Tuesday, January 24, 2012

நினைவில் நீ ( அத்தியாயம் மூன்று )


                               நினைவில் நீ...( நாவல் தொடராக.)
                                ----------------------------------------------
                                                          ---3---

   ஜனவரி 26-ம் நாள். பம்பாயில் குடியரசு தின விழா கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது..எங்கு பார்த்தாலும் ஜனத் திரள், எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம்.எங்கு பார்த்தாலும் உள்ள நிறைவை பிரதிபலிக்கும் முகங்கள். உண்மையில் உள்ள நிறைவு இருக்கிறதோ இல்லையோ,குறைந்தது குடியாட்சி தினத்திலாவது மக்கள் தங்கள் முகங்களை இனிமை திகழ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.ஆடவரும் பெண்டிரும் முதியவரும் சிறியவரும், பட்டாம் பூச்சிகளும் வண்டுகளும் என, யுவதிகளும் இளைஞர்களும் விக்டோரியா டெர்மினசிலிருந்து மலபார் ஹில்ஸ் வரை இரண்டறக் கலந்திருந்தனர்.விழாவைக் காணவென்றே முப்பது நாற்பது மைல்கள் சுற்றிலுமிருந்து வந்திருந்த மக்கள் கூட்டத்தில் எள் போட்டால் எண்ணையாய்த்தான் விழும். அந்த ஜனத்திரள் இந்தியாவின் ஒருமைப் பாட்டை ஒருங்கே கொணர்வது போல் எதிரி எவன் பார்த்தாலும் திகிலுறச்செய்யும் வண்ணம் இருந்தது     கூட்டத்தில் ஒருவனாக உள்ளத்து உணர்ச்சிகளை ஓரளவு மறைத்த வண்ணம்  சென்று கொண்டிருந்த பாபுவுக்கு உண்மை எது அல்லாதது எது என்று புரியாத நிலை இந்த எக்களிப்புகளும் களியாட்டங்களும் அங்கு கூடியிருந்த லட்சோப லட்ச மக்களின் உள்ளத்தில் உருவாகியிருக்கும் உண்மையான நிலையா.?இருக்காது. இருந்திருந்தால் தன்னைப் போல ஒரு நிலை படைத்த ஒருவனுக்கு அங்கு இடமிருக்காது.இடமிருக்கிறது என்ற ஒரே காரணத்தாலேயேதன்னைப் போன்றவர்கள் பலரும் அங்கிருக்கிறார்கள் என்ற நிலை வெட்ட வெளிச்சம். ஒளிமயமான பம்பாய் நகரத்தின் உண்மை ஒளியை, அதாவது உள்ளத்து ஒளியை உணர்ந்தவர்களும்,உணராத தன்னைப் போன்றவர்கள் உணர முற்பட்டும் ,அங்கு விழைந்திருப்பதின் நோக்கமும் இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துணர்த்தியது பாபுவுக்கு

உள்ள நிறைவு கொண்டவர்களாவது , எல்லொரும் தங்களைப் போல் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்திக்க முற்பட்டால் குடியாட்சி உண்மையிலேயே அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தைப் பெற்று விளங்குவதாயிருக்கும். ஆனால் உலகமோ சுயநலக் கூட்டுவாதிகளின் ஏகபோக உரிமைக்கான உறைவிடம். இதில் தன்னைப் போன்றவர்கள் எந்த அளவுக்கு எண்ணப் படுவார்கள்.? ஏன் ..தன்னை போன்றவர்களாலேயேஇந்த சுயநலக் கும்பல்கள் உருப் பெறுகின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எண்ணப் படுவதும் நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று முழங்கப் படுவதும் உண்மையான நிலையாக உருவெடுத்தால்........இன்று இங்கு காணும் காட்சி உண்மையான நிலையின் பிரதி பலிப்பாக இருக்கும். ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இரக்கமும் பரிவும், ஏற்றமான வாழ்வுக்கு வழிமுறையும் அமைத்துக் கொடுக்கும் ஒரு அழகானசமுதாயத்துக்கு நிலைக் களனாக,நமது பாரதம் விளங்கும். அங்கு வறுமை இருக்காது, சோம்பல் இருக்காது குரோதம் இருக்காது, அன்பே சிவமாய், அருளே சக்தியாய் உண்மையான ஒளிமயமான சமுதாயமாக விளங்கும். விளங்கத காரணம் இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் குறைவு. செயல்படுபவர்கள் அதிலும் குறைவு. ஏன்...இந்தக் குறைந்த வகுப்பினரின் உருப்படியில் ஒன்று தன்னால் அதிகரிக்கட்டுமே.

     சிந்தனையில் மூழ்கியே ஜனத்திரளால் தள்ளப்பட்டு மறுபடியும் விக்டோரியா டெர்மினசின் முகப்புக்கு வந்து விடுகிறான் பாபு.
 .
பாபு, சமுதாயத்தை சீர் செய்யும் பணி பிறகிருக்கட்டும்.தந்தை இழந்த பிள்ளைகளுடன் திக்குத் தெரியாத வாழ்வின் ஒரு முனையில் நிற்கும் உன் தாயையும் உன் தம்பிகளையும் கதியேறச் செய்வது உன் முதல் கடமை.பிறகு யோசிக்கலாம் உன் புறத்தொண்டு பற்றி......

      “ அப்பா...!கத்திவிடுகிறான் பாபு. தந்தை இல்லையென்ற நிலையே உண்மை என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் கூட அடைந்திருக்கவில்லை பாபுவுக்கு.தந்தையின் குரல் கேட்டது போன்ற பிரமை. தான் கடமை உணர்ச்சி தவறி விட்டோமோ என்ற ஒரு வினாடி சிந்தனையின் சவுக்கடி. .

      அரே, ஏக் ஆத்மி கிர் கயா.( அடே ஒரு மனிதன் விழுந்து விட்டான் ) என்று கூட்டத்தினரின் கலவரம் மிகுந்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் இருந்தது பாபுவுக்கு. .

       அவன் விழித்தெழுந்தபோது, ஆளரவம் அடங்கிய நிலை. அறையின் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த டேபிள லாம்பின் ஒளி பரவாதிருக்க பல்பை மறைத்தபடி ஷேட் பொருத்தி வைக்கப் பட்டிருந்தது. இல்லாவிட்டாலும் ஒளி அவ்வளவு பிரகாசமாகாந்த விடிகாலை நேரத்தில் இருந்திருக்காது. விளக்கு அணைக்கப் பட்டிருந்தது. மலங்க விழித்தவனுக்கு ஏதோ கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வருவது போல் இருந்தது. அவன் புரண்டு படுத்தான், சுற்றுப்புறத்தை நோட்டம் இட. கட்டில் கிறீச்சிட்டது.

       “ அப்பா அவர் எழுந்து விட்டார் “ என்ற ஒரு கீச்சுக் குரல். உடனே சுமார் நாற்பத்தைந்து வயது நிரம்பிய ஒரு மனிதர்,லக்ஷ்மிகளையே உருவெடுத்து வந்தால் போன்ற ஒரு பெண்மணி,இவர்களுக்குப் பின்னால் மேகக் கூட்டத்திடையே புகுந்து வெளிப்படும் சந்திரன் போன்ற ஒரு முகம், இன்னும் இரண்டு மூன்று வாண்டுகள்,

எல்லோரும் கட்டிலை சூழ்ந்து கொண்டனர். எழுந்து நிற்கப் பிரயத்தனப்பட்ட பாபுவை தடுத்து நிறுத்தினார் அப்பெரியவர்.குறிப்புணர்ந்து கொணர்வது பொன்ற பாவனையில் ஒரு “சா “ கோப்பை வெளிப்பட்டது., பின்னாலிருந்த பெண்ணின் கையிலிருந்து. உடற் களைப்பு வேண்டாம் என்று சொல்லக் கூடத் தோன்றாமல் பாபுவை டீ வாங்கி குடிக்க வைத்தது.

       அவன் மயங்கி விழுந்த நிலையையும் அவர்கள் வீட்டுக்கு அவன் கொண்டு வரப்பட்டதையும் ராம்பிரசாத் (அதுதான் அந்தப் பெரியவரின் பெயர் ) விளக்கிக் கூறியவர் தன்னுடைய குடும்பத்தாரையும் பாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவள் என்னுடைய மனைவி. இது என் தங்கையின் பெண்.பெங்களூரில் பெற்றோருடன் இருக்கிறவள் இங்கு கொஞ்ச காலம் எங்களுடன் இருக்க வந்திருக்கிறாள். இந்த மூன்று பெண்களும் என் குழந்தைகள்.  அறிமுகம் ஆங்கிலத்தில் நடந்தது. பாபுவும் தன்னைப் பற்றி எவ்வளவு சுருக்கமாகக் கூற முடியுமோ அவ்வளவு சுருக்கமாகக் கூறினான்.தான் அங்கு ஒரு கம்பனியில் ட்ரெயினிங்காக வந்ததும்  இன்னும் ஒரு மாதத்தில் பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினான். பெங்களூரில் எங்கே என்று அந்தப் பெண் கேட்டாள். அலசூர் என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் பாபு. இவர்களும் கேவல்ரி ரோட் அருகில்தான் இருக்கிறார்கள் என்று ராம் பிரசாத் கூறிய்தும் பாபு ஒருமுறை  அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினான்.ஒரே பார்வையே என்றாலும் யுகாந்திரகாலமாகப் பழகிப் புணர்ந்த ஒரு நேசபாவம் அதில் குடி கொண்டிருந்தது. மறு வினாடியே அந்த விரசபாவத்தை மற்றவர்கள் அறிந்து விடுவர்களோ என்ற துடிப்பில் பார்வையை மீட்டான்.இருந்தாலும் உள்ளத்தின் ஒரு பகுதி லேசாவது போன்றதொரு உணர்ச்சி. சமய சந்தர்ப்பம் இல்லாமல்

   அன்பே.! யானும் நீயும் இசைந்து
   அயல்ல் எவரும் அறியாமல்-வன்பே
   உருவாம் விதியினையும் வளைத்துள்ளாக்கி
   முயல்வோமேல், துன்பே தொடரும்
   இவ்வுலகில் துண்டு துண்டாய் உடைத்துப்பின்
   இன்பே பெருகி வளர்ந்திடுமோர்
   இடமாய்ச் செய்ய இயலாதோ.?       என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

     சிறிது நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தான் பாபு. இரண்டு வருடங்களைத் தள்ளிவிட்ட பாபுவுக்கு மீதம் இருந்த ஒரு மாதத்தைப் போக்குவது என்பது மிகவும் பிரயாசையாய் இருந்தது. அம்மா எப்படி இருக்கிறார்களோ.?தம்பிகள் எல்லோரும் எப்படி இருப்பர்கள்.? இவர்கள் எல்லாம் படித்து ஒரு நிலைக்கு வர எவ்வளவு காலமாகும். எவ்வளவு காலமானால்தான் என்ன.?தந்தைக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். அவர் இல்லையே என்ற ஏக்கம் இல்லாதபடி அவர்கள் வளர வேண்டும். பிறகுதான் அவன் ஆசை அபிலாக்ஷைகள் எல்லாம். எண்ணக்குவியலில் மூழ்கியெழுந்து நாட்களைக் கழிக்கலானான் பாபு.
        ------------------------------------

                                                                                               ( தொடரும் )7 comments:

 1. அருமையாக வந்து கொண்டு இருக்கிறது.

  ReplyDelete
 2. கதை சிறப்பாகத் தொடர்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தொடர் சிறப்பாகப்போகிரது. தொடருங்கள்.

  ReplyDelete
 4. மனம் லயிக்க வைக்கும் தொடர் அய்யா, அருமை.

  ReplyDelete
 5. ஐயா,,

  தொடர்பணிகளின் காரணமாகப் பயணங்களில் இருக்கிறேன். திங்கட்கிழமை உங்கள் நாவலினை வாசித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி.

  ReplyDelete
 6. பம்பாய் குடிய்ரசுதினவிழாவைப்பற்றிய காட்சி, அதைப்பார்த்த பாபுவின் மனநிலை அருமை.  நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று முழங்கப் படுவதும் உண்மையான நிலையாக உருவெடுத்தால்........இன்று இங்கு காணும் காட்சி உண்மையான நிலையின் பிரதி பலிப்பாக இருக்கும். ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இரக்கமும் பரிவும், ஏற்றமான வாழ்வுக்கு வழிமுறையும் அமைத்துக் கொடுக்கும் ஒரு அழகானசமுதாயத்துக்கு நிலைக் களனாக,நமது பாரதம் விளங்கும். அங்கு வறுமை இருக்காது, சோம்பல் இருக்காது குரோதம் இருக்காது, அன்பே சிவமாய், அருளே சக்தியாய் உண்மையான ஒளிமயமான சமுதாயமாக விளங்கும்.//

  நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்றால் நீங்கள் சொல்வது போல் ஒளிமயமான சமுதாயமாக விளங்கும்.

  பாபுவின் அப்பா இறந்து விட்டாரா எல்லா பொறுப்புகளையும் பாபுவிடம் விட்டு விட்டு!

  மயங்கி விழும் பாபுக்கு உதவிசெய்யும் ராமபிராத் குடும்பம்
  நல்ல்வர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

  ReplyDelete
 7. வருகை தந்து கருத்திட்டவர் அனைவருக்கும் நன்றி. திருமதி கோமதி அரசுக்கு ஸ்பெஷல் நன்றி. நாவல் முடிந்த பிறகு முதலில் இருந்து படித்துக் கருத்து தெரிவிக்கும் ஆதரவு நெகிழ்ச்சி அளிக்கிறது. ( படிக்க ஆரம்பித்தவர்கள் தொடராத நிலையில்.)

  ReplyDelete