Friday, September 20, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே......

        நெஞ்சு பொறுக்குதில்லையே...
             -------------------------- 

  
தினமும் காலையில் நடை பயில அருகிலிருக்கும் பூங்காவுக்குச் செல்வது வழக்கம். முன்பே ஒரு முறை எழுதிய நினைவு. அங்கு ஒரு எறும்புப் புற்றிருக்கிறது. சில நாட்களில் அருகில் வசிப்போர் சிலர் அந்தப் புற்றுக்குப்  பாம்புப் புற்றென நினைத்துப் பால் ஊற்றுவது கண்டு நெஞ்சம் புழுங்கும் ஆயிரக்கணக்கில் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றி ஏங்குவது தெரிந்தும்  இல்லாத பாம்புக்குப் பால் வார்க்கிறொம் என்று கூறி மண்ணில் பாலை விரயம் செய்வது எவ்வளவு அறியாமை-. மன்னிக்கவும் அறியாமை அல்ல நம்பிக்கையின் விளைவு- அது என்று பலரும் கூறலாம். இந்த மாதிரி நம்பிக்கையைத் தவறு என்று கூறப் போனால் நம்மை முட்டாள் என்று நினைப்பவரே அதிகம். அண்மைக் காலத்தில் அந்த புற்று இருக்கும் இடத்தில் ஒரு நாகரின் சிலை பிரதிஷ்டை ஆயிற்று, பாம்புக்குப் பால் ஊற்றுவோர் எண்ணிக்கை கூடியது. பாலுடன் பழவகைகளுடனும்  நைவேதனப் பிரசாதங்களுடனும் பூஜை களை கட்டத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தால் ஒரு நாகர் சிலை இருந்த இடத்தில் ஒரு கல் தளம் நிறுவி அதன் மேல் நான்கு சிலைகள் பிரதிஷ்டை ஆகி இருக்கின்றன. என்ன சிலைகள் என்று இன்னும் அருகில் சென்று பார்க்கவில்லை, இது நாகர் , இது தேவி, இது பெருமாள் , இது அடியார் என்று சொன்னால் கேள்வியா கேட்கப் போகிறோம். அப்படியே ஏதாவது கேட்கப் போய் பிறருக்கு கேடு விளைக்காத எந்த நம்பிக்கையுமே நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் என்று அறிவுறுத்தப் படுவோம். யார் எந்தப் பாம்புக்குப் பால் ஊற்றினால் என்ன யர்ர் யாரை எப்படி வழிபட்டுப் புளகாங்கிதம் அடைந்தால் என்ன.... நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை என்று ஒதுங்குவதே மேல் என்று தோன்றினாலும் இந்தப் பாழும் மனம் கேட்பதில்லை.ஒரு வேளை நக்கீரன் பரம்பரை என்ற நினைப்போ.?யார் என்ன சொன்னாலும் மனசுக்குப் பட்டதைச் சொல்லியே இத்துணை ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்டது. இனி இருக்கப் போகும் நாளில் என்னை ஏன் மாற்ற வேண்டும்....?
கோயில்கள் எங்ஙனம்  உருவாகிறது  என்று பூங்கா புற்று வழிபாடு தெரிவிக்கிறது.  இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது  யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

நாகர் சிலை
 

பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு வந்து அவன் பாணியில் ஒரு பாட்டு            
       பாரதி மன்னிப்பாராக
       -------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

மந்திரம் வேதம் என்பார் சொன்ன
மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை
தாரீர் விளக்கமென்றால்  துச்சமெனவே
மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார்  ( நெஞ்சு )

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ
காரணங் கேட்டே விளங்கியதிங்கு
யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார்   ( நெஞ்சு )

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்
துடி துடித்து துஞ்சி மடிவோர் துயர்
தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார்   ( நெஞ்சு )


சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு
வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே
பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி
மணி அடித்துத் தீபம் காட்டுவார்             ( நெஞ்சு )

சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்
சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்   ( நெஞ்சு )

தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்
சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்கொண்டதை வினவினால் அது
முன் ஜென்மப் பாவ பலன் என்பார்             ( நெஞ்சு )  


எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்
இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்
சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்
தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.?  ( நெஞ்சு )
-------------------------------------------

  


                         

27 comments:

 1. வீட்டு வாசலில் நிற்கும் மாட்டுக்கோ, நாய்க்கோ, கரையும் காகத்துக்கோ உண்ண எதுவும் கொடுக்காதவர்கள்தான் புற்றில் பால் ஊற்றுபவர்கள்.

  ஜீவகாருண்யத்தால் அமைந்தது அல்ல இந்த முட்டாள்த்தனம்.

  இந்த பால் வார்ப்பு பிரதிபலன் எதிர்பார்த்து ஊற்றப்படுவது. பலனை எதிர்பார்த்துச் செய்யும் எந்த வேலையும் நேர்மையற்றது. சுயலாப நோக்கமுடையது.

  அறியாமையால் உருவாகும் இந்தப் புற்று, கொடிய நாகம் வசிக்கும் புற்றைக் காட்டிலும் ஆபத்தானது.

  இந்த அறியாமைக்கு மறைமுகக் காரணம் புரையோடிய நமது கல்வியும், நமது புராதனமான ஜீன்களுமே.

  ReplyDelete
 2. // யார் என்ன சொன்னாலும் மனசுக்குப் பட்டதைச் சொல்லியே இத்துணை ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்டது. இனி இருக்கப் போகும் நாளில் என்னை ஏன் மாற்ற வேண்டும்....?//

  இத்தனை நாள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இனிமேலும் அப்படியே இருப்பது சரியல்ல. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதே வயதானவர்கள் செய்ய வேண்டியது.

  ReplyDelete
 3. யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

  அப்படியே அருள்வாக்கும் சொல்லி ஆசிரமும் அமைக்காமல்
  இருந்தால் சரி..!

  ReplyDelete
 4. இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.//

  ஆம், சொன்னலும் சொல்வார்கள்.

  ஒரு படத்தில் விவேக் சொல்வார் மைல்கல்லுக்கு மஞ்சள் தடவி அதையும் சாமி ஆக்கி விடுவார்கள் என்று.

  நான் பெங்களூர் வந்த போது நிறைய மரத்தடிகளில் இது போல நாகங்கள் நிறைய இருந்ததைப் பார்த்தேன்.
  நம் ஊரிலும் அரசும், வேம்பும் சேர்ந்து இருக்கும் இடத்தில் நாகர் வைத்து வழிபடுவார்கள்.

  ReplyDelete
 5. அறியாமையில் மூழ்கிய மனிதன் என்று தன்னை உணரப் போகின்றார் என்பது தெரியவில்லை ஐயா

  ReplyDelete

 6. @ திண்டுக்கல் தனபாலன்
  @ சுந்தர்ஜி
  @ டாக்டர் கந்தசாமி
  @ இராஜராஜேஸ்வரி
  @ கோமதி அரசு
  @ கரந்தை ஜெயக்குமார்
  அனைவரது வருகைக்கும் நன்றி. கல்வி என்பதனை நாம் கற்பதன் துவக்க மூலம் ஜீன்கள் வழிவழியாய் வருவது என்று
  பொருள் கொள்கிறேன் சுந்தர்ஜி,
  இந்த அருள் வாக்கு விஷ்யம் எனக்குத் தோன்றவில்லையே மேடம் இராரா. தெரிந்திருந்தும் யாரும் திருந்தக் காணோம் யார் எப்படிப் போனால் என்ன நம் மேல் விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்னும் பாவமே நம்மில் பலருக்கும் . அறியாமை என்று சொல்பவருக்குத்தான் அந்தப் பட்டம் கொடுக்கப் படும் நான் இம்மாதிரி வழிபாடுகளை தினமும் செய்யும் வழிபாடுகளின் எக்ஸ்டென்ஷன் என்றுதான் நினைக்கிறேன்ஜெயக்குமார்சார். டாக்டர் ஐயா, மனம் அறிவு இரண்டுக்கும் நடக்கும் போட்டியில் அறிவு தோற்கும் மனம் வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியாதா. கொடுமையான விஷயம் என்பதாலேயே கொந்தளிப்பில் எழுதிய பதிவு இது டிடி சார்.

  ReplyDelete
 7. நம்பிக்கைகள் சிலருக்கு தேவையாக உள்ளது. வேறு சிலருக்கு அது மூடத்தனமாக தெரிகிறது.

  தெய்வம் ஒன்றுதான் வழிபாட்டில்தான் பேதங்கள் எல்லாம். ஆனால் சில மதங்களில் - நான் அந்த மதத்தைச் சார்ந்தவன் அல்ல என்பதால் கூறுவதாக நினைக்க வேண்டாம் - கணக்கிலடங்கா தெய்வங்கள். ஒரு சிலர் நாங்க அத கும்பிடமாட்டோம் எங்க குலதெய்வம் எங்களுக்கு முக்கியம் என்றுகூட கூறுவதை கண்டிருக்கிறேன்.

  மன நிம்மதிக்குத்தான் தெய்வத்தை நாடுகிறோம். மனதார வேண்டுகிறோம், கிடைக்கும் என்கிற நம்பிக்கையில். கிடைத்துவிட்டால் பால் என்ன கையிலிருக்கும் அனைத்தையுமே காணிக்கையாக அளித்துவிடுகிறார்கள். கிடைக்காவிட்லும் சாமிக்கு குடுக்கறேன்னு சொன்னத குடுக்காததால்தால் கிடைக்கல போலருக்குன்னு நினைச்சிக்கிட்டு காணிக்கை செலுத்துறாங்க. ஆனா காணிக்கையெல்லாம் சாமிக்குத்தான் போவுதா இல்ல சாமிய சுத்தியிருக்கறவங்களுக்கு போவுதான்னு யாரும் நினைக்கறதில்லை.... நீங்க பால் வீணாவுதேன்னு கவலைபடறீங்க கிலோ, கிலோவா தங்கம் காணிக்கையாக செலுத்தப்படுவதும் அதை அப்படியே வங்கி லாக்கர்களில் பாதுகாக்கப்படுவதும் எவ்வளவு பெரிய விரயம்? இதையெல்லாம் சொல்லப் போனால் இவன் நாத்திகன் என்பார்கள். எதற்கு வம்பு?

  ReplyDelete
 8. இத்தனை நாள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இனிமேலும் அப்படியே இருப்பது சரியல்ல. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதே வயதானவர்கள் செய்ய வேண்டியது.//

  இது என்ன மாதிரியான ஆர்க்யுமென்டோ தெரியல. வயசாய்ட்டா உணர்வுகள் வற்றிவிடுமா என்ன? அப்பவும் நெஞ்சு நெஞ்சுதாங்க... சில சமயங்கள்ல பொறுத்துக்காது!

  ReplyDelete

 9. @ டி.பி.ஆர் ஜோசப்
  நான் பால் விரயமாகிறதே என்று கவலைப் படுவதில்லை. நம்பிக்கை எனும் பெயரில் அறிவினைக் கை விடுகிறார்களே என்னும் ஆதங்கம்தான்.சுந்தர்ஜி கூறியதுபோல் எதையோ எதிர்பார்த்துக் கடவுளிடமே பேரம் செய்கிறார்களே என்னும் வருத்தம்தான் எழுத வைத்தது.

  ReplyDelete
 10. சிற்றெறும்புப் புற்றில் பாம்பு குடியிருப்பதாயிருந்தாலும் ஊற்றும் பால் அந்தப் பாம்புக்குப் போய்ச்சேர்வதில்லை என்பதை எத்தனைப் பேர் அறிவார்கள்? மண்ணில் ஊற்றும் பாலை பிளவுபட்ட நாக்கொண்ட பாம்பால் நக்கியும் குடிக்க இயலாது என்னும் பொது அறிவும் இல்லாதவர்களிடம் பகுத்தறிவை எதிர்பார்ப்பது வீணே. நியாயமான மனக்கொந்தளிப்பு... மனத்துக்குள்ளிருந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் எண்ணத்தை எழுத்தால் வடித்து ஏனையோரை சிந்திக்கவைத்தக் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 11. //இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.//

  நாட்டில் பல தல புராணங்கள் கதை இப்படித்தான் இருக்கிறது. ஒரு சில; இடங்களில் யாரேனும் ஒரு கவிராயரை வைத்து இந்திரன் வந்தான், சந்திரன் வந்தான், இந்த ஊர் குளத்தில்தான் சாபவிமோசனம் அடைந்தான் என்று எழுதி வைத்து விடுகிறார்கள். இதனால் பெரிய பெரிய திருக்கோயில்களில் தோன்றும் உண்மையான மெய்ஞானம் உணர்தல் இங்கு தோன்றுவதில்லை.

  ReplyDelete
 12. அதை ஒரு அறிவுக்குப் புறம்பான
  நிகழ்வாக எடுத்துக் கொண்டு
  நாம் கடக்கப் பழகினால் நமக்கு நல்லது
  நமக்கு எது சரியெனப் படுகிறதோ
  அந்த வழியில் நாம் செல்வதே நமக்கு நல்லது
  போதை போட்டால்தான் பாட்டு வரும் என
  ஒரு கவிஞன் நம்பினால் பாட்டு வந்தால்
  அது அவனைப் பொருத்தமட்டில் சரிதான்
  அப்படித்தான் பாலூற்றினால் தெய்வம் அருளும்
  என நம்பினால் அவனைப் பொருத்தவரை
  அது சரி.அவனுக்கு நம்பிக்கை வருகிறதே

  நாம் ஒரு நிலையில் இருந்து கொண்டு
  அடுத்த நிலையை நம் கண்ணோட்டத்தில்
  பார்ப்பதால் வருகிற நெருடல் இது
  என நினைக்கிறேன்

  இதைக் கூட நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
  என்பதில்லை.ஏனெனில் இது என் கருத்து மட்டுமே

  ReplyDelete

 13. @ கீத மஞ்சரி
  பாம்புக்குப் பால் ஊற்றுவது கண்டு எழுதிய பதிவென்றாலும் பகுத்தறிவுக்கு மிஞ்சிய பல செயல்களும் மனசில் நெருடல் ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை
  @ தி. தமிழ் இளங்கோ
  ஒரு சில தல புராணங்கள் மட்டுமல்ல சார், நம்பவே முடியாத நிகழ்வுகளும் நம்பிக்கை என்றபெயரி ல் கதைக்கப் படுகின்றன
  @ ரமணி
  அறீவுக்குப் புறம்பான செயல்கள் நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன என்று எல்லோரும் விட்டுவிடுவதால்தான் பலரும் சிந்திக்காமலேயே மூட நம்பிக்கைகளில் தொடர்ந்து மூழ்கி வருகின்றனர். நாம் நம் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதை தெளிவு படுத்தினாலாவது சிலராவது சிந்திக்கத் துவங்குவார்களா என்ற நப்பாசைதான் ரமணி சார்.
  .

  ReplyDelete
 14. காலப் போக்கில் இவை எல்லாம் குறைந்து விடும்.

  ReplyDelete
 15. முதலில் நான் லேட்டாகத் தான் வருகிறேன்.மன்னிக்கவும்.கொஞ்சம் பயணக் களைப்பினால் என்னால் பதில் எழுத முடியாமல் போய் விட்டது. ஆஅனால் படித்து விட்டேன் அன்றே.

  உங்கள் கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன். பாம்பின் மேல் பக்தி வைத்தாவது அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அதை சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து. இல்லையென்றால் நம்மவர்கள் பாம்பை extinct லிஸ்டில் இந்நேரம் சேர்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
  எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களுக்கு ஒரு மனத்திருப்தியைக் கொடுக்குமென்றால்
  கொஞ்சமாக பாலை ஊற்றி அவன் நிம்மதியடையட்டுமே என்று தான் எனக்குத் தோன்றும்.
  இது என்னுடைய கருத்து. அவ்வளவு தான்.

  ReplyDelete

 16. @ T.N.MURALITHARAN
  குறையும் என்பதும் ஒரு நம்பிக்கை

  @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  பதிவிடுவதின் நோக்கமே பலவித கருத்துக்களை தெரிந்து கொள்ளவே. பாம்பு பால் குடிக்க முடியாது என்று ஒருவரின் கருத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 17. GMB சார்,

  பாம்பு பால்குடிக்க முடியுமா இல்லையா என்பதல்லவே உங்கள் பதிவு. அறியாமையைப் பற்றியும், பாலை விரயமாக்குகிரார்களே என்பதால் தானே நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிறீர்கள்.

  நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.... நீங்கள் அறியாமை என்று சொல்வது வேறொருவருக்கு மிகுந்த நம்பிக்கையையும், மனத் திருப்தியும் கொடுக்கலாம் என்கிறேன். அவர்களுக்குத் திருப்தியைத் தருகிறது என்றால் செய்து விட்டுப் போகட்டுமே. பாம்பு மட்டுமா புற்றில் இருக்கிறது. எத்தனையோ ஜீவராசிகள்.....
  அவைக்கு உணவும் கிடைக்கும், பால் ஊற்றியவருக்கு திருப்தியும் கிடைக்கும் என்பது என் கருத்து.
  நம்பிக்கை தானே வாழ்க்கை GMB சார்.

  ReplyDelete

 18. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  இந்த அறியாமையை நம்பிக்கை என்னும் போர்வையில் சகித்துக் கொள்ள முடியாததால்தான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்றேன். பால் ஊற்றுவதில் மட்டுமல்ல இன்னும் என்னென்னவோ செயல்களில் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் உழல்கிறார்களே அவற்றின் ஒரு மாதிரி எடுத்துக்காடே பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது. பதிவிலேயே என்ன மாதிரி எண்ணங்களை இது தோற்றுவிக்கும் என்றும் எழுதி இருக்கிறேனே. படித்தீர்கள்தானே. மீள்வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 19. ///நாம் ஒரு நிலையில் இருந்து கொண்டு
  அடுத்த நிலையை நம் கண்ணோட்டத்தில்
  பார்ப்பதால் வருகிற நெருடல் இது/// என்று திரு. ரமணி சார் சொன்னதைத் தான் நானும் வழிமொழிகிறேன். எனது எண்ண ஓட்டமும் அதுவே..
  ஒருவரின் நம்பிக்கையை நான் அறியாமை என்றோ மூட நம்பிக்கை என்றோ நினைப்பது இல்லை.
  இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
  மறு மொழியளிக்க சந்தர்ப்பம் அளித்ததற்கு நன்றி GMB சார்

  ReplyDelete
 20. //அறியாமை ஒரு பிணி.//

  அறிந்தமைக்கும் அறியாமைக்கும் ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?.. ஒருவர் அறிந்தது இன்னொருவருக்கு அதுபற்றி அறியாததால் அது அவருக்கு அறியாமையாய் இருக்கிறது. இன்னொருவர் அறிந்தது இவ்வண்ணமே மற்றொருவருக்கு அறியாமையாய் இருக்கிறது.

  அறிந்தவை என்று எண்ணிக் கொண்டிருக்கிற பலவும் அதுபற்றிய முழுமையான அறிவின்மையால் அறிந்தவற்றிலும் அறியாமை எச்சமாய் முழுமை பெறாதிருக்கிறது. ஒன்று பற்றி முழுமையாக அறிந்துவிட்டோம், அதுபற்றி அறிவதற்கு இனி வேறெதுவும் எல்லை என்று சொல்ல முடியாதிருப்பது தான் எல்லா அறிந்தவற்றினூடேயும் தொக்கி நிற்கின்ற அவற்றிற்கான சிறப்பு.

  இதுவே கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் நிலை.

  எதைப்பற்றி நாம் முழுமையாக அறிந்து முடித்தோம் என்று எதுபற்றியும் சொல்ல முடியாதிருப்பது தான் படைப்பின் இரகசியம்.

  அறியாமை குறைப்பாடில்லை; எல்லாருக்கும் எல்லா அனுபவமும் கிடைத்து எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்மையால்.
  அதனால் அது பிணியுமில்லை.

  தான் அறிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை தான் அறிந்தவாறே இன்னொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் அறியாமை.

  ReplyDelete
 21. இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தாம் அறியாமை என்கிற வார்த்தை எவ்வளவு சுலபமாக எத்தனை தடவைகள் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது! :))

  ReplyDelete

 22. 2 ஜீவி
  / அறிந்தமைக்கும் அறியாமைக்கும் ஏதாவது அளவுகோல் இருக்கிறதா.?/இதெல்லாம் ஒரு ஒப்பீடு முறையில் சொல்லப் படுவது. ஒருவர் நிலையில் இருந்து நினைக்கும் போது அறியாமை இன்னொருவருக்கு அறிவு மிக்க செயலாகத் தோன்றலாம் every one is entitled to his opinion. மாற்று அபிப்பிராயங்கள் இருக்கலாம் என்று தெரிந்ததால்தான் பதிவில் எழுதினேன். வித்தியாசமான கருத்துக்களும் அதையே தெரிவிக்கின்றன. எந்த கருத்தும் பொதுவாகவும் , மனம் புண்படாததாகவும் இருப்பதே முக்கியம். அளவு கோல் கொண்டு நிறுத்தி எழுத முற்பட்டால் எதையும் எழுத முடியாது. உங்கள் பின்னூட்டம் இன்னொரு பலகணியைத் திறக்கிறது. கருத்துக்கு நன்றி ஜீவி சார்.

  ReplyDelete
 23. //ஒருவர் நிலையில் இருந்து நினைக்கும் போது அறியாமை இன்னொருவருக்கு அறிவு மிக்க செயலாகத் தோன்றலாம் every one is entitled to his opinion.//

  இந்த வரிகளில் எனக்கும் மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.

  அறியாமை அறியாமை என்று அறியாமை ஜபம் உச்சத்திற்குப் போகவே--

  //தான் அறிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை தான் அறிந்தவாறே இன்னொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் அறியாமை.//

  -- மேலே குறிப்பிட்டிருக்கும் அறியாமை குறித்து நான் கொண்டிருக்கும் அபிப்ராயத்தைச் சொன்னேன். அவ்வளவு தான்.
  இந்த அபிப்ராயம் கூட பிறர் அபிப்ராயங்களை கெளரவிப்பதற்காக நான் கொண்டிருக்கிற என்னளவிலான ஒரு வரையறையே.

  அதே மாதிரி--

  எத்தனையோ விஷயங்கள் இறைந்து கிடக்கின்றன. எது ஒன்றையும் பற்றி முழுமையாக அறிந்து விட்டோம் என்று எவராலும் சொல்ல முடியாது.
  அறியவும் முடியாது என்பதே இறுதி பதில். ஏனெனில் எல்லா விஷயங்களும் அததன் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்து கொண்டே இருப்பவை. அதன் இன்றைய நிலையே இறுதி நிலை அல்ல. வளர்ச்சியின் இறுதிநிலை என்று எதுவும் இல்லாதிருப்பது தான் படைப்பின் இரகசியம்.

  எதை எழுதினாலும், எதைச் சொன்னாலும் இன்னும் எழுதவும் சொல்லவும் பாக்கி இருக்கிறதே
  என்று உணருகின்ற உள்ளம் கொண்டவர்கள் இயற்கையின் இந்த நியதிகளைப் புரிந்து கொண்டவர்களாய் இருப்பார்கள்.

  ReplyDelete