வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

எனக்கென்ன செய்தாய் நீ.? .

               
                                 எனக்கென்ன செய்தாய் நீ.?
                                 -----------------------------------


          நாளும் என் நினைவிலும் நாவிலும்
    வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
    பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
    அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
    ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
    ஐயா, எனக்கொரு ஐயம்எனக்குனைப்
    பிடிக்கும் ,உனக்கெனைப் பிடிக்குமா.?

    நாளும் நெறி தவறி குணங்கெட்டு
    கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
    தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
    “ சரவண பவ “ என எழுதி
    “ முத்தை திரு பத்தித் திரு நகை “என
    அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
    புகழ் பாட அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ? 

    மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
    வாய் பேசாது ஊமையாய் நின்ற்வருக்கு
    வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
    பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    கந்தா.! உன் புராணம் பாட வந்த
    கச்சியப்ப சிவாச்சாரியருக்கு
    எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி
   “ திகட சக்கர செம்முக மைந்துளான் “
    இலக்கணப் பிழை கொண்ட தென்று
    குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
    எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
    நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
    சோழ நாட்டு வீர சோழியம் என்ற
    இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே,
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
    மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
    சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
    மருகா, மாயையில் கட்டுண்டு மனம் பிதற்றும்
    எனக்கென்ன செய்தாய் நீ .?

   முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த
   என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்
   உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை
   அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
   தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
   வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
   மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
   தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
   பொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்
   எனக் கேட்பதைப் பொறுத்தருள்வாயே. ! 
-------------  -----------------------------------------------------


( 2011-ம் வருடம் மார்ச் மாதம் எழுதிய பதிவு
 “முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் “),


(” ஐயோ” என்பது எமனின் மனைவி பெயர்) 







14 கருத்துகள்:

  1. ஒரு கவிதைக்குள் இத்தனை அரிய தகவலகளை
    ரசிக்கும் படிச் சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    "ஐயோ " எமன் மனைவியின் பெயரா
    ஐயோ இத்தனை நாள் அறியாது அல்லவா இருந்திருக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  2. @ரமணி சாதாரணமாக ஒரு நாள் விட்டுத்தான் பின்னூட்டங்களைப் பார்ப்பேன் ஏதோஒரு ஆர்வமுந்த பார்த்தால் முதல் வருகை உமது. மிக்க நன்றி. பக்தி இடுகை என்றாலும் என் குணம் என்னையும் அறியாமல் வெளிப்படுகிறது. மீண்டும்நன்றி.

    பதிலளிநீக்கு
  3. @ரவிசந்திரன்,
    @ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
    @டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருணகிரி நாதர், குமரகுருபரர், கச்சியப்ப சிவாசாரியாருக்கு, எல்லாம் கந்தன் அருளியதை அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள்.

    கவிதை அழகு.

    பதிலளிநீக்கு
  5. முருகன் அடியெடுத்துக் கொடுத்த விவரம் தெரியாது..interesting.

    பதிலளிநீக்கு
  6. எனக்கென்ன செய்தாய் என்று கேட்பதையும் பொருத்தருள வேண்டுமா? ஒருவேளை முருகன் 'எனக்கென்ன செய்தாய்' என்று பதிலுக்குக் கேட்டால் தயாராக இருக்க வேண்டும் போலிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஐயா..

    தன்னுடைய அடியார்களான - அருணகிரி நாதர், குமர குருபரர், கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகியோருக்கு, முருகன் அருளியது அனைத்தும் நமக்காகத் தானே..

    அறுமுகனின் திருவிளையாடலை கவிதைச் சரமாக கோர்த்து விட்டீர்கள்.

    இனிய பதிவினை வழங்கியமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

  8. @ துரை செல்வராஜு
    ஆண்டவன் பிறர்க்கருளியது எனக்கெனக் கொள்ளும் பக்குவம் இல்லை. எனக்கென அருளியதையும் கடைசியில் எழுதி இருக்கிறேனே. வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. என்ன ஐயா இந்த மாதிரி எழுதி அசத்தி விட்டீர்களே உண்மையில் நான் அசந்து தான் விட்டேன். அவ்வளவு அருமையாக உள்ளது. கேள்வியும் நியாயமானதே. இதுவும் பக்தி தான் ஐயா உரிமையோடு கேட்பது. கெஞ்சிக் கேட்பது. என்று பல வகை உண்டு தானே ஐயா
    நன்றி நன்றி !

    பதிலளிநீக்கு
  10. @ இனியா
    பொதுவாக இந்த பக்திச் சமாச்சாரம் எனக்கு தெரியாதது. முருகனின் கதை படித்திருக்கிறேன் அதையே என் பாணியில் எழுதினேன் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு