நாவல் தொடராக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் தொடராக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜனவரி, 2012

நினைவில் நீ ( அத்தியாயம் மூன்று )


                               நினைவில் நீ...( நாவல் தொடராக.)
                                ----------------------------------------------
                                                          ---3---

   ஜனவரி 26-ம் நாள். பம்பாயில் குடியரசு தின விழா கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது..எங்கு பார்த்தாலும் ஜனத் திரள், எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம்.எங்கு பார்த்தாலும் உள்ள நிறைவை பிரதிபலிக்கும் முகங்கள். உண்மையில் உள்ள நிறைவு இருக்கிறதோ இல்லையோ,குறைந்தது குடியாட்சி தினத்திலாவது மக்கள் தங்கள் முகங்களை இனிமை திகழ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.ஆடவரும் பெண்டிரும் முதியவரும் சிறியவரும், பட்டாம் பூச்சிகளும் வண்டுகளும் என, யுவதிகளும் இளைஞர்களும் விக்டோரியா டெர்மினசிலிருந்து மலபார் ஹில்ஸ் வரை இரண்டறக் கலந்திருந்தனர்.விழாவைக் காணவென்றே முப்பது நாற்பது மைல்கள் சுற்றிலுமிருந்து வந்திருந்த மக்கள் கூட்டத்தில் எள் போட்டால் எண்ணையாய்த்தான் விழும். அந்த ஜனத்திரள் இந்தியாவின் ஒருமைப் பாட்டை ஒருங்கே கொணர்வது போல் எதிரி எவன் பார்த்தாலும் திகிலுறச்செய்யும் வண்ணம் இருந்தது



     கூட்டத்தில் ஒருவனாக உள்ளத்து உணர்ச்சிகளை ஓரளவு மறைத்த வண்ணம்  சென்று கொண்டிருந்த பாபுவுக்கு உண்மை எது அல்லாதது எது என்று புரியாத நிலை இந்த எக்களிப்புகளும் களியாட்டங்களும் அங்கு கூடியிருந்த லட்சோப லட்ச மக்களின் உள்ளத்தில் உருவாகியிருக்கும் உண்மையான நிலையா.?இருக்காது. இருந்திருந்தால் தன்னைப் போல ஒரு நிலை படைத்த ஒருவனுக்கு அங்கு இடமிருக்காது.இடமிருக்கிறது என்ற ஒரே காரணத்தாலேயேதன்னைப் போன்றவர்கள் பலரும் அங்கிருக்கிறார்கள் என்ற நிலை வெட்ட வெளிச்சம். ஒளிமயமான பம்பாய் நகரத்தின் உண்மை ஒளியை, அதாவது உள்ளத்து ஒளியை உணர்ந்தவர்களும்,உணராத தன்னைப் போன்றவர்கள் உணர முற்பட்டும் ,அங்கு விழைந்திருப்பதின் நோக்கமும் இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துணர்த்தியது பாபுவுக்கு

உள்ள நிறைவு கொண்டவர்களாவது , எல்லொரும் தங்களைப் போல் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்திக்க முற்பட்டால் குடியாட்சி உண்மையிலேயே அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தைப் பெற்று விளங்குவதாயிருக்கும். ஆனால் உலகமோ சுயநலக் கூட்டுவாதிகளின் ஏகபோக உரிமைக்கான உறைவிடம். இதில் தன்னைப் போன்றவர்கள் எந்த அளவுக்கு எண்ணப் படுவார்கள்.? ஏன் ..தன்னை போன்றவர்களாலேயேஇந்த சுயநலக் கும்பல்கள் உருப் பெறுகின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எண்ணப் படுவதும் நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று முழங்கப் படுவதும் உண்மையான நிலையாக உருவெடுத்தால்........இன்று இங்கு காணும் காட்சி உண்மையான நிலையின் பிரதி பலிப்பாக இருக்கும். ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இரக்கமும் பரிவும், ஏற்றமான வாழ்வுக்கு வழிமுறையும் அமைத்துக் கொடுக்கும் ஒரு அழகானசமுதாயத்துக்கு நிலைக் களனாக,நமது பாரதம் விளங்கும். அங்கு வறுமை இருக்காது, சோம்பல் இருக்காது குரோதம் இருக்காது, அன்பே சிவமாய், அருளே சக்தியாய் உண்மையான ஒளிமயமான சமுதாயமாக விளங்கும். விளங்கத காரணம் இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் குறைவு. செயல்படுபவர்கள் அதிலும் குறைவு. ஏன்...இந்தக் குறைந்த வகுப்பினரின் உருப்படியில் ஒன்று தன்னால் அதிகரிக்கட்டுமே.

     சிந்தனையில் மூழ்கியே ஜனத்திரளால் தள்ளப்பட்டு மறுபடியும் விக்டோரியா டெர்மினசின் முகப்புக்கு வந்து விடுகிறான் பாபு.
 .
”பாபு, சமுதாயத்தை சீர் செய்யும் பணி பிறகிருக்கட்டும்.தந்தை இழந்த பிள்ளைகளுடன் திக்குத் தெரியாத வாழ்வின் ஒரு முனையில் நிற்கும் உன் தாயையும் உன் தம்பிகளையும் கதியேறச் செய்வது உன் முதல் கடமை.பிறகு யோசிக்கலாம் உன் புறத்தொண்டு பற்றி......”

      “ அப்பா...!கத்திவிடுகிறான் பாபு. தந்தை இல்லையென்ற நிலையே உண்மை என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் கூட அடைந்திருக்கவில்லை பாபுவுக்கு.தந்தையின் குரல் கேட்டது போன்ற பிரமை. தான் கடமை உணர்ச்சி தவறி விட்டோமோ என்ற ஒரு வினாடி சிந்தனையின் சவுக்கடி. .

      ” அரே, ஏக் ஆத்மி கிர் கயா.( அடே ஒரு மனிதன் விழுந்து விட்டான் ) என்று கூட்டத்தினரின் கலவரம் மிகுந்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் இருந்தது பாபுவுக்கு. .

       அவன் விழித்தெழுந்தபோது, ஆளரவம் அடங்கிய நிலை. அறையின் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த டேபிள லாம்பின் ஒளி பரவாதிருக்க பல்பை மறைத்தபடி ஷேட் பொருத்தி வைக்கப் பட்டிருந்தது. இல்லாவிட்டாலும் ஒளி அவ்வளவு பிரகாசமாகாந்த விடிகாலை நேரத்தில் இருந்திருக்காது. விளக்கு அணைக்கப் பட்டிருந்தது. மலங்க விழித்தவனுக்கு ஏதோ கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வருவது போல் இருந்தது. அவன் புரண்டு படுத்தான், சுற்றுப்புறத்தை நோட்டம் இட. கட்டில் கிறீச்சிட்டது.

       “ அப்பா அவர் எழுந்து விட்டார் “ என்ற ஒரு கீச்சுக் குரல். உடனே சுமார் நாற்பத்தைந்து வயது நிரம்பிய ஒரு மனிதர்,லக்ஷ்மிகளையே உருவெடுத்து வந்தால் போன்ற ஒரு பெண்மணி,இவர்களுக்குப் பின்னால் மேகக் கூட்டத்திடையே புகுந்து வெளிப்படும் சந்திரன் போன்ற ஒரு முகம், இன்னும் இரண்டு மூன்று வாண்டுகள்,

எல்லோரும் கட்டிலை சூழ்ந்து கொண்டனர். எழுந்து நிற்கப் பிரயத்தனப்பட்ட பாபுவை தடுத்து நிறுத்தினார் அப்பெரியவர்.குறிப்புணர்ந்து கொணர்வது பொன்ற பாவனையில் ஒரு “சா “ கோப்பை வெளிப்பட்டது., பின்னாலிருந்த பெண்ணின் கையிலிருந்து. உடற் களைப்பு வேண்டாம் என்று சொல்லக் கூடத் தோன்றாமல் பாபுவை டீ வாங்கி குடிக்க வைத்தது.

       அவன் மயங்கி விழுந்த நிலையையும் அவர்கள் வீட்டுக்கு அவன் கொண்டு வரப்பட்டதையும் ராம்பிரசாத் (அதுதான் அந்தப் பெரியவரின் பெயர் ) விளக்கிக் கூறியவர் தன்னுடைய குடும்பத்தாரையும் பாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவள் என்னுடைய மனைவி. இது என் தங்கையின் பெண்.பெங்களூரில் பெற்றோருடன் இருக்கிறவள் இங்கு கொஞ்ச காலம் எங்களுடன் இருக்க வந்திருக்கிறாள். இந்த மூன்று பெண்களும் என் குழந்தைகள்.  அறிமுகம் ஆங்கிலத்தில் நடந்தது. பாபுவும் தன்னைப் பற்றி எவ்வளவு சுருக்கமாகக் கூற முடியுமோ அவ்வளவு சுருக்கமாகக் கூறினான்.தான் அங்கு ஒரு கம்பனியில் ட்ரெயினிங்காக வந்ததும்  இன்னும் ஒரு மாதத்தில் பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினான். பெங்களூரில் எங்கே என்று அந்தப் பெண் கேட்டாள். அலசூர் என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் பாபு. இவர்களும் கேவல்ரி ரோட் அருகில்தான் இருக்கிறார்கள் என்று ராம் பிரசாத் கூறிய்தும் பாபு ஒருமுறை  அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினான்.ஒரே பார்வையே என்றாலும் யுகாந்திரகாலமாகப் பழகிப் புணர்ந்த ஒரு நேசபாவம் அதில் குடி கொண்டிருந்தது. மறு வினாடியே அந்த விரசபாவத்தை மற்றவர்கள் அறிந்து விடுவர்களோ என்ற துடிப்பில் பார்வையை மீட்டான்.இருந்தாலும் உள்ளத்தின் ஒரு பகுதி லேசாவது போன்றதொரு உணர்ச்சி. சமய சந்தர்ப்பம் இல்லாமல்

   அன்பே.! யானும் நீயும் இசைந்து
   அயல்ல் எவரும் அறியாமல்-வன்பே
   உருவாம் விதியினையும் வளைத்துள்ளாக்கி
   முயல்வோமேல், துன்பே தொடரும்
   இவ்வுலகில் துண்டு துண்டாய் உடைத்துப்பின்
   இன்பே பெருகி வளர்ந்திடுமோர்
   இடமாய்ச் செய்ய இயலாதோ.?”       என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

     சிறிது நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தான் பாபு. இரண்டு வருடங்களைத் தள்ளிவிட்ட பாபுவுக்கு மீதம் இருந்த ஒரு மாதத்தைப் போக்குவது என்பது மிகவும் பிரயாசையாய் இருந்தது. அம்மா எப்படி இருக்கிறார்களோ.?தம்பிகள் எல்லோரும் எப்படி இருப்பர்கள்.? இவர்கள் எல்லாம் படித்து ஒரு நிலைக்கு வர எவ்வளவு காலமாகும். எவ்வளவு காலமானால்தான் என்ன.?தந்தைக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். அவர் இல்லையே என்ற ஏக்கம் இல்லாதபடி அவர்கள் வளர வேண்டும். பிறகுதான் அவன் ஆசை அபிலாக்ஷைகள் எல்லாம். எண்ணக்குவியலில் மூழ்கியெழுந்து நாட்களைக் கழிக்கலானான் பாபு.
        ------------------------------------

                                                                                               ( தொடரும் )











































வெள்ளி, 20 ஜனவரி, 2012

நினைவில் நீ......(அத்தியாயம் இரண்டு)



                                  நினைவில் நீ ( தொடரும் நாவல் )
                                   --------------------------------------------


   மதி மயங்கும் மாலை நேரம். வெள்ளி நிலா முழு ஒளி வீசி உதிக்கும் வேளை .புள்ளினங்கள் தத்தம் கூடு நோக்கி விரைகின்றன. கிராமமாக இருந்தால்தான் இயற்கையை ரசிக்க முடியுமா.?பெங்களூரில் லால்பாகில் இயற்கை எழிலும் செயற்கை எழிலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் விதம் ஒன்றை ஒன்று தழுவி இருப்பதில் தெரியாமல் போய்விடும். இரண்டும் லயித்திருக்கும் காட்சி கண் கொள்ளாதது. பரபரப்பற்ற ஒரு அமைதி அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்பதை தெளிவு படுத்தியது. கண்ணனுக்கு ஏமாற்றம்.சுற்றுப் புறத்தை ரசிக்கும் சூழலில் அவனில்லை.அமைதியை நாடி வந்தான்.புற உலகு அமைதியாய் இருந்தது.உள்ளமோ புகைந்திருந்தது. ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். இர்ண்டு முறை புகை இழுத்து  வெளிவிட்டான்.ஆத்திரம் அதிகமாயிற்று. சீற்றத்தை சிகரெட்டிடம் காட்டும் முறையில் வீசி எறிந்து ஷூ காலால் நசுக்கினான். ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு ஏதோ தீர்மானித்தவனாய் நடக்கத் தொடங்கினான். நடந்தவனுக்கு அருகில் நடப்பவைகளில் நாட்டம் இல்லையாதலால் எதையும் காணவில்லை. “ வீட்டுக்குப் போகலமா.?” அப்படி உரிமையுடன் வீடென்று சொல்லிக்
கொள்ள எந்த இடமிருக்கிறது. கையில் பணமிருந்தவரையில் சரி உற்றாரும் ஊராரும் கண்ணன் எங்கள் கண்ணன் என்று வாய் கிழியப் பேசினார்கள். இப்போது.? இப்போது மட்டுமென்ன பேச வைக்க முடியாதா.?அதையும்தான் பார்ப்போமே.

கண்ணன் எடுப்பார் கைப்பிள்ளை. இதனை அவனைச் சுற்றி இருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அவர்களின் செயல்வழிகளுக்கு கண்ணன் ஒரு கருவி. எதிரியே மறைந்து விட்ட பிறகு கருவி எதற்கு.?ஆனால் கண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது. நடந்து சென்றவன் கால் வலிக்கவே, அவனை அறியாமலேயே ஆட்டோவைக் கூப்பிட்டு ஏறிக் கொண்டான். “குக் டௌன் போப்பா 

        வீடு வந்து சேர்ந்தவன் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கப் பர்சைப் பார்த்தான். அது காலியாயிருப்பதைப் பார்த்தவன், ‘ கொஞ்சம் நில் “என்று ஆட்டோ ட்ரைவரிடம் கூறி “ பாட்டீ “ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றான். பாட்டி இல்லை .எங்கோ வெளியில் போயிருந்தார்கள்..மாமியிடம் கேட்கலாம் என்றால் கொஞ்சம் கூச்சம். ஆனால் அதற்குள் மாமியின் பெண் ஆஷாவே வெளிப்பட்டு “என்ன அத்தான் “ என்று கேட்கவே தன் காலி பர்சையும் வெளியில் நின்ற ஆட்டோ ட்ரைவரையும் காட்டினான். அவள் விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துத் திரும்பினாள். திரும்பினவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளம் அசுர வேகத்தில் ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு முடிவுக்கு வந்தது. “ஆஷா” திரும்பிச் சென்றவளின் நடை தடைபட்டு நின்றது. “ ஆஷா.. இங்கே வாயேன் ..” என்றும் இல்லாத ஒரு குழைவு அந்தக் குரலில் தென்பட்டது. ஆஷாவுக்குப் புரிந்து விட்டது. அவள் தயங்கி நின்றாள். “ ஆஷா, இந்த வீட்டில் பரிவு காட்ட நீ ஒருத்தியாவது இருக்கிறாயே. !இது உணர்ந்த மாத்திரத்தில் எனக்கு வேலை போனால்தான் என்ன, பணமில்லாவிட்டால்தான் என்ன.?இரண்டும் இல்லாத என்னை நீ நேசிக்கிறாயென்ற உணர்வு போதும். ASHA, I LOVE YOU. “என்று கூறி அவளருகில் சென்றவனை மறைந்து பார்த்திருந்த ஆஷாவின் தம்பி “ அம்மா, அம்மா, அக்காகிட்ட அத்தான் சினிமால லவ் பண்ற மாதிரி என்னவோ சொல்றாரம்மா” என்றான். ஓடி வந்து பார்த்த சரஸ்வதி, “கண்ணா.! ஆஷா !” என்று இரைந்தாள்.ஆஷா ஓடி விலகி விட்டாள். கண்ணன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.மேலும் சரஸ்வதி ஏதோ கூற வாயெடுத்தவள் கண்ணனின் பாட்டி, தன் மாமியார் வருவதைக் கண்டவுடன்.,தன் எண்ணத்தை மாற்றி உள்ளே சென்று விட்டாள்.

    கண்ணன் இருந்த விதம், சரஸ்வதி நின்றிருந்த தோரணை, ஆஷாவின் தொய்ந்த நடை எல்லாவற்றையும் ஒரே வினாடியில் கணக்கெடுத்து நடந்ததை யூகித்தறிந்த பாட்டி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் ஹாலுக்குச் சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள். பெரும் அமைதி புயலுக்குப் பின் தோன்றியதா, இல்லை வரப் போகும் பூகம்பத்துக்கு அறிகுறியா,?எதுவும் நிகழவில்லை.

      சில நிமிஷங்களில் சுந்தர ராமன், கோபாலன், ராகவன் ஆகிய மூவரும் அட்டகாசமாக உள்ளே நுழைந்தனர். வீட்டில் என்றுமில்லா அமைதி நிலவக் கண்டு அவர்களும் திடு திப்பென்று அமைதியாயினர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

 “சுந்தர ராமா ஆஷாவின் கல்யாணத்துக்கு நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா.?”

யாரும் எதிர்பாராத கேள்வி. தாயிடம் இருந்து வெளிப்பட்ட கேள்விக்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ என்று சுந்தர ராமன் யோசிப்பதற்குள் ,”ஆஷாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைப்பதுதான் நல்லது.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ “ என்று கூறியபடியே சரஸ்வதி வந்தாள்.கண்ணனுக்கு தீயின் மேல் நிற்பது போல் இருந்தது. வெளியே செல்ல முயன்றவனை, “ கண்ணா! நீயும் ஒரு வேலைபார்த்துக் கல்யாணத்துக்கு தயாராய் இருக்கும்போது வா. நானே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.இப்போது இங்கிருந்து போய்விடு “என்ற பாட்டியின் குரல் அவனை அயர வைத்தது. தான் கேட்கும் வார்த்தைகளின் முழு அர்த்தததையும் தாங்கிக் கொள்ள அந்த வினாடியில் அவனுக்கு முடியவில்லை. ஏதோ கேட்க முயன்றவனுக்கு அர்த்தம் விளங்க ஆரம்பித்ததும் விர்ரென்று தன் உடைமைகளை பெட்டியில் போட்டுக் கொண்டு அந்த இரவில் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினான்.

       பாட்டியம்மாள் மெள்ள முறுவலித்தாள். சரஸ்வதி சந்தோஷத்தில் சிரிக்க உள்ளே சென்றாள். சுந்தர ராமனுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்ததும், “நன்றாக விரட்டினீர்கள் அம்மா, அந்த தண்ட சோற்று ராமனை” என்றார்.

பெட்டியுடன் வெளியேறிய கண்ணனுக்கு எங்கு போவதென்றே விளங்கவில்லை. எங்கு போனால் அகமும் முகமும் மகிழ்ந்து தன்னை வர வேற்பார்களோ அங்கு மட்டும் போகப் பிடிக்கவில்லை. எந்த நிலையில் இருந்தவன், எந்த மாதிரி வார்த்தைகளைப் பேசியவன், எந்த முகத்துடன்சென்று அவர்களைப் பார்ப்பது.?ஒரு சமயம் அப்படியே அங்கு போனாலும் அவர்களும் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அது சரி. தன் மிது அன்பையே பொழிந்து கொட்டிய பாட்டியும் மாமாக்களும் ஏன் தன்னை ஒதுக்குகிறார்கள்.தான் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போதுதான் தனக்கு மதிப்பா.?பணமில்லாத ஓட்டாண்டியாகி விட்டால் உலகமே தூற்றும் என்பது எவ்வளவு சரி. தான் நல்ல நிலையில் இருந்தபோது தன்னிடம் உதவி கோரி வந்தவர்களை எந்த மாதிரி எல்லாம் பேசி இருப்போம். இப்போது அடிமரமே சாய்ந்து விட்டதே. தான் பேசிய பேச்சுகள்மன்னிக்கப் பட்டிருக்குமா. ..தான் பேசிய பேச்சுகள் மன்னிக்கத்தக்கதா... ஏன்.?பேசியதிலும் நடந்ததிலும் என்ன தவறு.?எதற்கு மன்னிக்கப் பட வேண்டும்.?துள்ளித் திரிய வேண்டிய பருவத்தில்  மூலை முடுக்கில் பதுங்கிக் கிடக்க வேண்டி இருந்ததே. அரை வயிற்றுக்கு கிடைப்பதாயிருந்தாலும் எவ்வளவு பேர் பங்கு.?இவ்வளவு பேர் இருந்திருக்கா விட்டால் எல்லோரும் ஒன்று கூடி தலைமேல் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களோ.இந்த நிலையிலே இக்கட்டிலேயே வளர்ந்து ஏதோ சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகாவதுதன் ஆசை அபிலாக்ஷைகளை நிறைவேற்றலாம் என்றால் அதிலும் பங்கு கேட்க வந்தால் யாராயிருந்தால்தான் என்ன... ஒதுக்கித் தள்ள வேண்டியதுதான். தான் செய்த செய்கை ஒதுக்கப் பட்டவர்கள் மட்டும்தானே தவறு என்றனர். பாட்டி மாமா எல்லோரும் சரி என்றுதானே கூறினர். அன்று சரி என்று கூறி, இன்று தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் புறக்கணிக்கும் இவர்கள் தான் நல்ல நிலையில் இருந்திருந்தால், “ஆஷாவை நீயே கல்யாணம் பண்ணிக்கொள் ‘என்று போட்டி போட்டுக் கொண்டு கூறி இருக்க மாட்டார்களா...இந்த ஆஷா இல்லாவிட்டால்இன்னொரு உஷா...தான் பார்க்காத பெண்களா....இருக்கட்டும் .இப்போதைக்கு எங்கு போவது,?

      கண்ணனுக்கு தன் நண்பன் அருள் வீடு அருகிலிருப்பது நினைவுக்கு வந்ததும் அங்கேயே ஆஜரானான்.கண்ணனும் அருளும் நல்லது பொல்லாதது எல்லாவற்றிலும் சம பங்கு எடுத்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள். அருளுக்கு கண்ணன் அங்கு வந்து தங்குவதில் ஆட்சேபணை இருக்கவில்லை.

                                                                (தொடரும்)                      

  


       














புதன், 18 ஜனவரி, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஒன்று)...

                                    நினைவில் நீ.( தொடரும் நாவல் )
                                    ----------------------------------------------
    (கலைமகள் நாராயணசாமி அய்யர் நினைவு நாவல்
     போட்டிக்காக 1966-/ ம் வருடம் எழுதியதை தூசு தட்டிப்
     பதிவிடுகிறேன் )
     

            மூக்கில் ஆக்ஸிஜென் ட்யூபும், உடலின் சோர்வும்,உள்ளத்தின் பளுவும், இருண்ட எதிர்காலத்தின் நினைவை ரங்கசாமியின் நினைவில் நிறுத்தியது.இருட்டில் ஒளியைத் தேட கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டவரின் கண்களில் நீர் அரும்பியது. எண்ணத் தறியில் கடந்த நிகழ்ச்சிகள் இழையோட இழையோட, எதிர்காலத்து சோபை,விடி வெள்ளிபோல் தென்படும் தறுவாயில், தறி அறுந்தது., நர்ஸின் நடையோசை கேட்டு.

                 விரிப்பை சரி செய்து, ஆக்ஸிஜென் ட்யூபை மாற்றிப் பொருத்தி”டக், டக்,”என்ற மிதியோசை வெளிப்படக் கடந்து சென்ற நர்ஸின் விருப்பு வெறுப்பற்ற கடமை உணர்வைக் கண்டதும், காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை என்ற உண்மையும் தெள்ளெனத் தெரிந்தது. “ காலத்துடன் காலனும் போட்டி போடுகிறானோ” என்ற நினைவு உதித்ததும் உள்ளம் வெதும்பியது. “ ஆண்டவனே நான் சாகக் கூடாது.எனக்கு இன்னும் எவ்வளவொ கடமைகள் இருக்கிறதே. காலனே என்னை அண்டாதே “என்று வேண்டலும் வெதும்பலுமகக் கிடந்தவரின் நினைவுத் தறி மீண்டும் ஓட ஆரம்பித்தது. த்றியின் இழையோட்ட எண்ணங்கள் பாபுவை சுற்றியே பின்னப் படுகிறது. ஏன்.?இருண்ட எதிர்காலத்தின் விடி வெள்ளியாக பாபுவைத்தான் காண்கிறாரோ.?

     அன்று வேலை தேடிசென்ற பாபு ஒரு மாதகாலத்துக்கு திரும்பி வரவேயில்லையே. அந்த இள வயதிலேயே எதிர்பாராத ஏமாற்றத்தின் ஏகபோக உரிமைக்கு ஆளாக்கப் பட்டுவிட்டான் பாபு. வேலை தேடி வந்தவனைக் கண்டதும்  வேலை இருக்கிறது என்று சொன்னவர்கள் எள்ளி நகையாடினர். உடல் வளர்ச்சி குறைவு என்று நிராகரித்தனர். ஏமாற்றம் அவன் உள்ளத்தை வைரமாக்கியது. வேலையில்லாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாய் இருந்தவன் முயற்சியெல்லாம் முக்கால்தோல்விதான்,வேலை கிடைக்கவில்லை என்ற நிலையைப் பொறுத்தவரையில்.ஆனால் கால் பங்கு வெற்றி,உலகத்தின் நடவடிக்கைகளை அந்த இடைக் காலத்தில் உணரக் கிடைத்த வாய்ப்பினால்.  கடைசியில் வீடு வந்து சேர்ந்தவன் எடுத்த காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை உணர்த்தப் பட்டவனாக இருந்தான். தந்தையைக் கண்டதும் தாங்க முடியாத வேதனையாலும் அவமானத்தாலும் நிலை குன்றிப் போனான்.

                அப்படி அன்று மனமொடிந்து வந்தவன் இன்று வாழ்வின் அடிப்படியில் காலெடுத்து வைத்திருக்கிறான். அவனை ஒளிவட்டமாகக் காண்பதில் தான் பெரிய  தவறு செய்கிறோமோ என்று ரங்கசாமி உருகினார்.அவர் அப்படி நினைக்கக் காரணமுண்டு. தன் மூத்த பிள்ளைகளால் ஏமாற்றப் பட்டு பழிக்கப் பட்ட அவர் சுட்ட பால் குடித்த பூனையாயிற்றே. தன்னைப் பழிப்பவர் சுற்றாரும் உற்றாரும் மட்டுமா? உலகமுமா.?அப்படி என்ன பழிதான் செய்துவிட்டோம் தன் இரு மூத்த பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தான் வேண்டியதில்லை என்று நினைத்தால் நடக்காதென்ற காரியமாயிருந்தால் இப்படி ஒரு நிலையே ஏற்பட்டிருக்காதே.

        கஷ்ட நஷ்டங்களைப் பற்று வரவு பார்க்கும்போதும் சில சமயங்களில் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது. நிவர்த்திக்கப்பட முடியாத காரியங்களிலும் சில நன்மைகள் தெரிகிறது. தன் காரியங்களைப் பழித்துதனக்கெதிராக கிளம்பியுள்ள பிள்ளைகளால் நன்மைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும் துன்பங்களாவது தவிர்க்கப் பட்டு விட்டதே.இல்லையென்றால் என்றும் ஒரே போராட்டமாயிருந்திருக்கும். இப்போதும் போராட்டம் இல்லையென்றல்ல. இப்போதைய போராட்டங்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் பாதையமைக்கும் பணியில்தான். மற்றபடியிருந்தால் கூடவே மனப் புகைச்சல்களும் பூசல்களும் கூடவே இருந்திருக்கும். தன் சுய கௌரவமும் எண்ண ஈடுபாடுகளும் செயல்களும்பிறருக்காக விட்டுக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும். விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசை

   .தான் எண்ணியபடி இரண்டாம் முறை மணந்தது தவறு என்றால், தவறு எது சரி எது என்று நிர்ணயிக்கப் படமுடியாத ஒரு சந்தர்ப்பத்தினால் ஏற்படும் ஒரு முடிவேயாயிருக்கும். எந்த ஒரு கொள்கைக்கும் இரண்டு வாதம் இருக்கும். அது சந்தர்ப்ப சூழலால் அவரவர் ஏற்கும் முடிவைப் பொறுத்தது. தான் செய்தது தவறு அல்ல என்ற எண்ணம் இறக்கும் தருவாயிலும் இருப்பது தன் கொள்கையின் , முடிவின் சரித்தன்மையைக் காட்டுகிறது. மேலும் தன் இரண்டாம் மனைவி தன் மூத்தாள் பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் கவனித்தது எல்லோரும் அறிந்ததே. அறிந்ததை இல்லையென்று நிரூபிக்க முயல்வது செயல் நிகழ்த்தியவரைப் பழிப்பதற்கே ஆகும். அது யார் குற்றமுமல்ல.

            மேலும் இருந்த ஒரே பெண்ணும் மணமுடிந்து குடியும் குடித்தனமுமாக எங்கோ இருக்கிறாள். .இவர்கள் எல்லோரும் தன் சாவுக்காவது வருவார்கள். வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால் அவர்களின் அறியாமையும் மன்னிக்கப்படும்.

            ஆனால் சாவை எதிர்பார்க்கும் நிலையிலா ரங்கசாமி இருந்தார்.?வளர்ந்த பிள்ளைகள் வளர்க்கப்பட்ட விதத்திலாவது வளர்ந்து வரும் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டுமே.. அதற்கு பற்றுகோல் போல் பாபுவை நாடுவது சரியா. பாபுவோ சுயமாக வாழ இப்போதுதான் வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறான். தன்னாலேயே தாங்க முடியாத வறுமைப் பிணியை அந்த இளம் பிள்ளை தாங்குமா.? தெய்வமே தனக்கு சாவு வரக் கூடாது என்ற பிரார்த்தனையே அடிக்கடி எழுந்தது. பிரார்த்திக்கும்போதெல்லாம் பாபுவையே கோடி காட்டும் தெய்வம் அவனிடமே தன் பொறுப்புகளை சுமத்தச் செய்யுமா.? சிந்தனைகள் சிக்கலில் சுழலச் சுழல எண்ணம்  தடை படுகிறது. நெஞ்சு வலிக்கிறது. இதோ....டாக்டர் போகிறாரே...அவரை கூப்பிடலாமா “ டாக்டர் “

          வாழ்க்கையில் கிடைத்த பெரும் வெற்றி பாபுவுக்கு அவனைப் பொறுத்தவரை அவனாகவே தேடிப் பெற்ற வேலைதான். வேலை என்பதைவிட பயிற்சி என்பதே சரியாகும் மூன்று வருஷங்களில் ஒரு வருஷத்தை ஓரளவு முடித்தாயிற்று. தான் சம்பாதிக்கும்போது தன் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியடையும். அப்பாவுக்கு சரி நிகராகப் பணிக்குப் போகலாம். தன்னையும் தந்தையை மதிப்பது போல் தம்பிகள் மதிப்பார்கள்.. அம்மாவும் ஒருவித ஸ்பெஷல் கவனிப்பைக் காட்டுவாள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் அப்பா ரிடையர் ஆகிவிடுவாரே. அப்போது இந்தக் குடும்பம் ஒருவன் சம்பாதித்து வாழ வேண்டி இருக்குமே. வித்தியாசம் தந்தைக்குப் பதில் தான் பொறுப்புகளை ஏற்பதாகத்தான் இருக்கும். வறுமை ஒழியாது. சந்தோஷம் இருக்காது. எண்ணியது நடக்காது மொத்தத்தில் வாழ்க்கையே சுவைக்காது. நடக்காத செயல்களை நடப்பதாக பாவித்துஇன்பமும் துன்பமும் அடைபவர்கள் ஏராளம். ஆனால் வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வாழும் பாபுவுக்கு இன்பத்தை பற்றியும் சுக வாழ்வு பற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.இதனைவிட கஷ்டமில்லாமல் இருந்தால் சரி என்ற துறவு உணர்ச்சியே அந்த இள வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. எதிர்காலத்தை எதிர் நோக்கும்போது எதிர்பாராதது ஏதும் இருக்கலாகாது என்ற கொள்கை அவனை அறியாமலேயே அவனிடம் இருந்தது.,அவனது பிற்காலத்தில் பெரிதும் உதவியது. ரங்கசாமியும் பாபுவுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை “நல்லதை எதிர்பார். அல்லாததற்கும் தயாராய் இரு “என்பதுதான்.

         ” பாபு உனக்கு அர்ஜெண்டாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உன் அப்பா, ஆஸ்பத்திரியில் கொஞ்சம் சீரியசாம்...உடனே போ.” செய்தி சொன்னவன் முடிக்கவுமில்லை., பாபு பறந்து விட்டான். ஆஸ்பத்திரி வாசலில் தடை செய்த காவலர்களையும் சட்டை செய்யாமல் பதறிச் சென்ற பாபுவை ரங்கசாமி புன்னகையுடன் வரவேற்றார்,தாயும் தம்பிகளும் இருந்தனர். பயங்கரமான சூழ்நிலையை எதிர்பார்த்துச் சென்ற பாபுவுக்கு ரங்கசாமி இருந்த விதம் ஆறுதல் தந்தது.

        “என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்.நீங்களானால் அரச தர்பாரில் இருக்கிறமாதிரி இருக்கிறீர்களே. உடம்பு பரவாயில்லையா அப்பா, டாக்டர் என்ன ச்ப்ல்கிறார்.? டாக்டர் எங்கே.?”

         “டேய், டேய், பதட்டப்படாதே.!ஏதோ உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்தது. டாக்டரிடம் சொன்னேன். உனக்கும் செய்தி அனுப்பினார்கள்.கவலைப்பட எதுவுமேயில்லை. “

  முசு முசு என்று வரும் மூச்சுக் காற்றையும் கட்டுப்படுத்த முயன்று முழ பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் ரங்கசாமி. அணையும் தீபச்சுடர் நின்றெரியும்போது ஏற்படும் பிரகாசம் அலாதியாக அவர் முகத்தில் தெரிந்தது. தெரிவித்ததை உணரும் வயதில்லையே பாபுவுக்கு. அவனும் நம்பினான். சிறிது நேரம் எல்லோருமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குப் போக நேரமாகிவிட்டது என்று உணர்த்தப் பட்டார்கள். பிக்னிக் வந்த பிள்ளைகள் போல் துரு துருவென்று இருந்தனர் தம்பிகள்.கல்யாணி அம்மாவுக்கு ஏதோ தெரிந்தும் தெரியாதது போன்ற பிரமை. அந்த பிரமையிலேயே கட்டுப்பட்டுக் கிடக்க ஏங்கியது உள்ளத்தின் ஒரு பகுதி. மூடுபனி
போன்ற சூநிலை தெளியத் தொடங்கினால் அங்கு தெரியும் காட்சி...அப்பப்பா .பயங்கரம்

  தெய்வமே.. வேண்டாம் இந்த நிலை.. எதையும் கோடி காட்டாதே எண்ணுவதெல்லாம் எண்ணமாகவே இருக்கட்டும் கணவனை மறுமுறை கூர்ந்து நோக்கினாள் கல்யாணி அம்மா. அவர் முகத்தில் கண்ட அசாதாரண அமைதி கல்யாணி அம்மாவுக்கு உறுதியைத் தந்தது. கண நேரம் தான் நினைத்து கலங்கி விட்ட பைத்தியக் காரத்தனத்தை நினைத்துச் சிரித்தாள் சிரிப்புடன் விடையும் பெற்று வீட்டுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் அனைவரும் சிறிது தூரம் சென்றதும் பாபுவை மட்டும் விளித்தார் ரங்கசாமி. மற்றவர்கள் தயங்கி நின்று மறுபடியும் தொடர்ந்து சென்றார்கள். அருகில் வந்து நின்ற பாபுவை தன் அருகில் அமரச் செய்தார் ரங்கசாமி.

    என்னென்னவோ பேசத்துடித்தது மனம். எண்ணியதை எல்லாம் சொல்லில் கொட்டினால் கொட்டியவற்றின் முழு சக்தியையும் பாபு தாங்குவானா.?சில சமயம் தாங்கும் சக்தி இல்லாதவர்களிடமும் தாங்க முடியாத சுமைகள் தவிர்க்க முடியாத சமயங்களில் ஏற்றப்படும்போது, பெரும்பாலும் ஆண்டவனே அதை ஏற்றுக்கொள்கிறான்., ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை வேண்டும். பல விஷயங்களை மறைக்க முயன்றார் ரங்கசாமி. முடியவில்லை. ஒரு பெருங்கதையே அவனுக்குக் கூறினார்.சொல்லப்பட்ட விஷயங்களெல்லாம் கேட்ட பாபுவுக்கு தன் தந்தை எவ்வளவு பொறுமையோடு வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறார் என்று தெரிந்தது. வறுமையிலும் வாழ்வின் எதிர்ப்பிலும் தனக்கு சரியென்று பட்டவற்றை மனிதாபிமான உணர்ச்சியுடன் செய்து வந்து  முடிக்க முடியாத நிலையில் உடலுக்குப் பிணி வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் ஏற்ற கடமையை அவர் விட்ட இடத்தில் தொடர அவர் குணம் அறிந்த ஒருவர் வேண்டும்ரங்கசாமிக்கு பாபுவிடம் ஒரு தனிப் பற்றுதல். தந்தை தனயன் என்ற நிலைக்கும் அப்பாற்பட்டது. தனக்கு சமமானவன் என்ற எண்ணம். இது பாபுவின் விஷயத்தில் நன்மைக்காக அமைந்தாலும் மற்றவர்கள் விஷயத்தில் , முக்கியமாக மூத்த பிள்ளைகள் விஷயத்தில் மாறாக அமைந்தது. சமத்துவம் கொடுக்கப் பட வேண்டிய இடத்தில் பெறுபவர் தன்மையறிந்து தரப்பட வேண்டும். மூத்த பிள்ளைகள் தற்கால முற்போக்கு சந்ததியினரின் பிரதிநிதிகள் தனி வாழ்வு எனும் கொள்கையில் மட்டும்.

    கடைசியாக ரங்கசாமி பாபுவிடம் கேட்டது பாபுவை அதிர வைத்து விட்டது. “ பாபு ! எனக்குப் பிறகு உன் சித்தியையும் உன் தம்பிகளையும் உன்னை நம்பித்தான் விட்டுப் போவேன். அவர்களைக் கை விட மாட்டாயே பாபு..’ கெஞ்சாத குறைதான்.

   ஏனப்பா இப்படியெல்லாம் கேட்டு வருத்துகிறீர்கள்.நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் இகழ்ந்தவர்கள் ஏற்றிப் பேசும் அளவுக்கு என் தம்பிகளும் தாயும் வள மடைவார்கள் வளமடையத்தான் வேண்டும். ஒரு பாவமும் அறியாதவர்களை ஆண்டவன் சோதிப்பான் ,அவர்களை ஆண்டவனே சோதனையிலும் வெற்றியடையச் செய்வான் என்றும் கூறியிருக்கிறீர்களே. உங்களுக்குப் பிறகு என்றெல்லாம் பேசி ஏன் மனம் உடைகிறீர்கள். நீங்கள் என்னிடம் அப்படிக் கேட்கும்போது  என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்று எண்ணத்தூண்டுகிறது. உங்கள் மகன் உங்களை ஏமாற்ற மாட்டான்”---விம்மி வெடித்தது பாபுவின் நெஞ்சம். –ஒரு சமயம் அப்படியும் நேர்ந்து விட்டால்.... ...நேர்ந்து விடாது.. நேரக் கூடாது. இது உறுதி.!இந்த உறுதி என்னிடம் கலையுமானால், நான் உங்களுக்குப் பிறக்கத் தகுதி அற்றவன் என்று இந்த உலகம் என்னை காறி உமிழட்டும். அப்போது என் உயிர் என் உடலில் தங்காது...சொல்லாத வார்த்தைகள் நினைக்கப் பட்டன.

  ரங்கசாமியும் அமைதியிலாழ்ந்தார். பேசாத நேரம் சொற்பமே ஆனாலும் பேசிய நேரத்தால் ஏற்பட்ட சோர்வு அவருடைய தளர்ந்த உடலை நித்திரையில் ஆழ்த்தியது. உறங்கி விட்ட தந்தையிடம் விழித்த மனம் பெற்ற தனயன் மானசீகமாக விடை பெற்று வெளியேறினான். 

                                                          ( தொடரும் ) ..