Friday, January 20, 2012

நினைவில் நீ......(அத்தியாயம் இரண்டு)                                  நினைவில் நீ ( தொடரும் நாவல் )
                                   --------------------------------------------


   மதி மயங்கும் மாலை நேரம். வெள்ளி நிலா முழு ஒளி வீசி உதிக்கும் வேளை .புள்ளினங்கள் தத்தம் கூடு நோக்கி விரைகின்றன. கிராமமாக இருந்தால்தான் இயற்கையை ரசிக்க முடியுமா.?பெங்களூரில் லால்பாகில் இயற்கை எழிலும் செயற்கை எழிலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் விதம் ஒன்றை ஒன்று தழுவி இருப்பதில் தெரியாமல் போய்விடும். இரண்டும் லயித்திருக்கும் காட்சி கண் கொள்ளாதது. பரபரப்பற்ற ஒரு அமைதி அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்பதை தெளிவு படுத்தியது. கண்ணனுக்கு ஏமாற்றம்.சுற்றுப் புறத்தை ரசிக்கும் சூழலில் அவனில்லை.அமைதியை நாடி வந்தான்.புற உலகு அமைதியாய் இருந்தது.உள்ளமோ புகைந்திருந்தது. ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். இர்ண்டு முறை புகை இழுத்து  வெளிவிட்டான்.ஆத்திரம் அதிகமாயிற்று. சீற்றத்தை சிகரெட்டிடம் காட்டும் முறையில் வீசி எறிந்து ஷூ காலால் நசுக்கினான். ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு ஏதோ தீர்மானித்தவனாய் நடக்கத் தொடங்கினான். நடந்தவனுக்கு அருகில் நடப்பவைகளில் நாட்டம் இல்லையாதலால் எதையும் காணவில்லை. “ வீட்டுக்குப் போகலமா.?அப்படி உரிமையுடன் வீடென்று சொல்லிக்
கொள்ள எந்த இடமிருக்கிறது. கையில் பணமிருந்தவரையில் சரி உற்றாரும் ஊராரும் கண்ணன் எங்கள் கண்ணன் என்று வாய் கிழியப் பேசினார்கள். இப்போது.? இப்போது மட்டுமென்ன பேச வைக்க முடியாதா.?அதையும்தான் பார்ப்போமே.

கண்ணன் எடுப்பார் கைப்பிள்ளை. இதனை அவனைச் சுற்றி இருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அவர்களின் செயல்வழிகளுக்கு கண்ணன் ஒரு கருவி. எதிரியே மறைந்து விட்ட பிறகு கருவி எதற்கு.?ஆனால் கண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது. நடந்து சென்றவன் கால் வலிக்கவே, அவனை அறியாமலேயே ஆட்டோவைக் கூப்பிட்டு ஏறிக் கொண்டான். “குக் டௌன் போப்பா 

        வீடு வந்து சேர்ந்தவன் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கப் பர்சைப் பார்த்தான். அது காலியாயிருப்பதைப் பார்த்தவன், ‘ கொஞ்சம் நில் “என்று ஆட்டோ ட்ரைவரிடம் கூறி “ பாட்டீ “ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றான். பாட்டி இல்லை .எங்கோ வெளியில் போயிருந்தார்கள்..மாமியிடம் கேட்கலாம் என்றால் கொஞ்சம் கூச்சம். ஆனால் அதற்குள் மாமியின் பெண் ஆஷாவே வெளிப்பட்டு “என்ன அத்தான் “ என்று கேட்கவே தன் காலி பர்சையும் வெளியில் நின்ற ஆட்டோ ட்ரைவரையும் காட்டினான். அவள் விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துத் திரும்பினாள். திரும்பினவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளம் அசுர வேகத்தில் ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு முடிவுக்கு வந்தது. “ஆஷாதிரும்பிச் சென்றவளின் நடை தடைபட்டு நின்றது. “ ஆஷா.. இங்கே வாயேன் ..என்றும் இல்லாத ஒரு குழைவு அந்தக் குரலில் தென்பட்டது. ஆஷாவுக்குப் புரிந்து விட்டது. அவள் தயங்கி நின்றாள். “ ஆஷா, இந்த வீட்டில் பரிவு காட்ட நீ ஒருத்தியாவது இருக்கிறாயே. !இது உணர்ந்த மாத்திரத்தில் எனக்கு வேலை போனால்தான் என்ன, பணமில்லாவிட்டால்தான் என்ன.?இரண்டும் இல்லாத என்னை நீ நேசிக்கிறாயென்ற உணர்வு போதும். ASHA, I LOVE YOU. “என்று கூறி அவளருகில் சென்றவனை மறைந்து பார்த்திருந்த ஆஷாவின் தம்பி “ அம்மா, அம்மா, அக்காகிட்ட அத்தான் சினிமால லவ் பண்ற மாதிரி என்னவோ சொல்றாரம்மாஎன்றான். ஓடி வந்து பார்த்த சரஸ்வதி, “கண்ணா.! ஆஷா !என்று இரைந்தாள்.ஆஷா ஓடி விலகி விட்டாள். கண்ணன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.மேலும் சரஸ்வதி ஏதோ கூற வாயெடுத்தவள் கண்ணனின் பாட்டி, தன் மாமியார் வருவதைக் கண்டவுடன்.,தன் எண்ணத்தை மாற்றி உள்ளே சென்று விட்டாள்.

    கண்ணன் இருந்த விதம், சரஸ்வதி நின்றிருந்த தோரணை, ஆஷாவின் தொய்ந்த நடை எல்லாவற்றையும் ஒரே வினாடியில் கணக்கெடுத்து நடந்ததை யூகித்தறிந்த பாட்டி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் ஹாலுக்குச் சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள். பெரும் அமைதி புயலுக்குப் பின் தோன்றியதா, இல்லை வரப் போகும் பூகம்பத்துக்கு அறிகுறியா,?எதுவும் நிகழவில்லை.

      சில நிமிஷங்களில் சுந்தர ராமன், கோபாலன், ராகவன் ஆகிய மூவரும் அட்டகாசமாக உள்ளே நுழைந்தனர். வீட்டில் என்றுமில்லா அமைதி நிலவக் கண்டு அவர்களும் திடு திப்பென்று அமைதியாயினர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

 “சுந்தர ராமா ஆஷாவின் கல்யாணத்துக்கு நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா.?

யாரும் எதிர்பாராத கேள்வி. தாயிடம் இருந்து வெளிப்பட்ட கேள்விக்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ என்று சுந்தர ராமன் யோசிப்பதற்குள் ,ஆஷாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைப்பதுதான் நல்லது.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ “ என்று கூறியபடியே சரஸ்வதி வந்தாள்.கண்ணனுக்கு தீயின் மேல் நிற்பது போல் இருந்தது. வெளியே செல்ல முயன்றவனை, “ கண்ணா! நீயும் ஒரு வேலைபார்த்துக் கல்யாணத்துக்கு தயாராய் இருக்கும்போது வா. நானே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.இப்போது இங்கிருந்து போய்விடு “என்ற பாட்டியின் குரல் அவனை அயர வைத்தது. தான் கேட்கும் வார்த்தைகளின் முழு அர்த்தததையும் தாங்கிக் கொள்ள அந்த வினாடியில் அவனுக்கு முடியவில்லை. ஏதோ கேட்க முயன்றவனுக்கு அர்த்தம் விளங்க ஆரம்பித்ததும் விர்ரென்று தன் உடைமைகளை பெட்டியில் போட்டுக் கொண்டு அந்த இரவில் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினான்.

       பாட்டியம்மாள் மெள்ள முறுவலித்தாள். சரஸ்வதி சந்தோஷத்தில் சிரிக்க உள்ளே சென்றாள். சுந்தர ராமனுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்ததும், “நன்றாக விரட்டினீர்கள் அம்மா, அந்த தண்ட சோற்று ராமனைஎன்றார்.

பெட்டியுடன் வெளியேறிய கண்ணனுக்கு எங்கு போவதென்றே விளங்கவில்லை. எங்கு போனால் அகமும் முகமும் மகிழ்ந்து தன்னை வர வேற்பார்களோ அங்கு மட்டும் போகப் பிடிக்கவில்லை. எந்த நிலையில் இருந்தவன், எந்த மாதிரி வார்த்தைகளைப் பேசியவன், எந்த முகத்துடன்சென்று அவர்களைப் பார்ப்பது.?ஒரு சமயம் அப்படியே அங்கு போனாலும் அவர்களும் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அது சரி. தன் மிது அன்பையே பொழிந்து கொட்டிய பாட்டியும் மாமாக்களும் ஏன் தன்னை ஒதுக்குகிறார்கள்.தான் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போதுதான் தனக்கு மதிப்பா.?பணமில்லாத ஓட்டாண்டியாகி விட்டால் உலகமே தூற்றும் என்பது எவ்வளவு சரி. தான் நல்ல நிலையில் இருந்தபோது தன்னிடம் உதவி கோரி வந்தவர்களை எந்த மாதிரி எல்லாம் பேசி இருப்போம். இப்போது அடிமரமே சாய்ந்து விட்டதே. தான் பேசிய பேச்சுகள்மன்னிக்கப் பட்டிருக்குமா. ..தான் பேசிய பேச்சுகள் மன்னிக்கத்தக்கதா... ஏன்.?பேசியதிலும் நடந்ததிலும் என்ன தவறு.?எதற்கு மன்னிக்கப் பட வேண்டும்.?துள்ளித் திரிய வேண்டிய பருவத்தில்  மூலை முடுக்கில் பதுங்கிக் கிடக்க வேண்டி இருந்ததே. அரை வயிற்றுக்கு கிடைப்பதாயிருந்தாலும் எவ்வளவு பேர் பங்கு.?இவ்வளவு பேர் இருந்திருக்கா விட்டால் எல்லோரும் ஒன்று கூடி தலைமேல் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களோ.இந்த நிலையிலே இக்கட்டிலேயே வளர்ந்து ஏதோ சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகாவதுதன் ஆசை அபிலாக்ஷைகளை நிறைவேற்றலாம் என்றால் அதிலும் பங்கு கேட்க வந்தால் யாராயிருந்தால்தான் என்ன... ஒதுக்கித் தள்ள வேண்டியதுதான். தான் செய்த செய்கை ஒதுக்கப் பட்டவர்கள் மட்டும்தானே தவறு என்றனர். பாட்டி மாமா எல்லோரும் சரி என்றுதானே கூறினர். அன்று சரி என்று கூறி, இன்று தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் புறக்கணிக்கும் இவர்கள் தான் நல்ல நிலையில் இருந்திருந்தால், “ஆஷாவை நீயே கல்யாணம் பண்ணிக்கொள் ‘என்று போட்டி போட்டுக் கொண்டு கூறி இருக்க மாட்டார்களா...இந்த ஆஷா இல்லாவிட்டால்இன்னொரு உஷா...தான் பார்க்காத பெண்களா....இருக்கட்டும் .இப்போதைக்கு எங்கு போவது,?

      கண்ணனுக்கு தன் நண்பன் அருள் வீடு அருகிலிருப்பது நினைவுக்கு வந்ததும் அங்கேயே ஆஜரானான்.கண்ணனும் அருளும் நல்லது பொல்லாதது எல்லாவற்றிலும் சம பங்கு எடுத்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள். அருளுக்கு கண்ணன் அங்கு வந்து தங்குவதில் ஆட்சேபணை இருக்கவில்லை.

                                                                (தொடரும்)                      

  


       


10 comments:

 1. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை.நல்ல போகுதுங்க கதை..

  ReplyDelete
 2. கதையின் ஊடே உங்களின் வர்ணனை அலங்காரம் அருமை அய்யா, அது கதையின் அழகை மேலும் மெருகூட்டுகிறது.

  ReplyDelete
 3. அய்யா மன்னிக்கவும் உங்களின் அனுமதி இன்றி தமிழ் மணத்தில் இணைத்துவிட்டேன்.

  ReplyDelete
 4. நல்ல கதை.
  தொடருங்கள் ஐயா.

  ReplyDelete
 5. நிறைய பாத்திரங்கள் வருகிறார்கள்; இன்னும் வரவிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இத்தனை பேரும் அவரவர் போக்கில் அதுவே நியாயம் என்பது போல் சிந்திக்கத் தலைப்பட அத்தனை பேரும் மூலைக்கொருவராக தனித்தனியாக சிதறிவிடக் கூடாதே என்கிற கவலை இப்போதே ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நடுவே ஆசிரியர் வேறு தன்னைத் தனியாகக் காட்டிக் கொண்டு தன் சிந்தனைகளை தனிப்பட வெளிப்படுத்தாமல் பாத்திரங்களுடன் ஒன்றிக் கலந்தால், அத்தனை பேரையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு பிரச்சினையை வெகுசுலபமாக கண்டறியலாம் என்று தெரிகிறது.

  இது 1966-லேயே எழுதிய நாவலாக இருக்கலாம். இருந்தால் என்ன?.. இப்பொழுது எழுதியவர் அடைந்துள்ள வளர்ச்சிக்கேற்ப அங்கங்கே மாற்றங்கள் செய்ய வேண்டியதும் அவசியம். உண்மையான வளர்ச்சியின் இயல்பே அதுதான். முன்பு தெரியாத தவறுகள் இப்பொழுது 'பளிச்'சென்று தெரிவது தான் அப்படியான வளர்ச்சியை தெரியப்படுத்துவதே.

  ReplyDelete
 6. கண்ணனின் மனம் நிலை நன்கு புரியும்படி இருந்தது
  தாங்கள் சொல்லிச் சென்ற விதம்
  தொடர் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. @காளிதாஸ்,
  @ஏ.ஆர்.ராஜகோபாலன்,
  @ரத்னவேல்,
  @ஜீவி,
  @ரமணி
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. ஒருவர் பதிவை இன்னொருவர் தமிழ்மணத்தில் இணைக்க முடியும் என்பதே எனக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் அது இணைக்கப் பட வேண்டியதுதானே.
  நான் முன்பே எழுதி இருந்ததுபோல் இக்கதை ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்துக் குடும்பக் கதை. இதில் வரும் மாந்தர்களின் குணநலன்களவரவர் பின்னணியால் தீர்மானிக்கப் படுவது. இதைப் பதிவிடும்முன்பே ஒரு முறை படித்துப் பார்த்து எந்த மாற்றமும் தேவைப் படாது என்று தீர்மானித்தேன். மேலும் கதையில் நான் சிந்திப்பதை எழுதுவதும் , அது பற்றி விவரிப்பதும் கதாபாத்திரங்களின் குணங்களை ஒட்டியே இருக்கும். ஜீவியின் கருத்துப் பகிர்வுக்கு மீண்டும் நன்றி.

  ReplyDelete
 8. அறுபதுகளின் லால்பாக் இயற்கைவளத்தோடு இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இரண்டு அத்தியாயங்களில் பத்து பாத்திரங்கள் போல் வந்துவிட்டார்களே? சுவாரசியத்தோடு எதிர்பார்ப்பும் கூடுகிறது.

  ReplyDelete
 9. வர்ணனை ரசித்தேன்.

  ReplyDelete
 10. கண்ணன் எடுப்பார் கைப்பிள்ளை. இதனை அவனைச் சுற்றி இருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அவர்களின் செயல்வழிகளுக்கு கண்ணன் ஒரு கருவி. //

  கண்ணன் கொஞ்சம் செல்வாளியா?
  கையில் காசு இல்லாமல் சிகிரெட் குடிக்கிறார்.
  ஆஷா உதவிசெய்தவுடன் காதல்
  அத்தை, பாட்டி எதிர்ப்பு.
  கதையில் வரும் பாத்திரங்கள் மனநிலை உண்மை நிலையை உணர்த்துகிறது.

  ReplyDelete