பல்சுவைப் பதிவுகள்
-----------------------------
விஸ்வரூபம் படத்துக்கு 144-ன் கீழ் தடை விதித்ததை எதிர்த்து கமலஹாசன் நீதி மன்றத்தை அணுகியதுதான் அவர் செய்த தவறு. பிரச்சனையைத் தீர்க்க பல வழிமுறைகள் இருந்தும் அதையெல்லாம் விட்டுவிட்டு நீதி மன்றம் அணுகலாமா.? . அப்படியே அவர் அணுகியதும் நீதிபதி எவ்வாறு அந்தத் தடையை நீக்க உத்தரவு இடலாம்.? ஆகவேதான் இரவோடு இரவாக மேல் முறையீடு செய்து மறுநாளே தடையை நீக்கியதற்கு தடை விதிக்கப் பட்டது பல வழி முறைகளுள் ஒன்றான சரணாகதி தத்துவம் கமலஹாசனுக்குத் தெரியாதது துரதிர்ஷ்டமே.
-------------------------------------------
சிறிய கார் உற்பத்தி குறித்து நம் எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும். VOLKSWAGEN கம்பனி ஒரு சிறிய கார் உற்பத்தியை மேற் கொண்டு இருக்கிறார்களாம். ஒரே இருக்கையுடைய கார் 600 டாலருக்குக் கிடைக்குமாம். ஒரு காலன் டீசலில் 258 மைல்கள் ஓடுமாம். டாங்க் கொள்ளளவு 1.7 காலனாம். ஒரு முறை டாங்கை நிறைத்தால் 404 மைல்கள் போகலாமாம். அதன் வேகம் ஒரு மணிக்கு 60லிருந்து 70 மைல் வரை இருக்குமாம். கணக்குப் போட்டுப்பார்த்தால் ஒரு லிட்டர் டீசலுக்கு 100 கிலோ மீட்டர் தரலாம். கூடிய சீக்கிரமே மார்க்கெட்டுக்கு வருமாம். மின்காரை விட விலை குறைவு. என்ன ஒரே குறை என்றால் ஒருவர்தான் பயணிக்க முடியும்.
--------------------------------------
காலையில் அருகில் இருக்கும் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குச் செல்வது வழக்கம். பலதரப் பட்டவர்களை தினமும் பார்க்கிறேன். ஆனால் கடந்த ஒரு வார காலமாக அங்கிருக்கும் பெஞ்சில் ஒரு சிறிய குடும்பத்தைப் பார்க்கிறேன். அவனுக்கு 30-லிருந்து 35 வயதுக்குள் இருக்கலாம்.அவள் அவன் மனைவியாக இருக்க வேண்டும் கைக்குழந்தையுடனும் கூடவே மூன்று வயதுக்குள் இருக்கும் இன்னொரு குழந்தையும் அருகில். பக்கத்தில் இருக்கும் ஒரு மரக் கிளையில் ஒரு hand bag தொங்கிக் கொண்டு. பார்பதற்கு பஞ்சத்தில் வாடுபவர்கள் போல் இல்லை. சுமாராக உடுத்தி யிருக்கிறார்கள். அவர்கள் யார்.? இரவு எங்கே உறங்குகிறார்கள்? என்னமொழி ? எந்த ஊர்.? ஏன் இப்படி பூங்காவில் தங்குகிறார்கள்? இன்று மறுபடியும் அவர்கள் அங்குதான் தங்குகிறார்களா என்று அறிய மறுபடியும் போய்ப் பார்த்தேன். அவன் இருக்கவில்லை. அவன் குடும்பமிருந்தது.
எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் விசாரிக்கலாம் என்றால் “ உனக்கென்ன ஆயிற்று ? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ”என்று சொன்னால் அவமானமாய் இருக்கும். மாறாக அவர்கள் அவர்களுடைய கஷ்டங்களைப் பட்டியலிட்டு உதவி கேட்டால்......இருக்க இடம் உணவு வேலை இன்னபிற குறைகளைச் சொல்லி அழுதால் ... நம்மால் ஏதாவது செய்ய முடியுமா. ?இரண்டு முதியவர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும். ஒரு வேளை உதவி செய்து அவர்கள் குறைகள் தீர்க்க முடியுமா.?
------------------------------------
இந்த மனிதர்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கை குறித்து கவலைப் படுவதே எனக்கு வாடிக்கையாகி விட்டது. அதே பூங்காவில் ஒரு சிறிய மண்மேட்டுக்கு பலரும் வந்து பூவிட்டு. பொட்டு வைத்து தூப தீபங்காட்டி வழிபடுவதை கண்டு மனம் வருந்தியதுண்டு. அவர்களிடம் அவர்களது அறியாமை பற்றிக் கூற வேண்டும் என்னும் ஆவலை மிகவும் பிரயாசையுடன் அடக்கி வருகிறேன். நான் மூடப் பழக்கம் என்பது அவர்களது நம்பிக்கை. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அதுவே அவர்களுக்கு நிம்மதி என்றால் எனக்கென்ன.? இதற்கு மகுடம் வைத்தாற்போல் இன்று அந்த மண் மேட்டில் ஒரு நாகலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பது கண்டேன்.? என்ன சொல்ல.? ----------------------------------------------
இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு நாங்கள் திருச்சியில் கொதிகலன் தொழிற்சாலைக் குடியிருப்பில் இருந்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் ஒரு எறும்புப் புற்று இருக்க . ஒரு நாள் அவர் மனைவியின் கனவில் அது ஏதோ அம்மனின் இருப்பிடம் என்றும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கட்டளை வந்ததாம். அது அரசல் புரசலாகத் தெரிய வர ஒரு சில நாட்களில் அந்த வீட்டுக்கு பக்தர்களின்
எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த
வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து.
கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு
அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி
அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப்
பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால்
போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர்,
அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில்
அந்த எறும்புப் புற்றை அகற்ற செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த
முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு
வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து
வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும்
அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
இதே BHEL குடியிருப்பில் ஒரு மரத்தடிப் பிள்ளையாராய் இருந்தவருக்கு ஒரு கோயில் கட்டி( அவருக்கு கருவறையில் இடம் கொடுத்து ) பிறகு அந்த வளாகத்தில் அய்யப்பனுக்கும் முருகனுக்கும் மேல்மருவத்தூர் அம்மனுக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்ததும் அந்தக் குடி இருப்பின் வரலாறில் இடம்பெற வேண்டிய விஷயங்கள். இதில் என்னை சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன வென்றால் அந்த வளாகத்தில் இடம் பற்றாக் குறையினால் குடி இருப்பின் இன்னொரு கோடிக்கு பெருமாள் போனார். பிள்ளையார் கோயில் சத் சங்கத்தாலும் , ஐயப்பன் கோயில் ஐயப்ப சேவா சங்கத்தாலும் . முருகன் கோயில் அருள் நெறி திருக்கூட்டத்தாராலும் , அம்மன் கோயில் மேல் மருவத்தூர் பக்தர்களாலும். பெருமாள் ஐயங்கார்களாலும் முக்கிய பங்கேற்கப்பட்டு நடத்தப் படுகின்றன. ஒரு REDEEMING FEATURE என்னவென்றால் எல்லாக் கோயில்களுக்கும் எல்லோரும் செல்வார்கள். ஆனால் இவையெல்லாம் மேற்கூறப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாய் கருதப் படும் ஆண்டவனுக்கு இருக்கும் போஷகர்கள் சாதாரண பக்தர்கள் அல்ல.இதுதான் UNITY IN DIVERSITY யோ. சர்ச்சும் மசூதியும் கோருமளவுக்கு அவர்கள் எண்ணிக்கை இல்லை என்றே நினைக்கிறேன்.
----------------------------------------- . .
பல்சுவை தகவல் இரண்டு... சிந்திக்க வேண்டியவை நான்கு...
பதிலளிநீக்குஎல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குபல்சுவைப்பதிவுகள் சிந்தனையைத்தூண்டுகின்றன ..
ரசித்தேன்.
பதிலளிநீக்குபல்சுவை, தகவல் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநம்பிக்கைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்பது உண்மைதான்.
சின்ன கார் அழகு.
பூங்கா வாசிகள் பற்றிய விவரம் சுவாரசியம்.. எதற்காக அங்கே சில நாள் தங்கிப்போனார்கள் என்று எனக்குள் கேள்விக்குறி வளர்ந்துகொண்டே இருக்கிறது. விசித்திரமான உலகம். விந்தையான மனிதர்கள். பென்சில்வேனியாவில் ஒரு ஊரில் ஒரு பணக்காரர் வருடத்தில் இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு ஊரில் ஹோம்லெஸ் போல வீதியில் படுப்பாராம் - பரம ஏழையின் வாழ்வை அனுபவிப்பதாகச் சொல்வாராம். ஒரு முறை அவரை அலேக்காகக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் அசல் ஹோம்லெஸ் ஆசாமிகள்.
பதிலளிநீக்குகொதிகலன் - நல்ல சொல்.
பதிலளிநீக்குஅம்மன் அருள் வந்தால் என்னவெல்லாம் நடக்கிறது நாட்டில்!
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கும் விஷயங்கள்.
பதிலளிநீக்கு