எண்ணங்கள் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 மார்ச், 2012

சொல்லாமல் விடுவதே நன்று,



                                     சொல்லாமல் விடுவதே நன்று.
                                     ------------------------------------------

             வெங்காயச் சருகுச் சேலை வெண்பட்டு மேனி தழுவ
       சீயக்காய் ஷாம்பு கண்ட செம்பொன்முடி காற்றில் படபடக்க,
       அழகை இன்னும் ஆராதிக்கச் சிந்தையில் எழுந்த கவிதை ஒன்று,
       அகக் கண்ணில் வரிகளாய் ஓட, எண்ணுகையில்
       மென்னகை தேங்கிற்று என் உதடுகளில்


      ---நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து
         குறு முறுவல் பதித்த முகம்---


        வட்ட நிலவின் கறைகள் துடைத்தால்
       ஒரு வெண் தட்டுபோலத் தோன்றலாம்.
        அதன் கறைகள் துடைத்து முறுவல் பதிக்க
       தற்காலக் கணினியில் காணும் ஸ்மைலி போல் தோன்றலாம் .!


கற்பனைச் சிறகுகள் கண்டபடி சிறகடித்தால்
கிடைக்கலாம் சில அபத்தக் கவிதைகள்.
தவறிப் போய் எழுத்தினைக் கணித்து விட்டால்
எண்ணாத எதிர்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.

          
      எண்ணியதெல்லாம் கருத்தில் தேக்கி

      சிந்தனைக் கடிவாளம் இறுக்கிப் பிடிக்காமல்

      சொல்லெல்லாம் சொல்லி நாட்டி

      சொன்னது அத்தனையும் நன்றென்று நம்பி

      நாமெல்லாம் படிக்கப் பல காதல் கவிதைகள் வடிக்க

      கருத்திட விழையும் போது, சொல் நயம் காக்க

      சொல்லாமல் விடுவதே நன்று ,சிறந்தது.
---------------------------------------------- .

        





     

சனி, 14 ஜனவரி, 2012

தையலே.. தைப் பெண்ணே...


               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
----------------------------------------------------------.
                             

செவ்வாய், 10 ஜனவரி, 2012

உயிலொன்று எழுத....


            உயிலொன்று எழுத்...
                --------------------
புலரி புலர்ந்தெழுந்ததும் உயில்  ஒன்று
எழுதமனம் இன்று விழைகிறது.- என்
உள்ளக்கிடக்கையினை யாவர்க்கும் அறிவிக்க.

இருக்கும் தாவர சங்கம சொத்து- சொந்த
உழைப்பில் உருவானதொரு வீடு- அதுவும்
அவள் பெயரில் அன்றே பதிவானது.

இருந்தும் ஏன் இந்த எண்ணம் எழ வேண்டும்?
எனக்கிருக்கும் சொத்துவேறென்ன என்றே
எண்ணிப் பார்த்திட இதுவும் ஒரு வாய்ப்போ?

வந்த நாள் முதல் இந்த நாள் வரை-நான்
செய்த காரியங்கள் அவசியம் ஈட்டியிருக்கும்
புண்ணியங்களும் பாவங்களும்

உயிலென்று ஒன்று எழுதுகையில்
உரிமை உள்ளோர் அனுபவிக்க
முறையாக உணர்த்தல் முறையேயன்றோ !

நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும்
சேரட்டும்,காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்
ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.

இதுவன்றி உயிலில் எழுத
எனக்கேது சொத்து.?
--------------------
          

புதன், 9 நவம்பர், 2011

ஆண்டவன்முன்



                      ஆண்டவன் முன்...
                      ----------------------------------


பிஷேக அலங்கார ஆராதனைகள் ஆண்டவனுக்கு
பூ,பழம், காயுடன் படைப்பாகப்பின் நிவேதனங்கள் முடிந்து, 
தீப ஒளியில் திவ்ய தரிசனம் காணக் கண் கோடி வேண்டும். 
இருப்பினும் இருப்பதோ இரண்டுதானே.
அடுத்து சென்றால் அழகாக தரிசிக்கலாம்.
அதற்கும் ஏற்பாடு செய்யலாம் காசிருந்தால். !

தட்டேந்தி வரும் அர்ச்சகர் முகத்தில் அலாதி பூரிப்பு. 
காணிக்கையாய்க் கொட்டும் காசு கண்டு
பணம் கொடுத்து ஆண்டவன் அருகே சென்றவர்
தட்டினில் இட்டனர் ரூபாய் நோட்டுக்கள். 
வரிசையில் வந்தோரும் தவறாது தட்டில் இடும் 
காசின் சப்தம் அர்ச்சகர் காதுக்கு சங்கீதம். 

யார் சொன்னது ஆண்டவன் சந்நதியில் 
அனைவரும் சமம் என்று.?

தூரத்தே நின்று கண்கள் மூடி 
ஆண்டவனைக் காண்போர் அறிவர்
தட்டிலிடக் காசில்லை என்றால் சபிக்கப்படலாம். 

அன்றொரு நாள் சிறான் ஒருவன் 
தீபம் ஒற்றியெடுக்க ,கையில் 
காசில்லாமல் தயங்கியது கண்டு -சிந்தையில் 
தோன்றியது எழுத்தில் விழுந்தது.

( என்னிடம் பதிவொன்று கேட்டார். நானும் அனுப்பினேன். பிரசுரம் குறித்து 
எந்த தகவலும் இல்லாத நிலையில் நானே பதிவாக இடுகிறேன்.)


செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பாவைக்கு ஒரு பாமாலை...

பாவைக்கு ஒரு பாமாலை...
------------------------------------

அன்றொரு நாள் மாலை அந்திசாயும் வேளை,
இரட்டைக் குழலுடன், பூரித்தெழும் அழகுடன்,
பதினாறின் பொலிவுடன், பரிமளித்த பாவை உன் முகம்
கண்டதும் கொண்டேன் காதல். 


காதலுணர்ந்தது கண் வழி புகுந்து, கருத்தினில்
கலந்து வித்தை செய்த விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?


உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்;
ஆடிவரும் தேரை யாரும்
காணாதிருக்கச் செய்தல் கூடுமோ,?அயலவன்
உன்னை ஆராதிப்பதைத் தடுக்கவும் இயலுமோ.?


        இயன்றதென்று ஒன்றும் இருக்கவில்லை,
        நாலாறு வயசுநிரம்பா நிலையில்
        மெய் விதிர்க்க,வாய் உலர, தட்டுத் தடுமாறிய
        நெஞ்சைக் கட்டுப்படுத்த என் எண்ணத்தில்.


எண்ணத்தறியில் பின்னிப் பிணைந்திழையோடும்
நினைவுகளூடே உடல் பொருள் ஆவி அனைத்திலும்
நிலைத்து நின்ற உன் நீங்கா நினைவுகளை
உனக்குணர்த்த தேர்ந்தெடுத்தேன் உன் புகைப்படம். 


        படத்தின் பின்னே எழுதிக் காட்டினேன்.
        மாறுபட்ட சாதி வேறுபட்ட மொழி
        என்றே இருப்பினும் ஒன்றுபட்ட உள்ளம்
        கொண்டிணைய கைத்தலம் பற்றும் கனவினை. 


கனவுகளூடே காலங் கழித்தேன் -அதில்
நிலவைப் பழிக்கும் முகம், நினைவைப் பதிக்கும் கண்கள்,
கைத்தலம் பற்றுமுன்னே என்னை உன் பால் ஈர்த்த
நடை,குரல், அதரங் கண்டு மிடுக்கோடு உலாவினேன். 


        உலவினவன் உயிர்த்துடிப்பும் உள்ளத் திமிரும்
        தினாவெட்டும் மட்டுமே காணும்பலர் என்
        நெளிவும் சுளிவும் அறியாதார் என் குறைபாடு
        கூறியே நம்மைப் பிரிக்க முயலலாம். 


முயல்பவர் முனைப்பு முளைக்கும் முன்னே
முறியடித்தல் அவசிய முணர்ந்து என்னை நான்
நானாக உனக்குணர்த்த அறிமுகப்படுத்தினேன்
என்னையே நம்பியிருந்த என் உறவுகளை. 


        உறவுகள் பலமா பாரமா என்றறியாத
       அறியாப்பருவப் பாவை நீ ,எனை நம்பி என்
        பின்னெ நிற்கும் தலைகளின் எண்ணிக்கைஅறிந்தும்
        ஏதும் அறியாமல் என் பின்னே வந்தனை மணமகளாய். 


மணமகளாய் வந்த நீ மாசிலா மணியே,
மனமகிழ்ந்து அமைதி காத்து, அறம் காத்து, என்
அகம் காத்து,சுமை தாங்கி,என் உலகின் துயரங்கள்
துடைத்தவளே, கண் காக்கும் இமைபோல் எனைக் காப்பவளே


       காக்கும் உன் கண்கள் என் வாழ்வின் கலங்கரை
       ஒளிவிளக்கு;துயிலாத கண்களும் தூங்காத மனமும்
       கொண்டே சுந்தரி, உனை நாடினேன் -அக்கணமே
       தொலைந்ததென் துயரங்களே, சஞ்சலங்கள் தீர்ந்தனவே

தீராத குறை எனை ஈன்றெடுத்த அன்னை முகம்
அறியாததென்றால், இருக்கும் ஒன்றை மறுத்து மறந்து
தாயாய்த் தாதியாய் ,என் இல்லக் கிழத்தியாய் இருப்பவள்
உன்னை என்னவென்று கூறி நிறையென்பேன். 


        நிறையென்று உனைக்கூற நீ நீயாக இருந்து
        நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன் ஏழையென்னை
        ஏற்றுக்கொண்ட ஏந்திழையே, இருக்கின்ற ஒரு
        மருந்தை அறியாமல் இன்னலுற்று ஏன் இடர்பட வேண்டும்


வேண்டுதல் வேண்டாமையெல்லாம் அறிந்து என்
அகக் கண்ணுள் அமர்ந்திருக்கும் அகல் விளக்கே
நிதியே, என் நெஞ்சமெல்லாம் நீங்காத நீரூற்றே
உள்ளமெலாம் நிரம்பி வரும் நிரந்தர நினைவலையே.


       நினைவெல்லாம் நீயாய் நினைப்பினும் நினையாதிருப்பினும்
       என்னுள் நிகழும் ரசாயன மாற்றம் அன்றைக்கின்று
       குறைந்திலை;உணர்ந்ததை அளவில் ஒடுக்க நானென்ன
       அறிவில்லாதவனா அறிவில் ஆதவனா.?

ஆதவன் உதித்தெழ இருள் நீங்கி பொழுது புலரும்,
மாதவம் செய்துன்னைக் கரம் பிடித்த நான்
மருள் நீங்கி என்னருகே நீயிருக்கும் துணிவில்
காலனை மறுமுறைக் காலால் உதைக்கக் காத்திருக்கிறேன். 


      காத்திருக்கும் காலமெல்லாம் கண்ணிரண்டே போதாமல்
      உணர்வோடும் உயிர்ப்போடும் உனைப் பிரியாமல் நான்
      எழுதும் புதுப் பாடலும் புகழாரமும் புனிதமே,
      பாயிரமாய் புவியெங்கும் ஒலிக்கட்டுமே, உலவட்டுமே.
----------------------------------------------------------------------------
( என் எல்லாத் துயரங்களிலும் இருந்து எப்போதும் எனை மீட்டெடுக்கும் 
என் அன்பு மனைவிக்கு நான் செய்யும் கைம்மாறு இதுவே. )
     


சனி, 28 மே, 2011

இப்பூவுலகே எனக்கன்றோ....

இப்பூவுலகே எனக்கன்றோ
------------------------------------

               பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன். 
               பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
               என்ன  அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல், 
               எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
               நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
               தடுமாறி கீழே விழப் போனவளைக் 
               கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
               புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில் 
               கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில் 
என்னை மன்னித்து விடு. 
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள். 

              மென்று சுவைக்க மிட்டாய் வாங்க 
              பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
              மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
              பேசிச்செல்ல மனம் மிக  விழைந்தது.
              தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
              காசு கொடுத்துப் போகையிலே, அதனைத் 
              தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்; 
              கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு. 
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.

             தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
             சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
             நிற்கும் நானறிந்த சிறுவனிடம்  அவன் ஏன் 
            ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
            மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
            கேளாது என்பதனை  மறந்து விட்ட நான். 
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள். 



            எ ங்கும்  என்னை நடத்திச் செல்ல நல்ல 

            இரு கால்களும்,
           அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
            இரு கண்களும்,
            என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல 
            இரு காதுகளும்
            இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
            இந்த உலகையே ரசிக்க வைக்க, 
           எல்லாப் புலன்களும் எனக்கிருக்க 
            இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
 


    

           
 




 




      

வெள்ளி, 6 மே, 2011

அன்பெனப்படுவது.......................

அனபெனப்படுவது..............
---------------------------
            அன்பெனப்படுவது யாதெனில் என்று
             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் , சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் , அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும், அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.? 

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடு, அதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது, 
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?
            உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
            சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.? 
           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.? 
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர்நோக்கும் எண்ணங்கள் அழ வைக்கிறதா.?

           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.? உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியெற்று செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரே, உங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 

உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால், 
மறு நாளும்  உண்டு வாழ்வு, தொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி, 
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ. 
         
இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.