எண்ணங்கள் -தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் -தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 அக்டோபர், 2012

எல்லாமே மாயைதான்.


                                    எல்லாமே மாயைதான்..
                                         ---------------------



பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம். 
--------------------------------------------------------------------------------------------.






புதன், 25 ஜூலை, 2012

இன்னார்க்கு இன்னார்......


                                                     இன்னார்க்கு இன்னார்.....
                                                     -------------------------------


ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண் என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள், ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில் பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள் இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

எனக்கு ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத் திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கே என்றார். அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண் காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார். குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது கணிப்பு. உயரம் நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத் தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம் வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது கிடைக்குமா என்று
எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே குவாலிஃபிகேஷன்  அவர் நன்றாகப் பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?

இன்னொரு நண்பர் வீட்டில் பெண் பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல் துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார்,” எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.”


ஆங்கிலத்தில் ஒரு சொலவடை” உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S WIFE.”  உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது. படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம் அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம். அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும் அழகு என்பதற்கு எந்த Definition  -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.?          
   .  .            .