Thursday, July 12, 2012

ஆலய தரிசனம் .அனுபவங்கள்...2

                                ஆலய தரிசனம் அனுபவங்கள் --2
                                -----------------------------------------------நாங்கள் கும்பகோணம் போய்ச் சேர்ந்து ஓட்டல் அறையில் எங்கள் உடைமைகளை வைத்து நோக்கினால் மணி பத்துக்கும் மேலாகி இருந்தது. கும்பகோணம் அருகே கருவேலி சற்குணேஸ்வரர் ஆலயம் பற்றி என் மனைவி கேள்விப் பட்டிருந்தாள். எங்கிருக்கிறது , எப்படிப் போக வேண்டும் என்று ஓட்டலில் விசாரித்தால் யாருக்கும் சரியாகத் தெரிய வில்லை. உடனே போனாலும் கோயில் நடை திறந்திருக்க வாய்ப்பில்லை. உணவருந்தி ஓய்வெடுத்து மாலை செல்லலாம் என்றும் விவரங்களுக்கு கும்பகோணத்தில் இருந்த நண்பனை அணுகலாம் என்றும் தீர்மானித்து அவர்கள் வீட்டுக்கு ஃபோன் போட்டோம். நம்பர் புழக்கத்தில் இல்லை என்று பதில் வந்தது. முன்பு ஒரு முறை அவர்கள் வீட்டுக்குச் சென்ற ஞாபகத்தில் வழி விசாரித்து அங்கு போய்ச் சேர்ந்தோம். முதலில் அவர்கள் தொலைபேசி எண் மாறியிருக்கிறதா என்று கேட்டதற்கு.மாற்றம் ஏதுமில்லை அதே எண்தான் என்றார்கள்..இப்போது எனக்கு என் மனைவியை வார ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தொலை பேசி எண் அங்கெல்லாம் ஏழு இலக்க எண்கள். என் மனைவி ஒரு இலக்கம் சேர்த்து எட்டு இலக்க எண்ணாக மாற்றியிருந்தாள்

அவர்கள் கருவேலிக்குப் போகும் வழியைக் கூறியதுடன், எங்களை அங்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவையும் ஏற்பாடு செய்தார்கள். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திஅருகில் இருந்த , நாங்கள் இதுவரை பார்க்காத கூத்தனூர் மஹாசரஸ்வதி ஆலயத்துக்கும்., நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக் கோயிலுக்கும் சென்று வந்தோம். பூந்தோட்டம் அருகேயுள்ள மஹாசரஸ்வதி ஆலயத்தில் எங்கள் பேரக் குழந்தைகளின் கல்வி அறிவுக்கும், படிப்புக்கும் வேண்டிக் கொண்டோம். அழகான அமைதியான கோயில்.நல்ல தரிசனம். கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கும் அதிக தூரம். .

கருவேலி சற்குணேஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. திருநாவுக்கரசரால் பாடப் பட்ட ஸ்தலம்.
மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்
கட்டிட்ட வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டையுறைவான் கழல் கூடுமே.
( தேனையுடைய மலர்களை வைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு, மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக , கருவிலிக் கொட்டிட்டை உறையும் பெருமான் திரு வடிகளைக் கூடுவீராக.)

ஒரு காலத்தில் சீரும் சிறப்புமான பெரிய கோயிலாக இருந்ததாம். இரண்டாம் இராசாதிராசன் காலத்து நான்காம் ஆண்டுக் கல்வெட்டு , இவ்வூரை உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணட்டுக் குலோத்துங்க சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிக்கிறது. என்ற தகவல்கள் எல்லாம் ஊரின் , கோயிலின் பழமையைக் குறிக்கும். ஆனால் நேரில் காணும்போது ஒரு புதிய கோயிலைத்தான் காண முடிகிறது.

சென்ற நூற்றாண்டில் அக்கிராமத்தில் கருவிலி ராமைய்யர் ( குழந்தை அய்யர்) என்ற பக்தர் இருந்தார். நிலம் நீச்சு என்று இருந்த போதிலும் வந்த வருமானம் எல்லாம் அன்னதானத்துக்கே செலவிட்டாராம். 24 மணி நேரமும் அவர் இல்லத்தில் கோட்டை அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம். அன்னதானம் என்றால் கஞ்சி வார்ப்பதல்ல. பருப்பு பாயசத்துடன் நெய் மிதக்கும் அறுசுவை உணவு. உண்டவர் கை கழுவிய யம தீர்த்தத்தில் அவர்களது கையில் ஒட்டியிருந்த நெய் மிதக்குமாம். .இந்தக் குழந்தை அய்யரின் வம்ச வாரிசுகள் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி சகோதரர்கள்தான் இந்தக் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திய TRUST-ன் பின்னணியில் இருந்தவர்கள். இருப்பவர்கள். இந்த கிருஷ்ண மூர்த்திதான் இந்தியாவின் தலை சிறந்த மானேஜர் என்று கருதப்பட்டு BHEL, SAIL, MARUTHI  போன்ற நிறுவனங்களுக்குத் தலைவராய் இருந்தவர். ஓடாத திருவாரூர் தேரை திருச்சி BHEL –ல் இருந்தபோது ஓடச் செய்தவர். அவர் பிறந்து வளர்ந்த கருவிலி கொட்டிட்டை சற்குணேஸ்வர் ஆலயம் ஊருக்கு ஒதுக்குப் புறம் உள் வாங்கி இருப்பதால் பலரது கவனத்துக்கு வராமல் இருக்கிறது.

அமைதியான ஆலயம். அன்னை சர்வாங்க சுந்தரி காணக் கண் கோடி வேண்டும் அவ்வளவு அழகு. எங்கேயோ இருந்த எங்களை தன்னிடம் வரவழைத்து அருள் புரிந்த அவளுக்குக் கோடி கோடி நமஸ்காரம்.

கருவேலி என்பதை கரு, இலி என்று பிரிக்கலாம். இத்தல தெய்வங்களை வழிபட்டவனுக்கு , இனியும் ஒரு தாயின் கருவில் உருவாக வேண்டாம் எனும்படியான மோட்சத்தைக் கொடுக்கும்படியான வாய்ப்பு ஏற்படுமாம். .கருவிலி என்ற பெயரே மருவி கருவேலி என்றாகி விட்டதாம்.

ஆற்றவும் அவலத்தழுந்தாது நீர்
தோற்றுந் தீயொடு நீர் நிலந் தூவெளி
காற்றுமாகி நின்றான்ற்ன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

( நீங்கள் மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், அவனால் தோற்றுவிக்கப் படுகின்ற தீ, நீர், நிலம், காற்று, விசும்பு ஆகி நின்றவனும் கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக. )

கருவேலி சற்குணேஸ்வரர் சர்வாங்க சுந்தரி ஆலயம் குறித்த தகவல்களைக் கொடுத்துதவிய கோயில் நிர்வாகத்தாருக்கு நன்றியுடன் அடுத்த ஆலய தரிசன அனுபவங்களைத் தொடர்கிறேன்.

.
சற்குணேஸ்வரரை தரிசித்து திரும்பும்போது எதையோ விட்டு விட்டு வந்ததுபோல் தோன்றியது. சர்வாங்க சுந்தரியின் திருவுருவம் மனக் கண் முன் வந்து வந்து போயிற்று. நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான், ஒரு மணிநேர கோயில் தரிசனம். வரும் வழியில் திருநறையூர் என்று அழைக்கப் படும் நாச்சியார் கோயிலுக்கு வந்தோம். அய்யன் ஸ்ரீநிவாச பெருமாளைவிட தாயார் ஸ்ரீவஞ்சுளவல்லிக்குத்தான் முக்கியத்துவமோ என்று எண்ணும்படி ஊரே நாச்சியார் கோயில் என்று அழைக்கப் படுகிறது. கருவறையில் நின்ற கோலத்துடன் இருக்கும் பெருமானின் வலப் பக்கத்தில் தாயாரும் நிற்கிறார். .வலப் பக்கத்தில் நான்முகப் பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும், இடப் பக்கத்தில் வரிசையாக, அநிருத்தன் ப்ரத்யும்னன், சாம்பன் என்ற புருஷோத்தமன் என்பவர் தரிசனம் தருகின்றனர்,

உற்சவர் ஸ்ரீநிவாசருக்கு மூன்றங்குலம் முன்பாக நாச்சியார் சாவிக்கொத்து இடுப்பில் தொங்க தரும் காட்சியில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று சொல்லாமலே புரிபடும். கருடாழ்வார் கல் கருடன் என்று சிறப்பாக அழைக்கப் படுகிறார். பெருமாளுக்கு திருவாராதனம் செய்து முடித்தவுடன் பெரிய திருவடிக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடை பெறுகிறது. நாங்கள் சென்ற சமயம் அவருக்கு தைலக் காப்பிட்டு இருந்ததால் முக சேவை மட்டுமே சாத்தியமாயிற்று, ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. இந்தக் காலத்தில் அந்த மாதிரி கோயில்களை எழுப்ப முடியுமா புரியவில்லை. பல இடங்களில் சலவைக்கல் கொண்டு பிரம்மாண்டமாக கோயில்கள் கட்டப் பட்டிருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் அங்கு தரிசனத்துக்குச் செல்லும் போது ஏனோ மனதை ஒருங்கிணைக்க முடிவதில்லை. பல நிலைகளுடன் கட்டப் பட்டுள்ள கோபுரங்களும் பரந்து விரிந்து சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட தூண்களுடன் கூடிய ப்ராகாரங்களும் ஈடு இணை இல்லாதவை. கோயில் தரிசனம் முடிந்து வரும் ஒவ்வொரு முறையும் இன்னொரு முறை வந்து தரிசிக்க வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணம் எழுகிறது. நமக்குக் கிடைத்த ஒரு சில நாட்கள் மறக்க முடியாததாய் விடுகிறது.

கிட்டத்தட்ட 70-/ கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ரிக்‌ஷாவில் போய் வந்த களைப்பையும் மீறி அடுத்த நாள் பயணத்துக்கு மனதும் உடலும் தயாராயிற்று
--------------------------------------------------.            .           


.

12 comments:

 1. ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. இந்தக் காலத்தில் அந்த மாதிரி கோயில்களை எழுப்ப முடியுமா புரியவில்லை.

  மிகவும் உண்மை ஐயா.

  ஒரு வெற்று இடத்தை கோவிலாக்குவதை அருகிருந்து அணு அணுவாக கண்டு கும்பாபிஷேகம் வரை பங்கேற்று சிரமத்தை உணர்ந்ததால் கோவில்களைக் கண்டால் அவை கட்டப்பட்ட காலம் மனக்கண்களில் நிழலாடுகிறது..

  ReplyDelete
 2. கோயில் தரிசனம் முடிந்து வரும் ஒவ்வொரு முறையும் இன்னொரு முறை வந்து தரிசிக்க வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணம் எழுகிறது. நமக்குக் கிடைத்த ஒரு சில நாட்கள் மறக்க முடியாததாய் விடுகிறது.//

  நீங்கள் சொல்வது உண்மை சார்.

  அந்தநாட்களில் கிடைக்கும் ஆத்ம திருப்தியும், மனநிறைவும் அளவிட மிடியாது.
  ஜெயா தொலைகாட்சியில் அடிக்கடி இந்த கோவில்களை வைப்பார்கள்.
  நாங்களும் சென்று தரிசித்து இருக்கிறோம்.
  ஆலய தரிசன அனுபவங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 3. மிகவும் அருமையான அனுபவப்பகிர்வு.

  ReplyDelete
 4. //ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. //

  ஆமாம் சார். மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். நமது பாரம்பர்யமும், சிற்பக்கலை, கலாச்சாரம் முதலிய எல்லாமே கோயிலைச்சுற்றியே இருந்து இன்றும் அவற்றை உலகுக்கே எடுத்துக் காட்டுவதாகத் தான் உள்ளன.

  ReplyDelete
 5. ஜோர்.ஜோர்.

  ஒவ்வொரு கோயிலையும் நான் எந்தக் கண்களால் பார்க்க ஆசைப்படுவேனோ அதே கண்கள் உங்களதும்.

  கடுமையான உழைப்பின் வியர்வைத் துளிகளை என் கைகள் துடைக்கிறது ஒரு கை. விசிறி விடுகிறது மற்றொன்று.

  மாமிக்கும் என் நமஸ்காரங்களும் வாழ்த்துக்களும் பிறந்தநாளுக்கு.

  ReplyDelete
 6. ஆலய தரிசன அனுபவங்களின் இரண்டு பதிவுகளையும் படித்தேன். கூடவே வருவதுபோல் ஒரு உணர்வு உண்டாக்கிய பதிவு. ஆலயங்களின் சிறப்பையும் அதிலுறையும் தெய்வங்களின் அழகையும் எழுத்தின் வடிவில் மனக்கண்ணால் ரசிக்க முடிகிறது. லயிப்புடனான அனுபவப் பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 7. புண்ணியம் செய்த ஆத்மா!

  ReplyDelete
 8. உங்கள் உற்சாகப் பயணம் தொடரட்டும்! தொடர்ந்து படித்து வருகிறேன்!

  ReplyDelete
 9. @ இராஜராஜேஸ்வரி,
  @ கோமதி அரசு,
  @ லக்ஷ்மி,
  @ கோபு சார்,
  @ சுந்தர்ஜி.
  @ கீத மஞ்சரி,
  @ டாக்டர் கந்தசாமி,
  @ தி.தமிழ் இளங்கோ,
  நான் உங்கள் அனைவரது உற்சாகக்
  கருத்துகளில் மனம் நெகிழ்கிறேன்.
  கூடவே நான் பின்னூட்டம்
  இடும்போது என்னால் இந்த
  அளவுக்கு உற்சாகப்படுத்தி எழுது
  வது இல்லை என்றும் தெரிய
  வருகிறது. சுந்தர்ஜியைப் போல்
  ஆத்மார்த்தமாக பாராட்டக் கற்றுக்
  கொள்ள வேண்டும். எல்லோருக்கும் என் நன்றி.

  ReplyDelete
 10. //ஜோர்.ஜோர்.

  ஒவ்வொரு கோயிலையும் நான் எந்தக் கண்களால் பார்க்க ஆசைப்படுவேனோ அதே கண்கள் உங்களதும்.

  கடுமையான உழைப்பின் வியர்வைத் துளிகளைத் (என் கைகள்) துடைக்கிறது ஒரு கை. விசிறி விடுகிறது மற்றொன்று.

  மாமிக்கும் என் நமஸ்காரங்களும் வாழ்த்துக்களும் பிறந்தநாளுக்கு.//

  பாலு சார்! மேலே எழுதின பின்னூட்டத்தில் என் கைகளை வெட்டிவிடுங்கள்.அதற்குப் பிறகு எப்படி வியர்வை துடைக்கும்? விசிறிவிடும்? என்கிறீர்களா?

  ReplyDelete
 11. எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. இந்தக்கோயில் பற்றி நானும் எழுதி இருக்கேன். போறதுக்கு முன்னால் எங்களைக் கேட்டிருக்கலாம். :)))) நான் கல்யாணம் ஆகி கிரஹப்ரவேசம் செய்து வாழ்க்கையை ஆரம்பித்தது இந்த ஊரில் தான். அப்போல்லாம் மூங்கில் பாலம் தான். அதன் மேல் நடந்து தான் போகணும். மாடுகளை அவிழ்த்து விட்டு ஆற்றில் இறக்கிவிட்டு வண்டியை நான்கைந்து பேராக ஆற்றில் இறக்கி அக்கரைக்குக் கொண்டு போவார்கள். இது அதிகம் தண்ணீர் இல்லாத கோடையில். தண்ணீர் வந்துவிட்டால், ஆற்றில் வண்டியும் இறங்காது; மாடுகளும் இறங்காது. அப்போ மூங்கில் பாலத்தில் தான் நடந்து சாமான்களையும் தூக்கிக் கொண்டு போய் அக்கரை சேர்ந்து அதுக்கப்புறமா வண்டியில் ஏறிப் போகணும்.

  ReplyDelete
 12. வேறு ஒரு தகவலுக்கு கூகிளை நாடினப்போ இந்தப்பதிவு கண்ணில் பட்டது. இதன் அருகே ஒரு மைல் தூரத்தில் இருக்கும் பரவாக்கரை என்னும் ஊரில் தான் என் மாமனாரின் பூர்விக வீடு உள்ளது. அதைக் குறித்துத் தான் உங்களுக்குப் பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். :))))

  ReplyDelete