நினைவில் நீ ( நாவல் தொடராக )
-----------------------------------------------
----- 4 -----
”அடடா.!இதுகள் அடிக்கிற கொட்டத்தில் அடுத்து இருப்பவர் என்ன பேசுகிறார் என்றே தெரிவதில்லை. என்ன சொன்னேள்.? கண்ணன் வீட்டை விட்டு ஓடிட்டானா.? உங்களுக்கு யார் சொன்னது.? பாட்டி ரொம்பவே நொந்திருப்பார்களே.”—கமலத்தின் கணவன் கொண்டு வந்த அந்த செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, இந்தக் காலத்துப் பெண்களின் ஒரு தனிப் பிரதிநிதி இந்தக் கமலம். வாழ்க்கையில் தன் சுயப் போராட்டங்களில் கொஞ்சம் கவனமாக ஈடுபாடு கொடுத்துக் கவனித்தால் ஓரளவு நிம்மதியாய் வாழ்க்கை அமைந்திருக்கும்.. பெண்களே இல்லாத குடும்பத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்து வளர்ந்தவளுக்கு பெண்மை என்பது மண வாழ்க்கை நடத்திப் பிள்ளைகளைப் பெறுவது ஒன்றுதானென்று ஐயப்படும் விதத்தில் குணம். அதைக் கொண்டவனுக்காவது மாற்றியமைக்கும் சக்தி உண்டா என்றால் அதுவும் இல்லை. கமலத்தின் குண விசேஷ வேறுபாடுகளை கண்டறிந்தவன், அதனால் தனக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று தோன்றினால் அதனை ஊக்குவிப்பவன். ஊரார் பேச்சுகள் ,உள்ளூரின் பற்று வரவுகள் இவற்றை ஒரு நீதிபதி கோர்ட்டில் விசாரித்தறிந்து தீர்ப்பு கூறுவதுபோல, வாதி, பிரதிவாதி வக்கீல்கள் இல்லாமலெயே தீர்ப்பு கூறி கமலத்தை சீண்டுவான். தன்னுடைய கணவனின் தீர்ப்பில் அலாதி நம்பிக்கை உண்டு கமலத்துக்கு. ஆனால் அதே அளவு நம்பிக்கை பாட்டியின் தீர்ப்பிலும் அவளுக்குண்டு.அதனால் பாட்டியின் தீர்ப்புகளோடு தனது தீர்ப்பும் ஒத்துப் போக வேண்டும் என்ற கவனம் கமலத்தின் கணவனுக்குண்டு.
” கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியதைப் பாட்டியாலேயே தடுத்திருக்க முடியாது இருந்திருக்க வேண்டும். இல்லை பாட்டியின் விருப்பப்படியே கண்ணன் வெளியேறி இருக்கிறான், அல்லது வெளியேற்றப்பட்டு இருக்கிறான். பாட்டியால் தடுக்க முடியாத சம்பவம் இருக்க முடியாது. அதாவது கண்ணன் வெளியேறியதில் பாட்டிக்கு ஆட்சேபணை இருந்திருக்காது. ஆகவே தவறு கண்ணன் மேல்தான் இருக்க வேண்டும். உங்கள் கண்ணன் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ நாலு பேர் மத்தியிலே நல்லது பொல்லது செய்யாமே சிவனேன்னு இருக்கத் தெரியாது.எங்கேயோ சரியா மாட்டிண்டு இருக்கான்.அப்பாவைப் பகைச்சாச்சு;இப்போ பாட்டி மாமாமார்;இன்னும் கொஞ்ச நாள்ல உலகத்தையே பகைச்சிட்டாலும் ஆச்சரியமில்லை..”
” எங்க கண்ணன் ரொம்ப நல்லவனாக்கும். அப்பாவப் பகைச்சிட்டது அவன் தப்பில்லை.அவனாகவும் பகைச்சுக்கலை. அப்பாதான் அந்த இரண்டாம் தாரத்தோட ஆட்டத்துக்கு சரியா மாட்டிட்டார். அவளைப் பகைச்சிட்டப்போ அப்பாவும் பகையாயிட்டார். அது யார் தப்புங்கறேன்? கண்ணன் இன்னைக்கும் அப்பாவை நினைச்சுப் புலம்புவான். இந்த அப்பாவுக்கும் ஆசை அன்புங்கற்து எல்லாம் அவள் ஒருத்திகிட்ட மட்டுந்தான். எதுக்கும் இல்லாதவரைப் பத்திப் பேசறது நன்னாயில்லை. ஆனா கண்ணன் பாட்டிகிட்ட அப்படி நடந்திருக்கக் கூடாதுதான்.”----பாட்டியிடம் கண்ணன் பயமில்லாமல் ஏதோ தவறாக நடந்திருக்கிறான் என்பது கமலத்தின் தீர்ப்பு
“ அதுசரி....கண்ணனும் உங்கண்ணா சுந்தரமும் நீயும் உங்க பாட்டியும்தான் உங்கப்பாவையும் உங்க சித்தியையும் பத்தித் தவறாப் பேசறேள். ஆனால் உன் தம்பி பாபு அவாளை எல்லாம் தலைமேல வெச்சு ஆடறானே. ஆமா.. உங்க சித்திக்கு என்ன வயசிருக்கும்னு சொன்னெ.?”
” ஏன் என்னோட வயசைவிட ஒண்ணு ரெண்டு வருஷம் கூடுதலாயிருக்கும்.”
“ ஒரு சமயம் அப்படியுமிருக்குமோ.?”
இல்லாத ஒன்றை இருப்பதாகத் தான் முடிவு செய்து அதனை சூசகமாக வெளியிட்டால், கமலம் எப்படி புரிந்து கொள்கிறாள் என்று பார்க்கிறான்..புரியாததை புரிந்த மாதிரி காட்டிக்கொள்ளும் இனத்தவள்தானே கமலம். ”என்ன எழவோ யார் கண்டா.?.மருந்து கிருந்து கொடுத்து அவனைக் கைக்குள்ளே போட்டிருப்பாள் அவள். நமக்கெதுக்கு வம்பு தும்பெல்லாம். காப்பிப் பொடியில்லை, சக்கரையில்லை. காப்பியில்லாமல் உங்களுக்கும் எனக்கும் முடியாது. என்ன பண்றது.?”
” என்னைக்கேட்டா...உங்க பாட்டிகிட்ட போய் ஒரு பத்து ரூபாய் வாங்கி வாயேன். மேலும் கண்ணனோட விவரங்களையும் தெரிஞ்சுண்டு வரலாம். இந்தா.. பஸ்ஸுக்கு சில்லறை.”
பொறுப்புகளை பெண்டாட்டியிடம் சுமத்திவிட்டுச்சென்றான் அந்தப் பேர்வழி. கமலத்துக்கு காப்பிப் பொடி, சர்க்கரை ஞாபகம் மறந்து விட்டது. கணவன் சொன்ன செய்தி, தங்களுக்குள் நடந்த பேச்சு இவற்றை சிறிது நேரம் அசைபோட்டாள். வானம் இருண்டு ஒன்றிரண்டு மின்னல்களும் தோன்றி,இடி இடித்ததும்தன் நிலைக்கு வரப் பெற்றவள் இருட்டி விட்டதை உணர்ந்து,கொல்லையில் காயப் போட்டிருந்த துணிகளை வீட்டுக்குள் எடுத்து வந்தாள்..சமையல் வேலை முடிந்திருந்தது.பிள்ளைகள் கும்மாளம் மழையைக் கண்டதும் அதிகரிக்க ஆரம்பித்தது.அவர்களை அடக்கி ,விளக்கைப் பொருத்தியவள் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசப்பேச, பேசப்படும் செய்தி என்னவோ திரும்பத் திரும்ப இருக்கும் நிலையைபற்றியதாகவே இருந்தது. தூங்கப் போகலாமென்றால் தூக்கம் வரவில்லை, நேரமுமாகவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அப்பாவும் வருவார். அப்பாவின் வரவிலோ, ஊரிலிருப்பவளின் நலனிலோஅக்கறை கொண்டு யாரும் விழித்திருக்கவில்லை. அப்பா வரும்போது ஏதாவது சாப்பிடக் கொண்டு வருவாரா என்னும் நப்பாசைதான். இடியும் மின்னலும் வலுக்கவே சுந்தரம் குடையெடுத்துக் கொண்டு அப்பாவைக் காண ஸ்டேஷனுக்குக் கிளம்பினான். சென்றவன் இரண்டு மணி நேரம் கழித்துத் தனியாக வந்தான். அப்பா வரவில்லை.
பொறுப்புகளை பெண்டாட்டியிடம் சுமத்திவிட்டுச்சென்றான் அந்தப் பேர்வழி. கமலத்துக்கு காப்பிப் பொடி, சர்க்கரை ஞாபகம் மறந்து விட்டது. கணவன் சொன்ன செய்தி, தங்களுக்குள் நடந்த பேச்சு இவற்றை சிறிது நேரம் அசைபோட்டாள். வானம் இருண்டு ஒன்றிரண்டு மின்னல்களும் தோன்றி,இடி இடித்ததும்தன் நிலைக்கு வரப் பெற்றவள் இருட்டி விட்டதை உணர்ந்து,கொல்லையில் காயப் போட்டிருந்த துணிகளை வீட்டுக்குள் எடுத்து வந்தாள்..சமையல் வேலை முடிந்திருந்தது.பிள்ளைகள் கும்மாளம் மழையைக் கண்டதும் அதிகரிக்க ஆரம்பித்தது.அவர்களை அடக்கி ,விளக்கைப் பொருத்தியவள் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.
அன்றைக்கும் இதுபோல் ஒரு சாயங்காலம். கண்ணன், சுந்தரம், பாபு, கமலம் நால்வரும் வீட்டிலிருந்தார்கள். அப்பா “ அவள் “ ஊருக்குப் போயிருந்தார்.அவளது ஏதோ ஒரு பிரசவ காலம். அன்று மாலை அப்பா வருவதாகச் சொல்லியிருந்தார். அப்போதெல்லாம் மனம் நிறைய சாப்பாடு என்ற பேச்சே கிடையாது. சாப்பாடு டிபன், காப்பி எல்லாமே வயிறு முட்டக் கஞ்சியும் கருவேப்பிலைத் துவையலும்தான். அப்பா மட்டும் இரவில் ஒரு டம்ளர் பால் குடிப்பார்.
எட்டுமணி வரை காத்திருக்கப் பொறுமையின்றி ஏழு மணிக்கே சாப்பாட்டை முடித்தாயிற்று. அப்பா வர இன்னும் ஒன்றிரண்டு மணி நேரமாகலாம். அதுவரை நால்வரும் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அண்ணா சுந்தரத்துக்கு வேலையில்லை.கண்ணன் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான். பாபு சின்னவன்.
கமலத்துக்குக் கலியாணப் பேச்சு துவங்கலாமா என்றிருந்த நேரம்.
“ அப்பா இன்னிக்குத்தான் இரவு வ்ண்டியில் வருவதாகச் சொல்லியிருந்தார். நல்லாப் பார்த்தியா அண்ணா. மழை வேற பலமா இருக்கு.... “அவ்வளவு நேரம் பேச்சில் அதிகம் கலந்து கொள்ளாத பாபுதான் முதலில் சுந்தரத்திடம் கேட்டான்.
எனக்குத் தெரியும் போடா... வெளிலே மழையில போய் வந்திருக்கேன்.எனக்கில்லாத அக்கறை உனக்கு. நல்லாத்தான் பார்த்துட்டு வந்தேன். அப்பா இன்னிக்கு வர மாட்டார். அவருக்கு அவளைப் பார்த்ததும் நம்ம ஞாபகமே மறந்திருக்கும். சே..!சுத்த யூஸ்லெஸ் அப்பா..” வெறுப்பை உமிழ்ந்தான் சுந்தரம்.
“ அப்போ, அப்பா வரலேன்னா ..அவருக்கு வெச்சிருக்கும் பால் இருக்கே..அது..” கமலத்துக்கு திடீர் சந்தேகம்.
“ ஏன்.. நம்ம நாலு பேர் இல்லையா.. ஒரு நாளைக்காவது பால் குடிக்கிறது...”
இது கண்ணனின் முடிவும் அபிப்பிராயமும். .
“ எனக்குப் பால் வேண்டாம்... .இல்லை எனக்கும் கொடுங்கள். ஒரு சமயம் அப்பா வந்தால் என் பங்காவது அவருக்கிருக்கட்டும் “ என்றான் பாபு.
” அதெல்லாம் முடியாது.பங்கு வேணும்னா உடனே சாப்பிடணும் இல்லைன்னா
உன்னை கணக்கிலே சேர்க்க மாட்டோம்.”தந்தைக்குப் பிறகுள்ள தனயனின்
அதிகாரம் சுந்தரத்தின் வார்த்தைகளில் தொனித்தது.
தீர்ப்புக்குக் கட்டுப் பட்டவர் இருவருக்கும் பால் கிடைத்தது. கட்டுப்படாத பாபுவுக்கு இல்லை. இனியென்ன செய்வது.? செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் முடிக்கப் பட்டன. எல்லோரும் படுக்கச் சென்றனர். அரை மணி நேரமிருக்கும் ரங்கசாமி மழையில் தொப்பமாக நனைந்து வந்து கதவைத் தட்டினார்.தூக்கம் வராத பாபு ஓடிச் சென்று கதவைத் திறந்தான். அப்பாவுக்குத் தலை துவட்ட டவல் எடுத்துக் கொடுத்தான். எல்லா விவரங்களையும் கேட்டான். எல்லா சம்பவங்களையும் கூறினான். ரங்கசாமிக்குப் பிரயாணக் களைப்பு. பசிபோக்கப் பாலை எதிர்பார்த்தவர் பாபு சொன்னது கேட்டு ஏமாந்தார்.தோளுக்கு மேல் வள்ர்ந்த பிள்ளைகளை எதுவும் கேட்க முடியவில்லை.ஆனால் தந்தையிடம் கோள் சொல்கிறான் பாபு என்ற ஆத்திரத்தில் சுந்தரம் பாபுவை அடித்து விடுகிறான்.
ரங்கசாமிக்கு இந்த செய்கை ஆத்திரத்தை மூட்டி விட்டது. அதை அடக்கக் கூடியவரை அடக்கினார். அடக்க முடியாதவற்றை “ ஏண்டா அவனை அடிக்கிறே. அந்த அடியை நீயே அடிச்சுக்கோ. வளர்த்துப் பெரியவனாக்கி ஆளாக்கின என்னையும் மீறி என்னடா அவ்வளவு பெரிய வயிறு உங்களுக்கு. சே...! ரோஷம் வேற வருதா இதுல.” என்று கூறி வெளிப்படுத்தினார்.
ஆமா...பெரிசா வளர்த்து ஆளாக்கிட்டீங்க . அரை வயிறு கஞ்சி கொடுக்க வக்கில்லை. ..எல்லாம் “அவ” மேலிருக்கிற மோகம். இருக்கிறதுக்கே சோத்துக்கு வழியில்லை. இதுல வேற அடிஷன்ஸ் பங்குக்கு. “ கூறக் கூடாதவற்றைக் கூறினான் தனயன் பொறுக்க முடியாமல் தவித்தார் ரங்கசாமி.
“ அவளை ஏண்டா கரிச்சுக் கொட்டறீங்க, அவ உங்க கிட்ட பரிவா அன்பா நடந்துக்கறதில்லையா.. என் போறாத காலம். வாழ்க்கையை சுகமா நடத்த முடியலெ. நான் என்ன வேணும்னா உங்களைக் கஷ்டப் படுத்தறேன். “
“ அவள் இங்கிருக்கிறதுதான் பெரிய கஷ்டம். அவளை நீங்க கல்யணம் செய்திருக்கலைன்னா இன்னும் எவ்வளவோ சௌகரியமா இருந்திருப்போம். வந்தவளும் ஒரு எச்சிக்கலை “என்றான் கண்ணன்.
சுந்தரம் ,கண்ணா உங்க ரெண்டு பேருக்கும் சொல்றேன். இது என்னுடைய
சொந்த விஷயம். இதுலெல்லாம் உங்க கிட்ட அனுமதி வாங்கத் தெவையில்லை எனக்கு. இதுல யாரும் தலையிடறது எனக்குப் பிடிக்கலை. உங்களை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தாயிற்று இல்லையா. இனிமே உங்ககிட்ட நானும் கையேந்தி நிக்கப் போறதில்லை. மனசுக்குப் பிடிக்கலைன்னா நீங்க எங்க வேண்டுமானாலும் போகலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை.” .
ஆத்திரத்தில் கூறப்படும் சொற்கள், ஆத்திரம் அடங்கிய பின் நினைத்துப் பார்க்கப் பட்டால், அவற்றின் தவறுகளும் உள்ளர்த்தங்களும் எதிர்பார்க்காத அளவு தொக்கி நிற்பது தெரியும். ஆனால் அவற்றைக் கூறுவதோ கேவலம் சாதாரண மனிதர்கள் தானே.சிந்தித்துப் பேசுபவர்கள் மிகக் குறைவு. அது யாருடைய தவறு.?.
அந்த சம்பவத்துக்குப் பிறகு சுந்தரமும் அதிக நாள் வீட்டிலிருக்கவில்லை. அந்த சம்பவத்தன்று இருந்த அந்த நான்கு பேருடைய மனநிலையும் , அந்த நால்வரின் குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நால்வரும் நாலு விதம். இதில் யார் சரி, யார் தவறு.?
கமலத்துக்கு விடை தெரியவில்லை. தெரியாதவற்றை தெரிந்ததுபோல் இந்த நிலையில் யாரிடமும் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும் கண்ணனின் விவகாரம்.........?பாட்டியிடம் பத்து ரூபாய் வாங்கப் போகும்போது தெரிந்து கொள்ளலாம்.
( தொடரும் ) . .
..
.
//ஆத்திரத்தில் கூறப்படும் சொற்கள், ஆத்திரம் அடங்கிய பின் நினைத்துப் பார்க்கப் பட்டால், அவற்றின் தவறுகளும் உள்ளர்த்தங்களும் எதிர்பார்க்காத அளவு தொக்கி நிற்பது தெரியும். //
பதிலளிநீக்குகரெக்ட்!
ரொம்ப அருமையாய் ,மன உணர்சிகளை படம் பிடித்து காட்டுகிறீர்கள்.இரெண்டாம் தாரத்தின் வரவும் ,மூத்தாள் பிள்ளைகளின் மனவோட்டமும் நொந்து போன உள்ளங்களில் இருந்து வெளிப் படும் அனல் வார்த்தைகள்.சொல்லத் தெரியலைங்க.ரசிக்கிறேன்
பதிலளிநீக்குஉணர்ச்சிவசப்பட்ட கதாபாத்திரங்களை உரையாடல்களில் புரிந்துகொள்ள முடிகிறது. பார்த்து பத்து ரூபாய் வாங்கி வரும் சாக்கில் விஷயம் கறப்பது சுவாரசியமான நிறைய அனுபவப்பட்ட டெக்னிக். யதார்த்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்கு