்டனம்,விமர்சனம்,விவாதம் உடனே நடைபெறுகிறது.

    (உ-ம் :சினிமாவில் துப்பாக்கி,விஸ்வரூபம்,கத்தி என பட்டியல் நீளும் ) இதற்கு காரணம் ஊடக வளர்ச்சியில் வலைதளத்தின் பங்கின் எதிரொலி. இது நல்லதா கெட்டதா என்ற விவாதம் இப்போது தேவையற்றது.

    ஆனால் திரு பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் (ONE PART WOMAN 2013 -மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்) பதிப்பு வெளியானது 2010-ம்௦ வருடம். அப்போதைய காலக்கட்டத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இன்றைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதைத்தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் விமர்சனம் நடந்துக் கொண்டிருப்பதும்மே இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியதானது. இனி எந்த நாவலையும்,கட்டுரையும், சிறுகதைகளையும்,கவிதைகளையும் எழுதுவதில்லை எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் முகநூலில் தெரிவித்துள்ள பிறகும் நடந்துக் கொண்டிருக்கிறது.(இதனால் நான் “மாதொருபாகன்” நாவலை முழுவதையும் படித்தேன்)

    இதன் தாக்கம் என்னவென்றால் இனி ஒவ்வொரு எழுத்தாளனும் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு சார்ந்த கதைகளையோ, கட்டுரைகளை எழுதும்போது அதன் வீரியமும், கருத்துக்கும், உணர்வுக்கும் உட்பட்டே எழுத வேண்டும். இல்லையெனில் நம்மை நாமே சிதைத்துக்கொள்ளும் மனநோய்க்கு ஆளாவோம். இது எந்த எழுத்து சுதந்திரத்தை என்றும் பறிக்காது.

    பதிலளிநீக்கு

  34. @ Arrow Sankar
    வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி. எழுத்துலகில் மாற்றுக் கருத்து இருந்தே இருக்கும். அம்மாதிரி இல்லாமல் எழுதுவதென்றால் இதிகாசக் கதைகளை அவற்றைச் சொல்லியபடியே எழுத வேண்டி இருக்கும். எழுதுவது காண்பதையும் படிப்பதையும்
    நிகழ்வுகளையும் உணர்வதாலும் அதனால் பாதிப்புக்குள்ளாவதாலும் ஒருவனின் எண்ணங்களைக் கடத்த உதவுகிறது.எல்லோரும் ஒரேபோல் எண்ணுவதில்லை. ஆனால் எழுதும் போது பிறர் மனம் நோகாதபடி எழுதுதல் அவசியம்.அத்ற்காக எழுத்தில் வீரியமே இருக்கக் கூடாது என்பதல்ல.பலவிதமான (மூட) நம்பிக்கைகள் உலவி வருவதைப் பார்க்கும் போது ஒரு எழுத்தாளனால் மொக்கையாக எழுதிக் கொண்டு இருக்க முடியாது. ஆனால் தொட்டால் சிணுங்கிகளாக உள்ள நம் மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் அதே சமயம் மனம் புண்படா விதத்தில் எழுத முயற்சி அவசியம் என்றே தோன்றுகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  35. எப்படியோ சில எதிர்ப்புகள் புகழைப்பரப்புகின்றன .பெருமாள்முருகன் என்னும் எழுத்தாளரை இந்த அளவுக்கு அனைவரிடம் கொண்டு சேர்த்துவிட்டனர் எதிர்த்தவர்கள்:)

    பதிலளிநீக்கு