Sunday, September 15, 2013

ஓணம் பண்டிகை( HOME COMING FESTIVAL)


                    
                       ஓணம் பண்டிகை (HOME COMING FESTIVAL )
                       ---------------------------------------------------------

 இவ்வாண்டு செப்டம்பர் மாதம் பதினாறாம் நாள் கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாடப் படுகிறது. அனைவருக்கும் என் ஓணாஷம்சகள்” ( ஓணம் நல் வாழ்த்துக்கள்.)இந்தப் பண்டிகை கேரளாவில் எல்லோராலும் கொண்டாடப் படுகிறது ஜாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் இப்பண்டிகை, முன்பு கேரளத்தை ஆண்ட மஹாபலி சக்ரவர்த்தியின் விருப்பமான அவரது வருடாந்திர வரவை மக்கள்  கொண்டாடுவதைக் குறிக்கிறது . மஹாவிஷ்ணுவின் வாமனாவதாரத்தைப் பின் புலமாகக் கொண்டது. முதலில் பின் புலத்தைப் பார்ப்போம்.


                  வாமனாவதாரம்
                  ---------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.


           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
          
அசுவமேத  யாகம் நடத்தி, யார்
          
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
          
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
          
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
          
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
          
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
          
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
          
அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
          
குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி


        கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
         
அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
         
துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
         
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.


மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
          
சொன்ன சொல் தவற மாட்டேன்
          
தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
          
வைக்க , யான் பெருமை கொள்வேன்
          
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
          
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           =================================

  (அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம்
       
அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது
     
கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து
      
இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும்,
      
இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப
      
முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன்
      
பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான
      
அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக
      
பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த
      
உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது.
      
இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். )

சுபிட்சம் நிறைந்த ஆட்சியைத் தந்த மஹாபலி வாமனரால் பாதாளத்துக்குள் அழுத்தப் படும் முன் திருமாலிடம் ஒரு வரம் கேட்டார். ஆண்டுக்கொரு முறை தான் ஆண்ட நாட்டையும் மக்களையும் பார்க்க வர வேண்டி வரம் கேட்டார். அந்நாளே இவ்வோணம் திருநாள்.
ஓணத் திரு நாளில் பூக்களால் அலங்கரிப்பதில் விசேஷ அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்
பாரம்பரிய நடனமாகப் பெண்கள் பூக்களத்தைச் சுற்றி நடனம் ஆடுகின்றனர். கைகொட்டு களி என்னும் நடனவகையும் அதில் அடங்கும்.ஓண சத்யை ( விருந்து ) விசேஷம் ”.உள்ளப்போழ் ஓணம் இல்லெங்கில் ஏகாதசி” என்ற சொல் வழக்கும் உண்டு. எப்படிப்பட்ட இல்லாதவர்களும் ஓணத்தன்று ஒன்று கூடி விருந்துண்ணுவது  முக்கியமாகக் கருதப் படுகிறது.

பூக்களம்
ஓணம் விருந்து
ஓணம்  நடனம்

பூக்களம்
 
 


 
      கை கொட்டு களி என்று கூறப்படும்  கேரள பாரம்பரிய நடனம்


 


  

 


25 comments:

 1. ஓணம் நல் வாழ்த்துக்கள்.)

  ReplyDelete
 2. அருமை ஐயா... ஓணம் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நான் கேரளாவில் ஐந்தாறு வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எங்களுடைய வங்கி கிளைகளிலும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கென்று பூக்களம் போட்டி நடத்துவார்கள். அமர்க்களமாக இருக்கும். நீங்கள் சொன்னதுபோல் சாதி, மத பேதமின்றி இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். ஓணசத்யா எல்லா அலுவலகங்களிலும் நடக்கும்.

  ஓணம் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பண்டிகையின் பின்புலத்தை அறியத் தந்திருக்கிறீர்கள். படங்கள் அருமை. ஓணம் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. // சுபிட்சம் நிறைந்த ஆட்சியைத் தந்த மஹாபலி வாமனரால் பாதாளத்துக்குள் அழுத்தப் படும் முன் திருமாலிடம் ஒரு வரம் கேட்டார். ஆண்டுக்கொரு முறை தான் ஆண்ட நாட்டையும் மக்களையும் பார்க்க வர வேண்டி வரம் கேட்டார். அந்நாளே இவ்வோணம் திருநாள். //

  ஓணம் பண்டிகை வந்த கதையை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி! மஹாபலியை வரவேற்போம்!

  ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. ஓணத்திருநாள் வாழ்த்துகள். கச்சியப்ப முனிவர் வேறே. இதிலே வரும் காச்யபர் வேறு. ஜய, விஜயர்கள் தொடர்ந்து அசுரர்களாகப் பிறந்து சாபவிமோசனம் பெறுவார்கள். சநகாதி முனிவர்களை வைகுண்டத்தில் நுழைவதில் இருந்து தடுத்ததால் இந்த சாபம், பகவான், என் பரம பக்தர்களாகப் பிறந்து ஏழு பிறவி எடுத்துத் திரும்ப வாருங்கள், அல்லது என் பரம வைரியாகப் பிறந்து மூன்று பிறவி எடுத்துத் திரும்ப வாருங்கள் என்பார். அவர்கள் மூன்று பிறவிகள் எடுத்துத் திரும்ப வருவதே சிறந்தது என அசுரப் பிறவி எடுப்பார்கள். முதல் பிறவியில் இரண்யன் - இரண்யாட்சன், இரண்டாம் பிறவியில் ராவணன் - கும்பகர்ணன், மூன்றாம் பிறவியில் கம்சன் -சிசுபாலன் என மூன்று பிறவிகள்.

  ReplyDelete
 7. காச்யபர் சப்தரிஷிகளில் ஒருவர் ஆவார். ஒவ்வொரு காலத்திலும் இந்த சப்தரிஷிகள் மாறினாலும் ஆதி மூலம் இவர்களே. விஸ்வாமித்திரர், காச்யபர், பாரத்வாஜர், கெளதமர், அகஸ்தியர், அத்ரி, பிருகு ஆகிய ஏழு பேரும் ஆவார்கள்.

  வசிஷ்டர் பல தலைமுறைகளைக் கண்ட ரிஷி ஆவார். இவரையும் சப்தரிஷிகளில் சொல்லுவதுண்டு. இவருடைய பிள்ளைகளையும் சப்தரிஷிகள் என்பார்கள். காலத்துக்கு ஏற்ப இவை மாறி வரும். இப்போது ஏற்படும் பல மாற்றங்களைப் போலவே! :))))

  ReplyDelete
 8. ஆகவே காச்யபர் மஹாபலியின் காலத்திலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இதில் தலைமுறைக் குழப்பம் ஏதும் இல்லை. :))))

  ReplyDelete
 9. சூரியனுடைய மறு உருவம் காச்யப ரிஷி என்பார்கள்.

  ReplyDelete
 10. கை கொட்டு களி என்று கூறப்படும் கேரள பாரம்பரிய நடன பாடல் பகிர்வுக்கு நன்றி.
  படங்கள், ஓணம் பற்றிய செய்திகள் எல்லாம் மிக அருமை.
  ஓணம் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஓணம் குறித்து முழுமையாக
  தெரிந்து கொள்ள முடிந்தது
  விரிவான அருமையான பகிர்வுக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. இங்கே குவைத்தில் நாளை எங்கள் நிறுவனத்தில் ஓணசத்யா. அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete

 13. @ இராஜராஜேஸ்வரி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ டி.பி.ஆர். ஜோசப்
  @ ராமலக்ஷ்மி
  @ தி. தமிழ் இளங்கோ
  @ கோமதி அரசு.
  @ ரமணி
  @ துரை செல்வராஜ்
  அனைவருக்கும் ஓண நல்வாழ்த்துக்களுடன் வருகை தந்து உற்சாகமூட்டும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

  @ கீதா சாம்பசிவம்.
  படித்துப் பார்த்ததில் உங்களுக்கும் குழப்பம் இருப்பது தெரிகிறது. யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளூம் மனப் பக்குவம் எனக்கில்லை என்பதும் தெரிகிறது. உறவுகளில் தலைமுறை இடைவெளி நெருடலாக இருப்பதைக் குறிப்பிட்டேன். நீங்கள் அந்த காச்யபர் வேறு இவர் வேறு , சப்த ரிஷிகள் எல்லாக் காலத்திலும் இருப்பவர்கள், எல்லோருக்கும் ஆதிமூலமாக இருப்பவர்கள் என்றெல்லாம் கூறுகிறீர்கள். லாச்யபர் மஹாபலியின் காலத்திலும் இருக்க வாய்ப்புண்டு என்று கூறுவதன் மூலம் என்உறவில் தலைமுறை இடைவெளி நெருடலாக இருப்பதை ஊர்ஜிதம்தான் செய்கிறீர்கள். நம் புராணக் கதைகள் பலவற்றிலும் உறவுகள் முறைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதைப் பற்றிக் கேள்வி கேட்டால் ஒரு ரிபெல் என்று நினைக்கிறார்கள். சந்தனுவின் சந்ததிகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 14. எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நான் காலத்துக்கு ஏற்ப மாறும் என்றது சப்தரிஷிகளின் பெயரை மட்டுமே. மற்றபடி காச்யபர் ஒருத்தர் தான். அவரே தான் வாமனாவதாரத்திலும் இருந்தவர். தலைமுறை கடந்து ஒருத்தர் இருந்து வந்திருக்கையில் தலைமுறையில் இடைவெளி இருக்கத் தான் செய்யும். ரிஷிகள் தங்கள் யோக சக்தியால் தவ பலத்தால் பல்லாண்டுகள் வாழ்ந்தனர் என்பார்கள். அதன்படி வசிஷ்டரும் பல தலைமுறைகளைக் கண்டவர். காச்யபரும் அவ்வாறே.

  ReplyDelete
 15. கோத்திர மூலங்கள் நான் சொன்ன ஏழு ரிஷிகளும் ஆவார்கள். அவர்களை வைத்துத் தான் கோத்திரங்கள் வந்தன. ஆகையால் ஆதிமூலம் அவர்கள் எனக் குறிப்பிட்டேன். நான் சொல்ல நினைப்பது ஒன்றாகவும், நீங்கள் புரிந்து கொள்வது வேறாகவும் இருக்கிறது. எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரே காச்யபர் தான். பின்னூட்டம் நீளத்தை கூகிள் ஏற்காததால் பிரிச்சுப் பிரிச்சுப் போட வேண்டி வந்தது. ஆகவே காச்யபர் என இருவர் இருப்பதாக நினத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 16. புராணங்களை நன்கு ஆழ்ந்து படித்துவிட்டே அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். யார் சொன்னாலும் ஏற்பது இல்லை. அதன் தாத்பரியம் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொண்டே எழுதுகிறேன்.என்னைப் பொறுத்தவரையிலும் எந்த நெருடலும் கிடையாது. உங்கள் சுட்டியையும் படிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 17. ஓணம் பண்டிகையின் விவரம் அருமை. ஐயா. நன்றி

  ReplyDelete
 18. ஓணம் பண்டிகையின் விவரம் அருமை. ஐயா. நன்றி

  ReplyDelete
 19. ஓணம் பண்டிகையின் விவரம் அருமை. ஐயா. நன்றி

  ReplyDelete
 20. பொன் ஓணம் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
 21. ஓணம் பற்றிய விரிவானத் தகவல்களைத் தெரிந்து கொண்டேன். அருமையான சந்தேகத்தையும் வைத்துள்ளீர்கள். அதற்கு நமது நண்பர்கள் தங்களால் ஆனப் பதிலை தர வாய்ப்பளித்துள்ளமை அருமை அய்யா. தங்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 22. ஓணம் நல்வாழ்த்துகள் ;)
  படத்தேர்வுகள் அருமை.

  ReplyDelete
 23. ஓணம் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. சிறுவயதில் அம்புலிமாமாவில் வாசித்த மகாபலியின் கதை நினைவுக்கு வருகிறது. ஒணக்க்கொண்டாட்டம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா. ஒணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete