வெள்ளி, 13 செப்டம்பர், 2013

விநாயகனே வினை தீர்ப்பவனே


                    விநாயகனே வினை தீர்ப்பவனே
                   ---------------------------------------------



விநாயகச் சதுர்த்தி பற்றிப் பல பதிவுகள் வந்து விட்டன. ஏறக்குறைய எல்லாமே விநாயகர் வழிபாடு பற்றியும் அதனால் விளையும் பலன்கள் குறித்தும் இருக்கின்றன. பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் அவரது ரூப விளக்கங்கள் குறித்தும் அழகான படங்களுடன் இருக்கின்றன. என் பங்குக்கு நான் ஒரு , அதிகம் பேசப் படாத ஒரு கதையுடன் என் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்

விநாயகப் பெருமான் ஒரு முறை தன் மூஞ்சூறு வாகனத்தில் ஏறி இந்திரன் சபைக்குப் போய்க் கொண்டிருந்தாராம். இவர் உடல் எடை தாங்காமல் மூஞ்சுறு தடுமாற  இவர் கீழே விழுந்து விட்டாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரிக்க இவர் கோபமடைந்து தன்னுடைய தந்தங்களில் ஒன்றைப் பிய்த்து சந்திரனைத் தாக்கினாராம். அதனால்தான் இவருக்கு ஏக தந்தன் என்னும் பெயர் வந்ததாம்.
விநாயகர் தோற்றம் பற்றியும் பல கதைகள் உண்டு பரமேஸ்வரனும் பார்வதியும் கைலையில் மகிழ்ந்திருந்த காலத்தில் தேவர்கள் தாங்கள் தொடங்கும் எல்லாக் காரியங்களும் தடை பட்டுப் போகின்றன என்று கூறி வருந்தினர். சிவபெருமான் ஆவன செய்வதாகக் கூறினார். பின் பார்வதியும் பரமனும் யானை உருத் தாங்கி காடுகளில் மகிழ்ந்திருந்தனர். அதன் பலனாக அவர்களுக்கு மனித உடலுடனும் யானைத் தலையுடனும் ஒரு குழந்தை பிறந்தது அதுவே தேவர்களின் எல்லாச் செயல்களுக்கும் விக்னம் வராது காத்தது என்பது ஒரு கதை

ஒரு சமயம் பார்வதிதேவி குளிக்கச் செல்லும்போது தன் உடலிலிருந்து ஒரு அழுக்கை உருட்டி உருக் கொடுத்து அதைக் காவலுக்கு நிற்கச் சொன்னார். பரமசிவனுக்கும் வழி கொடுக்காத அந்த உருவத்தின் தலையை ஈசன் கொய்தார்.பிறகு தன் தவறு தெரிந்து தன் பூதகணங்களிடம் முதலில் எதிர்ப்படும் எந்த ஜீவராசியின் தலையாவது கொண்டுவரப் பணித்தார். அவர்கள் கொண்டு வந்த யானைத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார். பிறகு குளித்து வெளியில் வந்த பார்வதி ‘இந்தப் பிள்ளை யார் ‘ என்று கேட்டாராம். அது முதல் இவருக்குப் பிள்ளையார் என்று பெயர் வந்ததாம். சிவனுடைய பூத கணங்களுக்குத் தலைவனாக நியமிக்கப் பட்டார்/ அதனால் கணபதி ( கணங்களுக்கு அதிபதி) என்று பெயர் வந்தது.
விநாயகரைத் தென்னாட்டில் திருமணம் ஆகாத பிரம்மசாரி என்று கூறுவர். கார்த்திகேயனை வள்ளி தேவானை மணாளன் என்பர். ஆனால் வட நாட்டில் கணேசருக்கு இரு மனைவி. முருகன் பிரம்மசாரி.
ஓம் என்னும் எழுத்துப்போல் இருப்பதால் ஓங்காரஸ்வரூபன் என்றும் பெயர்.
கதைகள் எப்படி இருந்தால் என்ன. ?மனித நம்பிக்கையே முக்கியம். கதைகளுள் இருக்கும் சாரத்தை மட்டும் கவனிப்போம்.. ஏழை எளியவரும் நினைத்த மாத்திரமே அருள் பாலிக்கும் கடவுள் என்பது நம்பிக்கை

தென் நாட்டில் விநாயகர் வழிபாடு அவரவர் வீட்டில் அவரவர் சக்திக்கேற்றபடி நடந்து வந்தது. மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகாவிலும் கணபதி வழிபாடு பிரசித்தம். கடவுள் நம்பிக்கையைப் பயன் படுத்தி மக்களை ஒன்று திரட்டி , அவர்களுக்குள் சுதந்திர எண்ணங்களை எழுப்பியவர் லோகமான்ய பால கங்காதரத் திலகர். கூட்டுப் பிரார்த்தனை என்று கூறி மக்களை ஓரிடத்தில் கூட்டி சுதந்திர உணர்வை indoctrinate  செய்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் துவங்கிய இந்த வழிபாட்டு முறை வளர்ந்து கூட்டு கணேச வழிபாட்டுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. தற்காலத்தில் அது தமிழ் நாட்டிலும் புகுந்து விட்டது. இதில் ஒரு சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன என்றால் பெரும்பாலான கூட்டு வழிபாடுகளை முன் நின்று நடத்துபவர்கள் ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பது தெரிகிறது.
மஹாராஷ்டிரத்தில் சுதந்திர உணர்வினை ஊட்டத் துவங்கிய இந்தக் கம்யூனிடி வழிபாடுகள் மத ஆதிக்கத்தை தூண்ட உபயோகப் படுத்தப் படுமோ என்னும் அச்சம் எழுகிறது.




ஆண்டவனிடம் அடைக்கலம் அடைந்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவேண்டும். எல்லாம் அறிந்தவன் நாம் கேட்டுத்தான் கொடுக்க வேண்டுமா. மனம்சஞ்சலப் படும்போது அதிலிருந்து மீள சக்தி கொடு என்றால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது

“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங்கலந்துனக்கு நான் தருவேன்; கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ் மூன்றும் தா.இது கடவுளிடம் பேரம் பேசுவது போலல்லவா இருக்கிறது. நாம் உண்ண விரும்பியதைக் கடவுளுக்கு என்று படைத்து நாமே உண்பதும், நமக்கு வேண்டியது நடந்தால் காணிக்கை என்று உண்டியலில் பொன்னும் பண்மும் போடுவதும் கடவுளைக் குறித்த பக்குவப் பட்ட மனம் இல்லாதிருப்பதையே காட்டவில்லையா.?பண்டிகைகளும் விழாக்களும் உற்றமும் சுற்றமும் கூடி மகிழ என்பதால் உண்டு களிப்பதில் தவறிருக்காது. ஆனால் அதே சமயம் இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது அதைவிடச் சிறந்ததல்லவா.?.



  .    



விநாயகர் அகவல் தினமும் பாராயணம் செய்தால் நன்மைகள் பல பயக்கும் என்பது நம்பிக்கை. என்னுள் எழும் கேள்வி இதுதான். அகவலில் முதல் பதினைந்து வரிகளில் விநாயகனைப் போற்றியும் விவரித்தும் கூறப்பட்டிருக்கிறது. எஞ்சியுள்ள வரிகளில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் சாதாரண மனிதருக்குப் புரியாதது. அங்கும் இங்கும் படித்துப் பொருள் தெரிந்து கொண்டாலும் அதில் வேண்டப் படும் விஷயங்கள் எல்லாம் வெறுமே யூகித்து அறிந்து கொள்ளக் கூடியதே. ஆண்டவனிடம் நாம் வேண்டி பெறும் வரங்களுக்கு நம்மைப் பாத்திரமாக்க வேண்டும் என்றால் நாமும் அதன் பொருட்டு சிரமம் எடுத்துக் கற்க வேண்டும்.





சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி
வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,
இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி
உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி
அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.

பொருள் தெரிகிறதோ இல்லையோ, வேண்டுபவற்றைப் பெற நாம் முயற்சிகள் எடுக்க வேண்டாமா? ஏதுமே செய்யாமல் ஏதேதோ சக்திகளைக் கேட்கிறோம். இவற்றை யெல்லாம் தகுந்த குருவின் மூலம்தான் கற்க வேண்டும் ( குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென ) என்று  கேட்டிருக்கிறேன். அப்படி முடியாவிட்டால் வேண்டுவதில் என்ன லாபம். ?
விநாயகர் அகவலை என் மனைவியின் தூண்டுதல் பேரில் மனனம் செய்து இருக்கிறேன். தினமும் இரண்டு மூன்று முறையாவது சொல்கிறேன். எப்போது என்று கேட்கிறீர்களா. இரவு படுத்தால் உறக்கம் வராதபோது மனம் ஏதேதோ எண்ணும்போது “ உனக்குத் தெரிந்த சுலோகங்களைச் சொல்லிக் கொண்டே இரு. தன்னால் உறக்கம் வரும் என்று என் மனைவி கூறி இருக்கிறாள். பலனளிக்கிறது சிலரைப் போல் உறக்கம் வருவிக்க நான் எந்த மாத்திரையும் சாப்பிடுவதில்லை.
கடவுளர் பற்றிய கதைகளில் சொல்லப் பட்ட பல சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் சக்கையை பிரதானமாக எண்ணுகிறோமோ என்னும் எண்ணத்தின் வெளிப்பாடே இப்பதிவு.
,


.





.

  






 
 
 

10 கருத்துகள்:

  1. நல்ல பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆண்டவனிடம் அடைக்கலம் அடைந்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவேண்டும். எல்லாம் அறிந்தவன் நாம் கேட்டுத்தான் கொடுக்க வேண்டுமா. மனம்சஞ்சலப் படும்போது அதிலிருந்து மீள சக்தி கொடு என்றால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது//

    உண்மையான வரிகள். கடவுளைக் கண்டால் உடனே கேள் என்பதுதான் இன்றைய தாரக மந்திரம். இதுவரை கிடைத்ததற்கு நன்றி கூறுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  3. அங்கும் இங்கும் படித்துப் பொருள் தெரிந்து கொண்டாலும் அதில் வேண்டப் படும் விஷயங்கள் எல்லாம் வெறுமே யூகித்து அறிந்து கொள்ளக் கூடியதே.

    வய்து ஏற ஏற அனுபவம் கூடக்கூட
    அகவலின் பொருள் விளக்கமாக மெருகேறுவதை உணரலாம்..!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பதிவு சிந்தனையைத் தூண்டுகின்றது..விநாயகர் அகவலின் பொருள் தெரிந்து கொண்டுதான் பாராயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை விளங்கிக் கொள்ள தகுந்த குரு வேண்டும் எனில் இவர் தான் தகுந்த குரு என்று எதைக் கொண்டு தீர்மானிப்பது!.. இன்று வரை அவரவரும் அவரவர்க்கு மனதில் பட்டதைத் தான் உபதேசித்து வருகின்றார்கள். விநாயகர் அகவலின் அர்த்தத்தை விட - விநாயகர் தான் முக்கியம்!.. அவரே குரு. அப்படி ஆகும் போது விநாயகர் அகவல் கூட தேவைப்படாது!..

    பதிலளிநீக்கு

  5. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கோபு சார்
    @ டி.பி.ஆர்.ஜோசப்
    @ இராஜராஜேஸ்வரி
    @ துரை செல்வராஜ்
    அனைவரது வருகைகும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நல்ல விளக்கத்திற்கும் முதிர்ச்சியான மொழிநடைக்கும், சிந்தனையைத் தூண்டும் பகிர்வுக்கும் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  7. விநாயகர் உருவான கதை, விநாயகர் வழிபாடு இங்கு எப்படி ஏற்பட்டது,மற்றும் அகவல் விளக்கம் எல்லாம் மிக அருமை.

    //,,“ உனக்குத் தெரிந்த சுலோகங்களைச் சொல்லிக் கொண்டே இரு. தன்னால் உறக்கம் வரும்” என்று என் மனைவி கூறி இருக்கிறாள். பலனளிக்கிறது//

    எங்கள் வீட்டில் என் கணவர் உங்கள் மனைவி போல் சொல்வார்கள். நாங்கள் எல்லோரும் தூக்கம் வரவில்லை என்றால் அப்படித்தான் தெரிந்த பாடல்களை மனதுக்குள் பாடிக் கொள்வோம். என் கணவரும் அப்படித்தான்.
    உங்கள் அனுபவங்கள் எல்லோருக்கும் பயன் அளிக்கும் சார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வினாயகர் அகவல் நீங்கள் சொன்னது போல் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த பாடல் தான். புரிந்து படித்தாலும் புரியாமல் படித்தாலும் பலன் தரும் என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  9. எளிய மொழியில் பயனுள்ள பதிவு ஐயா நன்றி

    பதிலளிநீக்கு