வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

இலக்கிய இன்பம்.


                                    கம்பனின் சில காட்சிகள்
                                   -----------------------------------

         நான் எழுதிய சாதாரணன் ராமாயணத்தில் அங்கதன் பற்றிய குறிப்பு ஏதும் இருக்கவில்லை..இதனை திரு. அப்பாதுரை குறிப்பிட்டிருந்தார். அங்கதனைப் பற்றிய கம்ப ராமாயணப் பாடல்களைத் தேடிப் படித்தபோது, வாலி பற்றிய சில பாடல்களும் என்னை ஈர்த்தது. அங்கதன் பற்றியும் குறிப்பாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இதல்லாமல் சில குறிப்பிட்ட பாடல்கள் கம்பனைப் பற்றிய ஒரு எண்ணம் எழக் காரணமாக இருந்தது..


                முதலில் வாலியின் பெருமைகள்..
                   --------------------------

இராமனுக்கு வாலியைப் பற்றி அனுமன் கூறுவதாக வரும் பாடல்களில் வாலியின்
பெருமைகள் புலனாகின்றன.

நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின் மேலுளான்
சூலிதன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான்வரம்பு இல் ஆற்றலான்.

( நான்கு வேதமாகிய பயிர்கள் வளர்வதற்கு வேலி போன்றவன். சூலப்படையுடைய சிவபெருமான் மீது.அளவற்ற பக்தி உடையவன்.அப்பெருமானின் இன்னருள் பெற்றவன்.எல்லை இல்லா ஆற்றல் பெற்றவன்.)


கழறு தேவரோடுஅவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீ விட
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.

( வாலியின் ஆற்றலுக்கு எல்லை எது என்றால், அது அவன் கடலைக் கடைந்ததே ஆகும். தேவரும் அவுணரும் பாற்கடலைக் கடைந்து களைத்த போது, இவன் ஒருவனே மந்தார மலை என்னும் மத்தின் அகடு தேயக் கடைந்து காட்டினான் )
இந்தக் குறிப்பு அதிகம் அறியப் படாததோ, இல்லை கூறப் படாததோ ஆகும்.


கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்
.
( அவன் போரில் தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களின் வலிமையில் பாதி அடையும் வரம் பெற்றவன்.எட்டு திக்குகளின் எல்லை வரை சென்று அட்டமூர்த்தி எனப்படும் சிவனின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன். )


கால் செலாது அவன் முன்னர் கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது அவன் குடை செலாதுஅரொ.

(வாலியின் வேகத்துக்கு முன் காற்றும் செல்லாது.அவன் மார்பில் முருகனின் வேலும் நுழையாது,வெற்றியுடைய வாலியின் வால் செல்லாத இடத்தில் அன்றி, வால் சென்ற இடத்தில் , இராவணனின் ஆட்சியும் வெற்றியும் செல்லாது.)
என் மனதை கவர்ந்த பாடல் இது.
-------------------------------

தன் உயிர் போகும் தருவாயில் வாலி இராமனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.
“ என் தம்பி சுக்கிரீவன் மலர்களில் உண்டான மதுவைக் குடித்து அறிவு  மாறுபடும் போது அவன் மீது சினம் கொண்டு இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய யமனை செலுத்தாதிருக்க வேண்டும்எனும் பொருள் படும் இப்பாடலும் என்னைக் கவர்ந்தது.
.
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

அங்கதன் பற்றி.
----------------
வாலி இறக்கும் தருவாயில் தன் மகன் அங்கதனை அழைத்து வரக் கூறுகிறான்.சந்திர மண்டலம் வானிலிருந்து கீழே விழுந்து கிடக்க , அச்சந்திரன் மீது விண்ணிலிருந்து ஒரு விண் மீன் விழுந்தது போல தரையின் மீது விழுந்து கிடக்கும் வாலியின் மேல் அவன் விழுந்தான்.எட்டு திக்கு யானைகளுக்கும் தோல்வியை உண்டாக்கியவன் இராவணன்.அவன் உள்ளம் உன் வாலின் தன்மையை நினைக்கும் போதெல்லாம்பட படவென அடிக்கும் அச்சம் ,இன்று நீ இறப்பதால் நீங்கி விடும் அல்லவா... என்றெல்லாம் கூறிக் கலங்க,அதற்கு வாலி, இராவணனை வென்ற தன்னை வென்றதால் அது ராமன் செய்த நல்வினை என்று கூறி , ராமனிடம் அடைக்கலம் என்று அங்கதனை சேர்க்கிறான்.


கார்காலம் முடிந்தும் சுக்கிரீவனிடமிருந்து எந்த முனைப்பும் இல்லாதது கண்டு வெகுண்டு வரும் இலக்குவனை முதலில் எதிர்கொண்டு, அங்கதன் தன் சிறிய தந்தை மதுவருந்தி மயக்கத்தில் இருப்பது கண்டு அனுமனுடன் தன் தாய் தாரையை அழைத்து வர அவள் இலக்குவனிடம் இதமாகப் பேசி அவன் சினம் தணிக்கிறாள். நடந்ததை சுக்கிரீவனிடம் கூறி விளக்க அவன் இலக்குவனிடம் மன்னிப்பு வேண்டுகிறான்.

இலங்கையின் மீது படை யெடுத்துச் செல்லும் முன் இராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்புகிறான் ராமன்..வாயுவின் மகனான அனுமன் இராவணனிடம் தூதனாகச் சென்றால்,அனுமன் அல்லாது இலங்கைக்குள் வந்து திரும்பும் வல்லமை உடையவர் வேறொருவர் இங்கில்லை என்று ராவணன் நினைக்கலாம் அல்லவா. அங்கதனே தக்கவன் என்று தேர்ந்தெடுக்கப் படுகிறான். தூது சொல்லாக சீதையை விடுவித்து உயிர் பிழைப்பதா இல்லை ராமன் அம்புகளால் பத்து தலைகளும் துண்டாவதா இதில் ஒன்றை ஏற்கக் கூறுமாறு இராவணனிடம் அங்கதன் கேட்க வேண்டும்..

இராவணன் முன் தூதுவனாக வந்த அங்கதனைப் பார்த்து “இன்று இப்போது இங்கு வந்த நீ யார்.?வந்த காரணம் யாது. ?என் ஏவலாட்கள் கொன்று தின்பதன் முன் நானறியத் தெரிவிப்பாயாக,என்று வினவ அங்கதனும் பற்கள் வெளியே விளங்கச் சிரித்தான்.

நின்றவன் தன்னை யன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய என்றான்.
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான்.

இந்திரனின் மகனும்,முன் காலத்தில் ஒப்பிலா இராவணன் என்பவனை,அவனது தோள்களுடனே வாலில் தொங்குமாறு கட்டி எல்லா திசைகளிலும் பாய்ந்து திரிந்தவனும் ,தேவர்கள் உண்ண மந்தார மலையாலே பாற்கடலைக் கடைந்தவனுமான வாலியின் மைந்தன் நான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்
.
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னை
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்.தேவருண்ண
மந்தாரப் பொருப்பால் வேலைக் கலக்கினான் மைந்தன் என்றான்.

நின் தந்தை என் நண்பன் நீ ஒரு சாதாரண மனிதனுக்கு தூதனாக வருவது இழுக்கு. உன் தந்தையைக் கொன்றவனின் பின்னே முகத்தைத் தொங்க விட்டு இருப்பது கண்டால் உன்னை அறிவிலி எனக் கூறுவர். உனக்கு குரங்கு இனத் தலைவனாகும் பதவி தருகிறேன் என்றெல்லாம் கூறி அங்கதனை வசப் படுத்தப் பார்த்தான் இராவணன். நீ வானரத் தலைமை தர நானா கொள்வேன்? அப்படிச் செய்தால் நாயானது தரச் சிங்கம் பெற்றுக் கொள்வது போலாகும்என்று கூறி நகைத்தான்
.
வாய் தரத் தக்க சொல்லி என்னையுன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.

சினம் கொண்ட இராவணன் அங்கதனைத் தாக்கிக் கொல்ல பணிக்க, வந்தவரை அழித்து மீண்டான் அங்கதன்.

பின்னர் போர் நடந்து ராமன் வென்று சீதையை மீட்டு, அயோத்தி மீண்டு மகுடம் சூடினான்.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெம் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.


கம்பனின் ராமாயணப் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது என்னுள்
ஒரு விஷயம் என்னைக் கவனித்தாயா என்று கேட்பது போல் இருந்தது. கம்ப நாட்டாழ்வாருக்கு நாய் என்றால் மிகவும் அலட்சியமான விலங்கு என்றே தோன்றி இருக்க வேண்டும். தன்னைப் பற்றி மதிப்புக் குறைவாக எண்ணும் இடங்களில் கதாமாந்தர்கள் அவர்களை நாயுடன் ஒப்பிட்டு கூறுவதைக் கண்டேன். நான் கண்ட மட்டில்

      1.)      இராமன் காட்டில் இருக்கும்போது பரதன் முதலானோர் வந்தது கண்டு குகன் கோபமாக

அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஏசாரோ.

   2.)கிட்கிந்தா காண்டத்தில் மராமரப் படலத்தில் இராமனிடம் சுக்கிரிவன்

வையம் நீ வானும் நீமற்றும் நீ மலரின் மேல்
ஐயன் நீ ஆழி மேல் ஆழி வாழ் கையன் நீ
செய்ய நீ அனைய அத்தேவும் நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய்.
 
   3.)கிட்கிந்தா காண்டம் வாலி வதை படலத்தில் வாலி

தாய் என உயிர்க்கு நல்கிதருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினும் நோக்கும் நேர்மை
நாய் என் நின்ற எம்பால்நவை அற உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.

இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா
வரம் தரும் வள்ளல் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான்.

ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேலைவாயறிவு தந்து அருளினாய்
மூலம் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ

ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பி மேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

   4.)சுந்தர காண்டம் பிணி வீட்டு படலம்.ஜானகி அக்னியை வேண்டல்

தாயேஅனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா
நாயே அனையவல் அரக்கர் நலியக் கண்டால் நல்காயோ
நீயே ஒரு உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில்
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனைச் சுடல் என்றாள்.

    5.)யுத்த காண்டம் வருணனை வழி வேண்டு படலம். வருணன் கூற்று

அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசனாய்
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை.

   6.)யுத்த காண்டம்  ஒற்று கேள்வி படலம் ராவணனிடம் ஒற்றர் கூற்று.

ஆயிரம் வெள்ளமான அரக்கர்தம் தானை ஐய
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்தபோது குரங்கு எதிர் நிற்பது உண்டோ.

   7.) அங்கதன் தூது படலம். யுத்த காண்டம்

வாய் தரத்தக்க சொல்லி என்னையுன் வசஞ் செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.


சிறிது காலம் இலக்கிய இன்பத்தில் திளைக்கக் காரண மான திரு. அப்பாதுரைக்கு என் நன்றிகள்.
------------------------------------------------------------------------------------------------------------
-   

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இந்தப் பதிவை மீண்டும் இடுகிறேன்












   
     




10 கருத்துகள்:

  1. கம்பன் மிகச்சிறந்த மனவியலாளன். 'அவரவர்க்கு விதித்தபடி அவரவர் செயல்பாடுகள் அமைகின்றன' என்பது பொதுவிதியாயினும், யாரையும் புறந்தள்ளமுடியாதபடிக்கு அவரவர் செயல்களுக்கு ஒரு நியாயம் கற்பித்து அவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்ததில்
    நிபுணர்த்துவம் வாய்ந்தவன். வாலியின் மூலமாகவும், கும்பகர்ணன் மூலமாகவும் கம்பன் ஒரு வழக்குறைஞர் போலவே முன்னின்று எடுத்து வைக்கும் வாதங்கள் பாத்திரப்படைப்புக்கு இலக்கணம் வகுப்பவை. என்னுடைய பதிவின் 'இலக்கிய இன்பம்' பகுதியில் இவையெல்லாம் குறித்து நிறைய எழுத குறிப்புகள் வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக எதையும் தீர்க்கமாகச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் காலம் தள்ளிக்கொண்டு போகிறது.

    பதிலளிநீக்கு
  2. இலக்கிய இன்பத்தில் ஆழ்ந்து திளைத்தேன். கம்பராமாயணப் பாடல்களில் சுட்டிக்காட்டிய இடங்களை ரசித்தேன். இன்னும் அறிந்துகொள்ள ஆர்வம் உந்துகிறது. மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கமபனின் காவிய இன்பத்தை நாங்களும் சிறிது
    துய்த்து மயங்க அழகான அருமையான
    படைப்பாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. @ஜீவி,
    @ கீதமஞ்சரி,
    @ ரமணி,
    கம்ப ராமாயணம் ஒரு கடல். பல முத்துக்கள் பலரும் எடுத்திருக்கிறார்கள். அதில் சில நான் கண்டது சற்றே வித்தியாசமானது. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். கம்பனின் பாத்திரப் படைப்பு பற்றி விமரிசிக்கும் அளவுக்கு எனக்கு தமிழறிவு போதாது என்றே எண்ணுகிறேன். எனக்குத் தென்பட்டதை எழுதினேன். அத்துடன் என் பணி முடிகிறது. மற்றபடி இது இன்பமா இல்லையா என்பது அவரவர் முடிவே.

    பதிலளிநீக்கு
  5. இலக்கிய இன்பம் மீண்டும் மீண்டும் படிக்கத்தூன்டும் அருமையான ஆக்கம்..

    அபிராமி அந்தாதியிலும்
    நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
    நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
    பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
    தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே


    என்கிறாரே அபிராமி பட்டர்..

    பதிலளிநீக்கு
  6. (நான் படித்த) தமிழ் இறை இலக்கியங்களில் 'நாய்' பரவலாகப் பயன் படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு நானும் வியந்திருக்கிறேன்.

    அங்கதன் பாத்திரம் ஒரு ஆச்சரியம். தந்தையைக் கொன்றவன் மேல் கொஞ்சமும் கோபம் கொள்ளாமல் அடிமையாக நடந்து கொள்ளும் பாத்திரம் இறக்குமதியோ என்று தோன்றும் (கிரேக்கக் காவியங்கள், கடவுள் கதைகள்). வால்மீகி அங்கதன் பாத்திரத்தை சேர்த்திருக்கவே வேண்டாமோ? கதையின் சுவாரசியத்தை கூட்டாத ஒரு பாத்திரம் அங்கதன். வால்மீகி தராத மதிப்பை கம்பன் அங்கதனுக்குக் கொடுத்தது தான் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. இன்று மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. ராம நவமிக்காக மீள் பதிவு செய்தது புது பதிவர்களும் படிக்க வசதியாயிருந்தது.
    படித்து மகிழ்ந்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாசிக்கவும் மனதில் வைத்திருக்கவும் அருமையான பதிவு.இந்த பதிவைத் தந்த தங்களுக்கு வணக்கங்கள்

    பதிலளிநீக்கு