அவதாரகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவதாரகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நரசிம்ம்மமா\க அவதாரம்

 அவதாரக் கதை ...பாகம் 4..நரசிம்மமாக.

-------------------------------------------------------
(இந்த முறை அவதாரக் கதை சொல்லும் பாணியை மாற்றி
எழுதுகிறேன். சிறுவர், சிறுமிகளுக்கு கதை சொல்லும்போது
அவர்கள் அதில் ஒன்றிப் போய் லயிக்க வேண்டும். அதற்கு 
நான் கதை சொல்லும்போது,அவர்களையே கதாபாத்திரங்களாக
நினைத்துக்கொள்ளச் சொல்லி, நடித்துக்காட்டியும், நடிக்க வைத்தும்
கதை சொல்லுவேன். எழுதும்போது நடித்துக்காட்ட முடியாது. ஆகவே
முடிந்தவரை எந்த இடங்களில் நடிக்கலாம்  நடிக்க வைக்கலாம் 
என்று முடிந்தவரை சுட்டிக் காட்டுகிறேன்.அதன் பின் அவரவர் 
சாமர்த்தியம்.)


               அந்தக் காலத்தில் இரணியகசிபு -ன்னு ஒரு ராஜா இருந்தானாம்.
அவன் ரொம்ப புத்திசாலி, பலசாலி. அவருக்கு ஒரு ஆசை. தனக்கு சாவே
வரக்கூடாதுன்னு. அதுக்கு வேண்டி அவர் ரொம்ப சிரத்தையோட தபசு 
செய்தார்.எப்படின்னா, நேரா ஒரு கால்ல நின்னு,ரெண்டு கையையும் 
மேலே தூக்கிகை கூப்பி கண்ணு ரெண்டையும் மூடி, “ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ”-ன்னுஜெபித்துக் கொண்டே இருந்தார்.(நடித்துக்
காட்டலாம், நடிக்க வைக்கலாம்)


                சோறு தண்ணி இல்லாம தபசு செய்யறதப் பார்த்த சிவபெருமான்
திடீர்ன்னு அவர் முன்னே வந்து ,”பக்தா உன் பக்திக்கு மெச்சினேன். 
உனக்கு என்ன வரம் வேண்டும்-ன்னு கேட்டார்.( சிவபெருமானாக நடித்துக் 
காட்டலாம், நடிக்க வைக்கலாம். ) 


               “ஆண்டவனே,எனக்கு சாவே வரக்கூடாது-ங்ர வரம் வேண்டும “ன்ன
இரணியகசிபு கேட்டார்
சிவபெருமான் “அது முடியாது பிறப்புன்னு இருந்தா இறப்பும் இருக்கும் 
வேறு வரம் கேள் “என்றார்.இரண்யகசிபு புத்திசாலி அல்லவா.சாகாத வரம்
எப்படியாவது வாங்கிடணும்னு யோசிச்சு ஒரு வரம் கேட்டான். அதன்படி 
அவனுக்கு காலையிலோ, மாலையிலோ, இரவிலோ சாவு வரக்கூடாது.
மனுஷனாலயோ,தேவர்களாலயோ, விலங்குகளாலோ, பறவைகளாலோ
சாவு வரக்கூடாது, கத்தி ,அம்பு,கதை போன்ற எந்த ஆயுதத்தாலயும் சாவு கூடாது, வீட்டுக்கு உள்ளேயோ, வீட்டுக்கு வெளியேயோ,சாவு வரக்கூடாது,
தண்ணிலயும், நிலத்துலயும் ,வானத்துலயும் சாவு வரக்கூடாதுன்னு ஒரு
பட்டியலே போட்டு வரம் கேட்டான். 

           “நீ கேட்ட மாதிரி வரம் தந்தேன்” னு சிவபெருமான் சொல்லிட்டு 
மறஞ்சார்.சிவனையே ஏமாற்றி வரம் வாங்கிட்டோம்னு அவனுக்கு ஒரே 
குஷி. எப்படியும் தனக்கு சாவு இல்லைன்னு நெனச்சு அவனுக்கு ஆணவம்
அதிகரிச்சது. அவனுடய சக்திய வெளிப்படுத்த எல்லோரையும் துன்புறுத்த 
தொடங்கினான். அவனுக்கு அவனே கடவுள், எல்லோரும் அவனையே 
தொழணும் ன்னுஅகங்காரம் வந்தது. அதன்பிறகு எல்லோரும் தொழும்
போது “ஓம் இரணியகசிபு நமஹ”என்றேசொல்லணும்; மீறினா கடுந் தண்டனைன்னு அறிவிச்சான். எல்லோரும் அப்படியே செய்யத் தொடங்கினார்கள்.

        இந்த சமயத்துல இரணியகசிபுவின் ராணி லீலாவதி கர்ப்பமாயிருந்தாள்.
“ஓம் நமோநாராயணாய நமஹ, ஓம் நமோ நாராயணாயநமஹ” ன்னு
சொல்லிக் கொண்டே வந்த நாரதர் ராணிகிட்ட திருமாலின் பெருமை 
எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இது இரணிய கசிபுவுக்குத் தெரியாது. 
நாரதர் சொன்னத எல்லாம் கருவிலிருந்த குழந்தை கேட்டு  கிரகித்துக் 
கொண்டது.

         ஒரு நாள் ராணி லீலாவதிக்கும் இரணியகசிபுவுக்கும் ஒரு அழகான 
ஆண் குழந்தை பிறந்தது( இந்த சமயத்தில் கதை கேட்பது ஆண் குழந்தை
யாக இருந்தால், நான் அவனை மாதிரி அழகான, சமத்தான குழந்தை என்று
சொல்லிக் குஷிப்படுத்துவேன்.)குழந்தைக்கு அஞ்சு வயசாகும்போது  குரு
சுக்கிராச்சாரியாரிடம் பாடம் படிக்க அனுப்பினர். பிரகலாதன் னு பேர்வெச்ச 
அந்தக் குழந்தைக்கு மொதல்ல “ ஓம் இரணியகசிபு நமஹ”னுபாடம்      
சொல்லி சுக்கிராச்சாரியார் தொடங்கினார்.ஆனா பிரஹலாதனோ “ஓம் 
நமோ நாராயணாய நமஹ”ன்னுசொன்னான். ( இந்த இடத்தில் குழந்தைகள்
புரிந்து கொள்ள சுக்கிராச்சாரியாரை  ஹெட் மாஸ்டராக்கி, வேறு இரண்டு
ஆசிரியர்களை உருவாக்கி, அவர்கள் சொல்லச்சொல்ல எப்படி பிரஹலாதன் 
மறுபடியும்  மறுபடியும் “ ஓம் நமோ நாராயணாய நமஹ”ன்னுசொல்வதை 
வேடிக்கையாக நடித்துக்காட்டி நடிக்க வைத்து குழந்தகள் அநுபவித்து 
மகிழ்வது கண்டு நாமும் மகிழலாம்)

         வேற வழியில்லாம இரணியகசிபுவிடம் பிரஹலாதன் சொன்ன பேச்ச 
கேக்கிறதில்லைன்னு புகார் பண்ணினார்கள்  ராஜாவும் பிரகலாதன்கிட்ட 
“ஓம் இரணியகசிபு நமஹ” ன்னு சொல்லச்சொன்னார்.பிரஹலாதனோ 
“ஓம் நமோ நாராயணாய நமஹ” என்றே சொன்னான். ராஜாவுக்குக் கோபம் வந்தது. ( ராஜா கொடுக்கும் பல தண்டனைகளை சுவாரசியமாகக் கூறி, 
எப்படி ஒவ்வொரு முறையும், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் குழந்தை
தப்பித்து வந்தான் என்று கூறலாம்)
“யாரங்கே, இவன் ஓம் இரணியகசிபு நமஹ என்று சொல்லாவிட்டால் 
சவுக்கால் அடியுங்கள்” (சவுக்கடி கொடுத்தவர்களுக்கே அடி விழுந்தது
என்றும்) “ மலை மேலிருந்து உருட்டி விடுங்கள் “ (உருட்டிய பின்னும் 
எந்த காயமும் இல்லாமல் வந்தான் என்றும்)”கடலின் நடுவே தள்ளுங்கள்”
(நீரில் மூழ்காமல் நடந்து வந்தான் என்றும்)”பட்டத்து யானையின் காலால்
இரட விடுங்கள்” (யானை கடைசி நேரத்தில் அவனுக்கு மாலை இட்டு 
மரியாதை செய்தது என்றும்) தாய் லீலாவதியைக் கட்டாயப் படுத்தி 
அவனுக்கு நஞ்சு கொடுத்தும், ஏதுமாகாமல் பிரஹலாதன்   மறுபடியும்
மறுபடியும்  ஓம் நமோ நாராயணாய நமஹ, என்றே கூறியதையும் 
சுவாரசியமாக நடித்துக் காட்டியும், நடிக்க வைத்தும்  குழந்தைகளை 
கதையில் ஒன்ற வைக்கலாம்.

“டேய், பிரஹலாதா, உனக்கு உதவி செய்யும் அந்த நாராயணன் எங்கே
இருக்கிறான் .?”

“அப்பா அங்கே இங்கே என்றில்லாமல் எங்கேயும் இருப்பார்  நாராயணன்”

“இந்தத் தூணில் இருக்கானா.?”

“இந்தத் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்.”

இரணியகசிபுவுக்குக் கோபம் வந்து தன் காலால் அந்தத் தூணை எட்டி 
உதைத்தான்.”டமால்” ன்னு வெடிசத்தத்தோட அந்தத் தூண் பிளந்து அங்க
பார்த்தாகோரமான, கோபமான சிங்க முகத்தோட மனுஷ உடம்போட 
பயங்கரமான ஒரு உருவம் , ஆக்ரோஷமா வாய் பிளந்து சத்தம் போட்டு 
இரணியகசிபுவை  வாரித் தூக்கி வாசப்படில , மடில வெச்சு, கை நகத்தால் 
வயித்தக் கீறி வந்த ரத்தத்த குடிச்சு, அப்புறம் என்னாச்சு.? இரணியகசிபு 
செத்துப்போனான்..

       அவனுக்கு கெடச்ச வரமும் பொய்யாகலை.  வீட்டிலும் வெளியிலும் 
இல்லாம வாசப்படிலும், தண்ணிலயும் இல்லை வானத்திலும் இல்லை;
நரசிம்மத்தோட மடிலயும்,தேவர்களோ, மனுஷாளோ, மிருகமோ, பறவையோ இல்லாம, சிங்கமுகங்கொண்ட மனுஷ உடம்போட உள்ளதாலும், 
ஆயுதங்களில்லாம கை நகங்களாலயும், பகலோ இரவோ இல்லாத 
சந்தியா காலத்தில் இரணியகசிபு  மாண்டான். 

        பின்ன என்ன? நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால் ,பிரஹலாதனுக்கு
ஆசிர்வாதம் செய்து வைகுண்டம் போனார்.
 =================================================


      (இந்தக் கதையை பலமுறை சொல்லக் கேட்டு மகிழ்வார்கள் எங்கள்
வீட்டுக் குழந்தைகள். ஒரு முறை உறவுக்கார சிறுவன் லீவு நாட்களில் 
நாக்பூர் சென்றிருக்கிறான். அங்கிருந்த அவனிலும் ஆறேழு வயது 
மூத்த சிறுவனிடம் இந்தக் கதையை சொல்லி இருக்கிறான். அந்த 
சிறுவனுக்கு இரணிய கசிபுவின் பெயரை இரண்ய காஷ்யப் என்று 
சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல.  என் தாத்தா இரணியகசிபு 
என்றுதான்  சொல்லுவார் அதுதான் சரி என்று சண்டைக்கே போய் 
விட்டானாம்.! இன்னுமொரு குறிப்பு. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்
போது எப்போதும் ஒரே மாதிரியாய்த்தான் சொல்ல வேண்டும்.எந்த
சந்தேகமும் வராமல் இருக்க நான் டேப் எடுத்து சொன்னமாதிரியே 
சப்தங்களும் ஏற்ற  இறக்கங்களும்  இருக்கும்.)

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

அவதாரங்கள் ப ன்றியாக

அ வதாரக் கதை--...பனறியாக......

...........................................................................

ஜயன், விஜயன்  என்றிருவர் வைகுண்டக் காவலாளிகள
கடமை தவறாது பணி புரிந்தவருக்கு ஆணவம் அதிகரிக்க,
ஒரு நாள் திருமகளுக்கும் அனுமதி தர மறுத்தவர்,
மாலே போற்றும் சனகாதி முனிவரையும் தடுத்ததில்
சினந்தறியாத  முனிவரும் சினம் கொண்டு "பாமரருக்கு
ஏற்படும் ஆணவம் கொண்ட நீங்கள் பூமியில் பிறக்கக்
கடவீர்,"  என்றே சாபமிட்டார்.


திருமகளையும் முனிவரையும் அனுமதியாத காவலர்
பூமியில் பிறப்பதே நன்று என்று திருமாலும் எண்ணினார்.


அகந்தை அகன்று ஆழ்ந்த வருத்தத்தில் சாபவிமோசனம்
வேண்டியவருக்கு ,கருணாமூர்த்தி முனிவர்கள் ஒப்புதலுடன்
பக்தி பூண்டு நூறு பிறவி எடுத்து மீளவா இல்லை விரோதியாக
எதிர்த்து, மூன்று பிறவி எடுத்து மீளவா என்று வினவினார்.

நூறு பிறவி எடுத்து மீள நாட்படும் என்பதால்
மூன்றே பிறவியில் எதிரியாக பிறக்கவே விருப்பம்
தெரிவித்தவர் வேண்டுதல் ஒன்றைக் கூடவே வைத்தனர்.
எதிரியாக பிறப்பெடுத்தாலும் பரந்தாமன் கையால்தான்
மரணம் என்ற வரத்தைப் பெற்றனர்.

சாபம் அனுபவிக்க ,காஷ்யப முனிவருக்கு இரணியாட்சகன்
இரணியன் என்று இரட்டைப் பிறவிகளாக பூமியில் பிறந்தனர்.

மனிதராலும் தேவராலும் அழியக்கூடாத வரத்தை
நீண்டகால தவப்பயனாகப் பெற்றான் இரணியாட்சகன் .
பெற்ற வரம் கொண்டு பூவுலகை வென்றான், தேவலோகம்
வெல்ல வந்தவனைக் கண்டஞ்சி கடலடியில் மறைந்தான்
இந்திரன். தேவருக்கு நன்மை தரும் பூமிப் பந்தை
கடலுக்குள் அமிழ்த்தி அடியில் மறைத்து விட்டான்.

உலகம் மறைந்தது கண்டு மயங்கிய தேவர்களுடன்
நான்முகனும் படைப்புத் தொழில் செய்ய உலகமில்லையே
என்று திருமாலிடம் முறையிட, "அஞ்சேல் " என்று அபயம்
அளித்து பின் விட்ட மூச்சுக் காற்றிலிருந்து வெளிப்பட்ட
பன்றி ஒன்று சில கணத்தில் பெருங்கரியை விட வளர்ச்சி பெற்றது.

கடலுக்கடியில் சென்ற பன்றி பூமிப் பந்தை தன கோரைப்
பற்களில் தூக்கி வரக் கண்ட இரணியாட்சகன்  கோபமுற்று
தன கதாயுதத்தால் பன்றி மீது வீச ஓங்க , அதனை தன முன்
காலால் உதைத்த பன்றியினை, தன கைகளால் பிடித்துக்
கொல்ல வந்தவனை தன கோரைப் பற்களால் கடித்துக்
குதறிக் கொன்றது.

பன்றி வடிவெடுத்த பரந்தாமன் உலகை மீட்டுக் கொடுக்க
தேவர்களும் மகிழ்ந்து துதி பாடி வணங்கினர்.
----------------------------------------------------------------------------
               

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

அவதாரஙகள்ஆமையாக

 அவதாரக் கதைகள் ----ஆமையாக ....

-----------------------------------------------------------

தவ வலிமை மிகுந்த துருவாச முனிவர் ,
திருமகளை வணங்கிவர ,மகிழ்ந்த மகாலட்சுமி ,
அவருக் களித்த ஒரு பூ மாலையை.,எதிரே 
வந்த தேவ ராஜனுக்கு சிறப்பு செய்வதாக 
எண்ணிக் கொடுத்தார். 
தன வல்லமைச் சிறப்பால் செருக்குடனிருந்த
இந்திரன் மாலையைத் தான் அணியாமல், யானையின் 
மத்தகத்தில் வைத்தான். யானை அதனை தன துதிக்கையால் 
எடுத்து காலில் போட்டு மிதித்துவிட ,சினம் கொண்ட 
துருவாசர் தேவேந்திரனை அவன் வலிமை, செல்வம் ,
சிறப்பனைத்தையும் இழக்கக் கடவது, என சாபம் இட்டார்.

வல்லமை  மிகுந்த முனிவரின் வாக்கு பலிக்க 
பொலிவிழந்த இந்திரன் அனைத்தையும் இழக்க, 
அவனுடன் தேவர்களின் நிலையும்  தாழ்ந்தது. 
என்ன செய்ய என்று கூடி ஆய்ந்தவர்கள் 
நான்முகனிடம் குறை கூறிச் சென்றனர். 
பாம்பணைப் பரந்தாமனே சரணம் எனச் 
செல்வதே சிறந்த வழி என்றவன் சொல் கேட்டு 
அனைவரும் திருப்பாற்கடல் சென்று முகுந்தனிடம் 
மன்னித்தருளவும் மறுபடி ஏற்றம் வேண்டியும் யாசித்தனர்.

திருமாலும் திருவாய் மலர்ந்து திருப்பார்க்கடலில்
அமிழ்ந்து  கிடக்கும் செல்வச்சிறப்புகளை 
வெளியே கொண்டுவர ,கடலைக் கடைய கிடைக்கும் 
அமிழ்தம் உண்டால்  அடைவீர் பழைய நிலை ,
பெறுவீர் புதுப்பொலிவும் என்றே அருளி ,தனித்து செய்தல்
இயலாது,கூடவே அசுரர் துணை நாடுங்கள் 
என்று அறிவுரையும் நல்கினார்.

 தேவர்கள் முயன்று பெற்ற நட்பில் அசுரரும் சேர கிடைக்கும் 
பலன்களில்  பாதி பாதிப் பங்கு என்றும் முடிவெடுத்தனர். 

ஒருசேர சிந்தித்து எடுத்த முடிவின்படி, 
மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை 
கயிறாக்கி, பாம்பின் தலையை அசுரர் பிடிக்க 
வால் பாகம் தேவர்களின் பிடிக்குள் சிக்க 
திருப்பார்க்கடல்  கடையப் பட்டது. 
அசுரர்  பிடி இறுக,வலி தாங்காத பாம்பு 
ஆலகால விஷத்தைக்  கக்கியது. 

கொடிய  நெஞ்சின் வேகம் தாங்காத தேவரும் 
அசுரரும் பிடி நழுவ விட கடைதல் நிறுத்தப்பட்டதும் 
மந்தார மலை நிலை பிறழ, கதறி அழைத்தனர்,
காத்தருள வேண்டி நின்றனர். 
ஆமை வடிவெடுத்து, மகாவிஷ்ணு மந்தாரமலை
நிலை சமன் செய்ய தன முதுகில் தாங்கினார். 
காக்கும் கடவுளின் பரிந்துரையில் 
ஆலகால விஷத்தை அரனும்  எடுத்துண்டு, 
நஞ்சின் கொடுமையைத் தானேற்றார்

மீண்டும்  கடைதல் துவங்க பாற்கடலில் 
பல பொருட்கள் தோன்றின..திருமகளும் 
தோன்றித் திருமாலைத  தானடைந்தார். 
வாருணி என்றொரு மாது, மயக்கும்  மது அளிப்பவள், 
அரக்கர் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டாள்
வாருணிக்குப்பின் தோன்றிய தன்வந்திரி  கையில் 
அமிர்த கலசம் காணப்பெற அசுரர் அதைப் பற்றினர். 
தேவர் துயர் துடைக்க திருமாலும் அருள் புரிய, 
மயக்கும் மோகினி  வேடமேடுத்தார். 
ஒப்பந்தப்படி அமுதத்தைப் பிரித்துக் கொடுக்க 
தேவாசுரர்  அனைவரும்  வேண்டி நின்றனர். 

அசுரரும் தேவரும் இரு வரிசையில்கண் பொத்தி நிற்க
பங்கீடு துவங்கியது. தேவர்களுக்கு ஒரு முறை 
வழங்கப்பட்ட அமிர்தம் அசுரருக்கு ஈயப்படாமல் 
மறுமுறையும் தேவர்களுக்கே கொடுக்கப்பட, 
கண் விழித்துக் கண்ட அசுரர் ராகுவும் கேதுவும் 
சினமடைந்து , தேவர்களாக உருமாறி, நின்று 
அமுதம் உண்டனர். அருகில் இருந்து உணர்ந்த 
சந்திர  சூரியர்  மோகினியிடம் முறையிட, 
அவரும் உருமாறிய அரக்கர் தலையில்  கரண்டியால் 
ஓங்கி அடிக்க அமுதம் உண்ட அரக்கர் உயிரிழக்க வில்லை. 

காட்டிக் கொடுத்த  சந்திர சூரியரை பகை கொண்டு 
கிரகண காலத்தில் தீண்டி வருவதாகக் கூறுவர்

கற்றறிந்ததை  உணர்ந்தபடி எழுதினேன். 
அவதாரக் கதைகளில் கிளைகள் பல உண்டு, 
சில சமயம் அவையே முதன்மை பெறுவதும் உண்டு.
=

வெள்ளி, 21 ஜூலை, 2023

அவதாரக்கதை சில புரிதல்கள்

  அவதாரக் கதைகள்

-----------------------------------------------
          நான்   அவதாரக் கதைகள் 
எழுத துவங்கிஇருக்கிறேன். இவற்றை எழுதும் போது எனக்கு எல்லாம் தெரிந்து
எழுதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.ஆனால் எழுதுவது பற்றி
பல இடங்களில் கேட்டும் படித்தும் எழுதுகிறேன். கிருஷ்ணாவதார
கதை எழுதுமுன் மீதி உள்ளதைப் பற்றி எழுத முயலும்போது,
வழக்கம்போல் எனக்கே உள்ள சந்தேகங்கள் எழுந்து ,எழுதுவதற்கு
தடைபோடுகின்றன.

       நாம், பகவான் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்றும்
இன்னும் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துடன் சேர்த்து பத்து
அவதாரம் என்றும் கேள்விப்பட்டும் சொல்லிக் கொண்டும் வந்தி
ருக்கிறோம். சில நாட்களுக்கு முன் “சோ”-வின் “ எங்கே”
பிராமணன் என்னும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில்
“)மொத்தம் பகவானின் 22-/                  அவதாரங்கள் குறித்து சோஅவர்கள் விளக்கம் கூறி, ( 22- அவதாரங்       களையும் பெயர்களுடன் குறிப்பிட்டார்.) சாதாரணமாகப் பத்து          அவதாரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் புகுந்து தெளிய தற்சமயம் எனக்கு வழியுமில்லை,
வசதியுமில்லை. ஆனால் அவதாரக் கதைகள் எழுதுவது என்று
முடிவெடுத்து எழுதி வந்தவன் முன்னேற முடியாமல் தவிக்கக்
காரணம் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் குறித்த தெளிவு
இல்லாததனால்தான்.

           பக்திமாலை என்ற ஒரு தியான ஸ்லோகத் தொகுப்பில்
தசாவதாரஸ்துதி என்று ஒரு ஸ்லோகம். பத்து அவதாரங்களின்
பெயர்களும் அந்தத் துதியில் வருகிறது.

           “மத்ஸ்ய கூர்ம வராக நரஹரி
            வாமன பார்கவ நமோ நமோ
            வாசுதேவ ரகுராம புத்த ஜய
            கல்கியவதாரா நமோ நமோ
            தசவித ரூபா நமோ நமோ “

என்று வருகிறது, இதன்படி புத்தன் ஒரு அவதாரமாகக் கருதப்
படுகிறார்.ஆனால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளாசியுடன் வெளியிடப்பட்ட
ஸ்ரீ தசாவதாரக் கதைகளில் பலராமனை ஒரு அவதாரமாகக்
கூறப்படுகிறது. நான் எழுதியெதெல்லாlம் பெரும்பாலும் இதில்
கூறியுள்ள செய்திகளின் அடிப்படையில் அமைந்ததே.

          ” இதில் திருமால் உழு தொழிலின் மேன்மையை உலகுக்கு
உணர்த்த எண்ணினார். எனவே கலப்பையை படைக்கலமாகக்
கொண்ட பலராமர் வடிவெடுக்க நினைத்தார்” என்று கூறப்பட்டு
இருக்கிறது திருமால் தேவகியின் வயிற்றில் ஏழாவது கருக்
கொண்டதாகவும் , அக்குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு,
மகா காளிதேவி தேவகியின் வயிற்றில் இருந்த கருவை நந்த
கோபனின் இரண்டாம் மனைவி ரோகிணியின் வயிற்றில்
மாற்றி அமைத்தாள் என்றும் ,திருமால் ரோகிணியின் வயிற்றில்
பிறந்து பலராமர் என்ற பெயருடன் விளங்கினார் என்றும் கூறப்
பட்டுள்ளது.

           ஒரே நேரத்தில் திருமால் இரண்டு அவதார புருஷராக
விளங்கினாரா என்ற சந்தேகம் எனக்கெழ, அதைத் தீர்த்துக்
கொள்ளும் அவசியம் உணர்ந்தேன்.

          ஸ்ரீ நாராயண பட்டத்திரியின் ஸ்ரீ நாராயணீயம் படித்துக்
கொண்டு வரும்போது , முப்பத்தேழாவது தசகத்தில் பத்தாம்
பாடலில் “ மாதவனே, உன் ஏவலினால் பாம்பரசனான ஆதி
சேஷன் ஏழாவது கருவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்.
பின், மாயை அவனை ரோகிணியிடம் சேர்த்தாள். அப்போது
சச்சிதானந்த வடிவமாகிய நீயும் தேவகியின் வயிற்றினுள்
புகுந்தாய்” என்ற ரீதியில் செல்கிறது.

         இப்போது பலராமனை அவதார புருஷ்னாக எடுத்துக்
கொள்வதா, புத்தனை அவதார புருஷனாக ஏற்பதா என்ற
சந்தேகம் வலுக்கிறது. பலராமர் ஆதிசேஷனின் பிறப்பா
பரந்தாமனின் அவதாரமா என்னும் கேள்விகள் எழும்போதும்
பலராமரின் அவதார நோக்கம் நான் படித்த வரையில் சரியாக
விளக்கப்படாத நிலையில் அது பற்றி எழுதுவது உசிதமாகப்
படவில்லை.

           பதிவர்களில் பல விஷயங்கள் தெரிந்தவர் இருப்பர்.
அவர்கள் இவற்றுக்கு விளக்கம் கூறினால் அதையும் சேர்த்துப்
படிக்கும்போது தெளிவுகள் பல உண்டாகலாம். ஆக, அடுத்து
கிருஷ்ணாவதாரக் கதை கூடிய சீக்கிரம் எழுதுவேன் என்று
கூறி முடிக்கிறேன்.
----------------------------------------------------------------