Wednesday, February 1, 2012

நினைவில் நீ ..( அத்தியாயம் ஐந்து )


                                   நினைவில் நீ..( நாவல் தொடராக )
                                    ---------------------------------------------

                                                     ----- 5 ------

        

   அம்மா அண்ணா வர நேரமாயிடுத்து. நான் ஸ்டேஷனுக்குப் போய் கூட்டி வருகிறேன் “ என்றான் ராஜு.
 “அம்மா, அண்ணா கார்ல வருவானா,நடந்து வருவானா. என்று கேட்டான் சந்துரு.
 “ போடா,அண்ணா கார்லதான் வருவான் இல்லியா விசு. “என்றான் ரவி.
 “ ஏண்டா பறக்கறே.அண்ணா ஆட்டோல வந்தாலும் வரலாம்என்றான் விசு, எதையும் தீர யோசித்துப் பேசுபவன் போல.
கல்யாணி அம்மாவுக்கு கை ஓடவில்லை, கால் ஒடவில்லை. இயந்திர கதியில் வேலை செய்து கொண்டிருந்தவள் ஓரோர் சமயம் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆறப் போட்ட காயத்தை ஆற்றும் பணியைக் காலம் செய்து கொண்டிருந்தது .பூராவும் ஆற முடியாத காயம். ஆறினாலும் அதன் வடு அதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் அதனுடே சில பசுமையான எண்ணங்களும் தோன்றத்தான் செய்யும். இந்தப் பசுமை நினைவுகள்தான் காயத்தையும் வடுவையும் மறக்கச் செய்கிறது.

     டேய் ராஜு ,சீக்கிரம் போடா நீ போறதுக்குள்ள வண்டி வந்துடப் போறது,என்று கூறியவளை , :என்ன மாமி வீடே அமர்க்களப்படறது. யார் வரா.?என்ற குரல் திரும்ப வைத்தது. திரும்பியவளின் பார்வையில் என்றுமில்லாத தீட்சண்யத்தை உணர்ந்தாள் சியாமளா.

      “ என்ன மாமி ,அப்படிப் பார்க்கறேள். நாந்தான் சியாமளி. “
“இல்லையடி, சியாமளி. உன்னை எவ்வளவோ தடவைப் பார்த்திருந்தாலும், இன்னிக்கிப் பார்க்கறப்போ ஏதோ ஒரு கணக்குப் போட்டது என் மனசு.அது சரி என்ன இன்னிக்கிக் கார்த்தாலயே வந்துட்டியே

       எப்பவும்போல பள்ளிக்கூடம் முடிஞ்சு போரப்போதான் உங்களப் பார்க்கணுமா.?என்னவோ இன்னக்கி காலையிலேயே உங்களைப் பார்க்கணும்போல இருந்தது.வந்துட்டேன். ஆமா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலியே. இன்றைக்கு யார் வரா... என்ன டிபன்...அடடா, பூப்போல இட்லியா...யாருக்கு என்ன சமச்சாரம். ?

      இன்னும் கொஞ்ச நேரத்தில் பாபு வந்துடுவன்.அவனுக்காக ஸ்பெஷலா இட்லி பண்றேன். நீயும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல். நல்லாயிருக்கா.?

      “ என்னவொ காந்தி ,நேருன்னு சொல்ற மாதிரி மொட்டையா பாபுன்னா யாருக்குத் தெரியும்.? நீங்க பாபுன்னதும் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வந்தது.அவர் பம்பாயில இருக்காராம். இந்தப் பக்கத்து ஆள்தான் போலிருக்கு. “

     இந்த பாபு என் பிள்ளை.,உனக்குத் தெரியாது. நீ பார்த்ததில்லை. நீ சொல்ற பாபு யாரோ எனக்குத் தெரியாது.

      “உங்க பிள்ளையா....அப்படின்னா ராஜுவுக்கு மேலயா...எனக்குச் சொல்லவே இல்லையே.

          எல்லாத்தையும் சமயம் வரும்போதானேம்மா சொல்லலாம்.உனக்குத் தெரிந்ததைவிட தெரியாததே அதிகம். பாபு என் மூத்த பிள்ளை .இப்போதைக்கு இது போதும் பின்னே சொல்றேன்.:சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு சொல்லிக் கொள்ளாமலேயே கண்களில் நீர் வந்து விட்டது. துடைத்துவிட முயன்றவள் துடைக்கத் துடைக்க ஆறாகப் பெருகியது கண்ணீர். சியாமளாவுக்கு எதுவும் விளங்க வில்லை. கேட்கக் கூடாத ஏதோ ஒன்றைக் கேட்டு கல்யாணி அம்மாவைக் கலங்க வைத்துவிட்டோமோ என்று சஞ்சலம். பதட்டத்துடன் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.
 
          “ ஆமாம் சியாமளி..என் பிள்ளை. என் மூத்த பிள்ளை பாபு. அவன் வருவதைக் காணக் கொடுத்து வைக்காமல் அவர் போயிட்டார். இந்த நிலையிலே பாபு வரதப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையிருந்தது. அவரும் இருந்திருந்தா.....

     பேச்சை மாற்ற விரும்பிய சியாமளா, “ அப்போ இன்னிக்கு சந்துருவும் ரவியும் ஸ்கூலுக்கு மட்டமா.?என்றாள்.

      மட்டமில்லை டீச்சர் .இன்னிக்கு லீவு..அண்ணாவே லீவ் லெட்டர் எழுதித் தருவார் என்ற சந்துரு தொடர்ந்தான்.அம்மா முகம் கழுவிக்கட்டுமா.? புதுச் சொக்காய் தரியாம்மா

     “ புதுத் துணி போட்டு எங்கே போறீங்க.

     “ எங்கயும் போகலை டீச்சர். அண்ணா வரும்போது அழகா இருக்க வேண்டாமா... அதுக்குத்தான்.

     சியாமளா சந்துருவின் முதுகைத் தட்டிக் கொடுத்து, கல்யாணி அம்மாவிடம் விடை பெற்றாள். அவள் வாசலில் இறங்குவதற்கும் பாபுவும் ராஜுவும் ஆட்டோவிலிருந்து இறங்கவும் சரியாயிருந்தது. பாபுவைப் பார்த்த சியாமளா ஒரு கணம் திகைத்து விட்டாள். பாபுவும் சியாமளாவைப் பார்த்து ஒரு கணம் தயங்கினான். வெளியே போகக் கிளம்பிய சியாமளாவை ஏதோ ஒரு எண்ணம் பின் தங்கச் செய்தது. சிறிது நேரம் பிரிந்தவர் கூடிய களிப்பு நிலவியது. பம்பாயிலிருந்து அல்வா வாங்கி வந்திருந்தான் பாபு. அதை எல்லோருக்கும் கொடுத்தவன் சியாமளாவை கவனித்துஇவர்களை உனக்குத் தெரியுமா அம்மா “ என்று கேட்டான்.

      “ தெரியுமாவாவது... இவள் தான் சியாமளா. சந்துரு ரவியோட டீச்சர். இதாம்மா என் மூத்த பிள்ளை.

      “ நான்சொன்னவரும் இவர்தான் மாமி “ என்றாள் சியாமளா.

      “ உங்களுக்கு ஒருவரை ஒருவர் முன்னமே தெரியுமா ?

      “ தெரியும்னு சொல்றத விட ,பார்த்திருக்கோம் என்பதுதான் சரியம்மாஎன்றான் பாபு.

     அவனுக்கு ஏனோ சியாமளாவை முன்பே தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் அவ்வளவு விருப்பமிருக்கவில்லை. சியாமளாவும் அதை அவ்வளவாக விரும்பி இருக்க மாட்டாள் .காலம் செல்லும் கோலத்தில் ஒருஆணும் பெண்ணும் பார்த்துப் பேசினாலே கதைகள் பல கட்டிவிடும் உலகில் அதை நன்கு புரிந்து கொண்டிருந்தன இரண்டு ஜீவன்கள் .ஆனால் பாபு சொல்லாததும் சியாமளா விரும்பாமலிருப்பதும் அவர்கள் அத்தனை அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் என்ற காரணத்தால் அல்ல. ஆனால் சமயங்களில் சரியாக நடப்பிக்கும் ஒரு உள்ளுணர்வுக்குக் கட்டுப் பட்டவர்கள். அப்போது நடந்த சிறிய அறிமுகப் படலமும் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தைகளும் இதையே காட்டின. சிறிது நேரத்தில் சியாமளா விடை பெற்றுச் சென்றாள்.

        பாபு எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வளர்ந்திருக்கவில்லை.ஆனால் அதே சமயம் யாரும் அதிக கஷ்டத்துக்கு உள்ளானவர்கள்போல் தோன்றவில்லை.ஒரு அதீதமான திருப்தி ,சோபை, இவை உள்ளத்திலிருந்து எழும்புகிறது. அதனை முகம் காட்டுகிறது. கல்யாணி அம்மாவும் பிள்ளைகளும் இருந்திருக்க வேண்டிய பயங்கர நிலையைவிட, இருக்கும் ஓரளவு சாதாரண நிலையில் திருப்தி அடைந்தனர். ஒன்றுமே இல்லாதவனுக்கு ஒரு வேளைச் சோறு பெரிதல்லவா.? இந்த நிலைக்காவது தன்னை விட்டுச் சென்ற கணவனை எண்ணி விம்மியது அவள் உள்ளம். ஆனால் இதே நிலை நீடிக்க வேண்டுமானால், இனி அதை நீடிக்கச் செய்வது பாபுவின் கையில் தான் இருக்கிறது. அதையேதான் ரங்கசாமியும் அறிந்திருந்தார். ஆனால் உலகில் ஒருவரையே நம்பி ஒருவரை ஆண்டவன் இருக்க விடுவதில்லை. நிலைமை அப்படியிருக்குமானால் எண்ணற்ற குடும்பங்கள் வேரோடு சாய்ந்திருக்கும்.

    கஷ்டமும் நஷ்டமும் வாழ்வின் சோதனைகள். மலைபோல் நம்பி இருக்கப் படுபவர்கள் பொசுக் என்று போய் விடுவதால், நம்பி இருக்கிறவர்கள் வாழாமல் போய் விடுவார்களா என்ன.? இந்த எண்ணம் உதவுபவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். ஆள்வதும் அனுபவிப்பதும் நம் செயல்கள் அல்ல. ஆனால் பகுத்தறிவு கொண்ட நாம் அதனை பரிபூரணமாக உபயோகித்தால் குடும்பங்கள் செழிக்கும் சமுதாயம் சீர்திருந்தும், நாடு வளரும்.

      பாபு கல்யாணி அம்மாவையும் அவன் தம்பிகளையும் ஆதரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான் என்றால், அது அவன் பகுத்தறிவை சுயமாக உபயோகித்தறிந்த முடிவின் பலனாகும்.இப்படி ஒரெயடியாகக் கூறுவதும் பாபுவின் குணத்துக்கு அவதூறு விளைப்பது ஆகும். தாய் தம்பிகள் என்ற பாசம், தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி மேலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் சம நோக்குடன் ஆராயும் குணம் ஆகியவற்றின்  கூட்டு பலன் , அன்று முதல் கல்யணி அம்மாவின் மன சஞ்சலத்தை ஓரளவு போக்க உதவியது.அதாவது பற்றுகோல் ஒன்று கிடைத்தது.

       பாபுவுக்கு எண்ணற்ற ஆசைகள். சிதறிய குடும்பத்தை ஒட்டுவிப்பதே தன் முதல் கடமை என்று கருதினான். தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தொழிற்சாலைக்கு மாடாக உழைக்க எண்ணினான். பம்பாயில் குடியரசு தின விழாவில் ஏற்பட்ட சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்க விரும்பினான்.

      உயர்ந்த எண்ணங்களும் பரந்த உள்ளமும் களங்க மற்ற உள்ளுணர்வுமே பாபுவிடம் இருந்த கருவிகள். அவன் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததோ.........உறவின் பூசலும்  ஏசலும் , உண்மை உழைப்பை ஏமாளித்தனமாகக் கருதி நசுக்கும் நய வஞ்சக சமுதாயம், ஜாதி மதப் போர்வைக்குள் புகுந்து வெளிப்படும் உலுத்தர்கள் கூட்டம்......அம்மம்மா......ஏராளம், ஏராளம்..!
----------------------------------------------------------------------        
                                                                                                        ( தொடரும் )

  
        
5 comments:

 1. வணக்கம் ஐயா
  வெகு மதியான எழுத்துக்கள்

  கொஞ்சம் விடுமுறையில் சென்று இருந்தேன்.!
  தொடர்கிறேன் !

  பகுதி முழுவதும் படித்து விட்டு COMMENT இடுகிறேன்.
  நன்றி

  ReplyDelete
 2. சிறப்பாகச் செல்கிறது கதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இந்தப் பகுதி ஆரம்பத்தில் வரும் உரையாடல்கள், பின்பகுதியையும் அப்படியே அமைத்திருக்கக் கூடாதா என்கிற ஆதங்கத்தைத் தந்தது.
  தொடர்ந்து வருகிறேன். திறம்பட எழுதுவதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நினைவில் நிறையும் வரிகள் அனைத்தும் அருமை...பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. இதோ நானும் வந்து விட்டேன்..
  தொடர்கிறேன்...

  ReplyDelete