Friday, February 10, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஏழு )

                   நினைவில் நீ (நாவல் தொடராக )                                                                    
                   ----------------------------------------------
                                    -----  7  ------
         ( இது ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இளைஞனின் குடும்பக் கதை,மனித
                 மனங்களின் உணர்வுகள்,ஆசாபாசங்கள்,அபிலாக்ஷைகள்,அறியாமைகள்
         கோப தாபங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றைக் கதையின் போக்கிலேயே எழுதி
.                இருக்கிறேன் தொடர்ந்து படித்தால் தெளிவாகத் தெரியும்..இருந்தாலும் இதுவரை பதிவிட்ட ஆறு அத்தியாயங்களில் வந்த கதையின் ரத்தினச் சுருக்கம் இதோ.
         
           ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரங்கசாமிக்கு மூத்த
                தாரத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும், இரண்டாம் தாரத்தால் 
                நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். முதல் இரு பிள்ளைகளும் பெண்ணும் 
               முதல் தார உறவினர்கள் பேச்சைக் கேட்டு அப்பாவுக்கு எதிராக இருக்கிறார்கள்.
               முதல்தாரத்தின் கடைசி பிள்ளை பாபுவிடம் அவருக்குப்பின் அவந்தான் 
                பொறுப்பேற்று  எல்லோரையும் கரையேற்றவேண்டும் என்று உறுதி
                பெறுகிறார். மூத்தவன் சுந்தரம் ஒரு மனஸ்தாபத்துக்குப் பிறகு எங்கோ
                சென்று விடுகிறான். இரண்டாம் மகன் கண்ணன்,வேலையிலிருக்கும்போது
                பாட்டி முதலான உறவினர் சொல் கேட்டு தந்தைக்கு எதிராக இருந்தவன்
                வேலை போன நிலையில். பாட்டியின் வீட்டை விட்டு அகற்றப்படுகிறான். 
                பெண் கமலம் மணம் புரிந்து குழந்தை குட்டிகளுடன் கஷ்ட ஜீவனம் 
                நடத்துகிறாள.


                தன் இறந்த மகளின் இடத்தில் இருக்கும் ஒரு மகளை ரங்கசாமிக்கு மணம்
                முடிக்க முயற்சித்து, அது நடக்காமல் போகவும், யாரும் எதிர்பாரா வகையில்
               ஒரு வேற்றுசாதிப் பெண்ணை மணந்தவரை மன்னிக்க முடியாமல்,அந்தக் 
                குடும்பத்தை எதிர்த்து நிற்பதில் எல்லா வழிகளையும் பாட்டி கையாண்டாள்
.
               பயிற்சி முடிந்து திரும்பி வரும் பாபு,பம்பாயில் எதேச்சையாக அறிமுகமான
               சியாமளாவை பெங்களூர் வீட்டில் சந்திக்கிறான்

               பம்பாயில் இருந்து திரும்பிய பாபு, முதல் வேலையாக, கண்ணன் இருக்கும்
               இடம் சென்று குடும்பம் ஒன்றாயிருக்க வேண்டுகிறான். அங்கு வந்திருந்த 
               பாட்டியின் பேச்சால் பாபுவை அவன் வீட்டில் சந்திக்க மாட்டேன் என்று 
               பாட்டியிடம் தெரிவிக்கிறான். .பாட்டி வேண்டியதும் அதுதானே.)                                     
                                   
                  நினைவில் நீ ( நாவல் தொடராக )
                 -----------------------------------------------
                                    ------ 7 ------
 பாபு, இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான்வீட்டில் இருக்கும் அரிசி வரும்.உனக்குச் சம்பளம் வரவோ இன்னும் பத்து நாட்களுக்கும் மேலே இருக்கு.ஏதாவது வழி பண்ணணும்,என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் கல்யாணி அம்மா. காதில் விழுந்ததைக் கேட்காத மாதிரி வெளியில் புறப்பட ஆயத்தமானான் பாபு.
      “ விசுவுக்கும் உடம்பு சரியில்லை.சுரம் அடிக்கிறது.அவனானால் சட்டை செய்யாமல் இரண்டு நாட்களாக சுரத்துடன் ஸ்கூல் போய் வருகிறான் டாக்டரிடம் போகலாமென்றாலொ பணமும் இல்லை. அவனும் உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என்று படுத்துக் கொண்டிருக்கிறான்.

       “ என்னை என்னச் செய்யச் சொல்கிறாய்பாபு கோபம் மீறிக் கேட்டான்.
இப்படிக் கேட்டால் என்னடா பதில் சொல்வது.ஹூம் ! இதைச்செய் அதைச் செய் என்று சொல்லும் நிலையிலா என்னை விட்டுப் போனார் உங்கப்பா.?கல்யாணி அம்மாவுக்குக் கண்ணீர் வந்தது.அதைக் கண்டதும் பாபு, “அரிசி இல்லையென்றால் பட்டினி கிடவுங்கள் .உடம்பு சரியில்லை என்றால் செத்துத் தொலையுங்கள். என் உயிரை எடுப்பதால் அரிசி வருமா, டாக்டருக்குப் பணம் வருமா. ?இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்என்று வெடித்தான்.

           கல்யாணி அம்மாவுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.இருப்பது இல்லாதது அறிந்து கொண்டு தரும் வீட்டுக்குத் தலைவன் இல்லை.அந்த நிலையில் இருக்கும் தான், வளர்த்த பிள்ளையிடமே சுடு சொல் கேட்க வேண்டி இருக்கும் விதியின் கொடுமையினைக் கண்டு குமுறினாள்.கணவன் இருந்தவரை மட்டும் இல்லை என்றில்லாமல் இருந்ததில்லை உள்ளது இல்லாதது என்பவற்றை சம உரிமையுடன் தெரியப் படுத்திஅதற்கேற்ற முறையில் செயல் படுத்த இருவருமாக முடிவெடுக்கலாம்.இப்போது அந்த உரிமை போய் விட்டது யாசகம் கேட்கும் நிலையாகி விட்டது. பெற்ற பிள்ளையானால் பெறுவது உரிமை எனலாம்.என்னதான் இருந்தாலும் பாபு கல்யாணி அம்மா வயிற்றுப் பிள்ளை இல்லையே.உள்ள வேதனை நினைவுகளால் வெதும்பிற்று பாபுவுக்கும் என்னவோ போலிருந்தது. தனக்கு இப்படி அடிக்கடி ஆத்திரம் வருவது ஆக்க வேலை ஏதுமில்லாமல் இயந்திர கதியில் நாட்களைக் கடத்துவதால் தானென்று அவன் எண்ணினான் அன்று கண்ணனின் வீட்டுக்குச் சென்றிருந்த போதும் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு வார்த்தைகளை வீசி எறியாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். இன்றும் அம்மாவிடம் கோபப் படாமல் இருந்திருந்தால்,அவருடைய துயர நினைவு இந்த நேரத்தில் எழாமல் தடுத்திருக்க முடியும். தான் இனிமேல் தன்னிலை தவறுவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டான்.

    அம்மா.. அம்மா. நான் இங்கு வந்து ஆறு மாதங்களாகிறது இல்லையா அம்மா. இந்த ஆறு மாத காலத்தில் உங்களை ஒரு நாளாவது பட்டினி என்று இருக்க விட்டிருக்கேனா. எனக்குத் தெரியாதா வீட்டு நிலை. விசுவுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துப் போடா என்றல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். என்னிடமோ பணம் இல்லை என்ற நிலை.அது சுட்டிக் காட்டப் படும்போது ஏற்படும் கோபத்தில் உங்கள் மனசை புண் படுத்தி விட்டேன்..என் அம்மா.! கொஞ்சம் சிரியுங்களேன்என்று கூறி முடிக்கையிலேயே பாபுவால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவனால் தாய்க்கு ஏற்பட்ட வேதனையின் வெம்மையை  கண்ணீரால் நனைத்துக் குளிர வைத்தான்.சிறிது நேரத்தில் தன் வசமானான்.

     “ விசு உடம்புக்கு எப்படி இருக்கிறது.?உன்னால் வரமுடியுமென்றால், பரவாயில்லை என்றால் என் கூட வா . உனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிக்கிறேன் “என்று புதிர் போட்டான். விசுவும் பெரும் உபாதையையும் சிறு தூசாக மதிக்கும் சிறுவன் அண்ணனைத் தொடர்ந்தான்.

    “ எங்கேடா இப்படி... காப்பி கூடக் குடிக்காமல்...கல்யாணி அம்மா முடிக்கும் முன்னே, “ ஆமாமாம். காப்பி. மறந்தே போய்விட்டேன்.என்று திரும்பி வந்து காப்பி அருந்தி புறப்படத் தயாரானான் பாபு.

     சற்று முன்னிருந்த நிலைக்கு இப்போது புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அந்த அமைதியில் அவரவர் எண்ணங்களை அசை போட்டவாறு சில நிமிஷங்களைக் கழித்தனர்.அந்த அமைதியைக் கலைக்காமலேயே சைகையால் தாயிடம் விடை பெற்றுச் சென்றனர் பாபுவும் விசுவும்.

    எனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிப்பதாகச் சொன்னீர்களே என்னண்ணா அதுவிசு கெட்டான்.
“சொன்னால் சுவை போகும் சங்கதியடா தம்பி .அதைக் கண்டு புரிது கொள்வதே நல்லதடா தம்பி.என்று நாடக பாணியில் கூறி சிரித்தான் பாபு.
    உண்டு உடுத்து உறங்குவதோடு தன் ஆக்க உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க விரும்பிய பாபு அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.கலை மன்றங்களை நாடினான் நாடியவனின் உண்மை உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட பலர் அவனுக்கு உற்சாகமூட்டி மதிப்பும் கொடுத்தனர். சொற்ப காலத்திலேயே பாபுவின் பேச்சென்றால் அதற்கு தனி மவுசு என்று பலர் கூறுமளவுக்கு அவன் புகழ் வளர ஆரம்பித்தது. தன்னுடைய வெளியுலக நடவடிக்கைகளை தன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமலேயே மறைத்து வைத்து இருந்தான் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்து தானே ஆகவேண்டும். தெரிவிக்கும் பணி விசுவுக்குக் கிடைத்தது.

    பாட்டுக்கு  ஒரு புலவன் பாரதிக்கு விழா எடுக்க விழைந்திருந்த தமிழ் கலை மன்றத்தினர் பாபுவையும் பேச அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டத்துக்கு விசுவையும் அழைத்துப் போனான் பாபு.பாரதியின் கண்ணோக்கு “என்ற தலைப்பில் பேச பாபு எழுந்தபோது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.பேச்சுத் துவங்கும் முன்னே இவ்வளவு வரவேற்பு என்றால் அண்ணா பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் விசு. “ இந்த மனிதரா பேசப் போகிறார் “ என்று ஆச்சரியத்தில் நிலை குத்தி நின்றாள் சியாமளா.. இவனென்ன பேசப் போகிறான் என்று அலட்சிய பாவத்தோடு இருந்தாலும் இவனுக்கு இவ்வளவு மதிப்பா என்று பொருமினாள் பாட்டி. இவனுடைய நாடகமெல்லாம் பள்ளியில்தான் செல்லுபடியாகும் என்றிருந்தேனே இங்கும் கூடவா.?இருந்தாலும் என் தம்பி அல்லவா என்று உள்ளத்துப் பொறுமலை உறவால் கட்டுப் படுத்த முயன்றான் கண்ணன்.

       இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் முகத்தில் அமைதி நிலவ, கண்களில் ஒளி படர கொண்ட எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க ஒரே மூச்சாக எழுந்து நின்ற பாபு, கம்பீரமான குரலில், “ பெரு மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, சகோதர சகொதரிகளேஎன்று ஆரம்பித்ததும் சியாமளாவுக்கு விவேகாநந்தரின் நினைவே யெழுந்தது. கூட்டத்தில் அமைதி நிலவியது.

     பாரதியின் கண்ணோக்கு என்ற தலைப்பில் பேச எழுந்துள்ள நான் ,பேசும் முன்பாக உங்கள் அனைவரையும் வேண்டுவது, அவர் விரும்பிய புதியதொரு சமுதாயத்தைத் தோற்றுவிக்க எழுப்பப்படும் அஸ்திவாரத்தின் ஒரு கல் இந்தக் கூட்டம் என்று எண்ணி ,எண்ணியதை எண்ணியதாங்கு செயல் படுத்தும் முயற்சியில் இகழ்ச்சி அடைய விடக் கூடாது என்பதுதான் “ என்று ஆரம்பித்தவன் பாரதியின் எண்ணத்தில் ஏற்பட்ட எழுச்சியை அவர் இயற்றிய பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கினான்.
“ மனித குல உணர்வும் நாட்டுப் பற்றும் பாரதியின் பாடல்களில் இரண்டறக் கலந்து விளங்குகிறது.நிலை கெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதி தனி மனிதனுக்குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வஞ்சினம் எடுக்கிறார். ஆற்றல் நிரம்பப் பெற்ற சமுதாயத்தை சிருஷ்டிக்க விரும்புபவன் மனித்ருணவை மனிதர் பறிக்கும் கேடுகெட்ட இந்த ஜகத்தையே அழிப்போம் என்கிறான்.இந்த அழிவு குஞ்சு வெளிவர முட்டை ஓடு அழிக்கப் படும் தன்மையுடைத்தாய்தான் இருக்கும் பயிர் செழுமையாக வளர கள்ளியும் காளானும் வேரோடு ஒழிக்கப் படத்தான் வெண்டும். ஆள்பவன் ஆளப் படுபவன் என்ற பேதமற்ற சமுதாயத்தில் பெயரளவுக்கு இந்நாட்டு மன்னர் என்றில்லாமல் உண்மையிலேயே மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.கடமையை செவ்வனே செய்ய இடம் தராத இன்றைய சமுதாயம் கடந்த கால பழக்க வழக்க சட்ட திட்ட கோட்பாடுகளிலிருந்து மீட்சி பெற வேண்டும் மீட்சி பெற சாதி பேதமற்ற சமுதாயம் வளர வேண்டும். மூட நம்பிக்கைகளின் நிலைகளன் இந்தியா என்ற சொல்லுக்கு இழுக்கு வர வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்ய வேண்டும் அப்போதுதான் புதிய சமுதாயம் பிறக்கும் அப்போதுதான் நாம் பழம் பெரும் பாரத நாட்டின் புதல்வர் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.பெருமை தருவோம் வாழ்க பாரத தேசம். வளர்க பாரதிகண்ட சமுதாயம்.என்று கூறி பாபு பேச்சை முடித்ததும் கைதட்டல் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று.


    விழா முடிந்து கூட்டம் கலைய ஆரம்பிக்க இரவு ஒன்பது மணியாகிவிட்டது. விசுவுக்கு கொஞ்சம் தெம்பு இருந்தது என்றால் அது பாபுவின் பேச்சைக் கேட்ட பெருமையால் வந்ததாகும். டௌன்ஹாலிலிருந்து அலசூர் செல்வது எப்படி என்ற எண்ணம் கூட்டம்கலைந்த பிறகு தான் பாபுவுக்கு எழுந்தது. நடந்து செல்வது என்றால் குறைந்தது நான்கு மைல்களாவது இருக்கும். தனக்காவது பரவாயில்லை.விசுவையும் நடத்திச் செல்வது என்பது முடியாத காரியம். பஸ்ஸில் செல்லலாம் என்றால் கையில் காசில்லை. எச்சரிக்கை இல்லாமல் விசுவைக் கூட்டி வந்த பாபுவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.எப்படியும் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும் முன்பே யாரிடமாவது சொல்லி இருந்தால் அவர்களாவது ஏதாவது வழி செய்திருப்பார்கள். இப்பொழுது என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே விசுவையும் கூட்டிக் கொண்டு நடையைக் கட்டியவன் சிறிது தூரம் சென்றதும் சம்பங்கி டாங்க் அருகில் பஸ்ஸுக்காக காத்திருந்த நண்பர்கள் சிலரையும் சியாமளாவையும் அவள் கூட வந்த பெண்மணியையும் ஒரு சமயம் சியாமளாவின் தாயாக இருக்கலாம்- கண்டான். பஸ்ஸுக்கு நிற்காமல் மேலே தொடர்ந்து சென்றவனை தடுத்து நிறுத்தி விளக்கம் கேட்டார்கள். நண்பர்கள். பிடி கொடுக்காமல் பேசிய பாபுவிடம் பர்ஸ் காலி என்பதையறிந்த அவனுடைய ஆருயிர் நண்பன் கான்விடாப்பிடியாக வற்புறுத்தி பாபுவுக்கும் விசுவுக்கும் சேர்த்தே டிக்கட் வாங்கினான்.கானுக்கு பாபுவை நன்றாகத் தெரியும். பாபுவின் உள்ளத்தில் எழும் எண்ணங்களை அவன் வெளியிடாமலேயே உண்ரும் அளவுக்குத் தெரியும். அவ்வளவு அத்தியந்த நண்பர்கள். பஸ்ஸிறங்கி வீடு செல்லும்போதுஅன்று மாலை நடந்த நிகழ்ச்சிகளை கான் துருவித் துருவிக் கேட்டு கிரகித்துக் கொண்டான். பாபுவுக்கு அதனால் அந்த பற்றாக்குறை நிலை சமாளிக்கும் பொறுப்பு சுலபமாகி விட்டது.யூ ஆர் எ ஃப்ரெண்ட் இன் டீட், அண்ட் ஸோ  இண்டீட்(You are a friend in  deed  and so indeed.) என்று கூறி கானிடம் விடை பெற்றான் பாபு.
  ---------------------------------------------------------------------
                                             (தொடரும்)    

            .  .                 ;            .  

     ..    
  
   6 comments:

 1. பாரதிவிழா சாக்கில் இடைச்செருகல் மிகவும் சுவாரசியம்.

  ReplyDelete
 2. //கல்யாணி அம்மாவுக்குக் கண்ணீர் வந்தது.அதைக் கண்டதும் பாபு, “அரிசி இல்லையென்றால் பட்டினி கிடவுங்கள் .உடம்பு சரியில்லை என்றால் செத்துத் தொலையுங்கள். என் உயிரை எடுப்பதால் அரிசி வருமா, டாக்டருக்குப் பணம் வருமா. ?இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்” என்று வெடித்தான்.//

  இவ்வளவு கொடூரமான வார்த்தைகளைப் படித்து பாபுவின் மேல் கோபம் வரவில்லை; மாறாக பரிதாபம் தான் பீறிடுகிறது. துன்பத்தின் சுமை அழுத்த அழுத்த அந்த துன்பத்தின் சுவடுகள் தான் வார்த்தைகளாக ரூபம் கொண்டிருக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை. இயலாமை பாசம் கொண்டுள்ளோர் மீதும் படபடக்கச் செய்யும். இந்த உணர்வை மிக இயல்பாக சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். கல்யாணி அம்மாளும் பாவம் தான். அவரும் தான் என்ன செய்வார்?.. எல்லாவற்றையும் பார்த்து விட்டு வாய்த்த அந்த ஏழ்மை நிலையின் மீது தான் கோபம் கோபமாக வருகிறது. அந்தக் கோபம் இவர்கள் துன்பம் எப்பொழுது துடைக்கப் படும் என்று ஏக்கமாக மாறுகிறது.

  பாபு யாரென்று தெரிகிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. தொடர்கிறேன்...
  மனிதனின் உணர்வுகளுள் வெடிக்கும் உலகங்கள் தான் எத்தனை!

  ReplyDelete
 4. @அப்பாதுரை,
  சில கருத்துக்களை இடைச் செருகலாகவும் வைக்க வேண்டி உள்ளது. கதையின் போக்குக் கேற்றபடி. சரிதானே. நன்றி.

  ReplyDelete
 5. @ஜீவி,
  கோபத்தில் கொட்டி விட்ட வார்த்தைகள் இருந்தாலும் மனம்வருந்துகிறானே.தொடர்ந்து படிக்கும்போது இன்னும் புரிந்து கொள்ளலாம், ரசிக்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி சார்.

  ReplyDelete
 6. @ஷக்திபிரபா. தொடர் வருகைக்கு மிக்க நன்றி. உணர்வுலகங்களை இயன்றவரை நேர்மையாக கூற முயன்றிருக்கிறேன். தொடர் வாசிப்பே சுவை தரும். மீண்டும் நன்றி.

  ReplyDelete