புதன், 18 பிப்ரவரி, 2015

உபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அனுபவங்கள்---1


           உபாதைகள் பலவிதம் -ஒவ்வொன்றும் ஒரு விதம் அனுபவங்கள்---1
                       --------------------------------------------------------------


சில உடல்நலக் குறைவுகள் நம்மை மிகவும் பயமுறுத்திச் செல்கின்றன.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எந்த உடல் உபாதையும் நம்மை பயமுறுத்தக் கூடாது. அண்மையில் வலைப் பதிவர் அருணா செல்வம் அவர்களது தளத்தில் மாரடைப்பின் அறிகுறிகள் பற்றி எழுதி இருந்தார். அதைப் படித்தபின் நான் அனுபவித்த எனக்கு நேர்ந்த சில அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன்.பயம் நோயின் வீீரியத்தைக் கூட்டும். அம்மாதிரி பயம் கூடாது என்பதற்காகவே ஒரு first hand narrationஆக என் அனுபவங்களை எழுதுகிறேன் இது ஒரு தொடராக இன்னும் மூன்று பதிவுகளில் வரும் உடல் உபாதை என்பதை நாம் எப்படி அறிகிறோம். நான் தமாஷாக சொல்வதை இங்கும் பகிர்கிறேன். உடலின் எந்த உறுப்பும் தன் இருப்பை வெளிக் காட்டக் கூடாது. “நான் இருக்கிறேன்” என்று நமக்குத் தெரியப் படுத்தும்போது அந்த உறுப்பு சம்பந்தமாக ஏதோ குறை இருப்பது தெரியும். நம் உடல் உறுப்புகள் நம் சொல்லுக்கு அடங்கியே இருப்பது நல்லது. அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதே நான் தெரிந்து கொண்டுள்ளது சரி. இனி விஷ்யத்துக்கு வருவோம்நான் கூற வரும்.இந்த உபாதைகள் எல்லாம் தலைவலி  சளி என்பதுபோல் ஓரிரு நாட்கள் படுத்தியவை அல்ல.

 எனக்கு 19 -20 வயதிலேயே(1957-1959) நான் பயிற்சியிலிருக்கும் போது அம்பர்நாத்தில் காரணம் தெரியாத ஒரு back pain இருந்து வந்தது.நிற்க முடியாத அளவுக்கு வலி இருக்கும்  மருத்துவரிடம் காண்பித்தேன். முதலில் rest எடுத்தால் சரியாகிவிடும் என்றார்கள்/ எவ்வளவு நாள் ரெஸ்ட் எடுப்பது. ? என்னவெல்லாமோ. மருந்து மாத்திரைகள் கொடுத்தார்கள். கடைசியில் எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்கலாம் என்று நினைத்து இஞ்செக்‌ஷன் கொடுத்தார்கள் (ஏதோ மில்க் இஞ்செக்‌ஷன் என்பதாக நினைவு.) எனக்கு மருத்துவர்களிடம் கோபம் வந்தது. என்னைப் போன்ற பச்சிளம் பாலகனையா அந்த மாதிரி நோய் இருப்பவன் என்று சந்தேகப் படுவது? மருத்துவர்களுக்குப் புலனாகாத நோய்க்கு என்னை பாம்பே கொலாபா நேவல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அங்கு அட்மிட் செய்ய இருக்கைகள் (படுக்கைகள்) இல்லாததால் வேறு ஒரு நாளில் வரச் சொன்னார்கள் அப்போது இன்று போல் தொடர்பு வசதி இல்லை. என்னாலும் அவர்கள் சொன்னபடி போக முடியவில்லை. நான் முன்னைவிட அதிக தேகப் பயிற்சிகளில் ஈடுபட்டேன். டேபிள் டென்னிஸ் ஆடக் கற்றுக் கொண்டேன் தடகளப் பயிற்சிகளில் நேரம் செலவழித்தேன் பொதுவாக வலியை இக்நோர் செய்யக் கற்றுக் கொண்டேன்/ விளைவு உயரம் தாண்டும் போட்டியில் முதலாவதாக வந்தேன். டேபிள்டென்னிஸில் இரண்டாம் நிலைக்கு வந்தேன். வலி என்னைக் கண்டு அஞ்சியது என்று நினைக்கிறேன். அன்று தொடங்கிய வலி இன்றும் இருக்கிறது. வலியுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன். விஜயவாடாவில் பணியின் மும்முரத்தில் நான் இருந்தபோது வலி அதிகமாகி x-ray எடுத்துப் பார்த்து  disc prolapse  என்று சொல்லி என்னைப் படுக்கையில் முழுநேர ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். எனக்கு இருந்த பொறுப்பில் ஓய்வு பற்றி நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. என் மனைவி வேறு வைத்தியம் பார்க்கலாம் என்று சொல்லி குண்டூரில் ஒரு அக்யுபங்சர் வைத்தியரிடம் கூட்டிப் போனாள். அங்கு உடல் முழுதும் மெல்லிய ஊசிகள் போட்டிருந்த நோயாளிகளைக் கண்டதும் இந்த சிகிச்சை வேண்டாம் என்றும் குணமாகத் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துவதுமாக வேண்டிக் கொண்டதும் தனிக்கதை. நான் இதையே காரணம் காட்டி மீண்டும் திருச்சிக்கே வர முடிந்தது இந்த வலியின் பலனால்...! திருச்சியிலும் இந்த வலி என்னைத் தொடர்ந்தது.திருச்சியில் இதன் கூடவே கழுத்திலும் வலி ஏற்படத்துவங்கியது. செர்விகல் ஸ்பாண்டிலிடஸ் என்றார்கள் பின் என்ன, தினமும் மருத்துவ மனைக்குப் போய் ஃபிசியோதெரபி என்னும் பெயரில் கழுத்தில் தூக்கில் இடுவதுபோல் வெயிட் போட்டுத் தூக்குவார்கள் காலுக்கும் வெயிட் கட்டி இழுப்பார்கள். பலன் ஏதுமிருக்கவில்லை


என் மனைவி கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக்குச் சென்று காட்டலாம் என்றார்கள். எனக்கும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றநிலை. ”’செர்விகல் ஸ்போண்டிலைடிஸ் என்று சொல்கிறார்கள். கழுத்து எலும்பில் தேய்மானம் என்கிறார்கள்என்று சொன்னேன்.ஏஎய். கடவுள்படைப்பில் தேய்மானம் ஒன்னும் இல்லா. ஞான் தருன்ன எண்ணையைத் தேய்த்து குளிக்கண்டா. வெறுதே தொடச்சுவிட்ட மதி. தலைக்குத் தண்ணி ஊத்த வேண்டாம். பின்னே ஈ நெய்யும் கழிக்கானாணஎன்று கூறி நெய்யும் எண்ணையும் தந்தார். திருச்சி மாதியான ஊரில் தலைக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது என்று தினம் இருமுறை தலைக்குக் குளிக்கும் என்னாலதை முழுவதும் பின்பற்றமுடியவில்லை. 


மருத்துவர்கள் நான் ஸ்கூட்டர் ஓட்டத் தடை விதித்தார்கள். பலன் நாளாவட்டத்தில் நான் ஒரு கார் வாங்கினேன்.என் மனைவிக்கு அவளது வேண்டுதல் நினைவு வந்து ஒரு முறை திருப்பதி சென்று காணிக்கை செலுத்தினாள்இத்தனைக்கும் பிறகும் இந்த வலி “உன்னை விட்டேனா பார்என்று தொடர்கிறது. ஒரு முறை இந்த வலியில் நான் இருக்கும் போது விழுந்து விட்டேன். அது பற்றி விரிவாக ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் பார்க்க.”இங்கே” சொடுக்கவும்  ’”வீழ்வேனென்று நினைத்தாயோ 

இந்த வயதில் வலி வரும்போது கூடியவரை ஓய்வு எடுக்கிறேன் மல்லாந்து படுத்துக் கொண்டுஒவ்வொரு காலாக உயரே எழுப்புவேன். 70 டிகிரி வரை காலை நிமிர்த்த முயன்றால் எழுந்து நடமாடத் தொடங்கி விடுவேன் இடுப்பு தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக மெதுவாகக் குனிந்து நிமிர்வேன் இந்த உபாதைப் பதிவு மீண்டும் தொடரும் வேறு சில விஷயங்களுடன்.- பலரும் சில உபாதைகளுடன் இருக்கலாம். என் அனுபவங்கள் அவர்களுக்கு தைரிய மூட்டுவதற்கே             











35 கருத்துகள்:


  1. உண்மைதான் ஐயா நோய் வந்து பயந்தால் கூடுதல் பிரட்சினைதான் வருமே ஒழிய தீராது நானும்கூட பலநேரங்களில் சுகமில்லையென்றால் படுக்கமாட்டேன் அதை விரட்டுவதற்காக ஓடுவேன் இத்தனை வயதுவரை நான் முடியாமல் வந்து தளர்ந்து படுத்து கிடந்தது சில தடவைகளே...
    தங்களது பதிவு தன்னம்பிக்கையை ஊட்டும் 80ல் ஐயமில்லை தொடர்ந்து இதனைக்குறித்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு

  2. வீழ்வேனென்று நினைத்தாயோ.?

    படித்தேன் நடந்த ஒரு சம்பவத்தையே ஒரு ரசனையோடு எழுதி இருந்தீர்கள்...

    பதிலளிநீக்கு
  3. உடலில் உபாதைகள் தோன்றும் போது, முதலில் பாதிப்படைவது நமது மனம்.
    அருமையான வழிகாட்டி பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்களது பகிர்வு எங்களுக்கு நல்ல பலனைத் தரும் என நம்புகிறோம். ஏனெனில் உங்களது ஒவ்வொரு எழுத்தும் எங்களுக்குப் பாடமே.

    பதிலளிநீக்கு
  5. உபாதையைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை என்பதாலேயே அதைப் பற்றிக் கவலைபடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்பது தெரிகிறது. வலியோடேயே வாழப் பழகி விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. அய்யா,
    வணக்கம். திருச்சி என்று திருச்சிராப்பள்ளியைத் தானே சொல்கிறீர்கள்?
    நீங்கள் இங்கா இருந்தீர்கள்.
    உங்கள் வலி உபாதை பற்றி விடயங்கள் இதைக்கண்டதும்இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிட்டன.
    உண்மையில் வலி மனஉறுதிக்கு உண்டான சோதனைதான்.
    மனம் வெற்றி பெறும் இடத்தில் வலி தோற்றுப் போவது என்னமோ உண்மைதான்!
    சில நாடகளாகத் தோன்றுகிறது,
    என்ன இருந்தென்ன...........
    நோய் நொடியில்லாமல் இருந்தால் போதும.
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை, நோய்வந்தால் செல்வம் குறையும் என்பதற்காகச் சொல்லியிருப்பானோ என்றும் தோன்றுகிறது.
    இன்றைய மருத்துவமனைகள் அப்படி.
    அப்பறம் ஒன்றும் இல்லாதவனுக்கு நோயே வரக்கூடாது என்றும்.

    உண்மையில் உங்களின் அனுபவம் புதிய அறிவுதான்
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. உங்களது பகிர்வு அருமையான வழிகாட்டி எங்களுக்கு.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. உங்களின் வலியான அனுபவம் (மன தைரியம்) எங்களுக்கு பாடம்...

    இன்றைய எனது பதிவில் இட்ட கருத்துரைப்படி... முயற்சி செய்கிறேன்... (!)

    பதிலளிநீக்கு
  9. மருந்து சாப்பிட்டால் நாலு நாளில் குணமாகும் ,சாப்பிடாட்டி மூன்று நாளில் குணமாகும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்குண்டு .அந்த எண்ணம் தரும் நம்பிக்கையை மருந்து மாத்திரை தர முடியாது என்பதை அனுபவத்தில் உணர்கிறேன் !

    பதிலளிநீக்கு
  10. வலியுடன் வாழ்ந்து பழகி விட்டீர்கள் அது உங்களை ஒன்றும் செய்து விட முடியாது

    பதிலளிநீக்கு
  11. அப்போ முதுகு வலிதான் உங்கள் முதல் பெண்டாட்டி. அதை எப்படி கைவிட முடியும்?

    பதிலளிநீக்கு
  12. எதையும் தாங்கும் மனோபலம் வேண்டும். இருந்தால் தாங்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. நோயைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்றால் நோயை விரட்டிவிடலாம் என்பது தெரிகிறது . வலியை கண்டு பயப்படாத மனவலிமையும் உங்களிடம் இருப்பது மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு
  14. உடலில் ஏற்படும் வலி, மனதில் ஏற்படும் வலியை விட ஒன்றும் பெரிதில்லை. தாங்கள் அதை புரிந்துகொண்டு வலியோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். தங்களின் மன வலிமைக்கு ஒரு சபாஷ்!

    பதிலளிநீக்கு
  15. வலியோடு வாழ்ந்து எங்களுக்கும் வழிகாட்டுகின்றீர்கள்..

    வேதனையை தோற்கடித்து விட்டீர்கள்..

    திரும்பவும் ஒரு பாடம்!..

    பதிலளிநீக்கு

  16. @ கில்லர்ஜி
    அதற்காக நோய் வந்தால் ஓய்வு எடுக்காமல் இருக்கக் கூடாது. தேவையற்ற பயம் கூடாது என்பதே பதிவின் முக்கிய நோக்கம்

    பதிலளிநீக்கு

  17. @ கில்லர்ஜி
    வீழ்வேனென்று நினைத்தாயோ படித்ததற்கு நன்றி. அந்த நிகழ்வுக்குப் பின் மனதளவில் தைரியம் கூடிவிட்டது என்பதும் உண்மை.வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  18. @ கரந்தை ஜெயக்குமார்
    உடலில் உபாதைகள் தோன்றும் போது மனது பாதிப்படைவது நிச்சயம். ஆனால் போதிய மருத்துவம் எடுக்கும் போது மன வலிமையோடு இருத்தலும் அவசியம். வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    என் அனுபவப் பகிர்வே நம்மை மனதளவில் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தானே.வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  21. @ ஸ்ரீராம்
    உபாதைகளைப் பற்றிக் கவலைப் படத்தொடங்கினால் வேறு எதிலும் மனம் லயிக்காது. நான் அடிக்கடி கூறிக் கொள்வது இதுதான்”THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  22. @ ஊமைக் கனவுகள்.
    நான் திருச்சியில் ஏறத்தாழ 25 ஆண்டுகள் இருந்திருக்கிறேன் THAT IS BESIDES THE POINT. திருச்சி பற்றி குறிப்பிட்டு இருப்பது நிகழ்வுகள் நடந்த இடத்தை குறிப்பதற்காகவே. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதன் உட்பொருளை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிந்தேன். நன்றி ஐயா. By the way நீங்களும் திருச்சியா வருகைக்கு நன்றி ஐயா,

    பதிலளிநீக்கு

  23. @ மகேஸ்வரி பாலசந்திரன்
    முதல் வருகைக்கு நன்றி மேடம். எழுத்து இலக்கை அடைந்து விட்டால் மக்ழ்ச்சியே.

    பதிலளிநீக்கு

  24. @ திண்டுக்கல் தனபாலன்
    நான் உங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதில் மனதைரியத்தில் நான் பாடம் கற்கவேண்டும் முயற்சி திருவினையாக்கும். உங்கள் பன்முக திறமைகள் வெளிப்பட உதவும். வருகைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  25. @ பகவான் ஜி
    அதற்காக நோய்க்கு மருந்தே கூடாது என்று அர்த்தமல்ல. வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  26. @ டி.என்.முரளிதரன்
    That which can not be cured must be endured தைரியமாக எதிர்கொள்வோமென்றுடான் சொல்கிறேன். வருகைக்கு நன்றி முரளி.

    பதிலளிநீக்கு

  27. @ டாக்டர் கந்தசாமி
    முதல் பெண்டாட்டியைப் பிடிக்கவில்லையே. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  28. @ எதையும் தாங்கும் மனோபலம் வேண்டும். அதைத்தானே மேடம் நானும் சொல்ல வந்தேன். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  29. @ கோமதி அரசு.
    விரட்டி விடுகிறோமோ இல்லையோ, அஞ்சாது இருத்தல் அவசியம் வருகைக்கு நன்றி மேடம். உங்கள் கால் வலி குண மாயிருக்கும் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு

  30. @ வே.நடன சபாபதி
    வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  31. @ துரை செல்வராஜு
    வலிகளும் வேதனைகளும் அவ்வப் போது வந்து சோதிக்கவே செய்கிறது. பாராட்டுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  32. தங்கள் மனவலி(மை)யே உடல்வலியைத் தாங்கும் சக்தியைத் தந்துகொண்டிருக்கிறது. இனியும் இது தொடரட்டும். துன்பத்தில் சோர்பவர்களுக்கு, என்னைப் பார், நானும் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தவன்தான் அல்லது அனுபவித்துக்கொண்டிருப்பவன்தான் ஆனாலும் சோர்கிறேனா பார் என்று துணிவு தரத்தக்க பதிவு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  33. @ கீத மஞ்சரி
    பதிவின் நோக்கத்தைத் துல்லியமாகக் கணித்து பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  34. என் கால்வலியை பற்றி விசாரித்தமைக்கு நன்றி சார்.
    மறுபடியும் கீழே விழுந்து அதேகாலில் அடி. டாகடரிடம், ஊசி, வலி ஆயின்மெண்ட் என்று ஓடுகிறது. நானும் அதைப்பற்றி கவலைப்பாடமல் ஊருகளுக்கு போய் கொண்டு குடும்பவிழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். வெளியூரில் தான் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. எனக்கும் இந்த முதுகுவலி பிரச்சினை உண்டு. (குறிப்பாக எனது இருசக்கர வண்டியை (TVS 50 XL) அதிகமாக ஓட்டினால் வரும்) வலி அதிகமாகும் நாட்களில் தலைக்கு ஏதும் வைத்துக் கொள்ளாமல் கட்டாந்தரையில் பாய்போட்டு மல்லாக்க படுத்து
    கால்களை நீட்டி ஓய்வெடுப்பேன். இப்போது இங்கே நீங்கள் குறிப்பிட்ட,

    // இந்த வயதில் வலி வரும்போது கூடியவரை ஓய்வு எடுக்கிறேன் மல்லாந்து படுத்துக் கொண்டுஒவ்வொரு காலாக உயரே எழுப்புவேன். 70 டிகிரி வரை காலை நிமிர்த்த முயன்றால் எழுந்து நடமாடத் தொடங்கி விடுவேன் இடுப்பு தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக மெதுவாகக் குனிந்து நிமிர்வேன் //

    என்ற இந்த பயிற்சி எனக்கு ஒரு கூடுதல் ஆலோசனை. செய்து பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு