ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

எண்ண எண்ணத் தோன்றுவது.


                                எண்ண எண்ணத் தோன்றுவது.
                                ------------------------------------------



நிழல் ஆடியது போன்ற சொற்றொடரை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையிலேயே கண்முன்னே நிழல் ஆடுவது மிகவும் பாதிக்கும் விஷயமாகும். எனக்கு கண் பொறை ( புரை.?) நீக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது பற்றி எழுதி இருக்கிறேன். கண்பார்வை பளிச்சென்று ஆயிற்று. ஆனால் கடந்த சில நாட்களாக என் வலது கண்ணில் ஏதோ நிழல் ஆடுவது தெரிந்தது. பார்க்கும் பொருள் சட்டென மங்கலாகத் தெரியும். சில வினாடிகளில் சரியாகிவிடும். இது அடிக்கடி நிகழவே கண்மருத்துவரை அணுகினேன்.




என்னை சோதித்துப் பார்த்தவர்கள் எனக்கு ஒரு FFA ( fundas fluroceine angiogram ) செய்ய வேண்டும் என்றனர். இதயத்துக்கு ஆஞ்சியோகிராம் கேள்விப்பட்டதுண்டு. கண்ணுக்குமா.?கண்ணின் ரெடினா பகுதியில் ஏதாவது நரம்பு சேதமடைந்து இருக்கிறதா என்று அறிய செய்யும் சோதனை அது என்று தெரிந்து கொண்டேன். மெல்லிய நரம்பிலிருந்து உதிரப் போக்கு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க அந்த சோதனை. முதலில் கண்களை டைலேட் செய்கிறார்கள். பிறகு கை முட்டியில் ஒரு திரவத்தை இஞ்செக்ட் செய்கிறார்கள்.அது உடலின் இரத்த ஓட்டத்துடன் கலந்து உடல் முழுவதும் பயணிக்குமாம். அவர்கள் அப்போது கண்களை பல கோணங்களில் படம் பிடிக்கிறார்கள். படத்தைப் பார்த்து பழுது ஏதாவது தெரிகிறதா என்று கணிக்கிறார்கள் எனக்கு எந்தப் பழுதும் இல்லை என்று சொன்னார்கள். ரெடினாவின் மெம்ப்ரேன் வலுவிழந்து இருப்பதால் இந்த நிழலாட்டம் என்றார்கள். வயதின் கோளாறு, என்னதான் மனசில் இளமையாக உணர்ந்தாலும் வயது காட்டிக் கொடுக்கிறது. அப்படி ஏதாவது சேதம் இருந்தால் அந்த இடத்தை லேசர் சிகிச்சைமூலம் பொசுக்கி விடுவார்களாம். நல்ல வேளை என் கண்கள் இதுவரை நன்றாகவே இருக்கிற்து.
        -------------------------------------------------------              



கண்களில் சொட்டு மருந்து, டைலேஷனுக்காக . போட்டிருந்தபோது அங்கே இருந்த தொலைக்காட்சி ஒன்றில் ( கன்னடத்தில் )மொஹமத் அஃப்சல் குரு பற்றி செய்தி ஓடிக்கொண்டிருந்தது. செய்தி scroll ஆக ஓடிக்கொண்டிருந்தது. கன்னடம் தெரியாத தற்குறி நான். வீட்டுக்கு வந்து முதல் வேலையாக ஆங்கில செய்தி போட்டுப் பார்த்தேன். அஃப்சல் குருவை தூக்கிலிட்டார்கள் என்ற செய்தி அறிந்தேன். எனக்கு ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பது ஒவ்வாத செயல் என்றே தோன்றுகிறது. அதிலும் இந்த அஃப்சல் குரு நேரடியாக பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை. அதற்கு உடந்தை என்றே குற்றச்சாட்டு. இவனுக்கு இவனுக்காக வாதாட சரியான வக்கீல்களும் நியமிக்கப் பட்டிருக்கவில்லை. இவன் தூக்கில் தொங்கினால் நீதி தன் பணியை ஒழுங்காக செய்ததாகுமா.. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளே இம்மாதிரியான ஒரு முடிவுக்குக் காரணமோ என்று தோன்றுகிறது. அதனால் குற்ற வாளி தண்டிக்கப் படக் கூடாது என்பது என் வாதமல்ல. தூக்குத் தண்டனையில் உடன்பாடில்லை என்பதுதான் என் வாதம் . நான் என்ன எண்ணி என்ன பயன்.?ஒட்டு மொத்தமாக இந்த தூக்குதண்டனை என்பது ஒழிக்கப் படவேண்டும் என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன்.
                -----------------------------------------



பலரும் வரவுக்கு மீறிய சொத்து வைத்திருப்பதாகச்செய்திகள் வருகின்றன, எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம் எழுகிறது. நான் பணியில் இருந்தபோது ஒட்டுமொத்தமாக சம்பாதித்த பணம் எவ்வளவு என்று கணக்குப் பார்த்து அதையும் இப்போது என் வீட்டின் ( இடம் உட்பட )மதிப்பையும் பார்த்தால் எனக்கு நான் சம்பாதித்த பணத்தைவிட இப்போது இருக்கும் சொத்தின் மதிப்புக் கூடுதலாக இருக்கும். நான் என் வீட்டு மனையை ரூபாய் எட்டாயிரம் கொடுத்து வாங்கினேன் . அதன் மதிப்பு இப்போது பல லட்சங்களை தாண்டி இருக்கிறது. இந்த ரீதியில் கணக்கிட்டால் அநேகம் பேர் வரவுக்கு மீறுய சொத்து வைத்திருப்பதாகவே எண்ணப் படுவார்கள். Any  opinions.?
               -------------------------------------



Cause and effect பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது மனதில் ஓடிய வரிகள் கீழே. 





கண்ணும் கண்ணும் காணும்போது  காதல் பிறக்கலாம்
கையும் கையும் இணையும் போது வேகம் பிறக்கலாம்.
உதடும் உதடும் உராயும்போது உடலில் தீ பறக்கலாம்
உடலும் உடலும் ஒன்றாயிணைந்தால் கரு உருவாகலாம்.
விளைவுகளின் காரணங்கள் இதால் இது என்றாலும்   
எல்லாம் நடந்தாலும் ஏதும் நிகழாதுமிருக்கலாம்.
--------------------------------------------------------      .           .              
 
 



11 கருத்துகள்:

  1. கடைசியில் கீதையில் சொன்ன மாதிரிதான் ஆகப்போகிறது. நீ என்ன கொண்டு வந்தாய்?

    பதிலளிநீக்கு
  2. வழக்கம்போல சுவாரசியம், பணி தொடரட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. நல்ல வேளை என் கண்கள் இதுவரை நன்றாகவே இருக்கிற்து.

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. எனக்கு எந்தப் பழுதும் இல்லை என்று சொன்னார்கள். ரெடினாவின் மெம்ப்ரேன் வலுவிழந்து இருப்பதால் இந்த நிழலாட்டம் என்றார்கள்.//

    கண்கள் நன்றாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.






    பதிலளிநீக்கு
  5. வீட்டு மனையை ரூபாய் எட்டாயிரம் கொடுத்து வாங்கினேன் . அதன் மதிப்பு இப்போது பல லட்சங்களை தாண்டி இருக்கிறது. இந்த ரீதியில் கணக்கிட்டால் அநேகம் பேர் வரவுக்கு மீறுய சொத்து வைத்திருப்பதாகவே எண்ணப் படுவார்கள்.//

    நீங்கள் சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
  6. சந்தோசம்... இருந்தாலும் அதிக நேரம் கணினியில் வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  7. மிக நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  8. உடல் உடல் என்கிற நினைப்பின் ஆக்கிரமிப்பில் மனசு மறந்தே போய் விடுகிறது. மனசும் மனசும் சேராவிட்டால் வேறு எந்த சேர்க்கையிலும் உபயோகமேயில்லை.

    பதிலளிநீக்கு

  9. @ டாக்டர் கந்தசாமி
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ கோமதி அரசு
    @ திண்டுக்கல் தனபாலன்.
    @ மலர் easy editorial calender
    @ ஜீவி
    பின்னூட்டங்களுக்கு நன்றி. தனபாலன் என் மீதான அக்கரைக்கு மிக்க நன்றி.கந்தசாமி ஐயா /கீதையில் சொன்ன மாதிரிதான் ஆகப் போகிறது/ விளங்கவில்லையே.ஜீவி /உடல் உடல் என்று.... / உடல் நன்றாக இருந்தால்தான் மனசும் நன்றாக இருக்க முடியும். நான் சொன்ன cause and effect -ல் இப்படி இல்லாமலும் இருக்கலாம்.!நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் கொஞ்சமாவது குறையும் வாய்ப்பு. சொத்துக் கணக்கு நீங்கள் சொல்லியிருப்பது ஏற்புடையது.

    பதிலளிநீக்கு
  11. எனக்கு இருக்கும் ஒரு கண்மூடித்தனமான பயம் - கண்களைப் பற்றியது. எழும் பொழுது கண்பார்வை இழந்துவிட்டால் என்ன ஆகும் என்று அஞ்சி பல நாட்கள் தூங்கப் போவதைத் தவிர்த்திருக்கிறேன்!! கண்கள் பற்றி எங்கே எப்போது எத்தனை படித்தாலும் பயம் தான். உங்களுக்கு ஏதும் நிகழாதிருக்க வேண்டுகிறேன்.

    வரவுக்கு மீறிய சொத்துக் கணக்கு.. சொத்து மதிப்பை இயல்பான appreciation and inflation கவனத்தில் கொண்டே கணக்கிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.




    பதிலளிநீக்கு