Tuesday, September 27, 2011

பாவைக்கு ஒரு பாமாலை...

பாவைக்கு ஒரு பாமாலை...
------------------------------------

அன்றொரு நாள் மாலை அந்திசாயும் வேளை,
இரட்டைக் குழலுடன், பூரித்தெழும் அழகுடன்,
பதினாறின் பொலிவுடன், பரிமளித்த பாவை உன் முகம்
கண்டதும் கொண்டேன் காதல். 


காதலுணர்ந்தது கண் வழி புகுந்து, கருத்தினில்
கலந்து வித்தை செய்த விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?


உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்;
ஆடிவரும் தேரை யாரும்
காணாதிருக்கச் செய்தல் கூடுமோ,?அயலவன்
உன்னை ஆராதிப்பதைத் தடுக்கவும் இயலுமோ.?


        இயன்றதென்று ஒன்றும் இருக்கவில்லை,
        நாலாறு வயசுநிரம்பா நிலையில்
        மெய் விதிர்க்க,வாய் உலர, தட்டுத் தடுமாறிய
        நெஞ்சைக் கட்டுப்படுத்த என் எண்ணத்தில்.


எண்ணத்தறியில் பின்னிப் பிணைந்திழையோடும்
நினைவுகளூடே உடல் பொருள் ஆவி அனைத்திலும்
நிலைத்து நின்ற உன் நீங்கா நினைவுகளை
உனக்குணர்த்த தேர்ந்தெடுத்தேன் உன் புகைப்படம். 


        படத்தின் பின்னே எழுதிக் காட்டினேன்.
        மாறுபட்ட சாதி வேறுபட்ட மொழி
        என்றே இருப்பினும் ஒன்றுபட்ட உள்ளம்
        கொண்டிணைய கைத்தலம் பற்றும் கனவினை. 


கனவுகளூடே காலங் கழித்தேன் -அதில்
நிலவைப் பழிக்கும் முகம், நினைவைப் பதிக்கும் கண்கள்,
கைத்தலம் பற்றுமுன்னே என்னை உன் பால் ஈர்த்த
நடை,குரல், அதரங் கண்டு மிடுக்கோடு உலாவினேன். 


        உலவினவன் உயிர்த்துடிப்பும் உள்ளத் திமிரும்
        தினாவெட்டும் மட்டுமே காணும்பலர் என்
        நெளிவும் சுளிவும் அறியாதார் என் குறைபாடு
        கூறியே நம்மைப் பிரிக்க முயலலாம். 


முயல்பவர் முனைப்பு முளைக்கும் முன்னே
முறியடித்தல் அவசிய முணர்ந்து என்னை நான்
நானாக உனக்குணர்த்த அறிமுகப்படுத்தினேன்
என்னையே நம்பியிருந்த என் உறவுகளை. 


        உறவுகள் பலமா பாரமா என்றறியாத
       அறியாப்பருவப் பாவை நீ ,எனை நம்பி என்
        பின்னெ நிற்கும் தலைகளின் எண்ணிக்கைஅறிந்தும்
        ஏதும் அறியாமல் என் பின்னே வந்தனை மணமகளாய். 


மணமகளாய் வந்த நீ மாசிலா மணியே,
மனமகிழ்ந்து அமைதி காத்து, அறம் காத்து, என்
அகம் காத்து,சுமை தாங்கி,என் உலகின் துயரங்கள்
துடைத்தவளே, கண் காக்கும் இமைபோல் எனைக் காப்பவளே


       காக்கும் உன் கண்கள் என் வாழ்வின் கலங்கரை
       ஒளிவிளக்கு;துயிலாத கண்களும் தூங்காத மனமும்
       கொண்டே சுந்தரி, உனை நாடினேன் -அக்கணமே
       தொலைந்ததென் துயரங்களே, சஞ்சலங்கள் தீர்ந்தனவே

தீராத குறை எனை ஈன்றெடுத்த அன்னை முகம்
அறியாததென்றால், இருக்கும் ஒன்றை மறுத்து மறந்து
தாயாய்த் தாதியாய் ,என் இல்லக் கிழத்தியாய் இருப்பவள்
உன்னை என்னவென்று கூறி நிறையென்பேன். 


        நிறையென்று உனைக்கூற நீ நீயாக இருந்து
        நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன் ஏழையென்னை
        ஏற்றுக்கொண்ட ஏந்திழையே, இருக்கின்ற ஒரு
        மருந்தை அறியாமல் இன்னலுற்று ஏன் இடர்பட வேண்டும்


வேண்டுதல் வேண்டாமையெல்லாம் அறிந்து என்
அகக் கண்ணுள் அமர்ந்திருக்கும் அகல் விளக்கே
நிதியே, என் நெஞ்சமெல்லாம் நீங்காத நீரூற்றே
உள்ளமெலாம் நிரம்பி வரும் நிரந்தர நினைவலையே.


       நினைவெல்லாம் நீயாய் நினைப்பினும் நினையாதிருப்பினும்
       என்னுள் நிகழும் ரசாயன மாற்றம் அன்றைக்கின்று
       குறைந்திலை;உணர்ந்ததை அளவில் ஒடுக்க நானென்ன
       அறிவில்லாதவனா அறிவில் ஆதவனா.?

ஆதவன் உதித்தெழ இருள் நீங்கி பொழுது புலரும்,
மாதவம் செய்துன்னைக் கரம் பிடித்த நான்
மருள் நீங்கி என்னருகே நீயிருக்கும் துணிவில்
காலனை மறுமுறைக் காலால் உதைக்கக் காத்திருக்கிறேன். 


      காத்திருக்கும் காலமெல்லாம் கண்ணிரண்டே போதாமல்
      உணர்வோடும் உயிர்ப்போடும் உனைப் பிரியாமல் நான்
      எழுதும் புதுப் பாடலும் புகழாரமும் புனிதமே,
      பாயிரமாய் புவியெங்கும் ஒலிக்கட்டுமே, உலவட்டுமே.
----------------------------------------------------------------------------
( என் எல்லாத் துயரங்களிலும் இருந்து எப்போதும் எனை மீட்டெடுக்கும் 
என் அன்பு மனைவிக்கு நான் செய்யும் கைம்மாறு இதுவே. )
     


23 comments:

 1. ஒரு பத்தியில் முடியும் வார்த்தையை அடுத்த பத்தியின் முதல் வார்த்தையாக ஆக்கி அழகிய பாமாலை செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நன்றி நவிழ்தல் நன்றே... குடிக்க நீர் கொடுக்கும் மனைவிக்கு நன்றி என்று கூறும் பொழுது, வேதனைபடுவாள்... நன்றி என்று சொல்லாமல் அவளை வேதனைபடுத்துவதை விட; நன்றி என்று சொல்லி அவள் வேதனை படுவது மேல் என்று என்றும் கூறி கொண்டே வருகிறேன்... அவள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும்..

  ReplyDelete
 3. உலவும் குளிர்தென்றல் உரசிச்சென்றதுபோல்
  உள்ளம் குளிரவைத்த உங்கள் பாமாலை
  பலரும் அறிந்திருந்தும் பகராப் பலகருத்தைப்
  பதியச் செய்தீர்கள் பதிகள் நெஞ்சமதில்!

  ReplyDelete
 4. அந்தாதி பதிவு அமர்க்கள்ம்.

  ReplyDelete
 5. //நீயிருக்கும் துணிவில்
  காலனை மறுமுறைக் காலால் உதைக்கக் காத்திருக்கிறேன்//

  அருமை..

  நலம் பேணுங்கள் அய்யா..

  ReplyDelete
 6. அந்தாதி பாடுதல் கடினமான ஒன்று
  அதை மிக இயல்பாக பாடியதோடல்லாமல்
  மனைவிக்கு நன்றி சொல்லும் அழகிய
  பாமாலையாகவும் தொடுத்துக் கொடுத்தது அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அந்தாதி பாடியது அருமை ஐயா.. இதுவும் வாழ்க்கைத் துணை பற்றி மிக சிறப்பு . தொடரட்டும். பணி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 8. பார்த்தேன்,படித்தேன்,ரசித்தேன்.

  ReplyDelete
 9. அழகிய அந்தாதி. .
  உள்ளம் அமைதியுற தமிழுக்கும் இசைக்கும் ஈடில்லை.

  ReplyDelete
 10. இதை முன்பே படித்திருக்கிறேன் சார். 'ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச் செய்தல் கூடுமோ' வரி சட்டென்று நினைவுக்குக் கொண்டு வந்தது. மறுபடியும் படித்தத்தில் அதே நெகிழ்ச்சி. அந்த நாளில் புரட்சியா?

  ReplyDelete
 11. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 12. உங்கள் மனைவிக்கு நீங்க தொடுத்திருக்கும் அந்தாதிப் பாமாலையிலிருந்து அவர்களிடம் நீங்க கொண்டிருக்கும் மாறா அன்பும், அவர்களும் அதற்குத் தக்கவர்களே என்பதையும் தெரியப் படுத்துகிறது. அருமையான பாமாலை. இன்று போல் என்றும் நீடூழி வாழ வேண்டும். இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 13. முதலில் படிக்கையில் பாரதியின் மூன்று தேவியரைப் பற்றிய கவிதைகளே நினைவில் வந்தன. பின்னரே புரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 14. மாதவம் செய்து கரம் பிடித்தவளை, அகல் விளக்கே, நிதியே, நீங்காத நீரூற்றே, நிரந்தர நினைவலையே என்று அந்தாதியில் பாமாலை பாடி மகிழ்ந்த உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும் இறைவன் எல்லா சந்தோஷங்களையும் குறைவின்றி அருளட்டும்.

  ReplyDelete
 15. அருமையான அந்தாதி புனைந்திருக்கிறீர்கள்,உங்கள் மனையாளின் மனம் குளிர.
  நீங்கள் இருவரும் இன்னும் பல காலம்
  ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும்
  இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete

 16. ரசனைக்குறிய பாமாலை ஐயா அருமை.

  ReplyDelete
 17. ஆஹா... தங்கள் காதல் கதையை இவ்வளவு அழகாக என்னவோ நேற்று நடந்தாற்போன்ற பரிவுடனும் காதல் உணர்வுடனும் எழுதியிருப்பது மனம் கொள்ளை கொள்கிறது. திருமணம் வரையிலும் உயிராயிருக்கும் காதல் அதற்குபின் உணர்வற்றுப் போகும் சாத்தியங்கள் நிறைந்த உலகில் என்றும் மாறாத காதல் இனிமை. அதை இத்தனை வருடங்கள் கழித்தும் அழகிய பாமாலையாய்த் தொடுத்து மனைவிக்குப் பரிசளித்தது நெகிழ்ச்சி. தங்களுக்கும் துணைவியாருக்கும் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete

 18. @ கில்லர்ஜி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி

  ReplyDelete

 19. @ கீதமஞ்சரி
  என் நினைவுகளில் என்றும் பசுமையாக இருப்பவள் என் காதல் மனைவி. பொன்னும் பொருளும் பரிசாக இருப்பதைவிட அவளுக்கு ஒரு பாமாலையே உரித்து என்று எழுதியது.வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 20. கவிதை என்பது உணர்ச்சி. அதில் இலக்கணம் ரொம்பவும் பார்க்கவேண்டிய தேவையில்லை.
  மனைவிக்குக் கவிதை எழுதும் உள்ளம் இருப்பதே மகிழ்ச்சியானது. பெரும்பாலானவர்கள் (என்னைப் போன்றவர்கள்.. பெரும்பாலும் ஆண்கள்) சரியான சமயத்தில் சரியான விதத்தில் அன்பை வெளிப்படுத்தத் தெரியாதவராக இருந்துவிடுகின்றனர்

  "எழுதும் புதுப் பாடலும் புகழாரமும் புனிதமே,
  பாயிரமாய் புவியெங்கும் ஒலிக்கட்டுமே, உலவட்டுமே"

  இந்த வரிகள், கீழ்போல் இருந்திருந்தால், சரியான அந்தாதியாயிருக்கும். அந்தாதி முடியும்போது (ஒரு பாடலோ அல்லது பல பாடல்களோ) முடியும் வரி ஆரம்ப வரியோடு இணைவது சிறப்பு.

  " எழுதும் பாடலும் புகழாரமும் புனிதமே
  ஆண்டுகள் ஆனாலும் அகலாது என் நெஞ்சில் இருக்கட்டும் அன்றேபோல்"

  மேலே சொன்னதுபோல், உணர்ச்சிக்கு இலக்கணம் ஒரு தடையல்ல.

  ஆமாம்.. கவிதையை அவர்களுக்குக் காட்டினீர்களா?

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து பின்னூட்டமிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி சார்

   Delete
 21. பாமாலையை மீண்டும் ரசித்தேன் ஐயா.

  ReplyDelete