தொடரும் அனுபவங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடரும் அனுபவங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூலை, 2012

ஆலயதரிசனம்..அனுபவங்கள்---3


                              ஆலய தரிசனம்... அனுபவங்கள்--3
                              ------------------------------------------------


ஒரு இடத்தில் தங்கி அங்கிருந்து அடுத்து இருக்கும் கோயில்களுக்குச் சென்று வருவதே சிறந்தது. ஆனால் தூரம் அதிகமானால் பயணம் சோர்வடையச் செய்து விடுகிறது .( வயதாவதின் தாக்கம்.) நாம் செல்லும் நேரம் கோயில் நடை திறந்திருக்க வேண்டும், தரிசனம் கிடைக்க வேண்டும்.ஆகவே நாங்கள் தங்குமிடத்தை மாற்றிக் கொள்வதுண்டு. கும்பகோணத்திலிருந்து முதலில், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் பூஜை, பிறகு அங்கிருந்து சிதம்பரம். இரண்டு கோயில்களிலும் அவரவர் நட்சத்திரத்தன்று மாதமொரு முறை பூஜை செய்த பிரசாதம் பெறுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. நாங்கள் வருவதை எங்களுக்காக பூஜை செய்யும் குருக்களுக்கு முன்பே தொலை பேசியில் தெரிவித்து விடுவோம். இந்த முறை உறவினர்கள் பலரும் அவர்களுக்காக பூஜை செய்து பிரசாதம் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிடுவதும் நீரில் வெல்லம் கரைப்பதும் வேண்டுவார்கள். இப்போதெல்லாம் குளத்தில் வெல்லம் கரைக்க அனுமதிப்பதில்லை. அதற்கான இடத்தில் வைத்து விட வேண்டும். அன்னை தையல்நாயகி. குழந்தை முத்துக்குமாரசாமி, அங்காரகன் மற்றுமுள்ள தெய்வங்கள். நவகிரக தலத்தில் அங்காரகனுக்கான க்ஷேத்திரம் இது. நாளுக்கு நாள் இந்த நாடி சோதிட தரகர்கள் தொந்தரவு அதிகரிக்கிறது. கோயிலுக்கல்லாமல் நாடி சோதிடத்துக்கும் பெயர் பெற்ற இடம் வைத்தீஸ்வரன் கோயில்.

அங்கிருந்து சுமார் பதினோரு மணி அளவில் சிதம்பரம் சென்றோம். கோடையின் கடுமை கொஞ்சமும் குறைய வில்லை. சிதம்பரம்  தீட்சிதர் மாலை ஆறரை மணிக்கு மேல் கோயிலுக்கு வரச் சொன்னார். அதற்கு முன் சுற்று பிராகாரத்தில் கால் வைக்க முடியாத அளவு சூடு. மாலை ஐந்து மணிக்கு தில்லை காளி கோயிலுக்குச் சென்று தரிசனம் முடிந்து நிதானமாகக் கோயிலுக்குச் சென்றோம். ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்திருப்போம். பிரம்மாண்டமான பெரிய கோயில். பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ள 108 கரண சிற்பங்கள் அங்கே நான்கு கோபுர வாசல்களிலும் காணலாம் கோயிலைப் பற்றி நான் அதிகம் கூறப் போவதில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள் வலையில் நிறையவே எழுதப் பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒன்று விளங்க வில்லை, தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால் இடப் புறம் முக்குருணி வினாயகர். ஒரு பெரிய நந்தி சிலை. சிறைபட்டிருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. அத்ற்கு நேர் சற்று வலப்பக்கம் இருந்த ஒரு வழி  சுவரால் மூடப் பட்டிருக்கிறது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்த வழி மூடப் பட்டுள்ளது என்று ஒரு சேதி. மற்றொரு விஷயம். கோயிலின் மதிலை ஒட்டி எல்லாப் பக்கங்களிலும் தூண்கள் நிரம்பிய இடம். ( எனக்கு அது குதிரை லாயத்தை நினைவு படுத்துகிறது. அந்த இடம் புழக்கத்தில் இல்லை. அதேபோல் அன்னை சிவகாம சுந்தரி ஆலயத்தை அடுத்த இடமும் உபயோகத்தில் இல்லாமல் தெரிகிறது. இதையெல்லாம் பராமரிக்காமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எங்கள் பூஜையைச் செய்து வரும் தீட்சிதருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை. மேலும் மேலும் துருவிக் கேட்டால் அது விரும்பப் படாதது என்பதால் விட்டு விட்டேன். அங்கேயே சில காலம் தங்கி பலரையும் கேட்டு ஆராய்ந்தால் ஒரு சமயம் தெளிவு கிடைக்கலாம். வாதப் பிரதி வாதங்களுடனான பதிவுகள் வலையில் பல உள்ளன.ஆனால் இதைப் பற்றிய சேதி எனக்குக் கிடைக்கவில்லை.. முன்பொரு பதிவில் குழந்தைகள் மணச்சட்டம் தில்லை வாழ் அந்தணர்களிடையே மீறுவதில்தான் இருக்கிறது என்று எழுதி இருந்தேன். அவர்களின் பெண் குழந்தைகளும் படிக்கத் துவங்கி விட்டார்கள். மணமானவருக்குத்தான் கருவறையில் பூஜை செய்யும் உரிமையும் , அதை ஒட்டிக் கிடைக்கும் சலுகைகளும் என்பதால் அவர்களுக்குள்ளேயே இளவயது மணம் சாதாரணமாகக் கருதப் படுகிறது. ஆனித் திரு மஞ்சன விழாவின் போது சின்னச் சின்னக் குழந்தைகள் திருமணமான
அடையாளமாக மடிசார் புடவை உடுத்தி உலவும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது. தில்லை வாழ் அந்தணர்கள் விடாப்பிடியாக சில கொள்கைகளை கடைப் பிடிக்கிறார்கள். கோயிலில் இல்லாதிருந்த உண்டிகள் இப்போது காணப் படுகின்றன. கோயில் மூலவரே உற்சவராக வீதி உலா வரும் வழக்கம் முதல் பல பூஜை முறைகளும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வித்தியாசமாக உள்ளது. இந்து அற நிலையத்துக்கும்  தீட்சிதர்களுக்குமான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எல்லாம் நல்ல முறையில் முடிய அந்த ஆடல்வல்லானே அருள் புரியட்டும்.

இன்னுமொரு சந்தேகம். தெரிந்தவர்கள் விளக்காலாம். போனமுறை திருமஞ்சனத்துக்கு வந்திருந்தபோது இரவு உற்சவர்களை எல்லாம் வீதி உலா எடுத்துச் செல்வதைக் கண்டேன். அதில் ஒன்று .கைலாச பர்வதம் என்று சொன்னதாக நினைவு. அதில் ராவணன் கைலாயத்தை தூக்க இருப்பதுபோலவும் அதன் மேல் உற்சவரை வீதி உலா கொண்டு சென்றார்கள். ராவணனுக்கு ஒன்பது தலைகளே இருந்தது.. அப்போது அந்த நேரத்தில் சந்தேகம் கேட்கக் கூடாது என்று எண்ணி வாளாயிருந்து விட்டேன். இந்த முறை அது பற்றி எங்கள் தீட்சிதரைக் கேட்டேன். ஒரு வேளை நாந்தான் தவறுதலாக ஒன்பது தலைகள் என்று எண்ணினேனோ என்று கேட்டேன். அவர் ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம் என்றும் சொன்னார். இது சரியா. ? யாராவது தெளிவிக்கலாமே.


மறுநாள் காலை மீண்டும் தரிசனம் முடிந்து அங்கேயே உணவருந்தி மீண்டும் கும்பகோணம்  வந்தடைந்தோம். நான்கு நாட்கள் பயண அலைச்சல். உடல் அசதியாக இருக்கவே, அன்று பூராவும் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.மறு நாள் காலை கோயில்கள் நிரம்பி இருக்கும் கும்பகோணாத்தில் எந்த கோயிலுக்குப் போவது என்று சிறிது நேரம் தடுமாறினோம். ஏறக்குறைய எல்லாக் கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். ஆகவே கும்பேசுவரரையும் . சாரங்கபாணியையும் தரிசிக்க முடிவு செய்தோம். முன்பே இரு கோயில்களிலும் திருவெழுக்கூற்றிருக்கை சுவரில் எழுதி இருந்தது பற்றி எழுதி இருந்தேன். மறுபடியும் அவற்றைப் படிக்கும்போது எப்பாடு பட்டாவது அது மாதிரி எழுத முயற்சிக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கிருக்கும் தமிழ் அறிவு கொண்டு அப்படி நினைப்பதே முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் இருக்கும். எழுதியவற்றையே படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை எழுதும் விதிகள் என்ன என்றும் தெரியாது. தெரிந்தவர் கூறி உதவினால் மகிழ்வேன். வலையில் எழுதும் விதிகள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்குமா தெரியவில்லை. என்னதான் முடிகிறது... பார்ப்போம்
( ஆலய தரிசன அனுபவங்கள் நிறைவடைகிறது.) 
------------------------------------------------      
      .           

     
  .






வியாழன், 12 ஜூலை, 2012

ஆலய தரிசனம் .அனுபவங்கள்...2

                                ஆலய தரிசனம் அனுபவங்கள் --2
                                -----------------------------------------------



நாங்கள் கும்பகோணம் போய்ச் சேர்ந்து ஓட்டல் அறையில் எங்கள் உடைமைகளை வைத்து நோக்கினால் மணி பத்துக்கும் மேலாகி இருந்தது. கும்பகோணம் அருகே கருவேலி சற்குணேஸ்வரர் ஆலயம் பற்றி என் மனைவி கேள்விப் பட்டிருந்தாள். எங்கிருக்கிறது , எப்படிப் போக வேண்டும் என்று ஓட்டலில் விசாரித்தால் யாருக்கும் சரியாகத் தெரிய வில்லை. உடனே போனாலும் கோயில் நடை திறந்திருக்க வாய்ப்பில்லை. உணவருந்தி ஓய்வெடுத்து மாலை செல்லலாம் என்றும் விவரங்களுக்கு கும்பகோணத்தில் இருந்த நண்பனை அணுகலாம் என்றும் தீர்மானித்து அவர்கள் வீட்டுக்கு ஃபோன் போட்டோம். நம்பர் புழக்கத்தில் இல்லை என்று பதில் வந்தது. முன்பு ஒரு முறை அவர்கள் வீட்டுக்குச் சென்ற ஞாபகத்தில் வழி விசாரித்து அங்கு போய்ச் சேர்ந்தோம். முதலில் அவர்கள் தொலைபேசி எண் மாறியிருக்கிறதா என்று கேட்டதற்கு.மாற்றம் ஏதுமில்லை அதே எண்தான் என்றார்கள்..இப்போது எனக்கு என் மனைவியை வார ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தொலை பேசி எண் அங்கெல்லாம் ஏழு இலக்க எண்கள். என் மனைவி ஒரு இலக்கம் சேர்த்து எட்டு இலக்க எண்ணாக மாற்றியிருந்தாள்

அவர்கள் கருவேலிக்குப் போகும் வழியைக் கூறியதுடன், எங்களை அங்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவையும் ஏற்பாடு செய்தார்கள். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திஅருகில் இருந்த , நாங்கள் இதுவரை பார்க்காத கூத்தனூர் மஹாசரஸ்வதி ஆலயத்துக்கும்., நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக் கோயிலுக்கும் சென்று வந்தோம். பூந்தோட்டம் அருகேயுள்ள மஹாசரஸ்வதி ஆலயத்தில் எங்கள் பேரக் குழந்தைகளின் கல்வி அறிவுக்கும், படிப்புக்கும் வேண்டிக் கொண்டோம். அழகான அமைதியான கோயில்.நல்ல தரிசனம். கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கும் அதிக தூரம். .

கருவேலி சற்குணேஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. திருநாவுக்கரசரால் பாடப் பட்ட ஸ்தலம்.
மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்
கட்டிட்ட வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டையுறைவான் கழல் கூடுமே.
( தேனையுடைய மலர்களை வைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு, மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக , கருவிலிக் கொட்டிட்டை உறையும் பெருமான் திரு வடிகளைக் கூடுவீராக.)

ஒரு காலத்தில் சீரும் சிறப்புமான பெரிய கோயிலாக இருந்ததாம். இரண்டாம் இராசாதிராசன் காலத்து நான்காம் ஆண்டுக் கல்வெட்டு , இவ்வூரை உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணட்டுக் குலோத்துங்க சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிக்கிறது. என்ற தகவல்கள் எல்லாம் ஊரின் , கோயிலின் பழமையைக் குறிக்கும். ஆனால் நேரில் காணும்போது ஒரு புதிய கோயிலைத்தான் காண முடிகிறது.

சென்ற நூற்றாண்டில் அக்கிராமத்தில் கருவிலி ராமைய்யர் ( குழந்தை அய்யர்) என்ற பக்தர் இருந்தார். நிலம் நீச்சு என்று இருந்த போதிலும் வந்த வருமானம் எல்லாம் அன்னதானத்துக்கே செலவிட்டாராம். 24 மணி நேரமும் அவர் இல்லத்தில் கோட்டை அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம். அன்னதானம் என்றால் கஞ்சி வார்ப்பதல்ல. பருப்பு பாயசத்துடன் நெய் மிதக்கும் அறுசுவை உணவு. உண்டவர் கை கழுவிய யம தீர்த்தத்தில் அவர்களது கையில் ஒட்டியிருந்த நெய் மிதக்குமாம். .இந்தக் குழந்தை அய்யரின் வம்ச வாரிசுகள் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி சகோதரர்கள்தான் இந்தக் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திய TRUST-ன் பின்னணியில் இருந்தவர்கள். இருப்பவர்கள். இந்த கிருஷ்ண மூர்த்திதான் இந்தியாவின் தலை சிறந்த மானேஜர் என்று கருதப்பட்டு BHEL, SAIL, MARUTHI  போன்ற நிறுவனங்களுக்குத் தலைவராய் இருந்தவர். ஓடாத திருவாரூர் தேரை திருச்சி BHEL –ல் இருந்தபோது ஓடச் செய்தவர். அவர் பிறந்து வளர்ந்த கருவிலி கொட்டிட்டை சற்குணேஸ்வர் ஆலயம் ஊருக்கு ஒதுக்குப் புறம் உள் வாங்கி இருப்பதால் பலரது கவனத்துக்கு வராமல் இருக்கிறது.

அமைதியான ஆலயம். அன்னை சர்வாங்க சுந்தரி காணக் கண் கோடி வேண்டும் அவ்வளவு அழகு. எங்கேயோ இருந்த எங்களை தன்னிடம் வரவழைத்து அருள் புரிந்த அவளுக்குக் கோடி கோடி நமஸ்காரம்.

கருவேலி என்பதை கரு, இலி என்று பிரிக்கலாம். இத்தல தெய்வங்களை வழிபட்டவனுக்கு , இனியும் ஒரு தாயின் கருவில் உருவாக வேண்டாம் எனும்படியான மோட்சத்தைக் கொடுக்கும்படியான வாய்ப்பு ஏற்படுமாம். .கருவிலி என்ற பெயரே மருவி கருவேலி என்றாகி விட்டதாம்.

ஆற்றவும் அவலத்தழுந்தாது நீர்
தோற்றுந் தீயொடு நீர் நிலந் தூவெளி
காற்றுமாகி நின்றான்ற்ன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

( நீங்கள் மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், அவனால் தோற்றுவிக்கப் படுகின்ற தீ, நீர், நிலம், காற்று, விசும்பு ஆகி நின்றவனும் கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக. )

கருவேலி சற்குணேஸ்வரர் சர்வாங்க சுந்தரி ஆலயம் குறித்த தகவல்களைக் கொடுத்துதவிய கோயில் நிர்வாகத்தாருக்கு நன்றியுடன் அடுத்த ஆலய தரிசன அனுபவங்களைத் தொடர்கிறேன்.

.
சற்குணேஸ்வரரை தரிசித்து திரும்பும்போது எதையோ விட்டு விட்டு வந்ததுபோல் தோன்றியது. சர்வாங்க சுந்தரியின் திருவுருவம் மனக் கண் முன் வந்து வந்து போயிற்று. நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான், ஒரு மணிநேர கோயில் தரிசனம். வரும் வழியில் திருநறையூர் என்று அழைக்கப் படும் நாச்சியார் கோயிலுக்கு வந்தோம். அய்யன் ஸ்ரீநிவாச பெருமாளைவிட தாயார் ஸ்ரீவஞ்சுளவல்லிக்குத்தான் முக்கியத்துவமோ என்று எண்ணும்படி ஊரே நாச்சியார் கோயில் என்று அழைக்கப் படுகிறது. கருவறையில் நின்ற கோலத்துடன் இருக்கும் பெருமானின் வலப் பக்கத்தில் தாயாரும் நிற்கிறார். .வலப் பக்கத்தில் நான்முகப் பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும், இடப் பக்கத்தில் வரிசையாக, அநிருத்தன் ப்ரத்யும்னன், சாம்பன் என்ற புருஷோத்தமன் என்பவர் தரிசனம் தருகின்றனர்,

உற்சவர் ஸ்ரீநிவாசருக்கு மூன்றங்குலம் முன்பாக நாச்சியார் சாவிக்கொத்து இடுப்பில் தொங்க தரும் காட்சியில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று சொல்லாமலே புரிபடும். கருடாழ்வார் கல் கருடன் என்று சிறப்பாக அழைக்கப் படுகிறார். பெருமாளுக்கு திருவாராதனம் செய்து முடித்தவுடன் பெரிய திருவடிக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடை பெறுகிறது. நாங்கள் சென்ற சமயம் அவருக்கு தைலக் காப்பிட்டு இருந்ததால் முக சேவை மட்டுமே சாத்தியமாயிற்று, ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. இந்தக் காலத்தில் அந்த மாதிரி கோயில்களை எழுப்ப முடியுமா புரியவில்லை. பல இடங்களில் சலவைக்கல் கொண்டு பிரம்மாண்டமாக கோயில்கள் கட்டப் பட்டிருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் அங்கு தரிசனத்துக்குச் செல்லும் போது ஏனோ மனதை ஒருங்கிணைக்க முடிவதில்லை. பல நிலைகளுடன் கட்டப் பட்டுள்ள கோபுரங்களும் பரந்து விரிந்து சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட தூண்களுடன் கூடிய ப்ராகாரங்களும் ஈடு இணை இல்லாதவை. கோயில் தரிசனம் முடிந்து வரும் ஒவ்வொரு முறையும் இன்னொரு முறை வந்து தரிசிக்க வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணம் எழுகிறது. நமக்குக் கிடைத்த ஒரு சில நாட்கள் மறக்க முடியாததாய் விடுகிறது.

கிட்டத்தட்ட 70-/ கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ரிக்‌ஷாவில் போய் வந்த களைப்பையும் மீறி அடுத்த நாள் பயணத்துக்கு மனதும் உடலும் தயாராயிற்று
--------------------------------------------------.      



      .           






.

செவ்வாய், 10 ஜூலை, 2012

ஆலய தரிசனம் .அனுபவங்கள்..


                                       ஆலய தரிசனம்  அனுபவங்கள்.
                                       ---------------------------------------------


ஒவ்வொரு வருடமும் ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில் அவசியமாக திருச்சி ,வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் என்று க்ஷேத்ராடனம் செல்லும் வழக்கம் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. சிதம்பரம் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின் ஏதாவது ஒரு நாளில் அங்கிருப்போம். இந்த முறை திருவிழா சீக்கிரமே வந்ததால் பார்க்க முடியவில்லை.எப்படி இருந்தாலும் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)

இந்த வருடம் ஜுலை இரண்டாம் நாள் பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஜூலை மூன்றாம் நாள்,சிற்றஞ் சிறுகாலையில் ( திருமதி ஷைலஜா எழுதியபடி ) திருச்சி வந்து சேர்ந்தோம். புறப்படும் முன்பே என் மனைவி என்னிடம் போதிய அளவு பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளச் சொன்னாள். இந்தக் காலச் செலவு பற்றிய என் ஞானம் குறித்து அவளுக்கு எப்போதுமே சந்தேகம்தான். தேவையான பணம் இருக்கிறது . இல்லாவிட்டால்தான் என்ன. ? டெபிட் கார்ட் இருக்கிறது தேவைப்பட்டால் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டேன். எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம், இம்முறை அடிவாங்கியது. ரயிலில் ஏறிய பிறகு பார்த்தால் பர்ஸில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த பணம் இருக்கவில்லை. திருச்சியில் தங்குவதற்கு அறையும் சுற்றுவதற்கு காரும் என் மகன் ஏற்பாடு செய்து இருந்தான்.



எதிர்பார்த்தபடி கோயில் தரிசனங்கள் முடிந்தது. மதியம் SBI – ATM –ல் பணம் எடுக்கக் கார்டை நுழைத்தால் SORRY என்று பதில் வந்தது. என்னுடைய கார்டின் EXPIRY DATE முடிந்திருந்தது. நான் கவனித்திருக்கவில்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்று சந்தடி சாக்கில் என்னை என் மனைவி வாரினாள். நல்ல வேளை. என் மகன் எங்களுக்குத் தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்து எங்களை நிம்மதி அடையச் செய்தான்.

இரண்டாம் முறையாக என் கணிப்பு தவறானது, எனக்கு ஜனங்களை எடை போடத் தெரியும் என்ற எண்ணத்தில், திருச்சியில் பதிவுலக நண்பர்கள் பலர் இருப்பது தெரியும். முகம் பார்த்த அறிமுகம் இல்லாதவர்கள். ஒருவரையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பி ஒருவருக்கு அவரது தொலை பேசி எண் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். மூன்று நாட்களுக்கும் மேலாக காலை மதியம் இரவு என்று பதிலுக்காகக் காத்திருந்தேன். பதில் வரவில்லை. நான் அவரைத் தேர்ந்தெடுத்தது இருவருக்கும் அதிக பிரச்சனை இல்லாமல் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில்தான். என்னை சந்திக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ஏதாவது காரணம் சொல்லி பதிலாவது எழுதி இருக்கலாம். SIMPLE COURTESY  மனம் வருந்தியது நிஜம். ஊரெல்லாம் போய் வந்த பிறகு வை. கோபால கிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக வாழ்த்து அனுப்பி இருந்தேன். நாங்கள் வருவது தெரிவித்திருந்தால் அவரே எங்களை பார்க்க வந்திருப்பேன் என்று எழுதி இருந்தார். என்னிடம் பலரது தொலைபேசி எண்கள் இல்லாததுனாலும் வேண்டிக் கேட்டவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததாலும் பலருக்கும் நான் அஞ்சல் அனுப்பி இருக்க வில்லை. அனுபவங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம் வயதாகி விடுவதாலேயே எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை. I HAVE STILL TO LEARN A LOT. கணினியில் வலைப்பூக்களில் எல்லாப் பதிவர்களின் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை அறிந்து கொள்ளும் நுட்பம் இருக்கிறதா என்ன.?சிலரது மின் அஞ்சல் முகவரிகள் தெரியும். ஒரு முறை ஒரு சக பதிவர் என் பதிவை தெரியாமல் தமிழ் மணத்தில் இணைத்து விட்டதாகக் கூறி இருந்தார். நான் தமிழ் மணத்தில் இணைக்க என் மின் அஞ்சல் முகவரியுடன் பாஸ் வேர்டும் அல்லவாதர வேண்டி உள்ளது. எப்படி அவரால் இணைக்க முடிந்தது என்னும் கேள்வி இன்னும் என் மனதில் குடைகிறது.

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் மாறாதது. அடிக்கடி கேள்விப் படும் சொற்றொடர், இம்முறை நிதர்சனமாகக் கண்டோம். 25-/ வருடங்களுக்கும் மேலாக திருச்சியில் இருந்தவன் நான். ஒவ்வொரு முறை செல்லும்போதும் நிறைய மாற்றங்களைப் பார்க்கிறேன். பல இடங்களும் அடையாளம் தெரியாதபடி மாறி இருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோயில் நிறையவே மாற்றம் கொண்டிருக்கிறது. இப்போதும் ஏதோ கட்டுமானப் பணிகள் நடக்கிறது.
திருச்சி இப்போது மிகவும் காஸ்ட்லியாக உணருகிறேன். மிகவும் சாதாரணமான ஓட்டலில் அறை வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு நபர் ஒரு நாள் வெளியில் உணவு சிற்றுண்டிக்காக குறைந்தது ரூ. 250-/ ஆவது செலவு செய்ய வேண்டி உள்ளது. திருச்சி ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்தால் ரூ.8-/ க்கு அருமையான சுவையான ஃபில்டர் காஃபி விற்கிறார்கள். இந்த மாற்றம்தான் என்னை மகிழ வைத்த மாற்றம்.

மெயின் பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணத்துக்கு ஜூலை நான்காம் தேதி காலையில் பஸ்ஸில் புறப்பட்டோம்.ஒலி பெருக்கிகளில் வந்த அறிவிப்புகள் கவனத்தைக் கவர்ந்தன.அறிவிப்புகள் பேரூந்து ஓட்டுநர்களை கவனமாக வண்டி ஒட்டும்படியும், சரியான நிறுத்தத்தில் நிற்க வேண்டியும் இருந்தது அறிவிப்புகளைவிட அதை சொன்ன விதம் கவனத்தை ஈர்த்தது. ‘ஓட்டுனர்களே நீங்கள் திறமைசாலிகள்.நல்லவர்கள். அதிகம் வேகம் வேண்டாமே. திடீரென்று ப்ரேக் போட்டு பயணிகளை பயமுறுத்தாதீர்கள். வளைவுகளில் வேகம் வேண்டாம். முந்த வேண்டாம்அறிவிப்புகள் பாராட்டும்படி இருந்தன. அரசு வண்டிகளில் ட்ரைவரின் நேர் எதிரே “ அப்பா, ப்ளீஸ், வேகமாப் போகாதிங்க “என்னும் அறிவிப்பு ஓட்டுனருக்கும் ஒரு குடும்பம் அவரை நம்பி இருக்கிறது என்று அறிவுறுத்துவதாய் இருந்தது திருச்சியில் புறப்படும்போதே கும்பகோணம் வரை டிக்கட் எடுத்துப் போகாதீர்கள். தஞாவூரில் பஸ்ஸை 15 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தி விடுவார்கள்.. கால தாமதம் ஆகும். தஞ்சை வரை டிக்கெட் எடுத்து அங்கிருந்து பஸ் மாறிப்போனால் கால விரயத்தைத் தவிர்க்கலாம் என்றார்கள். லக்கேஜுடன் ஏறி இறங்குவதைத் தவிர்க்க நேராகக் கும்பகோணத்துக்கே  டிக்கெட் வாங்கி விட்டோம். எதிர்பார்த்ததைப் போல் தஞ்சையில் 20- நிமிடம் போட்டு விட்டார்கள். ஒன்பதரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்தோம். தஞ்சையைத் தாண்டி கரந்தை வரும்போது திரு.ஹரணியின் இருப்பிடம் இது என்று என் மனைவியிடம் கூறினேன். அவருக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று சின்ன கோபம். காரணங்கள் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் ஹரணி ஐயா ஊர் பழக்கப் படாதவர்கள் பாடு மிகவும் அதிகம் அங்கே. காலையிலேயே சுட்டெரிக்கும் வெயில். பத்தடி போகவென்றாலும் ரூ.40-/ ஆட்டோ ரிக்‌ஷாவுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு வழியாக என் மகன் சொல்லியிருந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். ஒவ்வொரு முறை வரும்போதும் அதுவரை காணாத ஆலயத்துக்கு செல்வது வழக்கம் இந்த முறை நாங்கள் சென்றது ........அடுத்த பதிவில் பார்ப்போமே.