ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தந்தையும் மகனும்....

தந்தையும்  மகனும்.
---------------------------

             ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 
              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 
              கவனம் கவனம் என்றே பதறினாள் 
              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய். 

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன் 
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன் 
பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 
               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 
              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 
               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 
               என்றே அப்பனும் மழுப்பிட 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை. 
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன். 
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை. 

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது, 
             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 
             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 
             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான். 

இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 
விரிகிறது ஒரு முறுவல், கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர். 
============================================  












12 கருத்துகள்:

  1. பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
    மகனை வெல்ல விட்டான் //
    அழகான ஆழ்ந்த நுட்பம் செறிந்த வாழ்க்கைத்தத்துவம்.

    பதிலளிநீக்கு
  2. //மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
    இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
    இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
    என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.//
    beautiful lines

    பதிலளிநீக்கு
  3. வாழ்வெனும் விளையாட்டரங்கில் யாரும்
    ஓடிடவே படைத்து வைத்தான் ஆண்டவன்
    ஓடினார் களைத்தார் ஓய்ந்தபின் யோசித்தார்
    ஓடியதும் ஓய்ந்ததும் அவனென்று நிதானித்தார்..

    அப்பனும் அவன் பெற்ற மைந்தனும்
    மைந்தன் பெற்ற மகனும் தொடராய்
    வாழ்வில் ஓடுகிறார் எல்லை முடியும்வரை
    விதிக்கப்பட்ட விளையாட்டில் எல்லோருமே...

    குடும்பத்தின் வேரதனை அழகாய் உறவில்
    அணிகோர்த்த சொற்களில் எளிமையாய்
    அன்பாய் அப்பனும் அவன் மைந்தனுமென
    அழகுகதை அழகாய் மலர்ந்திட்ட பூவாகும்...

    உங்கள் அனுபவத்தின் தேன் சாற்றை
    உங்கள் ஆற்றலின் சொல் கோர்த்து
    உங்கள் பதிவுகளில் பதிந்திடும் நாள்
    எங்கள் பார்வைக்கு என்றும் விருந்தாகும்...

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. குழந்தையிடம் தோற்றலின் சுகம் காண்பது இனிது

    பதிலளிநீக்கு
  5. "CHILD IS THE FATHER OF THE MAN"
    You have illustrated the Proverb into a nice story.

    பதிலளிநீக்கு
  6. அருமை.
    வார்த்தைகளில் என் தந்தையை உணர்ந்தேன்.
    நன்றி அய்யா
    www.arutkavi.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. மிக அருமை.வேறு வார்த்தைகளோ
    வேறு விளக்கங்களோ இதற்குத் தேவையில்லை
    நல்ல பதிவு தொடர வேண்டி....

    பதிலளிநீக்கு
  8. கூற முற்பட்ட கருத்துகள் இலக்கு நோக்கி சென்றடையும்போது உள்ளம் மகிழ்வது உண்மை எனக்கு அதரவு தந்து ஊக்குவிக்கும் கெளரிப்பிரியா, ரத்னவேல்,இராஜ இராஜேஸ்வரி, நாகசுப்பிரமணியம், குறட்டை புலி, வாசன், சிவகுமாரன், ரமணி, மற்றும்ஹரணி அவர்களுக்கும் என் நன்றி. ஹரணி அவர்கள் என் சிறு படைப்புக்கு ஒரு புது பரிமாணமெ காண்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  9. முழு நேரம் அலுவலகக் கணிணியில் எழுத முடிவதில்லை இப்போது.தாமதித்து வந்தேன்.

    தோற்றல் இன்பம் என உணர்த்துவது வாழ்வின் பொற்கணங்கள். எல்லோரிடமும் நம் அகந்தை இப்படி வளைந்து விடுவதுமில்லை.

    அற்புதம் என்ற ஒரு சொல் போதும்தான் இதற்கு.

    பதிலளிநீக்கு