செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நரசிம்ம்மமா\க அவதாரம்

 அவதாரக் கதை ...பாகம் 4..நரசிம்மமாக.

-------------------------------------------------------
(இந்த முறை அவதாரக் கதை சொல்லும் பாணியை மாற்றி
எழுதுகிறேன். சிறுவர், சிறுமிகளுக்கு கதை சொல்லும்போது
அவர்கள் அதில் ஒன்றிப் போய் லயிக்க வேண்டும். அதற்கு 
நான் கதை சொல்லும்போது,அவர்களையே கதாபாத்திரங்களாக
நினைத்துக்கொள்ளச் சொல்லி, நடித்துக்காட்டியும், நடிக்க வைத்தும்
கதை சொல்லுவேன். எழுதும்போது நடித்துக்காட்ட முடியாது. ஆகவே
முடிந்தவரை எந்த இடங்களில் நடிக்கலாம்  நடிக்க வைக்கலாம் 
என்று முடிந்தவரை சுட்டிக் காட்டுகிறேன்.அதன் பின் அவரவர் 
சாமர்த்தியம்.)


               அந்தக் காலத்தில் இரணியகசிபு -ன்னு ஒரு ராஜா இருந்தானாம்.
அவன் ரொம்ப புத்திசாலி, பலசாலி. அவருக்கு ஒரு ஆசை. தனக்கு சாவே
வரக்கூடாதுன்னு. அதுக்கு வேண்டி அவர் ரொம்ப சிரத்தையோட தபசு 
செய்தார்.எப்படின்னா, நேரா ஒரு கால்ல நின்னு,ரெண்டு கையையும் 
மேலே தூக்கிகை கூப்பி கண்ணு ரெண்டையும் மூடி, “ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ”-ன்னுஜெபித்துக் கொண்டே இருந்தார்.(நடித்துக்
காட்டலாம், நடிக்க வைக்கலாம்)


                சோறு தண்ணி இல்லாம தபசு செய்யறதப் பார்த்த சிவபெருமான்
திடீர்ன்னு அவர் முன்னே வந்து ,”பக்தா உன் பக்திக்கு மெச்சினேன். 
உனக்கு என்ன வரம் வேண்டும்-ன்னு கேட்டார்.( சிவபெருமானாக நடித்துக் 
காட்டலாம், நடிக்க வைக்கலாம். ) 


               “ஆண்டவனே,எனக்கு சாவே வரக்கூடாது-ங்ர வரம் வேண்டும “ன்ன
இரணியகசிபு கேட்டார்
சிவபெருமான் “அது முடியாது பிறப்புன்னு இருந்தா இறப்பும் இருக்கும் 
வேறு வரம் கேள் “என்றார்.இரண்யகசிபு புத்திசாலி அல்லவா.சாகாத வரம்
எப்படியாவது வாங்கிடணும்னு யோசிச்சு ஒரு வரம் கேட்டான். அதன்படி 
அவனுக்கு காலையிலோ, மாலையிலோ, இரவிலோ சாவு வரக்கூடாது.
மனுஷனாலயோ,தேவர்களாலயோ, விலங்குகளாலோ, பறவைகளாலோ
சாவு வரக்கூடாது, கத்தி ,அம்பு,கதை போன்ற எந்த ஆயுதத்தாலயும் சாவு கூடாது, வீட்டுக்கு உள்ளேயோ, வீட்டுக்கு வெளியேயோ,சாவு வரக்கூடாது,
தண்ணிலயும், நிலத்துலயும் ,வானத்துலயும் சாவு வரக்கூடாதுன்னு ஒரு
பட்டியலே போட்டு வரம் கேட்டான். 

           “நீ கேட்ட மாதிரி வரம் தந்தேன்” னு சிவபெருமான் சொல்லிட்டு 
மறஞ்சார்.சிவனையே ஏமாற்றி வரம் வாங்கிட்டோம்னு அவனுக்கு ஒரே 
குஷி. எப்படியும் தனக்கு சாவு இல்லைன்னு நெனச்சு அவனுக்கு ஆணவம்
அதிகரிச்சது. அவனுடய சக்திய வெளிப்படுத்த எல்லோரையும் துன்புறுத்த 
தொடங்கினான். அவனுக்கு அவனே கடவுள், எல்லோரும் அவனையே 
தொழணும் ன்னுஅகங்காரம் வந்தது. அதன்பிறகு எல்லோரும் தொழும்
போது “ஓம் இரணியகசிபு நமஹ”என்றேசொல்லணும்; மீறினா கடுந் தண்டனைன்னு அறிவிச்சான். எல்லோரும் அப்படியே செய்யத் தொடங்கினார்கள்.

        இந்த சமயத்துல இரணியகசிபுவின் ராணி லீலாவதி கர்ப்பமாயிருந்தாள்.
“ஓம் நமோநாராயணாய நமஹ, ஓம் நமோ நாராயணாயநமஹ” ன்னு
சொல்லிக் கொண்டே வந்த நாரதர் ராணிகிட்ட திருமாலின் பெருமை 
எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இது இரணிய கசிபுவுக்குத் தெரியாது. 
நாரதர் சொன்னத எல்லாம் கருவிலிருந்த குழந்தை கேட்டு  கிரகித்துக் 
கொண்டது.

         ஒரு நாள் ராணி லீலாவதிக்கும் இரணியகசிபுவுக்கும் ஒரு அழகான 
ஆண் குழந்தை பிறந்தது( இந்த சமயத்தில் கதை கேட்பது ஆண் குழந்தை
யாக இருந்தால், நான் அவனை மாதிரி அழகான, சமத்தான குழந்தை என்று
சொல்லிக் குஷிப்படுத்துவேன்.)குழந்தைக்கு அஞ்சு வயசாகும்போது  குரு
சுக்கிராச்சாரியாரிடம் பாடம் படிக்க அனுப்பினர். பிரகலாதன் னு பேர்வெச்ச 
அந்தக் குழந்தைக்கு மொதல்ல “ ஓம் இரணியகசிபு நமஹ”னுபாடம்      
சொல்லி சுக்கிராச்சாரியார் தொடங்கினார்.ஆனா பிரஹலாதனோ “ஓம் 
நமோ நாராயணாய நமஹ”ன்னுசொன்னான். ( இந்த இடத்தில் குழந்தைகள்
புரிந்து கொள்ள சுக்கிராச்சாரியாரை  ஹெட் மாஸ்டராக்கி, வேறு இரண்டு
ஆசிரியர்களை உருவாக்கி, அவர்கள் சொல்லச்சொல்ல எப்படி பிரஹலாதன் 
மறுபடியும்  மறுபடியும் “ ஓம் நமோ நாராயணாய நமஹ”ன்னுசொல்வதை 
வேடிக்கையாக நடித்துக்காட்டி நடிக்க வைத்து குழந்தகள் அநுபவித்து 
மகிழ்வது கண்டு நாமும் மகிழலாம்)

         வேற வழியில்லாம இரணியகசிபுவிடம் பிரஹலாதன் சொன்ன பேச்ச 
கேக்கிறதில்லைன்னு புகார் பண்ணினார்கள்  ராஜாவும் பிரகலாதன்கிட்ட 
“ஓம் இரணியகசிபு நமஹ” ன்னு சொல்லச்சொன்னார்.பிரஹலாதனோ 
“ஓம் நமோ நாராயணாய நமஹ” என்றே சொன்னான். ராஜாவுக்குக் கோபம் வந்தது. ( ராஜா கொடுக்கும் பல தண்டனைகளை சுவாரசியமாகக் கூறி, 
எப்படி ஒவ்வொரு முறையும், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் குழந்தை
தப்பித்து வந்தான் என்று கூறலாம்)
“யாரங்கே, இவன் ஓம் இரணியகசிபு நமஹ என்று சொல்லாவிட்டால் 
சவுக்கால் அடியுங்கள்” (சவுக்கடி கொடுத்தவர்களுக்கே அடி விழுந்தது
என்றும்) “ மலை மேலிருந்து உருட்டி விடுங்கள் “ (உருட்டிய பின்னும் 
எந்த காயமும் இல்லாமல் வந்தான் என்றும்)”கடலின் நடுவே தள்ளுங்கள்”
(நீரில் மூழ்காமல் நடந்து வந்தான் என்றும்)”பட்டத்து யானையின் காலால்
இரட விடுங்கள்” (யானை கடைசி நேரத்தில் அவனுக்கு மாலை இட்டு 
மரியாதை செய்தது என்றும்) தாய் லீலாவதியைக் கட்டாயப் படுத்தி 
அவனுக்கு நஞ்சு கொடுத்தும், ஏதுமாகாமல் பிரஹலாதன்   மறுபடியும்
மறுபடியும்  ஓம் நமோ நாராயணாய நமஹ, என்றே கூறியதையும் 
சுவாரசியமாக நடித்துக் காட்டியும், நடிக்க வைத்தும்  குழந்தைகளை 
கதையில் ஒன்ற வைக்கலாம்.

“டேய், பிரஹலாதா, உனக்கு உதவி செய்யும் அந்த நாராயணன் எங்கே
இருக்கிறான் .?”

“அப்பா அங்கே இங்கே என்றில்லாமல் எங்கேயும் இருப்பார்  நாராயணன்”

“இந்தத் தூணில் இருக்கானா.?”

“இந்தத் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்.”

இரணியகசிபுவுக்குக் கோபம் வந்து தன் காலால் அந்தத் தூணை எட்டி 
உதைத்தான்.”டமால்” ன்னு வெடிசத்தத்தோட அந்தத் தூண் பிளந்து அங்க
பார்த்தாகோரமான, கோபமான சிங்க முகத்தோட மனுஷ உடம்போட 
பயங்கரமான ஒரு உருவம் , ஆக்ரோஷமா வாய் பிளந்து சத்தம் போட்டு 
இரணியகசிபுவை  வாரித் தூக்கி வாசப்படில , மடில வெச்சு, கை நகத்தால் 
வயித்தக் கீறி வந்த ரத்தத்த குடிச்சு, அப்புறம் என்னாச்சு.? இரணியகசிபு 
செத்துப்போனான்..

       அவனுக்கு கெடச்ச வரமும் பொய்யாகலை.  வீட்டிலும் வெளியிலும் 
இல்லாம வாசப்படிலும், தண்ணிலயும் இல்லை வானத்திலும் இல்லை;
நரசிம்மத்தோட மடிலயும்,தேவர்களோ, மனுஷாளோ, மிருகமோ, பறவையோ இல்லாம, சிங்கமுகங்கொண்ட மனுஷ உடம்போட உள்ளதாலும், 
ஆயுதங்களில்லாம கை நகங்களாலயும், பகலோ இரவோ இல்லாத 
சந்தியா காலத்தில் இரணியகசிபு  மாண்டான். 

        பின்ன என்ன? நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால் ,பிரஹலாதனுக்கு
ஆசிர்வாதம் செய்து வைகுண்டம் போனார்.
 =================================================


      (இந்தக் கதையை பலமுறை சொல்லக் கேட்டு மகிழ்வார்கள் எங்கள்
வீட்டுக் குழந்தைகள். ஒரு முறை உறவுக்கார சிறுவன் லீவு நாட்களில் 
நாக்பூர் சென்றிருக்கிறான். அங்கிருந்த அவனிலும் ஆறேழு வயது 
மூத்த சிறுவனிடம் இந்தக் கதையை சொல்லி இருக்கிறான். அந்த 
சிறுவனுக்கு இரணிய கசிபுவின் பெயரை இரண்ய காஷ்யப் என்று 
சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல.  என் தாத்தா இரணியகசிபு 
என்றுதான்  சொல்லுவார் அதுதான் சரி என்று சண்டைக்கே போய் 
விட்டானாம்.! இன்னுமொரு குறிப்பு. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்
போது எப்போதும் ஒரே மாதிரியாய்த்தான் சொல்ல வேண்டும்.எந்த
சந்தேகமும் வராமல் இருக்க நான் டேப் எடுத்து சொன்னமாதிரியே 
சப்தங்களும் ஏற்ற  இறக்கங்களும்  இருக்கும்.)

3 கருத்துகள்:

  1. சார் கதையும் குழந்தைகளுக்குச் சொல்லும் டெக்னிக் டிப்ஸும் நல்லாருக்கு.

    நம் வீட்டிலும் இப்படி நடித்துச் செய்ததுண்டு.

    கடைசி டிப்ஸ் உட்பட..இப்போதெல்லாம் மொபைல் இருக்கிறதே அதில் காணொளியே எடுத்து செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு