நினைவில் நீ ( நாவல் தொடராக)
-------------------------------------------
------- 10 -------
கல்யாணி அம்மாவுக்குக் கண்ணனின் கல்யாணத்துக்கு அழைப்பிருக்கவில்லை .பாபுவும் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. வரவேற்பில்லாத இடத்துக்கு வலுவில் சென்று ஒதுக்கப் படுவதை விட போகாமலிருப்பதே மேல் என்று பாபு எண்ணினான். தம்பிகளை அழைத்துப் போக விரும்பினான். மூத்தவர்கள் ராஜு, விசு இவர்களுக்குப் போக விருப்பம் இருக்கவில்லை. தன் தாய்க்கு எதிரிகள் தங்களுக்கும் எதிரிகள் என்றே எண்ணினார்கள். ஆனால் பாபுவிடம் அப்படிச் சொல்ல முடியாது.. ஆகவே ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக் கொண்டார்கள்..இளையவர்கள் போக விரும்பினாலும் கல்யாணி அம்மா தடுத்துவிட்டார். இதில் பாபுவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். மனிதர்களுடைய குரோத, விரோத மனப் பான்மைகளுக்கு ஒனறுமே தெரியாத அந்தக் குழந்தைகளும் இலக்காவதை எண்ணி வருந்தினான். பிரிந்த குடும்பம் ஒன்றாக சேர்ந்து வாழாவிட்டாலும் ஒரே குடும்பம் என்ற அன்பாவது விளையுமேயானால் அதுவே போதும் என்று எண்ண ஆரம்பித்தவன், நடந்த நிகழ்ச்சிகளைத் தன்னாலும் தவிர்த்து நல்லுறவு ஏற்படச் செய்ய முடிய வில்லையே என்று ஏங்கினான்.
இதனால் கண்ணனுக்கும் அவன் செய்கைதான் சரியென்று எண்ண ஏதுவாகும் என்று நினைத்தவன், கண்ணனும் மாலதியும் வந்ததைக் கண்டபோது தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்தான். யாருமே எதிர்பார்க்காத வரவு. பாபுவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “ வா அண்ணா, வாங்க அண்ணி; அம்மா, யார் வந்திருக்கான்னு பாரேன்..ஆச்சரியப்பட்டுப் போவாய். ராஜு,விசு, சந்துரு, ரவி இது யார் தெரியுமாடா. நம்ம அண்ணா கண்ணன்;ஞாபகமிருக்கா.?இது அண்ணி. “
சொந்த அண்ணனையே சொந்தத் தம்பிகளுக்கு, அறிமுகப் படுத்தவும் ஞாபகப் படுத்தவும்வேண்டிய நிலையை எண்ணி பாபுவின் கண்கள் குளமாயின. சமாளித்துக் கொண்டே,”அண்ணா ! எனக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்குத் தெரியுமா? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா... அண்ணாவைக் கூட்டி வந்ததுக்கு அண்ணியையா, இல்லை அண்ணியைக் கூட்டி வந்ததுக்கு அண்ணாவையா ..யாரைப் புகழறதுன்னு தெரியலை. அம்மா ! கண்ணன் கிட்ட க்ஷேமலாபங்களை கேளம்மா.?”
கண்ணனை எதிர்பார்க்காத கல்யாணி அம்மாவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்து அவனைக் கண்டதும் ,இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் இன்னதுதான் பேச வேண்டும் என்று ஒன்றுமே தெரியவில்லை. அவளுக்கு அடக்க முடியாத அழுகைதான் வந்தது. கணவனின் நினைவும் இந்த பிள்ளைகளால் அவர் பட்ட மனக் கஷ்டங்களும் நினைவுக்கு வந்தது. இவனிடம் அன்பாக என்ன பேச முடியும். என் கையால் சோறு தின்று வளர்ந்த இவன் என்னைப் பார்த்து அம்மா என்று கூப்பிடக் கூடத் தயங்குகிறானே. நான் ஏதாவது கேட்கப் போய், அவன் அசம்பாவிதமாகப் பேசிவிட்டால்.... என்றெல்லாம் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு பாபுவின் கெஞ்சாத குறையாகக் கேட்கப் பட்ட வேண்டுகோள் தடு மாற்றத்தை அளித்தது.
“ நான் விசாரித்துத்தான் தெரிந்து கொள்ளணுமா...கண்ணா எங்களை எல்லாம் நீ மறக்கலியே அதுவே எனக்குத் திருப்தி.வாம்மா, மாலதி ,உள்ளே வா. “
வந்தவர்களை முதலில் வாவென்று கூட வரவேற்க வில்லையே என்று தடுமாறிக் கொண்டிருந்த மாலதிக்கு கல்யாணி அம்மாவின் அன்பான வாஞ்சையான வரவேற்பு மிகவும் இதமாக இருந்தது. உள்ளே போகலாமா என்று உத்தரவு கேட்பது போல் கண்ணனை நோக்கினாள். கண்ணனின் சரியென்ற தலை அசைவு கிடைக்கப் பெற்ற பின் உள்ளே சென்றாள்.
ராஜுவுக்கும் விசுவுக்கும் கண்ணனை நன்றாக ஞாபகம் இருந்தது. சந்துருவுக்கும் ரவிக்கும்தான் தெரிய வில்லை. தெரியப் படுத்தப் பட்டவுடன் இருவரும் கொஞ்சம் சங்கோசத்துடன் கண்ணன் அருகில் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒரு முறை நோக்கிய கண்ணனுக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்ற வில்லை. ஆனால் மறுகணமே இருவரையும் வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தான். கண்ணன் அண்ணா ரொம்பக் கெட்டவன் என்று எண்ணிக் கொண்டிருந்த ராஜுவும் விசுவும் இதைப் பார்த்ததும் அவன் மீது ஒரு தனி அன்பு வளருவதை உணர்ந்தனர். தாங்கள் இதுவரை எண்ணி வந்தது தவறு என்று தெரிந்து வெட்கப் பட்டனர்.
நீ எத்தனையாவது படிக்கிறாய் ராஜா என்று கண்ணன் கேட்டதும் டெந்த், என்று ராஜு பதில் சொன்னான்..” விசு நீ?’ “நானும் டெந்த்” என்றான்.
“ ஏண்டாபாபு இரண்டு பேரும் ஒரே க்ளாஸ் படிக்கிறார்கள்.?”
” ஆமாண்ணா.. ராஜுவுக்கு உடல் நலம் சரியில்லாமல் ஒரு வருடம் போயிடுத்து. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் வேலைக்குப் போகத் தயாராயிருப்பார்கள். அதே சமயத்தில் நம்ம கஷ்டமும் ஒரேயடியாக் கொறஞ்சிடும்”.
“ அது சரியில்லை பாபு. நாமதான் மேல் படிப்பு படிக்க முடியாம திண்டாடினோம்னா, இவர்களும் அப்படியே இருக்கணுமா. இவர்களையாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். ”
கண்ணன் கூறிவந்ததைக் கேட்டவுடன் விசுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவன் வகுப்பில் முதலாவதாக வருபவன். எப்படியும் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.ஆனால் பாபு அண்ணாவால் முடியாதே என்ற கவலை இருந்தது. அது இப்போது கண்ணன் பேச்சைக் கேட்டதும் ஓடி மறைந்து
விட்டது. பாபுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. .
” என்ன அண்ணா, சொல்கிறீர்கள்.... எனக்கு மட்டும் இவர்களை படிக்க வைக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில்லையா.? நம் நிலைமை இருப்பதைப் பார்த்துதான், வீணாக இவர்களுக்கு ஆசையூட்ட விரும்பவில்லை.”
” போடா... ரொம்பத் தெரிந்தவன் மாதிரி பேசாதே. நம்ம நிலைக்கு என்ன குறைச்சல்.? நீ சம்பாதிக்கிறாய். நானும் சம்பாதிக்கிறேன். எல்லோரும் ஒன்றாக இருந்தால் கஷ்டமே இருக்காது. அதைச் சொல்லத்தான் நானும் மாலதியும் வந்தோம் இல்லையா மாலதி.?” உட்புறம் மாலதி இருந்த திக்கை நோக்கிக் கேட்டான். கல்யாணி அம்மாவும் எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள். அவளுக்கு இந்த திடீர் வரவும் கொண்டு வரப்பட்ட செய்தியும் ஏதோ ஒரு சந்தேகத்தை எழச் செய்தது. பாபுவுக்கும் இந்தச் செய்தி கண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி தரவில்லை.
“ அண்ணா நீங்க தனியா இருந்தவரை நம்ம குடும்பத்தோட சேர்ந்திருந்து ,பிறகு கல்யாணம் பண்ணியும் கூட அப்படித் தொடர்ந்திருந்தா, எல்லாம் சரியாயிருந்திருக்கும். ஆனால் இப்போ நிலைமை வேற. எதையும் ஆலோசித்துத்தான் செய்ய வேண்டும். “—பட்டும் படாமலும் பாபு கூறியதைக் கேட்கவும் கண்ணனுக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் இப்போது கோபப்பட்டுப் பிரயோசனம் இல்லை. வந்த காரியம் சரியாக முடியாவிட்டால், அதனால் பாதிக்கப் படப் போவது தான் தான் என்று உணர்ந்து, மிகவும் சாதுரியமாகப் பேச்சை மாற்ற் முயன்றான்.
” பாபு நீ அன்னிக்கி கூப்பிட்டபோதே நான் வரலைன்னு தானே உனக்குக் கோபம்..இதப் பாரு. அப்போ எனக்கு பாட்டியாலே எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவர்களைப் பழித்துக்கொள்ள விரும்ப வில்லை. இப்போ நான் ஒரு தனிக் காட்டு ராஜா. யாரையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. நானும் மாலதியும் நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். .உனக்கும் இப்போது உதவி தேவைப் படாதா என்ன..அதுக்கு மேலெ எனக்குன்னு சில கடமைகள் வேறே இருக்கு. பிராம்மண குலத்தில பிறந்து இன்னும் பூணூல் போடாத சூத்திரன் போல இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு.?அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை செய்யவும் முடியாது.அதெல்லாம் ரொம்ப அவசியம் பாபு.”நீண்ட பிரசங்கம் செய்வது போல் கண்ணன் பேசினான் .உள்ளிருந்து வந்த மாலதி ,” பாபுவுக்கு மட்டும் இதெல்லாம் செய்யணும்னு ஆசையில்லையா என்ன.”இருந்தாலும் இருக்கிற இடத்துலே அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுதான் இப்படியே....”
” நிறுத்துங்க அண்ணி. இது எங்கள் குடும்ப விவகாரம். இதுலே உங்க ஆராய்ச்சிக்கெல்லாம் இடமில்லை. “ என்று யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மாலதியை அடக்கினான் பாபு. “ அண்ணா நீங்க சொல்ற பாயிண்டுக்கு வரேன். பிராம்மண குலத்திலே பிறந்ததுக்கு வேண்டி ஒரு பூணூல் மாட்டிக்கோடா பாபுன்னுதானே சொல்ல வறீ.ங்க.. நான் பிராம்மண குலத்திலே பிறந்தவன் மற்றவரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவன் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பலை. வர்ண பேதங்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது அண்ணா... பிராம்மணனுடைய கடமையே அந்த காலத்து முறைப்படி, பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருக்க வேண்டும் என்பதுதான். அந்தக் காலத்துப் பிராம்மணன் ஈசுவர விசாரத்திலேயே ஈடு பட்டிருப்பான். அவனுக்கென்று பொருள் ஈட்ட மாட்டான். மற்ற வர்ணத்தவர்கள் அவர்களுக்கு என்று ஏற்படுத்தப் பட்ட தொழில் முறையைக் கடை பிடித்து வந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் குல ஆசாரம் என்ற முறைப்படி பார்க்கப் போனால் எல்லோரும் வைசியர்களும் சூத்திரர்களும் தான். அதன்படி நீயும் ஒரு சூத்திரன், நானும் ஒரு சூத்திரன்.இப்படி இருக்கும்போது குலம் ஆசாரம் என்ற பேச்சுக்கு அர்த்தமேயில்லை. மேலும் நீங்க சொல்ற பித்ரு கர்மாக்களை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செய்ய வேண்டியதை தாராளமாக நானும் செய்து கொண்டு தானிருக்கேன். ஆனால் நீங்க சொல்லும் முறையில் அல்ல. அப்பா இருந்திருந்தா என்ன செய்ய நினைத்திருப்பாரோ அதைச் செய்வதே அவருக்கு நான் செய்யும் நினைவு வழிபாடு. அம்மாவுக்கு என்னும் பேச்சுக்கே இடமில்லை. உன்னையும் என்னையும் பெற்றெடுத்த புண்ணியவதி,நமக்கு நினைவு தெரியும் முன்பே போய் சேர்ந்துட்டா. ஆனால் நமக்கு நினைவு தெரிந்த பிறகு அம்மா என்று கூப்பிடும் ஸ்தானத்தில் இருக்கும் நம்மை வளர்த்திய இந்த அம்மாவை மனம் வாடாதபடி பார்த்துக் கொள்வதுதான் இறந்து போன அம்மாவுக்கு நாம் செய்யும் நினைவு தின வணக்கங்கள்.”
பாபு இவ்வளவு தூரம் பேசுவான் என்று கண்ணன் எதிர் பார்க்க வில்லை. அவனைப் பொருத்த வரையில் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் மற்றவரிடம் கொண்டுள்ள அபிப்பிராய பேதத்தை தெரியப் படுத்தவே என்று எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குப் பின்னால் , ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுந்த ஒரு கொள்கை வெறி இருக்கும் என்று நினைக்க வில்லை. இருந்தாலும் பாபு பிராம்மண குலத்தையே பழிக்கிறான் என்ற தவறான எண்ணம் கண்ணனை ஆத்திரப் படுத்தியது.
” பாபு நீ மேடை ஏறி பிரசங்கம் பண்ணுவதில் கை தேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே ஸ்தாபிக்க வேண்டாம். மேடையிலே பெசினா நாலு பேர் பொழுது போச்சேன்னு கை தட்டுவா. அதுதான் பெருமைன்னு தவறா நெனச்சிட்டு இருக்கே. பேசற பேச்செல்லாம் வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்து வராதுனு உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. இந்த பிள்ளைகளுக்குப் பதிலா பெண்களாப் பிறந்திருந்தால் அப்பா செய்த தவறின் தன்மை உனக்குத் தெரிஞ்சிருக்கும்.அந்த விதத்திலே நீ லக்கி. எல்லோரும் பிரிஞ்சிருக்கோமென்னு நீ அவதிப் படறது உண்மை என்று நம்பி, அந்தக் குறையைத் தீர்க்கலாம்னு வந்தேன். நீ என்னடான்னா செயல்ல மட்டுமில்லாம வாக்கிலயும் சூத்திரனா மாறிட்டே. எனக்கு அப்படி வாழ முடியாது. நம்ம முன்னொர்கள் வகுத்த வழிமுறைகளெல்லாம் சுத்த்ச் ஹம்பக் என்று நீ சொல்ற மாதிரி என்னால் நினக்க முடியாது. அப்படியானா நமக்கு முன்னாலே பிறந்து இந்த நாட்டிலே வளர்ந்த எல்லோரும் ஒண்ணுமே தெரியாத முட்டாள்களா.?நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா.? இல்லை எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன். “
” அண்ணா நான் சொல்றத நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை வாழ்க்கையிலே குலம் கோத்திரம் எல்லாம் மனசைப் பொறுத்தவரை சரியா இருந்தா நல்லதண்ணா. ஆனால் அதுவே ஒரு சில வகுப்பாளுங்க தரமில்லாமலேயே உயர்த்தப் படறதும், மத்தவங்க நசுக்கப் படற்துக்கு ஒரு கருவியா, எண்ணமா சமுதாயத்துலே ஒரு நிலை அடைஞ்சிருக்கிறது தப்புன்னுதான் நான் சொல்ல வரேன். நீங்க வணங்கற தெய்வத்தைதான் நானும் வணங்குகிறேன்.மற்ற சாதிக்காரங்களும்--.ஹிந்துக்களை—வணங்கறாங்க. இதுலே உயர்வு தாழ்வுக்கு இடம் எங்கேன்னுதான் புரியலை. இதையெல்லாம்தான் விவேகாநந்தர் முதல் பாரதி வரை சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதைக் கேட்டு அந்த சமயம் கைதட்டிப் பொழுது போக்கின கூட்டம் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் சரின்னு ஒரு உறுதி பிறந்திருக்கு. என்னைப் போல எவ்வளவோ பேருக்கும் பிறந்திருக்கலாம். அது நன்மையாய்தான் முடியும். என்னைப் பொறுத்தவரை வாழ்ந்து காட்ட ஒரு சந்தர்ப்பமும் கிடைச்சிருக்கு.இதையெல்லாம்தான் நான் முக்கியமா நினைக்கிறேன். பிரிஞ்ச குடும்பம் ஒன்றாயிருக்கணும்னு நான் விரும்பறத செயல் படுத்த வந்ததாகச் சொன்னீர்கள். அதைக் கேட்டதும் உண்மையிலேயே சந்தோஷப் பட்டேன். ஆனால் நீங்க கொண்டிருக்கிற எண்ணங்களை இந்த இடத்தில் நிறை வேற்ற முயன்றால் வீணா மனஸ்தாபமும் வேற்றுமையும்தான் வளரும். அதுதான் வேண்டாம் என்கிறேன்.”
” பாபு நீ ரொம்ப சாமர்த்திய சாலின்னு உனக்கு நினைப்பு. உன்னைப் போல் மற்றவர்களும் சாமர்த்தியசாலிகளாய் இருக்கலாம் என்ற சந்தேகமே உனக்கு இல்லை. என்னுடைய உதவி தேவை ஆனால் என் எண்ணப்படி செயலாற்ற எனக்குத் தடை. நீ சம்பாதிக்கறத எங்கிட்டக் கொடுத்துட்டு நான் சொல்றபடி நடடா—ன்னு எங்கிட்ட மறைமுகமாக் கேட்கறே. இதுக்கு காதுலே பூ வெச்சவன் யாராவது இருப்பான். போய்ப்பாரு. உன் குணம் எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. நீ ஒரு சுய நலப் புல்லுருவி. உன் கூடவும் இவர்கள் கூடவும் வாழ எனக்கென்ன பைத்தியமா.! மாலதி வாடீ.. இங்கே ஒரு நிமிஷங்கூட இருக்கக் கூடாது. வீட்டுக்குப் போனதும் குளிச்சு இந்த உறவுக்கே முழுக்குப் போட்டுடணும்.”
வந்த காரியம் கை கூடவில்லை என்ற ஆத்திரத்தில் இன்னதுதான் பேசுகிறோம் என்று கூட உணராமல் கண்ணன் மாலதியைக் கூட்டிக் கொண்டு வெளியேறி விட்டான்.
கொஞ்ச நேரம் தலை சுற்றுவதுபோல் இருந்தது பாபுவுக்கு. அவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்ச்சிகள் கனவோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டது. அவன் உள்ளம் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தது.கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டோமோ என்று அடிக்கடி தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இருந்தாலும் கண்ணன் அந்த அளவுக்குப் பேசிப் போகும் படி தான் எதுவும் சொல்லவில்லை என்று நம்பினான்.
அமைதியைக் கலைத்தவன் ராஜுதான்.”இங்கே வரும்பொது இவர்களுக்கு எண்ணம் வேறெதோவாக இருந்திருக்கும். ஆனால் பேச்சு போன விதத்திலே வந்த எண்ணத்தை சரியா வெளிப்படுத்த முடியலை.ன்னு எனக்குத் தோணுது .டேய் விசு, பெரிசாப் படிக்கலாம்னு கொஞ்ச நேரத்திலெ நெனச்சியே. .பாபு அண்ணா மனசு வெச்சாத்தான் உனக்கு மேல் படிப்பு. “ என்றான்.
” எனக்கு இந்த திடீர் வரவும் அக்கறையும் சந்தேக மாக இருந்தது. நாளைக்கே எங்களை இந்த சித்தி வீட்டை விட்டுப் போகச் சொன்னா என்று கதை மாறினாலும் மாறலாம். ஹூம்.! ராஜு சொல்றாப்போல வந்த நோக்கமே இதாயிருந்திருக்காது. சண்டை போடறதுக்குன்னு வந்த மாதிரி அல்லவா இருந்தது. அந்தப் பெண் நல்ல பெண்ணாத் தெரியறா. இப்போ அவளும் மாற்யிருப்பா. இதையெல்லாம் பெரிசா நெனச்சா முடிவே கிடையாது. இதைவிட பெரிய மனஸ்தாபங்களையும் சண்டைகளையும் உங்க அப்பா காலத்திலேயே பார்த்தாச்சு. நீ எதுக்கடா பாபு எண்ணி எண்ணி மாயறே. சாப்பிட வா நேரமாச்சு. நல்ல வேளை உங்க போர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்தவர்களுக்கு காப்பியெல்லாம் கொடுத்தேன். இல்லைன்னா அந்தப் பழி வேற எனக் கிருந்திருக்கும். “ என்று சொல்லிக் கொண்டு போன கல்யாணி அ,ம்மாவை பாபுவின் கூச்சல் அடக்கிற்று.
“”உனக்குப் பழி வரக் கூடாதுன்னு நீ ரொம்பத்தான் அலட்டிக்கிறே. வரதென்னவோ வரத்தான் செய்யுது. கொஞ்ச நேரம் பேசாமத்தான் இருங்களேன். “
பாபுவுக்கு சாப்பாடு செல்லவில்லை.உறக்கம் கொள்ள வில்லை. நடு ராத்திரியில் திடீரென்று விளக்கை பொருத்தி ஒரு தாளையெடுத்துப் பட பட வென எழுதினான்.
”அண்ணா,இன்று நடந்த சம்பவங்கள் நமக்குள்ள அபிப்பிராய பேதத்தைத் தெரியப் படுத்துவதாக மட்டும் இருக்கட்டும். உறவுக்கும் அன்புக்கும் முழுக்குப் போட்டதாக நீங்கள் சொல்லிச் சென்றது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வருகிற ஞாயிறு மாலை நான் உங்களை வந்து பார்க்கிறேன்.”----ஏதோ மனப் பளு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.. விடிந்ததும் எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்த்தான். நேரிலேயே சென்று விளக்கி இருக்கலாம். ஆனால் புகைச்சல் ஏற்பட்ட மனம் நிதானத்துக்கு வருவது நல்லது. அதுவரை சும்மா இருக்கலாம் என்று எண்ணியவன் தான் செல்லும் நேரத்தில் கண்ணன் அங்கிருக்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கடிதத்தை அனுப்பினான். மறு தபாலில் வந்த பதில் பாபுவின் உள்ளத்தை இன்னும் வருந்தச் செய்வதாக இருந்தது.
”அண்ணா,இன்று நடந்த சம்பவங்கள் நமக்குள்ள அபிப்பிராய பேதத்தைத் தெரியப் படுத்துவதாக மட்டும் இருக்கட்டும். உறவுக்கும் அன்புக்கும் முழுக்குப் போட்டதாக நீங்கள் சொல்லிச் சென்றது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வருகிற ஞாயிறு மாலை நான் உங்களை வந்து பார்க்கிறேன்.”----ஏதோ மனப் பளு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.. விடிந்ததும் எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்த்தான். நேரிலேயே சென்று விளக்கி இருக்கலாம். ஆனால் புகைச்சல் ஏற்பட்ட மனம் நிதானத்துக்கு வருவது நல்லது. அதுவரை சும்மா இருக்கலாம் என்று எண்ணியவன் தான் செல்லும் நேரத்தில் கண்ணன் அங்கிருக்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கடிதத்தை அனுப்பினான். மறு தபாலில் வந்த பதில் பாபுவின் உள்ளத்தை இன்னும் வருந்தச் செய்வதாக இருந்தது.
“வருவதாயிருந்தால் தனியாக வா. நீ என் உடன் பிறந்த பிராமணன் என்பதற்காக இந்தத் தனிச் சலுகை.”.-----கண்ணன்.
-------------------------------------------------------------------
( தொடரும்.)
பிரிவும், உறவும், மீண்டும் பிரிவும்....வாழ்கையின் பகுதிகளையே படித்தது போல் உள்ளது.
பதிலளிநீக்கு...
வகுப்பு பேதங்களின் விளக்கங்கள் அருமை. இக்கால நடைமுறையில் யார் பிராமணன்? விரல் விட்டு எண்ணினாலும் கூட எண்ணிக்கை தேறாது போலும்.
சகோதர உரையாடலில் நிறைய விஷயங்கள் அசை போட வைக்கின்றன. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநானும் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅனைத்துப் பகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்துப் படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குபிரிவும், உறவும், மீண்டும் பிரிவும்....வாழ்கையின் பகுதிகளையே படித்தது போல் உள்ளது.
பதிலளிநீக்கு“வருவதாயிருந்தால் தனியாக வா. நீ என் உடன் பிறந்த பிராமணன் என்பதற்காக இந்தத் தனிச் சலுகை.”.-----கண்ணன்.
பதிலளிநீக்குஅண்ணன் தம்பிகளின் எதிர்பாராத விவாதம் ரசிக்கவைத்தது..
@ஷக்திபிரபா,
பதிலளிநீக்கு@அப்பாதுரை,
@ஜீவி,
@டாக்டர் கந்தசாமி,
@லக்ஷ்மி,
@இராஜராஜேஸ்வரி
அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்கதை படிப்பதில் இருக்கும் அவதிகள் எனக்கு நன்றாகத் தெரியும். படித்தது நினைவில் இருந்தால்தான் தொடரை வாசிக்கவோ ரசிக்கவோ தோன்றும். பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் பதிவிடுகிறேன். அதன் தரம் எனக்குத் திருப்தி அளிப்பதாலேயே முடிக்கவும் செய்வேன். மீண்டும் நன்றி.