Sunday, September 23, 2012

வாழ்ந்தே தீருவேன்-( 4-)


                                               வாழ்ந்தே தீருவேன் -(-4--)

                                  A PLAY FROM G.M..BALASUBRAMANIAM


காட்சி7
இடம்.- மோஹன் ஆஃபீஸ் ரூம்.
பாத்திரங்கள்.- மோஹன், சேகர், ஆஃபீஸ் பையன், தொழிலாளிகள்

ஆஃபீஸ் பையன்.- சார், யூனியன் பிரெசிடெண்ட் சேகர் நீங்க கூப்பிட்டதாச் சொல்லி வந்திருக்காங்க.

மோஹன்:- வரச் சொல். ( சேகரும் மற்றவரும் வருகின்றன்ர்.)

சேகர்:- குட் மார்னிங் சார். கூப்பிட்டீங்களாமே

மோஹன்.:- யெஸ்.! உன்னை மட்டும்தான் வரச் சொல்லியிருந்தேன். இவர்கள் போகலாம்.

சேகர் :- மன்னிக்கணும் சார்..!தொழிலாளிகளைப் பற்றி தொழிற்சங்கத் தலைவர் மட்டும் பேசறதுக்கு எங்க சங்க ஆணைகள் இடங் கொடுக்காது. சங்கப் பிரதிநிதிகளும் இருப்பாங்க.

மோஹன் :- பட்... ஐ ஆம் நாட் இண்டெரெஸ்டெட்டு ஹாவ் எ க்ரௌட் இன் மை ஆஃபீஸ்..!

சேகர். :- அப்போ வேற எங்காவது பேசலாமே சார்.

மோஹன்:_ ஆர் யூ ஜோக்கிங்.! நீ யார்னு உணர்ந்தும் , யார்கிட்ட பேசறேன்னு தெரிஞ்சும் பேசு...

சேகர் : நான் யார்ன்னு எனக்கு விளங்குது. யாரிட்டப் பேசறேங்கறதும் புரியுது..தயவு செய்து நீங்கள் கூப்பிட்டதன் காரணத்தை தெரியப் படுத்துங்க .

மோஹன் :- சேகர் உன்னைக் கூப்பிட்டது உன்னை எச்சரிக்கத்தான்.நீ உன்னோட வேலைல போதிய கவனம் காட்டாம, வேலை நேரங்களில் சங்க காரியங்களுக்காக அலைகிறாய்ன்னு தகவல் வந்திருக்கு. இது அமலில் உள்ள ஸ்டாண்டிங்  ஆர்டர்ஸ்படி குற்றமாகும். இதுவே உனக்குக் கடைசி எச்சரிக்கை. நிலைமை இப்படியே தொடர்ந்து போனா உனக்கு நல்லதல்ல.

தொழிலாளி 1 :- நீங்க வீணா பயமுறுத்தறீங்க சார். தொழிலாளிகளை மிரட்டிப் பணிய வைக்கலாம்னு  மட்டும் நினைக்காதீங்க. பாட்டாளிகள் நாங்க பொங்கினா, எங்கள் உள்ளம் குமுறி எரிமலை வெடிச்சா, அதன் விளைவு, இந்தத் தொழிற்சாலைக்கு நல்லதில்லைன்னு நாங்க நினைக்கிறோம்.

மோஹன் :- ஷட் அப்..! குற்றம் சாட்டப் பட்டிருப்பது சேகர். பதில் சொல்ல வேண்டியது அவன். நீ குறுக்கே பேசாதே ஜாக்கிரதை...!

தொழி..2 :-தொழிலாளர்களைப் பிரிச்சுப்பேசி நீங்க மிரட்ட முயல்றது இந்த தொழிற்சாலை காணாத வரலாறு.

சேகர் :- உற்பத்தி பெருக , அதனால் அதிக லாபம் கிடைக்க இதுகாறும் எங்க ஒத்துழைப்பைக் கொடுத்து வந்திருக்கோம். இனியும் அந்த நிலை நீடிக்கவே விரும்பறோம். தொழிற்சாலை நல்ல முறையில் நடந்தாத்தானே எங்களுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது , இந்த நாட்டுக்கும் நல்லது. உற்பத்தியைப் பெருக்க வேண்டிய தொழிலாளிகளிடம் தயவு செய்து பகைமை உணர்ச்சியை உண்டாக்காதீங்க. வேறுபாடுகள் இருந்தா சமரசமாப் பேசித் தீர்ப்போம். முதலாளியால் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கத்தின் தலைவன் நான், பிரதிநிதிகள் இவர்கள் சுமூக வழியையே விரும்புகிறோம்.

மோஹன் :- ஹா... ஆஆஅ. ! அங்கீகரிக்கப்பட்ட யூனியன்... !முதலாளி அங்கீகரித்திருக்கலாம்... அது அப்போது. இப்போது நான் அங்கீகரிக்கவில்லை., உங்கள் யூனியனை. நாந்தான் முதலாளி இப்போது. . நான் கொடுக்கும் ஊதியத்தில் வயிற்றைக் கழுவும் நீங்களெனக்கே அறிவுரை கூறுகிறீர்களா ..! பேஷ்...பேஷ் ! அன்றைக்கே சொன்னேன். உங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென்று. அவர் கேட்கவில்லை.. அதனாலென்ன.. இப்பொழுது ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடவில்லை. . உங்களை நான் அங்கீகரிக்கவில்லை... புரிகிறதா..?அங்கீகாரமாம்... யூனியனாம்... தலைவனாம்... கேட்டுக்கேட்டுப் புளித்துப் போய்விட்டது... நீங்கள் போகலாம். 

சேகர் :- மன்னிக்க வேண்டும் சார். .ஒரே ஒரு விளக்கம். “ நான் கொடுக்கும் ஊதியத்தில் வயிற்றைக் கழுவும் நீங்கள் “என்று சொன்னது சரியில்லை. அது எங்களை அவமானப் படுத்துவதுபோல் இருக்கிறது. அவசரப் பட்டு நீங்கள் தெரியாமல் வாய் தவறி சொல்லியிருந்தால் தெரியப் படுத்துங்கள் . நாங்கள் பெரிதுபடுத்தாமல் போய் விடுகிறோம்.

மோஹன் :- தெரியாமல் வாய் தவறிச் சொல்லியிருந்தால்......ஹ ஹ ஹ ஹ்ஹ்ஹஹா. ! நன்றாக இருக்கிறது தமாஷ்.!சேகர், நன்றாக உணர்ந்து , தெரிந்து ஆணித்தரமாகச் சொல்லுகிறேன். நான் கொடுத்து நீ பெறுபவன், அதனால் உன் வயிற்றைக் கழுவுபவன்.

தொழி. 1 :-முதலில் உங்கள் வாயைக் கழுவுங்கள்.

தொழி .2:- நான் கொடுத்து நீ பெறுபவன் என்று சொன்னதை வாபஸ் வாங்கு..!

சேகர் :- மானேஜர், தொழிலாளர்களின் மென்மையான உணர்ச்சிகளை சுடு சொற்களினால் புண் படுத்தாதீர்கள் செய்வது தவறு என்று உணர்ந்து அந்தத் தவறைத் திருத்திக்கிறதால ஒருவன் என்றைக்கும் மதிப்பில் குறைவதில்லை. தயவு செய்து நீங்க சொன்னத வாபஸ் வாங்கிடுங்க.

மோஹன் :- என்ன... மிரட்டறீங்களா...?மறுபடியும் மறுபடியும் சொல்றேன். கொடுப்பவன் நான்.. பெறுபவன் நீ... நான் கொடுத்து நீ பெறுபவன்.

சேகர் :- யார் கொடுத்து யார் பெறுகிறார்கள் என்று நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் மானேஜர் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். எங்கள் உடலின் ரத்தம் , வியர்வையாக மாறி , ஆறாகப் பெருகி ஓடும்வரை உழைக்கிறோமே, அந்த உழைப்புக்கு ஊதியம் பெறுகிறோம். அது நாங்கள் உழைத்துப் பெறுவது. நீ கொடுத்துப் பெறுவ்தல்ல. பாட்டாளிகளின் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காமல் மாட மாளிகைகளிலும் , கூட கோபுரங்களிலும் வாழும் உல்லாச வாழ்க்கை நாங்கள் கொடுத்து நீங்கள் பெறுவது. எங்கள் உழைப்பு என்னும் நீர் பாய்ச்சப்பட்டு, தழைத்து வளர்ந்திருக்கிறது உங்கள் வாழ்க்கை. அது நாங்கள் கொடுத்து நீங்கள் பெறுவது.

மோஹன் :- போதும் நிறுத்து. .. பணம் எங்களிடம் பதவியும் எங்களிடம் நாங்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும்.


சேகர் :_ ஒரு காலத்தில்  நாட்டை அரசன் ஆண்டான். பின் அந்தணன் ஆண்டான், பின் பெருந்தனக் காரன் ஆண்டான், ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் நான்கு சாதியினரில் மூவரின் காலம் சிறந்திருக்கிறது இதுவரை. இப்போது, இது , எங்கள் காலம், ஏழைத் தொழிலாளிகளின் காலம். நிறம் மாறும் பச்சோந்திப் பண மூட்டைகளுக்கு சாவு மணி அடிக்கும் எங்கள் காலம்..பாட்டாளிப் பெரு மக்களின் பொற்காலம். மாறிவரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் கொடுப்பவன் நான் என்று மமதையால் கொக்கரிக்காதே. ! ONE HAS TO GIVE FIRST TO TAKE. !

மோஹன் :- அன்னக் காவடிகளாக வேலை தேடி  காலைப் பிடிக்க வருவது. .ஐயோ பாவம்னு இரக்கப் பட்டு வேலை கொடுத்து ஊதியமும் கொடுக்கும்போது கழுத்தை பிடிப்பது. இதுதானே உங்கள் தொழிலாள வர்க்கத்தின் தன்மை. எதை எதை, எப்படி எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியும். வழியை விடுங்கள் நான் போக வேண்டும்.

தொழி .! :- அதிகார வெறியில் அள்ளிக் கொட்டிய வார்த்தையை வாபஸ் பெறா விட்டால் உங்களை நாங்கள் போக விட மாட்டோம்.

மோஹன் :- YOU ARE TRYING TO THREATEN  ME YOU FOOL.! ( அடிக்கிறான்.)

சேகர் :- மானேஜர்... உன்னைத் திருப்பி அடிக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும். ..?ஆனால் அந்த இழி நிலைக்கு நாங்கள் போனால் எங்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். .! நண்பர்களே ... அமைதியாய் இருங்கள். முதலாளி நல்லவர்... அவரிடம் நியாயம் கேட்போம்.
 .
                                                                           ( திரை )காட்சி _ 8

இடம் :- ரங்கதுரை பங்களா.
பாத்திரங்கள்._ரங்கதுரை, ராஜு, மோஹன், சேகர். தொழிலாளிகள், மாலா ( குழந்தையுடன் )
( திரை உயரும்போது மோஹன் ஆத்திரத்துடன் உலாவுகிறான். )
ரங்க :- இப்போது என்ன குடி முழுகிப் போய் விட்டது போல் ஆத்திரப் படுகிறீர்கள் மாப்பிள்ளை. ....

மோஹன்.:- இனியும் குடி முழுக என்ன இருக்கிறது. நான் அன்றைக்கே சொன்னேன். தொழிலாளிகள் என்றால் அவர்களுக்குக் கூடவே குறைகளும் இருக்கும் கோரிக்கைகளும் இருக்கும், இதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்கக் கூடாதென்று. .கேட்டீர்களா..?இப்போது நமக்கே அறிவுரை வழங்கு கிறார்கள், அவமானப் படுத்துகிறார்கள்.

ராஜு.: - அறிவுரை யார் வழங்கினால் என்ன....ஏற்றதாக இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை... மோஹன்.

மோஹன்.:- உனக்கு ஒன்றும் தெரியாது ராஜு. நீயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை அவமானப் படுத்தப் பார்க்கிறாய்.

ராஜு.:- காமாலைக்காரன் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தெரியுமாம். உனக்கு யாரிடமும் நம்பிக்கை இல்லை. எல்லோரையும் சந்தேகிக்கிறாய். யார் என்ன செய்ய முடியும்..? அது உன் குணம்....

மோஹன் :- என் குணத்தைப் பற்றி உன்னிடம் விளக்கம் கேட்க வரலை.

ரங்க :- அடடடடா.. ! சற்று நேரம் கூட ஒத்துப் போக மாட்டேங்கறீங்களே. உஷ்... ! அது என்ன சத்தம் ..?( தொழிலாளிகளின் கோஷம்... தலைவர் சேகர்--- வாழ்க..! மானேஜர்  மோஹன் ஒழிக.!).

மோஹன். :_அன்னக்காவடிகளின் ஊர்வலம். இங்கேயும் வந்துட்டாங்க..! மாமாஅ... அவர்களை இங்கு வந்து பேச விடாதீர்கள்.

ராஜு.:- நன்றாக இருக்கிறது. நீ சொல்வது. நம் தொழிலாளர்களிப்படி ஆர்பரித்து ஊர்வலம் வருவது இதுவரை நாங்கள் காணாத ஒன்று. இதை இப்படியே விட்டால், அவர்கள் குறைகளை கவனிக்காது விட்டால், நாளை தொழிற்சாலை படுத்துவிடும். அவர்க்ளை நானே எதிர் கொண்டழைக்கிறேன்.வா.. சேகர்... வாருங்கள் வாருங்கள்... என்ன இது ..? என்றைக்குமில்லாதபடி இந்த ஆர்பாட்டமெல்லாம். .....?

சேகர்..:- வணக்கம் சார். எந்தக் காரியம் நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடக்கிறது. தொழிலாளர்களை தன்மானமுள்ள மனிதர்களாகப் பாவிக்கவேண்டும்.நாங்கள் தொழிலாளிகள்தான்..... ஆனால் அடிமைகள் அல்ல. ஏழிகள்தான். ...ஆனால் ஏமாறுபவர்கள் அல்ல. இவ்வளவு நாள் உங்களுக்காக, உங்கள் நல்ல குணத்துக்காகப் பொறுத்திருந்தோம். இனி அது நடக்காது.

ரங்க.:- அமைதியாப் பேசப்பா. ஆத்திரப்படாதே... ஆத்திரம் கண்களை மறைக்கும். அறிவை மயக்கும்.

தொழி. 1 :-தொழிலாளர்களை அவமதிச்சதுக்குமானேஜர் எங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். மானேஜர் மோஹன்  ஒழிக. ...!

மோஹன்.:- நான்சென்ஸ்....மன்னிப்பாவது, நானாவது , இவர்களிடமாவது , கேட்பதாவது.... !ச்சே..! இம்பாசிபிள். ஒருக்காலும் முடியாது... !

ராஜு.:- சேகர் என்ன நடந்ததுன்னு விவரமாகச் சொல்லேன்.

சேகர்.:-தொழிலாளர் யூனியன் நடவடிக்கைகள் இருக்கக் கூடாதாம். தனிப்பட்ட முறையில் எங்களைக் கூப்பிட்டு மிரட்டுகிறார். நியாயம் கேட்கப் போனால் நாயினும் கீழாக நடத்துகிறார். கை நீட்டி எங்களில் ஒருவரை அடித்தும்விட்டார். இதையெல்லாம் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா...?நாங்கள் என்ன  மனிதர்களில்லையா.... எங்களுக்கும் மானம் ரோஷம் எதுவுமில்லையா....?

மோஹன்.:- மானம் ரோஷம் ஏதாவது இருந்தால் வேலையை ராஜினாமா செய்திட்டுப் போங்க. இல்லையென்றால் நானே உங்களை வேலையில் இருந்து நிறுத்திடுவே.

தொழி.2.:- நாங்கள் உன்னுடன் பேச வரவில்லை. முதலாளியிடம் பேசுகிறோம்.

மோஹன்.:- முதலாளியே நான் தானே. எங்கிட்டப் பேசாம வேறு யார் கிட்டப் பேசினாலும் பிரயோசனப் படாது.

ராஜு. :- மோஹன்.. என்ன பேசறேன்னு எண்ணிப் பேசு. நீ இந்தத் தொழிற்சாலைல ஒரு அதிகாரி. அவ்வளவுதான். முதலாளி அல்லன்னு உனக்கே தெரியும்.எல்லோருக்கும் தெரியும்.

மோஹன்.:- ராஜு நான் முதலாளியா அல்லவாங்கறதப் பார்க்கணுமா... இந்த நிமிஷத்தில் இருந்து ‘ யூ ஆர் டிஸ்மிஸ்ட். உனக்கும் இந்த தொழிற்சாலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ( அப்போது அங்கு வந்த மாலா )

மாலா.:- அத்தான்... என்ன இது...?

மோஹன். :- யூ கீப் கொயட்.ஆண்கள் விவகாரத்துல நீ தலையிடாதே. என்ன மாமா... நன் சொல்றது சரிதானே. ...?

ரங்க.:- மாப்பிள்ளை...! நீங்க என்ன பேசறீங்கன்னு உங்களுக்குப் புரியுதா...?

மோஹன்.:- சர்டென்லி.. நன்றாகப் புரிகிறது. நான் இந்த நிமிஷம் முதல் இந்த பங்களா தொழிற்சாலைன்னு எல்லாத்துக்கும் சொந்தக் காரன். மறுத்துப் பேச உங்களால் முடியாது. ..
ராஜு. :- ஏன் முடியாது...?

மோஹன். :- அது அவருக்குத் தெரியும். ஏனென்றால் அவர்தானே தந்தை.... பெரியவர்.... நாலும் தெரிந்தவர்.....மறுத்துப் பேசினால் அவருடைய மகளின் வாழ்வு ஒரு பெரிய பிரச்சனை ஆகிவிடும். ..மாமா.....! மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு உங்கள் மகளின் மீது அக்கறை இருந்தால்நான் தான் இந்தத் தொழிற்சாலையின் தனி முதலாளின்னு இவங்களுக்குச் சொல்லுங்க. இல்லைன்னா..... அதன் பலா பலன்களை நான் சொல்லத் தேவையில்லை.

தொழிலாளிகள்( ஒருமித்து) சார் இதுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள் சார்... மானேஜர் மோஹன் ஒழிக....!

மோஹன்.:-   ஷ் ஷ்ஷ்/// ம்ம்ம்ம்... மாமா சீக்கிரம் சொல்லுங்க...!

ரங்க. :- ஆம்... இந்தத் தொழிற்சாலை முதலாளி இனி மோஹந்தான். ( அதிர்ச்சியில் கீழே விழுகிறார்.)

ராஜு.:- ஓ...மை காட்....!யாராவது டாக்டரைக் கூப்பிடுங்களேன். .. அப்பா....அப்பா..... ( ரங்கதுரை முழித்து முழித்துப் பார்க்கிறார். அவரால் ஏதும் பேச முடியவில்லை. பராலிடிக் ஸ்ட்ரோக் ஆனதால் ஒரு பக்கம் இழுத்துக் கொள்கிறது )

                                                                      ( திரை )  


  
5 comments:

 1. கதை நல்லா இருக்கு...பகிர்வுக்கு நன்றி....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 2. தவறு என்று உணர்ந்து அந்தத் தவறைத் திருத்திக்கிறதால ஒருவன் என்றைக்கும் மதிப்பில் குறைவதில்லை. //

  வசனம் மிக அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 3. அது அவருக்குத் தெரியும். ஏனென்றால் அவர்தானே தந்தை.... பெரியவர்.... நாலும் தெரிந்தவர்.....மறுத்துப் பேசினால் அவருடைய மகளின் வாழ்வு ஒரு பெரிய பிரச்சனை ஆகிவிடும். ..மாமா.....! மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு உங்கள் மகளின் மீது அக்கறை இருந்தால்நான் தான் இந்தத் தொழிற்சாலையின் தனி முதலாளின்னு இவங்களுக்குச் சொல்லுங்க. இல்லைன்னா..... அதன் பலா பலன்களை நான் சொல்லத் தேவையில்லை.//

  மோஹன் மாலாவின் வாழ்க்கையை பணையம் வைக்கிறாரே
  .
  பெரியவர் வேறு இப்படி ஆகி விட்டார்.

  அடுத்தது என்ன நடக்கும் என ஆவலாய் இருக்கிறேன்
  நியாயம் தான் ஜெயிக்கும் இல்லையா சார்.

  ReplyDelete

 4. @ தமிழ் காமெடி உலகம்.இந்த சீரியசான நாடகத்தைப் படித்துக் கருத்து தெரிவிக்கும் உங்களுக்கு நன்றி.

  ReplyDelete

 5. @ கோமதி அரசு, தொடர்ந்து வருகை தரும் உங்களுக்கு நன்றி. எல்லாம் எதிர்பார்த்தபடி, திட்டமிட்டபடி நடந்துவிட்டால் வாழ்வின் சுவை குறைந்து விடும். சம்பவங்கள் நிகழும்போது ஒவ்வொருவரின் அணுகுமுறை வேறாயிருக்கலாம். திடீர் திருப்பங்களும் எதிர்மறை நிகழ்வுகளும் நாடகத்தை ரசிக்கச் செய்யவே எழுதப் பட்டது. அதனூடே என் கருத்துக்கள் சிலவற்றையும் சொல்ல முயன்றிருக்கிறேன். கதையை ரசியுங்கள். வேறு கோணத்தில் இருந்திருக்கலாமா என்று எண்ண வைப்பதே பதிவின் நோக்கம். இன்னொன்று கூற விரும்புகிறேன். இது படிப்பதற்காக எழுதப் பட்டதல்ல. மேடையில் நடிப்பதற்காக எழுதப் பட்டது,. மீண்டும் நன்றி.

  ReplyDelete